09- ந/கடந்தது -10- ந/கடப்பது-இனி

09- ந/கடந்தது -10- ந/கடப்பது-இனி

(1) 25 திசம்பர் 2009ல் டாக்டர்.எஸ்.எஸ்.ஸ்ரீராமாச்சாரி மரணமடைந்தார். அவரைப் பற்றி பிரண்ட்லைனில் வெளியான அஞ்சலிக் குறிப்பு இங்கே
அவருடனான சிறு பேட்டி இங்கே
ஒரு வகையில் அவர் எனக்குச் உறவினர்.நான் அவரைப் பல ஆண்டுகளாக அறிவேன், அவருடன் தங்கியிருக்கிறேன், பல முறை சந்தித்து பேசியிருக்கிறேன். அறிவியல்-ஆராய்ச்சி என்பதை உயிர் மூச்சாக கொண்டிருந்தார். 85 வயதிலும் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டு, படித்துக் கொண்டு, எழுதி/விவாதித்துக் கொண்டிருந்தார். உடல்நிலை மோசமாக இருந்த போதும்,தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த போதும் ஆய்வும்,அறிவியலும்தான் அவருக்கு முக்கியமானவையாக இருந்தன. அதுவும்,மன உறுதியும்தான் டிசம்பர் 3ம் தேதி ஒரு கூட்டத்தில் அவர் 15 நிமிடம் பேசுவதை சாத்தியமாக்கின. வேறொரு சந்தர்ப்பத்தில் அவரைப் பற்றி எழுதுகிறேன்.

(2) பி.டி(Bt) கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என்று தமிழில் பூவுலகின் நண்பர்கள் வலைப்பதிவு உட்பட சில வலைப்பதிவுகள்/இணையதளங்களில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளைப் படித்தேன். அடிப்படையான உண்மைகளை தெரிந்து கொள்ளாமல் பீதியை கிளப்பும் வகையில் எழுதுகிறார்கள், நம்மாழ்வார் உட்பட.இவர்களின் வாதங்களை உடைத்து அவை ஏன் அபத்தமானவை என்று காட்டுவது எளிது. ஒரு பொது விவாதத்தில் மக்களுக்கு புரியக் கூடியவகையில் பேசக்கூடிய, விபரமறிந்த அறிவியலாளர் ஒருவரால் இந்த வாதங்களை விமர்சித்து அவை ஏன் ஏற்க முடியாதவை என்று விளக்க முடியும். இதைப் பற்றி எழுதுவது அயர்ச்சி தருவதாக உள்ளது.ஏனெனில் முட்டாள்த்தனமான வாதங்களை எதிர்கொண்டு தகர்ப்பதில் ஒரு சவால் இல்லை.அதைச் செய்வது கடினமும் இல்லை,அதுவும் பூவுலகின் நண்பர்கள்,வினவு தளத்தில் எழுதப்பட்டுள்ள அபத்தமான கட்டுரைகளை.மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்குகிறோம் என்பவர்களே உளறுகிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த இடுகை ஒரே மாதிரியான பொய்களை/தவறான தகவல்களை நூறு பேர் எழுதினால் அவை உண்மையாகிவிடுமா என்ன?. மலட்டு விதை என்று இல்லாத ஒன்றை வைத்து பீதியை கிளப்புவது என்ன நியாயம்.

(3) 3 இடியட்ஸ் படம் பார்த்தேன். குறைகள் இருந்தாலும் ஒரு முறை பார்க்கலாம்.அமீர் கானுக்கு வித்தியாசமானதையும் எப்படி விற்க முடியும் என்பது நன்றாகத் தெரிந்திருக்கிறது.

(4) ஒரு கட்டுரையின் சில பகுதிகள் கீழே
”உலகளாவிய வர்த்தகம் என்ற சக்திமிக்க வெடிகுண்டினால் நாடுகளின் எல்லைகள் தகர்த்தெறிப்பட வேண்டும் என்பதே அதன் குறிக்கோள். அதன் விளைவாக உலகின் பல நாடுகளின் உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளின் சந்தைகளுக்கு என்றில்லாமல் உலகச் சந்தையின் சரக்குகள் ஆயின.அவர்களின் உயர் தொழில் நுட்பத்தினால் மலிவான செலவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உலகெங்கும் விற்று அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்ற காரணத்திற்காகவே முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் இதனை முன்கை எடுத்து கொண்டுவந்தன.

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் குறிப்பாக மருந்துப் பொருள் உற்பத்தி முறைகளைக் கண்டுபிடித்தவர்களுக்கு ஒரு தொகையை அவர்கள் அவற்றைச் செய்யும் வழிமுறையைக் கண்டுபிடித்ததற்காக வழங்கிய பின்னரே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிலை இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமலுக்கு வந்தது. இதனால் மூன்றாவது உலகநாடுகளில் விற்பனை செய்யப்படும் அந்நியநாட்டு உயிர்க்காப்பு மருந்துகளின் விலைகள் எட்டிப்பிடிக்க முடியாவண்ணம் உயரும் பேரபாயம் ஏற்பட்டது. உலக வர்த்தக அமைப்பு உலக நாடுகளின் உற்பத்திப் பொருட்களை மட்டுமின்றி உலகநாட்டு மக்களின் உழைப்புத் திறனையும் உலகச் சந்தையின் சரக்காக்கியது. அதன் விளைவாக எங்கெல்லாம் மலிவான கூலிக்கு உழைப்பாளர் கிடைக்கிறார்களோ அங்கெல்லாம் உலக முதலாளிகளின் மூலதனம் சீறிப்பாயத் தொடங்கியது.”

அடிப்படைகளைக் கூடப் புரிந்து கொள்ளாமல் எந்த ‘மாற்றுக் கருத்தை’ இவர்கள் உருவாக்கி முன்வைக்கப் போகிறார்கள்.உலக வர்த்தக அமைப்பு குறித்து எதை வேண்டுமானாலும் திட்டி எழுதி விட்டால் அது மார்க்சிய/இடதுசாரி விமர்சனமாகிவிடும் என்று நினைக்கிறார்கள் போலும்.

(5) 2009 கடைசி வாரத்தில் நானும் என் மனைவியும் ஒரு சுற்றுலா சென்றோம்.திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தன, முக்கியமாக தட்பவெப்ப நிலை நன்றாக இருந்தது. வரும் திசம்பருக்குள் ஒரு சிறு சுற்றுலா செல்லலாம் என்று சொல்லியிருக்கிறேன்.எங்கே எத்தனை நாள் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

(6) இந்த ஆண்டு எனக்கு ஒரு சவாலான ஆண்டாக இருக்கும்.மார்ச்சில் ஒரு பயணம், ஒரு கருத்தரங்கு.ஏப்ரல் முதல் வாரத்தில் இன்னொரு கருத்தரங்கு என தொடர்ந்து வேலை,பயணம் என்று இருக்கும் என்று தோன்றுகிறது.அண்மையில் சிலரை பல ஆண்டுகள் கழித்து சந்திக்க/தொடர்பு கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. ஒரு சர்வதேச மாநாட்டின் அமைப்புக் குழுவில் நான் உறுப்பினர், அதில் கலந்து கொள்ள இயலாத நிலை.அந்த மாநாட்டையொட்டி வெளியாகும் ஒரு ஜர்னலின் இதழுக்கு சில கட்டுரைகளை மதிப்பீடு செய்யப் போகிறேன்.ஒரு கருத்தரங்கில் எனக்கு முக்கிய பங்கு இருக்கிறது.ஆண்டு துவங்கி அப்படி இப்படியென்று ஒரு மாதம் ஒடி விட்டது.நினைத்தபடி எல்லாவற்றையும் செய்ய முடியாவிட்டாலும் சிலவற்றை செய்ய முடிந்தது. போன ஆண்டு செய்ய முயற்சித்த சிலவற்றை இந்த ஆண்டாவது செய்ய வேண்டும்.

Labels: , , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு