2010 - பத்து

2010 - பத்து

1)கோவை ஞானிக்கு இயல் விருது வழங்கப்படவுள்ளது மகிழ்ச்சி தருகிறது. பொருத்தமான தெரிவு.கோவை ஞானி 1960களிலிருந்தே எழுதி வருபவர்.தமிழின் முக்கியமான மார்கிசிய/முற்போக்கு இலகக்கிய விமர்சகர்களில் ஒருவர். எனக்கு தெரிந்து அவர் செய்த தவறு என்னை எழுத ஊக்குவித்து நான் எழுதியதையும் வெளியிட்டதுதான்; இந்தப் பாவத்திற்கான அவரை மன்னித்துவிடலாம்தானே :).

2)புத்தாண்டு துவங்கும் போது நான் பயணத்திலிருந்தேன், சரியாகச் சொன்னால் நித்திரையிலாழ்ந்திருந்தேன்.கனவு கண்டுகொண்டிருந்தேன் என்று கூட சொல்லலாம்.ஏனெனில் கனவு கலைந்து நான் விழித்த போது புத்தாண்டு பிறந்து அரைமணி நேரமாகியிருந்தது.விரும்பும் கனவுகளை மீள்காண முடிந்தால் நன்றாக இருக்கும் :). அந்த வசதி இல்லாததால் கனவினை முழுமையாக வாசிக்க முடிவதில்லை :). 2010ல் சூப்பர்
மேன் ஆகும் கனவெல்லாம் நான் காணவில்லை.

3)புத்தகக் கண்காட்சியில் வாங்கிய/வாங்க விரும்பும்/வாங்கப் பரிந்துரைக்கும் நூற்களைக் கொண்ட இடுகைகள் சிலவற்றைப் பார்த்தேன். இதில் ஆங்கில நூல்கள் கிட்டதட்ட இடம் பெறவேயில்லை. அது ஏன் என்று புரியவில்லை.உலக சினிமா பார்க்கும் சுரேஷ் கண்ணன் போன்றவர்கள் ஆங்கில நூல்களை அதிகம் வாங்குவதில்லையா அல்லது அதிகம் படிப்பதில்லையா.ஆங்கிலத்தில் நூற்களை வெளியிடும் சாகித்ய அகாதமி, நேஷன்ல் புக் டிரஸ்ட் குறைந்த விலையில் தரமான நூற்களை வெளியிடுகிறார்கள்.தாரா பதிப்பகம் சென்னையில் இருக்கிறது அவர்களது வெளியீடுகள் உலகளவில் பேசப்பட்டு வியக்கப்படுகின்றன. நானறிந்தவரையில் தமிழ் வலைப்பதிவர் யாரும் அதைப் பற்றி எழுதியதாகத் தெரியவில்லை.அவர்களின் நூற்களின் விலை ஒப்பீட்டளவில் அதிகம் என்றாலும் புத்தக தயாரிப்பு நேர்த்தியில் அவர்கள் இன்று உலக அளவில் கவனம் பெறுகிறார்கள்.தமிழ்,ஆங்கிலம - இரு மொழிகளிலும் வெளியிடுகிறார்கள்.வ.கீதா தொகுத்து,பதிப்பித்துள்ள நூல்- (காந்தியின் எழுத்துக்கள்) Soul Force என்ற பெயரில் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.வாங்காவிட்டாலும் அவற்றை கண்ணாலாவது பார்க்கலாமே.

4)டிசமபர் கடைசி வாரத்தில் பயணம் மேற்கொண்டதால் சற்று முன்னதாவே கடந்த ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பி விட்டேன். சில நண்பர்கள்/தெரிந்தவர்கள் கடந்த ஆண்டு இருந்தவர்கள் இந்த ஆண்டு இல்லை என்பது அனுப்பும் போது/அழைக்கும் போது சுரீரென உறைத்தது.

5)நான் வாழ்த்தனுப்பும் பலரை நேரில் சந்தித்தது இல்லை, தொடர்பு மட்டும் உண்டு.ஆண்டுக்கொரு முறை வாழ்த்தனுப்பவது அதன் நிமித்தம்.அப்படி நான் இத்தாலிப் பேராசிரியர் ஒருவருடன் தொடர்பில் இருக்கிறேன், எழுதிய கட்டுரைகள் போன்றவை குறித்து இருவரும் மின்னஞ்சல்களை பரிமாறிக்கொள்வோம். இந்த முறை நான் அனுப்பிய வாழ்த்திற்கு பதில் எழுதிய அவர் எழுதியது எனக்கு நெகிழ்ச்சி தந்தது.

இந்த ஆண்டு அவரை சந்திக்க முடிந்தால் மகிழ்வேன்.அது போல் இன்னொரு பேராசிரியர், கிட்டதட்ட 20 ஆண்டுகள் முன்பு எனக்கு இரு நூல்களை அனுப்பி எனக்கு புதிய வெளிச்சயத்தை காட்டியவர், அவரையும் இந்த ஆண்டு சந்திக்க முடியும் என்று நினைக்கிறேன்.

6)இந்த ஆண்டு(ம்) பயணங்களுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகத் தோன்றுகிறது. பிப்ரவரியில் ஒரு பயணம், மார்ச்சில் இன்னொரு பயணம், டிசம்பரில் இன்னொரு பயணம் - இவற்றிற்கு வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர பஜனை பாடுதல்கள் இருக்கும். ஜனவரி 8ல் ஒரு பஜனை செய்து இந்த ஆண்டிற்கான பஜனைக் கச்சேரியைத் துவங்குகிறேன். அடுத்த பஜனை ஜனவரி 20.

7)புவியரசிற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது விமர்சிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாதமி பரிசு போல் தமிழ் எழுத்தாளர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ மாற்றுப் விருதுகளை வழங்கலாம்.ஜெயமோகன் ஒரு மாற்று விருதை ஆண்டுதோறும் வழங்கலாம்,
பா.ராகவன் ஒரு மாற்று விருதை ஆண்டுதோறும் வழங்கலாம். காலச்சுவடு, உயிர்மை போன்ற வெளியீட்டு நிறுவனங்களும் அவ்வாறே செய்யலாம். இப்படி செய்தால் இவர்கள் யார் யார் பரிசுக்கு தகுதியானவர்கள் என்று எழுதுகிறார்கள், தங்கள் தெரிவென்று வரும்போது யார் யாருக்கு வழங்குகிறார்கள் என்பது தெளிவாகும். நவராத்திரி பண்டிகையின் போது பெண்கள் பரிமாறிக் கொள்ளும் பிளவுஸ் துணிகளைப் போல்
இலக்கிய விருதுகளையும் பரிமாறிக் கொள்ளலாமே.நான் ஆண்டுதோறும் 1000 தமிழ் எழுத்தாளர்களுக்கு சாகித்ய சாம்ராட் விருது வழங்கலாமென்றிருக்கிறேன், அட்டை/பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட வாள்,கேடயம்,கீரிடத்துடன் சான்றிதழும் தரப்படும். இதை சீன நிறுவனம் ஒன்று மிக மலிவாகச் செய்துதர முன் வந்துள்ளது.

8)ராஜீவ் காந்தி படுகொலைச் செய்யப்பட்டது குறித்து ரகோத்தமன் எழுதிய நூலை கிழக்கு நன்றாகவே சந்தைப்படுத்தியிருக்கிறது.இது அப்படுகொலை குறித்த (நானறிந்த வரையில்) மூன்றாவது நூல்.நூல் குறித்து எழுதப்பட்டுள்ளதைப் படிக்கும் போது முழுமையான
தகவல்களுடன், குற்ற விசாரணை/புலனாய்வில் தொடர்பற்றவரால் எழுதப்பட்ட, தூண்டித் துருவி பெற்ற தகவல்/சான்றுகளை அலசி நடுநிலையுடன் எழுதப்பட்ட நூல் ஒன்று தேவை என்று தோன்றுகிறது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமான இருவர் இந்திய நீதித்துறையின் எல்லைக்கு அப்பால் இருந்தனர்.மேலும் வழக்கு வழக்கமான Indian Penal Codeன் கீழ் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படவில்லை. இனி வரும்
மாதங்களில் ரகோத்தமன், கார்த்திகேயனை குறை கூறி இருப்பது போல், ரகோத்தமனை குறை கூறி வேறு யாரேனும் நூல் எழுதக் கூடும். அடுத்த புத்தக் கண்காட்சிக்குள் அதுவும் கிழக்கு வெளியிடாக வரக்கூடும்.

9)ஒரு லட்ச ரூபாய் மாடுலர் கிச்சனும்,எட்டாயிரம் ரூபாய் ஜட்டியும் என்ற பெயரில் ஒரு நுண்-அதி-பின் -நவீனத்துவ கதை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

10)நானூறு ரூபாய்க்கு சாரு/ஜெமோ புத்தகங்கள் வாங்குவதை விட செமினாருக்கு ஒராண்டு சந்தா செலுத்துவது பணத்தை புத்திசாலித்தனமாக செலவழிப்பதாகும், விபரங்களுக்கு www.india-seminar.com ஐ காண்க என்று நான் எழுதினால் சிலர் கோபித்துக்
கொள்ளலாம்.உள்ளடக்கரீதியாக பார்த்தால் செமினார் ஒரு இதழில் வெளியிடும் கட்டுரைகளின் தரத்தில் தமிழில் எத்தனை கட்டுரைகள் ஒரு மாதத்தில் வெளியாகின்றன அல்லது செமினாரில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்து தமிழில் எத்தனை கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

ஞாநி தமிழ்நாட்டில் புத்தகங்களுக்கு மாதம் ரூ 100 செலவழிக்க இயலும் குடும்பங்கள் 3 கோடி இருப்பதாக எழுதுகிறார்.குடும்பத்திற்கு சராசரியாக மூவர் என்று வைத்துக் கொண்டால் கூட 9 கோடிப் பேர் இது உலகில் உள்ள தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.நான் புத்தகங்களுக்கு எதிரி அல்ல, ஆனால் புத்தகங்கள் குறித்து ஞாநி உருவாக்கும் மாயையை எதிர்க்கிறேன்.எனக்குத் தெரிந்து பலர், மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் ஆண்டிற்கு தமிழ் நூல் ஒன்று கூட வாங்குவதில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் 8000 ரூபாய் CRY அமைப்பிற்கு கொடுத்தார், கடந்த ஆண்டு அவர் தமிழ் புத்தகம் ஒன்று கூட வாங்கவில்லை.ஏனென்றால் அது தனக்குத் தேவை இல்லை என்று
நினைக்கிறார். ஆனந்த விகடன்,குமுதம் வாங்குவதை/படிப்பதை நிறுத்தி விட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதனால் பயன் இல்லை அல்லது கொடுக்கும் காசிற்கு உருப்படியாக இல்லை என்று நினைக்கிறார்கள். சாருவின் நூலை விட DEV-D படத்தின் DVD மலிவாக இருக்கும் போது சாருவின் நூல்தான் வாங்குவேன் என்று வாங்கும் தீவிர வாசகர்கள் எத்தனை பேர். இன்று பணத்தினை செலவழிக்க பல வழிகள் உள்ளன.திரைப்பட/இசை CD/DVD விலைகளையும், புத்தக விலைகளையும் ஒப்பிட்டு கொடுக்கிற காசிற்கு எது அதிக பலன்/இன்பம் தரும் என்று நுகர்வோரால் தீர்மானிக்க முடியும்.அமர்த்யா சென் நூல் ரூ 700க்கு கிடைக்கிறது. ஆங்கில நூல்கள் பலவற்றின் இந்தியப் பதிப்புகள் 500/600 ரூபாய்க்கு கிடைக்கின்றன. ஆங்கில புனைவிலயக்க நூல்களும் நிறையக் கிடைக்கின்றன. வாசகருக்கு இன்று தெரிந்தெடுக்க நூல்கள், CD/DVDகள் அதிகம். எனவே ஆயிரம் ரூபாய் செலவழிப்பதாக இருந்தால் அத்தனையையும் தமிழ் நூல் வாங்கி செலவழித்துத்தான் அறிவை வளர்க்க வேண்டும் என்ற நிலை இல்லை.

ஞாநி இதையெல்லாம் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

Labels: , , , , ,

2 மறுமொழிகள்:

Blogger சுரேஷ் கண்ணன் மொழிந்தது...

அன்புள்ள ரவி ஸ்ரீனிவாஸ்,

//உலக சினிமா பார்க்கும் சுரேஷ் கண்ணன் போன்றவர்கள் ஆங்கில நூல்களை அதிகம் வாங்குவதில்லையா அல்லது அதிகம் படிப்பதில்லையா.//

நீங்கள் எழுதின பிறகுதான் 'ஏன் பெரும்பாலான பரிந்துரைப் பதிவுகளில் ஆங்கில நூற்களைப் பற்றின விவரங்கள் இல்லை' என்கிற கேள்வி பளீர் என அறைந்தது.

என்னைப் பற்றி சொல்லி விடுகிறேன். ஆங்கில மொழி அறிவு மற்றும் வாசிப்பின் போதாமை காரணமாக தமிழில் வாசிப்பதே எனக்கு செளகரியமாக இருக்கிறது. எழுத்துக் கூட்டி கூட்டி வாசித்துவிட முடியும்தான். ஆனால் தமிழிலேயே வாசிப்பதற்கு இன்னும் நிறைய இருக்கும் போது எதற்கு அந்த 'கற்பூர வாசனை' என்று விட்டு வைத்திருக்கிறேன். ஆங்கில நூற்களின் விலை அதிகமாக இருக்கும் என்கிற முன்தீர்மானமான எண்ணமும் ஒரு உப காரணம்.

ஆனால் நீங்கள் குறிப்பிட்ட படி ஆங்கில் நூல் கடைகளுக்குச் சென்று ஒரு பார்வையாவது இட்டிருக்கலாம்தான். இனி செய்கிறேன்.

2:56 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் மொழிந்தது...

சுரேஷ் கண்ணன்
வாசிப்பின் போதாமையை போக்க ஒரு எளிய வழி வாசிப்பதுதான் :).
ஆங்கில நூல்களின் விலை பல சமயங்களில் அவ்வளவு அதிகமாக
இல்லை, குறிப்பாக சாகித்ய அகாதமி, நேஷன்ல் புக் டிரச்ட் வெளியிடும் நூற்களின் விலைகள்.
திரைப்படங்களில் உங்களுக்கு ஆர்வமிருப்பதால் Seagull books போன்ற வெளியீட்டாளர்களின் விற்பனை அரங்குகளில் அல்லது அவர்களின் வெளியீடுகள் கிடைக்கும் விற்பனை அரஙகுகள் உங்களுக்கு ஆர்வமூட்டக் கூடிய நூல்களை
காண முடியும். Deep Focus என்ற
இதழ் இப்போது வெளிவருகிறதா என்று தெரியவில்லை. பழைய இதழ்கள் கிடைத்தால் புரட்டிப் பாருங்கள்.திரைப்பட ஆர்வலர்களுக்கு
பயனுள்ள இதழ். இந்திய மொழிப் திரைப்படங்களை, கலைஞர்களை குறித்த கட்டுரைகள், திரைவிமர்சனங்கள் அதில் இடம் பெற்றன.அதையெல்லாம் படித்த பின் சாரு எழுதுவது திரை விமர்சனமா என்ற கேள்வி உங்களுக்கு எழும்.
http://www.seagullindia.com/books/defaultnew.asp
இதில் உள்ள சில புத்தகங்கள் பழையவை, முக்கியமானவை

8:08 AM  

Post a Comment

<< முகப்பு