கணிதமயமாகும் உலகம் குறித்து சில பார்வைகள்

கணிதமயமாகும் உலகம் குறித்து சில பார்வைகள்

[முந்தைய இடுகையில் குறிப்பிடப்பட்ட கட்டுரை இது. கட்டுரை கீழே]
முன் குறிப்பு:

1) இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட Computer Power and Human Reason என்ற நூலை எழுதிய வைசன்பாம் சில ஆண்டுகள் முன்பு காலமானார்.

2) ஷெரி டர்க்கிலின் 'Second self ' - computers & Human spirit என்ற நூலை சுட்டிக்காட்டியுள்ளேன். அந்த நூல் வெளிவந்து 20 ஆண்டுகள் வெளியானதையொட்டி அதன் புதிய பதிப்பு 2005ல் வெளியானது. டர்க்கில் அண்மையில் பதிப்பித்துள்ள நூல் என் வாசிப்புப் பட்டியலில் இருக்கிறது.

3) தமிழில் நான் அதிகம் எழுதவில்லையே ஒழிய, அறிவியல் தொழில் நுட்பத்தின் சமூக தாக்கங்கள் குறித்த என் வாசிப்பு இன்றும் தொடர்கிறது இப்போது உயிரிய அறம் (bioethics) என்பதும் எனது அக்கறைகளில் ஒன்று. அன்றுடன் ஒப்பிடுகையில் எனது புரிதலின் தளம் வெகுவாக விரிந்துள்ளது. அன்று Bioethics குறித்து நான் ஒரளவே அறிந்திருந்தேன். முன்பு படிக்க நூல்கள், கட்டுரைகள் கிடைப்பது எளிதாக இல்லை. இன்று நிலைமை மாறிவிட்டது. நூற்றுக்கணக்கான புத்தகங்கள், கட்டுரைகள் படிக்க கிடைக்கின்றன. வாசிக்க நேரமிருப்பதில்லை. அல்லது நேரமிருந்தாலும் சிலவற்றிற்கே முன்னுரிமை தந்து படிக்க முடிகிறது.

4) தமிழில் எழுத என்னை ஊக்குவித்த, நிகழில் தொடர்ந்து என் கட்டுரைகளை வெளியிட்ட கோவை ஞானியை இங்கு நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

5)வைனர் பற்றி யாரவது தமிழில் விரிவாக எழுத வேண்டும். அவரது வாழ்க்கை வரலாறு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான Dark Hero என்ற நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது. அவர் எழுதிய நூல்களும் கிடைக்கின்றன. அதே போல் ஒப்பன்ஹீமரும் முக்கியமானவர். இருவரையும் ஒப்பிட்டும் எழுதலாம். Jungkன் நூற்கள் இப்போதும் கிடைக்கின்றன என்று நினைக்கிறேன். நூல்கங்களில் இருக்கக் கூடும். விக்டர் பிராங்கல் இருத்தலியல் உளவியலாளர்களில் ஒருவர். அவரது நூற்கள் இப்போது எளிதாக கிடைக்கின்றன. பிராங்கல்,
ஆர்.டி.லெய்ங், எரிக் பிராம் குறித்த அறிமுகக் கட்டுரைகளை நிகழில் வெளியாயின. அவற்றை ஆங்கிலத்தில் எழுதிய பேராசிரியர் ஏ.வி.அசோக் மூலம்தான் நான் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டேன். பூக்கோ என்ற பெயரையும் லெய்ங் தனது நூல் ஒன்றில் எழுதிய முன்னுரை குறிப்பு மூலம் முதலில் அறிந்தேன். அன்று தமிழில் பூக்கோ அறிமுகமாகியிருக்கவில்லை. என் அறிவுப் பசிக்கு நல்ல தீனி போட்ட பேராசிரியர் ஏ.வி.அசோக்கை இங்கு நன்றியுடன் நினைவுகூர்கிறேன். பல நூல்களை எனக்கு படிக்க தந்தது மட்டுமின்றி, விரிவான விவாதங்கள் மூலம் எனக்கு பலவற்றை விளக்கியவர் அவர்.

6) கட்டுரையிலும், இறுதியில் உள்ள நூற்பட்டியலிலும் சொற்ப் பிழைகள் உள்ளன. அவற்றைத் திருத்தாமல் அப்படியே வலையேற்றியுள்ளேன்.

7) இக்கட்டுரை வெளியாகி கிட்டதட்ட 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் கட்டுரையை நான் எப்போதோ கடந்து சென்றுவிட்டேன்.
கணிதம் கம்ப்யூட்டர் சமூகம் : கணிதமயமாகும் உலகம் குறித்து சில பார்வைகள்

1619 நவம்பர் 10-ல் பிரெஞ்சுக்காரரான தெகார்தே கண்ட கனவுகள் மானுட சிந்தனையில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வித்திட்டன. நவீன பகுத்தறிவின் யுகம் அன்று துவங்கியதாகக் கொள்ளலாம். அவர் கண்ட கனவுதான் என்ன! அதில் வந்து உண்மையை உணர்த்தியது ஆண்டவனா? இல்லை பூதமா? என்ற கேள்விகள் எழலாம். அவர் பல வாரங்களாக யோசித்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு அன்று விடை கிடைத்தது; ஏதோ மேதைமை அவரை ஆட்கொண்டது போன்ற நிலையில் பதில்கள் மனத்தில் பளிச்சிட்டன; ஒன்றன்பின் ஒன்றாய் தோன்றின; பின் சோர்ந்த நிலையில் படுக்கைக்குச் சென்றார். அவர் மூன்று கனவுகளைக் கண்டார்.

முதல் கனவில் அவர் புயற்காற்றால் சுழற்றி அடிக்கப்பட்டார். பூதகணங்கள் அவரைப் பயமுறுத்தின. தொடர்ந்து விழுவதைப் போன்ற உணர்வு அவருக்கு இருந்தது. ஏதோ தூர தேசத்திலிருந்து வந்த பூசணிக்காய் தனக்கு அளிக்கப்படும் என்ற கற்பனை தோன்றியது. காற்று வீசுவது நின்றது. இரண்டாவது கனவில் அவரது அறையைச் சுற்றிப் பொறிகள் பறந்தன. மின்னலும் இடியும் அறையைச் சுற்றிக் கொண்டன. மூன்றாவது கனவில். எல்லாம் அமைதியாக இருந்தன. மேசையின்மேல் ஒரு கவிதைத் தொகுப்பு உள்ளது. அதை எடுத்து "வாழ்வில் எந்தப் பாதையை நான் மேற்கொள்வேன்" என்ற கவிதையைப் படிக்கிறார். ஓர் அந்நியன், அவர் முன் தோன்றி ஆம் மற்றும் இல்லை என்ற கவிதையை மேற்கோள் காட்டுகிறான்; புத்தகம் காணாமல் போகிறது; மீண்டும் தோன்றுகிறது. அந்நியனிடம் அதைவிடச் சிறப்பான கவிதையைக் காட்டுவதாக தெகார்தே கூறுகிறார். அந்நிலையில் கனவு கலைகிறது. இவற்றால் விழிப்புப்பெற்ற தெகார்தே பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். தன் கனவுகளுக்கு ஏதோ அமானுஷ்ய மூலகாரணம் உள்ளது என்று தோன்றியது.

அவரது மூன்றாவது கனவு அவருக்குச் சுட்டிக் காண்பித்தது என்ன? விஞ்ஞானத்தை ஒருமைப்படுத்தவும் அறிவைப் பெருக்குவதற்குமான முறையை அதுகாட்டியது. அதன்பின் பதினெட்டு ஆண்டுகள் கழித்து தனது முக்கியப் படைப்பான "Discourse on Method" என்ற நூலில் அத்தரிசனத்தின் விளக்கங்களும் அற்புதமான விஞ்ஞானத்திற்கான அடிப்படைகளும் இருந்தன. தெகார்தேயின் கூற்றுப்படி அவர் கண்டுபிடித்த முறையை அறிவைப் பெற எந்த விஞ்ஞானத் துறையிலும் கையாளலாம். அது கீழ்க்கண்ட மூன்று விதிகளை உடையது.

1) சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக மனத்திற்கு எது தெளிவாகப் புலனாகிறதோ அதை மட்டும் எடுத்துக் கொள்வது - ஏற்றுக் கொள்வது 2) பெரிய சிக்கல்களை சிறியவையாகப் பிரிப்பது, 3) எளிமையானவற்றிலிருந்து தொடங்கி சிக்கலான நுட்பமானவை குறித்து விவாதிப்பது/வாதிடுவது, 4) ஒன்றைச் செய்த உடன் அதை சோதிப்பது/சரிபார்ப்பது. தெகார்தே அனைத்துப் பிரச்னைகளையும் வரைகணித விதிகளுக்கு உட்படுத்தி தீர்வுகாண முயன்றார். கார்டீசியன் வரைகணிதம் அவரது பெயரைத் தாங்கி நிற்கிறது.

அவர் கண்டுபிடித்த முறை மானுட சிந்தனையில் குறிப்பாக, அறிவியலில் புரட்சியை ஏற்படுத்தியது. அவருக்குப்பின் பல கணித மேதைகள் அவர் கண்ட முறையைப் பின்பற்றினர். இரண்டு தலைமுறைகளுக்குப் பின் லெபனிட்ஸ், எங்கும் பொதுவான குணாம்சங்களைப் பற்றிப் பேசினார். அனைத்துப் பிரச்னைகளுக்கும், அவை அறிவியலாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி, பொருந்தக்கூடிய, தீர்வைக் காட்டுகிற ஒரு பொதுவான முறை குறித்த கனவு இது. இதன்படி பிரச்னைகளுக்குப் பகுத்தறிவினைக் கொண்டு முறையாக தர்க்க ரீதியாகக் கணித்துத் தீர்வு காணலாம்.

இந்தக் கார்டீசியப் பார்வை உலகைக் கணித மயமாக்குவதை முதன்மைப்படுத்துகிறது. இன்று இது நம் பார்வையில் பிரச்னையில் பெருமளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தெகார்தேயை முதல் நவீன மனிதன் என்று கொண்டால், நாமெல்லோரும் கார்டீசியர்கள் என்று கொள்வது மிகையாகாது.

தெகார்தேயின் காலத்திற்கும் தற்காலத்திற்கும் பன்னிரண்டு தலைமுறை கால இடைவெளிதான் உள்ளது. ஆனால், ஏற்பட்டுள்ள மாறுதல்களின் விளைவாக இன்று உலகம் கணிதமயமாகிவிட்டது என்றால் மிகையாகாது. சகல துறைகளிலும் கணிதம் இன்று சிறப்பிடம் பெற்றுள்ளது. நேரடியாக இல்லாவிட்டாலும் கணிதம் கண்டுள்ள விதிகள், வழிமுறைகள் இன்று பலதுறைகளில் ஆய்வுகளுக்குப் பயன்படுகின்றன. உயிரியல் விஞ்ஞானங்களில் கூட கணிதமும் அதன் முறையும் (பெருமளவுக்க மரபியல் நோய் பரவுவது பற்றிய ஆய்வுகள் அமைப்பியர் இனத்தொகை ஆய்வுகள் ஆகியவற்றில்) பயன்படுத்தப்படுகின்றன. சமூகவியலிலும், உளவியலிலும் சோதனைகள், புள்ளி விரங்கள், கணிப்புகள், மாதிரிகளைப் பரிசோதித்தல் ஆகியவை பெருமளவுக்கு இடம் பெற்றுள்ளன. பொருளியல் துறைகளில் கணித அறிவும், புள்ளியல் பற்றிய அறிவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளன.

இன்று ராணுவத் திட்டங்களை வகுப்பது, போர்த்திட்டங்களைத் தீர்மானிப்பது உட்பட பலவற்றில் கணிதமும், விளையாட்டு கோட்பாடு Operations research ஆகியனவும் தவிர்க்க இயலாதவை என்பது உண்மை. இதன் விளைவு, இன்று சராசரி மனிதனைப் பற்றிப் படிக்கிறோம். சராசரி வருமானம், போன்ற கருத்துக்கள், சராசரி என்ற புள்ளியியல் கருத்தையும், அதைக் கண்டறிவதற்கான சமன்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டவை. கணிதம் வடிகட்டியாகக்கூட பயன்படுகிறது. நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள், அறிவுத்திறன் சோதனைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பல லட்சக்கணக்கானோரை தகுதியுடையவர்களாகவும், மேலும் பல லட்சக்கணக்கானோர் தகுதி அற்றவர்கள் எனவும் சமூகம் தீர்மானித்திருக்கிறது. இந்த வடிகட்டுதலுக்குக் கணிதம் இன்றியமையாதது.

அறிவுத்திறன், சோதனைத் தீர்வு அதன் அடிப்படை குறித்த சர்ச்சைகள் எழுந்தன. அறிவுத்திறன், சோதனை அளக்கும் அறிவுத்திறன் எத்தகையது? இதில் கருப்பர்கள் வெள்ளையர்களைப்போல அதிக மதிப்பெண் பெற்றுத் தேறவில்லை என்பதற்குக் காரணம் அவர்கள் இயற்கையாகவே அறிவாற்றல் குறைந்தவர்கள் என்பதா போன்றவை விவாதிக்கப்பட்டன. ஆ...ஜெல்சன் என்பவர் தனது நூலில் இச்சோதனை முடிவுகளில் கருப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே உள்ள சராசரி வேறுபாடான 15புள்ளிகள் உயிர் மா...தியிலானது எனக் கூறினார். அதை ஸ்டீபன் ஜே. கோல்ட் உட்பட பலர் எதிர்த்து அந்த இனவாதத்தைக் கண்டித்தனர். I Q சோதனைகளுக்கும், நிறவெறிவாதத்திற்கும் இருந்த தொடர்பை வரலாற்று ரீதியாக விளக்கினார்.

இந்தப் பின்னணியைப் புறக்கணித்துவிட்டுப் பார்த்தால் I Q சோதனைகள் நடுநிலையானவை. தனிநபரின் அறிவாற்றலை அளப்பவை என்று தோன்றும். ஆனால் இங்கு அளக்கப்படுவது அறிவாற்றல் என்றால், அதை வரையறுத்தது, நிர்ணயித்தது யார் என்ற கேள்வியும் அதற்கும் அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் அறிவாற்றலுக்கும் இடையே உள்ள தொடர்பு வேறுபாடு என்ன என்ற கேள்விகளும் முக்கியமானவை.

உண்மையில் அளக்கப்படுவது ஒரு சோதனையில் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களே, விகிதங்களே. இதைப் புரிந்து கொள்ள அளக்கும் முறையைப் புரிந்து கொள்ள வேண்டும். பல தேர்வுகளில் ஆங்கிலம் முக்கியமான ஒன்றாக இடம்பெறுவதையும் இது ஏழைக் குடும்பங்களிலிருந்து, கிராமப்புற பள்ளிகளில் கல்வி கற்றவர்கள் பலருக்குப் பாதகமான ஒன்றாகவும் மேட்டுக் குடியினருக்கும் கான்வென்டுகளில் பயின்ற நகர்ப்புற மாணவர்களுக்கும் சாதகமாகவும் உள்ளதை நாம் அறிவோம். கணிதமயமாக்கும் பார்வையில் இவையெல்லாம் இடம் பெறாதவை. மாறாக மாணவன். மதிப்பெண் என்ற இரண்டும் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண் என்ன என்பதும்தான் இடம்பெறும்.

அமெரிக்காவில் சில தொழில்களை மேற்கொள்ள (இவற்றுள் சிகை அலங்காரம். கார் பழுதுபார்த்தல் ஆகியவை அடங்கும்) ஒரு சில தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பது இப்படி அவசியம். அதாவது 'எதையும் அளக்கலாம்; அளப்பதுதான் சரியானது' என்ற கணித மயமாக்கும் பார்வை சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்படி சமூகத்தின் அடுக்குவரிசையைக் கட்டிக் காக்கிற, புதிய அடுக்கு வரிசைகளை உருவாக்குகிற ஒன்றாக கணிதமணமாக்கும் பார்வை உள்ளது.

இந்த கணிதமயமாக்கப் பார்வையைத் தெறம்பட செய்பவை 'கம்ப்யூட்டர்கள்'. கம்ப்யூட்டர்களின் மூலம் லட்சக்கணக்கான மக்களைப் பற்றியத் தகவல்களைக் குறியீடுகளாக மாற்றி தகவல் சேகரிக்கலாம்; சேகரித்தத் தகவலை வரிசைப்படுத்தலாம்; பல வழிகளிவ் உபயோகப்படுத்தலாம்; இதன்படி மனிதன் என்பவன் அந்த குறியீடுகளின் தொகுப்பாகக் குறுக்கப்படுகிறான்.

இரண்டாம் உலகப்போரின்போது பல கணித நிபுணர்கள் இராணுவ, பாதுகாப்பு, தற்காப்புத் துறைகளில் முக்கியமான ஆய்வுகளில் ஈபூட்டனர்; ஆலோசனைகள் வழங்கினர். இது சில முக்கியமான கண்டுபிடிப்புகளக்குக் காரணமானது. 'மூன்றாம் உலகப்போர்' மூண்டால் அதில கணித நிபுணர்கள், கம்ப்யூட்டர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும். அணுகுண்டுத் தயாரிப்புத் திட்டமான, மன்ஹாட்டன் திட்டத்தில் கணித நிபுணர்கள் முக்கியப் பங்காற்றினர். இன்று அமெரிக்க இராணுவத்துறை கம்ப்யூட்டர் துறையில் பெருமளவுக்க இராணுவ சம்பந்தப்பட்ட ஆய்வுகளுக்காக நிதி உதவி வழங்குகிறது. விண்வெளிப்போர் திட்டம் பெருமளவுக்கு கம்பூயூட்டர்களை நம்பி உள்ளது. விண்வெளிப்போருக்குத் தேவைப்படும் ஆணைக் குறிப்புகள் கிட்டத்தட்ட கோடிவரிகளைக் கொண்டிருக்கும் எனப்படுகிறது. ராணுவத்துறை ஆய்விற்காக எளிதில் கம்ப்யூட்டர்களை பெறமுடிகிறது. ஆனால், சமூகப்பொறுப்புடைய கம்ப்யூட்டர் வல்லுனர்கள் தமக்கென ஒரு அமைப்பை உருவதக்கியுள்ளார். அவர்களைப் பொறுத்தவரை கட்டுப்பாடு நம் கைகளை மீறி, கம்ப்யூட்டர் அமைப்புகள் வசம் போனால் என்ன நிகழும் என நிச்சயமாய் யாராலும் கணிக்க இயலாது என்கின்றனர்.

எனவே, 'தார்மீக ரீதியாக மனித இனத்தின் அழிவினை இத்தகைய ஆய்வுகள் துரிதப்படுத்தா' என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. இங்கு விண்வெளிப்போர் குறித்த ஆணைக்குறிப்புகளை உருவாக்குவதில் எழுந்துள்ள பிரச்னைகளையும், அதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ள அச்சங்களையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

கம்ப்யூட்டர் துறைப் போராசிரியர்கள்,மாணவர்கள், 'கம்ப்யூட்டரே கதி ' என அதன்முன் பசி, தூக்கமின்றி மணிக்கணக்காய், நாட்கணக்காய்த் தங்கள் அறிவையும் திறனையும் அர்ப்பணம் செய்வார்கள். (இவர்கள் ஹேக்கர்ஸ் என அழைக்கப்படுவர்) இவர்களின் சிந்தனைப் போக்குகள் வாழ்க்கை, உரையாடல்கள் ஆகியவவற்றை ஆராய்ந்த ஷெரிடர்கில் என்ற சமூகவியலாளர், கம்ப்யூட்டர் எப்படி இவர்கள் சிந்தனையை பாதித்துள்ளது என்பதை விவரிக்கிறார். சிலர் தங்களைக் கம்ப்யூட்டருடன் ஒப்பிட்டு பேசுவதையும் சிலர் தங்களைக் கிட்டத்தட்ட கம்ப்யூட்டர்கள் எனக் கருதுவ¨யும் சுட்டிக் காட்டுகிறார். மேலும் சிலர் இப்போக்கை வரவேற்பதையும், மனத்தையும் நம்மையும் இயந்திரங்களாகக் காண்பதில் தவறு என்று ஏதும் இல்லை என வாதிடுவதையும் காண்கிறோம். இருத்தலியல் உளவியல் சிகிச்சை முறையில் முக்கியமானவரும், நாசிசத்தின் கொடுங்கரங்களில் தன் குடும்பத்தை இழந்து அதிசயமாய் உயிர்ப்பியவருமான விக்டர் பிராங்க்கில் குறிப்பிட்டுள்ள சில கருத்துக்களைக் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது. இயந்திரமயமாக்கல் மனிதனின், தன்னைப் பற்றிய புரிதல் மாறுதல் அடையலாம். தன்னை ஒரு சிந்திக்கும் கூட்டிக் கழிக்கும் இயந்திரத்துடன் மனிதன் ஒப்பிட்டு தவறான விளக்கத்தைப் பெறலாம். தன்னை கடவுள் படைப்பில் ஒன்றாகக் கண்ட மனிதன் பின் தன்னையும் படைப்பவனாகக் கண்டான். ஆம்! அவன் படைத்த இயந்திரங்களைப்போல் தன்னையும் ஒரு கூட்டல் கழித்தல் இயந்திரமாகக் காண்கிறான்.

மனிதனைப் பற்றிய குறைப்புவாதங்களை பிராங்க்கில் கூறுகிறார். இவற்றின்படி மனிதன் எதிர்வினைகளை வெளிப்படுத்தும் இயந்திரம்; உளவியல் ரீதியாக ஒருசில ஆசைகள். சக்திகளின் தொகுப்பு; அவனது பொருளாதாரச் சூழலினால் உருவாக்கப்பட்டவன். மானுட சாராம்சம் இவற்றால் மறுக்கப்பட்டு நீக்கப்பட்டது.

மனிதனைப் பற்றிய இத்தகைய உருவகம், பார்வை நம்மை நாசிகளின் கொலைக் களங்களுக்கு நேராய் இட்டுச்செல்லும் அபாயம் உள்ளவை என்கிறார். இந்தக் கருத்துகள் அவர்; 1957 ல் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்திய சமகால கூட்டு சமூக மனநோய்கள் என்ற உரையில் தெரிவித்துள்ளார்.

தான் உருவாக்கிய ஒன்றின் தாக்கம் குறித்து கவலை கொண்ட ஜோசப் வைசன்பாம் என்ற பேராசிரியர் தன் துறையில் உள்ள சில போக்குகளையும், மனத்தை மனிதனை கம்ப்யூட்டர்களுடன் ஒப்பிடுவதையும் எதிர்த்து பேசியும் எழுதியும் வருகிறார். 1960களில் அவர் எலிசா என்ற ஆணைக்குறிப்பை உருவாக்கினார். இதில் கம்ப்யூட்டர் ஒரு பகுப்பாய்வு உளவியலாளர் போல் உங்களுடன் உரையாடும் கேள்விகேட்கும். பதில்கூறும். அவரது செயலர் உட்பட பலர் இதனை மனிதன்போல் பாவித்து தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்டதையும், மனம்விட்டு உரையாடியதையும் கண்டார். மேலும், சில மனநோய் மருத்துவர்கள் கம்ப்யூட்டர் மூலம் இவ்வாறு ஆலோசனை வழங்கலாம். உளவியல் பிரச்னைகளைத் தீர்க்கலாம். என்ற கருத்தை வெளியிட்டனர். ஆங்காங்கு இதற்காகக் கம்ப்யூட்டர்களை நிறுவலாம் என்றனர். இவையெல்லாம் வைசன்பாமிற்கு கவலையும், கோபத்தையும் உண்டாக்கின. மனிதர்கள், இயந்திரங்களை, கம்ப்யூட்டர்களை இவ்வாறு மனிதனுக்குப் பதிலாக காண்பது அவற்றின் மூலம் உளவியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது என்பவை குறித்து அச்சம் கொண்டார். இதன்பின் இத்தகைய கருத்துக்களின் மீது கடமையான விமர்சனங்களை முன்வைத்தார். மனிதன், தொழில்நுட்பம் மனிதனைக் குறித்த பார்வைகள் பற்றி ஆராய்ந்தார். ஐந்தாம் தலைமுறை Fifth Generation என்ற நூலின் ஆசிரியர்கள், புதியவர்களைப் பராமரிக்க அவர்களுக்குக் கதை சொல்ல, உதவ இயந்திர மனிதர்களை பயன்படுத்தலாம் என்று எழுதினர். வைசன்பாம் இத்தகைய சிந்தனை போக்குகள், தொழில்நுட்பப்பார்வை கொண்டவை, மாறுடத்தன்மையைச் சிதைப்பவை என வாதிட்டார். இதை ஒரு 'ஜோக்' என்ற அளவில்கூட அவரால் ஏற்க இயலவில்லை.

எங்கே தனது குறிப்புகள் ராணுவ நோக்கங்களுக்காக பயன்பட்டு விடுமோ என அஞ்சி அவற்றை வெளியடி மறுத்தவர் நார்பெட் வைனர் என்ற கணிதமேதை இரண்டாம் உலகப்போர் முடிந்தபின், 'போரின்போது இராணுவத்துறைக்காக அவர் எழுதிய அறிக்கையின் பிரதி ஒன்றைத் தரவேண்டும் என்று அவரிடம் ஏவுகணை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று கேட்டது. அணுகுண்டுத் தயாரிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளின் அனுபவங்களைச் சுட்டிக்காட்டி, 'தற்போது உள்ள நிலையில் ஆயுதங்களைப் பற்றிய தகவல்களைப் பரப்புவது, வெளியிடுவது அந்த ஆயுதம் பயன்படுத்தப்படும் என்பதை நிச்சயப்படுத்தும் என்றார் அவர். எனவே, தனது ஆய்வுகள் பொறுப்பற்ற ராணுவவாதிகள் கையில் கிட்டி, அவர்கள் அதன்மூலம் அழிவுக்கு வழிவகுப்பர் என்பதால் அவற்றை வெளியிட மறுடடததாடர வைனர். அன்ற அவரது நிலைப்பாடு பல விஞ்ஞானிகளால் விமர்சிக்கப்பட்டது. வைனர் இறுதிவரை தனது கொள்கையைக் கைவிட வில்லை. (தகவல் மற்றும் கட்டுப்பாட்டியல் Cybernatiics என்ற துறையில் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று.)

இத்தகைய எதிர் சிந்தனையாளர்களை நாம் இன்று குறிப்பிட்டு, அவர்களின் கருத்துகளை முன்னிறுத்துவது அவசியம். இன்று இராணுவ சிந்தனை பல இடங்களில் உட்புகுந்துள்ள அபாயத்தைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் பல விளையாட்டுகளில் நேரடியாக மறைமுகமாக ராணுவ சிந்தனை வெளிப்படுகிறது. எதிரிகளை அழிப்பது, ஏவுகணைகளைப் பயன்படுத்துவது, சுட்டு வீழ்த்துவது என்பவை மிகச் சாதாரணமான ஒன்றாகக் காட்டப்படுகிறது. 1982-ல் நடந்த பாக்லாண்ட் யுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட கம்ப்யூட்டர் விளையாட்டு ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் நீங்கள், இராணுவ தளபதி என்ற நிலையில் கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் ராணுவ வீரர்கள் ஆயுதங்களை எப்படி பயன்படுத்துவீர்கள்? என்ற வினா உங்கள்முன் வைக்கப்படுகிறது! இதைப் போன்று பல விளையாட்டுக்கள் உள்ளன. அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் கணித அறிவைச் சோதிப்பதற்காக நடத்தப்படும் போட்டி ஒன்றில் நேரடியாக ராணுவத்துறை தொடர்புடைய கேள்வி ஒன்று கேட்கப்படுகிறது. இப்போட்டியில் கோபால்ட் என்ற முக்கியமான பொருளை ராணுவத் தேவைகளுக்காக எப்படிக் கையாள்வது எப்படி பகிர்ந்து கொடுப்பது? என்ன விலைக்கு விற்பது போன்ற கேள்விகளுக்கு, கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், புள்ளிவிரங்களைக் கொண்டு விடைகாண வேண்டும் என்பது ஓர் கேள்வியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டும், போட்டியில் பங்கேற்ற இரு குழுக்களும் இந்தக் கேள்விகளுக்கே விடைகாண முயன்றது குறித்தும், கணிதப் பேராசிரியர் வருத்தமடைகிறார். இளைய தலைமுறையை இப்படி ராணுவத் தேவை குறித்து கணக்கிடச் சொல்வது அபாயகரமான போக்கு, ராணுவத்திற்குத் தேவையான ஆய்வுகளைச் செய்வதில் தவறில்லை என்ற மனப்பாங்கை வளர்க்கும் என வாதிடுகிறார். இத்தகைய ஆய்வுகள் கணிதத் துறையில் பலரால் மேற்கொள்ளப்படுவது ஆயுதப் போட்டிக்குத் துணை போவது என்கிறார்.

விகோ (1668-1744B. vico) இத்தாலியைச் சேர்ந்த வழக்கறிஞர். தத்துவ அறிஞர், அவர். கணிதம், மானுட இயல்பிலிருந்து அந்நியமான ஒன்று என்கிறார். இது கார்டீசிய சிந்தனைக்கு நேர் எதிரானது. சமகால உலகம் கார்டீசிய நோக்கைப் பெருமளவுக்கு ஏற்றுக் கொண்டுவிட்டது. கம்ப்யூட்டர் மயமாக்கலும், இயந்திர மயமாக்கலும் வளர்ச்சி பெற்ற கார்ட்டீசிய பார்வையை முன் வைக்கின்றன? இனி தர்க்க ரீதியாக பகுத்தறிவைக் கொண்டு, நிரூபிக்கப்பட்ட முடிவுகளை கம்ப்யூட்டர்கள் எடுக்கின்ற நிலையும், மனிதர்கள் அதை ஏற்றுக்கொண்டு செயல்படுவதும் சாத்தியம் என்றால் அது எத்தகைய அபாயகரமான போக்கு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அர்த்தம் என்றால் என்ன? மதிப்பீடுகள் யாரால் உருவாக்கப்படுபவை? போன்ற கேள்விகள் எழுப்பப்படுவது அவசியம்.

அறிவார்ந்த சிந்தனைப் போக்கில் கணித ரீதியான அருவக்கருத்துக்கள் அர்த்தத்தை இழப்பதில்தான் கொண்டுபோய் விடுமா? இதற்கு மாற்றுகள் என்ன? சமகாலத்தின் சில முக்கியமான சிந்தனைப் போக்குகளுக்கும், இதற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதும் முக்கியமானவை (இவற்றை விரிவாக வேறோரு கட்டுரையில் காணலாம்)

நிகழ் 11, ஆகஸ்டு 1989
ஆதார நூல்கள் :

1. Descartes Dream - The world According to mathematics.
- P. J. Davis; R. Hersh - Penguin
2. Bringhter than 1000 suns
- Ropert Jungk - penguin
3. 'Second self ' - computers & Human spirit
Sherry Turkle Simon schuster
4. Computer as Rorschach - Sherry Turkle in Inter Media - Ed g.
gumperk & R. Cathcart - Oxford University Press.
5. Machinery of the mind
Inside the Newscience of Artificial
Intelligence - George Johnson - Times Books
6. Psycho Therapy & Existialism - Victor Frankl - Simon & Schuster
7. Computer Power & Human Reason - Joseph Weizbaan - Penguin
8. 'Starwars in Transition
- John Adam - spectrum - March 89.

Labels: , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு