20/32 கேள்வி -பதில்

20/32 கேள்வி பதில்

1 உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் கடவுள் மாதிரி பாபா இணையத்தில் எங்கெல்லாம் பதிவு வைத்திருக்கிறார், என்ன எழுதுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம் :).Snap Judgment ல் பதிவுகளுடன் தகவல்கள்,இணைய முகவரிகள் இருக்கும்.
வாரத்திற்கு ஒரிரு முறை பார்த்துவிடுவேன். பிடித்த பதிவு என்று எதைத் சொல்வது :).

2 நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?மாட்டேன், நட்பாகத்தான் இருப்பேன் :). முன்பு இணையம் மூலம் பல நண்பர்கள்/நண்பிகள் கிடைத்தார்கள்.பல நன்மைகள், சில பிரச்சினைகள் ஏற்பட்டன.. VSNLல் பலரின் அக்கவுண்ட் ஹாக் செய்யப்படதில் நானும் பாதிக்கப்பட்டேன். இப்போது பேஸ்புக், ஹய்5 போன்றவற்றில் சேருமாறு நண்பர்கள் வற்புறுத்தினாலும் சேர்வதில்லை. நேரமின்மை முக்கிய காரணம்.

3 ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
முகத்தை, தெரிந்தவர் என்றால் கை குலுக்க முயல்வேன். சிலவற்றை கவனித்தாலும் வெளியே சொல்வதில்லை :).

4 உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?தன்னம்பிக்கை, அதற்குப்பின் உள்ள (நான் இருப்பதாக நினைக்கும்) அறிவாற்றல்.பிடிக்காது சிறிது சோம்பேறியாய் இருப்பது,இன்னும் படித்தபின் எழுதலாம் என்று தள்ளிப்போடுவது. தன்னம்பிக்கை காரணமாக துணிந்து எடுத்த முடிவுகள் சரியா, தவறா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

5 உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது?சரி பாதி பற்றி எதுவும் சொல்வதாக இல்லை.

6 மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?
கேள்வி புரியவில்லை :).

7 இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
முந்தைய தலைமுறையில், அதற்கு முந்தைய தலைமுறையில் பல உறவினர்களை, நண்பர்களை இழந்திருக்கிறேன். அவர்கள் பக்கத்தில் இல்லாவிட்டாலும் உலகில் இருந்திருந்தால் போதும்.

8 என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
கணினியின் திரையைப் பார்த்துக் கொண்டு என் அறையில் இருக்கிறேன். எதையும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.

9 பிடித்த மணம்?

சந்தனம், நெய், மல்லிகை,காபி.. நெய்யை உருக்கும் போது வரும் மணம் பிடிக்கும்.சிறுவயதில் நாங்கள் இருந்த ஊரில் பக்கத்து கிராமங்களிலிருந்து வெண்ணை கொண்டுவந்து காய்ச்சித் தருவார்கள். அதற்கென்று பாத்திரம் இருக்கும்.
வெண்ணையை காய்ச்சும் போது எழும் மணம், காய்ச்சிய வெண்ணை நெய்யாக உருகி வரும் மணம், அது பின்னர் கெட்டியான பின் தரும் மணம்- மூன்றும் பிடிக்கும். காய்ச்சும் போது அதில் கறிவேப்பில்லை கிள்ளிப் போடுவார்கள். பின்னர் நெய்யை ஒரு பாத்திரத்தில் விடுவார்கள். காய்ச்சிய பாத்திரத்தில் அடியில் தங்கும் கசண்டை வழிப்பார்கள்.
அதன் ருசியும்,மணமும் ஆஹா !. அந்தக் காலமெல்லாம் நினைவில்தான் இனி :(.

புது புத்தகத்திலிருந்து வரும் மணமும் பிடிக்கும். இந்தியாவில் இருந்த போது வான் அஞ்சல்/தரைவழி அஞ்சல் மூலம் வெளிநாட்டிலிருந்து நூல்கள் வரும் -மதிப்புரைக்கு, அன்பளிப்பாக என்று. அந்தப் புத்தம் புதிய நூல்களிலிருந்து, (அவை பல சமயங்களில் hot off the press ஆக எனக்கு வரும்) வரும் மணம் மிகவும் பிடிக்கும்.

10 பிடித்த விளையாட்டு?
முன்பு சில விளையாட்டுகளில் ஆர்வம் இருந்தது. இப்போது அவ்வளவு இல்லை. தொலைக்காட்சி முன் உட்கார்ந்து பார்க்கும் பொறுமை இல்லை. இணையம்/செய்தித்தாட்கள் மூலம் தெரிந்து கொள்வேன்.

11எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

சில படங்களை ஜாலியாகப் பார்ப்பேன், சிலவற்றை சில காட்சிகளுக்கு, பாடல்களுக்கென்று. பலவகைத் திரைப்படமும் பிடிக்கும். 'உலக சினிமா'வும் பார்ப்பேன், எம்ஜிஆர் படமும் பார்ப்பேன், திரையரங்கில் பார்த்து பாதியில் ஒடி வந்த படங்களும் உண்டு.

12 என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

இந்தக் கேள்விக்கு பதில் தரக்கூடாது என்று பாஸ்டன் அருகே உள்ள ஊரிலிருந்து ஒருவர் கூறியிருக்கிறார் :). என் சரிபாதி நூற்களாக வாங்கிக் தள்ளுகிறார், கவுண்டி (county) நூலகத்தில் பாதியை வீட்டில் வைத்திருக்கிறார், இதைப் படிக்கிறேன் என்றால் அதையும் வாங்கிவிடுவார் அல்லது நூலகத்தில் தூழவுவார், அதற்கு நானும் உடந்தையாகக் கூடாது என்று சொல்லிவிட்டார் :). எனவே இந்தக் கேள்விக்கு பதில் பொதுவில் தரப்படமாட்டாது :)

13 உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?மாற்றுவதேயில்லை. மடிக்கணினி, அலுவலகக் கணினி, வீட்டுக் கணினி என மூன்றில் ஒரே படம்தான். ஆனால் அந்த படத்தில் இருப்பவரின் கணினிகளில் டெஸ்க்டாப்பில் படமே இருக்காது.

14 பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?காதிற்கு எரிச்சலுட்டாத எந்த சத்தமும் பிடிக்கும். ஒலிகளில் உள்ள பன்வகைத்தன்மையை ரசிப்பேன் நான்.

15 வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

உலகமே வீடு என்றாகிவிட்ட நாடோடி நான். சந்திரனுக்கோ, சனிக்கோ, செவ்வாய்க்கோ போக வாய்ப்பில்லை.முதன் முதலில் தனியே பயணம் செய்தது 8/9 வயதில் கிட்டதட்ட 2.5 மணி நேர பேருந்துப் பயணம். இந்த ஊரில் ஏற்றிவிடுவார்கள். ஒரு பையில் கொறிக்க
ஏதாவது, புத்தகம்/புத்தகங்கள், மற்றும் பணம். ஒட்டுனர், நடத்துனரிடம் எங்கே இறக்கி விட வேண்டும் என்றும் சொல்லிவிடுவார்கள்.ஒட்டுனர் மறந்தாலும் நான் சரியான நிறுத்ததில் நிறுத்தச் சொல்லி இறங்கி தனியே நடந்து போய்விடுவேன். அப்போது பயம்
இல்லாமல் தனியாக நான் வசித்த ஊர்களில் நிறைய சுற்றியிருக்கிறேன்.

இந்தியா வீடு என்றால் தைபி, பீஜிங், ஆஸ்தேரலியா, கனடா என்பவற்றை அதிக பட்சத் தொலைவுகளாகக் கொள்ளலாம்.

16 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நான் ஜீனியஸ் -cum- பைத்தியக்காரன் என்றால் உலகம் நான் பைத்தியக்காரன் என்று நிரூபித்துவிடும் ; பைத்தியக்காரன் என்றால் அதுதான் தெரியுமே என்று சொல்லிவிடும்; ஜீனியஸ் நான் என்றால் கண்டு கொள்ளாது :). தனித்திறமை இருக்கிறது என்பதை உலகம் ஒப்புக் கொள்வதில்தான் பிரச்சினை :).

சில சம்பவங்களை இங்கே பகிர்கிறேன்.

1)நெருங்கிய உறவினர் ஒருவருக்கு திருமணத்திற்காக பெண் தேடினார்கள். நான் அப்போது அரை டிராயர் போடுகிற பையன். ஒரு நாள் இரவு சாப்பிட்ட பின் அவர் பெற்றோர், தங்கை, அவர், நான் அனைவரும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தோம். எந்தப் பெண்ணை தெரிவு செய்வது என்று பேசி முடிவு செய்ய வேண்டும். என் உறவினர் தன் தெரிவினை, நீண்ட விளக்கத்துடன் கூறினார். அப்போது மணி கிட்டதட்ட 12. அவர் சொல்லி முடித்த அடுத்த வினாடி நான் சொன்னேன் - Freedom lost at midnight. அவர் என்னை விட கிட்டதட்ட 20 வயது பெரியவர். வயது வித்தியாசம் பாராமல் கிண்டல் செய்வது, வாதிடுவது என்று வளர்ந்த காலம் அது. அந்த நேரத்தில் Freedom lost at midnight என்று சட்டென்று சொல்ல எத்தனை பேருக்குத் தோன்றும்.

அவர் திருமணம் முடிந்த பின் அன்று இரவு அவரை யாரோ தேடினார்கள், நானும் சில நண்பர்கள், உறவினர்கள் உட்கார்ந்திருந்தோம். எங்களிடம் வந்து கேட்டார்கள். அவர், மனைவி கூப்பிட்டார் என்பதற்காக அவரிடன் பேசப் போயிருந்தார். நான் சட்டென்று கேட்டவரிடம் He is entertaining the Dragon என்று முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு சொன்னேன். ஒரு கணம் அவருக்கும், பிறருக்கும் புரியவில்லை. புரிந்த பின் ஒரே சிரிப்பலைதான். அதை அவரிடமும் பின் சொல்லிச் சிரித்தார்கள். (அப்போது Enter the Dragon ஒடிக் கொண்டிருந்தது).அரை டிராயர் போடுகிற வயசில் இது போல் நிறையக் கிண்டல், கேலி செய்திருக்கிறேன், கேலி செய்யப்பட்டாலும் பதிலுக்கு கிண்டல் செய்திருக்கிறேன்.

2) அவர் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர், சட்ட நிபுணர், நிறைய எழுதியிருக்கிறார். நானும் அவரும் ஒரு குழுவில் உறுப்பினர்களாக இருந்தோம். அது விஷயமாக அவரை வீடு-cum-அலுவலகத்தில் சந்த்திதேன். போன உடன், ரவி, இப்போது இந்த மாநிலத்திலிருந்து
இன்னார் பேசினார், அவர்கள் இது விஷயமாக சட்டம் கொண்டு வர விரும்புகிறார்கள், என் உதவியைக் கேட்கிறார்கள், நீ என்ன நினைக்கிறாய் என்றார். சொல்லி முடித்தவுடன் அவர்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்றேன். ஏன் என்றார், அரசியல் சட்ட
விதிகளைக் கொண்டு விளக்கினேன். உதவியார் ஒருவரை அரசியல் சாசன நூலைக் கொண்டுவரச் சொன்னார். புரட்டிப் படித்தார். கிட்டதட்ட 30 நிமிடம் விவாதம். நான் விரிவாக அரசியல் சட்ட பிரிவுகள், நீதிமன்ற தீர்ப்புகள், அதிகார பகிர்வு என்று பலவற்றை
ஆதாரம் காட்டிப் பேசினேன். இறுதியில் நான் சொன்னது சரியான வாதம் என்று ஒப்புக் கொண்டார். அவர் அப்படி ஒரு கேள்வியை எழுப்புவார் என்று எனக்குத் தெரியாது, அந்தக் கேள்வி பற்றி முன்பு யோசித்ததும் இல்லை. அவர் சொல்லி முடித்து வாய் மூடியவுடன் நான் என் வாதத்தினை துவக்கி விட்டேன். மூத்த வழக்கறிஞர் உங்களுக்குத் தெரியாததா என்று மழுப்பல் பதில் தரவில்லை. அந்த மூத்த வழக்கறிஞர் பின்னர் சிலவற்றில் நீ எனக்கு என்ன படிக்க வேண்டும் என்று சொல்லு, என் அறிவை update செய்து கொள்கிறேன் என்றார். நானும் படிக்க பலவற்றை பரிந்துரைத்து சிலவற்றை அனுப்பியும் வைத்தேன்.

3)என்னுடன் பணியாற்றிய பெண் என்னை கன்புஷியஸ் என்பார் விளையாட்டாக. நாங்கள் நல்ல நண்பர்கள்.ஏன் கன்பூஷியஸ் என்றால் நீ நினைத்தால் பிறரை பேசியே குழப்பிவிடுவாய் என்பார். நீ ஒன்று சொன்னால் பல சமயங்களில் அதற்கு மூன்று/நான்கு அர்த்தம் இருக்கும் அது பிறருக்கு சட்டென்று பிடிபடாது என்பார். அது உண்மைதான். ஏனென்றால் சாமர்த்தியமாக கிண்டல் செய்வது, வார்த்தைகளை வைத்து விளையாடுவது போன்றவற்றில் நான் ஈடுபடுவதுண்டு. சிலருக்கு நுண்ணிய நகைச்சுவை புரியாது, அதனால் நான் கிண்டல் செய்கிறேன் என்பதே புரியாது, ஆனால் வேறு சிலருக்கு புரியும், அவர்கள் என் பேச்சில் உள்ள விஷமத்தை புரிந்து கொண்டு விடுவார்கள்.

பல தருணங்களில் முன் தயாரிப்பின்றி, குறிப்பு இன்றி வாதிட்டிருக்கிறேன். எதையாவது கேட்டால், அதைப் பற்றி முன்பு யோசித்திருக்க மாட்டேன், ஆனால் கேட்ட மாத்திரத்தில் பதில் உடனே வந்துவிடும். கிண்டல் என்றால் பதில் கிண்டலும் உடனே வந்துவிடும்.

17 உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நிறம்,பிறப்பு, பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பது, நடத்துவது, அதை நியாயப்படுத்துவது.

18 உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஸ்விட்சர்லாந்து. பொதுவாக மலையும், மலைசார்ந்த இடங்கள், காடுகள்.

19 எப்படி இருக்கணும்னு ஆசை?

இன்னும் productive ஆக. பணம் உட்பட பிற வசதிகள் இன்னும் அதிகமாக இருந்தால் சிலவற்றைச் செய்ய முடியும். அதற்காக அவற்றை
எப்படியும் அடைய விரும்பும் ஆசை இல்லை.

20 வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
Just Live it !.

Labels: ,

1 மறுமொழிகள்:

Blogger Boston Bala மொழிந்தது...

#16 ---16 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?---

பதில் அருமை!

நன்றிகள் பல.

2:34 PM  

Post a Comment

<< முகப்பு