டிசம்பரும் ஜனவரியும் 2012ம்

டிசம்பரும் ஜனவரியும் 2012ம்

டிசம்பர் மாதம் முடியப் போகிறது, அடுத்த வாரம் விடுமுறை, எனவே இன்னும் சில நாட்களில் செய்ய வேண்ண்ண்டியவை பலப்பல.ஜனவரி மாதத்தில் பயணங்கள் தற்போதைய நிலவரப்படி குறைந்தது இரண்டு; பிப்ரவரியில் ஒன்று, மார்ச்சில் ஒன்று - ஏற்கனவே முடிவானவை.இந்த ஆண்டு செய்து முடிக்க நினைத்தவற்றுள் சில அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைத்திருக்கிறேன். புதிய ஆண்டில் சில பழைய ‘கெட்ட’ பழக்கங்களை கைவிட்டு புதிய ’கெட்ட’ பழக்கங்களை பழக்கப்படுத்திக் கொள்ள நினைக்கிறேன்.அவை என்னென்ன என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. சனி பெயர்ச்சி பல்ன்களை கேட்டு அதை முடிவு செய்ய திட்டம் :).ஒரு ஜோசியர் புனைவு உலகில் காலடி வைக்க இது சரியான தருணம் என்கிறார், அதற்காக பிரெஞ்சு கற்றுக்கொள்ளுங்கள், ஜாதகப்படி உங்களுக்கு தமிழும்,ஆங்கிலமும் கை கொடுக்காது, ப்ரெஞ்சு அல்லது ஸ்வாஹ்லிதான் புகழும்,பணமும் பெற்றுத் தரும் என்கிறார :).ஆனால் என் பெயரில் எங்குமே j அல்லது ழ இல்லையே என்றால் பெயரை மாற்றுவதா கடினம் என்கிறார்; ழ்னிவாஸ் என்று எழுதினால் எடுபடுமா என்று தெரியாது, உச்சரிக்கும் போது நாக்கு பிறண்டு நட்ட ஈடு கோராமல் இருந்தால் சரி :)
இப்படி பல முடிவுறா துவக்க நிலைக் கேள்விகள் இருப்பதால் கேள்விகளை அடையாளம் காண ஒரு குழு அமைத்துள்ளேன் :).

நானும் இன்னும் இருவரும் கூட்டாக செய்ய வேண்டிய ஒன்றை இந்த ஆண்டு துவங்கி, அடுத்த ஆகஸ்டிற்குள் முடித்து விட திட்டமிட்டுள்ளோம்.முதற்கட்ட வேலைகள் நடக்கின்றன.பலரின் பங்களிப்பினை கோரும் அதை ஒருங்கிணைக்கும் வேலை எனது.அதை வெற்றிகரமாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு முன் அத்தகைய வேலை ஒன்றை செய்ததில்லை என்றாலும் அது போன்றவற்றை செய்த அனுபவம் இருக்கிறது.இது தமிழ் தொடர்பான பணி இல்லை என்பதால் தமிழர்கள் யாரும் பீதியடைய வேண்டாம்.

இந்த ஆண்டு பலாபலன்கள் மோசமில்லை, ஆண்டின் பிற்பகுதியில் ’மகசூல்’ நன்றாக இருந்தது, கூடுதலாக முயற்சித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.அடுத்த ஆண்டு ’மகசூல்’ நன்றாக இருக்கும் என நம்புகிறேன், அதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன.பயன்படுத்திக் கொள்வது என் கையில்தான் இருக்கிறது.வாழ்க்கையில் மூளை மகிழ்ச்சியாக இருந்தாலும் அப்போதெல்லாம் இதயமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்பதில்லை என்பதே என் அனுபவம்.வரும் ஆண்டில் இரண்டுமே மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்கள் பல ஏற்படும் என நம்புகிறேன்.

Labels: , , ,

என்ன செய்வது - இவர்கள் இப்படித்தானென்றால்

என்ன செய்வது - இவர்கள் இப்படித்தானென்றால்

1) இந்த வார தெஹல்காவில் ஹிமன்சு தாக்கரின் சிறு பேட்டி முல்லைப் பெரியாறு சர்ச்சை குறித்து வெளியாகியுள்ளது.அடிப்படைகளைக் கூட புரிந்து கொள்ளாமல் கேரள தரப்பில்தான் எல்லா நியாயமும் இருப்பதாக கூறுகிறார்.ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது என்பதை அவர் அறியாரா இல்லை உச்சநீதி மன்றம் என்ன தீர்ப்புக் கொடுத்தது என்பதையும் அவர் அறியாரா.தெகால்விற்கு நம் கண்டனங்களை மின்னஞ்சல் மூல்ம் தெரிவிக்கலாம்.

அதை விட முக்கியம் இவர், இவர் சார்ந்திருக்கும் அமைப்பு(கள்) சார்பாக தமிழகத்தில் ஆதரவு திரட்ட முனைந்தால் அதற்கு உதவும் முன் எந்த அடிப்படையில் இப்படி பேசினார், இவர்களை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டு கண்டிக்க வேண்டும். உலகின் பிறர் முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானவை என கருதினால் தமிழர் ஆதரவு தருவது சரிதான்.அதற்காக நம் நலனுக்கு குந்தகம் விளைவிக்க முயல்வோருக்கு துணை போகும்
நபர்களுக்கும், அமைப்புகளுக்கும் நாம் ஏன் எப்போதும்,எல்லாவற்றிலும் ஆதரவு தர வேண்டும்.இன்னும் தெளிவாகவே குறிப்பிடுகிறேன் - ஹிமன்சு சார்ந்திருக்கும் அமைப்பு/இயக்கம் இனி மேதா பட்கரை முன்னிறுத்தியோ அல்லது வேறு யாரை முன்னிறுத்தியோ நர்மதை நதி திட்ட எதிர்ப்பு அல்லது பிற திட்டங்களுக்கு எதிர்ப்பு என்று ஆதரவு திரட்டும் போது தமிழகத்திலிருந்து ஆதரவு தரக்கூடாது, ஹிமன்சு தன் கருத்தை மாற்றிக் கொண்டு தமிழகத்தின் நிலைப்பாட்டில் நியாயம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டாலோழிய. நர்மதை நதித்திட்டத்திற்கு தமிழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அது நிறைவேறினாலும் நிறைவேட்டாவிலும் தமிழகத்திற்கு நன்மையும் இல்லை தீமையும் இல்லை எனவே அதை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்று நிலை எடுக்காமால் தமிழகத்தில் தனி நபர்கள், அமைப்புகள் நர்மதை பாதுகாப்பு இயக்கத்தை ஆதரித்தனர். இதில் நானும் உண்டு.
இனி அத்தகைய ஆதரவை தரக்கூடாது. மேதா பட்கரும் ஹிமன்சுவின் நிலைப்பாட்டையே முன்வைத்தால் அவருடைய அமைப்பினையும் ஆதரிக்கக் கூடாது, அல்லது குறைந்தபட்சம் தமிழகத்தில் இவர்களுக்கு உதவுவதை தவிர்க்க வேண்டும், ஆதரவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்று விலகி விட வேண்டும்.

2) வி.ஆர்.கிருஷ்ண அய்யர் precautionary principle என்பதை முன் வைத்து கேரளதரப்பு செய்வதற்கு நியாயம் கூறுகிறார், உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி குருப்பும் இதை முன் வைத்து, சர்வதேச சட்டம் என்றெல்லாம் பேசுகிறார். இதெல்லாம் குட்டையை குழப்புகிற வேலை. இவர்கள் உச்சநீதி மன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது என்பதை சொல்வதில்லை, அணையின் வலு பற்றி ஆய்வு செய்யப்பட்ட பின்னரே அத்தீர்ப்பு தரப்பட்டது என்பதையும் சொல்வதில்லை.

மேலும் அய்யர் குறிப்பிடும் Rio Principles என்பது கட்டுப்படுத்தக்கூடிய சர்வதேச சட்டமோ உடன்படிக்கையோ அல்ல.அது மட்டுமல்ல precautionary principle என்பதை எப்படி
பொருள் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து உலகில் கருத்தொற்றுமை இல்லை. அதை ஆதரிப்பவர்கள் கூட அதை ஒரே மாதிரியாக பொருள் கொள்வதில்லை. அப்படியே precautionary principleஐ இங்கு கையாள வேண்டும் என்றாலும் கூட அதற்காக அணையை இடித்து புதிது கட்ட வேண்டும் என்று வாதிட முடியாது. ஏனெனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது அணையை பலப்படுத்துவது உட்பட வேறுபலவாக இருக்கலாம். இல்லை precautionary principleஐ கையாள வேண்டும், என்றால் அதை எங்கிருந்து துவங்குவது- கேரளத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆராய்ந்து அவை வலுவானவையா என்று கண்டறிய வேண்டும்.

அவற்றை வலுப்படுத்த வேண்டும் அல்லது வலுவற்றவை என்றால் புதிய அணைகள் கட்டுவது உட்பட மாற்றுகளை ஆராய வேண்டும். அதை இவர்கள் ஏன் பேசுவதில்லை. ஏன் முல்லைப் பெரியாறு அணைக்கு மட்டும் இந்த precautionary principle கையாளப்பட வேண்டும். உச்சநீதி மன்றத்தில் இவ்வாதம் எழுப்பட்டதா என்பது எனக்குத் தெரியாது. Precautionary Principle அணைகளுக்கும்,நீர்த்திட்டங்களுக்கு கையாள்வது சரிதான் என்ற நிலைப்பாட்டினை
எடுத்தாலும் கூட அதற்காக சிறு கீறல்கள் விழுந்த அனைத்து அணைகளையும் இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று வாதிட முடியாது. ஏனெனில் Precautionary Principle ஐ கையாளும் போது நாம் அறிய வேண்டியதை அறிந்து, ஆய்வு செய்து தெளிவின்மை, நிச்சயமின்மை குறித்து புரிந்து கொண்டு செயல்பட வேண்டும், ஆதாரமற்ற பீதிகளை அடிப்படையாக கொண்டு செயல்பட முயல்வது Precautionary Principle ஐ தவறாக கையாள்வதாகும்.

பூவுலகின் நண்பர்கள் போன்ற அமைப்புகள் இத்தகைய வாதங்களை கண்டித்து இதிலுள்ள அரசியல் சார்பை வெளிப்படுத்த வேண்டும். செய்கிறார்களா என்று பார்ப்போம்.

3) அ.மார்க்ஸும் இச்சர்ச்சையைப் பற்றி எழுதி ‘வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது கவலை அளிக்கிறது’ என்று எழுதியிருக்கிறார். வேடிக்கைதான், அ.மார்க்ஸ் செய்யாத வெறுப்பு பிரச்ச்சாரமா.அண்மையில் கூட அப்துல் கலாமைப் பற்றி வெறுப்பு பிரச்சாரம் செய்தவர்தானே இவர். அதை விட வேடிக்கை அமர்த்தியா சென்னின் கருத்துக்களையும், அப்துல் கலாமின் கருத்துகளையும் முன் வைத்து செய்த ‘ஒப்பிடல்’தான்.அ.மார்க்ஸ் தன் இணையதளத்தில் அவர் எதிலெதில்லாம் வெறுப்பு பிரச்சாரத்தை ஆதரிக்கிறார், எவற்றில் எதிர்க்கிறார் என்று பட்டியல் தரலாம்.

Labels: , , ,