கண்ணாடி மனசிலே - திரை விமர்சனம்

கண்ணாடி மனசிலே - திரை விமர்சனம்

முழுக்கதையும் தரப்படவில்லை, spoilers இல்லை, ஆகவே பயப்படாமல் படிக்கலாம் :)

இத்திரைப்படம் ஊடக, வலைப்பதிவர்/வாசகர் கவனத்தினை பெறமால் போய்விடக் கூடுமென்பதால் இதை எழுதுகிறேன். பனியன் கக்கத்தில்தானே கிழிந்திருக்கிறது, வீட்டிற்குள்ளிருக்கும் போது கிழிந்த பனியன் போதும் என்று நினைக்கும் தந்தை, இன்னும்
முகத்திற்கு மஞ்சள் பூசிக் குளிக்கும் தாய் கொண்ட ஒரு சிறு குடும்பத்தினை மையமாகக் கொணட திரைப்படம். இதில் கண்ணீர் இருக்கிறது அது வயிற்றெரிச்சலாக மாறுவதில்லை, கோபம் இருக்கிறது, அது சாபமாக உருமாற்றம் பெறுவதில்லை, நகைச்சுவை
இருக்கிறது, அது காமெடி என்ற பெயரில் ஒட்டாமல் இருக்கவில்லை.

அஸ்வினி இளம் பெண், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சாதாரணப் பெண். பேஷியலை பார்த்திராத முகமும், திருத்தம் செய்யப்படாத புருவம்,அதிகபட்ச மேக்கப்பாக பவுடர் பூசி
கொள்ளும்,வேலைக்குப் போகும் பெண்.பீட்சா கலாச்சாரத்தில் ஒட்டாமல், அலுவலக பார்ட்டிக்குப் பின் வீட்டிற்கு வந்து தயிர்சாதமும் ஊறுகாயும் சாப்பிடும் மிடில் கிளாஸ் மீனா.கடன் அட்டை இருந்தும் மால்களில் ஜன்னல் ஷாப்பிங் செய்துவிட்டு அம்மாவுடன் சென்று பேரம் பேசி ரங்கநாதன் தெருவில் துணி வாங்கும் பெண் .இரண்டு படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட் வாங்க நகைகளை அடகு வைக்கும் குடும்பத்தின் ஒரே பெண். அவளுக்கு ஒரு தம்பி.இன்னொரு மிடில்கிளாஸ் மாதவன்.எம்.எஸ் படித்துவிட்டு அமெரிக்காவிற்கு செல்ல ஆசை இருந்தாலும்,குடும்பத்தை விட்டு இன்னொரு நாடு செல்லத்தான் வேண்டுமா என்று யோசிப்பவன்.

அவள் ஒருவன் மனதை அவளுக்குத் தெரியாமலே ஆக்கிரமிக்கிறாள். அவள் மனதில் அவன் இல்லை, ஏன் காதலன் என்று யாருமே அவள் மனதில் இல்லை.அவன் மனதில் அவள் இருப்பதை அவள் அறிய நேரும் போது அவளால் அதை நம்ப முடியவில்லை,புரிந்து கொள்ளவும் முடியவில்லை,இனம் புரியாத உணர்வுகளுடன் போராடுகிறாள்.யார் அவன்,அந்த ஒருதலைக் காதல் குடும்பத்தில் ஏற்படுத்தும் குழப்பம், மாற்றம் இதுதான் கதையின் கரு.இதை சுவாரசியமாக ஒரு நடுத்தரக் குடும்ப சூழலில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். குடும்பத்துடன் அஸ்வினி ஒரு கல்யாண வரவேற்பிற்கு செல்ல தயாராகுவதுடன் தொடங்கும் படம், அஸ்வினியின் திருமண நிச்சயதார்த்ததுடன் முடிகிறது, மீனம்பாக்கத்தில் ஒரு விமானம் கிளம்புவதாக கடைசி காட்சி இருக்கிறது.

படத்தில் நான்கு பாடல்கள், கதையுடன் பொருந்துகின்றன. மிகையான நடிப்போ, நம்ப முடியாத திருப்பங்களோ இல்லை. ஒரு குறுநாவலை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதையில் வில்லன்கள் என்று யாரும் இல்லை. ஒருபுறம் பாரம்பரிய உறவுகள், பாரம்பரிய மதிப்பீடுகள், இன்னொருபுறம் விரும்பி வரும் புதிய உறவுகள்,எதிர்பார்த்திராத வாய்ப்புகள் - இவற்றை ஒரு குடும்பம் எதிர்கொள்வதை இயக்குனர் நம்பத்தகுந்தவகையில் படமாக்கியிருக்கிறார்.தியாகம் என்ற பெயரில் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கத்தேவையில்லை என்பதை கோடிட்டுக் காட்டுகிறார்.நீதி போதனை என்றும் எதுவும் துருத்திக் கொண்டு இல்லை யாரும் தத்துவ முத்துக்களை உதிர்ப்பதில்லை.முக்கியப் பாத்திரங்களில் மூன்று புது முகங்கள் நடித்துள்ளனர்.

இது உலகத் தரமா இல்லையா என்று எனக்குத் தெரியாது. பார்கலாமா என்று கேட்டால் பார்க்கலாம் என்று பரிந்துரைப்பேன்.

Labels: ,

3 மறுமொழிகள்:

Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) மொழிந்தது...

என்ன மொழித் திரைப்படம்..?

யார் நடித்தது..?

இயக்கம் யார்..?

இதையெல்லாம் சொல்ல வேண்டாமா ஸார்..?

இப்படி மொட்டையா சொல்லிட்டுப் போனீங்கன்னா எப்படி..?

10:30 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

என்ன மொழித் திரைப்படம்..?

யார் நடித்தது..?

இயக்கம் யார்..?

இதையெல்லாம் சொல்ல வேண்டாமா ஸார்..?

இப்படி மொட்டையா சொல்லிட்டுப் போனீங்கன்னா எப்படி..?

ரீப்பீட்.

2:29 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

ஏப்ரல் 1ம்தேதிக்கான பதிவை இப்போதே போடலாமா? :)).

7:03 AM  

Post a Comment

<< முகப்பு