போர்ஹே, கதை, கணிதம் : கற்பனையும், அப்பாலும்

போர்ஹே, கதை, கணிதம் : கற்பனையும்,அப்பாலும்

போர்ஹே எழுதிய பாபெலின் நூலகம் (Library of Babel) என்ற சிறுகதை புகழ் பெற்றது. இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் வெளியான நூற்களின் பட்டியல்களை துழாவிய போது ஒரு புத்தகத்தின் தலைப்பு ஆர்வமூட்டியது. மேல் விபரங்களைத் தேடினேன். அது அந்தக் கதையையும், கணிதத்தையும் இணைத்து எழுதப்பட்ட நூல்-The Unimaginable Mathematics of Borges’ Library of Babel- William Goldbloom Bloch –Cambridge University Press-2008 அதன் அட்டைப்படம், உள்ளடக்கப் பட்டியல் இடுகையின் இறுதியில். அதைப் பார்த்தவுடன் எனக்கு நினைவில் உதித்த பெயர் Douglas Hofstader.

Gödel, Escher, Bach: An Eternal Golden Braid, The Minds I, Metamagical Themas –
இந்த நூற்களைப் படித்து விட்டு பிரமிப்புடன் திரிந்த காலமும் உண்டு. இந்த மூன்றையும் எழுதிய/பதிப்பாசிரியராக இருந்த Douglas Hofstader அதற்குப் பின் எழுதிய Fluid Concepts & Creative Analogies ஐ நான் இன்னமும் படிக்கவில்லை. கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு முன் வந்த நூல் Gödel, Escher, Bach: An Eternal Golden Braid. அது எனக்கு கிடைக்கும் போது Metamagical Themas என்ற நூலும் வெளிவந்து விட்டது என்று நினைக்கிறேன். Douglas Hofstader ன் நடையும், அவர் பிற நூல்களை குறித்து தந்துள்ள குறிப்புகளும், பல்துறை கருத்துக்க்களை கையாளும் விதமும் என்னை வியப்பில் ஆழ்த்தின. இப்படியெல்லாம் நூல்கள், இப்படியெல்லாம் சிந்தனைகள், துறைகள் தாண்டிய பார்வைகள், துறைகளையும், சிந்தனைக் கோலங்களையும் சேர்க்கும் பார்வைகள், என்று ஆச்சரியப்பட வைத்தன.

இன்றும் வியப்பளிக்கும் எழுத்து அவரது. அவர் எழுதிய I Am a Strange Loop (2007) படிக்க வேண்டிய நூற்களின் பட்டியலில் இருக்கிறது. ஒவியங்கள் குறித்து இயற்பியல் நோக்கில் எழுதப்பட்ட ஒரு நூல், பல ஆண்டுகளுக்கு முன்பு படித்தது, யார் எழுதியது என்று நினைவில்லை. அதுவும் வியப்பில் ஆழ்த்திய நூல்.Katherine Hayles, Donna Haraway – இருவரின் எழுத்துக்களும் இலக்கியம், அறிவியல்,அறிபுனை,தத்துவம் என பல்துறைகளைத் தொட்டுச் செல்பவை. இவற்றை நான் விரும்பிப் படிக்க அதுவும் ஒரு காரணம்.

நூலை புரட்டிப் பார்த்தேன், படங்கள், சமன்பாடுகள் என்று படிக்கத்தூண்டுவதாக இருந்தது. உடனே இல்லாவிட்டாலும் சீக்கிரம் படிக்க வேண்டிய (நீண்ட) பட்டியலில் சேர்த்து விட்டேன். இந்த இடுகையைப் படிப்பவர்களில் யாருக்காவது அதைப் படிக்க வாய்ப்பிருந்தால் தவறவிடாதீர்கள். இன்னொரு நூலைப் பற்றியும் இங்கு குறிப்பிடத் தோன்றுகிறது.அதைப் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில்.

The Unimaginable Mathematics of Borges’ Library of Babel
William Goldbloom Bloch
Cambridge University Press 2008

Acknowledgments vii
Preface xi
Introduction xvii
The Library of Babel 3
Chapter 1 Combinatorics: Contemplating Variations of the 23 Letters 11
Chapter 2 Information Theory: Cataloging the Collection 30
Chapter 3 Real Analysis: The Book of Sand 45
Chapter 4 Topology and Cosmology: The Universe (Which
Others Call the Library) 57
Chapter 5 Geometry and Graph Theory: Ambiguity and Access 93
Chapter 6 More Combinatorics: Disorderings into Order 107
Chapter 7 A Homomorphism: Structure into Meaning 120
Chapter 8 Critical Points 126
Chapter 9 Openings 141
Appendix—Dissecting the 3-Sphere 148
Notations 157
Notes 159
Glossary 165
Annotated Suggested Readings 175
Bibliography 181
Index 187

Labels: , , ,

7 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

ரவி - போர்ஹேவில் பாபேல் நூலகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது, தமிழில் படித்திருக்கிறேன் - யாரால் என்று நினைவில்லை. பிரம்மராஜன் போர்ஹேயின் பெரும்பாலான கதைகளை மொழிபெயர்த்துவிட்டிருக்கிறார் - இது ஒரு பெரும் சேவை என்றுதான் சொல்லவேண்டும். அதிகம் பிரபலமாகாத Blue Tigers போன்ற சில கதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். எங்கள் கல்லூரி இதழில் Death and the compass கதையை மொழிபெயர்த்து ‘திணித்தோம்’ :-). பாபேல் நூலகம் அற்புதமான கதை. ஹாஃப்ஸ்டேடர் Godel, Escher, Bach and Borges என்று எழுதியிருந்தாலும் சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

-சன்னாசி

9:12 AM  
Blogger அருள் செல்வன் கந்தசுவாமி மொழிந்தது...

சன்னாசி:
>>பிரம்மராஜன் போர்ஹேயின் பெரும்பாலான கதைகளை மொழிபெயர்த்துவிட்டிருக்கிறார்.
ஆமாம். மீட்சி இரண்டாவது இதழிலிலேயே - செப்,83-"வாளின் வடிவம்" மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. பிரம்மராஜன் அதில் குறிப்பிடுவது: தமிழில் முதலில் போர்ஹேயை மொழிபெயர்த்தவர் பிரமீள். சர்குலர் ரூயின்ஸ் எனும் கதையை கசடதபற வில் பிரமீள் மொழிபெயர்த்தார். சந்தா கட்டி வாங்கிய மீட்சி இதழ்கள் இப்போதும் இருக்கின்றன. ஒருமுறை அவற்றை எடுத்து இப்போதுதான் தடவிப் பார்த்தேன்.
ஹாஃப்ஸ்டேடர் பல இடங்களில் போர்ஹேயைப் பற்றி எழுதியுள்ளார். ஆனால் 'டிரையாட்' எனும் குறியீட்டு வலிமையை கடத்தல் எளிதா. அதனால் EGB மட்டும்தான் போலும்.
ரவி:
மிக சுவாரசியமான பொருளடக்கம். புத்தக அறிமுகத்துக்கு நன்றி. விரைவில் இங்கே பிடித்து விடுவேன். சென்ற நூற்றாண்டின் இயல்பியலை எப்படியாவது அதன் பெரும்பாய்ச்சல்களை முன்னிருத்தி அறிமுகப்படுத்தும் பல நூல்களும் கட்டுரைகளும் உள்ளன. ஆனால் அதே அளவு மாற்றங்களும் 'வளர்ச்சியும்' கண்ட கணிதத்தை அறிமுகப் படுத்துவதில் பெரும் சிரமம் இருப்பது தெரிகிறது.
ஓவியங்களும் இயல்பியலும் பற்றி குறிப்பிடும்போது Cluade Monety யின் The Haystacks, The Poplars, Early morning on Siene ஆகிய ஓவியங்களையும் பொதுசார்புக் கொள்கையையும் அழகியல் தேடல் எனும் முயற்சியில் தொடர்புபடுத்தி எழுதிய கட்டுரை நினைவுக்கு வருகிறது. அதை கண்டிப்பாக மொழிபெயர்க்கவேண்டும். ஆனால் பொது சார்புக் கோட்பாட்டின் சமன்பாடுகளும் கலந்திருக்கும் அக்கட்டுரையை மொழிபெயர்க்கவும் ஏலாது என்றே படுகிறது. இதை அவர் உரையிலும் ஒருமுறை குறிப்பிட்டதை நினைவுகூறுகிறேன்.
அருள்.

2:37 PM  
Blogger பாஸ்கர் மொழிந்தது...

உடனே வாங்கி விட வேண்டும்.படிப்பது தான் எப்போது என்று தெரியவில்லை.

5:19 PM  
Blogger அருள் செல்வன் கந்தசுவாமி மொழிந்தது...

மறந்து விட்டேன். முன்னே குறிப்பிட்ட ஓவியம், இயல்பியல் பற்றிய கட்டுரை அண்டஇயல்பியல் விஞ்ஞானி எஸ். சந்திரசேகருடையது.

அருள்

1:31 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

சன்னாசி- மீட்சியில் அதைப் பார்த்த மாதிரி நினைவு, வாசித்தருக்கக் கூடும், நினைவில்லை.

அருள் செல்வன் - சர்க்குலர் ருயின்ஸ் கதையை சவாலாக
எடுத்துக் கொண்டு மொழிபெயர்த்ததாக
பிரமிள் எழுதியிருக்கிறார். மெளனியோ அல்லது வேறு யாரோ
இதை தமிழில் மொழிபெயர்க்க
முடியுமா என்று சவால் விட்டதாதால்
முடியும் என்று காட்ட அதைச் செய்தார் என்று எங்கோ படித்த/
கேட்ட ஞாபகம்.சதுரச் சிறகுகள்
என்ற பெயரில் அந்த கதை தமிழ்ல்
வந்தது(?). EGB+B என்றால் புத்தகம்
இன்னும் விரியும் என்பதால் EGBயுடன்
நிறுத்திக் கொண்டாரா?.
அறிவியல்,கணிதம்,கலை (ஒவியம்
போன்றவை),இலக்கியம் குறித்து
எழுதப்பட்டுள்ளவை மலைப்பைத்
தருகின்றன. அந்த இடுகையை
இட்ட பின் இரண்டு நூல்களை
கண்டேன்.பின்னர் அவற்றைப் பற்றி
எழுதுகிறேன்.
சன்னாசி,அருள் செல்வன் போன்றவர்கள் அறிவியலுக்கும்
இலக்கியம்/கலைக்கும் உள்ள
தொடர்பினை விரிவாக எழுத
வேண்டும்.

பாஸ்கர்- பேப்பர் பாக் இன்னும் வரவில்லை. இப்போது புத்தகங்கள்
கிடைப்பது பிரச்சினையில்லை.
வாங்கி படிக்காத புத்தகங்கள் நிறைய
உள்ளதால் நான் வாங்கப் போவதில்லை (விலையும் ஒரு காரணம்).அமேசானில் இரண்டாம்
கையாக இது போன்ற நூல்கள் சற்று
மலிவாகக் கிடைக்கும்.

10:05 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

சன்னாசி உங்கள் மொழிபெயர்ப்புகளை வலையேற்றுங்களேன்.

10:06 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

//அருள் செல்வன் - சர்க்குலர் ருயின்ஸ் கதையை சவாலாக
எடுத்துக் கொண்டு மொழிபெயர்த்ததாக
பிரமிள் எழுதியிருக்கிறார். மெளனியோ அல்லது வேறு யாரோ
இதை தமிழில் மொழிபெயர்க்க
முடியுமா என்று சவால் விட்டதாதால்
முடியும் என்று காட்ட அதைச் செய்தார் என்று //

மௌனி தான். தொடக்க வாக்கியங்களில் வரும் unanimous night என்பதை தமிழில் மொழிபெயர்க்க இயலாது என்று சொன்னதாகவும், பிரமிள் அதை 'ஏகோபித்த இரவு' என்று தன் மொழிபெயர்ப்பில் செய்ததாகவும் (கதையின் பெயர் 'வட்டச்சிதைவுகள்') படித்துள்ளேன். பிரமிளின் மொழிபெயர்ப்பு வலையில் எங்கும் இல்லை என்று நினைக்கிறேன். ஆங்கில மொழிபெயர்ப்புக்களில் கூட encompassing night, unanimous night என்று இருவேறு பதங்களாகப் படித்திருக்கிறேன். மௌனி தனக்கு எழுதத் தமிழ் போதவில்லை என்று சொல்லியிருக்கிறார் - அதன் பின்னணியில்தான் அதை வைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. நகுலன் கூட சில சந்தர்ப்பங்களில் அதையே சொல்லியிருக்கிறார் - போர்ஹேயும் ஸ்பானிஷை விட ஆங்கிலத்தில் எழுத விருப்பப்பட்டிருக்கிறார், விட்கென்ஸ்டைன் தனது மொழிபெயர்ப்புக்கள் புத்தகமாகும்போது இரண்டு மொழிகளிலும் (ஜெர்மன் - ஆங்கிலம்) இருக்கவேண்டுமென்று விருப்பப்பட்டிருக்கிறார். வாழ்வு, சூழல், எழுத்து மூன்றிலும் வெவ்வேறு துண்டிக்கப்பட்ட மனோநிலைகளில் இருப்பவர்களுக்கு இது தோன்றுவது இயல்புதான் போல - வேற்று மொழிச் சூழலில் வாழும் நீங்கள் கூட அவ்வப்போது தமிழில் எழுதுவதை நிறுத்துவேன் என்று அறிக்கை விடுவதையும் ;-) இங்கே வைத்துப் பாருங்கள். மௌனி குறிப்பிட்ட 'மொழிப் போதாமையை' நகுலன், கோணங்கி இருவரும் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு அளவுகளில் எப்போதோ தாண்டி வந்துவிட்டார்கள் என்பது என் கருத்து!

-சன்னாசி

1:15 PM  

Post a Comment

<< முகப்பு