சோம்ஸ்கியும், தமிழவனின் அற்ப அரசியலும்

சோம்ஸ்கியும், தமிழவனின் அற்ப அரசியலும்

உயிரோசையில் தன் கட்டுரைகள் மூலம் தொடர்ந்து பொய்களை எழுதியும், பெயர்களை உதிர்த்தும், வெறுப்புகளுக்கும், சாராம்சவாதங்களுக்கும் அறிவுஜீவி முலாம் பூசி எழுதிவரும் தமிழவன் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையில் சோம்ஸ்கி கொடுத்திருந்த பேட்டியை முன்வைத்து தன்னுடைய அற்ப அரசியலை தொடர்ந்திருக்கிறார். பொய்களை கலந்து எழுதி, பெயர்களை உதிர்த்து, தன்னுடைய வெறுப்பு அரசியலை பரப்ப சோம்ஸ்கியை பயன்படுத்தியிருக்கிறார்.

“இந்த காஸ்மாபாலிட்டன் அறிவுஜீவி அந்தஸ்துக்காகஆசைப்படும் உளவியல் ரோகிகளுக்கும் சி.பி.எம்.மின் மேல்தட்டு கட்சித் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.அதனால்தான் சோம்நாத் சட்டர்ஜிபாராளுமன்ற அவைத்தலைவரானவுடன் சி.பி.எம்.மிலிருந்து தப்பிவிட்டார்.”

கட்சிக்கும், சோம்நாத் சட்டர்ஜிக்கும் இருந்த உறவு முறியக் காரணம் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஒட்டெடுப்பில் சோம்நாத் சட்டர்ஜி வாக்களிக்க மறுத்து, நடுநிலை வகிப்பேன் என்றது. கட்சிதான் அவரை நீக்கியது. 2004ல்தான் அவர் பாராளுமன்ற சபாநாயகரானார். அதற்கு பின் கட்சியிலிருந்து அவர் விலகவில்லை.

”இவர்களெல்லாம் தங்கள் அசிங்கங்களை மறைக்க ஒரு சாம்ஸ்கியைப்பிடித்துவந்து தங்கள் சொத்தாக்க முயலுகிறார்கள்.” “இத்தகைய நோக்கில் புரிந்துகொள்ளாத இந்து இதழின் வெளியீடான ஃப்ரன்ட்லைனின்வலைத்தளம் சாம்ஸ்கியை சொந்தம் கொண்டாடுவதுஅபத்தம்.”

சோம்ஸ்கியை யாரும் சொத்தாக்க முடியாது. அதை அனுமதிக்க அவர் முட்டாள் அல்ல.தமிழவன் வேண்டுமானால் தன்னை சொத்தாக எடுத்துக் கொள்ளுங்கள் கூவி தன்னை விற்கும் நிலையில் இருக்கலாம்.அப்படியே அவர் தன்னை விற்க நினைத்தாலும் வாங்க யார்
முன் வருவார் என்பதுதான் கேள்வி. சோம்ஸ்கி இந்தியாவில் பல இடங்களில் பேசினார், பல கூட்டங்களில் பேசினார். அவரை இந்தியாவில் அல்லது உலகில் யாரும் ஹிந்துவின் பிரதிநிதி அல்லது சொத்து என்றோ, சிபிஎம் மின் பிரதிநிதி என்றோ கருதுவதில்லை. சிபிஎம் ஐ கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட சோம்ஸ்கியை மதிக்கிறார்கள். இப்போது பிரண்ட்லைன் இணையதளத்தின் முகப்பில் சோம்ஸ்கியின் படம் இல்லை. சோம்ஸ்கி அதில் தொடர்ந்து எழுதுபவரும் அல்ல. அப்படியிருக்க பிரண்ட்லைன் சோம்ஸ்கியை சொந்தம் கொண்டாடுகிறது
என்று தமிழ்வன் கூசாமல் பொய்யை எழுதியிருக்கிறார். சோம்ஸ்கி உட்பட பலர் கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு கூட்டறிக்கைக்காக, இந்தியாவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். அந்த அறிக்கை நந்திகிராமில் நடந்ததைப் பற்றி. ஆகவே சோம்ஸ்கி சொன்னால் சரிதான் என்று அனைவரும் ஒத்துக்கொள்ளும் நிலை இல்லை. சோம்ஸ்கியை விமர்சித்தவர்களில் பலர் இடதுசாரி இயக்கங்களின்/கட்சிகளின் நண்பர்கள், சக பயணிகள் என்று கூறிக் கொள்பவர்கள். அருந்ததி ராய் குறித்து சோம்ஸ்கி என்ன எழுதியிருக்கிறார்
என்பது தமிழவனுக்குத் தெரியுமா?. இந்த இருவரும் இன்று கட்சி சார்ந்த/ கட்சி சாரா
இடதுசாரிகளால் மதிக்கப்படுகிறார்கள்.

ஹிந்துவிற்கோ, என்.ராமிற்கோ, சிபிஎம் கட்சிக்கோ தங்களை முன்னிறுத்த ஒரு சோம்ஸ்கி தேவையில்லை. ஹிந்து 125 ஆண்டுகளை கடந்த நாளிதழ். அதன் பாரம்பரியம் இடதுசாரி பாரம்பரியம் அல்ல. ஹிந்து சிலருக்கு (உ-ம் சோம்ஸ்கி, அமர்த்யா சென், எம்.எஸ். சுவாமிநாதன்) முக்கியத்துவம் தருகிறது என்பது உண்மை. ஹிந்த்துவத்தை விமர்சிக்கும் கட்டுரைகள், பாஜகவை விமர்சிக்கும் தலையங்கங்கள் வெளியாகின்றன. இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஹிந்துவின் நிலைப்பாடு சிபிஎம் மின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டது. ஹிந்துவின் நிலைப்பாடுகளை என்.ராமின் தனிப்பட்ட கருத்துக்கள் என்று கொள்ள முடியாது. அதே போல் பிரண்ட்லைனில் தொடர்ந்து எழுதும் பிரபுல் பித்வாய் சிபிஎமை விமர்சித்து எழுதியிருக்கிறார். அதுவும் வெளியாகியுள்ளது. என்.ராம் 1980களின் துவக்கத்தில் ஹிந்துவின் அமெரிக்க நிருபராக இருந்த போது, ஐ.எம்.எப் (IMF) கடன் குறித்த நிபந்தனைகளை வெளியிட்டு கவனத்தைப் பெற்றவர். பின் வித்யா சுப்பிரமண்யத்துடன் போபர்ஸ் ஊழல் குறித்த ஆவணங்களை, சான்றுகளை வெளிக் கொணர்ந்தார். இந்த விவகாரத்தில் அப்போதிருந்த ஹிந்து ஆசிரியருக்கும், ராமிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உலகறிந்த உண்மை. இதே ஹிந்துவும், என்.ராமும் 80களில் இலங்கைத் தமிழர் பிரச்சினையின் போது என்ன செய்தார்கள், என்ன எழுதினார்கள் என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். பத்திரிகையாளர், ஹிந்து ஆசிரியர் என்று நன்கு அறியப்பட்ட ராமிற்கு தன்னை காஸ்மோபோலிடன் அறிவுஜீவி என்று காட்டிக் கொள்ள வேண்டிய தேவையே இல்லை. தமிழவனுக்கு வேண்டுமானால் அத்தகைய தேவை(கள்) இருக்கலாம்.

எனக்கும் ஹிந்து மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இலங்கை குறித்த அதன் நிலைப்பாடு போன்றவற்றில் நான் ஹிந்துவின் கருத்துக்களை ஏற்பதில்லை. ஹிந்து சில பிரச்சினைகளில் காட்டும் அக்கறையும், சில கருத்துக்களுக்கும் கொடுக்கும் இடமும் பிற நாளிதழ்களில் இல்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். NREGA குறித்து ஹிந்து பல கட்டுரைகளை வெளியிட்டது. தன் தலையங்கம் மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீட்டினை அது எதிர்த்தாலும், 27% இட ஒதுக்கீட்டினை ஆதரிக்கும் கட்டுரைகளையும்
தலையங்கப் பக்கத்தில் வெளியிட்டது. சுருக்கமாகச் சொன்னால் பல பிரச்சினைகளில் ஒரு தாரளவாதக் கண்ணோட்டத்துடன் பல்வேறு கருத்துக்களுக்கும் ஹிந்துவில் இடமிருக்கிறது, சில பிரச்சினைகளில் அவ்வாறு இல்லை, ஒற்றைப் பரிமாண கட்டுரைகள்/செய்திகள்
இடம் பெறுகின்றன. பால் க்ரம்மேனின் பத்திக் கட்டுரைகளை வெளியிடும் ஹிந்துவில் சாய்நாத்திற்கும், எம்.எஸ்.பிரபாகராவிற்கும் இடமிருக்கிறது, ஹர்ஷ் மந்தருக்கும் இடமிருக்கிறது. பிரண்ட்லைனில் தமிழ்நாட்டில் தலித்கள் பிரச்சினைகள் (உள் ஒதுக்கீடு உட்பட) குறித்து கட்டுரைகள் வெளியாகின்றன. மாதம் ஒரு முறை வெளியாகும் லிடரரி ரிவியுவில் இந்திய மொழிகளில் எழுதுவோரின் எழுத்துக்களும் கவனப்படுத்தப்படுகின்றன. வெர்னாகுலர், காஸ்மோபோலிடன் என்று ஜல்லியடிக்கும் தமிழவனுக்கு இதெல்லாம் தெரியுமா.

சோம்ஸ்கி ஒரு பேட்டி கொடுத்தார் என்பதற்காக அவரை லங்கா கார்டியனின் பிரதிநிதி என்று யாரும் கருதுவதில்லை. சோம்ஸ்கியை தொடர்பு கொண்டு பேட்டி எடுப்பது, அவர் கருத்தை அறிவது என்பது லங்கா கார்டியனுக்கு மட்டும்தான் சாத்தியமா. இணையத்தில் சோம்ஸ்கியின் கருத்துக்கள் எங்கெல்லாம் வெளியாகின்றன/மறு பிரசுரமாகின்றன என்பதாவது தமிழவனுக்கு தெரியுமா. சிபிஎம் கட்சியைப் பொறுத்தவரை அதன் வரலாறு நீண்டது. சோம்ஸ்கியை முன்னிறுத்தி அறிவு ஜீவி அந்தஸ்து தேட வேண்டிய நிலை அதன் மேல்தட்டு தலைவர்களுக்கு இல்லை.

சோம்ஸ்கியின் கருத்துக்கள் அனைத்தும் இன்றும் ஸ்டாலினியத்தை தூக்கிப் பிடிக்கும் கட்சிக்கும், அதன் தலைமைக்கும் உவப்பாக இருக்க முடியாது. சோம்ஸ்கி ஒரு இடதுசாரி, அவர் கட்சி சார்ந்த மார்க்ஸியர் அல்ல. அவரை anarchist leftist என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். பெயர் உதிர்க்கும் தமிழவன் தான் இந்த அடிப்படைகள் கூடத் தெரியாமல் எழுதுகிறார். சிபிஎம் கட்சியின் நிலைப்பாட்டினை ஹிந்து என்.ராம் தீர்மானிப்பதில்லை. ராமின் தனிப்பட்ட நிலைப்பாடுகளின் அடிப்படையில் பொலிட்பிரோ எதையும் முடிவு செய்வதில்லை. கோவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானங்கள், கட்சித்தலமை சமர்பித்த அறிக்கை உட்பட பல சிபிஎம் மின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ளன. சிபிஎம் கட்சியின் இணையதளத்தில் உள்ள அறிக்கைகள், அதன் வார இதழில் வெளியான கட்டுரைகளின் அடிப்படையில் இலங்கைப் பிரச்சினையில் சிபிஎம் கட்சியை விமர்சித்து ஆதாரங்களுடன் , இது மார்க்சிய கண்ணோட்டத்திற்கு விரோதமானது என்று தமிழவன் எழுதலாமே. இனியாவது அதைச் செய்வாரா?.

”அதாவது பிராந்திய மொழி அல்லது பிரச்சினையில் ஈடுபடும்போதுதான் உண்மையான காஸ்மாபாலிட்டானிசம் உருவாகிறது. இந்தப்பார்வையை எனக்குத் தந்ததற்கான அடிப்படை போலக் கட்டுரைகளில் உள்ளன. சாம்ஸ்கியை, போலக்கோடு இணைக்கவேண்டும். இந்தியச் சூழலில் சரியான அரசியல் பார்வை என்பது பிராந்திய மொழி சார்ந்த பார்வைதான் “

தமிழவனின் அரைவேக்காட்டு கோட்பாடுகளுக்கு இது ஒரு உதாரணம். பழங்குடி மக்களின் பிரச்சினையில் எந்த பிராந்திய மொழி சார்ந்த பார்வையில் சரியான அரசியல் பார்வை சாத்தியம். இந்தியாவில் பிராந்திய மொழிகள் எத்தனையோ, பல மொழிகள் புழக்கத்தில் உள்ள மாநிலங்கள் பல. அகில இந்திய அளவில் சரியான அரசியல் பார்வை என்பது எந்த பிராந்திய மொழி சார்ந்த பார்வையாக இருக்க முடியும்?. இந்த மொழி சார்ந்த பார்வை
என்பதே அபத்தம் என்பதை நான் விளக்க வேண்டியதில்லை. அடிப்படை உரிமைகள் என்று பேசும் போது அங்கு மொழி சார்ந்த பார்வைக்கு என்ன தீர்மானகரமான இடம் இருக்க முடியும்.

இறக்குமதிக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி இசங்களையும், மேற்கத்திய சிந்தனைகளையும் முன்னிறுத்தி காலங்காலமாக எழுதிவரும் தமிழவன் ஈழப் பிரச்சினை பற்றிப் பேசாமல் பாலஸ்தீன பிரச்சினை பற்றி பேசுவதை விமர்சிக்கிறார். தமிழவன் தமிழ் சமூகம் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்ட போது இசங்களைப் பற்றி எழுதி குவித்துக் கொண்டிருந்தவர் இவர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். இன்றும் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து எழுதும் தமிழவன் மலேசியத் தமிழர் பிரச்சினை குறித்தோ அல்லது தமிழ் சமூகம் எதிர்கொண்டுள்ள வேறு எத்தனையோ பிரச்சினைகள் குறித்து இதுவரை உயிரோசையில் எத்தனை கட்டுரைகள் எழுதியுள்ளார் ?.

தமிழவன் காஸ்போலிட்டனும் அல்ல, வெர்னாக்குலரும் அல்ல, இரண்டின் சரியான கலவையும் அல்ல; மாறாக வெர்னாக்குலர்களிடம் தான் காஸ்மோபோலிடன் என்று பெயர் உதிர்ப்பு, இசங்கள் குறித்த எழுத்துக்கள் மூலம் காட்டிக் கொள்பவர், காஸ்மோபோலிடன்களிடம் தன் தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தி இன்னும் வேர்களை இழக்காத காஸ்மோபோலிடன் பார்வை கொண்ட வெர்னாக்குலர் என்று காட்டிக்கொள்பவர்
என்று மதிப்பிடுவது சரியாக இருக்குமா?

தமிழவனின் அற்ப அரசியலுக்கு இந்த வாரம் சோம்ஸ்கியின் பெயரையும், அவரது பேட்டியையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அடுத்த வாரம் யாரோ ? (தமிழவன் எழுதியதில் ஒரு சிலவற்றை இங்கு சுட்டிக்காட்டி விமர்சித்திருக்கிறேன். முழுக்கட்டுரையும்
தமிழவனின் அற்ப அரசியலின் வெளிப்பாடு என்றுதான் கருதுகிறேன்).

Labels: , ,

சில குறிப்புகள்-இலங்கையில் இனி,கிருத்திகா, எம்.எல்.ஸ்ரீகாந்த்

சில குறிப்புகள்- கிருத்திகா, எம்.எல்.ஸ்ரீகாந்த்- இலங்கையில் இனி

கிருத்திகா என்கிற மதுரம் பூதலிங்கத்தின் மரணத்தினை தாமதமாகவே அறிந்தேன். பல ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக ஒரு நூலகத்தில் அவரது வாசேஸ்வரம் நாவலைப் படித்ததும், அது அப்போது மிகவும் வேறுபட்ட நாவலாக தோன்றியதும் இப்போது நினைவிருக்கிறது. ஆனால் அவருடைய பிற நூல்கள் படிக்க கிடைக்கவில்லை. Had Shankara Been Alive என்ற நூலை பின்னர் படித்தேன். வைதீக அத்வைதம் மீதான விமர்சனம் என்று அதைப் படித்த போது தோன்றியது. பாரதிய வித்யா பவன் அதை வெளியிட்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. ஆங்கிலத்தில் தன் இயற்பெயரான மதுரம்
பூதலிங்கம் என்ற பெயரில் பல நூல்களை அவர் எழுதியுள்ளார். பின் 1980களின் இறுதியில் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் வாசேஸ்வரம் நாவலை,நாகார்ஜுனனின் பின்னுரையுடன் வெளியிட்டார். இப்போது அதுவும் கிடைப்பதில்லை. அவரது நூல்களுக்கு மறு பதிப்பு கொண்டு வருவது இன்றும் பலர் அவர் எழுத்துக்களை அறிய உதவும்.பதிப்புரிமை யாரிடம் உள்ளதோ அவர்களிடமிருந்து அனுமதி பெற்று அவற்றை அச்சில் கொண்டு வரலாம்,
இணையத்தில் மின் நூல்களாக கிடைக்கச் செய்யலாம். அவருடைய வாரிசுகளை ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொண்டு முயலலாம்.

M.L. ஸ்ரீகாந்த் என்ற பெயர் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை கிட்டதட்ட 15/20 ஆண்டுகளுக்கும், அதற்கு முன்பும் பார்த்தவர்களுக்கு/கேட்டவர்களுக்கு நினைவிருக்கலாம். மெல்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி, பாடியவர். பாடகர்- இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் 1960கள், 1970களில் தமிழ் திரையுலகில் இசை அமைத்த, பாடிய பாடல்கள் குறைவுதான். திறமை இருந்தும், அதிக வாய்ப்புகள் பெறாத பலரில் அவரும் ஒருவர்.அதில் வள்ளுவன் குறளில் சொல்லெடுத்து என்று துவங்கும் பாடல் அப்போது பிரபலமாக இருந்தது.கண்கள் தேடுது ஒளி எங்கே என்று துவங்கும் பாடலை அவர் குரலில் நான் சில முறைதான் கேட்டிருக்கிறேன்.அது இன்றும் நினைவில் உள்ளது. இன்று அவர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. ஏ.எம்.ராஜா, 1970 களில் பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் குரல்களின் கலவையாக அவர் குரலை கருதலாம். வள்ளுவன் குறளில் என்று துவங்கும் பாடலையும், ஸ்ரீகாந்த் பற்றிய
குறிப்பினையும் சரவணன் இங்கே தந்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்த மல்லிகைப் பூப்போட்டு என்று துவங்கும் பாடலையும் வலையேற்றுவதாக குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீகாந்த் வேலை தேடி தற்போது சிங்கப்பூர் வந்துள்ளதாக ஒரு செய்தியும் உள்ளது.


இலங்கையில் இனி என்ன நிகழும் என்பது குறித்த ஜெயதேவா உடன்கோடாவாவின் கட்டுரை . இலங்கை, ஈழத்தமிழர் குறித்து ஆங்கிலத்தில் வெளியாகும் கட்டுரைகள், ஆய்வுகள் குறித்து தமிழில் எழுத/அறிமுகப்படுத்த தேவையுள்ளது. இப்போதுள்ள சூழலில் எத்தகைய கருத்துக்கள் இவற்றில் தெரிவிக்கப்படுகின்றன என்பதை வலைப்பதிவர்கள், வாசகர்கள் அறிதல் அவசியம். முன்பும் இது போல் சில கட்டுரைகளை இந்த வலைப்பதிவில்
சுட்டியுள்ளேன். இனியும்.

Labels: , , ,

சோம்ஸ்கியும், இலங்கை பிரச்சினையும்

நோம் சோம்ஸ்கியும், இலங்கை பிரச்சினையும்

நோம் சோம்ஸ்கி இலங்கை இதழான லங்கா கார்டியனுக்கு அளித்த செவ்வி இது. சோம்ஸ்கியின் புரிதலும், அணுகுமுறையும் ஏமாற்றம் தருகிறது. கேள்வி கேட்டிருப்பவர் சாமர்த்தியமாக ஒரு தரப்புவாதங்களை கேள்விகள் மூலம் முன் வைக்கிறார்.சோம்ஸ்கி இதை
முழுதும் புரிந்து கொள்ளவில்லை என்று பேட்டியில் தெளிவாகிறது. இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான தண்டனை, விசாரணை என்றால் அதை முதலில் பேரினவாத வன்முறையாளர்களிடமிருந்துதான் துவங்க வேண்டும். புலிகளை மனித உரிமைகளை மீறுபவர்கள், தற்கொலைதாரிகள் என்று முத்திரை குத்திவிட்டு அரசு ஏதோ சாத்வீகமாக, அமைதி வழியில்தான் நடந்து கொண்டது, நடந்து கொள்கிறது என்று பாவ்லா காட்டுவது மோசடி வேலை. போர் எப்படி தீர்வாக முடியும்? என்று கேள்வி கேட்டவரை சோம்ஸ்கி பதில் கேள்விகள் கேட்டிருக்கலாம் அல்லது அவர் கேள்விகளில் தெரியும் ஒருதலைபட்சமான போக்கினையும், அதனடியில் உள்ளவற்றையும் தன் பதிலில் கண்டிருத்திருக்கலாம்.
தொலைபேசிய செவ்வி என்பதால் அதை தவிர்த்து விட்டாரா இல்லை கேள்விகளுக்கு மட்டும் தனக்கு தெரிந்ததை வைத்துக் கொண்டு பதில் சொன்னால் போதும் என்று விட்டுவிட்டாரா என்று தெரியவில்லை. முன்பு சில சமயங்களில் சோம்ஸ்கிக்கு மின்னஞ்சல்கள் எழுதியிருக்கிறேன், அவரும் பதில்களை அனுப்பியிருந்தார். இம்முறை ஒரு மின்னஞ்சல் மூலம் ஐயா மதிப்பிற்குரிய பேராசிரியரே, உங்கள் பேட்டி ஏமாற்றமளிக்கிறது என்றும், என்னுடைய பார்வையில் அவருடைய புரிதலில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பதையும் சுருக்கமாக தெரிவிக்கலாம் என்று நினைக்கிறேன். உடனே முடியாவிட்டாலும் விரைவில் மின்னஞ்சலை எழுதி அனுப்ப முடியும்.

இன்று உலக ஊடகங்களில் இலங்கையில் நடப்பது குறித்து வரும் செய்திகளைக் கூட இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில் காண முடிவதில்லை. பிபிசி தரும் செய்திகளைக் கூட இவற்றில் பார்க்க முடிவதில்லை. ஹிந்து, பிரண்ட்லைன் பற்றி சொல்லவே வேண்டாம் :(. EPWவிலும் ஒரிரு கட்டுரைகள், தலையங்கங்களைத்தான் பார்க்க முடிகிறது. அண்மையில் வெளியான எஸ்.வி.ராஜதுரையின்
கடிதம் சிலவற்றை சொல்லுகிறது. அது யாருக்கு எதைச் சொல்கிறதோ இல்லையோ, EPW ஆசிரியர் குழுவினருக்கும் சிலவற்றை சொல்வதாகவே நான் அதைப் புரிந்து கொள்கிறேன். பொதுவாகப் பார்த்தால் இடதுசாரி, முற்போக்கு இணையதளங்களில் இலங்கைப் பிரச்சினை அதிகம் பேசப்படுவதில்லை. காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக எழுப்பபடும் கண்டனங்கள் பெறும் முக்கியத்துவம் இதற்கு தரப்படுவதில்லை. இதற்கான
காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தில்லியில் மாநாடு நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.இதில் சிபிஐ,சிபிஎம் கட்சிகள், அவற்றின் ஆதரவாளர்கள் பங்கேற்கின்றனர். இலங்கைப் பிரச்சினையில் தமிழருக்கு ஆதரவாகவோ அல்லது போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

Labels: , , ,

'மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும்!' - பெரியார்

'மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும்! - பெரியார்

[1954ல், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படும் முன்னர், தன் பிறந்த நாளில் பெரியார் விட்ட அறிக்கை இது. பெரியாரின் லட்சிய தமிழ்நாட்டில் பார்பனர்களுக்கு இடமில்லை, அவர்களை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே அவரது குறிக்கோள் என்பது இதில் வெளிப்படையாக இருக்கிறது. அது மட்டுமின்றி மலையாளிகள், கன்னடர், ஆந்திரர், மதச்சிறுபான்மையோஎ குறித்து பெரியார் கொண்டிருந்த கருத்துக்களும் (உ-ம் சில கொள்ளைக் கூட்டங்கள் ) வெளிப்படுகின்றன. பெரியார் 1960களில் காங்கிரஸ் ஆட்சியை ஆதரித்து வந்த போது, மதச்சிறுபான்மையினர் சிலர் ராஜாஜிக்கு ஆதரவு தந்தனர். அப்போதும் பெரியார் இது போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டார்.அ.மார்க்ஸ் அதற்கு(ம்) ‘நியாயம்' கற்பித்து எழுதியிருக்கிறார். பெரியாரின் அறிக்கையில் காணப்படும் வெறுப்பை தாக்கரேக்கள் மராட்டியர் அல்லாதோர் மீது காட்டும் வெறுப்பு, சிங்களப் பேரினவாதிகள் தமிழர்கள் மீது காட்டும் வெறுப்புடன் ஒப்பிடலாம். ஒருவகையில் பெரியாரை பால் தாக்கரேயின் கருத்தியல் முன்னோடியாகக் காணலாம். இன்று பெரியாரியவாதிகள், இயக்கங்கள் மற்றும் தமிழ்தேசியர்களும் கிட்டதட்ட இதே கண்ணோட்டத்தினை கொண்டிருப்பது தற்செயலானது அல்ல. மாறாக அது பெரியாரிய ‘பகுத்தறிவு' கருத்தியிலின் ஒரு பகுதிதான். இதைத்தான் நான் இந்த இடுகையில் சுட்டிக் காட்டினேன்.]

------------------------------------------------------------------------------------
பெரியார் விடுத்த பிறந்தநாள் அறிக்கை

என்னுடைய 76-வது பிறந்தநாளாகிய இன்று ஒரு அறிக்கை விடவேண்டும் என்று என் தோழர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதை அனுசரித்து இன்றைக்கு முக்கியமான பிரச்சனை என்றும், இனி நாம் அதிகமாக கவலை செலுத்த வேண்டிய பிரச்சனை என்றும் கருதுகிற ஒரு விசயத்தைப்பற்றி பொதுமக்களுக்கு எனது வேண்டுகோளாக தெரிவிக்கலாம் என்று கருதுகிறேன்.

தோழர்களே! தமிழ் நாட்டை வடநாடு பொருளாதாரத் துறையில் பெருங்கொள்ளை அடிப்பதோடு தமிழ்நாட்டை பொருளாதாரத் துறையிலும், தொழில்துறையிலும் தலையெடுக்க ஒட்டாமல் மட்டந்தட்டிக்கொண்டு வருகிறது. இந்த ஒரு முக்கியமான காரியத்துக்காகவே வடநாட்டான் அரசியலிலும், தமிழ்நாட்டை தனக்கு அடிமைப்படுத்தி தனது காலடியில் வைத்திருக்கிறான். இதற்கு அனுகூலமாக இந்நாட்டு பார்ப்பனர்கள் தங்களுக்கு இனி இந்நாட்டில் ஆதிக்கம்பெறவோ, இதுவரையிலும் வாழ்ந்தது போன்ற ஆதிக்க வாழ்வு வாழ முடியாது என்று கருதி வடநாட்டானுக்கு அவனது அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கு தமிழ்நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கு உடந்தையாகவும், உள் ஆளாகவும் இருந்து வருகிறார்கள்.


இந்த காரணங்களுக்காகவே வடநாட்டான் ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாட்டை விலக்கி சுதந்திரத் தமிழ்நாடாக ஆக்க வேண்டும் என்றும், நாட்டைக் காட்டிக்கொடுத்து பிழைக்கும் சமுதாயமாகிய பார்ப்பனச் சமுதாயத்தை தமிழ்நாட்டிலிருந்தே வெளியாக்கிவிட வேண்டுமென்றும நான் உறுதியாகக்கருதி என்னாலான முயற்சிகளை திராவிடர்கழகத்தின் மூலம் தொண்டாற்றி வருகிறேன். இது ஒருபுறமிருக்க இந்த சந்தர்பத்தையும், நடப்புக்களையும் ஆதரவாகக் கொண்டு உள்நாட்டிலேயே சில கொள்ளைக்கூட்டங்கள் தோன்றி வசதிபட்ட அளவுக்குக்கூட தமிழனை தலையெடுக்கவொட்டாமல் செய்து வருகின்றன. இங்கு சற்று விவரமாக சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த நாட்டு அரசியலில் வெள்ளையன் இருந்த காலம் முதற்கொண்டே பார்ப்பனர்கள் ஏகபோகம் ஆதிக்கம் பெற்று தமிழர்களுக்கு சிறிதும் நல்வாய்பில்லாமல் தமிழர்கள் அழுத்தப்பட்டு வந்திருப்பதைக் கண்டிக்கும் முறையில் இந்நாட்டு தமிழ் மக்களால் நான் அறிய 1890-ஆம் ஆண்டிலிருந்தே பெருங்கிளர்ச்சி செய்யப்பட்டு வந்திருக்கிறது.

உதாரணமாக 1892-லும், 1893-லும் சென்னை மாகானத்தில் கவர்னராயிருந்த லார்டு வென்லக் துரை அவர்களுக்கு இந்நாட்டு தமிழ் (திராவிட) பெருங்குடி மக்களின் பெயரால் கவர்னருக்கு பகிரங்கக்கடிதம் என்பதாக குறிப்பிட்டு இரண்டு கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவைகளின் நகல் என் கைவசம் இருக்கின்றன. அக்கடிதங்களில் சமுதாயத்துறையிலும், அரசியல் துறையிலும் பார்ப்பனர் ஆதிக்கத்தையும், கொடுமையையும் ஆதாரப்பூர்வமாக புள்ளிவிவரங்களோடு எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. மற்றும் அக்கடிதத்தில் அவற்றை அனுசரித்து மெயில் முதலிய பத்திரிக்கைகளின் கருத்துக்களையும் டாக்டர் மில்லர் போன்ற பெரியோர்களின் கருத்துக்களையும் எடுத்துப் போட்டு காட்டப்பட்டிருக்கின்றன.

இதை எதற்காக குறிப்பிட்டேன் என்றால் பார்ப்பன ஆதிக்கமும், கொடுமையும் பற்றி சொல்வது ஜஸ்டிஸ்கட்சி ஏற்பட்ட பிறகோ, அல்லது சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகோ அல்லவென்றும், 1890-லேயே நம்மவர்கள் உணர்ந்து முறையிட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்தக்காட்டுவதற்காகவே. நிற்க, இத்தொல்லைகள் அல்லாமல் தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலே மற்றொரு தொல்லை வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது. அது என்னவென்றால் உத்தியோகத்துறையில் - தமிழன்- பார்ப்பனரல்லாதான- என்கிற பெயரால் தனக்குறிய பங்கை வலியுறுத்த ஆரம்பித்த பிறகு பார்ப்பனர் அதை எதிர்த்து ஒடுக்கும் வகையில் தங்களால் ஆனவற்றையெல்லாம் செய்து ஒடுக்கிபின் மீதி- அதாவது பார்ப்பனரல்லாதவருக்கு ஏதாவது சலுகைகாட்டி பதவி கொடுத்துத்தான் தீரவேண்டும் என்ற நிலைமை நிர்பந்தம் ஏற்பட்ட சந்தர்பத்தில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக்கொண்டு சில பதவிகளை வெள்ளையனுக்கு கொடுப்பதும், அவனுக்கு கொடுப்பது மக்களுக்கு இஷ்டமில்லை என்றால் வெளி மாகாணக்காரர்களுக்கு கொடுப்பதும், அவர்களுக்கு கொடுப்பதும் சாத்தியப்படாத சந்தர்பங்களில் கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஆகியவர்களுக்கு கொடுப்பதும், அது சாத்தியப்படாத சந்தர்ப்பங்களில் ஆந்திரர், மலையாளி, கருநாடகர் ஆகியவர்களுக்கு கொடுப்பதுமாய் சூழ்ச்சி செய்து தமிழர்களுக்கு எவ்வளவு கொடுமையும், குறைபாடும் செய்யவேண்டுமோ அந்த அளவுக்கு செய்து வந்தார்கள்.

வெள்ளையன் அரசாங்கமும் இவர்களுக்கு ஆதரவு கொடுத்தே வந்திருக்கிறது. இப்போது வெள்ளையன் ஆட்சி ஒழிந்துவிட்டது. இந்தியன் ஆட்சி என்று ஏற்பட்டுவிட்டது. அதோடு நாடும் பல விதத்திலும் வடநாடு- தென்னாடு என்று பிரிந்துவிட்டது. அது மாத்திரம் அல்லாமல் மொழிவாநாடு என்னும் பேரால் ஆந்திர நாடும் தமிழ்நாட்டை விட்டுப் பிரிந்துவிட்டது. இதனால் ஆந்திரர்கள் தொல்லை அரசியலிலும், உத்தியோகங்களிலும் ஒரு அளவிற்கு ஒழிந்து விட்டது என்றாலும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள், கர்நாடகர்கள் என்பவர்களது தொல்லை அரசியல் ஆதிக்கத்திலும் உத்தியோகத்திலும் ஒழிந்தபாடில்லை.

இதை ஏன் சொல்கிறேனென்றால், தமிழ்நாடு மொத்த ஜனசங்கையில் பார்ப்பனர் 100- க்கு இரண்டேமுக்காலும், கிறிஸ்தவர் 100 - க்கு 4-ம், முஸ்லிம்கள் சுமார் 100 - க்கு 5-ம், மலையாளிகள் சுமார் 100- க்கு 8-ம், கர்நாடகர்கள் 100 - க்குக் 5-ம் (இவைகள் உத்தேசமான புள்ளிகள்) இவ்வளவு பேரும் சேர்ந்து, ஜனசங்கியையில் தமிழ்நாட்டார் -தமிழர் அல்லாதவர்கள்,100 -க்கு 25-பேர்களுக்கு உட்பட்டவர்களாகவே இருந்தாலும் இந்த கூட்டத்தினர் ஒவ்வொருவரும் நீதி நிர்வாக தலைமை உத்தியோகங்களில் சுமார் 100 - க்கு 60 - பேர்களாகவும், முக்கியமான உயர்ந்த உத்தியோகங்களில் 100 - க்கு 75-பேர்களாகவும் இருக்கிறார்கள்.

இதை ஏன் பிரித்துக் குறிப்பிட்டுக்காட்டுகிறேன் என்றால் தமிழ்நாட்டிலே தமிழர்களைத் தவிர, அதாவது மேற்படி கூட்டத்தினர் தவிர்த்த தமிழர்களைப் பற்றியாவது, தமிழர்களின் பழக்கவழக்க, கலாச்சார குறைபாடுகளைப் பற்றியாவது, சமுதாயத்துறையில் அவர்களுக்குள்ள இழிவைப் பற்றியாவது, அரசியல், கல்வி, பொருளாதாரத் துறையிலாவது, மேலேகாட்டிய இந்தக்கூட்டத்தாருக்கு சிறிதும் கவலையில்லை என்பதோடு, பெரிதும் மாறுபட்டவர்கள் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.தமிழர்கள் சமுதாயத் துறையில் கீழான சாதியராக - சூத்திரர்களாக இருப்பதைப்பற்றி இவர்கள் யாருக்கும் கவலையில்லை. எப்படியாவது தங்களுக்கு தங்கள் விகிதத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையளவு பதவிகள் கிடைப்பதனால் தமிழன் கதி எக்கேடு கெட்டாலும் இவர்கள் இலட்சியம் செய்பவர்கள் அல்லர்.

அவரவர்கள் தங்கள் தங்கள் சமூகத்துக்கு எப்படி நடந்து பயன்பெறுவது என்பதையே பெரும்பாலும் இலட்சியமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். அப்படியே இருந்தும் வந்திருக்கிறார்கள். அதனால்தான் எந்த விதத்திலும் தங்களைவிட தனிப்பட்ட யோக்கிதை இவர்களுக்கு இல்லாமலிருந்தும் தமிழர்களைவிட இவர்கள் 3 - பங்கு ஆதிக்கத்தில் பதவியில் இருந்துவருகிறார்கள். இதில் குறிப்பாகக் கூற வேண்டுமேயானால் மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும்பாலும் ஆரியக்கலாச்சாரத்தையும், ஆரிய மொழியையும், ஆரிய வர்ணச்சிரம தர்மத்தையும் ஆதரிக்கிறவர்கள், ஆனதனால் வகுப்புவாரி உரிமையில் மலையாளிகளை பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்கின்ற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக்கொண்டு பார்ப்பனரல்லாதார் என்கிற கணக்கில் ஏராளமான மலையாளிகளுக்கு கொடுப்பதையே - அவர்கள் தாராளமாகவந்து புகுவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் - அனுமதிக்கிறார்கள். அதன் காரணத்தால் ஏறக்குறைய பார்ப்பனரில்லாத பெரும் பதவிகளிலும் மலையாளிகளே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். முதலில் ஒரு சில உதாரணங்களைக் கூறுகிறேன்.

சென்னை அரசாங்க நிர்வாகத்தின் தலைமைப் பீடாதிபதியான, சீப்செக்ரட்டரி: திரு.ராமுண்ணிமேனன், சீப் எஞ்சினியர்: திரு. கே. நம்பியார், சூப்பரின்டெண்டிங் எஞ்சினியர்கள்: 1. திரு.நாயக், 2. திரு.காமத், வைத்திய இலாக்கா: எழும்பூர் பிள்ளைப்பேறு ஆஸ்பத்தரி சூப்பரின்டெண்ட்டு: திரு. ஆர்.கே.கே.தம்பான: அசிஸ்டெண்ட் சூப்பிரின்டெண்ட்: திரு. கிருஷ்ண மேனன்: ஸ்டான்லி ஆஸ்பத்திரி சூப்பரின்டெண்ட், திரு.கே.என்.பிஷரொட்டி: பெண்கள் ஆஸ்பத்திரி, திருவல்லிக்கேணி, சூப்பரின் டெண்ட்: திருமதி. பாருகுட்டிராமன்.கல்வி இலாக்கா:- பிரஸிடென்சி கல்லூரிபிரின்ஸ்பால்: திரு. பாலகிருஷ்ணநாயர், குவீன்மேரீஸ் கல்லூரி:திருமதி.லேடிவெலிங்டன்: திருமதி.வர்கிஸ். சட்டக்கல்லூரி டைரெக்கடர்: திரு.குன்னிராமன். இவை - ஒருசில நிர்வாக அடிப்படைப்பதவிகளிலுள்ள மலையாளிகளை உதாரணத்துக்கு எடுத்துக் காட்டப்பட்டன.இனி மாவட்ட (ஜில்லா) தலைமைப் பதவிகளிலுள்ள மலையாளிகள் எண்ணிக்கையைக் காட்டுவதற்கு போலிஸ் இலாக்கா ஒன்றை மாத்திரம் உதாரணமாக எடுத்துக்காட்டுகிறேன்.

இவைகளிலிருந்து மற்ற இலாக்காக்களையும் தெரிந்து கொள்ளுங்கள். இதில் 13-ஜில்லாக்களோடு சென்னையைச் சேர்த்தால் 14-ஆகும். இவற்றில், சென்னையில் கமிஷனர்: திரு.பார்த்தசாரதி அய்யங்கார் என்ற ஒரு பார்ப்பனர் இருப்பது மாத்திரமல்லாமல் அடுத்த பதவியான டிப்டி கமிஷனர் என்பதில் மூன்றிலும் மூன்று மலையாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் முறையே..

1. திரு. அடிகை (லா அண்டு ஆர்டர்), 2. திரு.தாமோதரன் (கிரைம்),3. திரு.சுகுமாரன் (டிராபிக்). ஆய்ஜிக்கு அசிஸ்டெண்ட்: திரு.வி.பி.நாயர். அசிஸ்டெண்ட் கமிஷனர்கள்: 1. திரு.செதுமாதவமேனன்(லா அண்டு ஆர்டர்), 2. திரு. சேதுமாதவநாயர்: (புரொகிபிஷன்).இனி ஜில்லாக்களில் போலிஸ் சூப்பரின்டெண்ட்டுகள்: திருச்சி: திரு. விஸ்வநாத அய்யர்: மதுரை(வ)திரு. ஏ.சி.நம்மியார்: திருநெல்வேலி:திரு. மாப்ளா அப்துல்லா. வடஆர்க்காடு திரு. ஷெனாய், சேலம்: திரு.பாலக்கிருஷ்ணமேனன், நீலகிரி: மாப்ளாரூக்கி இவைதவிர மற்ற ஜில்லாக்களிலும் அய்யர், அய்யங்கார்கள்.

அதாவது மதுரை(தெ)திரு.கிருஷ்ணசாமி அய்யர்: இராமநாதபுரம்: திரு. நரசிம்ம அய்யங்கார், மலபார்: திரு. இராமானுஜ அய்யங்கார், தென்கன்னடம்: திரு. முத்துசாமி அய்யர். மீதியுள்ள ஜில்லாக்களில் இரண்டில் ஆங்கிலோ கிறிஸ்த்தவர்களும், ஒரே ஒரு ஜில்லாவில், தென்னாற்காட்டுக்கு மட்டும் திரு. பாலக்கிருஷ்ண உடையார் என்ற தமிழரும் இருந்து வருகிறார்கள். இவர் பதவியும் ஆட்டத்தில் இருக்கிறது.இவை தவிர அரசாங்க போலீஸ் இலாக்கா (போர்ட்போலியோ) நிர்வாகத் தலைமையில், செரட்டரி: திரு. ஆர்.ஏ. கோபால்சாமி அய்யங்கார்: டிப்டி செக்ரட்டரி:டி.ஏ. சுப்புசாமி அய்யர் ஆகிய இரண்டு பார்ப்பனர் இருப்பதுபோக மற்றும் இரண்டு டிப்டி செக்ரட்டிரிகள்: 1.திரு.ஒய்.சிவராம மேனன்,2. திரு.சி.ஆர்.பணிக்கர். மற்றும் பப்ளிக் (பொலிடிகல்) என்று கூறப்படும் இரகசிய நிர்வாகத் தலைமையில் செக்ரட்டரி: திரு.டி.என். இலட்சுமிநாராயண அய்யர்: அண்டர்செக்ரட்டரி: திரு. ஆர். பாலசுப்பரமணி அய்யர். அரசாங்கத் தலைமை ஸ்தாபனங்கள் இந்தப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.

இவை உதாரணங்களாக எடுத்துக்காட்டப்பட்ட ஒரு சிலவேயாகும்.மற்ற இலாக்காக்களிலும் 100- க்கு 90- பேர்களான தமிழர்களைத் தவிர மற்ற சமுதாயக்காரர்களே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.இந்த நிலைமை இதற்கு முன்பே இருந்து வந்தாலும் இவ்வளவு மோசகரமான நிலைமை, அதாவது செக்ரிட்டேரியட், போலிஸ்- முதலியவற்றில் இவ்வளவு மோசகரமான நிலைமை - திரு. ஆச்சாரியார் அவர்கள் காலத்தில் ஏற்பட்டதாகவே தெரிகிறது. இங்கே பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்-தமிழனுக்கு ஆட்சியில் இடமெங்கே? தமிழன் வாழ்வில் ஆட்சியின் உதவி தேடுவதற்கு வழி எங்கே? தமிழனை பழிவாங்கும் தன்மையிலே இந்த நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைத்தவிர வேறு காரணம் ஒன்றும் காணோம். ஆகையால், ஒவ்வொரு இனத்தாரும், ஒவ்வொரு ஜில்லாக்காரர்களும் பிரிந்து மொழிவாரி மாகாண நாடு பெறும் வரையில் பதவிகள் ஜில்லா விகிதமாவது அந்தந்த ஜில்லா அடையும்படி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

சமீபகாலத்தில் திருவாங்கூர் - கொச்சி இராஜ்ஜியத்தில் தமிழர் உரிமை கேட்டதற்காக, தமிழர்களை அந்தநாட்டு மலையாளிகள் நடத்திய விதத்தைப் பார்த்தால், குறைந்தளவு நாம் நமது உரிமைக்காவது பாடுபடக்கூடாதா என்று தோன்றுகிறது. இந்த உணர்ச்சியின் பெயரால்தான் இந்த எண்ணங்கள் நமக்குத்தோன்றுகின்றன. ஆகவே தமிழர் இவற்றைப்பற்றி நல்ல வண்ணம் யோசித்து, கட்டுப்பாடான கிளர்ச்சி செய்வதன் மூலம் பரிகாரம் பெறவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இதுவே என்னுடைய பிறந்தநாள் விழா வேண்டுகோள்.


(தந்தை பெரியார் விடுதலை அறிக்கை 17.09.1954)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_596.html

Labels: , , ,

என் ஒரு செண்ட் -1

என் ஒரு செண்ட் -1

என் ஒரு செண்ட் என்ற பெயரில் இடப்படும் முதல் இடுகை இது. கடைசி இடுகையும் இதுதான் என்று கூற இயலாது. அவ்வப்போது என் ஒரு செண்ட் என்ற பெயரில் இடுகைகள் இடப்படும்.

இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இந்தப் போரில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற கோரிக்கையை பல தரப்புகள் (அரசுகள் உட்பட) வலியுறுத்திய பின்னும் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை. ராணுவ ரீதியான
தீர்வாக விடுதலைப் புலிகளை முற்றாக அழித்த பின் அரசியல் தீர்வினை முன்னெடுக்கலாம் என இலங்கை அரசு நினைத்தாலும், பாதிப்பு பொதுமக்களுக்கே. சர்வதேச சமூகம் தரும் அழுத்தம் போர் நிறுத்ததிற்கு வழி கோலுமெனில் அது நல்லதே. ஆனால் இதை எழுதும்
போதுள்ள நிலை, செய்திகளின் அடிப்படையில் பார்த்தால், கவலையளிப்பதாகவே இருக்கிறது. போர் நிறுத்ததிற்கான சாத்தியக்கூறுகள் முற்றாக இல்லை என்று கூற முடியாவிட்டாலும், இப்போதுள்ள நிலை தொடர்ந்தால் அது இருக்கின்ற மனித அவலத்தை இன்னும் அதிகமாக்கும். விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம் என்று கூறினாலும் ஒரு கொரில்லாப் போர் இயக்கம் அங்கு அதே பெயரில், அல்லது வேறு பெயரில் இயங்குவதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன என்பது வெளிப்படை. அரசியல்
தீர்வு என்ன என்பதில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே ஒரு முழுமையான தீர்வுக்கு துவக்கமாக இருக்கும். இருப்பினும் தமிழ் மக்கள் சார்பாக யார் பேசுவது, யாரை இலங்கை அரசு பேச அழைக்கும்/ஏற்கும் என்பது
இப்போது தெளிவாக இல்லை. இந்த நிலையில் முன்னுரிமை தரப்பட வேண்டியது போர் நிறுத்தமும், பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு புனர் வாழ்வு அமைப்பதும்தான். எனவே உடனடித் தீர்வு போர் நிறுத்தமே என்று நான் கருதுகிறேன்.

ஈழத்தமிழர் பிரச்சினையை முன் வைத்து தமிழ்நாட்டில் நடக்கும் கேலிக்கூத்துக்களை பற்றி என்ன சொல்ல. ஈழத்தமிழருக்காக இங்குள்ள வழக்கறினர்களின் நீதிமன்ற புறக்கணிப்பால பாதிப்படையும் தமிழர்கள் ஈழத்தமிழர் எக்கேடு கெட்டு போனால் என்ன,எனக்கல்லவா இப்போது தொந்தரவு என்று நினைக்கமாட்டார்களா என்ன. இது போன்ற வேலை நிறுத்தங்கள், புறக்கணிப்புகள் அனுதாபத்தையும், ஆதரவையும் கூட்டாமல், எரிச்சலையும், அக்கறையின்மையையும் வளர்க்கும்.

மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கான தருணமும் இதுவல்ல. மாணவர்கள் தங்கள் உணர்வுகளை அடையாளபூர்வமாக ஒரு முறை வெளிப்படுத்திவிட்டு தங்கள் வேலைகளை கவனிப்பது நல்லது. இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் இப்படி அனைத்துக் கல்லூரி மாணவர் போராட்டமாக வெளிப்படவில்லை. அதன் பிண்ணனி, காரணங்கள் வேறு. இப்போது தமிழ்நாட்டில் மாணவர்கள் போராடுவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தேச விரோத சக்திகளும், அரசியல் கட்சிகளும் தயாராக இருக்கும் போது மாணவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசியல் நோக்கங்களுக்கு மாணவர்களின் உண்மையான அக்கறை பகடைக்காயாக பயன்படுத்தப்படுவதை மாணவர்கள் அவர்களின் உணர்ச்சிகரமான கோஷங்கள், ஆர்ப்பாட்ட அரசியல்களுக்கு ஆட்படாமல் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மேலும் இப்போதுள்ள அரசியல் சூழலில் ஈழப்பிரச்சினை இங்குள்ள அரசியல் காய் நகர்த்தல்களுக்கு பயன்படுத்தப்படுகிறபடியால் மாணவர்கள் இதில் தலையிடாமல் ஒதுங்குவதே அவர்களுக்கு நல்லது.

தமிழ் தேசிய இயக்கங்கள், மா-லெ அமைப்புகள் ஈழத்தமிழர் பிரச்சினையை முன்வைத்து இந்திய எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பினை வளர்க்க முயல்கின்றன. இதை நான் கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன். ஈழத்தமிழர் பிரச்சினையை இப்படி தங்களின் அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்துவர்களிடம் ஈழத்தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஸ்டாலின்ஸ்ட்கள், தமிழ் தேசியர் போன்றோரின் கவர்ச்சிகரமான கோஷங்களை கண்டு அவர்கள் ஏமாந்து விடக்கூடாது. புலிகளை பாசிஸ்ட்கள் என்று விமர்சிக்கும் ஸ்டாலின்ஸ்ட்கள் முன்னிறுத்துவது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் ஒற்றைக் கட்சி ஆட்சியின் ஒடுக்குமுறையும், சர்வாதிகாரமும். அதில் கருத்து சுதந்திரம், மனித உரிமைகள் போன்றவை கட்சி அனுமதிக்கும் அளவிற்கு இருக்கும். தமிழ் தேசியர்களின் சிந்தனைகள் சிங்கள் பேரினவாதிகளின் சிந்தனைகளுடன் ஒப்பு நோக்கத்தக்கவை. இங்கு வாழும் பிற மொழி சிறுபான்மையர், பிற மாநிலத்தவர் குறித்து இந்த தமிழ் தேசியர்கள் என்ன எழுதியுள்ளார்கள் என்பதை ஈழத்தமிழரும், இங்குள்ள தமிழரும் அறிவது அவசியம். ஒரு உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது.

‘கடைசியாக ஒன்று, மும்பை மாநகரம் வரைமுறை இல்லாமல், வீங்கிக் கிடக்கிறது. மும்பை மாநகரம் இந்தியாவின் பொருளியல் தலைநகரம் என்கிறார்கள். இதன் பொருள் என்ன? இந்திய-பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்கான தலைநகரம் என்பதாகும். வணிகச் சூதாட்டம், பங்குச் சந்தைச் சூதாட்டம், கருப்புப்பணப் புழக்கம், ஹவாலா, கள்ளக்கடத்தல், தாதா அரசியல், விபச்சாரம் போன்ற எல்லா சமூக நோய்களும், இந்தியாவில் மற்ற நகரங்களை விட மும்பையை அதிகமாகப் பீடித்துள்ளன.

வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் மிகை எண்ணிக்கையில் குவிந்து கிடக்கின்றனர். இவற்றை ஒழுங்குபடுத்தி மராட்டிய மாநிலத்தின் தலைநகர் என்ற வரம்புக்குள் அதைக் கொண்டு வர வேண்டும். தமிழர்கள் மும்பையைப் பார்த்தாவது விழிப்புணர்வு பெற வேண்டும். சென்னை மாநகரம் இரண்டாவது மும்பையாக வீங்கிக் கொண்டுள்ளது. வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தவர் சென்னையில் தங்கிட ஒழுங்கு முறைகளையும் வரம்புகளையும் விதிக்க வேண்டும்.'

http://www.keetru.com/kannottam/dec08/prabhakaran_1.php

இங்கு வெளிநாட்டினர் என்ற பிரிவில் ஈழத்தமிழர்களும் அடங்குவர். இந்த ‘ஒழுங்கு முறைகள், வரம்புகள்' என்பதில் காவலதுறையிடம் பதிவு செய்து கொள்வது, சொத்துக்களை வாங்குவதில் கட்டுப்பாடுகள், வேலை பெறுவதில் பாரபட்சம் காட்டப்படுதல் ஆகியவையும் அடங்கும் என்றே கருதுகிறேன். மேலே சுட்டபட்டது தனி நபர் கருத்தல்ல. ஒரு தமிழ் தேசிய இயக்க ஏட்டின் தலையங்கம்.

இது ஒன்றே போதும் அவர்களின் கண்ணோட்டம் எத்தனை ‘விரிந்தது' என்பதற்கு. பெரியார் தி.க, தி.க போன்றவையும் இதில் தாரளவாதிகள் கிடையாது. மலையாளிகளின் தொல்லை பெருந்தொல்லையாகிவிட்டது என்று 1953ல், மொழிவாரி மாநிலங்கள் பிரியும் முன், தன் பிறந்த நாள் செய்தியில் தெரிவித்த பெரியாரின் சீடர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். தேசிய இயக்க வழி வந்த நெடுமாறனும் இதில் குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்தான். ஒருவகையில் இவர்களின் கருத்தியலும், தாக்கரேக்களின்
கருத்தியலும் ஒன்றுதான் என்பதுதான் உண்மை. இதை மூடிமறைக்கவே இந்திய தேசியம் குறித்த பெருங் கூச்சலை இவர்கள் போடுகிறார்கள்.

இதை ஈழத்தமிழர் புரிந்து கொண்டு, தமிழ் தேசியர்களால், தமிழர், தமிழ் தேசிய இனம் என்ற சொல்லாடல் எதையெல்லாம் மறைக்க, நியாயப்படுத்த பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆராய வேண்டும். இன்னும் சொல்வதென்றால் சிங்கள பேரினவாத சிந்தனைகளையும், இவர்களின் எழுத்துக்கள்,கோரிக்கைகளை ஒப்பு நோக்கலாம்.

இன்றுள்ள நிலையில் இந்திய அரசின் நிலைப்பாடுகளை விமர்சிப்பவர்களில் சிலர் இந்திய தேசியம் இங்கு பிற தேசியங்களை நசுக்குகிறது என்றும், இந்திய அரசின் இலங்கை குறித்த நிலைப்பாடு இந்தியாவின் பிராந்திய வல்லராசாகும் ஆசையின் வெளிப்பாடு, இந்திய
தேசியத்தின் அடக்குமுறைக் கொள்கையின் அடிப்படையில் அமைந்தது என்று குறிப்பிடுவதை நான் ஏற்கவில்லை. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை விமர்சிப்பவர்கள் ஒரு அடிப்படையை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இந்திய அரசின் நிலைப்பாடுகள்
கண்மூடித்தனமாக ஒரே நோக்கத்தைக் கொண்டதாக இருக்க முடியாது. இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான் ஆயுத உதவி செய்வது, இந்து மகா சமுத்திர கடல் பிராந்தியத்தின் geo-political முக்கியத்துவம், அதில் இலங்கையின் இடமும், முக்கியத்துவம் ஆகியவையும்
கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்தியா பாலஸ்தீனியர்களின் கோரிக்கையை ஆதரிக்கிறது என்பதற்காக, இஸ்ரேலுடன் உறவு, ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்குவது போன்றவற்றை செய்யாமல் இல்லை. உலகின் அனைத்து நாடுகளும் தத்தம் வெளியுறவு
நிலைப்பாடுகளை எடுக்கும் போது பலவற்றையும் கருத்தில் கொண்டே எடுக்கின்றன. இந்தியாவும் அப்படியே. இன்னும் சொல்லப் போனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பதை ஒரு சில அதிகாரிகளோ அல்லது ராணுவமோ தீர்மானிப்பதில்லை. ஜனநாயகக் குடியரசில் அதை முடிவு செய்வது நாடாளுமன்றத்தை சந்திக்கின்ற அரசு. 1996ல் முதல் (அதிகபட்சம் ஆறு மாதங்களை தவிர) மத்தியில் இருந்த, இருக்கும் அரசுகள் தமிழகக் கட்சிகள் ஆதரவில்தான் ஆட்சி செலுத்தின, செலுத்துகின்றன, அதுவும் ஆட்சியில் இடம் பெற்றுள்ள தமிழக கட்சிகளின் முழு ஆதரவுடன். இந்தக் கட்சிகள் (திமுக, அதிமுக, பாமக,மதிமுக) இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை குறித்த நிலைப்பாட்டை தீர்மானிக்கும்/மாற்றும் சக்தி இல்லாதவை என்று கூற முடியாது. இவை என்ன செய்தன, எத்தகைய அழுத்தம் கொடுத்தன, என்ன சாதித்தன, சாதிக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதையெல்லாம் விவாதிக்காமல் இந்திய வெளியுறக் கொள்கையை தமிழர் விரோத மலையாளிகள், இந்தி பேசும், மற்றும் பார்பன அதிகாரிகள் தீர்மானிப்பதாக கட்டுக்கதைகள் பரப்படுவதையும் நாம் காண்கிறோம்.

தொடரும்

Labels: , , , ,

நான்கு

நான்கு

1) ஜெயகாந்தனின் எத்தனை கோணம் எத்தனை பார்வையிலிருந்து இரு பாடல்கள்

2) கேட் சோபருடன் உரையாடல் - நுகர்வியமும், இன்பமும், சந்திரன் குகாத்தூஸுடன் உரையாடல் - இனவழிப்பு
இன்னும் பல உரையாடல்களுக்கு

3) இந்தக் கட்டுரையை அண்மையில் படித்தேன், எதிர்வினை எழுத வேண்டும், விரைவில்

4) இந்தக் கட்டுரை இலங்கை சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவுற்றதையொட்டி எழுதப்பட்டுள்ளது

Labels: , , ,