என் ஒரு செண்ட் -1

என் ஒரு செண்ட் -1

என் ஒரு செண்ட் என்ற பெயரில் இடப்படும் முதல் இடுகை இது. கடைசி இடுகையும் இதுதான் என்று கூற இயலாது. அவ்வப்போது என் ஒரு செண்ட் என்ற பெயரில் இடுகைகள் இடப்படும்.

இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இந்தப் போரில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற கோரிக்கையை பல தரப்புகள் (அரசுகள் உட்பட) வலியுறுத்திய பின்னும் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை. ராணுவ ரீதியான
தீர்வாக விடுதலைப் புலிகளை முற்றாக அழித்த பின் அரசியல் தீர்வினை முன்னெடுக்கலாம் என இலங்கை அரசு நினைத்தாலும், பாதிப்பு பொதுமக்களுக்கே. சர்வதேச சமூகம் தரும் அழுத்தம் போர் நிறுத்ததிற்கு வழி கோலுமெனில் அது நல்லதே. ஆனால் இதை எழுதும்
போதுள்ள நிலை, செய்திகளின் அடிப்படையில் பார்த்தால், கவலையளிப்பதாகவே இருக்கிறது. போர் நிறுத்ததிற்கான சாத்தியக்கூறுகள் முற்றாக இல்லை என்று கூற முடியாவிட்டாலும், இப்போதுள்ள நிலை தொடர்ந்தால் அது இருக்கின்ற மனித அவலத்தை இன்னும் அதிகமாக்கும். விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம் என்று கூறினாலும் ஒரு கொரில்லாப் போர் இயக்கம் அங்கு அதே பெயரில், அல்லது வேறு பெயரில் இயங்குவதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன என்பது வெளிப்படை. அரசியல்
தீர்வு என்ன என்பதில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே ஒரு முழுமையான தீர்வுக்கு துவக்கமாக இருக்கும். இருப்பினும் தமிழ் மக்கள் சார்பாக யார் பேசுவது, யாரை இலங்கை அரசு பேச அழைக்கும்/ஏற்கும் என்பது
இப்போது தெளிவாக இல்லை. இந்த நிலையில் முன்னுரிமை தரப்பட வேண்டியது போர் நிறுத்தமும், பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு புனர் வாழ்வு அமைப்பதும்தான். எனவே உடனடித் தீர்வு போர் நிறுத்தமே என்று நான் கருதுகிறேன்.

ஈழத்தமிழர் பிரச்சினையை முன் வைத்து தமிழ்நாட்டில் நடக்கும் கேலிக்கூத்துக்களை பற்றி என்ன சொல்ல. ஈழத்தமிழருக்காக இங்குள்ள வழக்கறினர்களின் நீதிமன்ற புறக்கணிப்பால பாதிப்படையும் தமிழர்கள் ஈழத்தமிழர் எக்கேடு கெட்டு போனால் என்ன,எனக்கல்லவா இப்போது தொந்தரவு என்று நினைக்கமாட்டார்களா என்ன. இது போன்ற வேலை நிறுத்தங்கள், புறக்கணிப்புகள் அனுதாபத்தையும், ஆதரவையும் கூட்டாமல், எரிச்சலையும், அக்கறையின்மையையும் வளர்க்கும்.

மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கான தருணமும் இதுவல்ல. மாணவர்கள் தங்கள் உணர்வுகளை அடையாளபூர்வமாக ஒரு முறை வெளிப்படுத்திவிட்டு தங்கள் வேலைகளை கவனிப்பது நல்லது. இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் இப்படி அனைத்துக் கல்லூரி மாணவர் போராட்டமாக வெளிப்படவில்லை. அதன் பிண்ணனி, காரணங்கள் வேறு. இப்போது தமிழ்நாட்டில் மாணவர்கள் போராடுவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தேச விரோத சக்திகளும், அரசியல் கட்சிகளும் தயாராக இருக்கும் போது மாணவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசியல் நோக்கங்களுக்கு மாணவர்களின் உண்மையான அக்கறை பகடைக்காயாக பயன்படுத்தப்படுவதை மாணவர்கள் அவர்களின் உணர்ச்சிகரமான கோஷங்கள், ஆர்ப்பாட்ட அரசியல்களுக்கு ஆட்படாமல் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மேலும் இப்போதுள்ள அரசியல் சூழலில் ஈழப்பிரச்சினை இங்குள்ள அரசியல் காய் நகர்த்தல்களுக்கு பயன்படுத்தப்படுகிறபடியால் மாணவர்கள் இதில் தலையிடாமல் ஒதுங்குவதே அவர்களுக்கு நல்லது.

தமிழ் தேசிய இயக்கங்கள், மா-லெ அமைப்புகள் ஈழத்தமிழர் பிரச்சினையை முன்வைத்து இந்திய எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பினை வளர்க்க முயல்கின்றன. இதை நான் கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன். ஈழத்தமிழர் பிரச்சினையை இப்படி தங்களின் அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்துவர்களிடம் ஈழத்தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஸ்டாலின்ஸ்ட்கள், தமிழ் தேசியர் போன்றோரின் கவர்ச்சிகரமான கோஷங்களை கண்டு அவர்கள் ஏமாந்து விடக்கூடாது. புலிகளை பாசிஸ்ட்கள் என்று விமர்சிக்கும் ஸ்டாலின்ஸ்ட்கள் முன்னிறுத்துவது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் ஒற்றைக் கட்சி ஆட்சியின் ஒடுக்குமுறையும், சர்வாதிகாரமும். அதில் கருத்து சுதந்திரம், மனித உரிமைகள் போன்றவை கட்சி அனுமதிக்கும் அளவிற்கு இருக்கும். தமிழ் தேசியர்களின் சிந்தனைகள் சிங்கள் பேரினவாதிகளின் சிந்தனைகளுடன் ஒப்பு நோக்கத்தக்கவை. இங்கு வாழும் பிற மொழி சிறுபான்மையர், பிற மாநிலத்தவர் குறித்து இந்த தமிழ் தேசியர்கள் என்ன எழுதியுள்ளார்கள் என்பதை ஈழத்தமிழரும், இங்குள்ள தமிழரும் அறிவது அவசியம். ஒரு உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது.

‘கடைசியாக ஒன்று, மும்பை மாநகரம் வரைமுறை இல்லாமல், வீங்கிக் கிடக்கிறது. மும்பை மாநகரம் இந்தியாவின் பொருளியல் தலைநகரம் என்கிறார்கள். இதன் பொருள் என்ன? இந்திய-பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்கான தலைநகரம் என்பதாகும். வணிகச் சூதாட்டம், பங்குச் சந்தைச் சூதாட்டம், கருப்புப்பணப் புழக்கம், ஹவாலா, கள்ளக்கடத்தல், தாதா அரசியல், விபச்சாரம் போன்ற எல்லா சமூக நோய்களும், இந்தியாவில் மற்ற நகரங்களை விட மும்பையை அதிகமாகப் பீடித்துள்ளன.

வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் மிகை எண்ணிக்கையில் குவிந்து கிடக்கின்றனர். இவற்றை ஒழுங்குபடுத்தி மராட்டிய மாநிலத்தின் தலைநகர் என்ற வரம்புக்குள் அதைக் கொண்டு வர வேண்டும். தமிழர்கள் மும்பையைப் பார்த்தாவது விழிப்புணர்வு பெற வேண்டும். சென்னை மாநகரம் இரண்டாவது மும்பையாக வீங்கிக் கொண்டுள்ளது. வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தவர் சென்னையில் தங்கிட ஒழுங்கு முறைகளையும் வரம்புகளையும் விதிக்க வேண்டும்.'

http://www.keetru.com/kannottam/dec08/prabhakaran_1.php

இங்கு வெளிநாட்டினர் என்ற பிரிவில் ஈழத்தமிழர்களும் அடங்குவர். இந்த ‘ஒழுங்கு முறைகள், வரம்புகள்' என்பதில் காவலதுறையிடம் பதிவு செய்து கொள்வது, சொத்துக்களை வாங்குவதில் கட்டுப்பாடுகள், வேலை பெறுவதில் பாரபட்சம் காட்டப்படுதல் ஆகியவையும் அடங்கும் என்றே கருதுகிறேன். மேலே சுட்டபட்டது தனி நபர் கருத்தல்ல. ஒரு தமிழ் தேசிய இயக்க ஏட்டின் தலையங்கம்.

இது ஒன்றே போதும் அவர்களின் கண்ணோட்டம் எத்தனை ‘விரிந்தது' என்பதற்கு. பெரியார் தி.க, தி.க போன்றவையும் இதில் தாரளவாதிகள் கிடையாது. மலையாளிகளின் தொல்லை பெருந்தொல்லையாகிவிட்டது என்று 1953ல், மொழிவாரி மாநிலங்கள் பிரியும் முன், தன் பிறந்த நாள் செய்தியில் தெரிவித்த பெரியாரின் சீடர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். தேசிய இயக்க வழி வந்த நெடுமாறனும் இதில் குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்தான். ஒருவகையில் இவர்களின் கருத்தியலும், தாக்கரேக்களின்
கருத்தியலும் ஒன்றுதான் என்பதுதான் உண்மை. இதை மூடிமறைக்கவே இந்திய தேசியம் குறித்த பெருங் கூச்சலை இவர்கள் போடுகிறார்கள்.

இதை ஈழத்தமிழர் புரிந்து கொண்டு, தமிழ் தேசியர்களால், தமிழர், தமிழ் தேசிய இனம் என்ற சொல்லாடல் எதையெல்லாம் மறைக்க, நியாயப்படுத்த பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆராய வேண்டும். இன்னும் சொல்வதென்றால் சிங்கள பேரினவாத சிந்தனைகளையும், இவர்களின் எழுத்துக்கள்,கோரிக்கைகளை ஒப்பு நோக்கலாம்.

இன்றுள்ள நிலையில் இந்திய அரசின் நிலைப்பாடுகளை விமர்சிப்பவர்களில் சிலர் இந்திய தேசியம் இங்கு பிற தேசியங்களை நசுக்குகிறது என்றும், இந்திய அரசின் இலங்கை குறித்த நிலைப்பாடு இந்தியாவின் பிராந்திய வல்லராசாகும் ஆசையின் வெளிப்பாடு, இந்திய
தேசியத்தின் அடக்குமுறைக் கொள்கையின் அடிப்படையில் அமைந்தது என்று குறிப்பிடுவதை நான் ஏற்கவில்லை. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை விமர்சிப்பவர்கள் ஒரு அடிப்படையை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இந்திய அரசின் நிலைப்பாடுகள்
கண்மூடித்தனமாக ஒரே நோக்கத்தைக் கொண்டதாக இருக்க முடியாது. இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான் ஆயுத உதவி செய்வது, இந்து மகா சமுத்திர கடல் பிராந்தியத்தின் geo-political முக்கியத்துவம், அதில் இலங்கையின் இடமும், முக்கியத்துவம் ஆகியவையும்
கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்தியா பாலஸ்தீனியர்களின் கோரிக்கையை ஆதரிக்கிறது என்பதற்காக, இஸ்ரேலுடன் உறவு, ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்குவது போன்றவற்றை செய்யாமல் இல்லை. உலகின் அனைத்து நாடுகளும் தத்தம் வெளியுறவு
நிலைப்பாடுகளை எடுக்கும் போது பலவற்றையும் கருத்தில் கொண்டே எடுக்கின்றன. இந்தியாவும் அப்படியே. இன்னும் சொல்லப் போனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பதை ஒரு சில அதிகாரிகளோ அல்லது ராணுவமோ தீர்மானிப்பதில்லை. ஜனநாயகக் குடியரசில் அதை முடிவு செய்வது நாடாளுமன்றத்தை சந்திக்கின்ற அரசு. 1996ல் முதல் (அதிகபட்சம் ஆறு மாதங்களை தவிர) மத்தியில் இருந்த, இருக்கும் அரசுகள் தமிழகக் கட்சிகள் ஆதரவில்தான் ஆட்சி செலுத்தின, செலுத்துகின்றன, அதுவும் ஆட்சியில் இடம் பெற்றுள்ள தமிழக கட்சிகளின் முழு ஆதரவுடன். இந்தக் கட்சிகள் (திமுக, அதிமுக, பாமக,மதிமுக) இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை குறித்த நிலைப்பாட்டை தீர்மானிக்கும்/மாற்றும் சக்தி இல்லாதவை என்று கூற முடியாது. இவை என்ன செய்தன, எத்தகைய அழுத்தம் கொடுத்தன, என்ன சாதித்தன, சாதிக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதையெல்லாம் விவாதிக்காமல் இந்திய வெளியுறக் கொள்கையை தமிழர் விரோத மலையாளிகள், இந்தி பேசும், மற்றும் பார்பன அதிகாரிகள் தீர்மானிப்பதாக கட்டுக்கதைகள் பரப்படுவதையும் நாம் காண்கிறோம்.

தொடரும்

Labels: , , , ,

4 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

Excellent article. Not only are these "Tamil Nationalists" misleading their readers by picking on a few Malayalee/Brahmin/North Indian officials, they are truly misleading Sri Lankan Tamils on what the reality of the Tamil political situation is. The reality of course is that if the majority in TN want it, the mainstream parties would have applied more pressure on the Centre regarding the Sri Lankan civil war.

10:56 PM  
Blogger ஹரன்பிரசன்னா மொழிந்தது...

expect more cents from you.

5:08 AM  
Anonymous பா. ரெங்கதுரை மொழிந்தது...

மற்ற அனைவரும் அழிந்தாலும் சரி; தங்களுடைய அதிகாரத்தை எந்த விலை கொடுத்தேனும் தக்கவைத்துக் கொள்வோம் என்று ஈழ வேளாளர்கள் செயல்படுவது தமிழக மக்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

இவர்களுடைய தலைவராக முன்னிறுத்தப்படும் முகமூடிகூட பிள்ளை பட்டம் கொண்டவராக இருப்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம்.

ஈழப் பிரச்னை தீர்ந்துவிட்டால் மேலை நாடுகளில் தங்கள் சுக வாழ்வு முடிவுக்கு வந்துவிடுமே; Refugee Status போய்விடுமே; இலங்கைக்கே திரும்ப நேரிட்டுவிடுமே என்று அஞ்சும், மேலை நாடுகளில் வசதியாக வாழும் இலங்கை வேளாள முதலாளிகள் இப்பிரச்னையைத் தீரவே விடமாட்டார்கள்.

9:17 AM  
Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) மொழிந்தது...

ரவி ஸார்..

ஏன் உங்களது பதிவில் சில தமிழ் எழுத்துக்கள் சரிவரத் தெரிவதில்லை.. லட்டு, லட்டாகத் தெரிகிறது..

11:43 AM  

Post a Comment

<< முகப்பு