காந்தி, காந்தியம்,ஜெயமோகன் - 3

பகுதி 1

பகுதி 2

‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1
III

காந்தியத்தின் இன்றைய பொருத்தப்பாடு

பல சமயங்களில் காந்தி எழுதியவை அப்போது எழுந்த கேள்விகள் ,சர்ச்சைகளுக்கான பதில்கள் அல்லது நடைமுறையில் முன்வைக்கப்பட்ட தீர்வுகள். மேலும் அவரது முக்கியமான நூலான ஹிந்த் ஸ்வராஜ் சிலவற்றை முன் வைத்தாலும், கோட்பாடு ரீதியாக அல்லது கருத்தியல் ரீதியாக அதையெல்லாம் வளர்த்தெடுத்து பின்னர விரிவாக அவர் எழுதவில்லை. காந்தியம் என்றால் என்ன- அது கருத்தியலா, வாழ் நெறியா, இரண்டும் கலந்த, ஒன்றொடு ஒன்று முரண்படாகக்கூடாத ஒன்றா என்ற கேள்வி எழுகிறது. பாலி(யஸ்டர்)கதர் கதரா என்பதிலிருந்து அகிம்சை இயக்கம் என்பதை எப்படி வரையரை செய்வது என்று பல கேள்விகள் இருக்கின்றன.

காந்தியத்தின் இன்றைய பொருத்தப்பாடு என்று 2009ல் எழுதலாம், யாராவது 1979ல் எழுதியிருக்கக் கூடும், யாராவது 2020ல் எழுதக்கூடும்.பொருத்தப்பாடு என்று பார்த்தால் எதனுடன், எந்த விதத்தில், எப்படி என்று துவங்கி பலவற்றைப் பேச வேண்டும். காந்தி/காந்தியம் எந்த அளவிற்கு 1948ல் தேவைப்பட்டாரோ அதை விட அதிகமாகவே அன்று அம்பேத்கரும்,நேருவும் தேவைப்பட்டனர் .புதிதாக சுதந்திரமடைந்த ஒரு தேசத்திற்கு அவர்கள் இருவரும் ஆற்றிய பணிகள் மகத்தானவை. இந்தியா என்கிற குடியரசை உருவாக்கியதில் அவர்கள் வகித்த பங்கு மகத்தானது.அதற்கு அதாவது ஒரு குடியரசை உருவாக்க, அரசியல் சட்டத்தினை உருவாக்க காந்தியம் மட்டும் போதாது.1948ல் காந்தியும் தேவைப்பட்டார், காந்தி/காந்தியம் மட்டுமே போதும் என்ற நிலை இருக்கவில்லை.

இன்றைய உலகில் காந்தியம் தேவை அல்லது காந்தியத்தின் பொருத்தப்பாடு என்று பேசும் போது காந்திக்குப் பின் காந்தியம் குறித்த புரிதல்கள்/சிந்தனைகளையும் சேர்த்தே விவாதிக்க வேண்டும். சமயம் காந்தியத்தை நடைமுறைப்படுத்த முயன்றதில் கிடைத்த அனுபவங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஷுமாக்கர் இடை நிலை தொழில் நுட்பம் (intermediate technology) என்பதை முன்வைத்தார். அதை நடைமுறைப்படுத்துவதில் கிடைத்த படிப்பினைகளையும் விவாதிக்க வேண்டும்.

காந்தி vs அம்பேத்கர், காந்தி vs நேரு,காந்தியம் vs நவீனத்துவம் என்று வெறும் எதிர்-எதிராக பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. நேருவின் சில கோட்பாடுகள் 1960களில் தேவையாக இருந்திருக்கலாம், இன்று அவை தேவையற்றவை என்று கருத இடமுண்டு. இதே போல் 1947ல் அம்பேத்கர் முன் வைத்த சில யோசனைகள் (உ-ம் அரசு அனைத்து விவசாய நிலங்களையும் கையக்கப்படுத்தல், கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பயிரிடுவோராக அரசு அதை குத்தகைக்கு விடுவது) அன்றைக்கும் சரியான தீர்வுகள்தனா என்ற கேள்வி எழுகிறது.இன்றைக்கு அம்பேத்கரியத்தை ஆதரிப்பவர்கள் இதையெல்லாம் முழுமையாக ஏற்பார்களா என்பது சந்தேகம்தான். அது போல் காந்தியின் சிந்தனைகளை மதிப்பவர்கள் இன்றைக்கு காந்தியம் என்ற பெயரில் முன் வைக்கப்படுவது எதுவானாலும் அதை முழுமையாக ஏற்பார்கள் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை.ஏனெனில் அன்று பொருத்தமானதாகத் தோன்றியவை இன்று அர்த்தமற்றவை என்று கருதப்படலாம். ஆனால் ஹிந்த் ஸ்வராஜ் அத்தகைய நூல் அல்ல. அதை காந்திய சிந்தனையின் ஆணி வேர் எனலாம். இருப்பினும் அதையும் விமர்சனபூர்வமாகவே அணுக வேண்டும்.

நீ காண விரும்பிய மாற்றமாக நீ இரு என்று சொன்னவர் அவர். காந்தியம் என்பதை கோட்பாடாக கருதி பக்கம் பக்கமாக எழுதலாம். அதை நடைமுறைப்படுத்துவதில், நம் தனிப்பட்ட வாழ்வில், பொது வாழ்வில் அதைக் கடைப்பிடிப்பதில் உள்ள சவால்கள் அதிகம். பிறர் தேவைகளுக்காக உன் ஆசைகளை குறைத்துக் கொள் என்று சொல்லப்படும் போது யாருடையது தேவை, யாருடையது ஆசை என்று எப்படி தீர்மானிப்பது என்ற கேள்வி வருகிறது. உதாரணமாக எனக்கு ஒவியங்கள், ஒவியக்கலை மீது விருப்பம் அதிகம். ஒவியங்களை வாங்க,சேகரிக்க, அதை என் வீட்டில் வைத்து பார்த்து ரசிக்க எனக்குப் பணம் தேவைப்படுகிறது. அதற்காக சமரசங்கள் செய்து கொண்டாவது சிலவற்றை செய்வேன் அதன் மூலம் பணம் சம்பாதிப்பேன் என்று ஒருவர் சொன்னால் அதற்கு, காந்தியவாதி, அதை ஏன் தனிச்சொத்தாக உன் வீட்டில் வைத்து பார்க்க என்று சொல்கிறாய், ஒரு பொதுச்சொத்தாக ஒரு ஒவிய் கண்காட்சியகம் அமைக்க பிறருடன் சேர்ந்து நீ பணம் திரட்டலாமே, அதற்காக உழைக்கலாமே அதுவே சரியான காந்திய அணுகு முறை என்று கூறக் கூடும். ஒவியம் என்பதற்கு பதிலாக ஆய்விற்கான நூல்களை திரட்டுவது, உலகை, மக்களைப் புரிந்து கொள்ள பயணங்கள் மேற்கொள்வது என்று வேறு சிலவற்றை முன்னிறுத்தினால் கிட்டதட்ட அதையொத்த பதில்கள் கிடைக்கலாம்.ஏன் ஒரு பொது நூலகம் நிறுவ பிறருடன் சேர்ந்து உழைக்கக்கூடாது, பயணம் மேற்கொள்ளவதையும் சிக்கனமாக செய்ய முடியுமே, அந்த அளவு பணம் சேர்த்தால் போதுமே என்றெல்லாம் பதில் வரலாம்.விரிந்தொடும் கங்கையில் குளிக்கும் போது எனக்குத் தேவை அல்லது இதில் எனக்கு உரியது இத்தனை சொம்பு நீர்தான்,அதைக் கொண்டே நீராடுவேன் என்றவர் காந்தி. வாழ்வில் சொல்லிற்கும், செயலிற்குமான இடைவெளியை தன்னால் இயன்ற அளவு குறைக்க முயன்றவர் அவர்.

எனவே காந்தியத்தை வெறும் தத்துவமாக குறைப்பது எளிது. அதை செயல்முறை (praxis) ஆக மாற்றி அதில் தொடர்ந்து முயல்வது, தன் வாழ்வையே அதற்கான சாதகமாக, பரிசோதனையாகக் கொள்வது எளிதன்று.ஆசைகளை சுருக்கி, தேவைகளையும் குறைத்துக் கொள்வதும் கடினம்; அதெல்லாம் தேவையில்லை, காந்தியத்தை பற்றி பேசினால், எழுதினால் போதும் என்றும் சிலர் கருதலாம் .அது அவர்கள் தெரிவு. காந்தி ஒன்றை சொல்லியிருக்கிறார். அதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

"I will give you a talisman. Whenever you are in doubt, or when the self becomes too much with you, apply the following test. Recall the face of the poorest and the weakest man [woman] whom you may have seen, and ask yourself, if the step you contemplate is going to be of any use to him [her]. Will he [she] gain anything by it? Will it restore him [her] to a control over his [her] own life and destiny? In other words, will it lead to swaraj [freedom] for the hungry and spiritually starving millions?
Then you will find your doubts and your self melt away."

http://www.mkgandhi.org/gquots1.htm

ஆயிரம் பக்கங்கள் காந்தி/காந்தியம் குறித்து எழுதுவதை விட இதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதுதான் கடினம்.என்னைப் பொருத்தவரை காந்தியம், காந்தி முன்வைத்த சில கோட்பாடுகள்/கருத்துக்கள் சிலவற்றிற்கு பொருந்தும், சிலவற்றில் முடிவு செய்ய அல்லது மதிப்பீடு செய்ய அவை உதவும். அவை எங்கெல்லாம் உதவும், எப்படியெல்லாம் பயன்படும் என்பதில் நடைமுறை சார்ந்த சிக்கல்கள் இருந்தாலும் அவற்றை பயன்படுத்த முயலலாம்.உதாரணமாக ஒரு தொழில் நுட்பத்தினை மதிப்பிடுவதில் காந்தியம் உதவக்கூடும், அதை மதிப்பிட அது ஒன்றே ஒரே அளவுகோல் என்று இல்லாத போதும் கூட.சில போராட்டங்களுக்கு அகிம்சை வழி,சத்தியாக்கிரகம் பொருத்தமானதாக இருக்கக் கூடும்.அதை அனைத்து சூழ்நிலைகள், சந்தர்ப்பங்களுக்குமான பொதுவான விதியாக நான் கருத மாட்டேன். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் சே காந்தியாக மாறாதது அவர் தவறு, காந்தியத்தைக் கடைப்பிடித்திருந்தால் அப்படி செத்திருக்க மாட்டார் என்று எழுதமாட்டேன், சே, கிராம்சியை அல்லது காந்தியை நூறு முறை படிக்க் வேண்டும் என்று ‘தண்டனை’ விதிக்க மாட்டேன்.

இவான் இலிச் உடலில் கட்டி ஏற்பட்ட போது நவீன மருத்துவ முறை சிகிச்சையை நாடவில்லை. வலியைப் பொறுத்துக் கொண்டார். அநவீன மருத்துவ சிகிச்சை முறையை நாடினார். பாரம்பரிய மருத்துவர் ஒருவர் கட்டிக்குத் தேவையான சிசிச்சை பாரம்பரிய மருத்துவத்தில் இல்லை அல்லது அது போதுமானதாக/பொருத்தமானதாக இல்லை என்று கருதி நவீன மருத்துவ சிகிச்சையை நாடக் கூடும். நவீன மருத்துவ முறை குறித்த இலிச்சின் விமர்சனங்களிலிருந்து சிலவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும், அவற்றின் போதாமைகள், வரையரைகள் குறித்த புரிதலுடன். ஆனால் இலிச் எழுதியதன் அடிப்படையில் அல்லது அதற்கு ஒத்திசைவாக ஒரு நாட்டின் மருத்துவக் கொள்கையை, மருத்துவ ஆராய்ச்சிக்கான கொள்கையை உருவாக்க முடியாது.அந்த முயற்சியில் இலிச்சின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளலாம். இலக்கிற்கும் அதை அடைய உதவும் முறைகளுக்கும் உள்ள் உறவை,அதில் உள்ள அறம் சார் கேள்விகளை கருத்தில் கொள் என்று காந்தியம் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதுதான். அனைத்து அறம்சார் கேள்விகளுக்கும் காந்தியம் மூலம் தீர்வு காண முடியுமா என்பது முக்கியமான கேள்வி.

பாரம்பரிய வேளாண் முறைகளும் தேவை, உயிரியல் தொழில் நுட்பமும் தேவை என்று சிலர் கருதலாம். சிலர் பாரம்பரிய வேளாண்மையும், வேளாண்மையில் உயிரியியல் தொழில் நுட்பமும் ஒன்றுடன் ஒன்று பொருந்தாதவை என்று கருதலாம். சிலர் பாரம்பரிய /இயற்கை வேளாண்மை மட்டும் போதும் என்று கருதலாம். சிலர் உயிரியல் தொழில் நுட்பத்தை பொருத்தமான தொழில்னுட்பமாக (appropriate technology) மாற்ற முடியும் அல்லது அது அத்தகைய தொழில் நுட்பம் என்று கருதலாம். காந்தியம்/காந்தியக் கண்ணோட்டம் என்ற பெயரில் இயற்கை வேளாண்மை, பாரம்பரிய வேளாண்மை மட்டும் போதும், நவீன அறிவியல் தொழில் நுட்பத்திற்கு வேளாண்மையில் இடமிருக்க வேண்டியதில்லை என்பது ஒரு கண்ணோட்டம்.உயிரியல் தொழில்னுட்பத்தையும் தேவையான போது தேவையான வகையில் மட்டும் பயன்படுத்தலாம், அது காந்தியத்திற்கு இசைவானது என்று இன்னொரு கண்ணோட்டம் இருந்தால் இவற்றைஎப்படி காந்திய ரீதியாக மதிப்பிடுவது?. காந்திய விழுமியங்களின் அடிப்படையில் தொழில் நுட்பங்களை மதிப்பிடுவது எப்படி?. காந்திய அணுகுமுறையில் நவீன அறிவியல்- தொழில் நுட்பத்தினை எப்படி மதிப்பிடுவது?.

இவற்றிற்கு விடை காண்பதுதான் சவால். காந்தியத்தின் பொருத்தப்பாட்டினை இவற்றின் மூலம் பரிசோதிக்க முடியும் என்றால் எப்படி முடியும் என்று பார்க்க வேண்டும். இதை விடுத்து நவீன அறிவியல் தொழில் நுட்பம் காந்தியத்திற்கு ஒவ்வாத ஒன்று என்று மட்டையடியாக எழுதுவது எளிது. அது காந்தியத்தின் பொருத்தப்பாட்டினை அறிய உதவாது. ஏனெனில் அங்கு விவாதமே எழ வாய்ப்பில்லை. நிராகரிப்பது எளிது, அதுவும் கோட்பாட்டு ரீதியாக. நடைமுறையில் ?.

காந்தியம், நவீன விஞ்ஞானம்,தொழில் நுட்பம் குறித்து ஜெயமோகன் எழுதியவை அவர் ஏற்கனவே எழுதியவற்றின் மறு சுழற்சி செய்யப்பட்டவைகளாக உள்ளன.சில பெயர்கள்,சராம்சவாதம் போன்றவைகளைக் கொண்டு ஒரே கருத்துக்களை அவர் மீண்டும் மீண்டும் முன் வைக்கிறார். அவருக்கு இதில் தெளிவான புரிதல் இல்லை. தன் எழுத்தில் உள்ள முரண்பாடு கூடப் புரிவதில்லை.

காந்தியம் குறித்தும் சொல்லும் போது ஒரு கோட்பாடாக சிலவற்றை சொல்லலாம்,சில விழுமியங்களை முன் வைக்கலாம், நடைமுறை என்று வரும் போதோ அல்லது ஒரு கொள்கையை வகுப்பது என்று வரும் போதோ எழும் கேள்விகள், சவால்கள் வேறு.ஒற்றைத் தீர்வும், ஒற்றைக் கண்ணோட்டமும் பல சமயங்களில் சரியான தீர்வுகளை காண வழி வகுக்காது. சமூகத்தின் பல்வேறு தேவைகளுக்கு, இன்றைய உலகின் முன் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு காந்தியம் அல்லது மட்டுமே போதும் என்று சொல்ல முடியாது.

காந்தியம்/காந்தியர்கள் முன்னிறுத்தும் இடைநிலைதொழில் நுட்பம் எங்கு பொருந்தும், எப்படிப் பொருந்தும் என்பதை விவாதிக்க வேண்டும். இடை நிலை தொழில் நுட்பம் என்று வரும் போது இடை நிலை என்று எதைக் குறிக்கிறோம்,எதை இடை நிலை என்று எப்படி எந்த அடிப்படையில் மதிப்பிடுகிறோம் என்று விவாதிப்பது தவிர்க்க இயலாதது. இடைநிலைத் தொழில் நுட்பத்தினை உருவாக்க இடை நிலை தொழில் நுட்பம்,எளிமையான கைத் தொழில்கள் மட்டுமே போதுமா என்ற் கேள்வியும் எழுகிறது. அன்று காந்தி கதரை முன் வைத்தார்.

இன்று கதர் வேறொரு பரிமாணத்தினை எட்டியுள்ளது. அதை எப்படி அணுகுவது. கதர் உடை/ஆடைகள் பாஷன் ஷோக்களில் இடம் பெறுவதை எப்படி மதிப்பிடுவது. கதரை சர்வதேச பாஷன் சந்தையில் வெற்றிகரமாக புகுத்தி, கதர் ஆடைகளுக்கான உலக சந்தையை வளர்த்து அதன் மூலம் இந்தியாவில் இத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த முடியும் என்று ஒருவர் வாதிட்டால், காந்திய கண்ணோட்டத்தில் அதை எப்படி மதிப்பிடுவது. கதரை உலகம் ஏற்பதும், உலக சந்தையில் கதர் துணிகள்/ஆடைகள் பல லட்சக்கணக்கில் விற்கப்பட்டால் அதை காந்தியத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்று கொள்ள முடியுமா. அல்லது வேலை வாய்ப்பினை பெருக்க, கைத்தொழில்களை ஊக்குவிக்க இதையெல்லாம் செய்வதுதான் சரியான காந்திய அணுகுமுறை என்று கூற் முடியுமா. காந்தி முன் வைத்த சுதேசி/ஸ்வதேசி என்பதன் பொருள் என்ன?. அனைத்து உள் நாட்டுத் தயாரிப்புகளையும் சுதேசி(ய)ப் பொருட்கள் என்று அழைக்க முடியுமா?. கூட்டுறவு இயக்கம் என்பது காந்தியத்திற்கு ஏற்புடைய ஒன்று. கூட்டுறவு அமைப்பு என்பது பெரிய தொழிற்குழுமம் போல் செயல்படுவதும், தேசிய சந்தைக்கு பொருட்களை உற்பத்தி செய்வதும், சந்தைப்படுத்தி விற்க விளம்பரம் செய்வதும், மக்களின் ஆசைகளை நிறைவேற்ற புதிய பொருட்களை அறிமுகம் செய்வதும் காந்தியின் கருத்துக்களுக்கு ஏற்புடையதா?.

பொருத்தப்பாடு என்று வரும் போது அவர் கிராம சுயராஜ்யம் குறித்து எழுதியவை, கல்வி குறித்து எழுதியவை, கிராமத் தொழில்கள் குறித்து எழுதியவை, அதிகாரப் பகிர்வு என அனைத்தையும் பேச வேண்டும். காந்தி முன் வைத்த ராமராஜ்யம் என்ற கனவுலகம் உண்மையிலேயே சாத்தியமா, அது விரும்பத்தக்கதா என்பதையும் ஆராய வேண்டும்.

குடும்பக் கட்டுப்பாடு என்று வரும் போது காந்திய சிந்தனை பிரம்மாச்சாரியம் அல்லது உடல் உறவை ம/கட்டுப்படுத்தல் என்பதையே ஒரு விரும்பதக்க தீர்வாக முன் வைக்கும் என்றால் நடைமுறையில் இது மட்டும் போதுமா என்ற கேள்வி எழுகிறது. காந்திக்கும், மார்கரெட் சாங்கருக்குமிடையே நடந்த உரையாடல் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

மக்கள் தொகைப் பெருக்கத்தினைக் கட்டுபடுத்த கருத்தடை மாத்திரைகள், கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கல்,தேவையான தொழில் நுட்பங்களை கிடைக்கச் செய்தல்,குறைவான எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது ஊக்குவித்தல் என பலவற்றை அரசு நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும்.அதுதான் காரியவாத அணுகுமுறையாக இருக்க முடியும்.காந்தியம் இதில் எந்த அளவு உதவும்?. இன்றும் காந்திய அணுகுமுறை இதில் காந்தி அன்று சொன்னதுடன் நின்றுவிடுமா அல்லது அதன் போதாமையைப் புரிந்து கொண்டு வேறு சிலவற்றை முன்னிறுத்துமா?. அல்லது இன்றைய இந்தியாவில் மக்கள் தொகை பெரிய பிரச்சினை, அதைக் கட்டுப்படுத்த காந்தி சொன்னது மட்டும் தீர்வல்ல என்பதால் அரசு புதிய முறைகளை அறிமுகப்படுத்தலாம், ஆனால் அவை திணிக்கப்படக் கூடாது, பெண்களின் உடல்நலத்திற்கு கேடாகக் கூடாது என்று கருதுமா. இதில் பெண்ணிய நிலைப்பாட்டிலிருந்தும் சிலவற்றைக் கூற முடியும், காந்தியின் நிலைப்பாட்டினை பெண்ணிய நிலைப்பாட்டிலிருந்து விமர்சிக்கும் அதே நேரத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் பெரும் பிரச்சினை என்பதாகக் கொண்டு முன்னிறுத்தப்படும் தீர்வுகள், அறிமுகப்படுத்தப்படும் சாதனங்கள்/முறைகள் குறித்து பெண்ணிய விமர்சனமும் வைக்க முடியும். நானும் அப்படி விமர்சித்திருக்கிறேன். மேலு, இதையெல்லாம் நான் வேறொரு கோணத்திலிருந்தும் அணுகுவேன். அங்கு பின் நவீனத்துவ சிந்தனை உதவும்.

இளம் பெண்களை கவர ஆண்களுக்கு காந்தியம் எப்படி உதவும் என்று ஒருவர் எழுதினால் அதை காந்தியத்தின் பொருத்தப்பாட்டிற்கான சான்றாக கொள்ள முடியுமா?. காந்தி இலக்குகள், அவற்றை அடையும் வழிமுறைகள், இதில் உள்ள அறம் சார் பிரச்சினைகள் குறித்து விவாதித்தவர்.சரியான இலக்கு என்றால் அதை அடைய எந்த வழிமுறையையும் மேற்கொள்ளலாம் என்று வாதிட்டவர் அல்ல.

சந்தைப்படுத்தலுக்கு உதவும் காந்தியம், நிர்வாக மேலாண்மைக்கு உதவும் காந்தியம் அல்லது காந்தியத்தைப் பயன்படுத்தி நுகர்வோரை பொருட்களை வாங்கச் செய்வது எப்படி என்றெல்லாம் எழுதப்பட்டால் ஆஹா, காந்தியத்தை இதற்கெல்லாம் பயன்படுத்தலாமென்றால் அதன் பொருத்தபாடு எத்தகையது என்று காந்தியத்தை அரைகுரையாக புரிந்து கொண்டவர் வியக்கலாம், அதை காந்தியத்தின் பொருத்தப்பாட்டிற்கு சான்றாக எழுதலாம்.மாறாக இலக்கு, வழிமுறைகள் குறித்த காந்திய அணுகுமுறையை அறிந்தவர்கள் அப்படி வியக்க மாட்டார்கள்.அவர்கள் காந்தியத்தினை வெறும் கருவியாக அல்லது இன்னொரு யுக்தியாக பயன்படுத்துவத்தை கேள்விக்குட்படுத்துவார்கள்.நவீன நிர்வாக முறைகள்,ஆசைகளின் பெருக்கம், தொழிலுற்பத்தி போன்றவை தொடர்பற்றவை என்று கருத மாட்டார்கள். மாறாக நவீன பொருளாதரம், நவீன உற்பத்தி,நிர்வாக முறைகள் நுகர்வினை விரிவுபடுத்தவும், மூலவளங்களை சுரண்டவும், தேவைகளை விட ஆசைகள்க்கு முன்னுரிமை கொடுத்து, சந்தை மூலம் சமூக மதிப்பீடுகளில் பொருளாசைக்கு முக்கியத்துவம் கொடுக்கவே விழைகின்றன என்று விமர்சிப்பார்கள். ஜெயமோகனிடம் இந்தப் புரிதல் அறவே இல்லை. இந்தப் புரிதலுடன் இந்தியர் அல்லோதாரால் எழுதப்பட்ட நூல் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை போலும்.

காந்தியத்தின் போதாமைகள், பலவீனங்களையும் நாம் பேசியாக வேண்டும். ஹிந்த் ஸ்வராஜ் என்ற நூல் காந்திக்கு ஒரு லட்சிய நூலாக இருந்திருக்கலாம். ஒரு சமூகத்திற்கு/தேசத்திற்கு வழிகாட்ட அது பயன்படாது. அதன் அடிப்படையில் ஒரு சமூகம் உருவானால், காந்தியைக் குறித்து எழுதிய ஒருவரின் வார்த்தைகளை ப்யன்படுத்திச் சொன்னால் அது தார்மீக சிறையாக இருக்கும்.

யார் விமர்சித்தாலும், விமர்சிக்காவிட்டாலும் இடதுசாரிகள், பெரியாரியாவாதிகள்,அம்பேதக்ரியவாதிகள ஜெயமோகன் எழுதியதை விமர்சிப்பார்கள், அதை அவர் எதிர்கொண்டேயாக வேண்டும் என்றே தோன்றுகிறது. கடந்த 20 /25 ஆண்டுகளில் காந்தி, காந்தியம், தேசிய இயக்கம், குறித்து தலித்திய,பெரியாரிய, இடதுசாரி, பெண்ணிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவற்றையும்/விமர்சனப் பார்வைகளையும் கருத்தில் கொண்டே இன்று காந்தி/காந்தியம் குறித்து எழுதுவது பொருத்தமாக இருக்கும். மேலும் இன்று பலவேறு பகுதிகளில் அன்று அதாவது சுதந்திரப் போராட்ட காலத்தில் நிலவிய அரசியல் நிலைமைகள், இயக்கங்கள் குறித்த ஆய்வுகள் பல கிடைக்கின்றன.(3). காங்கிரஸ்மையவாதக் கண்ணோட்டத்தில் எழுதப்படாத இவை கவனத்திற்குரியவை. அவற்றை முற்றாக நிராகரிக்க முடியாது.


(4)உ-ம் Partition Politics and Achhut Identity: A Study of the Scheduled Castes Federation and Dalit Politics in U.P., 1946-48.Ramnarayan Singh Rawat

பி.கு: 1, இந்த விமர்சனம் ஒரு பூர்வாங்க விமர்சனம்தான், உதாரணத்திற்காக சிலவற்றை எழுதியுள்ளேன் பலவற்றை வேண்டுமென்றே சுட்டிக்காட்டவில்லை, விரிவாக விமர்சிக்கவில்லை. இப்போது அவற்றை எழுதினால் ஜெயமோகன் நூலில் அவைகளை கருத்தில் கொண்டு மாற்றம் செய்ய வாய்ப்பளித்தது போலாகிவிடும். இந்தக் குறைகள் இன்னாரால் சுட்டிக்காட்டப்பட்டன, இந்த விமர்சனங்கள் வைக்கப்பட்டன, அவற்றினை கருத்தில் கொண்டு மாற்றி எழுதியுள்ளேன் என்று வாசகர்களுக்கு உண்மையை சொல்கிற நேர்மையை அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்பதும் விரிவான விமர்சனத்தினை இப்போது வைக்காததற்கு இன்னொரு காரணம்.
2,ராஜதுரையின் வரட்டு பெரியாரியத்தை நான் ஏற்கவில்லை. சுந்தர ராமசாமி காந்தியைப் பற்றி எழுதியிருக்கிறாரா என்று எனக்குத் தெரியாது.இந்த விமர்சனக் கட்டுரையில் ஜெயமோகன் எழுதியுள்ளதையே எடுத்துக் கொண்டு விமர்சிக்கிறேன்
3,காந்தி/காந்தியம் குறித்து எனக்கு கருத்துக்கள் உண்டு. அவற்றை விரிவாக எழுதியதில்லை. பின்னர் ஆங்கிலத்தில் எழுத எண்ணம்.


தொடரும்

Labels: , , , , ,

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

அண்ணே,
இன்னுமா இந்த ஊரு ஒங்கள நம்புது?!!!

-JM_FAN.

2:03 AM  

Post a Comment

<< முகப்பு