ராஜனகுறையின் கட்டுரைக்கு ஒரு எதிர்வினை

ராஜனகுறையின் கட்டுரைக்கு ஒரு எதிர்வினை
ராஜன்குறையின் கட்டுரை இங்கே.
என் எதிர்வினை

1) இது வெறும் அரசியல்-தத்துவப் பிரச்சினை மட்டுமல்ல.சர்வதேச சட்டம்-சர்வதேச உறவுகள்/அரசியல் குறித்த பிரச்சினையும் கூட. Michael Hardt & Antonio Negri,Giovanni Arrighi உட்பட பலர் எழுதியதையும் நாம் படித்து விவாதிக்க வேண்டும்,
அவற்றின் மீதான் விமர்சனங்களுடன். மேலும் Giovanni Arrighi எழுதிய நூல் (நான் படிக்கவில்லை) மதிப்புரைகளை வைத்துப்பார்க்கும் போது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட சித்திரத்தையே தருகிறது. மார்க்ஸியரிடையே இன்று ஏகாதிபத்தியம் குறித்த விவாதம்
தொடர்கிறது. லெனின் எழுதியது இன்று பொருந்துமா, ரோசா லக்சம்பர்க்கின் விளக்கம் இன்றைக்கு சரியானதாக உள்ளதா, அமெரிக்கஏகாதிபத்தியம் வலுவிழந்தாலும் தொடர்ந்து ஏகாதிபத்தியமாக அதை கருத வேண்டுமா என்றெல்லாம் கேள்விகள். இதையெல்லாம்
தொகுத்து அறிவது கூட எளிதாக இல்லை. Michael Hardt & Antonio Negri எழுதியுள்ள Multitude இன்னொரு முக்கிய நூல்.

2) தேசத்திற்க்குப் பின் post-nation என்றெல்லாம் இன்று பேசப்பட்டாலும் தேசம்,தேசிய அரசு வலுவிழந்து விடவில்லை, விடாது.ஐரோப்பிய ஒன்றியம் போன்ற தேசங்களை உள்ளடக்கிய அமைப்பு இன்று பெரும் சக்தி. அது நாடுகளிடையே ஒத்திசைவை
கொண்டு வருகிறது.அது அவ்வளவு எளிதாக இல்லை. இன்னும் தேசிய அடையாளத்தை பேண விரும்புவோர் பொருளாதார நலன் என்ர ஒரே காரணத்திற்காக தேசிய அடையாளம், தேசிய அரசு வலுக்குன்றல் போன்றவற்றை ஏற்கத் தயாராக இல்லை. ஒற்றைச்
சந்தையாக ஐரோப்பா உருவானாலும் அகதிகள் பிரச்சினை போன்றவற்றில் பழைய போக்குகள் தொடர்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
தேசிய அடையாளத்திற்கு மாற்றாக ஐரோப்பிய அடையாளமா இல்லை அத்துடன் சேர்த்து ஐரோப்பிய அடையாளமா என்ற கேள்வி ஒரு புரமிருக்க சாவேஸ் மீண்டும் 70/80களில் இருந்த மூன்றாம் உலக, ஏகாதிபத்திய எதிர்ப்பு அடிப்படையில் நாடுகளை அணி திரட்ட முயல்கிறார்.உலக பொருளாதார நெருக்கடி உலக வங்கி,சர்வதேச நிதியம் போன்றவற்றின் நிர்வாகத்தை ஜனநாயகப்படுத்தவும், வாஷிங்க்டன் கருத்தொற்றுமையின் பொருத்தப்பாட்டை கேள்விக்குட்படுத்தவும், பொருளாதாரம்,நிதி குறித்த சந்தைமையவாதத்தினை நிராகரிக்கவும்
இன்று முயற்சிகள் நடக்கின்றன. இதைச் செய்யும் போது வளர்ச்சியுறும் நாடுகள் தங்கள் இறையாண்மையை வலுப்படுத்தும் முயற்சி இது என்பதை அறிந்தே செய்கின்றன.உலகமயமாதலுக்கான எதிர்ப்பு என்று இதைக் கொள்வதை விட தங்களுடைய கொள்கை வகுக்கும் அதிகார வெளியை அதிகரிக்கச் செய்யும் முயற்சி என்று இதைக் கருத முடியும். இதன் பொருள் உலக முதலாளியம் மாறிவிடும் என்பதல்ல, மாறாக தேசிய பூர்ஷவாவர்க்கமும், அரசுகளும் தங்கள் முக்கியத்துவத்தை உணர்த்த விரும்பும் முயற்சிகள் இவை. அதிகாரபகிர்வு குறித்த முயற்சிகள். இதை அறிந்துதான் இன்று G 8 நாடுகள் G 20 போன்ற ஒன்றை அமைக்கின்றன. அந்த இருபதில் இந்தியாவும்,சீனாவும் அடங்கும். 1980களில் வலுப்பெற்ற நவதாராளவாதம் இன்று வலுக்குன்றி உள்ளது, மறைந்து விடவில்லை.
பல அரசுகள் அதை உள்வாங்கிவிட்டன. அதற்கான எதிர்ப்பு வலுத்துவரும் போது அந்த எதிர்ப்பு பல தளங்களிலும் இருக்கிறது. தேசிய அளவில்-பிராந்திய அளவில்-உலக் அளவில். இந்த எதிர்ப்பில் மார்சியர்களுக்கும் இடமுண்டு, ஆனால் அவர்கள்தான் இதில் முண்னனி படையினர் என்று சொல்ல முடியாது. இங்கு கவனிக்க வேண்டிய இன்னொன்று இடதுசாரிகளோ, மார்க்ஸியர்களோ இன்று தங்களுத்தான் பிறரை வழி நடத்த உரிமை உண்டு என்று கோர முடியாது. பட்டாளி வர்க்கம்தான் எதிர்ப்பினை முன்னெடுக்கும், அதன் போக்கை தீர்மானிக்கும் என்று இன்று மேலாண்மையை நிறுவ முடியாது. ஒரு பரந்த இயக்கங்களின் கூட்டமைப்பு போன்றவை இன்று செயல்பாட்டிற்க்கான வடிவங்கள். பாரம்பரிய/லெனிய அமைப்பு வடிவங்கள் கொண்டு இன்று ஒரு பரந்த இயக்கத்தை கட்டமைக்க முடியாது. [ Multitudeல் இந்த அமைப்பு முறைகள் குறித்து ஒரு அத்தியாயம் இருக்கிறது).எனவே கருத்தியல் மற்றும் அமைப்பு ரீதியான மேலாண்மையை இன்று இடதுசாரிகள் கோரினால் அது எடுபடுவது கடினம். எனவே தேசிய இனப்பிரச்சினை/தேசிய விடுதலை என்றால் அது இடதுசாரி தலைமையில்தான் என்று அட்ம் பிடித்தால் அது சரிவராது.

3) உலகெங்கும் பழங்குடியினர் இயக்கங்கள் பாரம்பரிய சுய நிர்ணயம்,தேசியவாதம் குறித்த புரிதல்களை கேள்விக்குட்படுத்துகின்றன.
அடையாள அரசியலின் இன்னொரு வெளிப்பாடு என்ற அளவில் இதை அணுகக் கூடாது. மாறாக பழங்குடியினர் இயக்கங்கள் எழுப்பும் கேள்விகள் பண்பாட்டு அடையாளம், அரசியல் அதிகாரம், சுய நிர்ணயம், இயற்கை/மூல வளங்களைப் பகிர்ந்து கொள்தல் குறித்த
பலவற்றை குறித்ததவை. இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் பழங்குடி இயக்கங்கள் முன்னிறுத்தும் சுய நிர்ண்யம் என்பது என்ன என்பது. இங்கு அவை தேசிய இனம் என்ற சொல்லாடலை முன்வைத்துதான் சுய நிர்ணயம் பேச வேண்டும் என்ற கருத்தை
கேள்விக்குட்படுத்திவிட்டன. இந்த அடையாள அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

4)’தேசிய அரசுகளே முக்கியத்துவத்தை விரைவில் இழந்து வரும் நிலையில் இரத்தத்தைப் பெருக்கி உயிர்களைத் தியாகம் செய்து இன்னொரு அரசையும் இராணுவத்தையும் ஏன் உருவாக்க வேண்டும் என்றே யோசிக்க வேண்டும்’
தேசிய அரசின் முக்கியத்துவம் இல்லாமல் போகாது.சர்வதேச அரசியலில் அவற்றின் வலுக்குறைந்தாலும் அவைதான் தவிர்க்க முடியாத சக்திகள். இன்னொரு அரசு தேவையில்லை என்று யார் தீர்மானிப்பது. இதுதான் சிக்கலான கேள்வி, ஏனெனில் ஒரு தேசிய அரசு/தேசம் வலுக்குன்றி சிதறும் நிலை உருவானால் அங்கு அந்த சிதறலையும் ஆதரிக்க சில சக்திகள் தயராக இருக்கும். அதை தடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?.

5) எந்த ஒரு தேசத்தினுள்ளும் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் அல்லது தனித்த அடையாளம் கொண்டோர் தங்கள் கலாசார உரிமைகளுக்காகவும்,
நிர்வாக அளவில் தன்னாட்சிக்கும் (autonomy) போராடலாமேயொழிய தனி தேசிய அரசுதான் குறிக்கோள் என்று முனைவதில் எந்த பொருளுமில்லை.
இந்த வாதம் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட வாதம்.தன்னாட்சிதான் தீர்வு அல்லது தேசிய அரசுதான் தீர்வு என்று பொத்தாம் பொதுவாக கூற முடியாது.

6)வரலாறு நாம் எதிர்ப்பார்பதை விட தந்திரமானது.1990களில் சோசலிசம்/கம்யுனிசம் ஒழிந்தது என்றார்கள்.புத்தாயிரத்தில் உலகமயமாதல் வெல்ல முடியாத ஒன்று என்றார்கள். இன்று?. லத்தின் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இந்தியா,சீனாவின் வளர்ச்சி உட்பட பல போக்குகள்/மாற்றங்கள் புதிய சாத்தியக்கூறுகளைக் காட்டுகின்றன. இவை எங்கு போய் முடியும். 1970களில்,1980களில் இருந்த சோசலிசம் தோற்றது போல் லத்தின் அமெரிக்க மாற்றங்களும் தோற்குமா?

7) தமிழவன் உயிரோசையில் எழுதியதை நான் விமர்சிக்கிறேன். இன்று முன்னிறுத்தும் முன் தமிழவனின் அக்கட்டுரைகளில் ஒரு லிபரல் மனப்பான்மை கூட வெளிப்படவில்லை. சராம்சவாத கண்ணோட்டம்தான் இருந்தது. அடையாள அரசியலை ஒற்றை பரிமாணமாக அல்லது ஒர்றை அடையாளத்தை மட்டும் முன்னிறுத்துவது தேவைதானா. இன்று தேவை அண்ணா முன்வைத்த அடையாள அரசியலா அல்லது காஸ்மோபோலிடனிசமா?. பின்னதில் முன்னதும் அடங்குமா?

Labels: , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு