உச்சநீதி மன்றம்,பெரியார்,குஷ்பு

உச்சநீதி மன்றம்,பெரியார்,குஷ்பு

குஷ்பு மீதான வழக்குகளின் விசாரிக்கும் போது உச்சநீதி மன்ற நீதிபதிகள் சில கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவை தீர்ப்பல்ல.வழக்கு விசாரணை போது இப்படிச் சொல்லப்படும் கருத்துகள், கேள்விகள் போன்றவை தீர்ப்பல்ல.தீர்ப்பில் அவை இடம் பெற வேண்டியதில்லை.ஆனால் இது புரிந்து கொள்ளப்படாமல் ஏதோ தீர்ப்பு தரப்பட்டது போல் எழுதப்பட்டுள்ளதைப் படித்தேன்.இதில் நீதிபதிகள் சிலவற்றை தவறு/குற்றம் என்று சட்டம் சொல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.அதே போல் ராதை, கிருஷ்ணன் குறித்தும் ஒரு கருத்தையும் கூறியுள்ளனர்.

ஒரு காரியம் தவறல்ல என்பதற்காக அதை ஊக்குவிக்க வேண்டும் அல்லது பரிந்துரைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. குடிப்பது சட்டப்படி குற்றமல்ல என்பதற்காக எல்லோரும் குடிகாரர்களாக வேண்டும் அல்லது குடிக்கு அடிமையாக வேண்டும் அல்லது குடிக்கும் பழக்கத்தை கைக்கொள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய வேண்டுமா என்ன. குஷ்பு கூறிய கருத்துக்கள் குறித்து பல அபிப்பிராயங்கள் இருக்கும்,தன் கருத்தை கூறும் உரிமை குஷ்புக்கு உண்டு.அவர் மீது வழக்குகள் போடுவதை நான் ஆதரிக்கவில்லை. ராதை-கிருஷ்ணன் குறித்து கூறப்பட்டது உண்மை என்று கொண்டாலும்,சட்டத்தினை அதன் அடிப்படையில் வகுக்க முடியாது. திரெளபதியை உதாரணம் காட்டி ஒரு பெண் பல ஆண்களை மணப்பதையும்,முருகனை உதாரணம் காட்டி பல தார மணத்தினை சட்டப்படி செல்லத்தக்கது என அறிவிக்க கோர முடியுமா என்ன?. பலதார திருமணங்களை செய்யும் உரிமையை இந்து சட்டம் வழங்கவில்லை. எனவே புராணங்களை உதாரணம் காட்டுவது எந்த அளவு சரியாக இருக்க முடியும்.சாஸ்திரங்களில் உள்ள திருமண முறைகளை இந்து சட்டம் அப்படியே அனுமதிக்கவில்லையே.இன்றைக்கு ஒரு இந்து புராணங்களை காரணம் காட்டி தன் செயல்களுக்கான நியாயங்களை கற்பிக்க முடியாது. இந்து சட்டத்தின்படி அது சரியா இல்லையா என்பதுதான் கேள்வி.

மேலும் ராதையும், கிருஷ்ணனும் தெய்வீக காதலர்கள் என்பதற்காக நாங்களும் தெய்வீக காதலர்கள், அவர்கள் செய்ததையெல்லாம் செய்வோம் என்று இன்று காதலர்கள் வாதிட முடியாது.குஷ்புவின் கருத்துரிமைக்கு ஆதரவாக தீர்ப்பு வர வாய்ப்புள்ளது.அதனால் அவர் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படலாம்.

குஷ்பு தைரியமாக வழக்கினை எதிர்கொண்டார். மத்திய கிழக்கு நாடுகளில் தஞ்சம் புகவில்லை.ஒருவேளை அவர் அப்படி செய்திருந்தால் ‘செக்யுலர்’வாதிகள் அவரை கொண்டாடியிருக்கக் கூடும்.

பெரியார் எழுதியதிலிருந்து சிலவற்றை இட்டுள்ள அதி அசுரன் குடியரசிலிருந்து இன்னும் சிலவற்றை இட இயலாத காரணத்தினை எழுதியுள்ளார். தி.க சார்பில் குடியரசு தொகுதிகள் வெளியாகவுள்ள நிலையில் நாம் பெரியார் எழுதியதை முழுமையாக இனி அறிய வாய்ப்புள்ளது. அதி அசுரன் இட்டுள்ளதை படித்தால் பெரியாரின் பொது புத்தி அந்த நாட்களில் எப்படி இருந்துள்ளது என்பதை யூகிக்க முடிகிறது. அன்று அவ்வாறு எழுதிய பெரியார் 1940களில்,அதற்குப் பின்னர் அதே போல் தொடர்ந்து எழுதினாரா, அந்தக் கருத்துக்களை வலியுறுத்தி இயக்கங்கள்/போராட்டங்கள் நடத்தினாரா, தி.கவில் இந்தக் கருத்துகளை எடுத்துச் சொல்ல பெண்கள் பிரிவு/அணி என்று ஒன்று இருந்தத்தா, அது எப்படி இயங்கியது, இன்றைய தி.க வலியுறுத்தும் பெண்ணியத்தில் இந்தக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா? இதை வீரமணியும்,மணியம்மையும் வலியுறுத்தி எழுதியுள்ளார்களா-இப்ப்டி பல கேள்விகள் எழுகின்றன

நான் அந்த இடுகையிலுள்ள பெரியாரின் கருத்துக்களை பெருமளவிற்கு நிராகரிக்கிறேன். அவை அர்த்தமற்ற உளறல்கள்,சமூகம் அதன் அடிப்படையில் செயல்பட முடியாது.தனி நபர் இன்பம் தோய்த்தல், இன்பத்தினை தேடுதல் என்பதை சமூகம் எதுவரை அனுமதிக்கும் என்ற கேள்வியை தவிர்க்க முடியாது.

ஒவ்வொருத்தரும் பிறரை/இன்னொருவரை தன்னுடைய இன்ப நாட்டம்/தேடலுக்கான கருவியாக/வழியாக பயன்படுத்துவது என்பது அற நெறியுடன் தொடர்புடையது.அறம் தேவையில்லை,இன்ப நாட்டம்/தேடல் என்ற பெயரில்செய்யப்படுவதில் மூன்றாம் நபர்/சமூகம் தலையிட கூடாது என்ற வாதங்கள் அபத்தமானவை. அதை பெரியார் நம்பியிருந்தால் இந்து மத திருமணத்தினை,சடங்குகளை அவர் ஏன் விமர்சித்தார். மூன்றாம் நபரான அவருக்கு அது குறித்து சொல்ல என்ன உரிமை. அவர் கூறிய கொள்கைகளை அவர் கடைப்பிடிருந்தால் குழந்தை திருமணம உட்பட பலவற்றை அவர் எதிர்த்திருக்கவே கூடாது.

எனவே பெரியாரின் அந்தக் கருத்துகளுடன் நான் பெருமளவிற்கு மாறுபடுகிறேன். சேர்ந்து வாழ்தல்,திருமணத்திற்கு முன்பு பாலுறவு கொள்வது போன்றவை சட்டப்படி குற்றம்/தவறு அல்ல என்பதற்காக அவற்றை கண்மூடித்தனமாக ஆதரிக்க தேவையில்லை.

Labels: , , , ,

(மொழிபெயர்ப்பாளர்) சிங்கராயர்: அஞ்சலிக் குறிப்பு


(மொழிபெயர்ப்பாளர்) சிங்கராயர்: அஞ்சலிக் குறிப்பு

இடதுசாரி மற்றும் ஆப்பிரிக சிந்தனையாளர்களின் நூற்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை அறிந்தவர்களுக்கு சிங்கராயர் என்ற பெயர் அறிமுகமான ஒன்றாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அதிகம் கவனம் பெறாத , முக்கியமான,திறமையான மொழிபெயர்ப்பளர் சிங்கராயர் ஜனவரி 2010ல் காலமானார் என்பதை அண்மையில் அறிந்து அதிர்ச்சியுற்றேன். புகைப்படம் யமுனா ராஜேந்திரன் எழுதிய குறிப்பிலிருந்து இங்கு இடப்படுகிறது.


கோவை ஞானி மூலம் சிங்கராயர் எனக்கு அறிமுகமானார்.வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதைப் பற்றி கவலைப்படாமல் இடதுசாரி சிந்தனைகள், இயக்கங்கள் பால் ஈடுபாடும்,தொடர்பும் கொண்டு இளமையில் தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்டார். அவர் கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை.தமிழிலும்,ஆங்கிலத்திலும் ஏராளமாக படிக்ககூடியவர் என்பது அவர் எனக்கு அறிமுகமான சில நாட்களிலேயே தெரிந்து போனது.பல நூல்களை அவருக்கு படிக்கக் கொடுத்திருக்கிறேன்.இதெல்லாம் தமிழில் வரவேண்டும் என்பார்,அதே சமயம் இங்குள்ள சூழலில் இதையெல்லாம் யார் செய்வார்கள் என்ற கேள்வியும் உடனே எழும். ஒரு நூலைப் படித்து அதன் சாரத்தை தமிழில் புரியும்படி கட்டுரையாக தரும் திறன் படைத்தவர் அவர்.நிகழில் அப்படி சில நூற்களின் சாரத்தினை கட்டுரைகளாக தந்துள்ளார்.ரிப்கின் எழுதிய அல்ஜெனி என்ற நூலைப் படிக்கக் கொடுத்தேன். அதனைப் படித்துவிட்டு உடனே அதன் சாரத்தினை ஒரு கட்டுரையாக எழுதிக் கொடுத்தார், நிகழில் வெளியானது.ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் அவர் ஏராளமாகச் செய்திருக்கிறார். சில காரணங்களால் அவர் மொழிபெயர்த்தவைகளில் பல அவர் பெயரில் வெளியாகவில்லை. ஒன்று மொழிபெயர்ப்பாளர் யார் என்பது குறிப்பிடபடாமல் வெளியாகியிருக்கும் அல்லது வேறொரு பெயரில் வெளியாகியிருக்கும்.எனவே நூற்களில் மொழிபெயர்ப்பாளராக
அவர் பெயர் இடம்பெற்றுள்ளதை வைத்து அவர் மொழிபெயர்த்தது இவ்வளவுதான் என்று முடிவு செய்ய முடியாது. எனக்குத் தெரிந்து அவர் மொழிபெயர்ப்பில் குறைந்தது 25 ஆண்டுகள் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்துள்ளார்.எனவே இப்போதாவது அவர் எவற்றையெல்லாம் மொழிபெயர்த்தார் என்பதை பட்டியலிட வேண்டும், அது எளிதானது அல்ல என்றாலும் கூட.இடதுசாரி கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்புகள்,இயக்கங்களுக்காக அவர் மொழிபெயர்த்தார்.நிகழ் உட்பட பலவற்றில் அவரது மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. ஒரு காலகட்டத்தில் சென்னையில் தங்கி ஒரு இயக்கத்திற்காக பல மொழிபெயர்ப்புகளை செய்தார். அப்போது அவரை நேரடியாக தொடர்புகொள்ள முடியாத நிலை, அவருக்கும் தான் இன்னென்ன மொழிபெயர்த்தேன்,பிரதிகள் இவை என பகிர்ந்து கொள்ள முடியாத நிலை. இருப்பினும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வோம், படித்த நூற்களைப் பற்றிப் பேசுவோம்.அப்போதெல்லாம் நான் சென்னையில் மூன்று நூலகங்களில் உறுப்பினராக இருந்தும், நூற்களை வாங்கியும் நிறையப் படித்துக் கொண்டிருந்தேன்.பின்னர் அவர் கோவைக்கு திரும்பிச் சென்றார்.சில ஆண்டுகள் கழித்து நான் கோவைக்கு சென்றேன்.ஒரு அடுக்ககத்தில் ஒரு தனி வீடு எடுத்திருந்தேன்,தனியனாக இருந்தேன்.அப்போது அவரை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. என் வீட்டில் பகலில் இருங்கள், படியுங்கள்,எழுதுங்கள்,மொழிபெயருங்கள் என்று சொன்னேன்.அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.அப்போது அவரிடம் ஒருவிதமான அவநம்பிக்கை சிந்தனை இருந்தது.அது வாழ்க்கையில் பெற்ற கசப்பான அனுபவங்கள், வாழ்வியல் நெருக்கடிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையை கழிப்பதில் உள்ள சிக்கல்களின் தாக்கம் அது.அது பேசும் போது பல முறை கூர்மையாக வெளிப்பட்டது. இதைப் பிற நண்பர்களும் கவனித்திருக்கிறனர்.
இந்த cynicism தேவைதானா என்று கேட்டுள்ளனர். வாழ்க்கையில் பெற்ற தொடர்ச்சியான கசப்பான அனுபவங்களின் விளைவு என்பதாக எடுத்துக் கொண்டேன்.ஒரு இடதுசாரி நண்பர், அவர் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அவர் சிங்கராயருக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தார்,உதவினார்.அவர் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்.காலையில் உங்களைப் போலுண்டா என்று உருகுவார், மாலையில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் நீயெல்லாம் மனிதனயல்ல, உன்னைப் போல் மோசமான மனிதனை நான் பார்த்ததே இல்லை என்று கத்துவார்.அடுத்த நாள்/இரு நாள் கழித்து இயல்பான நண்பராக மாறுவார்.அப்போது அன்று கத்தியவரா இவர் என்று நினைக்க தோன்றும்.அந்த நண்பருடன் சிங்கராயருக்கு அடிக்கடி பிரச்சினை ஏற்படும்.அவருக்கு மட்டுமல்ல, வேறு பல நண்பர்களுக்கும்.அந்த நண்பரை சார்ந்து இருக்கும் போது/இயங்கும் போது சிங்கராயருக்கு பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன.இது போல் வேறு சிலருடன், இயக்கங்களுடன். இதன் காரணமாக அவரிடமிருந்த அவநம்பிக்கை எண்ண ஒட்டம் அதிகரித்தது. எனவே அமரந்தா
‘தமிழ் மொழிக்காக கடுமையாக உழைத்த தோழர் சிங்கராயர் எந்தவித ஞாயமுமின்றி வறுமையிலும் அதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளுடனும் வாழ்ந்து அண்மையில் ஜனவரி 25 அன்று அதிகாலையில் தனது 53 வது வயதில் காலமானார்’ என்று எழுதியிருப்பதில் உள்ள ‘வறுமையிலும் அதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளுடனும் ’
என்பதன் அர்த்தம் எனக்கு புரிகிறது.

அவர் குடும்பமும் பொருளாதார ரீதியாக வசதியான குடும்பம் அல்ல .மிகவும் சாதாரணக் குடும்ப பிண்ணனியில் வந்தவர்.தன்னுடைய ஆர்வம் ,முயற்சி காரணமாக ஏராளமாக படித்தார்.நான் அவருடன் நெருங்கி பழகிய காலங்களில் ஜித்து கிருஷ்ணமூர்த்தி எழுதியவை,மார்க்சியம்,வரலாறு,இந்தியத் தத்துவம்,இலக்கியம் என்று ஏராளமாக படித்தார்.படித்ததையும் சுவைபட எடுத்துரைப்பார் ,எழுதுவார்.விவாதிப்பார்,ஏதாவது நூலைப் பற்றி நல்லவிதமாக குறிப்பிட்டால் அப்படியா அதைப் படிக்கணுமே என்று சொல்வார்.ஒரு முறை நான் படித்த The Grammatical Man என்ற நூலைப் பற்றிக் குறிப்பிட்டேன், நூலகத்திலிருந்து எடுத்துக் கொடுத்து படியுங்கள் என்றேன்.அது அவருக்குப் மிகவும் பிடித்திருந்தது. இப்படி பல நூற்களை நான் கொடுத்து/பரிந்துரைத்து அவர் படித்தார்.இவை அதாவது இத்தகைய வாசிப்பும்,எழுத்தும், அன்றாட வாழ்க்கைகான பொருளீட்ட உதவாது என்று தெரியும், இருப்பினும் இடதுசாரி சிந்தனை ,இயக்கங்கள் மீது நம்பிக்கைக் கொண்டு நம்மாலானதை செய்ய வேண்டும் என்று எண்ணினார். ஒரு நிலையான வேலை இருந்து ஒய்வு கிடைக்கும் போது படித்து,எழுதுவது ஒரளவு சாத்தியம்.ஒரு நிலையான வேலையோ அல்லது வேறுவிதமான நிலையான ஆதரவோ இல்லாத போது படிக்கும்,எழுதும் ஆர்வம் இருந்தாலும் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளே அதற்கு தடையாக அமைந்துவிடும் .அதையும் மீறி செயல்படுவது கடினம்.சிங்கராயர் நினைத்திருந்தால் மொழிபெயர்ப்பு,எழுத்தாற்றலை பயன்படுத்தி காசு சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் மொழிபெயர்த்து தருகிறேன், எதை வேண்டுமானாலும் எழுதித்தருகிறேன், அதை வைத்து பிழைத்துக் கொண்டு நேரம் எஞ்சியபோது இடதுசாரி,முற்போக்கு நூற்களை வாசிக்கிறேன்/மொழிபெயர்க்கிறேன் என்று முடிவு செய்திருக்கலாம். அவர் அந்த முடிவினை தெரிவு செய்யவில்லை.நான் கோவையிலிருந்த போது அவர் திருமணம் செய்துகொண்டார், அதற்கு அழைத்தார், போகவில்லை.அப்போது நான் திருமணங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு போவதையே கிட்டதட்ட தவிர்த்திருந்தேன்.பின்னர் அவரையும்,அவர் மனைவியையும் சந்த்திதேன். நான் கோவையில் தொடர்ந்து பல ஆண்டுகள் இருக்கவில்லை.தொடர்ந்த இடப்பெயர்வுகள் காரணமாக அவரை சந்தித்து பேசும் வாய்ப்புகள் குறைந்தன.என் திருமணத்திற்கு அழைத்திருந்தேன், வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.அதன் பின் அவருக்கும் எனக்கும் தொடர்பே இல்லை.பொதுவான நண்பர்களிடம் தொலை பேசும் போது சில சமயங்களில்விசாரிப்பேன்.அவர் தொடர்ந்து மொழிபெயர்க்கிறார் என்பது தெரியும் இருப்பினும் அவர் முகவரி/தொடர்பு தகவல்கள் தெரியாது.ஒரு கட்டத்திற்கு பிறகு அவரைப் பற்றி நான் அடிக்கடி நினைக்கவேயில்லை/அக்கறை காட்டவில்லை என்பதும் உண்மை. தமிழில் என் வாசிப்பு குறைந்து போனதும் அதற்கொரு காரணம்.இருப்பினும் மார்க்சிய நூற்களை,இதழ்களை,கட்டுரைகளை பார்க்கும் போது/படிக்கும் போது/தரவிறக்கும் போது ராஜதுரை,கோவை ஞானி,நாகராசன்,சிங்கராயர்,(அமரர்)ராயன் என்கிற ராகவன்,சந்திரன் போன்ற நண்பர்களை சமயங்களில் நினைத்துக் கொள்வேன்.

நேற்று கீற்றுதளத்தில் புதிய புத்தகம பேசுகிறது இதழை படிக்கும் போதுதான் தகவல் தெரிந்து அதிர்ச்சியுற்றேன்.அந்த இதழை நான் படிக்காமல் போயிருந்தால் அவர் இறந்த தகவல் கூட எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லது இன்னும் தாமதமாக தெரிய வந்திருக்கும். விடியல் (பதிப்பக) சிவா என்கிற சிவஞானம்,செளந்தரன் நடராஜன் போன்ற நண்பர்கள் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பும்,உதவியும் செய்துள்ளனர்.செளந்தரன் நடராஜன் அந்த வகையில் அற்புதமான மனிதர்.அவனுக்கு எதாவது செய்யணும் ரவி என்று சிங்கராயரைப் பற்றி பேசும் போது குறிப்பிடுவார்.தனக்கு வசதி ஏற்பட்ட போது அதை செய்யவும் செய்தார் என்பதை நான் அறிவேன்.அதற்கு முன்னரும் அவர் சிங்கராயருக்கு உதவி செய்துள்ளார்.அப்போது ஒரு பெரிய நட்பு வட்டத்தில் நானும் இருந்தேன், சென்னை,கோவை, மதுரை,திருப்பூர்,பெங்களூர் என பல ஊர்களில் இருந்த நண்பர்களின் நட்பு வட்டமது.சிங்கராயரை அதில் உள்ள பலருக்கு நேரடியாகத் தெரியும்.

சிங்கராயரின் பரந்த வாசிப்பும்,இரு மொழித்திறனும் அவரின் மொழிபெயர்ப்பு பணிக்கு உதவின.அவர் மொழிபெயர்த்த பல நூல்கள் மார்க்சிய கோட்பாடு, நடைமுறை யுக்தி மற்றும் தத்துவம் சார்ந்த நூல்கள்.இவற்றை மொழிபெயர்ப்பது கடினம்.அந்தவகையில் தமிழில் இவற்றை திறம்பட செய்யும் மொழிபெயர்ப்பாளர்களில் சிங்கராயர் முக்கியமானவர் என்று சொல்ல முடியும். 53 வயதெல்லாம் மரணமடைகிற வயதா நண்பா என்று கேட்கத் தோன்றுகிறது.அவரைப் பற்றி இப்போது யோசிக்கும் போது மனதில் ஒரு வருத்தமும், குற்ற உணர்வும் ஏற்படுகிறது.கிட்டதட்ட 10 நாட்களுக்கு முன்புதான் அவருக்கும் எனக்கும் தெரிந்த நண்பர் ஒருவரிடம் தொலைபேசினேன்.நானும் சிங்கராயர் பற்றி கேட்கவில்லை,அவரும் குறிப்பிடவில்லை.எனக்குத் தெரிந்திருக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம் அல்லது சொல்ல மறந்திருக்கலாம்.நட்புகளைப் பேணுவது கூட தொழில் நுட்பம் சார்ந்த ஒன்றாக மாறிவிட்டதோ என்ற ஐயம் எழுகிறது.உனக்கு மின்னஞ்சல் இல்லையென்றால், செல்பேசி இல்லையென்றால் உன்னிடம் தொடர்பு கொள்வது கடினம் அல்லது இயலாத ஒன்று என்று சொல்லாமல் சொல்கிறோமோ?. இல்லை அதைக் கூட சொல்லாமல் புறக்கணித்து விடுகிறோமா, தெரியவில்லை.தொலைவு என்பது மனம் சார்ந்த ஒன்றாகவும் அமைந்துவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.எது எப்படியோ சிங்கராயர் மறைவினை நான் எதிர்பார்க்கவில்லை.

பொருளாதார ரீதியாக அவர் குடும்பத்திற்கு உதவ நிதி திரட்டப்படுகிறது.உதவ விரும்புபவர்கள் கீழே தரப்பட்டுள்ள தகவலைப் பயன்படுத்தி உதவுங்கள் என்று கேட்டுகொள்கிறேன்.இந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நிதியளிக்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
ந.வே. நடராசன், மனை எண் 27, 3வது தெரு,ராஜேஸ்வரி நகர், தையூர் சாலை, கேளம்பாக்கம்- 603103, கைப்பேசி எண்: 9445125379

காசோலை/வரைவோலை மூலம் நிதியளிப்போர் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அனுப்புவோர் பாரத ஸ்டேட் வங்கியின் கணக்கில் செலுத்தலாம். விவரம்:-
A/C No: 20000 390136
D.V. NATARAJAN
STATE BANK OF INDIA
(04308)- PBB BESANT NAGAR
IFS CODE: SBIN 0004308
E-159, ANNAI VELANKANNI CHURCH ROAD
7th AVENUE, BESANT NAGAR,
CHENNAI - 6000090

Labels: , , , ,

சமீபத்திய நிகழ்வுகள்/சர்ச்சைகள் அல்லது நான் கும்பமேளாவிற்கு போகவில்லை

சமீபத்திய நிகழ்வுகள்/சர்ச்சைகள் அல்லது நான் கும்பமேளாவிற்கு போகவில்லை

கிட்டதட்ட ஒரு வார பயணம்/தங்கலிலிருந்து தற்போது திரும்பினேன்.ஒரு நாட்டின் தலை நகரில் நட்சத்திர விடுதியில் தங்கல்.வசதிக்கு குறைவில்லை, வெளியே பனிப்புயல் அடித்தாலும் உள்ளே தட்பவெப்பம் சீராக இருந்தது.இணைய இணைப்பு இருந்தாலும் வழக்கமாக படிக்கும்/பார்க்கும் பல தமிழ்,ஆங்கில இணையதளங்கள்,வலைப்பதிவுகளைப் பார்க்க முடியவில்லை.டிவிட்டருக்கான இணைப்பு இல்லை. கூகுளில் தேடினாலும் பல சமயங்களில் பயனில்லை,ஏனெனில் தேடல் செய்யப்பட்ட வலைப்பக்கம்/தேடல் முடிவுகளை கணிணியில் திரையில் காண முடியவில்லை.மின்னஞ்சல் வசதி இருந்தது, சில தளங்களை, செய்தித்தாட்களை படிக்க முடிந்தது. எனவே திரும்பிய பிறகுதான் என்ன(தான்) நடந்திருக்கிறது, சர்ச்சைகள் என்னென்ன என்பதை ஒரளவு அறிந்து கொள்ள முடிந்தது.சிலவற்றைப் படித்தேன்.எதிர்வினையாற்ற விருப்பம் இருந்தாலும் இப்போது இயலாது.ஏனெனில் உடனடியாகச் செய்ய வேண்டியவை பல(1).மேலும் என் கருத்தை உடனடியாக எழுதி ஒன்றும் ஆகப் போவதில்லை.பேசலாம், மெதுவாக பின்னர் பேசுவோம், அவசரமில்லை என்று நினைக்கிறேன்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது, மக்களையிலும் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.அதை நான் ஆதரிக்கிறேன், உள் ஒதுக்கீடு என்பதை நிராகரிக்கிறேன்.இந்த இட ஒதுக்கீடு இந்திய அரசியலில் சில மாற்றங்களைக் கொண்டு வரும், உடனடியாக இல்லையென்றாலும், காலப்போக்கில். இதன் முக்கியத்துவத்தை இன்று முழுதாக மதிப்பிட முடியாது. இப்போதேனும் இது சாத்தியமாகிறதே என்றுதான் திருப்தி அடைய வேண்டும். உறுதியாக நின்று இதை சாத்தியமாக்கிய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக, இடதுசாரி மற்றும் பாஜக,ஆதரித்த பிற கட்சிகளை இதற்காக பாராட்ட வேண்டும். நித்தியானந்தர் குறித்த சர்ச்சையை விட இதுதான் அதிக கவனம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் வலைப்பதிவுகளை பார்த்த போது அந்த சர்ச்சைக்கு தரப்பட்ட முக்கியத்துவம் இதற்கு தரப்படவில்லை என்று கருதத் தோன்றுகிறது.

மார்ச்8ஐ ஒட்டி எழுதப்பட்டுள்ள சில இடுகைகளை படித்தேன்.தனி நபர் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து சிலவற்றைப் புரிந்து கொள்ள முடியும். இன்னொருவர் தன் வாழ்க்கையிலிருந்து அதற்கு நேர் எதிரான புரிதலை நீங்கள் பெற முடியும் என வாதிடக்கூடும். எனவே தனி நபர் அனுபவங்களையும் கருத்தில் கொண்டு அதற்கு அப்பாலும் சிந்திக்க வேண்டும்.சில மாற்றங்கள் சில காரணிகளால் ஏற்படும்.அந்த மாற்றங்களின் விளைவுகள் வேறு சிலவறிற்கு காரணிகளாக/உந்து சக்தியாக மாறும்.மேலும் மனிதர்களை,சமூகங்களைப் புரிந்து கொள்ள முயலும் போது மாற்றம் என்பது நாம்
நினைத்ததிற்கு மாறான/எதிர்பாரத விளைவுகளை கொண்டு வரும் என்பதற்கான சாத்தியக்கூறு உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.தாலி அடிமைச்சின்னம்,மதம் பெண்களை ஒடுக்கும்,சோசலிச சமூகமே பெண் விடுதலைக்கான ஒரே தீர்வு போன்ற தட்டையான புரிதல்களுக்கு அப்பாற்பட்டு யோசிக்கும் போதுதான் சிலவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.மனிதர்கள் மரபு, நவீனம்/மாற்றம் என்பதை பலவிதங்களில் அணுகிறார்கள், பல சாத்தியப்பாடுகளை கருத்தில் கொண்டு தங்கள் வாழ்க்கையில் சிலவற்றை அனுமதிக்கிறார்கள், சிலவற்றை ஏற்க மறுக்கிறார்கள்.திருமண நாளில் மடிசார் பாணியில் புடவை அணிந்து,தாலி கட்டிக்கொண்டு, மெட்டிப் போட்டுக் கொள்ளும் பெண்ணே, அடுத்த சில நாட்களில்/வாரங்களில் பிஸினஸ் சூட், கோட், டை அணிந்து நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவராக பயணிப்பதையும்,கூட்டங்களில் பல ஆண்களுக்கிடையே தன் கருத்தை வலியுறுத்திப் பேசுவதையும்,நள்ளிரவில் தனியே வாகனம் ஒட்டி சென்று விமானப் பயணம் செய்து அடுத்த கண்டத்திற்கு பயணிப்பதை எப்படிப் புரிந்து கொள்வது.தாலி அணிந்திருப்பதால் அவள் அடிமை என்றா அல்லது அவள் ஆணாதிக்கத்தை ஏற்றுக் கொண்டாள் என்றா அல்லது அவள் பழைய விழுமியங்களில் ஊறி திளைத்து இன்னும் விடுதலை அடையவில்லை என்றா. குறியீடுகள் மூலமே எல்லாவற்றையும் புரிந்து கொண்டுவிட முடியுமா.பெரியாரிய,மார்க்சிய பெண்ணியம் என்ற பெயர்களில் எழுதப்படுபவைகளில் காணப்படும் தட்டையான புரிதல்களின் அடிப்படை பலவீனமே அவை ஒரு குறிப்பிட்ட சிந்தனைச் சட்டகத்தின் மூலமே புரிந்து கொள்ள முயல்வதுதான்.

(1)சில வாரங்கள் முன்பு தென் ஆப்ரிக்கவிலிருந்து ஒரு ஆய்வாளரும்,ரோமிலிருந்து ஒரு ஆய்வாளரும் கூட்டாக வந்து என்னை சந்தித்து உரையாடினர்.அதற்கு முன்பு அவர்களுடன் மின்னஞ்சல் தொடர்பு மூலம் கருத்து பரிமாற்றம் இருந்தது.கிட்டதட்ட 2 மணி நேரம் உரையாடினோம்.அவர்களும், வேறு சிலரும் சில கருத்துக்களை/முன்மாதிரிகளை முன்வைத்துள்ளனர். அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் பேசினோம்.உரையாடலுக்குப் பின் இரு தரப்பிலும் மகிழ்ச்சி.அவர்களுடன் நான் கூட்டாக சிலவற்றை செய்யக் கூடும். ஒரு மாநாட்டில் panel ஒன்றிற்காக திட்டம் உட்பட சிலவற்றை உடனே செய்வது என்று முடிவு செய்தோம். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒரு மாநாட்டிற்காக கட்டுரை எழுத வேண்டும், மே மாதம் நடைபெறவுள்ள இன்னொரு மாநாட்டிற்காக கட்டுரை எழுத வேண்டும்.ஏப்ரலில் நடக்கும் மாநாட்டில் நான் பங்கேற்ப போவதில்லை.மே மாதம் நடைபெறயுள்ளதில் பங்கேற்பது பயணத்திற்கான செலவினை, பிற
செலவுகளை மாநாட்டு அமைப்பாளர்கள் ஏற்பதைப் பொறுத்தது. இப்படி அடுத்தடுத்து எழுத வேண்டிய வேலைகள் உட்பட பல வேலைகள் இருப்பதால் சமீபத்திய சர்ச்சைகள் குறித்து எழுதுவதற்கு மற்றும் வேறு பலவறிற்கு நேரமே இல்லை.

Labels: , , ,