உன்னைப் போல் ஒருவன்

உன்னைப் போல் ஒருவன்

உ.போ.ஒ வை அண்மையில் பார்த்தேன்.இந்தி மூலத்தினை இன்னும் பார்க்கவில்லை. உ.போ.ஒ எனக்கு சிறப்பான படமாகத் தோன்றவில்லை. இதை விட சராசரி மசலாப் படங்களே பரவாயில்லை. உ.போ.ஒ வை வெறும் கருத்தியல் ரீதியாக அணுகி விமர்சிக்கலாம். அதை விட, என் பார்வையில், படத்தில் உள்ள பிரச்சினை அதன் நம்பகத்தன்மையும், பிரச்சினைகள் அணுகப்படும் விதமும். மசலாப் படங்கள் ஒருவித அபத்தம் என்றால் இது இன்னொரு வித அபத்தம். தொழில் நுட்பம் இந்த அபத்தத்தினை சரி செய்து விடாது. இந்தியில் இப்படி இல்லை, தமிழில் இப்படி, தமிழை விட இந்தி வடிவம் பரவாயில்லை, நசுரூதின் ஷா கமலை விட சிறப்பாக அந்தப் பாத்திரத்தினை உள்வாங்கி நடித்திருந்தார் போன்ற விமர்சனங்களையும் படித்தேன்.

என்னுடைய கருத்து என்னவென்றால் படம் ஒரு முழு அதீத கற்பனையான படமாகவும் இல்லை, முழு யதார்த்தப் படமாகவும் இல்லை. கிட்டதட்ட சாத்தியமற்ற ஒன்றை சாத்தியமானது போல் காட்டுகின்ற படம் இது.ஒரு நபர் ஒரே நேரத்தில் பத்து பேரை சமாளித்து சண்டை போடுவது மசாலாப் படங்களில் வரும் அபத்தம் என்றால் இந்தப் படத்தின் அடிப்படை கருவே/கதையே அதை விட அபத்தமாக இருக்கிறது. சில மன அரிப்புகளை தீர்க்க சிலருக்கு இந்தப் படம் உதவலாம்.

படத்தினை வெறும் கருத்தியல் பிரதியாக சுருக்கிப் பார்க்க விரும்பவில்லை. இருப்பினும் படத்தின் மையக் கரு கருத்தியல் சார்ந்த ஒன்றாக இருக்கிறது. அதை தீவிர வாத வெறுப்பு கருத்தியல் என்று புரிந்து கொள்ள முடியும் என்பதையுணர்ந்து 'மாற்றுக்' குரல்களும் படத்தின் இடம் பெறுகின்ற வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. சிக்கல் என்னவென்றால் அது அப்பட்டமாகத் தெரிவதால் எதை மறைக்க நினைத்தார்களோ அது இன்னும் வெளிப்படையாகத் தெரிகிறது. வரலாற்று அறிவு இன்றி, இந்தியாவில் அரசு அதிகார அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பது குறித்த அடிப்படை புரிதல் இன்றி எடுக்கப்பட்ட படம் இது. எந்த சாதாரண மனிதனால் இதை யெல்லாம் செய்வது சாத்தியம். அதுவும் அவ்வளவு திறமையாக. சாதாரண மனிதனும், முட்டாள் காவல்துறையும் என்று படத்திற்கு இன்னொரு பெயர் வைத்திருக்கலாம். படத்தில் சில பாத்திரங்கள் எதற்காக இடம் பெறுகின்றன, சில காட்சிகள் எதற்காக இடம் பெறுகின்றன என்றே தெரியவில்லை. நடாஷா ராஜ்குமார் என்ற பாத்திரம், கரிகாலன் என்ற பாத்திரம் இவை ஒட்டு மொத்த கதையில் என்ன பங்காற்றுகின்றன.

இப்படி படத்தில் பல குறைகள், அடிப்படை குறை கதை. திரைக்கதையின் நம்பகத் தன்மை துவக்கத்திலிருந்தே கேள்விக்குறியாதாகின்றது. படம் முடியும் போது எத்தகைய அபத்தம் இந்தப் படம் இது என்ற எண்ணமே மேலோங்குகிறது. தீவிரவாதம் குறித்த முட்டாள்த்தனமான
புரிதலை அடிப்படையாகக் கொண்டு கதையமைத்தால் இப்படித்தான் இருக்கும்.

சுருதி ஹாசனின் இசை பல இடங்களில் மெகா தொடர்களின் பிண்ணனி இசையை நினைவுபடுத்துகிறது. வசனகர்த்தார் தன் முழுத்திறமையைக் காட்டினாலும் படத்தில் உள்ள அடிப்படைக் கோளாறுகளை வசனத்தினால் சரி செய்துவிட முடியாது. எனவே முருகனை குறை கூற ஒன்றுமில்லை.

மொத்ததில் உ.போ.ஒ இன்னொருவிதமான ('மசாலத்தன்மையற்ற') அபத்தத் திரைப்படம்.

பி.கு: இது சுருக்கமான விமர்சனம். விரிவாக விமர்சித்து, குறைகளை அலசி எழுதலாம். அதில் உள்ள பிரச்சினை என்னவெனில் அடிப்படையிலிருந்து ஆரம்பித்து இதுதான் குறை, ஏனெனில் என்று விலாவாரியாக எழுத வேண்டும். இந்தியாவின் சமகால வரலாற்றை அறிந்த
யாருக்கும் இப்படத்தின் கதை, கதையோட்டத்தின் பலவீனம் எளிதில் புலப்படும்.

Labels: , , , ,

பாடுக பஜனை பாடுக பஜனை :பஜனை(கள்),பலன்(கள்

பாடுக பஜனை பாடுக பஜனை :பஜனை(கள்),பலன்(கள்)


போன வாரம் ஒரு பஜனை, அதற்கு முந்தைய வாரம் ஒரு பஜனை, ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஒரு பஜனை, அப்புறம் அடுத்தமாதம் ஒரு பஜனை என்று பஜனை பாடுவதற்கும், அதற்கான தயாரிப்புகளுக்குமாக நேரம் போகிறது. ஜூன் மாதம் ஆம்ஸ்டர்டாமில் பஜனை பாட வாய்ப்பு கிடைத்தது, சில காரணங்களால் அந்த வாய்ப்பினை என்னால் பயன்படுத்த முடியவில்லை லை.பஜனை என்றால் பவர் பாயின்ட் பஜனை. தொழில் ரீதியான கலைச்சொல் presentation/talk/lecture என்று இருக்கலாம்.கணினி தொல்லை தந்து பவர் பாயிண்ட் பஜனை பாட முடியவில்லையென்றால் வாயால் அதிக பஜனை செய்ய தயாராக இருக்க வேண்டும், ஞ என்று முழிக்கக் கூடாது.

போன வாரம் காட்டிற்குள் ஒரு கருத்தாய்வு, விலங்குகளுடன் அல்ல. தங்கியிருந்த இடம் நன்றாக வசதியாக இருந்தது. அந்த விடுதியில் பாக்கேஜ் டீலாக ஸ்பா(spa) வில் ஒரு சேவை இலவசம் என்று வேறு கொடுத்திருந்தார்கள். விமானம் தாமதமாக சென்றதால் நான் அங்கே தாமதமாக சென்றேன். அறைக்கான சாவி கொடுத்து மேலும் தகவல் சொன்னவர்கள் இந்த இலவச சேவையை சொல்ல வில்லை. இந்த மூஞ்சிக்கு spa ஒரு கேடா என்று நினைத்து விட்டார்களா இல்லை spa விற்கு போகாமலே இவன் adonis போல் இருக்கிறான், இவனுக்கு எதற்கு spa என்று முடிவு செய்துவிட்டார்களா என்று தெரியவில்லை. எனக்கு அது தெரியவந்த போது அதை பயன்படுத்திக் கொள்ள நேரமில்லாமல் போய்விட்டது. விடுதி காட்டுப் பகுதி என்பதால் குரங்குகள் நிறைய இருந்தன. குரங்களுக்கு உணவு தரக் கூடாது, அது அபயாகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறைகளில் எழுதியிருந்தார்கள்.

இந்த மனக்குரங்கே இப்படித்தான், பஜனையிலிருந்து குரங்கிற்கு தாவிவிட்டது.

இந்த பஜனைகள் பாடும் போது, பிற பாடுவதைக் கேட்டு கருத்துரைக்கும் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன:உதாரணமாக

1) பஜனையின் துவக்கத்தில் சபையோருக்கு வணக்கமும், ஸ்பான்ஸர்களுக்கு பெரிய வணக்கமும் போட்டு விடவேண்டும்

2) 20 நிமிடம் பஜனை பாட நேரம் கொடுத்தால் 22வது நிமிடத்தில் விரைவில் முடிக்கவும் என்று சீட்டு வரும் போது இன்னும் 2 நிமிடம் என்று கூறி 3 நிமிடத்தில் முடிக்க வேண்டும்

3) பஜனைக்கு எதிர்வினையாக கேள்விகள், கருத்துக்கள் வந்தால் அதைக் குறித்து கொள்ள வேண்டும் அல்லது குறித்துக் கொள்வது போல் நடிக்க வேண்டும்

4) கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது விரைவாக பேச வேண்டும், அப்போதுதான் என்ன சொல்கிறோம் என்பது புரியாது. மேலும் சரியாக பதில் சொல்லத் தெரியவில்லையென்றால் உணவு இடைவேளையில் விவாதிக்கலாம் என்று சொல்லி விட வேண்டும்

5) ஏற்கனவே பஜனை பாட பயன்படுத்திய பவர்பாயிண்ட்களை அப்படியே பயன்படுத்தக் கூடாது, குறைந்த பட்சம் கூட்டம், இடம், நாள் போன்றவற்றையாவது மாற்ற வேண்டும்

6) கணினிகள் சரியாக வேலை செய்யாத போது சமாளிக்க பவர் பாயிண்ட பஜனையின் அச்சுவடிவம் கையில் இருந்தால் நல்லது.

7) பிறர் பஜனை பாடும் போது கவனமாக கேட்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் அப்படி நடிக்க வேண்டும்

8) எதிர்வினையாற்ற ஒரு நிமிடம் கொடுத்தால் 2 நிமிடம் பேசி அதில் 3 கேள்வி, 4 கருத்து சொல்லிவிட வேண்டும்

9) பரஸ்பர முதுகு சொறிதல் செய்தாலும் அதை அடிக்கடி வெளிப்படையாகக் செய்யக் கூடாது

10) பஜனையில் இன்று காலை சி.என்.என்னில் ஒபாமா சொன்னது, இன்று காலை பினான்ஷியல் டைம்ஸில் வந்த செய்தி அல்லது இந்த வார எகானமிஸ்ட்டில் சொல்லி இருப்பது என்று மேற்கோள் காட்டி பேசச் தெரிந்திருக்க வேண்டும்

11) பெருசுகள் அல்லது தாதாக்கள் பஜனை பாடிய பின் மறக்காமல் கைதட்ட வேண்டும், நாம் அரைத்/முழு தூக்கத்திலிருந்தாலும்

12) கைவசம் நம்முடைய விசிட்டிங் கார்டுகள் வைத்திருக்க வேண்டும், பெரியவர்களைப் பார்த்தால் ‘அபிவாதே’ சொல்லி விட்டு மறக்காமல் உங்கள் விசிட்டிங் கார்டை கொடுத்து விட்டு, அவர்கள் விசிடிங் கார்ட் பதிலுக்கு கிடைத்தால் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பல பெரியவர்கள் கைவ்சம் கார்ட் இல்லை என்று சொன்னாலும் அவர்கள் மின்னஞ்சல் முகவரி(களை) நாமாக கண்டறிய வேண்டும்.

13) பஜனை பாடி ஊருக்குத் திரும்பியதும் ஸ்பான்ஸ்ர்களுக்கு நன்றி மின்னஞ்சல் அனுப்பி விட வேண்டும்

14) அங்கு சந்தித்தவர்கள் யாராவது பஜனை பாட வர இயலுமா என்று பேச்சுவாக்கில் சொல்லியிருந்தாலும் அதை நினைவூட்டி மின்னஞ்சல் அனுப்பிவிட வேண்டும்

15) யாரவது பெருசு அல்லது பெரும் பொறுப்பில் இருப்பவர் நம்மைப் பற்றி கொஞ்சம் விசாரித்திலிருந்தாலும், ஊர் திரும்பியவுடன் மின்னஞ்சலில் தங்களை சந்தித்தது என் பாக்கியம் என்று எழுதிவிட்டு, சுய விளம்பரத்தை இணைப்பாக கோப்பாக
அனுப்பி விட வேண்டும். இப்படி அனுப்பும் போது 20 பக்க CV அனுப்பக் கூடாது. 4/3 பக்க சுருக்கத்தை அனுப்ப வேண்டும்.

16) யாரவது கும்பலாக நன்றி மின்னஞ்சல் அனுப்பினால் ஆமாம் என்று கூட்டத்துடன் பாடி விட வேண்டும்

பஜனை பாடுவதால் ஏற்படும் சில பலன்கள்

1) தொண்டை வளத்தை பெருக்க முடியும்
2) நம் இருப்பு கவனம் பெறும்
3) CVயில் ’கனம்’ சேர்க்க உதவும்
4) ஒசியில் ஊர் சுற்ற,பலவகை உணவுகளை ருசி பார்க்க, பல இடங்கள்/நாடுகளுக்கு செல்ல வாய்ப்புக் கிடைக்கும்
5) பிரம்மாச்சாரிகள்/சாரினிகளுக்கு துணை தேட உதவும், குறைந்தது flirt செய்ய துணை கிடைக்க வாய்ப்புண்டு. அண்மையில் நான் பஜனை பாடிய கலந்தாய்விற்கு வந்திருந்த பிலிப்பைன்ஸ்காரர் அவருடன் பணி புரியும் இந்தியரிடம்,அங்கு பார்வையாளராக வந்திருந்த இந்தியப் பெண் அழகாக இருக்கிறார், படித்திருக்கிறார், நன்றாக பாடுகிறார், புத்திசாலி என்று
சொல்லிச் சொல்லி உசுப்பேற்றிக் கொண்டிருந்தார். பிலிப்பைன்ஸ்காரரும், இந்தியரும் என் நண்பர்கள்.
6) தொடர்புகளை ஏற்ப்படுத்த, வலைப்பின்னல்களில் இடம் பெற உதவும்
7) வேறொரு இடத்தில்/இடங்களில் பஜனை பாட வாய்ப்புக் கிடைக்கலாம். ஏப்ரல் மாதம் ஒரு அவையில் பஜனை பாடினேன், அதைக் கேட்ட ஒருவர் (ஒரு அமைப்பிலிருந்து வந்திருந்தவர்) என் பெயரை பரிந்துரைத்திருக்கிறார். அதே அமைப்பிலிருந்து இன்னொருத்தரை மே மாதம் ஒரு அவையில் பஜனை செய்யும் போது சந்தித்தேன். அவர் ஆகஸ்ட் மாதம் நாங்கள் நடத்தும் நிகழ்ச்சியில் பஜனை பாடுவீர்களா என்று கேட்டார். ஏப்ரலில் உங்கள் பஜனையைக் கேட்டவர் பரிந்துரைத்தார் என்றார். சரி என்று ஒப்புக் கொண்டு பஜனை பாடினேன். அடுத்த மாதம் ஏப்ரலில் பஜனை பாடிய ஊருக்கு பஜனை பாடப் போகிறேன். இந்த முறை உபயதாரர் வேறு.
8) அடிக்கடி பஜனை பாட அழைக்கப்பட்டால் பெரிய ஆள் என்று பிறர் நினைக்க வாய்ப்பு உருவாகும்
9) மொக்கை பதிவுகளுக்கு பதிலாக பயண அனுபவங்களை பதிவுகளாக எழுத உதவும்

இன்னும் பல பலன்கள் உள்ளன. (அதையெல்லாம் எழுதினால் அப்புறம் இடுகை கிழக்கு பதிப்பகத்தின் மாக்ஸி நூல் வரிசையில் உள்ள நூல் போலாகிவிடும்).

பஜனை பாடுவதில் உள்ள சில பிரச்சினைகள்/சிரமங்கள்

1) பல சமயங்களில் ஒரு நாள் தங்கியிருக்க, 30 நிமிடம் பஜனை பாட மூன்று நாள் போக-வரப் பயணம் செய்ய வேண்டியிருக்கும், உலகின் ஒரு பாதியை சுற்ற/கடக்க வேண்டியிருககும். ஒரு முறை பஜனை பாட செல்லும் போது பயணம்+இடை நிறுத்தம் 18 மணி நேரமானது. அதைப் பொருட்படுத்தாது பஜனை பாட சென்றிருக்கிறேன். கடந்த ஒராண்டிற்குள் ஒரு நகரத்திற்கு நான்கு முறை பஜனை பாட சென்றிருக்கிறேன். முதல் இரண்டு முறை ஒரு உபயதாரர்,அடுத்த இரண்டு முறையும் வேறொரு உபயதாரர்.
2) நுழைவுச் சீட்டு(க்களை)ப் பெற பல விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.
3) ஒரு பெட்டியுடன் புறப்பட்டால் திரும்பும் போது இன்னொரு பெட்டி நிறைய வாங்கிய பொருட்களுடன் வர வேண்டும் என்ற விதி/உத்தரவு பின்பற்றப்படும் குடும்பங்களில் அதை பூர்த்தி செய்ய பணம் செலவாகும்
4) வழக்கமான அலுவல்கள், குடும்ப இன்பதுன்பங்கள் பஜனை பாடுவதற்கான தயாரிப்பு, மற்றும் பயணம் காரணமாக பாதிக்கப்படும்
5) மோசமான சாப்பாடுகள், பயண தாமதங்கள், விமான நிலையங்களில் சோதனை, தூக்கமின்மை, விமான நிலைய காத்திருப்புகள் உட்பட பல தொந்தரவுகளை தாங்கும் எதையும் தாங்கும் இதயம் இல்லாவிட்டால் சிரமம்தான்.
6) பஜனை பாட நாம் பயணம் செய்வது, நட்சத்திர வ்டுதிகளில் தங்குவது போன்றவற்றால் சுற்றுச்சூழல் அழிப்பிற்கு காரணியாகிறோம் என்ற குற்ற உணர்வு சிலருக்கு உண்டாகலாம்.

இப்படியாக சில பிரச்சினைகள்/சிரமங்கள் இருப்பினும் பிறர் காசில் உலகெங்கும் பறந்து பறந்து பஜனை பாடுவது நல்லது, நமக்கு நல்லது மிக நல்லது.

மங்களம் சுபமங்கள்ம் ஜெய மங்களம்

இந்த இடுகையை படித்தோருக்கும் கேடடோருக்கும் பின்னூட்டமிட்டோருக்கும் திரட்டிய திரட்டிகளுக்கும் பிளக்கருக்கும்

மங்களம சுபமங்களம ஜெயமங்களம்

Labels: , , , , ,

அவசர அதிமுக்கிய அறிவிப்பு

அவசர அதிமுக்கிய அறிவிப்பு

மீண்டும் ஒரு அவசர அதிமுக்கிய அறிவிப்பு


என் பெயரை பயன்படுத்திக் கொண்டு யாரும் வாசகர்களிடம் அதைச் செய்கிறேன், அதை செய்து காட்டுகிறேன் என்று யாரும் பணம் பறிப்பதாக தெரியவில்லை. அப்படி புகார் ஏதும் வரவில்லை. நான் பிரபலமடையவில்லை என்பதையே இது காட்டுகிறது. அப்படி செய்ய நான் யாருக்காவது அனுமதி அளித்துள்ளேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அப்படியே யாரவது செய்தாலும் அதில் தலையிட்டு பஞ்சாயத்து செய்ய நான் விரும்பவில்லை.

that that man/woman that that deals, i know i dont know, i dont see i dont want to see, you see.

ஏற்கனவே அறிவித்தபடி, உலகச் சுற்றுப்பயணம் செய்ய பணம் தேவைப்படுகிறது. நானும், என் வளர்ப்பு (அப்)பிராணியும் அக்டோபர் 12ம் தேதி பாரிசிலிருந்து உலகச் சுற்றுப் பயணம் செய்வதை துவங்குகிறோம். பணம் அனுப்ப விரும்புவர்கள் உடனே அனுப்பி உதவவும். வங்கி கணக்கு துவங்கக் கூட பணம் இல்லை, எனவே உடனே பணம் அனுப்பி உதவவும்.ஸ்விஸ் வங்கியில் உள்ள கணக்கினை ஐ முடக்கிவிட்டார்கள்.எனவே அந்த
கணக்கிற்கு பணம் அனுப்பவேண்டாம். (கறுப்பு பணத்திற்காக முடக்கவில்லை, குறைந்தபட்ச தொகைக் கூட கணக்கில் இல்லை என்பதற்காக முடக்கிவிட்டார்கள்).

பயண நிரல் இறுதியானவுடன் வலைப்பதிவில் இடப்படும்.

மீண்டும் அவசர அதிமுக்கிய அறிவிப்புகள் தேவைப்படும் போதெல்லாம் இடப்படும்.

Labels: , , , , ,

ஞாநிக்கு என் திட்டும், கேள்வியும்

ஞாநிக்கு என் திட்டும், கேள்வியும்

”இந்த வாரத் திட்டு:

எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற முற்போக்கான திட்டத்தின் கீழ் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளித்து இதுவரை 205 இளைஞர்களை
அர்ச்சகர் தகுதிக்குரியவர்களாக்கிய தமிழக அரசு அதில் 3 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதற்காக இ.வா. தி.”

உச்சநீதிமன்றம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வகைசெய்வதற்கு எதிராக தடை உத்தரவு கொடுத்தது 2006ல்.ஆனாலும் அரசு பயிற்சி அளிக்க பள்ளிகளைத் திறந்தது.வழக்கு முடியாத நிலையில், தீர்ப்பு வராத நிலையில் தடை உத்தரவு காரணமாக அவர்களுக்கு பயிற்சி அளித்தாலும் பணிக்கான ஆணை தர முடியாத நிலை உள்ளது.உச்சநீதி மன்றம் பள்ளிகளை துவங்க இடைக்காலத் தடை விதிக்கவில்லை. ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திருத்தத்தினை அமுல் செய்ய தடை விதித்தது.எனவே அரசு பள்ளிகளை துவக்கி பயிற்சி அளித்தும் கதை அறுவைசிகிச்சை வெற்றி, நோயாளி மரணம் என்றாகிவிட்டது.

அரசு தீர்ப்பு வரும் வரை பொறுத்திருந்து தீர்ப்பு சாதகமாக இருந்தால் பின் இந்தப் பள்ளிகளை துவக்கியிருக்கலாம்.அதைச் செய்யவில்லை. பள்ளிகளை துவக்கியவுடன் வீரமணி ஆ ஊ என்று குதித்தார், பெரியார் திடலில் இந்த ‘சாதனை’யை பாராட்டி கல்வெட்டு திறந்தார், பாராட்டுக் கூட்டம் நடத்தினார்.பின் கூட்டங்களில் அந்தக் கோயிலில் பார்பனரர் அல்லோதோர் அர்ச்சனை செய்வார்கள், இந்தக் கோயிலில் பார்பனரர் அல்லோதோர் அர்ச்சனை செய்வார்கள் என்றெல்லாம் பேசினார். நடைமுறையில் 2006ல் விதிக்கப்பட்ட தடை உத்தரவு இன்னும் 2009லும் தொடர்கிறது. பயிற்சியில் சேர்ந்த மாணவர்களுக்கு இதனால் இழப்பு.வீரமணிக்கோ,
பிற ‘முற்போக்கு’ களுக்கோ அல்ல. இவர்களின் முட்டாள்த்தனமான ‘முற்போக்கு’ கேலிக்கூத்துகளுகளால் யார் கடைசியில் பாதிக்கப்படுகிறார்கள்?.

ஞாநிக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அரசை திட்டியிருக்க வேண்டும், அவசரப்பட்டு இந்தப் பள்ளிகளை திறந்து, பயிற்சியளிததத்ற்காக. அதை விடுத்து அரசு
ஏதோ வேண்டுமென்றே வேலை தரவில்லை என்று எழுதியதற்காகவும், உண்மையை முழுமையாக எழுதாமல் விட்டதற்காகவும் ஞாநிக்கு என் திட்டு. ஞாநியைப் பொறுத்தவரை இந்த திட்டம் முற்போக்கானது. நான் அவ்வாறு கருதவில்லை.

"இந்த வாரக் கேள்வி:

வெறும் 4 ஆயிரம் சமபளம் வாங்கும் சத்துணவு, அங்கன்வாடி, பால்வாடி ஊழியர்களுக்கு மேலும் வெறும் 500 ரூபாய் கூட ஊதிய உயர்வு தருவதற்குப் பிடிவாதமாக
மறுத்து வரும் தமிழக அரசு, ஏற்கனவே பத்தாயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வரும் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு மேலும் 6 ஆயிரம் முதல்
21 ஆயிரம் வரை அள்ளிக் கொடுப்பதன் ரகசியம் என்ன ?"

இதில் ரகசியம் இல்லை என்றும் மத்திய அரசு ஊழியர் ஊதிய பரிந்துரை கமிஷன், மாநில அரசின் ஊழியர் ஊதிய பரிந்துரை கமிஷன் அறிக்கைகளின்படி இந்த உயர்வும்
கொடுக்கப்படுகிறது என்று அறிகிறேன்.

ஏற்கனவே மத்திய அரசு பல்கலைகழகங்கள்,ஐஐடிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஊதியங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன/அமைக்கப்படவுள்ளன எனவும் அறிகிறேன். இது குறித்த செய்திகளை ஊடகங்களில் வெளியாகியுள்ளன (உ-ம் ஊதிய உயர்வு குறித்து சென்னை ஐஐடி ஆசிரியர்கள் அதிருப்தி). அவற்றையெல்லாம் ஞாநி படிப்பதில்லையா. இப்படி தீர விசாரிக்காமல் எழுதுவது எந்த வகையில் நியாயம்?

சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளத்தைக் கூட்டக்கூடாது, கல்லூரி ஆசிரியர்களுக்கு கூட்டலாம் என்பததல்ல என் வாதம்.ஞாநி கேட்டிருக்க வேண்டிய கேள்விகள் வேறு?.
எந்த அடிப்படையில் இந்த வேலை(களுக்கு)க்கு இந்த சம்பளம் போதும் என்று தீர்மானிக்கப்படுகிறது?. இதை நிர்யணம் செய்வது யார்?. இப்படி பல கேள்விகள் உள்ளன.

ஆனால் ஞாநி மாறாக ரகசியம் என்ன என்று கேட்கிறார்.இது தவறான அனுமானங்களுக்கும், புரிதல்களுக்கும் வழி வகுக்கும். ஞாநியின் சமூக அக்கறை வேறுவிதமாக
வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

[அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வகை செய்யும் இந்தப் பள்ளிகள், பயிற்சி பெற்றோர், வழக்கின் பிண்ணனி குறித்து முழுமையான புரிதல் இல்லாமல் ஊடகங்களில்
எழுதப்படுவது வாடிக்கையாகிவிட்டது. சில வாரங்களுக்கு முன் தெகல்காவில் ஒரு கட்டுரை வெளியானது.அதை எழுதியவருக்கு இந்த விஷயத்தில் அடிப்படை புரிதல் கூட
இல்லை. அண்மையில் ஒரு வலைப்பதிவிலும் இதைப் பற்றிய ஒரு இடுகையைப் பார்த்தேன். அதே பிரச்சினை- அடிப்படை புரிதல் இல்லாமல் செய்தித்தாள்களில்
வருவதை அடிப்படையாகக் கொண்டு எழுதுவது.நானே பல முறை இந்த விஷயம் குறித்து எழுதியிருப்பதால் மீண்டும் மீண்டும் அதையே எழுதுவது அயர்ச்சி தருகிறது
என்பதால் அந்த வலைப்பதிவில் பின்னூட்டம் இடவில்லை].

Labels: , , , ,

ஐந்து

ஐந்து


1) அண்மையில் அந்த மாநகருக்கு நான்காவது முறையாக சென்றிருந்தேன்.போன ஆண்டு செப்டம்பரில் முதன் முறை சென்றேன். இந்த முறை அந்த மாநகர் அருகில் இருந்த உலக அதிசயம் ஒன்றையும் கண்டேன். நான் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் இணைய இணைப்பு இருந்தது.வலைப்பதிவுகள் (பிளாக்கர்,வோர்ட் பிரஸ்), டிவிட்டர் ஆகியவற்றை பயன்படுத்த/படிக்க முடியவில்லை. கடந்த முறை அவ்வாறில்லை.அதுவும் ஆங்கில தொலைக்காட்சி சானல்களில் சி.என்.என் ஒன்றுதான் பார்க்க இருந்தது. அதனால் பயண அலுப்பை விட சி.என்.என் பார்த்த அலுப்புதான் அதிகமாக இருந்தது :).

2) இண்டர்நெட்டிற்கு வயது 40. மனிதர்களைத் தவிர டிரோஜான்கள்,வோர்ம்கள, போட்கள் என மனிதர் உருவாக்கியவையும் புழங்கும் வெளி அது. வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன், இண்டர்நெட்டே :).

3)நானும் ஒரு எழுத்தாளரும் சில வாரங்கள் முன்பு சந்தித்துக் கொண்டோம். முன்பு மின்னஞ்சலில் ‘பேசிக்’ கொண்டோம். இப்போது நேரில். நிறையப் படிக்க கிடைத்தாலும், நினைத்த படி படிக்க முடியாத நிலையில் நானும், அவரும் இருக்கிறோம் என்று தெரிந்து கொண்டோம். தமிழில் சில எழுத்தாளர்கள் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை படிக்கிறீர்களா என்றார். ஐயா நேரமில்லையே, தொழில் ரீதியாக படிக்க வேண்டியதே அதிகம் என்றேன். பின்னர் அவர் சொன்ன எழுத்தாளர்கள் எழுதியுள்ளதைப் ஒரளவு படித்தேன். பதில் எழுதவோ, விமர்சிக்கவோ நேரமில்லை என்பதால் அவர்கள் எழுதியவறிற்கு எதிர்வினையாற்றப் போவதில்லை. அந்த எழுத்தாளர்களின் பெயர்கள் நான் சொல்லாமலே
உங்களுக்குத் தெரியும் :). தமிழ் வலைப்பதிவுகள்,இணைய இதழ்களைப் தொடர்ந்து விரிவாக பார்க்க நேரமில்லை. பயணங்கள், வேலை, படிக்க வேண்டியது என்று நேரம் சரியாகப் போய்விடுகிறது. போன வாரம் ஒரு பவர் பாயிண்ட் பஜனை, நாளை ஒன்று, அடுத்த வாரம் ஒன்று என்று பஜனை பாடவே நேரம் சரியாக இருக்கிறது :). இதில் இணைய/அஇணைய அக்கப்போர்களில் நுழைந்து எந்தக் கருத்தைச் நான் சொல்ல முடியும்.

இருப்பினும் பொது நலன் கருதி, பின்னூட்டம் வழியே கருத்து சொல்ல ஒரு நிரலியை உருவாக்கியிருக்கிறார் என் நண்பர்; அது random ஆக தெரிவு செய்த பதிவுகளை மேய்ந்து, என் நடையை(?) ஒத்தமாதிரி, ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடும் :).நிரலியின் கருத்துக்கள் என் கருத்துக்கள் அல்ல :). ரவி ஸ்ரீநிவாஸின் கருத்துக்கள் நிரலியின் கருத்துக்கள் அல்ல, நிரலின் கருத்துக்கள் ரவி ஸ்ரீநிவாஸின் கருத்துக்கள் அல்ல, இரண்டுமே நிரலியை உருவாக்கியவர் கருத்தாக இருக்கத் தேவையில்லை என்பதையும் நிரலி விரைவில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் :). ஆனால் இந்த டிஸ்கி பின்னூட்டங்களில்
இடம் பெறாது :).

4)எப்படியோ நானும் ஐநூறு இடுகைகளை இந்த வலைப்பதிவில் இட்டுவிட்டேன்.ஆம், இது 500 வது இடுகை.உங்கள் ஆதரவிற்கு நன்றி.

5)நான் கிட்டதட்ட எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறேன் என்பதை அறிய கீழே உள்ளப் படத்தைப் பார்க்கவும :).

Labels: , , ,

இன்று பிறந்த நாள், வயது 50

இன்று பிறந்த நாள், வயது 50

செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி இன்று. யாருக்கு இன்று பிறந்த நாள், வயது ஐம்பது என்று யோசிக்கிறீர்களா.

செமினார் இதழுக்கு இன்று பிறந்த நாள், வயது 50. அதையொட்டி ஒரு கடிதம் இங்கே. பல ஆண்டுகளாக செமினார் இதழின் வாசகன் நான். அந்த வகையில் என் வாழ்த்துக்களையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

Labels: , , ,