ஏழு ஆண்டுகளும் ஒரு மீள் நோக்கும்

ஏழு ஆண்டுகளும் ஒரு மீள் நோக்கும்

1990களில் இறுதியில் தமிழில் எழுதுவதிலிருந்து விலகி இருந்தேன்.கோவை ஞானி வெளியிட்டு வந்த நிகழ் நின்றது ஒரு காரணம். இன்னொரு காரணம் அப்போது
ஆங்கிலத்தில் ஏராளமாக படித்துக் கொண்டிருந்தேன், ஒரளவு எழுதினேன். அந்த காலகட்டத்தில் நிறப்பிரிகையில் பாலே பிரயர் குறித்த இரங்கல் குறிப்புதான் கடைசியாக நான் தமிழில் எழுதிய கட்டுரை என்று நினைக்கிறேன். இணைய தொடர்பு இருந்தாலும் தமிழ் இணையத்தில் கை/கால் வைக்கவில்லை, தலை நீட்டி வாயை திறந்து பேசவில்லை.
அப்போது தமிழில் எழுதும் மன நிலையில் இல்லை.

வாழ்க்கையிலும் 1999-2002 முக்கியமான காலகட்டம், எத்தனையோ மாற்றங்கள், இடமாற்றங்கள்,தடுமாற்றங்கள்,ஏமாற்றங்கள்,எதிர்பாராத திருப்பங்கள், நிலைமாற்றங்கள், புதிய வாய்ப்புகள்,பிரிவுகள்,புதிய உறவுகள் என்று. 2002ல் ராஜன் குறை மீண்டும் எழுதுங்கள்
என்று சொன்னார். திண்ணையில் எழுதலாமே என்றார்.கோ.ராஜாராமும் அதையே சொன்னார் என்று நினைக்கிறேன். வேறு சில நண்பர்களும் மீண்டும் தமிழில் எழுதுங்கள் என்றனர்.

இருப்பினும் 2003ல்தான் எழுதினேன்.முதலில் திண்ணையில், பின் பதிவுகள்,கீற்று தவிர வலைப்பதிவுகள், இணைய விவாத தளங்கள் என்று. அதிகம் எழுதிவிடவில்லை. நிறையவே எழுதியிருக்கலாம்,எழுதியிருக்க முடியும். அண்மையில் இந்த (கிட்டதட்ட) ஏழாண்டுகளில் எழுதியவை, விவாதித்தவை பற்றி யோசித்தேன்.பிரமாதமில்லை என்றாலும் மோசமில்லை என்று சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.

என் எழுத்தினைப் படித்து,விவாதித்து/கருத்துச் சொல்லி,படிக்காமல் கருத்துச் சொன்ன அதை ஒரளவு அறியப்பட வைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.நான் அனுப்பிய எதையும் திண்ணை நிராகரிக்கவில்லை.திண்ணைக்கு சில முறை நான் அனுப்பியது கிடைக்கவில்லை அல்லது எழுத்துரு பிரச்சினை இருந்ததால் வெளியிட இயலவில்லை. திண்ணை கோபால ராஜராம்,துக்காராம் இருவரும் நான் எழுதியவற்றை பிரசுரித்துள்ளனர்.அது போல் பதிவுகள்,கீற்று - இரண்டுமே நான் எழுதியதை மாற்றமின்றி பிரசுரித்துள்ளன. இவர்களுக்கு என் நன்றிகள்.உயிர்மையில் என் கட்டுரைகள் சில பிரசுரமாயின, அதற்காக மனுஷ்யபுத்திரனுக்கு என் நன்றிகள். தமிழ்மணத்திற்கு நான் நன்றி கூற வேண்டும்.
முதலில் காசி, பின் தமிழ்மண நிர்வாகிகள்/உரிமையாளர்கள் - இவர்களின் சேவை இல்லையென்றால் இவ்வலைப்பதிவும்,நானும் இந்த அளவு கூட அறியப்பட்டிருக்க
மாட்டோம்.பூங்கா இதழ் குறித்த விவாதமும்,வேறு எதுவாயினும் தமிழ்மணத்துடான
என் உறவில் எந்த சிக்கலும் எழுந்தததில்லை.தேன் கூடு திரட்டி இப்போது இல்லாவிட்டாலும் நான் நன்றி தெரிவிக்க கடைமைப்பட்டுள்ளே.திரட்டி திரட்டிக்கும் என் நன்றி.நன்றி கூறலில் சில விடுதல்கள் இருந்தாலும் அவை என் பிழை என்று கொள்க.

கிட்டதட்ட ஏழாண்டுகள் எழுதிய பின் தமிழில் எழுதுவதை நிறுத்திவிடுவதென்று முடிவு செய்துள்ளேன். நேரம் மட்டும் காரணமல்ல.தமிழில் எழுதுவதை விடவும்,தமிழ்ச் சூழலில் விவாதிப்பதை விடவும் நேரத்தையும்,உழைப்பையும் வேறு சிலவற்றிற்காக செலவிடுவது இன்னும் பொருத்தமானதாகவும்,பயனுள்ளதாகவும் இருக்கும் என்று கருதுவதால் இந்த முடிவினை எடுத்துள்ளே. சிலவற்றின் மீது கவனத்தையும், உழைப்பையும் குவிப்பது குறுகிய காலத்திலும்,நீண்ட காலத்திலும் எனக்கு நல்லது என்று கருதுகிறேன்.இது பின் வாங்கல்,பதுங்கல்,பாய்ச்சலுக்கு தயாராதல் அல்ல. தமிழில் எழுதுவதில் எனக்கு
சில பிரச்சினைகள் உள்ளன.அவற்றை தீர்த்துக் கொண்டு தமிழிலும் எழுத முடியும்.அதற்கான நேரம்,உழைப்பினை நான் தரத் தயாராக இல்லை. ஏனெனில் இதே நேரம்,உழைப்பினை வேறு சிலவற்றிற்கு தரவே நான் முன்னுரிமை தர முடியும்.இருக்கிற 24 மணி நேரத்தில் செய்ய வேண்டியவை பல இருக்கும் போது எப்படி எல்லாவற்றையும் செய்ய முடியும். இன்னும் சில காரணிகள்/காரணங்கள் உள்ளன.நிதானமாக யோசித்த பின் ஒரு இடை வெளி விடலாம்,விலகி நிற்கலாம்,தமிழில் எழுதுவதை,விவாதிப்பதை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தேன்.

தமிழில் விரிவான கட்டுரைகள்,விவாதங்களில் பங்கேற்ற்ப்பு,எதிர்வினைகள் போன்றவற்றை என்னிடமிருந்து எதிர்பார்க்க வேண்டாம்.தயாரிப்பில்/அரைகுரையாக உள்ள சில
கட்டுரைகள் மார்ச் இறுதிக்குள் வெளியாகலாம், வெளியாகாமல் என் கணினிகளில் மீளாத் துயிலில் அவை ஆழ்ந்திடலாம்.மீண்டும் தமிழில் எப்போது எழுதுவேன் என்று என்னால் இப்போது சொல்ல முடியாது,ஆனால் இன்னும் ஒராண்டிற்காவது தமிழில் எழுதாமல் இருக்கவே திட்டமிட்டுள்ளேன். திட்டமிட்டு எழுதி தள்ளும் ரைட்டர்கள் இருக்கும் போது எழுதாமல் இருக்க திட்டமிடும் என் போன்ற அரைட்டர்கள் தமிழிற்கு தேவைதானே :).

டிவிட்டரில் தலை காட்டுவேன்,பின்னூட்டங்கள் இட மாட்டேன்.

Labels: , , , , ,

2 மறுமொழிகள்:

Blogger Rajan Kurai Krishnan மொழிந்தது...

ஓராண்டு என்பது பெரிய காலமல்ல என்றாலும், நான் தமிழில் எழுதத் துவங்கியிருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் நிறுத்துவது பற்றி யோசிப்பது வருத்தமாக இருக்கிறது. தமிழில் படிக்கக்கிடைக்கும் சிந்தனைகளுக்கும், ஆங்கிலத்தில் படிக்கக் கிடைக்கும் சிந்தனைகளுக்கும் உள்ள இடைவெளி முன்னெப்போதையும் விட இப்போது மிக ஆபத்தானதாக இருப்பதாகப் படுகிறது. நீங்கள் கட்டுரைகள், எதிர்வினைகள் எழுதாவிட்டாலும் சிறிய நூல்களையாவது உங்களுக்கு முக்கியமாகப் படும் தலைப்புகளில் எழுதுங்கள். நிறைய பதிப்பகங்கள் செயல்படும் இந்த நேரத்தில் பிரசுரிப்பது கடினமானதல்ல. என்னைப்பொறுத்தவரை சக சிந்தனையாளர்களை நோக்கி எழுதுவதை விட உருவாகி வரும் வாசகர்களை நோக்கியே எழுத விரும்புகிறேன். அவர்களுக்காக நீங்களும் எழுத வேண்டும்.
- ராஜன் குறை

10:48 AM  
Blogger மதி.இண்டியா மொழிந்தது...

அய்யய்யா , எழுதமாட்டீங்களா ? அப்ப இனி ஜெயமோகன் கதி ?

இனி அவர் எதை பாத்து காப்பி அடிச்சு எழுதுவார் ?

என்னமோ போங்க ,

ஜெயமோகனுக்காகவாவது இனி நீங்கள் உங்கள் விரதத்தை கைவிட வேணுமென தமிழ்கூறும் நல்லுலகு கதறுகிரது

2:53 AM  

Post a Comment

<< முகப்பு