ஒரு தலையங்கம், சில கேள்விகள்

ஒரு தலையங்கம், சில கேள்விகள்

இந்த வார EPWவில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது பற்றி ஒரு தலையங்கம் வெளியாகியுள்ளது.இதில் பல விஷயங்களை குறிப்பிடுகிறார்கள், எதை மையப்படுத்த வேண்டுமோ அது போதிய கவனம் பெறுவதில்லை. பிரச்சினை என்ன்வென்றால் இது போன்ற கட்டுரைகள்/தலையங்கங்கள் கூறுவதுதான் உண்மை என்று நம்புபவர்களுக்கு உண்மையான நிலவரம் புரியாமலே போய்விடும். சர்வதேச அளவில் நம்பகத்தன்மை கொண்ட இதழ் என்பதாலும், பெரும்பாலான பிரச்சினைகளில் இடதுசாரி நிலைப்பாடுகளை முன் வைக்கும் அல்லது ஆதரிக்கும் என்பதாலும் ‘சாவுனிஸ்ட்கள்’ சிறிய பிரச்சினையை பெரிதாக காட்டுகிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட இத்தலையங்கம் உதவும். EPWவில் யார் இதை எழுதினார்கள் அல்லது EPW சார்பாக யாரை கலந்தாலோசித்த பின் இது எழுதப்பட்டது என்பது தெரியவில்லை. EPWன் தற்போதைய ஆசிரியர் முன்பு ஹிந்துவில் பணியாற்றியவர். அதை வைத்து ஹிந்து எழுதுவதையே EPWவும் பிரதிபலிக்கும் என்று முடிவு கட்ட முடியாது. ஏனெனில் EPW பல பிரச்சினைகளில் ஹிந்துவின் தலையங்கங்கள் கூறுவதற்கு மாறான கருத்துக்களை தன் தலையங்கங்களில் எழுதியுள்ளது. EPWவின் ஆசிரியர் குழுவினருக்கு போதுமான புரிதல் இன்றி அவர்கள் கலந்தாலோசித்தவர்கள் முன் வைத்த கருத்துக்களின் அடிப்படையில் இது எழுதப்பட்டிருக்கலாம்.அல்லது EPWவில் இதை எழுதியவர்/ஆசிரியர்/உதவி ஆசிரியர் புரிதல் அப்படியாக இருந்திருக்கலாம். அவ்வாறிருந்தால் நான் வியப்படையமாட்டேன்.

இதை மறுத்து எழுத விரும்புபவர்கள் தரவுகளுடன், நீண்ட மறுப்பினை எழுத வேண்டும்.அத்துடன் அந்த எதிர்வினை முன்வைக்கும் வாதம் நம்பக்த்தன்மை கொண்டதாக, பிரச்சினையின் பல அம்சங்களை சுட்டிக்காட்டி தலையங்கம் குறிப்பிடாதவைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். முக்கியமாக இதை முன் வைப்பவர்களின் கண்ணோட்டம் வெறும் ‘சாவுனிசம்’, அவர்கள் அரசியல்படுத்த நினைக்கும் ‘சாவுனிஸ்ட்கள்’, என்ற வாதம் சரியானது அல்ல, மாறாக இது ஒரு வாழ்வுரிமைப் பிரச்சினை என்பதை முன் வைக்க வேண்டும். அப்படி ஒரு எதிர்வினை எழுதப்பட்டால் அது பிரசுரமாக வாய்ப்புண்டு. இது தவிர ஆசிரியருக்கு கடிதம் எழுதியும் தம் எதிர்வினையை சுருக்கமாக எடுத்துரைக்கலாம்,

தமிழ் நாட்டிலிருந்து EPWவில் எழுதுபவர்கள் யாரேனும், குறிப்பாக பல்கலை/ஆய்வுமையங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள்/ஆய்வாளர்கள் இந்த எதிர்வினையை முன் வைத்தால் அது உரிய கவனம் பெறலாம்.அல்லது கூட்டாக கடிதம் எழுதலாம். EPW விற்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிடுவது போன்றவை உதவாது. ஏனெனில் EPW போன்ற இதழ்களுடன் உரையாடலுக்கான வெளியை அது இல்லாமல் ஆக்கிவிடும் ஆபத்து உள்ளது. மேலும் EPWவின் புரிதலில் உள்ள பிரச்சினை என்பதை எடுத்துரைக்க வேண்டுமே தவிர அதை வைத்து EPWவை தமிழக மீனவருக்கு எதிரான சக்தி என்று முத்திரை குத்திவிடக் கூடாது.

நான் சில முறை EPWவின் தலையங்களுக்கு அவற்றில் எழுதப்பட்ட கருத்துக்களுக்கு மறுப்பாக எதிர்வினையாற்றியிருக்கிறேன், ஒரு முறை விரிவாக. அவை எதுவும் பிரசுரமாகவில்லை, ஆசிரியருக்கு கடிதம் பகுதியில் கூட. எனவே இப்போது நான் எழுதினால் பிரசுரமாகுமா என்பது கேள்விக்குறி. எனினும் ஒரு சிறு கடிதம் எழுதி அனுப்புகிறேன். ஹிந்துவைப் பொறுத்த வரை அதேதான் என் அனுபவம் எனவே ஹிந்துவின் ஆசிரியர் கடிதம் பகுதிக்கு எதிர்வினை எழுதுவதில்லை.

தலையங்கம் இங்கே http://epw.in/epw/uploads/articles/15699.pdf
இப்போதிலிருந்து நான்கு வாரங்கள் வரை அந்த முகவரியில் தலையங்கத்தை இலவசமாக தரவிறக்கலாம்.

Labels: , , ,