ஒரு ரவியும்,இன்னொரு ரவியும், மற்றும் 40 பேரும்

ஒரு ரவியும்,இன்னொரு ரவியும், மற்றும் 40 பேரும்

அண்மையில் நான் ஒருவரை சந்தித்தேன்.அவர் பெயரிலும் இரு தனித்தனிப் பெயர்கள், என் பெயர் போல், அதில் ஒன்று ரவி. கிட்டதட்ட ஏழு ஆண்டுகள் முன்பு அவரை சந்தித்தேன், பின் அண்மையில்தான். நாம் முன்பு சந்தித்திருக்கிறோம் என்று நினைவுபடுத்தியவுடன் புரிந்து கொண்டுவிட்டார் நான் யார் என்று. ஏழாண்டுகள் தொடர்பில்லை. தான் பணியாற்றும் பல்கலைகழகம் மூலம் என்னை வருகைநிலை அறிஞராக ஏற்பதாகவும், எனக்கு ஆய்வு செய்ய நூலக வசதிகள் உட்பட பிற தரப்படும் என்று கடிதம் பெற்றுத்தந்தார்.கடைசியில் நான் போன இடம் அவ்வாய்வுவிருது வழங்கியோர் தெரிவு செய்த பல்கலைகழகம்.அது நான் தெரிவு செய்து, ஆதரவுக் கடிதங்கள் பெற்றிருந்த 10 பத்து பல்கலைகழகங்கள் கொண்ட பட்டியலில் இல்லை.அவர்கள் தெரிவு செய்ததும் மிகவும் பிரபலமான, தரமான பல்கலைகழகம்,அங்கும் எல்லா வசதிகளும் தரப்பட்டன. நான் ஆய்வுவிருதை ஏற்று ஆய்வு செய்ய துவங்கியவுடன் இந்த ரவிக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.பதில் இல்லை. பின் ஒரிரு முறை, பதில் இல்லை.பின்னர்ட சில முறை அனுப்பிய போது விடுப்பில் இருக்கிறேன், பயணத்தில் இருக்கிறேன் என்று தானியங்கி அனுப்பிய பதில்கள்தான் கிடைத்தன.

சில ஆண்டுகளுக்குப் பின் நான் அவரை தொடர்பு கொள்ள முயல்வதை நிறுத்திவிட்டேன்.இப்போதுதான் தெரிந்தது அவர் ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டு கிட்ட 18 மாதங்கள் மின்னஞ்சல்களை படித்து பதில் எழுத இயலாமல் இருந்தார் என்று. இனி தொடர்பிலிருக்கலாம் என்று இருவரும் பேசிக் கொண்டோம். ரவியை எனக்கு அறிமுகப்படுத்தியது என் நண்பர் ஒருவர் என்று நினைக்கிறேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது நீ ரவிராஜனிடம் ஏன் யோசனை கேட்கக் கூடாது என்றார், அத்துடன் அவர் விடுமுறை முடிந்து திரும்பிச் செல்லும் முன் நேரில் பேசி விடு என்று தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார். ஒரு நாள் காலை நானும் அந்த ரவியும் ஒரு ஒட்டலில் சந்தித்தோம், பின் மின்னஞ்சல் மூலம் தொடர்பில் இருந்தோம். {அந்தக் காலகட்டத்தில் காலை 7 மணிக்கு மின்னஞ்சல் பெட்டியை திறப்பதில் துவங்கும் நாள் இரவு 11/11.30 மணிக்கு மின்னஞ்சல் பார்ப்பது அல்லது அனுப்புவதில் முடியும். பரபரப்பும்,உற்சாகமும் நிரம்பிய அந்த நாட்களை இன்று நினைத்தாலும் இனிமையாக இருக்கிறது. இன்று உற்சாகமும்,பரபரப்பாக வேலை செய்வது [எல்லா வேலைகளையும் அல்ல, சிலவற்றை :)] அதிகரித்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.}

இப்படித்தான் பலருடன் தொடர்பு ஏற்படுகிறது, பின் சில பல காரணங்களால் அது ஒரு கட்டத்துடன்/கட்டத்தில் நின்றுவிடுகிறது.அதை முறிவு என்று சொல்ல முடியாது. அண்மையில் காய்ச்சலில் படுக்கையில் கிடந்த போது அப்படிப்பட்ட தொடர்புகளைப் பற்றி யோசித்ததில் முன்பு தொடர்பில் இருந்து, இப்போது தொடர்பில் இல்லாதாத கிட்டதட்ட 30/40 பேரை நான் மீண்டும் தொடர்பு கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.கொஞ்சம் தோண்டினால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடும். இருந்தாலும் முதற்க் கட்டமாக அதிகபட்சம் 40 பேரை மட்டும் தொடர்பு கொள்வது என்று முடிவு செய்தேன். இதில் தமிழ் வலைப்பதிவர்கள் யாரும் இல்லை என்பதால் தமிழ் வலைப்பதிவர்கள் அஞ்ச வேண்டாம் :).

இந்த ஆண்டு செய்ய வேண்டிய 2000+ வேலைகளில் இதுவும் ஒன்று கொண்டாலும் ஒரே மூச்சில் ஒரிரு நாளில் இதைச் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு பட்டியலைத் தயாரித்துவிட்டால் இதைத் செய்ய ஒரிரு மணி நேரம் போதும். இந்த 30/40 பேர் மட்டுமல்ல, நான் தொடர்பில் இருக்கும் அல்லது ஆண்டுக்கொரு முறையேனும் தொடர்பு கொள்வோரில் கிட்டதட்ட 75%த்தினர் என்னைப் பார்த்ததேயில்லை. அது ஒரு பிரச்சினையாகவே இருந்ததில்லை. இன்னும் சொல்வதென்றால் அதுதான் வசதியாக இருக்கிறது, என் முகத்தைப் பார்க்கும் தொந்தரவு அவர்களுக்கு இருக்காதல்லவா :).

இது போன்ற பல வேலைகளை செய்யவிருப்பதால் தமிழ் இணையம்,வலைப்பதிவுகளுக்காக செலவிடும் நேரத்தினை கணிசமாக குறைத்து விடலாமென்றிருக்கிறேன். அதுதானே எனக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது :).

Labels: , , , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு