காந்தி,காந்தியம், ஜெயமோகன் - 5

‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-

காந்தி,காந்தியம், ஜெயமோகன் - 5

முந்தைய பகுதிகள்

1
2
3
4

காந்திய அறநெறி போராட்ட வழிகளைக் கைக்கொள்ளும் இயக்கங்கள் காந்தியின் லட்சியங்களை நிறைவேற்ற பாடுபடுகின்றன என்று கொள்ள முடியாது. National Alliance of Peoples' Movements (NAPM) என்ற அமைப்பில் உள்ள இயக்க்ங்கள் பலதரப்பட்டவை, பல நோக்கங்களைக் கொண்டவை.அவை அனைத்தும் காந்திய இயக்கங்கள் அல்ல. இன்று உலகமயமாதலை எதிர்க்கும் இயக்கங்கள், பெண்ணிய இயக்கங்கள், பழங்குடியினர் உரிமைக்குப் போராடும் இயக்கங்கள், குறிப்பிட்ட திட்டங்களை எதிர்க்கும் இயக்கங்கள் என்று பல்வேறு இயக்கங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் வெவ்வேறு குறிக்கோள்களைக் கொண்டவை.ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இதில் காந்திய இயக்கங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.மேலும் தொழிலாளர் உரிமைக்குப் போராடும் இயக்கங்கள், வளங்களை பாதுக்காகப் போராடும் இயக்கங்கள் காந்திய பொருளாதாரத்தை ஏற்ற இயக்கங்களாக இருக்க வேண்டியதில்லை. உலகளவில் பார்த்தால் உலக சோசியல் பாரம் WSF என்பது பல்வேறு இயக்கங்கள் கூடும் வெளியாக உள்ளது. இதில் பல்வேறு வகையான இயக்கங்கள்/அமைப்புகள் பங்கேற்கின்றன. 1990களில் உலகமயமாதலை எதிர்த்த இயக்கங்களில் பல இடதுசாரி/மார்க்ஸிய (ஒரு பரந்த பொருளில்) கருத்தியலைச் சார்ந்தவை அல்லது ஏதோ ஒருவகையான சோசலிசத்தை முன் வைப்பவை.
கடந்த 10/15 ஆண்டுகளில் லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இடதுசாரி எழுச்சியும், உலகின் பல நாடுகளில் பழங்குடி மக்களின் போராட்டங்கள்/இயக்கங்களும் எதைச் சுட்டிக்காட்டுகின்றன. இடதுசாரி அலை உருவானது போல் இயக்கங்களில் காந்திய அலை உருவாகவில்லை. உலகமயமாதல், நவதாராளவாதத்தினை எதிர்க்கும் இயக்கங்கள் காந்திய கிராம குடியரசுகளையா மாற்றாக வைக்கின்றன?. இல்லையே. நர்மதை பாதுகாப்பு இயக்கம் அறவழியில் போராடியது, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது, இறுதியில் தீர்ப்பு அதன் கோரிக்கைக்கு எதிராக அமைந்தது. இதை காந்திய அணுகுமுறையின் தோல்வி என்று கொள்ளலாமா. இன்றைய சூழலில் அறவழியில் போராடும் இயக்கங்கள் தோற்கும், வன்முறைய்யைக் கைக்கொள்ளும் இயக்கங்கள் வெல்லும் என்று சொல்ல முடியாது. பொது நலவழக்கு(கள்) மூலம் சிலவற்றிற்கு தீர்வு கிடைத்திருக்கிறது, சிலவறிற்கு கிடைக்கவில்லை.எனவே இன்று காந்திய அணுகுமுறையைக் கைக்கொள்ளும் இயக்கங்கள் வெல்லும் என்று சொல்ல முடியாது. இறால் பண்ணையை எதிர்த்த இயக்கத்திற்கு அன்று ஒரளவேனும் வெற்றி கிடைத்தது, இன்று கிடைக்கும் என்று உத்திரவாதம் இல்லை. நர்மதைப் பாதுகாப்பு இயக்கம் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறது- பல கோரிக்கைகளுடன்.அதில் சிலவற்றில் வெற்றி கிடைக்கலாம். சிப்கோ இயக்கத்தை வளர்த்த பகுகுணா தெஹ்ரி அணைத்திட்டத்தை எதிர்த்து இயக்கம் நடத்தினார். ஒரு கட்டத்தில் அவரை ஆதரித்த இந்த்துவ இயக்கங்கள் பின் பின்வாங்கின.அவரது பெயர் கெட்டதுதான் மிச்சம்.அவரால் அத்திட்டத்தை தடுக்க முடியவில்லை. வந்தனா சிவா காந்திய சொல்லாடலை பயன்படுத்துபவர்.அவரது கருத்துக்களில் சிலவற்றை ஏற்கலாம், சிலவற்றை ஏற்க இயலாது.அறிவுசார் சொத்துரிமை குறித்த முட்டாள்த்தனமான கருத்துக்கள், உயிரியல் தொழில்னுட்பத்தை கண்மூடித்தனமாக எதிர்ப்பது, ஒரு கட்டத்தில் அவர் வலியுறுத்திய சாரம்சவாத பெண்ணியம் என அவரை பலவற்றிற்காக விமர்சிக்க முடியும். அவரது The Violence of Green Revolution நூலுக்கு எழுதிய மதிப்புரையில் (ஆங்கிலத்தில்) அவரது கருத்துகளை விமர்சித்திருக்கிறேன்.ஆக, இன்று இந்திய அளவில் காந்தியத்தை லட்சியமாகக் கொண்ட இயக்கம் என்று எதுவும் அகில இந்திய அளவில் வலுவாக இல்லை, அங்கொங்குன்றும் இங்கொன்றுமாக சில முயற்சிகள்/இயக்கங்கள் இருக்கலாம், அவற்றின் தாக்கமும் குறைவுதான்.எனவே எப்படிப் பார்த்தாலும் காந்தியம் மைய நீரோட்டத்திலும் இல்லை, அதற்கு மாற்று தேடும்/அதை மாற்ற முயலும் இயக்கங்களிடையேயும் செல்வாக்குடன் இல்லை.

காந்தி முன்வைத்த தர்மகர்த்தா முறையும் தோல்வி என்றுதான் சொல்வேன்.Corporate Social Responsibility மற்றும் Corporate Philanthropyஐ தர்மகர்த்தா முறை என்று கருத முடியாது.தர்மகர்த்தா முறை ஏன் தோற்கும் என்பதைப் புரிந்து கொள்வது எளிது. பெரிய தொழில்/சேவை நிறுவனங்களை, குழுமங்களை தனியார் துறையில் நடத்தி நிர்வகிக்க அது பொருத்தமான ஒன்றல்ல.ஏனெனில் உடமை, நிர்வாகம் குறித்த தெளிவு இருக்க வேண்டும்.தர்மகர்த்தா என்ற முறையில் அறக்கட்டளை நடத்தலாம், பெரிய தொழிற்குழுமத்தை காந்தி கூறிய தர்மகர்த்தா முறையில் நடத்துவது சாத்தியமில்லை. அப்படியே செய்தாலும் கூடுதல் நிதி திரட்டுதல்,மூலதனத்தை பங்குகளை விற்பனைக்கு விடுப்பதன் மூலம் அதிகரித்தல், அந்நிய நிதி முதலீட்டை கொண்டுவருதல் போன்றவறிற்கு அது இடையூறாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் சந்தைப் பொருளாதாரம், பங்கு சந்தை, பொரும் தொழில்குழுமங்கள் போன்றவை நிலவும் பொருளாதராத்தில் தர்மகர்த்தா முறை ஒரு வினோதப் பிராணியாக இருக்கும்.சிறிய அளவில் தொழில் செய்ய, கூட்டுறவு முறையில் தொழில் செய்ய அது ஒரளவேனும் பொருத்தமாக இருக்கும். எனவேதான் காந்தியை ஆதரித்த, காங்கிரசுக்கு நிதி உதவி செய்த ப்ரிலா உட்பட பெருந் தொழிலதிபர்கள் யாரும் இதை நடைமுறைப்படுத்தவில்லை. ஜம்னால் பஜாஜ ஒரு விதிவிலக்கு, ஆனால் அவர் காந்தியின் சீடராகி விட்டார் என்பததால் அவரை பிற தொழிலதிபர்கள் போல் கருத முடியாது.(1) காங்கிரசுக்கு நிதி உதவி செய்த தொழிலதிபர்கள் சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் தங்களுக்கு எது சரியாக இருக்கும், எத்தகைய பொருளாதார முறை ஏற்புடையதாக இருக்கும் என்றுதான் யோசித்தார்களே ஒழிய தர்மகர்த்தா முறையை பொருட்படுத்தவே இல்லை.தர்மகர்த்தா முறை நடைமுறையில் இருந்தால் முதலாளி-தொழிலாளி விரோத மனப்பான்மை இராது, தொழிற்தகராறுகள் இராது என காந்தி எண்ணினார். நடைமுறை முற்றிலும் வேறாக இருந்தது. நிலம் என்று வரும் போது கூட அரசு நடைமுறைப்படுத்திய நிலச் சீர்த்திருத்தம், பூதான இயக்கம் மூலம்தான் (ஒரளவேனும்) தீர்வு கிடைத்ததே ஒழிய காந்தி முன்வைத்த தர்மகர்த்தா முறையினால் அல்ல.காந்தி ராக்கபெல்லர்களை தர்மகர்த்தா முறைக்கு முன்னுதரணமாகக் காட்டவில்லை.மாறாக an Indian Rockefeller would be as immoral as the original American version என்றுதான் எழுதினார்.

காந்தியைப் போற்றி வியந்த ஐன்ஸ்டீன் காந்தியத்தின் குறைகளையும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் ஒரு செவ்வியில் கூறினார்
”I admire Gandhi greatly but I believe there are two weaknesses in his program; while nonresistance is the most intelligent way to cope with adversity, it can be practiced only under ideal conditions. It may be feasible to practice it in India against the British but it could not be used against the Nazis in Germany today. Then, Gandhi is mistaken in trying to eliminate or minimize machine production in modern civilization.It is here to stay and must be accepted” (2)

இது போன்ற விமர்சனங்கள் புதிததல்ல. ஜார்ஜ் ஆர்வெல் காந்தியை விமர்சித்து எழுதும் போது அவரது அரசியல் போராட்டங்கள் அதீதமாக ஒடுக்கும் அரசுகளுக்கு எதிராக நின்றிருக்காது என்று குறிப்பிட்டார்.அவ்வாறே பாலியல் வன்முறையை எதிர்கொள்வது குறித்த காந்தியின் கருத்துக்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டுள்ளன. மனித உரிமைக் கண்ணோட்டலிருந்து கோல் வைத்துள்ள விமர்சனமும் முக்கியமானது.அவர் குறிப்பிடுகிறார்
We must pause here and take note of the troubling fact that Gandhian principles, which downplay efforts to seek redress through law, may have the unintended effect of undermining human rights. We notice that part of the Gandhian solution may mean that belligerents have to forget about crimes committed by both sides. This sort of solution is very similar to contemporary methods of conflict resolution (very much indebted to Gandhi) that incorporate a no-fault principle in
which each side has to cease to pursue those who have committed criminal acts. In short, there can be no threat of a war crimes trial for belligerents. However, without the threat of war crimes trials, there is no reason for belligerents to strategize, build weapons, and fight in accordance with international law. So, the no-fault principle mayactually undermine the protection of human rights because no one has to fear punishment for committing atrocities. International law may not be
able to settle a problem between belligerents in a way that would be equally satisfactory to both sides, but it does deter atrocities and punishes those who commit them.” (3)

அவர் எழுப்பியுள்ள வேறு சில கேள்விகளும், முன்வைத்துள்ள கருத்துக்களும் முக்கியமானவை. விரிவஞ்சி அவற்றை இங்கு விவரிக்கவில்லை.

ஜெயமோகன் தன் கட்டுரைகளில் இது போன்ற விமர்சனங்களை/கருத்துக்களை ஒன்று உதாசீனம் செய்கிறார் அல்லது அவற்றை சரியாக எதிர்கொள்வதில்லை. காந்தியத்தை நடைமுறைப்படுத்துதல் குறித்த விவாதங்களில் காந்திய அணுகுமுறையும், அகிம்சைப் போராட்டமும் நாசி ஆட்சிக்கு எதிராக போராடி வென்றிருக்குமா, அவை சரியான வழிகள்தானா என்ற கேள்வி மீண்டும் மீண்டும் பலரால் எழுப்பபடுகிறது.

கட்டுரைகளில் பொருத்தமிருக்கிறதோ, பொருத்தமில்லையோ ஏராளமான தகவல்களை ஜெயமோகன் அள்ளி வீசியிருப்பதைப் பார்க்கும் போது கூகுளாண்டவரின் மகிமை புலனாகிறது. என்ன வழக்கம் போல், பசு மாட்டைப் பற்றி எழுதச் சொன்னால், மாடு தென்னை மரத்தில் கட்டப்பட்டிருக்கிறது, தென்னை மரத்தில் தேங்காய் இருக்கிறது, தென்னை மரம் தோப்பில் இருக்கிறது என்று எழுதிக் கொண்டே போவது போல் எழுதியிருக்கிறார். அப்படி அவசரக் கோலத்தில் தகவல்களை அள்ளித் தெளிக்கும் போது ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளும் அவர் எழுதியதில் இருக்கிறது. காந்தியின் மகன்கள் குறித்து எழுதியதில் ஒருதரப்பாக அவர் அதை அணுகியிருப்பதை வாசகர் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. ஹரிலால் தரப்பு நியாயத்தை அவர் ஏற்காமல் பிழை ஒரு தரப்பில்தான் என்பது போல் எழுதியுள்ளார். தகவல்களை அங்கும் இங்கும் தேடி பிடித்து எழுதியதில் ராமச்சந்திர காந்தி செத்துப் போன செய்தி அவருக்குக் கிடைக்கவில்லை போலும். ஒருவேளை ஜெயமோகன் அவரை புத்துயிர்க்க வைத்துவிட்டாரோ என்னமோ. அவர் மரணமடைந்த செய்தி நாளிதழ்களில்,வார இதழ்களில் வந்தது.ராம் குஹா அவரைப் பற்றி எழுதினார். ஒரு உரையில் கூட அந்த சகோதரரகள் மூவரில் யாருக்கு லட்சுமி (ராஜாஜி) தேவதாஸ் காந்தி இந்தியில் மொழிபெயர்த்த ராஜாஜியின் ராமாயணம்,மகாபாரத நூல்களின் ராயல்டி கிடைக்கிறது, ஏன் என்பதையும் குறிப்பிட்டார்.

பல வேடிக்கைகளை ஜெயமோகன் எழுதியிருப்பதில் பார்க்கலாம்.ராம் குஹா வரலாற்றாசிரியர் அல்ல என்பதற்கு அவர் கொடுத்த விளக்கம், ராம் குஹாவின் கருத்துகள் என் கருத்துகளுடன் ஒத்துப் போகின்றன என்று எழுதியதில் காட்டிய ‘பணிவு’ உட்பட பலவற்றைக் குறிப்பிடலாம். ஒரு வாசகர் ஒரு ஆய்வாளர் பெயரைக் குறிப்பிடுவார். பின் திடீரென அந்த ஆய்வாளர் படம்,
அவர் முன்பு எழுதியக் கட்டுரை குறிப்பிடப்படும்.அந்தக் கட்டுரை துவக்கத்தில் ஏன் வரவில்லை, அது சுவாரசியமான அறிமுகத்திற்கு பயன்பட்டிருக்குமே என்றெல்லாம் கேட்கக் கூடாது.

அது போல் காந்தியை குறித்து இன்னார் இன்னார் எழுதினர் என்று ஒரு பெயர் பட்டியல் வரும்.அதில் இடம் பெற்றுள்ள ஒருவர் எழுதியவை காங்கிரசையும், காந்தியையும் விமர்சிபோரால் மேற்கோள் காட்டப்படுபவை, அவர் காந்தியை குறித்து காத்திரமான விமர்சனம் வைத்திருக்கிறார் என்பது தெரியாமல் அவர் பெயரும் அதில் இடம் பெற்றிருப்பதும் வேடிக்கைதான். அதைவிட வேடிக்கை காந்தி/காந்தியம் குறித்த ஆய்வாளர்களை குறித்து ஜெயமோகன் செய்திருக்கும் மதிப்பீடு.

காந்தியம் என்பது பேச, எழுத எளிதானது. நடைமுறையில் அதைக் கொண்டுவருவதுதான் கடினம். ஆனால் காந்தி மாற்றம் என்பது முதலில் தனி நபரிடம் துவங்க வேண்டும் என்றார். அவர் கூறிய சுய ராஜ்யம் என்பதில் இதுவும் அடங்கும். கறாரான தந்தையாக, தன் விழுமியங்களை அவர் திணிதத்தில் பாதிக்கப்பட்டவர் ஹரிலால்.இறுதிவரை இதன் விளைவு நீடித்தது. கஸ்தூரிபாவிற்கு பென்சில் ஊசி போடலாம் என தேவதாஸ் கூறிய போது அதை தடுத்தவர் காந்தி. அவரது மகாத்மாத்தனத்திற்கு இப்படி பிறர் விலை கொடுக்க வேண்டியதாயிற்று. இறுதியில் காந்தி தான் தனியன் என்பதை அறிந்தார். அவரை கொண்டாடிய தேசம் அவர் முன் வைத்த விழுமியங்களை அப்படியே ஏற்றுக் கொண்டாடி வாழ்க்கையின் வழிக்காட்டியாக மாற்றவில்லை. சுதந்திர இந்தியாவில் காந்தியின் ஹிந்த் சுவராஜ் வெறும் கனவாகவே இருக்கும் என்பது அவர் உயிருடன் இருக்கும் போதே தெளிவாகி விட்டது. இதற்கெல்லாம் பல காரணங்கள் உள்ளன.

காந்தியின் காந்தியம் நெகிழ்வுதன்மையற்ற ஒன்றாக இருந்தது, நடைமுறையில் அது மாற்றமின்றி சாத்தியமில்லை என்பது தெளிவான போதும் காந்தி தன் நிலைப்பாட்டினை மறுபரீசலனை செய்யவில்லை.ஒருவர் மகாத்மாகவாக இருக்க முயலலாம், தேசமே இருக்க முயன்றால் அது எப்படி முடியும். காந்தி அறிவித்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது, பலமுறை மக்கள் காந்திக்கு ஜே என்று கோஷமிட்டபடி தாங்கள் செய்ய நினைத்ததை செய்தார்கள். எப்போதும் எல்லாம் அவர் கட்டுப்பாட்டில் இருந்தது என்ற நிலை இல்லை. காங்கிரசில் காந்திக்கு இருந்த செல்வாக்கு யாருக்கும் இல்லை எனினும் காங்கிரஸ் அவரது கைப்பாவையாக செயல்பட மறுத்தது.இப்படி அவர் காலத்திலேயே காந்தியம் முழுமையாக ஏற்கப்படவில்லை. காந்தி மதிக்கப்பட்ட அளவிற்கு பின்பற்றப்பட்டவில்லை. அப்படியிருக்க இன்று அதே காந்தியம் தீர்வு, கிராம சுயராஜ்யம்தான் தீர்வு என்றெல்லாம் ஜெயமோகன் எழுதுகிறார். வேடிக்கையாக இல்லையா.

இன்று எந்த தகப்பனும் காந்தி போல் நடக்கவிரும்புவானா, தன் மகனுக்கு மேலைப்பாணி கல்வி தேவையில்லை என்று மறுப்பானா என்று கேட்டால் என்ன பதில் கிடைக்கும்.காந்தியைப் புகழ்ந்து பேசலாம், எழுதலாம், அவர் போல் எளிய வாழ்க்கை வாழ்ந்து, வசதிகளைத் துறந்து, தன் குடும்பத்தினரிடம் அதைத் திணிப்பது நடைமுறைக்கு ஒத்து வருமா?. காந்தி காங்கிரஸ் தலைவர் மட்டுமல்ல, தொண்டர்களும் எளிய வாழ்க்கை வாழ வேண்டும் என்றார். காந்திய மாற்றுகள் அனைத்து சுயத் தெரிவான மாற்றத்திலிருந்து துவங்குகின்றன. பிடாகை அமைப்பை புத்துயிருப்பு செய்தால் போதும் காந்தியின் கிராம சுயராஜ்ய கிராம முறை மீண்டும் தளைத்து விடும் என்பதல்ல உண்மை, நாஞ்சில் நாட்டில் வாழ்பவர்கள் அனைவரும் காந்திய விழுமியங்களின் படி வாழ்வதே காந்தியம், அதுவே காந்தி கண்ட கிராம சுயராஜ்யத்திற்கு வழிவகுக்கும் என்பதுதான் காந்திய உண்மை . அன்று 1909ல் இந்தியா இந்த அளவு நகர்மயமாகவில்லை, 1948ல் , 1909ஐவிட அதிகமாக நகர்மயமாகியிருந்தது, இன்று அதை விட அதிகம். இன்று ஒவ்வொரு நகரின் ecological footprintஐ கணக்கிட்டுப் பார்த்தால் நகர்மயமாதல் எந்த அளவிற்கு வளங்களை பயன்படுத்துவதில் கொண்டு போய் விட்டிருக்கிறது என்பது தெரியும். இதற்கான தீர்வு என்ன?. நகரங்களில் மக்கள் தொகையை குறைப்பதா இல்லை நகர்மயமாதலை நிறுத்துவதா?. இப்படி சிக்கலான கேள்விகள் பல உண்டு. தில்லியில் உள்ள துருப்பிடிக்காத இரும்புத் தூண் குறித்து ஆராயலாம், அதில் உள்ள தொழில் நுட்ப சிறப்பை வியக்கலாம்.(இது குறித்து விரிவாக எழுதிய பேராசிரியர் பாலசுப்பிர்மண்யம்,ஐஐடி கான்பூர், அண்மையில் மரண்மடைந்தார்).

ஆனால் இன்றும் ஒரு இரும்புத் தூணை நிறுவ வேண்டும் என்றால் அன்று இருந்த சமூகத்தை, அதில் இருந்த தொழில்னுட்பவினைகர்களை மீண்டும் உருவாக்க வேண்டும் அதுதான் சரி என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும். அது போல்தான் ஜெயமோகன் சொல்லும் தீர்வும். இன்று கிட்டதட்ட எதுவும் சரியில்லை, அன்று அதாவது பிரிட்டிஷ் வருகைக்கு முன் கிட்டதட்ட எல்லாம் சரியாக இருந்தது,பஞ்சமே இல்லை, கிராம குடியரசுகள் சிறப்பாக இருந்தன என்று எழுதுவது ஒரு பொற்காலம் குறித்த பிரமையில் எழுதப்படுவது. ஆர்யத்தின் வருகைக்கு முன் தமிழ் சமூகம் சீரும் சிறப்புமாக இருந்தது, ஆர்யம் வந்து அதை பாழாக்கிவிட்டது என்று எழுதினால் அதை ஜெயமோகன் நிராகரிப்பார்.ஆனால் அவரது வரலாற்றுப் பார்வையும் ஒரு கிட்டதட்ட பொற்காலம், அந்நியர் வருகை, அவர் ஆதிக்கம் அதனால் சீரழிவு என்றுதான் இருக்கிறது. தரம்பாலின் ஆய்வுகள் முக்கியமானவை, அவற்றின் மீதான விமர்சனங்களும் முக்கியமானவை. ஒருவிதத்தில் பார்த்தால் ஜெயமோகன் முன்வைப்பதும் ஒரு அமைப்பு-தொழில் நுட்பத் தீர்வு. அது நிலவிய காலத்தில் இருந்த சமூக உறவுகள், அதில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல பேசப்படுவதில்லை.

அன்று இருந்த மக்கள் தொகை எவ்வளவு, அன்று தனி நபர்களுக்கு எத்தகைய உரிமைகள் இருந்தன, நில உடமை எப்படி இருந்தது, உற்பத்தி எப்படி பகிர்ந்து கொள்ளப்பட்டது போன்றவை
குறித்தும் விவாதிக்க வேண்டும். இன்று அறிவியல் தொழில் நுட்பம் குறித்து விமர்சிக்கும் போது, பசுமைப் புரட்சி குறித்து விமர்சிக்கும் போது அவற்றை உற்பத்தியை பெருக்க உதவின
என்ற ஒற்றைப் பார்வையில் நியாயப்படுத்துவது எப்படி விமர்சிக்கப்படுகிறதோ அதே போன்ற அணுகுமுறையைத்தான் பிரிட்டிஷ் வருகைக்கும் முந்தைய சமூகம் குறித்து விவாதிக்கும்
போதும் கைக்கொள்ள வேண்டும். இத்தகைய கேள்விகள் எழுப்பட்டுள்ளன. கெயில் ஒம்வேத்,சென்னை MIDS பேராசிரியர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் இப்படி கேள்விகளை
எழுப்பியுள்ளனர். 18ம் நூற்றாண்டு இந்தியாவை பிரதிநிதிப்படுத்தும் கிராமத்தை செட் போட்டு திரைப்படத்திற்காக உருவாக்கலாம்,கதை எழுதலாம் - அதுதான் சாத்தியம்.அன்றைய பொற்கால அமைப்பை இன்று அப்படியே மீளுருவாக்கம் செய்து நடைமுறைப்படுத்த முடியாது.ஆயிரக்கணக்கான பக்கங்களில் நாவல் எழுதுவது எளிது, ஒரு நிர்வாகக் கட்டமைப்பினை உருவாக்கி திறம்பட செயல்பட வைப்பதுதான் கடினம். எளிமைப்படுத்தப்பட்ட புரிதல்களை முன்வைக்கும் இலக்கியவாதிகள்,எழுத்தாளர்களை விட இத்தகைய சவால்களை திறம்பட எதிர்கொண்டு சரியானவற்றை இன்று செய்யும் நிர்வாகிகள்,திட்டமிடுபவர்கள்தான் இந்தியாவிற்கு அதிகம் தேவை.

அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள், செயல்புரிகிறார்கள்.அதன் பயனை அவர்கள் அனுபவிக்காவிட்டாலும் அடுத்த தலைமுறையினர் அனுபவிப்பர்.அத்தகைய ஒருவருக்கு தாஸ்தாவஸ்கியும், காப்காவும்,அசோகமித்திரனும் கேள்விப்படாத பெயர்களாக இருக்கலாம்.ஆனால் இன்று இதைச் செய்தால் அடுத்தப் சில பத்தாண்டுகளில் அதன் பலன் இதுவாக இருக்கும், அதனால் இன்னென்ன நடக்கும், அதன் விளைவாக இந்த துறைகளில் இந்தியா இப்படி இருக்க வாய்ப்புண்டு என்பது தெரியும்.அவர் அதற்காக செய்ய வேண்டியதை செய்வார்.அதற்கான நிதி ஆதாரத்தினை உறுதி செய்வார். அதை செயல்படுத்த நிர்வாக அமைப்பினை உருவாக்குவார். இத்தகைய முயற்சிகளை படாகை அமைப்போ அல்லது மாநில அரசோ செய்ய முடியாது. காந்தியம் பேசிக் கொண்டே விமானத்தில் பறப்பதும், வசதியான வாழ்க்கை வாழ்வதும் எளிது.ஆனால் அதற்கு தோதாக யாராவது விமான நிலையம அமைக்க வேண்டும்,உள்கட்டுமானத்தினை பெருக்க வேண்டும்.அப்போதுதான்
நேருக்களை,மல்கோபோனிஸ்களை,அம்பேத்கர்களை திட்டிக் கொண்டு நவீனத்தின் சொகுசுகளை அனுபவித்துக் கொண்டு, நகர்ப்புறத்தில் வாழ்ந்து கொண்டு அந்தக் கால இந்தியாவின் பெருமைகளைப் பேச முடியும்.

வலுவான மைய அரசு, வலுவான மாநில அரசுகள் என்பது பஞ்சாயத்து அளவில் அதிகார பரவலாக்கம் என்பதற்கு எதிரான/முரணான ஒன்றல்ல.ஐரோப்பிய நாடுகளில் அப்படி இருப்பதை
காண முடியும்.ஸ்விஸ் ஒரு சிறந்த உதாரணம்.கிராம/பஞ்சாயத்து அளவில் இப்போது யாருக்கும் அதிகாரமே இல்லை என்பது பொய்.கூத்தப்பாக்கம் போன்ற மாதிரிகளும் இருக்கின்றன. ரலேகான் சித்தியை மட்டும் குறிப்பிட்டு விட்டு கூத்தப்பாக்கம் போன்றவற்றை குறிப்பிடாமல் இங்கு எல்லாமே மோசம் என்ற ரீதியில் எழுதுவது மலினமான பொய்ப் பிரச்சாரம்.இலக்கிய விமர்சனம் என்ற பெயரில் அப்படிப்பட்ட பிரச்சாரங்களை செய்த ஜெயமோகன் காந்தியத்தை தூக்கிப் பிடிக்கவும் அதையே செய்கிறார். இந்தியாவில் நிர்வாக அமைப்பில் பிரச்சினைகள் உள்ளன, அதைக் களையமுயற்சி செய்ய வேண்டும். தீர்வு இருப்பதை குலைத்து விட்டு 18/17ம் நூற்றாண்டில் இருந்ததை மீண்டும் பரிசோதித்துப் பார்ப்பதல்ல. காந்தி பென்சிலின் வேண்டாம் என்றார், தரம்பால் ஆய்ந்த பழைய இந்தியாவில் அச்சு இயந்திரமே இல்லை.ஆகவே பென்சிலின் வேண்டாம்,அச்சு யந்திரம் வேண்டாம் என்றா சொல்ல முடியும். ரலேன் சித்திகள் உருவாக அதிகார-நிர்வாக அமைப்பில் தடைகள் இருந்தால் அதைக் களைய முயலவேண்டும். சூரத் தொத்து நோயால் பாதிப்புற்று, மீண்டது. அது எப்படி சாத்தியமாயிற்று. இன்றுள்ள குறைகள் நமக்குத் தெரிகின்றன,நாம் நிகழ்காலத்தில் இதை உணர்கிறோம், அனுபவிக்கிறோம்,அறிகிறோம் எனவே இதை எப்படி சரி செய்வது என்று பேச முடியும். கிடைத்த ஆவணங்களிலிருந்து எழுதப்படும் வரலாற்றினை வைத்துக் கொண்டு அன்று ஆகோ ஒகோ என்று இருந்தது, இன்றுதான் எல்லாம் மோசம் என்று சொல்வதில் அர்த்தமில்லை.அதே போல் அறிவியல் தொழில் நுட்பம் குறித்து ஏற்கனவே எழுதியதை மறு சுழற்சி செய்வதிலும் அர்த்தமில்லை. அறிவியல்-தொழில்னுட்பத்திற்கும், ராணுவம்/போர் புரிவதற்கும் உள்ள உறவு/தொடர்பு நவீன மேற்கு உருவாக்கியதல்ல. பண்டைய காலத்திலேயே
அது இருந்திருக்கிறது.அதற்கு ஒரு உதாரணம் ஆர்கிமிடியஸ் (4)

இன்று தக்க தொழில்னுட்பத்தினை செயல்முறைப்படுத்தவும் பல சமயங்களில் நவீன அறிவியல் தொழில் நுட்பம் தேவை.உதாரணமாக சூரிய சக்தி கொண்டு மின் உற்பத்தி செய்வது, வீடுகளில் அதைக் கொண்டு கொதி நீர் பெறுவது, சூரிய ஒளி/சக்தியை பயன்படுத்தும் தெரு விளக்குகளை நிறுவுவது என பலவகையில் நாம் சூரிய ஒளியை பயன்படுத்த முடியும். இதில் உள்ள
ஒரு பிரச்சினை அவற்றின் செயல் திறன். இந்தச் செயல் திறனை அதிகரிக்க ஆய்வுகள் செய்யப்படுகின்றன. அடுத்த தலைமுறை சூரிய ஒளி விளக்குகளுக்கு தேவையான PV cells
தயாரிக்க நானோடெக்னாலஜி உதவும் என்பதால் அதில் ஆய்வு நடக்கிறது. அதற்கு பெரும்பணம் தேவை. இந்தியாவில் நானோடெக்னாலஜி மிஷன் என்ற பெயரில் செய்யப்படும்
திட்டத்திற்கு பல நூறு கோடி ரூபாய் தேவை, அரசு செலவு செய்கிறது. அதையெல்லாம் செய்ய ஐஐடிக்கள் தேவை, ஐஐஎஸிகள் தேவை. அது போல் சூரிய ஆற்றலை பயன்படுத்தும் செயல்திட்டதிற்கு மத்திய அரசு பல ஆயிரம் கோடிகளில் செலவு செய்யவிருக்கிறது. இவற்றின் பலன் தக்கலையிலும், உதய்பூரிலும், விருதுனகரிலும் சூரியஒளியை பயன்படுத்தி பல தேவைகளை அதிக செயல்திறனுடன் பூர்த்தி செய்ய முடியும் என்பதாக இருக்கும். இதற்காக பல ஆண்டுகள் நிதி ஒதுக்கி, அறிவியல் தொழில் நுட்பத்தில் முதலீடு செய்து, தொழில் நுட்பத்தை பரவலாக்க மான்யம் கொடுத்து, தொழில் முனைவோருக்கு சலுகை கொடுத்து அரசு செய்தால் பலன் கிடைக்கும். ஜப்பான் (சூரிய ஒளி ஆற்றல் பயன்பாடு), ஜெர்மனி (காற்றாலை மூலம் மின் உற்பத்தி) உட்பட பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அந்த இரு நாடுகளிலும் அரசு முன்னெடுத்து முதலீடு செய்து ஊக்குவிக்கதால் அத்தொழில் நுட்பங்கள் அங்கு பரவலாக நடைமுறைக்கு வந்தன,அது தொடர்புடைய தொழிற்துறை, அறிவியல் துறைகள் வளர்ந்தன. எந்த படாகை அமைப்பால் இதைச் செய்ய முடியும் அல்லது எந்த ‘திருவிதாங்கூர்’ அரசால் இதைச் செய்ய முடியும்.இன்னும் சொல்வதென்றால் அடுத்த தலைமுறை(கள்) உயிரியஎரிபொருள் உற்பத்திக்கு இன்று செயற்கை உயிரியல்/உயிரியல் தொழில்னுட்பத்தில் செய்யப்படும் ஆய்வுகள் அடிகோலும் என்று கருதப்படுகிறது. இதுதான் யதார்த்தம். இதை விடுத்து அறிவியல் தொழில் நுட்பம் குறித்த நிர்யணவாத கருத்துக்களையே முன்வைப்பதில் அர்த்தமில்லை. நானோடெக்னாலஜி இல்லாமலும் சூர்ய ஆற்றலை பயன்படுத்தலாம், செயல்திறன் குறைவாக இருக்கும். அதனால் விலை அதிகம்,பயன்பாடு குறைவு என்ற நிலை ஏற்படும் போது அரசு பயன்படுத்துவோருக்கு/ உற்பத்தியாளருக்கு மான்யம்/சலுகை வழங்காவிட்டால் பயன்பாடு குறைந்து விடும். ஆரல்வாய்மொழியில் காற்றாலைகள் அத்தனை இருக்க காற்று மட்டும் காரணமில்லை.அரசின் கொள்கைகளும் காரணம். மாநில அளவில், தேசிய அளவில் கொள்கை வகுக்காவிட்டால் அவை அங்கே இருந்திரா என்று கூட சொல்ல முடியும். எனவே ஜெயமோகனின் கனவுக் கிராமக் குடியரசு சூரிய ஆற்றலை செயல்திறனுடன் பயன்படுத்த தில்லியில் உள்ள அரசு முன்னிறுத்தும் அதி நவீன நானோடெக்னாலஜி தேவை. அதற்கு அ.கா.பெருமாளின் ஆய்வு பயன்படாது.தரம்பாலின் செங்கல்பட்டு ஆய்வுகள் பயன்படாது.

என்னைப் பொருத்தவரை காந்தியைப் படித்து வியக்கலாம், அப்படியே பின்பற்றத் தேவையில்லை, அது கூடாது. காந்தியத்திலிருந்து சிலவற்றை கற்றுக் கொள்ளலாம், எடுத்துக் கொண்டு பயன்படுத்தலாம், சில விமர்சனப் பார்வைகளை கருத்தில் கொள்ளலாம். காந்தியின் ஆதர்ச ஹிந்த் சுவராஜ் சாத்தியமற்ற ஒன்று. அது அன்றும் தேவைப்படாத ஒன்று,இன்று அது ஒரு வேடிக்கையான முன்மாதிரி அவ்வளவுதான். எனவே நான் ஒரு போதும் உண்மையான காந்தியனாக இருக்க மாட்டேன் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

முற்றும்

(1)பிற தொழிலதிபர்கள் பிரிட்டிஷ் அரசை பகைத்துக் கொள்ளவிரும்பவில்லை. எனவே காங்கிரசுக்கு உதவினாலும் தீவிர ஆதரவாளர்களாக மாறவில்லை.மாறாக ஜம்னாலால் பஜாஜ் காந்தியையும், காந்தியத்தையும் ஏற்றவர்,தீவிரமாக ஆதரித்தவர்.போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார்.இறுதிவரை காந்தியின் சீடராக, சுவீகார புத்திரனாக இருந்தார். காந்தி விரும்பவில்லை என்பதால் ஒரு துணி ஆலையை வாங்க மறுத்தார். கதரை அணிந்தார். தன் சொத்தில் 75%த்தினை காந்தி அங்கீகரித்தவறிற்கு எழுதிவைத்தார். வணிகத்தில் நேர்மையை கடைப்பிடித்தார்.அவர் மறைவிற்குப் பின் அவர் நினைவினைப் போற்றும் வகையில் நடந்த கூட்டத்தில் குழுமியிருந்த வணிகர்கள், தொழிலதிபர்களிடம் காந்தி கூறினார்
““By all means,carry on your business as Jamnalal did but also follow his tradition, that is, conduct your business in a religious or charitable spirit. Earn what you can through rightful means and spend it on sacred purposes—not on your comforts or luxuries.”

GEOFFREY JONES-Jamnalal Bajaj, Mahatma Gandhi, and the Struggle for Indian Independence- Cambridge:HBS-9-807-028 (2007)
(2)Einstein and the Indian minds: Tagore, Gandhi and Nehru -Rasoul Sorkhabi-CURRENT SCIENCE, VOL. 88, NO. 7, 10 APRIL 2005-
Pp 1187-1191
(3) D.Cole Book Review :GANDHI’S WAY: A HANDBOOK OF CONFLICT RESOLUTION. By Mark Juergensmeyer. University of California Press 2005 in JOURNAL OF LAW & RELIGION Vol. XXI Pp 101-104 2006
(4) ’Archimedes’ transformation of mechanics into a rigorous geometrical s ience emerged as the paragon of scientific rigor for early modern natural philosophers such as Galileo and Descartes. His intellectual triumphs include the formulation of the center of gravity and its use in deriving the lever the determination of the quadrature of a parabola; the discovery of specific gravity, or density; the articulation of fundamental principles of hydrostatics;and, finally, the invention of the hydraulic screw pump.Yet, from a late medieval or early Renaissance perspective,Archimedes’fame derived from his status as the most celebrated military engineer of antiquity.This occurred in spite of Plutarch’s snobbish effort to downplay such a practical orientation and instead to portray Archimedes as an indifferent Platonic idealist. The mathematician’s military reputation was sealed by his design and coordination of Syracuse’s defensive siegecraft during the Roman siege of the Second Punic War, when that city-state sided with the invading Carthaginian forces under Hannibal.The defensive campaign nonetheless concluded catastrophically because the Romans unexpectedly attacked Syracuse during a religious
festival. In the subsequent sack of the city, a Roman soldier murdered Archimedes. Nevertheless, Archimedes’ defensive system shattered Rome’s initial frontal assaults from both land and sea, and transformed their siege into a frustrating blockade’
P4 THE HEIRS OF ARCHIMEDES Science and the Art of War through the Age of Enlightenment-Brett D. Steele and Tamera Dorland, editors-The MIT Press-2005
(5) ஏற்கனவே குறிப்பிட்டபடி ஜெயமோகனின் நூல் வெளியானால் அதை விமர்சிக்கலாம் என்று நினைக்கிறேன்.மற்றப்படி அவர் காந்தி/காந்தியம் குறித்து எழுதியவற்றை மீண்டும் மீண்டும் விமர்சிக்க விரும்பவில்லை.
(6) இது எழுதப்பட்டது 16.12.2009.திண்ணைக்கு அனுப்பும் முன் 17 திசம்பர் 2009ல் ஜெயமோகன் எழுதியுள்ளதைப் படித்தேன் http://www.jeyamohan.in/?p=5674
அமுல் இந்திய சந்தைக்கு உற்பத்தி செய்கிறது.அதற்கு பெரிய அளவில் பாலை பதப்படுத்துவது,பாலிலிருந்து பலவற்றை தயாரிப்பது போன்றவை மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு நிர்வாக அமைப்பு,பல தொழிற்சாலைகள், விநியோக அமைப்பு,விளம்பரம் செய்ய நிதி உட்பட பல தேவை. கிராமங்களில் பாலைக் காய்ச்சி வெண்ணை எடுப்பது, பால்கோவா தயாரிப்பது சிறிய அளவில் செய்யலாம்.ஆனால் அமுல் முற்றிலும் வேறு மாதிரியான உற்பத்தி முறை. இங்கு கிராமங்கள் பாலை விற்கின்றன. அதன் பின் அதைப் பதப்படுத்துவதும், பொருட்களை தயாரிப்பதும் உற்பத்தி செய்யும் கிராமங்களில் நடப்பதில்லை. பால் பல கிராமங்களிலிருந்து பெறப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. விற்பனையில் குறிப்பிட்ட சதவீதம் நகர்ப்புற/தேசிய சந்தைக்கு. இது எப்படி காந்திய கிராமக் குடியரசு உற்பத்தி முறையாகும். இது நுகர்வியத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி-விநியோக முறை. அமுல் குறித்து நான் முந்தைய பகுதிகளில் எழுதியுள்ளேன். மகளிர் சுய உதவிக் குழுக்கள்,அமுல் போன்றவை கூட்டுறவு/கூட்டுச் செயல்பாடுகளுக்கு உதாரணம். காந்தியத்தில் கூட்டுறவிற்கும்/கூட்டு செயல்பாட்டிற்கும் இடமுண்டு, ஆனால் எல்லா கூட்டுறவு முயற்சிகளும்/கூட்டுச் செயல்பாடுகளும் மைய அதிகாரத்திற்கு எதிரானவை அல்லது கிராம சுயராஜ்யத்திற்கு உதவுபவை அல்லது காந்திய விழுமியங்களுக்கு ஒத்திசைவாக உள்ளவை என்று கொள்ள முடியுமா.திராட்சை வளர்ப்போர் கூட்டுறவு அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் வைன் தயாரித்து தேசிய அளவில் விற்றால் அதுவும் காந்தியத்திற்கு இசைவானதா. அதில் என்ன சுயக்கட்டுப்பாடு விழுமியமாக இருக்கிறது அல்லது இருக்க முடியும். ஹிந்துஸ்தான் லீவரின், ஐடிசியின் பொருட்களை விற்கும் சுய உதவிக் குழுக்கள் எத்தகைய உற்பத்தி-நுகர்வு கலாச்சாரத்தைச் சார்ந்தவை.அவை வேம்பினை அடிப்படையாக கொண்டவற்றை விற்காமல் லக்ஸை விற்கும் போது அதில் என்ன காந்தியம் இருக்கிறது. யுனுஸ் வங்கதேசத்தில் நடைமுறைப்படுத்திய சுய உதவி குழு முறை, இந்தியாவில் உள்ள சுய உதவிக்குழுக்ளின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களும் உள்ளன.அவற்றை ஜெயமோகன் அறிவாரா. அவர் இன்று எழுதியுள்ளதில் பல தகவல்கள் தவறானவை. இன்னும் பல முன்னர் அவர் எழுதியவற்றிற்கு முரணானவை. இப்படி முன்னுக்குபின் முரணாக எழுதுபவரிடம் எத்தகைய புரிதலை எதிர்பார்க்க முடியும்.திண்ணையில் முந்தைய பகுதிகள்

ஒன்று (1A) http://www.thinnai.com/?module=displaystory&story_id=20911193&edition_id=20091119&format=html
ஒன்று (1B) http://www.thinnai.com/?module=displaystory&story_id=20911194&edition_id=20091119&format=html
இரண்டு - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20911292&edition_id=20091129&format=html

Labels: , , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு