பி.டி. கத்தரிக்காய் குறித்த பீதியும், அறிவார்ந்த விவாதமும்

பி.டி. கத்தரிக்காய் குறித்த பீதியும், அறிவார்ந்த விவாதமும்

பி.டி(Bt) கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என்று தமிழில் பூவுலகின் நண்பர்கள் வலைப்பதிவு உட்பட சில வலைப்பதிவுகள்/இணையதளங்களில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளைப் படித்தேன். அடிப்படையான உண்மைகளை தெரிந்து கொள்ளாமல் பீதியை கிளப்பும் வகையில் எழுதுகிறார்கள், நம்மாழ்வார் உட்பட.இவர்களின் வாதங்களை உடைத்து அவை ஏன் அபத்தமானவை என்று காட்டுவது எளிது. ஒரு பொது விவாதத்தில் மக்களுக்கு புரியக் கூடியவகையில் பேசக்கூடிய, விபரமறிந்த அறிவியலாளர் ஒருவரால் இந்த வாதங்களை விமர்சித்து அவை ஏன் ஏற்க முடியாதவை என்று விளக்க முடியும். இதைப் பற்றி எழுதுவது அயர்ச்சி தருவதாக உள்ளது.ஏனெனில் முட்டாள்த்தனமான வாதங்களை எதிர்கொண்டு தகர்ப்பதில் ஒரு சவால் இல்லை.அதைச் செய்வது கடினமும் இல்லை,அதுவும் பூவுலகின் நண்பர்கள்,வினவு தளத்தில் எழுதப்பட்டுள்ள அபத்தமான கட்டுரைகளை.மக்களுக்கு விழ்ப்புணர்ச்சி உண்டாக்குகிறோம் என்பவர்களே உளறுகிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த இடுகை (1). ஒரே மாதிரியான பொய்களை/தவறான தகவல்களை நூறு பேர் எழுதினால் அவை உண்மையாகிவிடுமா என்ன?. மலட்டு விதை என்று இல்லாத ஒன்றை வைத்து பீதியை கிளப்புவது என்ன நியாயம். என்னுடைய வலைப்பதிவில் விரிவாக எழுத வேண்டாம், சில சுட்டிகளை ஏற்கனவே கொடுத்திருப்பதால் படிப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விடலாம் என்றிருந்தேன்.அதன் பின் தான் ஒரு குறும்படம் குறித்து அறிந்தேன். அதை இணையத்தில் பார்த்தேன்(2).பிரச்சாரம் என்ற பெயரில் வீண் பீதியை உருவாக்கும் முயற்சி அது.அதுவும் தவறான தகவல்கள், பொய்களின் அடிப்படையில்.அதைப் பார்த்த பின் இதைப் பற்றி ஒரளவேனும் விரிவாக எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன்.

திரையுலக பிரபலங்கள், எழுத்தாளர்கள்,இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள், ஒரு மருத்துவர், ஒரு பேராசிரியர் உட்பட பலர் அதில் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.அந்த அமைப்பு விவசாயத்தில் உயிரியல் தொழில்நுட்பம் கூடாது என்று கருதுகிறது.இதை ஒரு பிரச்சாரப் படமாக எடுத்திருக்கிறார்கள்.பிரச்சாரம் என்று வந்தபின் உண்மைக்கு, மாற்றுக் கருத்திற்கு தேவை இல்லை என்று முடிவு செய்துவிட்டார்கள் போலும்.இந்த தொழில்னுட்பத்தை ஆதரிக்கும் ஒரு அறிவியலாளரைக் கூட இவர்கள் சந்தித்து அவர்கள் தரப்பு வாதத்தினை சொல்ல ஒரு நிமிடம் கூட ஒதுக்கவில்லை.பி.டி பருத்தி குறித்து பொய் பிரச்சாரம்,சேரன்,தங்கர் பச்சானின் உளறல்கள், காந்தி,சுதந்திரம் என்று எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறது.இதில் திரைப்படத்துறையினருக்கு தரப்பட்டுள்ள நேரத்தில் ஒரு நிமிடம் கூட இந்தத் தொழில் நுட்பம் தேவை,ஆனால் அதை சரியாகக் கையாள வேண்டும் என்று கருத்து சொல்லக்கூடிய ஒருவருக்குத் தரப்பட்டிருந்தால் ஒரு மாற்றுக் கருத்து இருக்கிறது என்பது பார்வையாளர்களுக்கு தெரிந்துவிடும் என்பதால் கொடுமையான பிரச்சாரப் படமாக பயமுறுத்தும் வகையில் எடுத்திருக்கிறார்கள்.


இந்தக் குறும்படத்தில் ஒரு மருத்துவர்,ஒரு அறிவியலாளர் கூறும் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.ஆனால் அதை விட அதிக நேரம் திரைப்படத் துறையினர் கருத்து கூறுவதற்கு
ஒதுக்க்கப்பட்டுள்ளது.கோவை வேளாண் பலக்லை வேண்டாம், பெங்களூர் IISc ஐ சேர்ந்த பத்மனாபன் அல்லது தில்லி பலகலைதுணைவேந்தர் தீபக் பைந்தால் அல்லது இதில் ஆராய்ச்சி செய்து இதை ஆதரித்து அதே சமயம் கண்மூடித்தனமாக ஆதரிக்காத ஒரு அறிவியலாளரை ஏன் பேட்டி காணவில்லை.பாதுக்காப்பான உணவிற்கான கூட்டணியின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள படத்தில் பாதுகாப்பான உணவு, உணவில் கலப்படம்/நச்சுத்தன்மை குறித்து ஆராயும் அறிவியலாளர் ஒருவர் கூட ஏன் இடம் பெறவில்லை.அறிவியலாளர்கள், வேளாண் பொருளியல் நிபுணர்கள் விவசாயத்தில் உயிரியல் தொழில் நுட்பம் குறித்து பல கருத்துக்களை பல ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள். இந்தப் படத்தில் கருத்து உதிர்த்துள்ள பிரபலங்கள்,எழுத்தாளர்கள் பி.டி பருத்தி குறித்து சர்ச்சை இருக்கிறது, வேளாண் பொருளியல் நிபுணர்கள் கள ஆய்விற்குப் பின் அதனால் விளைச்சல் அதிகரித்துள்ளது, சில பிரச்சினைகள் இருந்தாலும் இத்தொழில் நுட்பம் விவசாயத்திற்கு
தேவை என்று எழுதியிருப்பதை அறிவார்களா.

இக்குறும்படத்தில் பி.டி. பருத்தி பயிரிடாத விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற உண்மை மறைக்கப்படுகிறது. பி.டி.பருத்தி பயிரப்படும் பரப்பளவு இந்தியாவில் அதிகரித்துள்ளது.பி.டி. பருத்தி தொழில்னுட்பம் பயன் தரவில்லை என்றால் விவசாயிகள் அதை கைவிட்டிருப்பார்கள், மேலும் அதிக விலை கொடுத்தேனும் அதற்கான விதைகளை திடர்ந்து வாங்க மாட்டார்கள்.ஆனால் இந்த குறும்படத்தில் ஒரு தரப்பின் சார்பாக அரை உண்மைகள், பொய்கள் தொடர்ந்து முன் வைக்கபடுகின்றன.அறிவியலாளர்கள் எழுதியிருக்கிறார்கள், அதைப் படித்து விட்டு அவர்களிடம் விவாதிக்க வேண்டும்.உலக சுகாதார அமைப்போ, ஐநாவின் உணவு,வேளாண்மை அமைப்போ விவசாயத்தில் இந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தக் கூடாது என்றோ , மரபணு மாற்றப்பட்ட பயிர்களிடமிருந்து பெறப்பட்ட காய்கறிகள் முற்றிலும் நச்சானவை அதை மனிதர் உண்ணக்க் கூடாது என்று சொல்லவில்லை.அமெரிக்காவின் National Academy of Sciences, மற்றும் Inter-Academy of Sciences வெளியிட்ட அறிக்கைகள் சில பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டியுள்ளன, தொழில் நுட்பமே கூடாது என்று தடையை பரிந்துரைக்கவில்லை.இந்த உண்மைகளை மறைத்து இந்தக் குறும்படத்தினை தயாரித்துள்ள அமைப்பு பொய்களை கலந்து,தவறான தகவல்களை தந்து, பீதியை உருவாக்குகிறது. ஞாநி, கேள்வி மேல் கேள்வி கேட்கட்டும், இது வேண்டும் என்போரிடமும்,வேண்டாம் என்போரிடமும். இந்தக் குறும்படத்தில் பொய்கள்,தவறான தகவல்கள் இருக்கிறதா என்பதிலிருந்து அவர்
கேள்வி கேட்பதை துவங்கலாமே.அரசு பொய் சொன்னாலும், தன்னார்வக் குழுக்கள்/அமைப்புகள்/நம்மாழ்வார் போன்றவர்கள் பொய் சொன்னாலும் பொய்,பொய்தான்.

1980களிலிருந்தே வேளாண்மையில் உயிரியல் தொழில் நுட்பம் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.அறிவியல் ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.இவற்றின் அடிப்படையில் ஏராளமான நூல்கள்,ஆய்வறிக்கைகள்,கட்டுரைகள்எழுதப்பட்டுள்ளன.ஐநாவின் அமைப்புகளும், அறிவியல் அமைப்புகளும் மான்சண்டோவின் முகவர்கள் அல்ல. அவை இந்தத் தொழில்நுட்பம் வேண்டாம் என்று நிராகரிக்கவில்லையே. இந்தியாவில் உயிரியல் தொழில் நுட்பம் சரியான முறையில் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும், உரிய முறையில் அது பயன்படுத்தப்பட வேண்டும் என்று பலர் எழுதியுள்ளார்கள்.

இயற்கை வேளாண்மையை கடைப்பிடியுங்கள்,இயற்கை உணவைஉடகொள்ளுங்கள்,ஆனால் விவசாயியாகிய நான் இந்த தொழில் நுட்பம் நல்லதா கெட்டதா, பயனுள்ளதா அல்லது பயனற்றதா என்பதை சோதித்து அறிய வேண்டுமென் நினைக்கிறேன், எனவே இந்த Bt கத்திரிக்காயை பயிரிட்டு சோதிக்க விரும்புகிறேன் என்று ஒரு விவசாயி சொன்னால் இவர்கள் என்ன பதில் சொல்வார்கள்.ஒரு தொழில்நுட்பத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று கோரும் இந்த அமைப்பு சொல்லும் காரணங்கள்முட்டாள்த்தனமானவை.ஐரோப்பாவில் பல நாடுகளில் GM உணவு பயன்பாட்டில் இல்லை,ஆனால் உயிரியல்,உடல் நலம் போன்றவற்றில் உயிரியல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது, அதற்கு மக்கள் ஆதரவும் இருக்கிறது.கருத்து உதிர்த்துள்ள வசந்த் என்பவருக்கு இது தெரியுமா. ஐரோப்பாவில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி நடைபெறுகிறதே, இயற்கையா ஸ்டெம்செல்லை உருவாக்கி உங்கள் கைகளில் தருகிறது. நானோ துகளால் உடல நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதற்காக முன்னெச்சரிக்கை கோட்பாடு என்ற பெயரில் நானோ தொழில்னுட்பம் குறித்த ஆய்வுகளை ஐரோப்பிய நாடுகள் தடை செய்யவில்லையே.சிந்தடிக் பயலாஜியை ஐரோப்பா தடை செய்யவில்லையே.இவற்றில் எல்லாம் மில்லியன்களில் ஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்கப்படுகிறதே. ஐரோப்பாவில் GM உணவுகளுக்கு எதிர்ப்பு இருக்கிறது, தடை இருக்கிறது என்பவர்கள் ஐரோப்பா ஒட்டுமொத்தமாக உயிரியல் தொழில் நுட்பத்தையோ அல்லது அதி நவீன தொழில் னுட்பத்தையோ நிராகரிக்கவில்லை என்பதை ஏன் சொல்வதில்லை.

இந்த அமைப்பினர் முன்னெச்சரிக்கை கோட்பாடு (precautionary principle)என்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.அதனடிப்படையில் சிலவற்றில் கவனம் தேவை, தொழில் நுட்பத்தை
கண்மூடித்தனமாக ஆதரிக்க கூடாது என்று வாதிடலாம்.முன்னெச்செரிக்கை கோட்பாடு குறித்து பல விளக்கங்கள் உள்ளன. நடைமுறையில் அது பலவகையில் பொருள கொள்ளப்பட்டு (உ-ம் weak version, strong version) அமுல் செய்யப்படுகிறது.அந்தக் கோட்பாட்டை முன்வைத்து தொழில் நுட்பத்தை முறைப்படுத்துவது குறித்து விவாதிக்கலாம் ஆனால் அதை முன்வைத்து விவசாயத்தில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தவே கூடாது என்று வாதிடுவதை நான் ஏற்கவில்லை. முன்னெச்சரிக்கைக் கோட்ப்பாட்டை பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகள் இதைக்காரணம் காட்டி நானோ தொழில் நுட்பத்தை அல்லது உயிரியல் தொழில் நுட்ப ஆய்வுகளை அல்லது சிந்தடிக் பயாலஜியை முற்றாக தடை செய்யவில்லை, வேண்டாம் என்று ஒதுக்கவில்லை.

உயிரியல் தொழில் நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து முதலில் விவாதித்தது அறிவியலாளர்கள்.அசிமோலோர் மாநாடு ஒரு துவக்கம்.அதன் பின் சில பத்தாண்டுகள் கடந்து விட்டன,உயிரியல் தொழில் நுட்பமும் பயன்பாட்டில் பல ஆண்டுகளாக இருக்கிறது.

ஒரு குறும்படத்தில் பொய்களை அள்ளி வீசி ஒரு தொழில் நுட்பத்தினை தடை செய்துவிட முடியாது. பி.டி. பருத்தி தோல்வி தோல்வி என்றார்கள்.ஆனால் விவசாயிகள் அந்தப் பொய்களை புறந்தள்ளி அதை பரிசோதித்து ஏற்றனர். சர்ச்சைகள் இருந்தாலும் அது பி.டி.பருத்தி பயிரிடப்படுவதை பெரிய அளவில் பாதிக்கவில்லை.தங்க அரிசி என்ற Golden Rice குறித்து சர்ச்சைகள் உள்ளன.அது நல்லது என்று சொல்லும் நிபுணர்கள் இருக்கிறார்கள். தங்க அரிசி தேவை என்பவர்கள் அதை ஒரு தொழில் நுட்பத் தீர்வாக கருதுகிறார்கள். அந்த அளவில் அதை ஒப்புக் கொண்டு அது சர்வரோக நிவாரணி அல்ல என்பதையும் சுட்டிக் காட்டலாம்.ஆனால் தங்க அரிசியே கூடாது என்றால் அவர்களிடம் என்ன வாதிட முடியும். உயிரியல் தொழில் னுட்பம் விவசாயத்தில் திணிக்கப்பட வேண்டும் என்ற கருத்து, அது விவசாயத்தில் கூடவே கூடாது என்ற இரண்டையும் நான் ஏற்கவில்லை. பாரம்பரிய வேளாண்மை, இயற்கை வேளாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு போன்றவை தேவை என்று கருதுகிறேன்.சில சிக்கல்கள்/பிரச்சினைக்ள் இருந்தாலும் விவசாயத்தில் உயிரியல் தொழில் நுட்பத்திற்கு தேவை இருக்கிறது என்று கருதுகிறேன். இது போன்ற கருத்துக் கொண்ட பலர் தங்கள் தரப்பு வாதங்களை எழுதியிருக்கிறார்கள்.உயிரியல் தொழில் நுட்பத்தை விவசாயத்தில் பயனபடுத்துவது என்பது மனித குலத்தை சோதனைக்கு உட்படுத்துவது அல்ல.

வழக்கமான அல்லது உயிரியல் தொழில் நுட்பம் பயன்படுத்தபடாமல், பயிரின உருவாக்க முறைகளில் உருவாக்கப்படும் பயிரின வகைகள் எத்தனை சோதனைகளுக்கு பின்
அனுமதிக்கப்படுகின்றன, அவற்றில் விளையும் தானியங்கள் போனறவை எத்தனை சோதனைகளுக்குப் பின் மனிதர் உட்கொள்ள உகந்தவை என்று அங்கீகரிக்கப்படுகின்றன என்பதை நம்மாழ்வார் விளக்குவாரா.இயற்கையில் உள்ளது எல்லாம் நல்லது, செயற்கையாக உருவாக்க்கப்படுபவை எல்லாம் கெடுதல்/நஞ்சு என்று வகைப்படுத்த முடியாது.சிலருக்கு கத்தரிக்காய் ஒவ்வாது.ஆகவே உலகமே கத்தரிக்காயை பயிரிடக்கூடாது என்று அவர்கள் வாதிட்டால் எப்படி இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் குழுந்தைகளுக்கு தடுப்பூசி போட்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்ற பொய் பிரச்சாரம் செய்யப்பட்டதால் உத்தர பிரதேசத்தில் பல பெற்றோர்கள் பயந்து தடுப்பூசி போடப்படுவதை தவிர்த்துவிட்டனர். பாதிக்கப்பட்டது குழந்தைகள்.சேரன் இந்த குறும்படத்தில் அது போன்ற ஒரு பொய்யை சொல்கிறார்.அதற்கு ஆதாரம் என்ன என்பதை அவரோ அல்லது இக்குறும்படத்தை இயக்கியவரோ தருவார்களா?. அறிவியல் ஆய்வில்/ஆய்வுகளில் மரபணு மாற்றப்பட உணவு வகைகள் மலட்டுத்தன்மையை மனிதருக்கு ஏற்படுத்தும் என்று ஐயம் திரிபர நிரூபிக்கப்பட்டுள்ளதா? அப்படி ஆதாரம் தராவிட்டால் சொன்னது பொய் என்று சேரனும், உண்மையை உறுதிப்படுத்திக்
கொள்ளாமல் அதை படம் மூலம் பிரச்சாரம் செய்தது தவறு என்று படத்தை இயக்கிய தீபாவும் ஒப்புக் கொள்வார்களா.

நம்மாழ்வார் கூறியுள்ளதாக வெளியானது

“பி.டி., கத்தரி சாகுபடி செய்தால், அதன் விதையை எடுத்து மீண்டும் உபயோகப்படுத்த முடியாது. பதிலாக, அதனை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இருந்து தான், ஒவ்வொரு முறையும் விதைகள் வாங்கியாக வேண்டும். பி.டி.,கத்தரி சாகுபடி செய்யும் போது, அந்த பூக்களில் அமரும் பூச்சிகள்தான், பிற கத்தரி இன பூக்களுக்கும் சென்று மகரந்த சேர்க்கையில் ஈடுபடும்.அவ்வாறு மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சிகள், பிற கத்தரி இன பூக்களில் அமரும் போது, அந்த பூக்களும் மலடாகி காலப்போக்கில் கத்தரி இனமே முற்றிலும் அழிந்து விடும். மீண்டும் சாகுபடி செய்வதற்காக எடுத்து வைக்கும் விதையும் முளைக்காது”
http://poovulagu.blogspot.com/2010/01/200.html

அதிக விளைச்சல் தரும் ஒட்டு வீரிய (hybrids) பயிரிகளில் அடுத்த தலைமுறையில் விதைகளை மீண்டும் பயன்படுத்தலாம், விளைச்சல் முந்தையதை விட குறைவாக இருக்கும்.
விதையை பயன்படுத்தவே முடியாது அது முளைக்காது என்பது பொய்.இந்தப் பொய் யை எந்தவித கூச்சமுமின்றி பரப்புகிறார்கள்.இல்லாத மலட்டு விதையை வைத்து பீதி உருவாக்குகிறார்கள்.

தமிழில் மலட்டு விதை குறித்து எழுதப்பட்டுள்ள பொய்கள்,கட்டுக்கதைகள் குறித்து தனிக் கட்டுரைதான் எழுத வேண்டும்.எழுதுவேன், எழுதி தமிழில் இயற்கை வேளாண்மையை ஆதரித்து எழுதுபவர்கள் எப்படி முழுப் பொய்களை கூசாமல் சொல்லியுள்ளார்கள் என்று காட்டுவேன்.அதுவும் மலட்டுத்தன்மை, மலடு போன்ற சொற்களை வைத்து இவர்கள் பூச்சாண்டி காட்டுகிறார்கள் என்பதையும் விளக்குவேன்.ஏனெனில் இத்தகைய பொய்கள் இறுதியில் இயற்கை வேளாண்மையின் நம்பத்தன்மையை பாதிக்கும், உண்மை பேசும் இயற்கை வேளாண் ஆர்வலர்களையும் பிறர் சந்தேகப்பட வைக்கும்.

“பி.டி.,கத்தரி சாகுபடி செய்யும் போது, அந்த பூக்களில் அமரும் பூச்சிகள்தான், பிற கத்தரி இன பூக்களுக்கும் சென்று மகரந்த சேர்க்கையில் ஈடுபடும்.அவ்வாறு மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சிகள், பிற கத்தரி இன பூக்களில் அமரும் போது, அந்த பூக்களும் மலடாகி காலப்போக்கில் கத்தரி இனமே முற்றிலும் அழிந்து விடும். மீண்டும் சாகுபடி செய்வதற்காக எடுத்து வைக்கும் விதையும் முளைக்காது”

இதற்கான ஆதாரம் என்ன.எந்த சோதனைகளின் அடிப்படையில் அல்லது கோட்பாட்டு முன்மாதிரிகளின் (Theoretical Models) அடிப்படையில் இதைக் கூறுகிறார்.இது கருதுகோள்
(hypothesis) என்றால் அதன் அடிப்படை என்ன, அதற்கு முன் உதாரணங்கள் உள்ளனவா. அறிவியலாளர்கள் இந்த கருதுகோளை முன் வைத்துள்ளார்களா. பூ மலடாகும் என்று
சொல்கிறார். ஆனால் பி.டி. அல்லாத கத்தரியும் சாகுபடியில் இருக்குமே, அதில் உள்ள அமரும் பூச்சிகளும் பிற கத்தரி இனப் பூக்களுக்கும் மகரந்த சேர்க்கையில் ஈடுபடுமே.அது தவிர பிற கத்தரி இனப்பூக்களில் அமரும் பூச்சிகளும் பிற கத்தரி இனப்பூக்களில் அமருமே. பி.டி. கத்தரியில் உருவாகும் மகரந்தம் அல்லது பூ அல்லது வேறு ஏதோ ஒன்று பிற பயிர்களில் உள்ள பூக்களை மலடாக்கும் என்பதற்கு என்ன ஆதாரம்.அறிவியல் ரீதியாக இதை விளக்குவாரா. பி.டி. கத்தரிக்காய் பயிரிடப்பட அனுமதி இன்னும் தரப்படவில்லை, அது இன்னும் பரவலாக பயிரிடப்படவில்லை. அப்படியிருக்க இதற்கெல்லாம் என்ன ஆதாரம். பி.டி. கத்தரிக்காய் களப்பரிசோதனைகள் இவ்வாறு காட்டியுள்ளனவா. நம்மாழ்வார் ஒன்று சரியான விளக்கம் தர வேண்டும், இல்லையேல் தான் சொன்னது கப்ஸா என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.அப்படி நடக்க சாத்தியக்கூறு உள்ளது, அதற்கான அடிப்படை இந்த கருது கோள் என்று கூட சொல்லாமல் கண்டறிந்த உண்மை போல் சிலவற்றை சொல்வது எந்த வகையில் நியாயம். பி.டி. பருத்தியில் இப்படித்தான் நடந்தது, பி.டி. பருத்தி காரணமாக பி.டி அல்லாத பருத்தி வகைகள் பாதிக்கப்பட்டன அல்லது அவை மலட்டுத்தன்மை பெற்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளதா அல்லது வேறு எந்த பி.டி.பயிரால் இப்படி நடந்தது என்பது நிரூபணம் ஆகியுள்ளதா.

இன்னொரு உதாரணம்

“’ஏனெனில் இந்த விதைகளை மறுபடி விதைக்க முடியாத அளவிற்கு மலட்டு தன்மையுள்ளதாக முடிவிப்பு (Terminator) மரபீனிகளைக் கொண்டு ஆக்கியுள்ளனர். மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விதைக்கும்போது அதிலிருந்து வரும் மகரந்தத்தூள் சாதாரண கத்தரிச் செடியில் இணையும்போது அதுவும் மலடாகும் வாய்ப்புகள் உள்ளன. ’
http://muruganthiru.blogspot.com/2010/01/blog-post_29.html

Terminator விதை என்று எதுவும் இல்லை.அப்படி ஒன்று இருப்பதாகக் கொண்டாலும், மேலே உள்ள இரண்டு வாக்கியங்களில் உள்ள முரண்பாடுகளை கவனியுங்கள். விதைக்க முடியாத மலட்டுத்தன்மை கொண்ட விதை எப்படி மறுபடி முளைக்கும். அதிலிருந்து எப்படி மகரந்த தூள் வரும்.Terminator,verminator,மலட்டு விதை,மலடு என்று கதை விடுவார்கள்.
அறிவியல் விழிப்புணர்வு என்ற வலைப்பதிவில் இந்தக் கட்டுரை இருக்கிறது. மோசடிக்கு, அறிவியல் விழிப்புணர்வு என்ற முத்திரை வேறு.

தங்க அரிசி (Gloden Rice) போதுமான அளவில் வைட்டமின் A கிடைக்காததால் பாதிக்கப்படும் ஏழை குடும்பங்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவான திட்டம். சிலருக்கு 50 அல்லது 60 ரூபாய் கொடுத்து ஒரு கிலோ ஆர்கானிக் அரிசி வாங்குவது பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம். மரபணு மாற்றப்பட்ட அரிசியை அது யாருக்குத் தேவையோ அவர்கள் பயன்படுத்திக்கொள்ளட்டும் என்று நிலைப்பாடு எடுப்பதற்கும், அதற்கான ஆய்வே கூடாது,அது கூடவே கூடாது என்று நிலைப்பாடு எடுப்பதற்கும் வேறுபாடு இல்லையா.தங்க அரிசி கிடைத்தால் ஏழைகளின் உடல் நலப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்று நான் சொல்லவரவில்லை. அது ஒரளவு உதவும்.அந்த ஒரளவு உதவும் தொழில் நுட்பம் கூடாது, அதை ஆய்வாகக் கூட களபரிசோதனைச் செய்யக்கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்க முடியும். தங்க அரிசி மட்டும்தான் தீர்வு என்று சொல்வதை விட தங்க அரிசியும் ஒரு தீர்வாக இருக்கலாம் என்று சொல்ல
முடியும்.ஒன்றை ஏற்பது இன்னொன்றை நிராகரிப்பது என்று இருக்க வேண்டியதில்லை.

குழந்தைகளுக்கு போதுமான வைட்டமின் A கிடைக்க தங்க அரிசி உதவும்,அதனால் பார்வை இழப்பு/பாதிப்பு ஏற்படுவது குறையும் என்று சொல்லப்படும் போது அப்படியானால் அந்த அரிசி
பாதுகாப்பானதா, வேறு பக்க விளைவுகள் ஏற்படாதா,அதைப் பயிரிடுவதால் சூழல் பாதிப்பு ஏற்படாதா, அது ஏழைகள் வாங்கக்கூடிய விலையில் இருக்குமா என்று கேள்வி கேட்கலாம்.ஆனால் வேளாண்மையில் உயிரியல் தொழில்னுட்பமே வேண்டாம் என்று ஒரு இயக்கம் வாதிட்டால் என்றால் சில முன்முடிபுகளின் அடிப்படையில் அதை அணுகுகிறீர்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.தங்க அரிசி தேவையில்லை ஏனெனில் அதை விட சிறந்த,வைட்டமின் A கொண்ட பாரம்பரிய அரிசி இது இருக்கிறது என்று ஒரு மாற்றை சுட்டிக் காட்டினால் மேற்கொண்டு விவாதிக்க முடியும். இந்தக் குறும்படம் Bt கத்தரிக்காய் குறித்தது என்றாலும் அதன் ஒட்டு மொத்த தொனி வேளாண்மையில் மரபணு மாற்றம்/உயிரியல் தொழில் நுட்பம் வேண்டாம், பி.டி. பருத்தியால் தீய விளைவுகள் ஏற்பட்டது என்ற கருத்தே ஒலிக்கிறதே ஒழிய Bt கத்தரிக்காய் வேண்டும் என்பவர்களும் கூட சில கேள்விகளை எழுப்பியுள்ளார்கள் அவையும் பரீசிலிக்கப்பட வேண்டும் என்ற கருத்திற்கு இதில் இடமே இல்லை.

தங்க அரிசி உருவாக்கம்,சோதனைக்கு தேவையான தொழில் நுட்பக் கூறுகள் பலவற்றின் மீது உரிமங்கள் (patents) பெறப்பட்டிருந்தது சில சிக்கல்களை உருவாக்கியது.அவை கிட்டதட்ட
தீர்க்கப்பட்டு விட்டதால் அந்த முயற்சி அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து விட்டது. உரிமங்கள், விதைகள் மீதான அதிக விலை, ஏகபோகம் உருவாகும் ஆபத்து போன்றவை பிரச்சினைகளை உருவாக்கும் என்பதற்காக ஒரு தொழில் நுட்ப பொருள்/பயிரின வகையே தவிர்க்கப்பட வேண்டும் என்று வாதிடுவது அபத்தம்.மருந்தின் விலை அதிகம், மருந்து உருவாக்கம், அதற்கான முக்கிய மூலக்கூறு மீது உரிமங்கள் உள்ளன ஆகவே மருந்தே கூடாது அல்லது வேண்டாம் என்று சொல்ல முடியுமா. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்றுதான் யோசிக்க வேண்டும்.மருந்து வேண்டாம், மூலக்கூறு மாற்றப்பட்ட பயிரின வகை/காய்வகை வேண்டாம் என்று வாதிடுவது எப்படி சரியாக இருக்க வேண்டும்.இயற்கை வேளாண்மை மாற்று என்றால் அதை தாராளமாக பரப்புங்கள், மரபணு மாற்றப்பட்ட பயிரினவகைகளால் பலன் இல்லை, இயற்கை வேளாண்மைதான் சிறந்தது என்று விவசாயிகள் முடிவு செய்தால் அவர்கள் இயற்கை வேளாண்மைக்கு
மாறுவார்கள்.ஆனால் அப்படி சோதித்து அறிய வாய்ப்பே தரக்கூடாது, மரபணுமாற்றப்பட்ட பயிரினவகைகளே கூடாது என்று கூறுவது சரியான நிலைப்பாடு அல்ல.

இயற்கை வேளாண்மைக்கு அரசு இன்னும் ஆதரவு தர வேண்டும், அதை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினால் அதை நான் ஏற்பேன். ஆனால் அரசும், வேளாண் பல்கலைகழகங்களும் சில தொழில் நுட்பங்களை ஆதரிக்கவே கூடாது, அவற்றில் ஆய்வே கூடாது என்பது முட்டாள்த்தனம். ஒரு நாட்டில் விவசாயத்தில் பல தொழில் நுட்பங்களுக்கு தேவை இருக்கலாம், எது பொருத்தமானது எது தக்கது/உகந்தது என்பதை ஆராயமல் முடிவு செய்ய முடியாது,பாரம்பரிய அரிசி வகைகளும் பயன்பாட்டில் இருக்கட்டும்,தங்க அரசி போன்றவையும் பயிரிடப்பட்டு பயன்பாட்டிற்கு வரட்டும் என்றெல்லாம் நிலைப்பாடு எடுக்க
முடியுமே.

அடிப்படையில் இந்த விவாதம் தொழில் நுட்பச் சாத்தியக்கூறுகள், தெரிவுகள், தொழில் நுட்பத்தால் ஏற்படும் சாதக/பாதங்கள் குறித்த ஒன்றாக இருக்க வேண்டும்.சமூகம் ஒரு தொழில் நுட்பத்தினை கட்டாயம் ஏற்றே ஆக வேண்டும் ஏனெனில் அதுதான் அறிவியல் முன்னேற்றத்தினை அங்கீகரிக்கும் ஒரே முறை என்று நான் வாதிட மாட்டேன்.ஒரு சமூகம் சில தொழில் நுட்பங்களை ஏற்க மறுக்கலாம், வேறு சிலவற்றை ஏற்கலாம்.ஐரோப்பா ஒன்றை நிராகரித்தால் நாமும் அதை நிராகரிக்க வேண்டும் என்று வாதிட முடியாது.சீனா விவசாயத்தில் உயிரியல் தொழில் நுட்பத்தினை பெருமளவில் பயன்படுத்துகிறது, கனடா பயன்படுத்துகிறது, அர்ஜெண்டினா பயன்படுத்துகிறது. ஆசியாவில் வேளாண் உயிரியல் தொழில் நுட்பம் சில நாடுகளில் துவக்க கட்டத்தில் உள்ளது. பல நாடுகளின் இதைப் பயன்படுத்துவதற்கான, ஆராய்ச்சி செய்து புதிய பயிரின வகைகளை உருவாக்க, தொழில் நுட்பத்தை ஒழுங்குபடுத்த போதுமான கட்டமைப்பு இல்லை.பயன்படுத்தாத நாடுகள்
வேண்டாம் என்று நிராகரித்துவிட்டன என்று கொள்ள முடியாது.பாகிஸ்தான் Bt பருத்தியை அனுமதிக்கப் போவதாக கூறியுள்ளது. நேபாளம்,ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் உயிரியல் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

வேளாண்மையில் உயிரியல் தொழில் நுட்பம் தேவை என்று வாதிடுபவர்கள் பல நிலைப்பாடுகளை எடுக்க முடியும்.உதாரணமாக

1) இத்தொழில் நுட்பம் தனியார் வசம் சிக்கி லாபத்திற்கான ஒன்றாக மாற்றப்படாமல் பொதுத்துறையும்,வேளாண் பல்கலைகழகங்களும் பெருமளவில் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். வீரிய/ஒட்டு விதைகள் நியாயமான விலைக்கு தரம் கொண்டவைகளாக கிடைக்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.அதற்காக மான்யம் தரலாம்.விதை விற்பனை,உற்பத்தியில்
பொதுத்துறைக்கு முக்கிய பங்கு இருக்க வேண்டும்.இதற்கெல்லாம் தேவையான நிதி உட்பட பிறவற்றை அரசு அளிக்க வேண்டும்.பிரச்சினை தொழில் நுட்பமல்ல, அது யார் கையில் இருக்கிறது, பொது நன்மைக்கு உதவும்படி அது பயன்படுத்தப்படுகிறதா என்பதை நாம் விவாதிக்க வேண்டும்

2)சிறிய, குறு நில விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இத்தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும்.அதற்காக ஆராய்ச்சி செய்யப்பட்டு தொழில் நுட்பத்தின் பலனை அவர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.தரமான விதைகள் கிடைப்பது, பயிற்சி மற்றும் விரிவாக்கம்/செய்முறை போன்றவற்றிற்கு அரசு முக்கியத்துவம் தர வேண்டும்.

3)பாஸ்மதி போன்றவற்றில் இதை பயன்படுத்தக் கூடாது.தங்க அரிசி போன்றவை தேவை, பரிசோதனைகள் முறையாக செய்யப்பட்டு தொழில் நுட்பம் சரியான வகையில் நெறிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு நுகர்வோர்,விவசாயிகள்,வேளாண் விஞ்ஞானிகள் உட்பட பல தரப்பினரின் கருத்துக்களை அறிந்து அவர்களின் தேவைகள், அச்சங்கள், எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு அரசு கொள்கை வகுக்க வேண்டும்.

4) தேவை ஆனால் கவனமாக கையாள வேண்டும்.பசுமைப் புரட்சியின் பாடங்களை புரிந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதிக்கபடாத வகையில், உயிரிய பன்வகைத்தன்மைக்கு ஊறு ஏற்படாமல் இதை பயன்படுத்த வேண்டும்.நீண்ட கால விளைவுகளைக் குறித்து ஆராய வேண்டும்.இதன் சாதக-பாதகங்களை ஆய்ந்து பொருத்தமான வகையில் பயன்படுத்த வேண்டும்.

இன்னும் குறிப்பாக சொன்னால் விவசாயத்தில் வேளாண் தொழில் நுட்பம் தேவை என்று சொல்லும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவரசப்பட்டு பி.டி.கத்தரிக்காயை பயிரிட அனுமதி தர வேண்டாம், ஒழுங்கமைப்பு ஆணையம் தேவை என்று சொல்கிறார். ஆக விவ்சாயத்தில் உயிரியல் தொழில் நுட்பம் வேண்டாம் என்று புறந்தள்ளுபவர்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என்பவர்கள் எல்லோரும் கேள்வி கேட்க்காமல்,கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கவில்லை. இந்தக் குறும்படத்தில் கருத்து உதித்தவர்களில் எத்தனை பேர் இதை அறிவார்கள். இப்படியும் மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன என உண்மையாவது இதில் பதிவாகியுள்ளதா.

Bt கத்தரிக்காய் வேண்டும் என்பவர்கள் முழுக்க முழுக்க ஆதரவாக ஒரு பிரச்சாரப் படத்தை எடுக்க முடியும்.அதில் அவர்கள் பி.டி கத்தரிக்காய் மிகவும் தேவை, மிகவும் பாதுக்காப்பானது என்று பிரச்சாரம் செய்வார்கள்.பாருங்கள் நானே இதை சாப்பிடுகிறேன், அது நஞ்சு என்றால் நான் சாப்பிடுவேனா என்று சில அறிவியலாளர்கள் செய்முறை விளக்கம் காட்டலாம். அதையும் பார்த்து, பி.டி கத்தரிக்காய் நஞ்சு,கூடவே கூடாது என்று கூறும் படத்தையும் பார்த்து ஒருவர் என்ன முடிவிற்கு வரமுடியும்.தேவை அறிவார்ந்த விவாதம்.அந்த விவாதம் நடக்க வேண்டும் என்றால் கருத்து கந்தசாமிகளும், கருத்து காத்ரீனாக்களும் முதலில் இரு தரப்பு வாதங்க்ளையும் அறிய வேண்டும், படிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும். இந்தக் குறும்படத்தில் கருத்து உதிர்த்தவர்களில் எத்தனை பேர் அதைச் செய்திருக்கிறார்கள். எத்தனை பேர் பி.டி பருத்தி குறித்த சர்ச்சையை தொடர்ந்து கவனித்து வந்துள்ளார்கள்.உயிரியல் தொழில் நுட்பமே வேண்டாம்,ஆபத்தானது,அதனால்
உருவாக்கப்படும் பொருட்கள் ஆபத்தானவை என்றால் செயற்கை இன்சுலினே வேண்டாம் என்றுதான் பொருள் என்று இந்தக் குறும்படத்தில் பேசியுள்ளவர்களில் எத்தனை பேருக்குத்
தெரியும்.இவர்களில் எத்தனை பேர் ஸ்டெம் செல் தொழில் நுட்பம் வேண்டாம் என்று சொல்லக்கூடியவர்கள். பாம்பின் விஷமும்,அரளி விதையும் இயற்கையானவைதான், தடுப்பூசி செயற்கையானதுதான்.இயற்கையில் இல்லாத எத்தனையோ கூட்டுபொருட்களை (compounds) வேதியியல் உருவாக்கியுள்ளது.இயற்கையில் 100% தூய நிலையில் இல்லாத பலவற்றை அறிவியல் 100% தூய்மை கொண்டவைகளாக மாற்றுகிறது.இதெல்லாம் செயற்கை, எங்களுக்கு இயற்கை தருவதே போதும் என்று இவற்றை நிராகரிக்க முடியுமா.
உயிரின பன்வகைத்தன்மை, குறிப்பாக பயிரின பன்வகைத்தன்மையில் மானுடர் பங்களிப்பு உண்டு.இயற்கை ஆயிரக்கணக்கான அரிசி வகைகளை தொடர்ந்து உற்பத்தி செய்து மனிதருக்கு தரவில்லை.விவசாயிகள்,விவசாய சமூகங்கள் இயற்கையில் உள்ள வகைகளிலிருந்து பயனுடைய ஆயிரக்கணக்கான வகைகளை உருவாக்கினர்.இது நீண்ட காலப் போக்கில் நடந்தது. இதுவரை உருவாக்கப்பட்ட/நடப்பில் உள்ள அரிசி வகைகள் போதும் என்ற எந்த சமூகமும் ஒரு கட்டத்தில் புதிய முயற்சிகளை வேண்டாம் என்று தடை செய்ததாகத் தெரியவில்லை.அறிவியல் தொழில் நுட்பம் உயிரியல் தொழில் நுட்பம் மூலம் புதிய குணாம்சங்களைக் கொண்ட பயிரிகளை/உயிரிகளை உருவாக்குகிறது.இதை புரிந்து கொண்டு இதனால் நன்மை என்ன,பிரச்சினை என்ன என்று ஆராய வேண்டும்.Bt ஐ இயற்கை வேளாண்மையில் பயன்படுத்துகிறார்கள்.அதில்எந்த நோக்கத்திற்க்காக பயன்படுத்துகிறார்களோ அதே நோக்கத்திற்காகவே பி.டி பருத்தி,கத்தரியில் பயன்படுத்துகிறார்கள்.இயற்கை வேளாண்மையில் பி.டி உள்ள கரைசலைத் தெளிப்பார்கள்.பி.டி பயிர்களில் அதற்கான தேவை இல்லை. வழக்கமான (conventional) பயிரின உருவாகத்தை விட மரபணு மாற்ற/உயிரியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயிரின வகைகளை/பயிர்களை உருவாக்குவது சிலவற்றை சாத்தியப்படுத்துகிறது.இன்றைய அறிவியல், குறிப்பாக உயிரியல்
மரபணு அறிவியலையும், மரபணு மாற்றத் தொழிற் நுட்பங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளது.அதனால் இன்று human genome mapping, genomics,proteomics என்பவை
சாத்தியமாகியுள்ளன.இந்தக் குறும்படத்தை தயாரித்துள்ள Safe Food Alliance மரபணு மாற்றப்பட்ட பயிரின வகைகளை முற்றிலுமாக எதிர்க்கிறது.விவசாயத்தில் மரபணு மாற்ற/உயிரியல் தொழில் நுட்பமே தேவையில்லை என்று கருதுகிறது.அவர்களின் கருத்து இது:

GM crops are a product of an imprecise technology which changes the genetic structure of the plant irreversibly by adding or deleting a gene or a string of genes,usually from a completely unrelated organism. The technology is imprecise and induces instability at the genomic level, resulting in many changes at the cellular, organ, organism and eco-system levels.

A GMO’s foreign genes may transfer into related wild species or the GMO may behave unpredictably, become out of control and damage ecosystems. It is for this reason that the regulation of genetic engineering has to have a precautionary approach,
since each genetically engineered organism is a biohazard and has the capacity to multiply uncontrollably and irreversibly.”

இந்தக் கருத்தும், இவர்களின் நிலைப்பாடும் சர்ச்சைக்குரியவை.எத்தனை அறிவியலாளர்கள் இதை அப்படியே ஏற்பார்கள். மேலும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் எழக்கூடிய பிரச்சினைகள்/ஆபத்துகள் குறித்து எழுதப்பட்டுள்ள நூல்கள் பலவற்றிலும், Risk மதிப்பீடு குறித்த பல நூல்களிலும் risk வேறு, hazard என்பது வேறு, ஒன்றொடு ஒன்றை குழப்பிக் கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.இதையெல்லாம் புரிந்து கொண்டு தமிழில் எத்தனை பேர் எழுதியிருக்கிறார்கள், கருத்துச் சொன்னவர்களில் எத்தனை பேர் இதைப் பற்றியெல்லாம் அறிந்து கருத்து சொல்லியிருக்கிறார்கள்.

இந்தக் குறும்படம் ஒரு அறிவார்ந்த விவாதத்திற்கு உதவாது.அதற்கு தடையாக இருக்கும். நான் வலியுறுத்துவது அறிவார்ந்த விவாதத்தை, ஆதாரமற்ற பயத்தையும்,பீதியையும்
உருவாக்குவதையோ அல்லது கண்மூடித்தனமான ஆதரவு பிரச்சாரத்தையோ அல்ல. மேலும் இயற்கை வேளாண்மையை ஆதரிப்பவர்கள் தங்கள் தரப்பிற்கு ஆதரவாக பொய்களை
சொல்கிறார்கள், பீதியை உருவாக்குகிறார்கள் என்று யாரவது சுட்டிக்காட்ட விரும்பினால் இக்குறும்படமும்,நான் சுட்டியுள்ள கட்டுரை/வலைப்பதிவு இடுகைகளும் அதற்கு உதவும்.

எதிர் தரப்பு வாதம் என்று பார்த்தால் இவை வலுவான வாதங்களாக இல்லை. உண்மையை அறிய முயலுங்கள், பிரபலங்கள் அல்லது பிரபல எழுத்தாளர்கள் சொன்னார்கள் என்பதற்காக நம்பி விடாதீர்கள் என்று வாசகர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

(1)http://muruganthiru.blogspot.com/2010/01/blog-post_29.html
இந்தக் கட்டுரை முதலில் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் என்ற சஞ்சிகையின் ஜனவரி 2010 இதழில் வெளியானது
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2537:2010-01-27-12-35-29&catid=975:10&Itemid=229

(2)http://ooviya.blogspot.com இதன் வழியாக குறும்படத்தைப் பார்க்க முடியும். இத்திரைப்படம் Safe Food Alliance சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின்
வலைப்பதிவு
http://safefoodalliance.blogspot.com
இதில் அவர்களின் நிலைப்பாடுகள் குறித்த ஆவணங்கள் உள்ளன.அதையும் படித்துப் பார்க்க வேண்டுமாய் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

Labels: , , , ,

5 மறுமொழிகள்:

Blogger Rasu மொழிந்தது...

ரவி நீங்கள் யார் என்ற கேள்வி எழுகிறது? அறிவியல், அறிவியல் என்று காது கிழிய கத்து வது தவறு. எது அறிவியல் என்பதயும், எது வளர்ச்சி என்பதையும் யாருக்கான வளர்ச்சி என்பதையும் நாம் அறிய வேண்டும். மொபைல் போனில் 12 மெகாபிசேல் கேமரா வருவதா வளர்ச்சி? அதே நேரத்தில் நம்முடய சகோதரர்களும் சகோதிரிகளும் சக மனிதனின் மலத்தை தலையில் சும்மக்கிரார்கள் அதற்க்கு எதாவது கருவி உங்கள் அறிவியல் கண்டுபிடிக்க கூடாதா?

1940 பால் ஹெர்மன் முல்லேர் என்பவர் ddt என்ற மருந்தை கண்டு பிடித்தார். 1948 இல் அதற்க்கு நோப்லே பரிசு கொடுக்க பட்டது. ஆனால் அதே ஸ்வீடன் நாடு 1960 இல் இந்த மருந்தை சூழலுக்கு எதிரானது என்று கூறி தடை செய்தது. இது தான் மனிதனின் அறிவியல் அறிவின் அளவுகோல். ஆதலால் இயற்க்கை நமக்கு கொடுகின்ற வற்றை கொண்டு நாம் சூழலுக்கு இசைவாக வாழ்வோம்.

2:08 AM  
Blogger shivu மொழிந்தது...

let us not go to other comparisons; just explain with proper reasoning why Bt is banned in Europe, and how e are justified u\in accepting Bt Brinja.

Again, we are not against science but simply explain about why Bt should be allowed in India when that is banned in Europe? Nothing more nothing less.

10:56 AM  
Blogger ராஜ நடராஜன் மொழிந்தது...

//உண்மையை அறிய முயலுங்கள், பிரபலங்கள் அல்லது பிரபல எழுத்தாளர்கள் சொன்னார்கள் என்பதற்காக நம்பி விடாதீர்கள் என்று வாசகர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.//

சிந்திக்க வேண்டிய வரிகள்.

11:28 AM  
Blogger Kodur sathya மொழிந்தது...

Mr. Ravi,

Can we reduce everything to science and technology??????.Not anything more?

Well this question itself to you could answer your blog post!!!!

11:20 PM  
Anonymous santhanam மொழிந்தது...

உங்கள் இடுகையை நீங்களே மறுபடியும் படித்துப் பாருங்கள். எவ்வளவு முரண்கள்?
சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன.
1. இப்பயிர்கள் விலங்குகளுக்கு கொடுத்து கொடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டவையா? ஆமெனில் அந்த முடிவுகளை ஏன் வெளியிட மறுக்கிறார்கள்?
2. HGT (Horozontal Gene Transfer)பற்றி அறிந்திருப்பீர்கள். இந்த பயிர்களை உண்பதால் அது நடக்காது என்பதற்கு ஏதும் சோதனைகள் செய்யப்பட்டனவா?
3.இந்த பயிர்களை பூச்சிகள் தாக்காது. எதுவரை? சில வருடங்களில் எதிர்ப்புத்திறன் பூச்சிகளுக்கு வந்து விடாதா?

10:08 PM  

Post a Comment

<< முகப்பு