பாடுக பஜனை பாடுக பஜனை :பஜனை(கள்),பலன்(கள்

பாடுக பஜனை பாடுக பஜனை :பஜனை(கள்),பலன்(கள்)


போன வாரம் ஒரு பஜனை, அதற்கு முந்தைய வாரம் ஒரு பஜனை, ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஒரு பஜனை, அப்புறம் அடுத்தமாதம் ஒரு பஜனை என்று பஜனை பாடுவதற்கும், அதற்கான தயாரிப்புகளுக்குமாக நேரம் போகிறது. ஜூன் மாதம் ஆம்ஸ்டர்டாமில் பஜனை பாட வாய்ப்பு கிடைத்தது, சில காரணங்களால் அந்த வாய்ப்பினை என்னால் பயன்படுத்த முடியவில்லை லை.பஜனை என்றால் பவர் பாயின்ட் பஜனை. தொழில் ரீதியான கலைச்சொல் presentation/talk/lecture என்று இருக்கலாம்.கணினி தொல்லை தந்து பவர் பாயிண்ட் பஜனை பாட முடியவில்லையென்றால் வாயால் அதிக பஜனை செய்ய தயாராக இருக்க வேண்டும், ஞ என்று முழிக்கக் கூடாது.

போன வாரம் காட்டிற்குள் ஒரு கருத்தாய்வு, விலங்குகளுடன் அல்ல. தங்கியிருந்த இடம் நன்றாக வசதியாக இருந்தது. அந்த விடுதியில் பாக்கேஜ் டீலாக ஸ்பா(spa) வில் ஒரு சேவை இலவசம் என்று வேறு கொடுத்திருந்தார்கள். விமானம் தாமதமாக சென்றதால் நான் அங்கே தாமதமாக சென்றேன். அறைக்கான சாவி கொடுத்து மேலும் தகவல் சொன்னவர்கள் இந்த இலவச சேவையை சொல்ல வில்லை. இந்த மூஞ்சிக்கு spa ஒரு கேடா என்று நினைத்து விட்டார்களா இல்லை spa விற்கு போகாமலே இவன் adonis போல் இருக்கிறான், இவனுக்கு எதற்கு spa என்று முடிவு செய்துவிட்டார்களா என்று தெரியவில்லை. எனக்கு அது தெரியவந்த போது அதை பயன்படுத்திக் கொள்ள நேரமில்லாமல் போய்விட்டது. விடுதி காட்டுப் பகுதி என்பதால் குரங்குகள் நிறைய இருந்தன. குரங்களுக்கு உணவு தரக் கூடாது, அது அபயாகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறைகளில் எழுதியிருந்தார்கள்.

இந்த மனக்குரங்கே இப்படித்தான், பஜனையிலிருந்து குரங்கிற்கு தாவிவிட்டது.

இந்த பஜனைகள் பாடும் போது, பிற பாடுவதைக் கேட்டு கருத்துரைக்கும் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன:உதாரணமாக

1) பஜனையின் துவக்கத்தில் சபையோருக்கு வணக்கமும், ஸ்பான்ஸர்களுக்கு பெரிய வணக்கமும் போட்டு விடவேண்டும்

2) 20 நிமிடம் பஜனை பாட நேரம் கொடுத்தால் 22வது நிமிடத்தில் விரைவில் முடிக்கவும் என்று சீட்டு வரும் போது இன்னும் 2 நிமிடம் என்று கூறி 3 நிமிடத்தில் முடிக்க வேண்டும்

3) பஜனைக்கு எதிர்வினையாக கேள்விகள், கருத்துக்கள் வந்தால் அதைக் குறித்து கொள்ள வேண்டும் அல்லது குறித்துக் கொள்வது போல் நடிக்க வேண்டும்

4) கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது விரைவாக பேச வேண்டும், அப்போதுதான் என்ன சொல்கிறோம் என்பது புரியாது. மேலும் சரியாக பதில் சொல்லத் தெரியவில்லையென்றால் உணவு இடைவேளையில் விவாதிக்கலாம் என்று சொல்லி விட வேண்டும்

5) ஏற்கனவே பஜனை பாட பயன்படுத்திய பவர்பாயிண்ட்களை அப்படியே பயன்படுத்தக் கூடாது, குறைந்த பட்சம் கூட்டம், இடம், நாள் போன்றவற்றையாவது மாற்ற வேண்டும்

6) கணினிகள் சரியாக வேலை செய்யாத போது சமாளிக்க பவர் பாயிண்ட பஜனையின் அச்சுவடிவம் கையில் இருந்தால் நல்லது.

7) பிறர் பஜனை பாடும் போது கவனமாக கேட்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் அப்படி நடிக்க வேண்டும்

8) எதிர்வினையாற்ற ஒரு நிமிடம் கொடுத்தால் 2 நிமிடம் பேசி அதில் 3 கேள்வி, 4 கருத்து சொல்லிவிட வேண்டும்

9) பரஸ்பர முதுகு சொறிதல் செய்தாலும் அதை அடிக்கடி வெளிப்படையாகக் செய்யக் கூடாது

10) பஜனையில் இன்று காலை சி.என்.என்னில் ஒபாமா சொன்னது, இன்று காலை பினான்ஷியல் டைம்ஸில் வந்த செய்தி அல்லது இந்த வார எகானமிஸ்ட்டில் சொல்லி இருப்பது என்று மேற்கோள் காட்டி பேசச் தெரிந்திருக்க வேண்டும்

11) பெருசுகள் அல்லது தாதாக்கள் பஜனை பாடிய பின் மறக்காமல் கைதட்ட வேண்டும், நாம் அரைத்/முழு தூக்கத்திலிருந்தாலும்

12) கைவசம் நம்முடைய விசிட்டிங் கார்டுகள் வைத்திருக்க வேண்டும், பெரியவர்களைப் பார்த்தால் ‘அபிவாதே’ சொல்லி விட்டு மறக்காமல் உங்கள் விசிட்டிங் கார்டை கொடுத்து விட்டு, அவர்கள் விசிடிங் கார்ட் பதிலுக்கு கிடைத்தால் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பல பெரியவர்கள் கைவ்சம் கார்ட் இல்லை என்று சொன்னாலும் அவர்கள் மின்னஞ்சல் முகவரி(களை) நாமாக கண்டறிய வேண்டும்.

13) பஜனை பாடி ஊருக்குத் திரும்பியதும் ஸ்பான்ஸ்ர்களுக்கு நன்றி மின்னஞ்சல் அனுப்பி விட வேண்டும்

14) அங்கு சந்தித்தவர்கள் யாராவது பஜனை பாட வர இயலுமா என்று பேச்சுவாக்கில் சொல்லியிருந்தாலும் அதை நினைவூட்டி மின்னஞ்சல் அனுப்பிவிட வேண்டும்

15) யாரவது பெருசு அல்லது பெரும் பொறுப்பில் இருப்பவர் நம்மைப் பற்றி கொஞ்சம் விசாரித்திலிருந்தாலும், ஊர் திரும்பியவுடன் மின்னஞ்சலில் தங்களை சந்தித்தது என் பாக்கியம் என்று எழுதிவிட்டு, சுய விளம்பரத்தை இணைப்பாக கோப்பாக
அனுப்பி விட வேண்டும். இப்படி அனுப்பும் போது 20 பக்க CV அனுப்பக் கூடாது. 4/3 பக்க சுருக்கத்தை அனுப்ப வேண்டும்.

16) யாரவது கும்பலாக நன்றி மின்னஞ்சல் அனுப்பினால் ஆமாம் என்று கூட்டத்துடன் பாடி விட வேண்டும்

பஜனை பாடுவதால் ஏற்படும் சில பலன்கள்

1) தொண்டை வளத்தை பெருக்க முடியும்
2) நம் இருப்பு கவனம் பெறும்
3) CVயில் ’கனம்’ சேர்க்க உதவும்
4) ஒசியில் ஊர் சுற்ற,பலவகை உணவுகளை ருசி பார்க்க, பல இடங்கள்/நாடுகளுக்கு செல்ல வாய்ப்புக் கிடைக்கும்
5) பிரம்மாச்சாரிகள்/சாரினிகளுக்கு துணை தேட உதவும், குறைந்தது flirt செய்ய துணை கிடைக்க வாய்ப்புண்டு. அண்மையில் நான் பஜனை பாடிய கலந்தாய்விற்கு வந்திருந்த பிலிப்பைன்ஸ்காரர் அவருடன் பணி புரியும் இந்தியரிடம்,அங்கு பார்வையாளராக வந்திருந்த இந்தியப் பெண் அழகாக இருக்கிறார், படித்திருக்கிறார், நன்றாக பாடுகிறார், புத்திசாலி என்று
சொல்லிச் சொல்லி உசுப்பேற்றிக் கொண்டிருந்தார். பிலிப்பைன்ஸ்காரரும், இந்தியரும் என் நண்பர்கள்.
6) தொடர்புகளை ஏற்ப்படுத்த, வலைப்பின்னல்களில் இடம் பெற உதவும்
7) வேறொரு இடத்தில்/இடங்களில் பஜனை பாட வாய்ப்புக் கிடைக்கலாம். ஏப்ரல் மாதம் ஒரு அவையில் பஜனை பாடினேன், அதைக் கேட்ட ஒருவர் (ஒரு அமைப்பிலிருந்து வந்திருந்தவர்) என் பெயரை பரிந்துரைத்திருக்கிறார். அதே அமைப்பிலிருந்து இன்னொருத்தரை மே மாதம் ஒரு அவையில் பஜனை செய்யும் போது சந்தித்தேன். அவர் ஆகஸ்ட் மாதம் நாங்கள் நடத்தும் நிகழ்ச்சியில் பஜனை பாடுவீர்களா என்று கேட்டார். ஏப்ரலில் உங்கள் பஜனையைக் கேட்டவர் பரிந்துரைத்தார் என்றார். சரி என்று ஒப்புக் கொண்டு பஜனை பாடினேன். அடுத்த மாதம் ஏப்ரலில் பஜனை பாடிய ஊருக்கு பஜனை பாடப் போகிறேன். இந்த முறை உபயதாரர் வேறு.
8) அடிக்கடி பஜனை பாட அழைக்கப்பட்டால் பெரிய ஆள் என்று பிறர் நினைக்க வாய்ப்பு உருவாகும்
9) மொக்கை பதிவுகளுக்கு பதிலாக பயண அனுபவங்களை பதிவுகளாக எழுத உதவும்

இன்னும் பல பலன்கள் உள்ளன. (அதையெல்லாம் எழுதினால் அப்புறம் இடுகை கிழக்கு பதிப்பகத்தின் மாக்ஸி நூல் வரிசையில் உள்ள நூல் போலாகிவிடும்).

பஜனை பாடுவதில் உள்ள சில பிரச்சினைகள்/சிரமங்கள்

1) பல சமயங்களில் ஒரு நாள் தங்கியிருக்க, 30 நிமிடம் பஜனை பாட மூன்று நாள் போக-வரப் பயணம் செய்ய வேண்டியிருக்கும், உலகின் ஒரு பாதியை சுற்ற/கடக்க வேண்டியிருககும். ஒரு முறை பஜனை பாட செல்லும் போது பயணம்+இடை நிறுத்தம் 18 மணி நேரமானது. அதைப் பொருட்படுத்தாது பஜனை பாட சென்றிருக்கிறேன். கடந்த ஒராண்டிற்குள் ஒரு நகரத்திற்கு நான்கு முறை பஜனை பாட சென்றிருக்கிறேன். முதல் இரண்டு முறை ஒரு உபயதாரர்,அடுத்த இரண்டு முறையும் வேறொரு உபயதாரர்.
2) நுழைவுச் சீட்டு(க்களை)ப் பெற பல விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.
3) ஒரு பெட்டியுடன் புறப்பட்டால் திரும்பும் போது இன்னொரு பெட்டி நிறைய வாங்கிய பொருட்களுடன் வர வேண்டும் என்ற விதி/உத்தரவு பின்பற்றப்படும் குடும்பங்களில் அதை பூர்த்தி செய்ய பணம் செலவாகும்
4) வழக்கமான அலுவல்கள், குடும்ப இன்பதுன்பங்கள் பஜனை பாடுவதற்கான தயாரிப்பு, மற்றும் பயணம் காரணமாக பாதிக்கப்படும்
5) மோசமான சாப்பாடுகள், பயண தாமதங்கள், விமான நிலையங்களில் சோதனை, தூக்கமின்மை, விமான நிலைய காத்திருப்புகள் உட்பட பல தொந்தரவுகளை தாங்கும் எதையும் தாங்கும் இதயம் இல்லாவிட்டால் சிரமம்தான்.
6) பஜனை பாட நாம் பயணம் செய்வது, நட்சத்திர வ்டுதிகளில் தங்குவது போன்றவற்றால் சுற்றுச்சூழல் அழிப்பிற்கு காரணியாகிறோம் என்ற குற்ற உணர்வு சிலருக்கு உண்டாகலாம்.

இப்படியாக சில பிரச்சினைகள்/சிரமங்கள் இருப்பினும் பிறர் காசில் உலகெங்கும் பறந்து பறந்து பஜனை பாடுவது நல்லது, நமக்கு நல்லது மிக நல்லது.

மங்களம் சுபமங்கள்ம் ஜெய மங்களம்

இந்த இடுகையை படித்தோருக்கும் கேடடோருக்கும் பின்னூட்டமிட்டோருக்கும் திரட்டிய திரட்டிகளுக்கும் பிளக்கருக்கும்

மங்களம சுபமங்களம ஜெயமங்களம்

Labels: , , , , ,

1 மறுமொழிகள்:

Anonymous பா. ரெங்கதுரை மொழிந்தது...

//5) பிரம்மாச்சாரிகள்/சாரினிகளுக்கு துணை தேட உதவும், குறைந்தது flirt செய்ய துணை கிடைக்க வாய்ப்புண்டு.//

அடடா, இந்த அறிவுரையை நான் பிரம்மச்சாரியாக இருந்தபோதே யாராவது சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். பஜனை கோஷ்டிகளை ”உஞ்சவிருத்திக் கும்பல்கள்” என்று திட்டிக்கொண்டிருந்ததால், நல்ல வாய்ப்புகளை இழந்துவிட்டது இப்போதுதான் புரிகிறது.

10:41 AM  

Post a Comment

<< முகப்பு