சோம்ஸ்கியும், தமிழவனின் அற்ப அரசியலும்

சோம்ஸ்கியும், தமிழவனின் அற்ப அரசியலும்

உயிரோசையில் தன் கட்டுரைகள் மூலம் தொடர்ந்து பொய்களை எழுதியும், பெயர்களை உதிர்த்தும், வெறுப்புகளுக்கும், சாராம்சவாதங்களுக்கும் அறிவுஜீவி முலாம் பூசி எழுதிவரும் தமிழவன் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையில் சோம்ஸ்கி கொடுத்திருந்த பேட்டியை முன்வைத்து தன்னுடைய அற்ப அரசியலை தொடர்ந்திருக்கிறார். பொய்களை கலந்து எழுதி, பெயர்களை உதிர்த்து, தன்னுடைய வெறுப்பு அரசியலை பரப்ப சோம்ஸ்கியை பயன்படுத்தியிருக்கிறார்.

“இந்த காஸ்மாபாலிட்டன் அறிவுஜீவி அந்தஸ்துக்காகஆசைப்படும் உளவியல் ரோகிகளுக்கும் சி.பி.எம்.மின் மேல்தட்டு கட்சித் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.அதனால்தான் சோம்நாத் சட்டர்ஜிபாராளுமன்ற அவைத்தலைவரானவுடன் சி.பி.எம்.மிலிருந்து தப்பிவிட்டார்.”

கட்சிக்கும், சோம்நாத் சட்டர்ஜிக்கும் இருந்த உறவு முறியக் காரணம் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஒட்டெடுப்பில் சோம்நாத் சட்டர்ஜி வாக்களிக்க மறுத்து, நடுநிலை வகிப்பேன் என்றது. கட்சிதான் அவரை நீக்கியது. 2004ல்தான் அவர் பாராளுமன்ற சபாநாயகரானார். அதற்கு பின் கட்சியிலிருந்து அவர் விலகவில்லை.

”இவர்களெல்லாம் தங்கள் அசிங்கங்களை மறைக்க ஒரு சாம்ஸ்கியைப்பிடித்துவந்து தங்கள் சொத்தாக்க முயலுகிறார்கள்.” “இத்தகைய நோக்கில் புரிந்துகொள்ளாத இந்து இதழின் வெளியீடான ஃப்ரன்ட்லைனின்வலைத்தளம் சாம்ஸ்கியை சொந்தம் கொண்டாடுவதுஅபத்தம்.”

சோம்ஸ்கியை யாரும் சொத்தாக்க முடியாது. அதை அனுமதிக்க அவர் முட்டாள் அல்ல.தமிழவன் வேண்டுமானால் தன்னை சொத்தாக எடுத்துக் கொள்ளுங்கள் கூவி தன்னை விற்கும் நிலையில் இருக்கலாம்.அப்படியே அவர் தன்னை விற்க நினைத்தாலும் வாங்க யார்
முன் வருவார் என்பதுதான் கேள்வி. சோம்ஸ்கி இந்தியாவில் பல இடங்களில் பேசினார், பல கூட்டங்களில் பேசினார். அவரை இந்தியாவில் அல்லது உலகில் யாரும் ஹிந்துவின் பிரதிநிதி அல்லது சொத்து என்றோ, சிபிஎம் மின் பிரதிநிதி என்றோ கருதுவதில்லை. சிபிஎம் ஐ கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட சோம்ஸ்கியை மதிக்கிறார்கள். இப்போது பிரண்ட்லைன் இணையதளத்தின் முகப்பில் சோம்ஸ்கியின் படம் இல்லை. சோம்ஸ்கி அதில் தொடர்ந்து எழுதுபவரும் அல்ல. அப்படியிருக்க பிரண்ட்லைன் சோம்ஸ்கியை சொந்தம் கொண்டாடுகிறது
என்று தமிழ்வன் கூசாமல் பொய்யை எழுதியிருக்கிறார். சோம்ஸ்கி உட்பட பலர் கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு கூட்டறிக்கைக்காக, இந்தியாவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். அந்த அறிக்கை நந்திகிராமில் நடந்ததைப் பற்றி. ஆகவே சோம்ஸ்கி சொன்னால் சரிதான் என்று அனைவரும் ஒத்துக்கொள்ளும் நிலை இல்லை. சோம்ஸ்கியை விமர்சித்தவர்களில் பலர் இடதுசாரி இயக்கங்களின்/கட்சிகளின் நண்பர்கள், சக பயணிகள் என்று கூறிக் கொள்பவர்கள். அருந்ததி ராய் குறித்து சோம்ஸ்கி என்ன எழுதியிருக்கிறார்
என்பது தமிழவனுக்குத் தெரியுமா?. இந்த இருவரும் இன்று கட்சி சார்ந்த/ கட்சி சாரா
இடதுசாரிகளால் மதிக்கப்படுகிறார்கள்.

ஹிந்துவிற்கோ, என்.ராமிற்கோ, சிபிஎம் கட்சிக்கோ தங்களை முன்னிறுத்த ஒரு சோம்ஸ்கி தேவையில்லை. ஹிந்து 125 ஆண்டுகளை கடந்த நாளிதழ். அதன் பாரம்பரியம் இடதுசாரி பாரம்பரியம் அல்ல. ஹிந்து சிலருக்கு (உ-ம் சோம்ஸ்கி, அமர்த்யா சென், எம்.எஸ். சுவாமிநாதன்) முக்கியத்துவம் தருகிறது என்பது உண்மை. ஹிந்த்துவத்தை விமர்சிக்கும் கட்டுரைகள், பாஜகவை விமர்சிக்கும் தலையங்கங்கள் வெளியாகின்றன. இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஹிந்துவின் நிலைப்பாடு சிபிஎம் மின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டது. ஹிந்துவின் நிலைப்பாடுகளை என்.ராமின் தனிப்பட்ட கருத்துக்கள் என்று கொள்ள முடியாது. அதே போல் பிரண்ட்லைனில் தொடர்ந்து எழுதும் பிரபுல் பித்வாய் சிபிஎமை விமர்சித்து எழுதியிருக்கிறார். அதுவும் வெளியாகியுள்ளது. என்.ராம் 1980களின் துவக்கத்தில் ஹிந்துவின் அமெரிக்க நிருபராக இருந்த போது, ஐ.எம்.எப் (IMF) கடன் குறித்த நிபந்தனைகளை வெளியிட்டு கவனத்தைப் பெற்றவர். பின் வித்யா சுப்பிரமண்யத்துடன் போபர்ஸ் ஊழல் குறித்த ஆவணங்களை, சான்றுகளை வெளிக் கொணர்ந்தார். இந்த விவகாரத்தில் அப்போதிருந்த ஹிந்து ஆசிரியருக்கும், ராமிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உலகறிந்த உண்மை. இதே ஹிந்துவும், என்.ராமும் 80களில் இலங்கைத் தமிழர் பிரச்சினையின் போது என்ன செய்தார்கள், என்ன எழுதினார்கள் என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். பத்திரிகையாளர், ஹிந்து ஆசிரியர் என்று நன்கு அறியப்பட்ட ராமிற்கு தன்னை காஸ்மோபோலிடன் அறிவுஜீவி என்று காட்டிக் கொள்ள வேண்டிய தேவையே இல்லை. தமிழவனுக்கு வேண்டுமானால் அத்தகைய தேவை(கள்) இருக்கலாம்.

எனக்கும் ஹிந்து மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இலங்கை குறித்த அதன் நிலைப்பாடு போன்றவற்றில் நான் ஹிந்துவின் கருத்துக்களை ஏற்பதில்லை. ஹிந்து சில பிரச்சினைகளில் காட்டும் அக்கறையும், சில கருத்துக்களுக்கும் கொடுக்கும் இடமும் பிற நாளிதழ்களில் இல்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். NREGA குறித்து ஹிந்து பல கட்டுரைகளை வெளியிட்டது. தன் தலையங்கம் மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீட்டினை அது எதிர்த்தாலும், 27% இட ஒதுக்கீட்டினை ஆதரிக்கும் கட்டுரைகளையும்
தலையங்கப் பக்கத்தில் வெளியிட்டது. சுருக்கமாகச் சொன்னால் பல பிரச்சினைகளில் ஒரு தாரளவாதக் கண்ணோட்டத்துடன் பல்வேறு கருத்துக்களுக்கும் ஹிந்துவில் இடமிருக்கிறது, சில பிரச்சினைகளில் அவ்வாறு இல்லை, ஒற்றைப் பரிமாண கட்டுரைகள்/செய்திகள்
இடம் பெறுகின்றன. பால் க்ரம்மேனின் பத்திக் கட்டுரைகளை வெளியிடும் ஹிந்துவில் சாய்நாத்திற்கும், எம்.எஸ்.பிரபாகராவிற்கும் இடமிருக்கிறது, ஹர்ஷ் மந்தருக்கும் இடமிருக்கிறது. பிரண்ட்லைனில் தமிழ்நாட்டில் தலித்கள் பிரச்சினைகள் (உள் ஒதுக்கீடு உட்பட) குறித்து கட்டுரைகள் வெளியாகின்றன. மாதம் ஒரு முறை வெளியாகும் லிடரரி ரிவியுவில் இந்திய மொழிகளில் எழுதுவோரின் எழுத்துக்களும் கவனப்படுத்தப்படுகின்றன. வெர்னாகுலர், காஸ்மோபோலிடன் என்று ஜல்லியடிக்கும் தமிழவனுக்கு இதெல்லாம் தெரியுமா.

சோம்ஸ்கி ஒரு பேட்டி கொடுத்தார் என்பதற்காக அவரை லங்கா கார்டியனின் பிரதிநிதி என்று யாரும் கருதுவதில்லை. சோம்ஸ்கியை தொடர்பு கொண்டு பேட்டி எடுப்பது, அவர் கருத்தை அறிவது என்பது லங்கா கார்டியனுக்கு மட்டும்தான் சாத்தியமா. இணையத்தில் சோம்ஸ்கியின் கருத்துக்கள் எங்கெல்லாம் வெளியாகின்றன/மறு பிரசுரமாகின்றன என்பதாவது தமிழவனுக்கு தெரியுமா. சிபிஎம் கட்சியைப் பொறுத்தவரை அதன் வரலாறு நீண்டது. சோம்ஸ்கியை முன்னிறுத்தி அறிவு ஜீவி அந்தஸ்து தேட வேண்டிய நிலை அதன் மேல்தட்டு தலைவர்களுக்கு இல்லை.

சோம்ஸ்கியின் கருத்துக்கள் அனைத்தும் இன்றும் ஸ்டாலினியத்தை தூக்கிப் பிடிக்கும் கட்சிக்கும், அதன் தலைமைக்கும் உவப்பாக இருக்க முடியாது. சோம்ஸ்கி ஒரு இடதுசாரி, அவர் கட்சி சார்ந்த மார்க்ஸியர் அல்ல. அவரை anarchist leftist என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். பெயர் உதிர்க்கும் தமிழவன் தான் இந்த அடிப்படைகள் கூடத் தெரியாமல் எழுதுகிறார். சிபிஎம் கட்சியின் நிலைப்பாட்டினை ஹிந்து என்.ராம் தீர்மானிப்பதில்லை. ராமின் தனிப்பட்ட நிலைப்பாடுகளின் அடிப்படையில் பொலிட்பிரோ எதையும் முடிவு செய்வதில்லை. கோவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானங்கள், கட்சித்தலமை சமர்பித்த அறிக்கை உட்பட பல சிபிஎம் மின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ளன. சிபிஎம் கட்சியின் இணையதளத்தில் உள்ள அறிக்கைகள், அதன் வார இதழில் வெளியான கட்டுரைகளின் அடிப்படையில் இலங்கைப் பிரச்சினையில் சிபிஎம் கட்சியை விமர்சித்து ஆதாரங்களுடன் , இது மார்க்சிய கண்ணோட்டத்திற்கு விரோதமானது என்று தமிழவன் எழுதலாமே. இனியாவது அதைச் செய்வாரா?.

”அதாவது பிராந்திய மொழி அல்லது பிரச்சினையில் ஈடுபடும்போதுதான் உண்மையான காஸ்மாபாலிட்டானிசம் உருவாகிறது. இந்தப்பார்வையை எனக்குத் தந்ததற்கான அடிப்படை போலக் கட்டுரைகளில் உள்ளன. சாம்ஸ்கியை, போலக்கோடு இணைக்கவேண்டும். இந்தியச் சூழலில் சரியான அரசியல் பார்வை என்பது பிராந்திய மொழி சார்ந்த பார்வைதான் “

தமிழவனின் அரைவேக்காட்டு கோட்பாடுகளுக்கு இது ஒரு உதாரணம். பழங்குடி மக்களின் பிரச்சினையில் எந்த பிராந்திய மொழி சார்ந்த பார்வையில் சரியான அரசியல் பார்வை சாத்தியம். இந்தியாவில் பிராந்திய மொழிகள் எத்தனையோ, பல மொழிகள் புழக்கத்தில் உள்ள மாநிலங்கள் பல. அகில இந்திய அளவில் சரியான அரசியல் பார்வை என்பது எந்த பிராந்திய மொழி சார்ந்த பார்வையாக இருக்க முடியும்?. இந்த மொழி சார்ந்த பார்வை
என்பதே அபத்தம் என்பதை நான் விளக்க வேண்டியதில்லை. அடிப்படை உரிமைகள் என்று பேசும் போது அங்கு மொழி சார்ந்த பார்வைக்கு என்ன தீர்மானகரமான இடம் இருக்க முடியும்.

இறக்குமதிக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி இசங்களையும், மேற்கத்திய சிந்தனைகளையும் முன்னிறுத்தி காலங்காலமாக எழுதிவரும் தமிழவன் ஈழப் பிரச்சினை பற்றிப் பேசாமல் பாலஸ்தீன பிரச்சினை பற்றி பேசுவதை விமர்சிக்கிறார். தமிழவன் தமிழ் சமூகம் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்ட போது இசங்களைப் பற்றி எழுதி குவித்துக் கொண்டிருந்தவர் இவர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். இன்றும் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து எழுதும் தமிழவன் மலேசியத் தமிழர் பிரச்சினை குறித்தோ அல்லது தமிழ் சமூகம் எதிர்கொண்டுள்ள வேறு எத்தனையோ பிரச்சினைகள் குறித்து இதுவரை உயிரோசையில் எத்தனை கட்டுரைகள் எழுதியுள்ளார் ?.

தமிழவன் காஸ்போலிட்டனும் அல்ல, வெர்னாக்குலரும் அல்ல, இரண்டின் சரியான கலவையும் அல்ல; மாறாக வெர்னாக்குலர்களிடம் தான் காஸ்மோபோலிடன் என்று பெயர் உதிர்ப்பு, இசங்கள் குறித்த எழுத்துக்கள் மூலம் காட்டிக் கொள்பவர், காஸ்மோபோலிடன்களிடம் தன் தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தி இன்னும் வேர்களை இழக்காத காஸ்மோபோலிடன் பார்வை கொண்ட வெர்னாக்குலர் என்று காட்டிக்கொள்பவர்
என்று மதிப்பிடுவது சரியாக இருக்குமா?

தமிழவனின் அற்ப அரசியலுக்கு இந்த வாரம் சோம்ஸ்கியின் பெயரையும், அவரது பேட்டியையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அடுத்த வாரம் யாரோ ? (தமிழவன் எழுதியதில் ஒரு சிலவற்றை இங்கு சுட்டிக்காட்டி விமர்சித்திருக்கிறேன். முழுக்கட்டுரையும்
தமிழவனின் அற்ப அரசியலின் வெளிப்பாடு என்றுதான் கருதுகிறேன்).

Labels: , ,

2 மறுமொழிகள்:

Anonymous பா. ரெங்கதுரை மொழிந்தது...

நெத்தியடி! ஹிந்து பத்திரிகை பல விஷயங்களில் தாராளவாதத்தைக் கடைபிடிக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றாலும், தமிழவன் கார்லோஸ் பற்றிய உங்களுடைய கருத்துகள் பெரும்பாலும் சரியானவையே. உயிர்மை/உயிரோசையின் அரசியலை அறிந்தவர்களுக்கு அவற்றில் தமிழவன் இப்படி உளறிக்கொட்டுவது வியப்பை அளிக்காது. தமிழ் எழுத்துலகின் நிரந்தர வாந்திபேதி கேஸ்களுக்குப் பொருத்தமான குப்பைத்தொட்டி ஒன்றைக் கட்டுவதில் மனுஷ்யபுத்திரன் வெற்றிபெற்றுள்ளார் என்றே கருதவேண்டி இருக்கிறது.

9:51 AM  
Blogger சண்டாள கவி மொழிந்தது...

//இந்த மொழி சார்ந்த பார்வை
என்பதே அபத்தம் என்பதை நான் விளக்க வேண்டியதில்லை.//

உங்கள் பிரச்சினை என்னவென்று நன்றாகவே புரிகிறது. பொறுத்திருங்கள். காலம் வருகிறது, நல்ல பதிலுடன். அதுவரை...

//இந்தியாவில் பிராந்திய மொழிகள் எத்தனையோ, பல மொழிகள் புழக்கத்தில் உள்ள மாநிலங்கள் பல. அகில இந்திய அளவில் சரியான அரசியல் பார்வை என்பது எந்த பிராந்திய மொழி சார்ந்த பார்வையாக இருக்க முடியும்?// என்றபடி எதையாவது ஓட்டிக்கொண்டிருங்கள்.
இடைக்கால உத்தரவாதமாக ஒன்றை மட்டும் இப்போது உறுதியாகச் சொல்லலாம். உங்களுக்காக நானே இதைச் சமாளிக்கிறேன் என்ற அரசியலைச் செய்து கொண்டிருக்கும் கருணாநிதி இருக்கும் வரை நீங்கள் அச்சப்படத் தேவையே இல்லை.

1:52 AM  

Post a Comment

<< முகப்பு