முகமறியா மனிதர்கள்,உதவிகள்,மரணங்கள், மற்றும் நன்றிகள்

முகமறியா மனிதர்கள்,உதவிகள்,மரணங்கள், மற்றும் நன்றிகள்

அண்மையில் நான் ஒரு பேராசிரியரின் கட்டுரையை தரவிறக்கினேன். பின் அவர் சமீபத்தில் என்ன எழுதியிருக்கிறார் என்று தேடிய போது ஏப்ரல் மாதத்தில் அவர் மரணமடைந்த செய்தியை அறிந்தேன்,அதிர்ச்சியுற்றேன். அவருடன் எனக்கு தொடர்பிருந்ததில்லை, நான் எழுதிய சில மின்னஞ்சல்களுக்கும் அவர் பதில் எழுதவில்லை. கிட்டதட்ட 10 ஆண்டுகளாக அவர் எழுதியதை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். சில கட்டுரைகளில் நான் எழுதியதை சுட்டிக்காட்டியிருக்கிறார்/மேற்கோள் காட்டியிருக்கிறார்.அதை ஒரு அங்கீகாரமாகக் கொள்கிறேன். அவர் எழுதிய நூலிலும் நான் எழுதியதை சுட்டிக்காட்டியிருந்தார்.அவர் எழுதிய நூலுக்கு மதிப்புரை எழுதியிருக்கிறேன். அண்மையில் அவரது கட்டுரையை வாசித்த போது அக்கட்டுரை சிலவற்றை தொடர்புபடுத்தி காட்டி, இதையெல்லாம் நாம் கவனிக்க வேண்டும் என்று அழுத்தமாக சொல்கிறது. எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் (ஒரு வலைப்பதிவிலிருந்து வருவது) அவரது மரணம் பற்றிய குறிப்பு வந்துள்ளது, அதை கவனிக்காமல் விட்டதால் நான் தான் அதை அறிந்து கொள்ளவில்லை. அவரது கட்டுரை என் நண்பர் ஒருவருக்கு பயன்படும் என்பதால் பரிந்துரைத்து அதை அனுப்பினேன். அப்பேராசிரியர் அறிந்திருக்க மாட்டார் இந்தியாவில் ஒரு மூலையில் தன் கட்டுரையை இணையத்தில் வாசித்த ஒருவன் தொடர்ந்து தன் எழுத்துக்களை பின் தொடர்ந்தான் என்று. அவருக்கு என் போல் பல முகமறியா/பெயரறியா வாசகர்கள் இருக்கக் கூடும். என்றேனும் ஒரு நாள் அவரை சந்திப்பேன் என்று நினைத்தேன்.நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

இது போல சில ஆண்டுகள் முன்பு வேறொரு பேராசிரியரின் மரணத்தினை சற்று தாமதமாக அறிந்தேன். அவருக்கு மின்னஞ்சல் எழுதினால்,உடனே பதில் வரும். அம்முறை வரவில்லை.அப்போது நான் அவர் எழுதிய கட்டுரை ஒன்றை படித்து என் கருத்துக்களை எழுதி, நான் எழுதவிருக்கும் கட்டுரையும் அது தொடர்புடையது, முடிந்ததும் அனுப்புகிறேன் உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன் என்று எழுதியிருந்தேன். ஏன் பதில் வரவில்லை என்று தேடிய போது அவர் மரணமடைந்த செய்தி அறிய கிடைத்தது.என் மின்னஞ்சல் கிடைத்த போது அவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்திருக்க வேண்டும். இப்போதும் அவர் எழுதியதை படிக்கும் போது அவரையும் சந்திக்கவில்லை என்ற வருத்தம் ஏற்படுகிறது.

கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்கு முன் ஒர் பேராசிரியருக்கு அவருடைய கட்டுரைகள் சிலவற்றின் பிரதிகளை கோரி கடிதம் (வானஞ்சல்,அப்போது 15 ரூபாய்?) அனுப்பியிருந்தேன்.நான் இருந்தது இந்தியாவில், சென்னையிலோ அல்லது அதையொத்த பெருந்கரங்களிலோ அல்ல.சில வாரங்கள் கழித்து கட்டுரைகள் வானஞ்சலில் வந்தன.அத்துடன் ஒரு கடிதம், அவரது செயலாளர் எழுதியிருந்தார். பேராசிரியர் அண்மையில் மரணமடைந்தார்.அவர் எழுதி பிரசுரமாகாத கட்டுரை உட்பட நீங்கள் கோரியிருந்த கட்டுரைகளில் சிலவற்றின் பிரதிகளை அனுப்பியுள்ளேன்,ஒரிரு கட்டுரகளின் பிரதிகள் இல்லை, அவரது அலுவல அறையில் நூல்கள், ஆவணங்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பதால் கட்டுரைகளை அனுப்ப தாமதமாயிற்று என்று.அசந்து போனேன். இந்தியாவின் ஒரு மூலையிலிருந்து யாரோ ஒருவன் எழுதுகிறான்,நீங்கள் எழுதியவற்றுள் இதையெல்லாம் படித்திருக்கிறேன், உங்களுடைய சில கட்டுரைகளின் பிரதிகள் தேவை, அனுப்ப இயலுமாயின் அனுப்புக என்று.அதற்கு பொறுப்பாக பதில் வருகிறது, கட்டுரைகளும் அனுப்புகிறார்கள்.நெகிழ்ந்து போய் உடனே நன்றி தெரிவித்து பதில் எழுதினேன். அப்பேராசிரியர், ஒரு மானுடவியலாளருடன் கூட்டாக எழுதிய நூலை பின்னர்தான் படித்தேன்.

அப்போதெல்லாம் அப்படி கடிதம் எழுதி பல கட்டுரைகளை கோரியிருகிறேன்.பெரும்பாலானோர் கட்டுரைகளை அனுப்பி உதவினர்.சிலர் நூற்களைக்கூட அன்பளிப்பாக அனுப்பினார்கள்.ஒருவர் வெளியாகவிருந்த நூலின் பிரதியை PDF கோப்பாக அனுப்பியிருந்தார். சில நூற்கள் ‘சுடச்சுட’ அதாவது வெளியான உடனே எனக்கு அன்பளிப்பாக கிடைத்தன.அவர்களில் ஒரு சிலரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது நன்றி தெரிவித்திருக்கிறேன்.

அப்படி இரு நூல்களையும்,கட்டுரைகளையும் அனுப்பிய ஒருவருடன் 1996லிருந்து தொடர்பில் இருக்கிறேன், இடைவெளிகளுடன், அவ்வப்போது மின்னஞ்சல் எழுதுவேன், பதில் வரும், அவர் எழுதியதன் பிரதியும் சில சமயங்களில் வரும்.அவர் அனுப்பிய நூலிற்கு மதிப்புரை எழுதினேன், அது பிரசுரமானது. சில மாதங்கள் முன்பு நான் பங்கேற்கும் ஆய்வுத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அவர் பெயரைக் கூறியதும் தெரியும்,சந்திதத்தில்லை என்று கூறினேன். அவர் நீங்கள் பிரஸ்ஸல்ஸ் செல்லும் போது சந்திக்க ஏற்பாடு செய்ய முயல்கிறேன் என்றார்.ஆகையால் சில மாதங்கள் முன் பிரஸ்லஸ் சென்ற போது அவரை சந்திக்க விரும்பினேன். நான் அங்கு ஒரு நாள்தான் தங்கினேன், காலையில் வந்து சேர்ந்து, ஒரு கூட்டத்தில் பங்கெடுத்து, சிலரை சந்தித்து அடுத்த நாள் காலையில் கிளம்பினேன்.அந்த தேதியில் அவருக்கு பல பணிகள், நேரம் ஒதுக்க முடியவில்லை என்று மின்னஞ்சல் எழுதியிருந்தார். இருப்பினும் 2011/2012ல் சந்திக்க வாய்ப்புண்டு. நான் ஈடுப்பட்டுள்ள ஒரு ஆய்வுத்திட்டத்தில் அவருக்கும் தொடர்பிருக்கிறது,அவர் பொறுப்பில்/மேற்பார்வையில் அது உள்ளது என்பது கூடுதல் தகவல்.

நான் யார் என்று தெரியாவிட்டாலும், என் அக்கறை/ஆர்வத்தை மதித்து கட்டுரைகள், நூற்களை அனுப்பி உதவிய முகமறியாப் பலருக்கு நான் மரணிக்கும் வரை நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

அவர்களில் சிலரின் மரணச் செய்தி எனக்கு வருத்ததினை தருகிறது, நன்றியை நேரில் கூற முடியவில்லையே என்று நினைத்துக் கொள்கிறேன். ஆனாலும் அவர்களது உதவியை, எழுத்துக்களை நான் மறக்க முடியுமா, என்ன.

Labels: , , , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு