இறுதித் துயரா? புதிய நம்பிக்கையா?

இறுதித் துயரா? புதிய நம்பிக்கையா?

துயர் தொடர்கிறது. அது இறுதியா என்று தெரியவில்லை. புதிய நம்பிக்கை என்று எதுவும் தெரியவில்லை. ஒருவேளை அது நம் கண்களுக்குத்தான் புலப்படவில்லையா?. எது எப்படியாயினும் ‘முடிவில்லாத துயரிலும் சுப முடிவு காணும் இவள் மனம்' என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியதுதானா?(1). நிகழ்காலம் நம்முடன் கண்ணாமூச்சி விளையாடுகிறது. நம் அனுமானங்கள். நம்பிக்கைகளை அது கடலலைகள் மணல் வீடுகளை
கலைப்பது போல் கலைக்கிறது. ஆயிரம் யானைகளை கொன்றால் பரணி, இங்கு கொல்லப்பட்டது யானைகள் அல்ல. இந்த சமகால உலகில் ஆயிரம் யானைகள் கொல்லப்பட்டால் எழுப்பபடும் கண்டனங்கள் கூட அதை விட அதிக எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டால் எழாதா?. மனித வாழ்வையும், சாவையும் collateral damage
என்று வகைப்படுத்திவிடலாமா?. எல்லா உணர்வுகளையும் தேசியம், பயங்கரவாதம், வன்முறை போன்ற சொல்லாடல்களால் சுத்திகரிக்கப்பட்ட பின் தான் வெளிப்படுத்த வேண்டுமா. அனைத்தின் நியாய/அநியாங்களும் சில சொல்லாடல்கள் மூலம்தான் பேசப்பட வேண்டுமா அல்லது விளங்கிக் கொள்ளப்பட வேண்டுமா. வாள் எடுத்தவன் வாளால் அழிவான் போன்ற இட்லிவடைத்தனமான அபத்த வாசகங்களை எழுதுவதால் அர்த்தமில்லை. வரலாற்றை அவ்வளவு எளிமையாக்குவது பஞ்ச் டையலாக் எழுதப் பயன்படும்.

இந்திய ஊடகங்களின் மீதான நம்பிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. பிணந்தின்னும் சாத்திரங்கள் என்றான் பாரதி, பிணந் தின்னும் ஊடகங்கள் என்று நாம் இன்று சொல்லலாம். ஸ்பான்ஷர்ச்ஷிப் கிடைத்தால் கொலைச் செய்யப்படுவதையும் 'லைவ்' ஆக காட்ட தயங்க மாட்டா இவை. அதன் பின் அந்தக் கொலையை பற்றி விவாதிப்பார்கள். 'அறிவு ஜீவிகள்' , ‘பொது மக்கள்' கலந்து கொண்டு பேசலாம், குறுஞ்செய்தி அனுப்பலாம்..

கடந்த ஆயிரம் ஆண்டுகளின் கடைசி 500 ஆண்டுகள் மிகவும் கொடுரமானவை. ஒரு புறம் அறிவியல் வளர்ச்சி, பகுத்தறிவு, தனிநபர் உரிமைகள் போன்றவை மேலோங்க, இன்னொரு புறம் கொடுரமான இனப்படுகொலைகள், இன அழிப்புகள், காலனியாதிக்கம், அடிமை வணிகம், இவற்றிற்கு எந்த விதத்திலும் குறையாதபடி இயற்கை மீதான தாக்குதல், மூலவளங்களுக்கான போட்டிகள், இறையாண்மை என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள். இப்போது நடப்பவை அதன் தொடர்ச்சிதானோ. களம் மாறினாலும், ஆடுவோர் மாறினாலும், ஆட்ட விதிகள், முடிவும் அதேதானோ?.

சில ஆண்டுகளுக்கு முன் ஷிவ் விஸ்வநாதன் தேசம், ஒதுக்கல், இனப்படுகொலை குறித்து ஒரு சிறிய, முக்கியமான கட்டுரையை எழுதினார். அதை அப்போதே படித்தேன். அதை மீண்டும் படிக்க வேண்டும்.(2). இப்படி நூல்களில், கட்டுரைகளில் புகலிடம் தேடி அலைகிறது மனம், நிதர்சனத்தின் அழுத்ததலிருந்து விடுபட, நம்பிக்கையை கண்டடைய.

இனம்புரியாத வெற்றிடம்தான் மனதில் எழுகிறது. இல்லை, நம்பிக்கை, அவநம்பிக்கை இரண்டிற்கும் இடையில் உள்ள ஒன்றில் மனம் அலைகிறது. எதைப் பற்றிக் கொண்டு அது இளைப்பாறும், எதில் நம்பிக்கை வைக்கும், எதில் தீர்வினைத் தேடும். புரியவில்லை. நம்பிக்கை ஒன்றை ஒரு பொழுதும் இழக்காமல் இருப்பது எளிதல்ல. வேறு வழியில்லை, சோர்வதில் அர்த்தமில்லை என்று தேற்றிக் கொள்ளலாம்.

(1) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தில் நடிகை பார்க்கும் நாடகம் என்று துவங்கும் பாடலில் வரும் வரி இது. எழுதியவர் ஜெயகாந்தன் பாடியவர்கள்
ஜாலி அப்ரகாம், பி.எஸ். சசிரேகா இசை எம்.எஸ்.விஸ்வநாதன் மேல் விபரங்களுக்கும், பாடலைக் கேட்கவும் http://www.dhool.com/sotd2/746.html

(2)Theory, Culture & Society, Vol. 23, No. 2-3, 533-538 (2006)
Nation-Shiv Visvanathan

The essay traces the definitions of nation through various stages, outlining the consequences of each definition. It emphasizes that the movement to exclusivity has been genocidal and then hints at the possibility of re-reading the idea of nation.
ஷிவ் எழுதியுள்ள இந்தக் கட்டுரை தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

Labels: , , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு