அஞ்சலிக் குறிப்பு: ஸ்மிது கோத்தாரி

அஞ்சலிக் குறிப்பு: ஸ்மிது கோத்தாரி

ஸ்மிது கோத்தாரி, தன்னுடைய 59வது வயதில் இன்று காலை தில்லியில் மாரடைப்பினால் காலமானார். பேராசிரியர் ரஜ்னி கோத்தாரியின் மகன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள், பழங்குடியினர் இயக்கங்கள், உலக வங்கிக்கு எதிரான இயக்கங்கள் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்த ஸ்மிது அணு ஆயுத எதிர்ப்பில் ஈடுப்பட்டிருந்தார். நர்மதைப் பாதுக்காப்பு இயக்கத்தின் (NBA) தீவிர ஆதரவாளராக இருந்தார். சர்வதேச அளவில் நர்மதை
நதிப் பள்ளதாக்கு திட்டங்களுக்கு வலுவான எதிர்ப்பு உருவாக அவர் பாடுபட்டார். உலகெங்கும் உள்ள பல இயக்கங்களுடன், குறிப்பாக பெரும் அணைக்கட்டுகளை எதிர்க்கும் இயக்கங்கள், உலக வங்கியினை எதிர்க்கும் இயக்கங்கள் அவருக்கு நெருங்கிய தொடர்பிருந்தது.

1980களில் லோகாயன் என்ற அமைப்பினை ஸ்மிது ஒருங்கிணைத்தார். லோகாயன் 1980களில் மாற்றுக் குரல்களுக்கும், இயக்கங்களுக்கும் ஆதரவு அளித்தது. அது சோசலிஸ்ட்கள், இடதுசாரிகள், காந்தியவாதிகள், மக்கள் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என பல தரப்பினரும் உரையாட களங்கள் அமைத்தது. பல ஆய்வுகளை நடத்தியது/நடத்த உதவியது. அது துடிப்புடன் செயல் பட்ட காலத்தில் ஸ்மிது அகில இந்திய அளவில் அதன் செயல்பாட்டை விரிவாக்கினார். தமிழ் நாட்டில் எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி உட்பட பலர் லோகயனுடன் சேர்ந்து பணியாற்றினர். லோகாயன் புல்லட்டின் மூலம் பல விவாதங்களுக்கும் வழிவகுக்கப்பட்டது. பின்னர் லோகாயன் செயல்பாட்டில் தேக்கம் ஏற்பட்டது. ஸ்மிது தொடர்ந்து தீவிரமாக இயங்கினார். லோகயான் ஏற்படுத்தியிருந்த வலைப்பின்னல் வலுக் குன்றிய போதும், 1990களில் பல புதிய இயக்கங்களுடன் சேர்ந்து பணியாற்றினார். பல நூல்களை பதிப்பிருக்கிறார். பிரிண்டன், கார்னல் பல்கலைகழகங்களில் வருகைப் பேராசிரியராக இருந்தார்.

அகமாதபாத்தில் உள்ள National Institute of Designல் படித்த அவர் நினைத்திருந்தால் கற்ற தொழிற்கல்வியைக் கொண்டு ஏராளமாக பணம் ஈட்டியிருக்க முடியும், வெளிநாட்டில் குடியேறியிருக்க முடியும். அவரது கவனம் வளர்ச்சி திட்டங்களால் பாதிக்கப்படுவோர்பால் இருந்தது. உலக வங்கி குறித்த பொது விசாரணை உட்பட பலவற்றில் அவர் குறிப்பிடத்தக்க பங்காற்றினார்.

நான் அவரை நன்கு அறிவேன்.தில்லியில் லோகாயன் அலுவலகத்தில் சந்த்திருக்கிறேன். தில்லிச் செல்லும் போது அவர் ஊரில் இருந்தால் கட்டாயம் சந்திப்போம். இடையில் சில ஆண்டுகள் கழித்து 2002ல் அமெரிக்காவில் சந்தித்தோம். எங்களுக்குள் பொதுவான அக்கறைகள் இருந்தன. பொதுவான நண்பர்கள் இருந்தனர். ஸ்மிது Inter-Cultural Resources என்ற அமைப்பினை நிறுவினார். சுற்றுச்சூழல், மனித உரிமைகள், மாற்று வளர்ச்சிப் பாதைகள் போன்றவற்றில் அக்கறையுடன் செயல்படும் அமைப்பு அது.

இந்த ஆண்டு நான் அவரை சந்திக்க எண்ணியிருந்தேன். அவரை தொடர்பு கொண்டு எப்போது எங்கு சந்திக்க முடியும் என்பதை கேட்க நினைத்தேன். எப்படியோ அது தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. நான் தொடர்பு கொண்ட போதெல்லாம் அவர் பயணங்களில் இருந்தார். இறுதியில் சந்திக்க முடியாமலே போய்விட்டது. அந்த வருத்தம் இனி எப்போதும் இருக்கும்.

Labels: ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு