(மொழிபெயர்ப்பாளர்) சிங்கராயர்: அஞ்சலிக் குறிப்பு


(மொழிபெயர்ப்பாளர்) சிங்கராயர்: அஞ்சலிக் குறிப்பு

இடதுசாரி மற்றும் ஆப்பிரிக சிந்தனையாளர்களின் நூற்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை அறிந்தவர்களுக்கு சிங்கராயர் என்ற பெயர் அறிமுகமான ஒன்றாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அதிகம் கவனம் பெறாத , முக்கியமான,திறமையான மொழிபெயர்ப்பளர் சிங்கராயர் ஜனவரி 2010ல் காலமானார் என்பதை அண்மையில் அறிந்து அதிர்ச்சியுற்றேன். புகைப்படம் யமுனா ராஜேந்திரன் எழுதிய குறிப்பிலிருந்து இங்கு இடப்படுகிறது.


கோவை ஞானி மூலம் சிங்கராயர் எனக்கு அறிமுகமானார்.வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதைப் பற்றி கவலைப்படாமல் இடதுசாரி சிந்தனைகள், இயக்கங்கள் பால் ஈடுபாடும்,தொடர்பும் கொண்டு இளமையில் தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்டார். அவர் கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை.தமிழிலும்,ஆங்கிலத்திலும் ஏராளமாக படிக்ககூடியவர் என்பது அவர் எனக்கு அறிமுகமான சில நாட்களிலேயே தெரிந்து போனது.பல நூல்களை அவருக்கு படிக்கக் கொடுத்திருக்கிறேன்.இதெல்லாம் தமிழில் வரவேண்டும் என்பார்,அதே சமயம் இங்குள்ள சூழலில் இதையெல்லாம் யார் செய்வார்கள் என்ற கேள்வியும் உடனே எழும். ஒரு நூலைப் படித்து அதன் சாரத்தை தமிழில் புரியும்படி கட்டுரையாக தரும் திறன் படைத்தவர் அவர்.நிகழில் அப்படி சில நூற்களின் சாரத்தினை கட்டுரைகளாக தந்துள்ளார்.ரிப்கின் எழுதிய அல்ஜெனி என்ற நூலைப் படிக்கக் கொடுத்தேன். அதனைப் படித்துவிட்டு உடனே அதன் சாரத்தினை ஒரு கட்டுரையாக எழுதிக் கொடுத்தார், நிகழில் வெளியானது.ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் அவர் ஏராளமாகச் செய்திருக்கிறார். சில காரணங்களால் அவர் மொழிபெயர்த்தவைகளில் பல அவர் பெயரில் வெளியாகவில்லை. ஒன்று மொழிபெயர்ப்பாளர் யார் என்பது குறிப்பிடபடாமல் வெளியாகியிருக்கும் அல்லது வேறொரு பெயரில் வெளியாகியிருக்கும்.எனவே நூற்களில் மொழிபெயர்ப்பாளராக
அவர் பெயர் இடம்பெற்றுள்ளதை வைத்து அவர் மொழிபெயர்த்தது இவ்வளவுதான் என்று முடிவு செய்ய முடியாது. எனக்குத் தெரிந்து அவர் மொழிபெயர்ப்பில் குறைந்தது 25 ஆண்டுகள் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்துள்ளார்.எனவே இப்போதாவது அவர் எவற்றையெல்லாம் மொழிபெயர்த்தார் என்பதை பட்டியலிட வேண்டும், அது எளிதானது அல்ல என்றாலும் கூட.இடதுசாரி கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்புகள்,இயக்கங்களுக்காக அவர் மொழிபெயர்த்தார்.நிகழ் உட்பட பலவற்றில் அவரது மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. ஒரு காலகட்டத்தில் சென்னையில் தங்கி ஒரு இயக்கத்திற்காக பல மொழிபெயர்ப்புகளை செய்தார். அப்போது அவரை நேரடியாக தொடர்புகொள்ள முடியாத நிலை, அவருக்கும் தான் இன்னென்ன மொழிபெயர்த்தேன்,பிரதிகள் இவை என பகிர்ந்து கொள்ள முடியாத நிலை. இருப்பினும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வோம், படித்த நூற்களைப் பற்றிப் பேசுவோம்.அப்போதெல்லாம் நான் சென்னையில் மூன்று நூலகங்களில் உறுப்பினராக இருந்தும், நூற்களை வாங்கியும் நிறையப் படித்துக் கொண்டிருந்தேன்.பின்னர் அவர் கோவைக்கு திரும்பிச் சென்றார்.சில ஆண்டுகள் கழித்து நான் கோவைக்கு சென்றேன்.ஒரு அடுக்ககத்தில் ஒரு தனி வீடு எடுத்திருந்தேன்,தனியனாக இருந்தேன்.அப்போது அவரை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. என் வீட்டில் பகலில் இருங்கள், படியுங்கள்,எழுதுங்கள்,மொழிபெயருங்கள் என்று சொன்னேன்.அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.அப்போது அவரிடம் ஒருவிதமான அவநம்பிக்கை சிந்தனை இருந்தது.அது வாழ்க்கையில் பெற்ற கசப்பான அனுபவங்கள், வாழ்வியல் நெருக்கடிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையை கழிப்பதில் உள்ள சிக்கல்களின் தாக்கம் அது.அது பேசும் போது பல முறை கூர்மையாக வெளிப்பட்டது. இதைப் பிற நண்பர்களும் கவனித்திருக்கிறனர்.
இந்த cynicism தேவைதானா என்று கேட்டுள்ளனர். வாழ்க்கையில் பெற்ற தொடர்ச்சியான கசப்பான அனுபவங்களின் விளைவு என்பதாக எடுத்துக் கொண்டேன்.ஒரு இடதுசாரி நண்பர், அவர் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அவர் சிங்கராயருக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தார்,உதவினார்.அவர் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்.காலையில் உங்களைப் போலுண்டா என்று உருகுவார், மாலையில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் நீயெல்லாம் மனிதனயல்ல, உன்னைப் போல் மோசமான மனிதனை நான் பார்த்ததே இல்லை என்று கத்துவார்.அடுத்த நாள்/இரு நாள் கழித்து இயல்பான நண்பராக மாறுவார்.அப்போது அன்று கத்தியவரா இவர் என்று நினைக்க தோன்றும்.அந்த நண்பருடன் சிங்கராயருக்கு அடிக்கடி பிரச்சினை ஏற்படும்.அவருக்கு மட்டுமல்ல, வேறு பல நண்பர்களுக்கும்.அந்த நண்பரை சார்ந்து இருக்கும் போது/இயங்கும் போது சிங்கராயருக்கு பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன.இது போல் வேறு சிலருடன், இயக்கங்களுடன். இதன் காரணமாக அவரிடமிருந்த அவநம்பிக்கை எண்ண ஒட்டம் அதிகரித்தது. எனவே அமரந்தா
‘தமிழ் மொழிக்காக கடுமையாக உழைத்த தோழர் சிங்கராயர் எந்தவித ஞாயமுமின்றி வறுமையிலும் அதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளுடனும் வாழ்ந்து அண்மையில் ஜனவரி 25 அன்று அதிகாலையில் தனது 53 வது வயதில் காலமானார்’ என்று எழுதியிருப்பதில் உள்ள ‘வறுமையிலும் அதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளுடனும் ’
என்பதன் அர்த்தம் எனக்கு புரிகிறது.

அவர் குடும்பமும் பொருளாதார ரீதியாக வசதியான குடும்பம் அல்ல .மிகவும் சாதாரணக் குடும்ப பிண்ணனியில் வந்தவர்.தன்னுடைய ஆர்வம் ,முயற்சி காரணமாக ஏராளமாக படித்தார்.நான் அவருடன் நெருங்கி பழகிய காலங்களில் ஜித்து கிருஷ்ணமூர்த்தி எழுதியவை,மார்க்சியம்,வரலாறு,இந்தியத் தத்துவம்,இலக்கியம் என்று ஏராளமாக படித்தார்.படித்ததையும் சுவைபட எடுத்துரைப்பார் ,எழுதுவார்.விவாதிப்பார்,ஏதாவது நூலைப் பற்றி நல்லவிதமாக குறிப்பிட்டால் அப்படியா அதைப் படிக்கணுமே என்று சொல்வார்.ஒரு முறை நான் படித்த The Grammatical Man என்ற நூலைப் பற்றிக் குறிப்பிட்டேன், நூலகத்திலிருந்து எடுத்துக் கொடுத்து படியுங்கள் என்றேன்.அது அவருக்குப் மிகவும் பிடித்திருந்தது. இப்படி பல நூற்களை நான் கொடுத்து/பரிந்துரைத்து அவர் படித்தார்.இவை அதாவது இத்தகைய வாசிப்பும்,எழுத்தும், அன்றாட வாழ்க்கைகான பொருளீட்ட உதவாது என்று தெரியும், இருப்பினும் இடதுசாரி சிந்தனை ,இயக்கங்கள் மீது நம்பிக்கைக் கொண்டு நம்மாலானதை செய்ய வேண்டும் என்று எண்ணினார். ஒரு நிலையான வேலை இருந்து ஒய்வு கிடைக்கும் போது படித்து,எழுதுவது ஒரளவு சாத்தியம்.ஒரு நிலையான வேலையோ அல்லது வேறுவிதமான நிலையான ஆதரவோ இல்லாத போது படிக்கும்,எழுதும் ஆர்வம் இருந்தாலும் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளே அதற்கு தடையாக அமைந்துவிடும் .அதையும் மீறி செயல்படுவது கடினம்.சிங்கராயர் நினைத்திருந்தால் மொழிபெயர்ப்பு,எழுத்தாற்றலை பயன்படுத்தி காசு சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் மொழிபெயர்த்து தருகிறேன், எதை வேண்டுமானாலும் எழுதித்தருகிறேன், அதை வைத்து பிழைத்துக் கொண்டு நேரம் எஞ்சியபோது இடதுசாரி,முற்போக்கு நூற்களை வாசிக்கிறேன்/மொழிபெயர்க்கிறேன் என்று முடிவு செய்திருக்கலாம். அவர் அந்த முடிவினை தெரிவு செய்யவில்லை.நான் கோவையிலிருந்த போது அவர் திருமணம் செய்துகொண்டார், அதற்கு அழைத்தார், போகவில்லை.அப்போது நான் திருமணங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு போவதையே கிட்டதட்ட தவிர்த்திருந்தேன்.பின்னர் அவரையும்,அவர் மனைவியையும் சந்த்திதேன். நான் கோவையில் தொடர்ந்து பல ஆண்டுகள் இருக்கவில்லை.தொடர்ந்த இடப்பெயர்வுகள் காரணமாக அவரை சந்தித்து பேசும் வாய்ப்புகள் குறைந்தன.என் திருமணத்திற்கு அழைத்திருந்தேன், வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.அதன் பின் அவருக்கும் எனக்கும் தொடர்பே இல்லை.பொதுவான நண்பர்களிடம் தொலை பேசும் போது சில சமயங்களில்விசாரிப்பேன்.அவர் தொடர்ந்து மொழிபெயர்க்கிறார் என்பது தெரியும் இருப்பினும் அவர் முகவரி/தொடர்பு தகவல்கள் தெரியாது.ஒரு கட்டத்திற்கு பிறகு அவரைப் பற்றி நான் அடிக்கடி நினைக்கவேயில்லை/அக்கறை காட்டவில்லை என்பதும் உண்மை. தமிழில் என் வாசிப்பு குறைந்து போனதும் அதற்கொரு காரணம்.இருப்பினும் மார்க்சிய நூற்களை,இதழ்களை,கட்டுரைகளை பார்க்கும் போது/படிக்கும் போது/தரவிறக்கும் போது ராஜதுரை,கோவை ஞானி,நாகராசன்,சிங்கராயர்,(அமரர்)ராயன் என்கிற ராகவன்,சந்திரன் போன்ற நண்பர்களை சமயங்களில் நினைத்துக் கொள்வேன்.

நேற்று கீற்றுதளத்தில் புதிய புத்தகம பேசுகிறது இதழை படிக்கும் போதுதான் தகவல் தெரிந்து அதிர்ச்சியுற்றேன்.அந்த இதழை நான் படிக்காமல் போயிருந்தால் அவர் இறந்த தகவல் கூட எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லது இன்னும் தாமதமாக தெரிய வந்திருக்கும். விடியல் (பதிப்பக) சிவா என்கிற சிவஞானம்,செளந்தரன் நடராஜன் போன்ற நண்பர்கள் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பும்,உதவியும் செய்துள்ளனர்.செளந்தரன் நடராஜன் அந்த வகையில் அற்புதமான மனிதர்.அவனுக்கு எதாவது செய்யணும் ரவி என்று சிங்கராயரைப் பற்றி பேசும் போது குறிப்பிடுவார்.தனக்கு வசதி ஏற்பட்ட போது அதை செய்யவும் செய்தார் என்பதை நான் அறிவேன்.அதற்கு முன்னரும் அவர் சிங்கராயருக்கு உதவி செய்துள்ளார்.அப்போது ஒரு பெரிய நட்பு வட்டத்தில் நானும் இருந்தேன், சென்னை,கோவை, மதுரை,திருப்பூர்,பெங்களூர் என பல ஊர்களில் இருந்த நண்பர்களின் நட்பு வட்டமது.சிங்கராயரை அதில் உள்ள பலருக்கு நேரடியாகத் தெரியும்.

சிங்கராயரின் பரந்த வாசிப்பும்,இரு மொழித்திறனும் அவரின் மொழிபெயர்ப்பு பணிக்கு உதவின.அவர் மொழிபெயர்த்த பல நூல்கள் மார்க்சிய கோட்பாடு, நடைமுறை யுக்தி மற்றும் தத்துவம் சார்ந்த நூல்கள்.இவற்றை மொழிபெயர்ப்பது கடினம்.அந்தவகையில் தமிழில் இவற்றை திறம்பட செய்யும் மொழிபெயர்ப்பாளர்களில் சிங்கராயர் முக்கியமானவர் என்று சொல்ல முடியும். 53 வயதெல்லாம் மரணமடைகிற வயதா நண்பா என்று கேட்கத் தோன்றுகிறது.அவரைப் பற்றி இப்போது யோசிக்கும் போது மனதில் ஒரு வருத்தமும், குற்ற உணர்வும் ஏற்படுகிறது.கிட்டதட்ட 10 நாட்களுக்கு முன்புதான் அவருக்கும் எனக்கும் தெரிந்த நண்பர் ஒருவரிடம் தொலைபேசினேன்.நானும் சிங்கராயர் பற்றி கேட்கவில்லை,அவரும் குறிப்பிடவில்லை.எனக்குத் தெரிந்திருக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம் அல்லது சொல்ல மறந்திருக்கலாம்.நட்புகளைப் பேணுவது கூட தொழில் நுட்பம் சார்ந்த ஒன்றாக மாறிவிட்டதோ என்ற ஐயம் எழுகிறது.உனக்கு மின்னஞ்சல் இல்லையென்றால், செல்பேசி இல்லையென்றால் உன்னிடம் தொடர்பு கொள்வது கடினம் அல்லது இயலாத ஒன்று என்று சொல்லாமல் சொல்கிறோமோ?. இல்லை அதைக் கூட சொல்லாமல் புறக்கணித்து விடுகிறோமா, தெரியவில்லை.தொலைவு என்பது மனம் சார்ந்த ஒன்றாகவும் அமைந்துவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.எது எப்படியோ சிங்கராயர் மறைவினை நான் எதிர்பார்க்கவில்லை.

பொருளாதார ரீதியாக அவர் குடும்பத்திற்கு உதவ நிதி திரட்டப்படுகிறது.உதவ விரும்புபவர்கள் கீழே தரப்பட்டுள்ள தகவலைப் பயன்படுத்தி உதவுங்கள் என்று கேட்டுகொள்கிறேன்.இந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நிதியளிக்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
ந.வே. நடராசன், மனை எண் 27, 3வது தெரு,ராஜேஸ்வரி நகர், தையூர் சாலை, கேளம்பாக்கம்- 603103, கைப்பேசி எண்: 9445125379

காசோலை/வரைவோலை மூலம் நிதியளிப்போர் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அனுப்புவோர் பாரத ஸ்டேட் வங்கியின் கணக்கில் செலுத்தலாம். விவரம்:-
A/C No: 20000 390136
D.V. NATARAJAN
STATE BANK OF INDIA
(04308)- PBB BESANT NAGAR
IFS CODE: SBIN 0004308
E-159, ANNAI VELANKANNI CHURCH ROAD
7th AVENUE, BESANT NAGAR,
CHENNAI - 6000090

Labels: , , , ,

1 மறுமொழிகள்:

Anonymous ஓசை செல்லா மொழிந்தது...

சூடானிலிருந்து எனது முகநூல் (ஃபேஸ்புக்) நண்பர் சிவகுமார்... Good Afternoon to You Chella. Just now, I got the Confirmation from my Uncle that a sum of Rs.1,000/- (Rupees One Thousand only) has been paid today into the respective Account, as my humble contribution. The sum is paid at Tirupur SBI. Please inform this to the concerned People to confirm it. Thanks for Allowing me to participate in this Good Thing.

5:14 AM  

Post a Comment

<< முகப்பு