எம்.எஸ்.சுவாமிநாதன்,பசுமைப்புரட்சி- கட்டுரை- எதிர்வினை

எம்.எஸ்.சுவாமிநாதன், பசுமைப்புரட்சி- கட்டுரை - எதிர்வினை

கீற்று இணையதளத்தில் மறுபிரசுரம் செய்யப்படிருந்த 'எம்.எஸ்.சுவாமிநாதன்: வேளாண் விஞ்ஞானியா? அமெரிக்கக் கைக்கூலியா' என்ற கட்டுரைக்கு நான் அங்கு இட்டு, வெளியிடப்பட்ட எதிர்வினை இங்கு தகவலுக்கும், ஆவணப்படுத்தவும் இடப்படுகிறது

இணையத்தில் http://keetru.com/literature/essays/sudar.php

பொய்களை தொடர்ந்து எழுதுவதால் அவை உண்மைகளாகிவிடா.உண்மைகளைச் சொன்னாலும், அதை தங்கள் வலைப்பதிவு/தளங்களில் வெளியிடாமல் மீண்டும் மீண்டும் பொய்களை எழுதும் ஒரு கும்பல்தான் இது போன்ற கட்டுரைகளை இணையத்தில் எழுதி வருகிறது.அந்த கும்பல் மக்கள் சட்டம்,தமிழரங்கம் போன்றவற்றில் பொய்களை பரப்புவதை தொழிலாகவே கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரை,சுந்தர்ராஜன் எழுதி கீற்றில் வெளியான கட்டுரை,கடந்த ஆண்டு கீற்றில் வெளியான வெற்றிச்செல்வனின் கட்டுரை - மூன்றும் இத்தகயவை. சுவாமிநாதன் குறித்து கூட இவர்களால் உண்மைகளை எழுத முடியவில்லை. அவர் முனைவர் பட்டம் பெற்றது கேம்பிரிட்ஜ் பல்கலையில். இந்தக் கட்டுரையில் தகவல் பிழைகளில் துவங்கி, முழுப் பொய்கள் வரை ஏராளமான திரிபு வேலைகளை காணலாம். சுவாமிநாதனை விமர்சிக்கலாம்.ஆனால் விமர்சனம் என்ற பெயரில் பொய்களை எழுதக் கூடாது.

பிடி பருத்திக்கும் விவசாயிகளின் தற்கொலைகளுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்கும் ஒரு நம்பகமான ஆய்வினை இவர்கள் சுட்டிக்காட்டட்டும்.இந்தியாவில் பிடி பருத்தி வெற்றி பெற்றுள்ளது என்பது உண்மை.பசுமைப் புரட்சி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. அதை வெறும் சதியாக சித்தரிப்பது அபத்தம்.உலகம் இந்த பொய்யர்களை பொருட்படுத்துவதில்லை.விவ்சாயி பிடி பருத்தியால் விளைச்சல் அதிகரித்து, லாபம் வரும் என்பதால் அதை தெரிவு செய்கிறார். அதனால் பிடி பருத்தி பயிரப்படும் நிலத்தின் பரப்பளவு ஆண்டுதோறும் இந்தியாவில், உலகில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இந்தப் பொய்யர்கள் எதையாவது இரவல் பெற்று அரைவேக்காட்டுத்தனமாக எழுதிக் கொண்டேயிருப்பார்கள்.

சுவாமிநாதன் அமெரிக்க கைக்கூலி என்பவர்கள் பசுமைப்புரட்சியை தமிழ் நாட்டில் பரப்பிய ஆட்சியாளர்களையும் அவ்வாறே எழுதுவார்களா? பசுமைப்புரட்சிக்கு எதிர்ப்பு வந்த போது அதை வலியுறுத்தி ஆதரித்தவர் அன்றைக்கு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம். அவரும் அமெரிக்க கைக்கூலியா.பசுமைப்புரட்சி பரவ விதைகளை விநியோகிப்பதில் வேளாண் பல்கலைகழகங்கள் பெரும் பங்காற்றின. அவை புதிய வகை பயிர்களையும் பசுமைப்புரட்சியின் கீழ் அறிமுகம் செய்தன. அவற்றின் மீது அறிவுசார் சொத்துரிமை எதுவும் கிடையாது. விதை நெல்லுக்கு இந்தியா அமெரிக்கா உட்பட எந்த நாட்டிடமும் கையேந்தும் நிலை ஏற்படவில்லை. மாறாக பசுமைப்புரட்சிக்கு முன் உணவு உற்பத்தி குறைவாக இருந்ததால் அரிசி, கோதுமையை இறக்குமதி செய்யும் நிலையில் இருந்தது.IRRI என்ற சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் எந்த அரசின் நிர்வாகத்திலும் இல்லை. அது CGIAR என்ற குழுவின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஒன்று. அந்தக் குழுவில் இந்தியா உட்பட பல நாடுகள் உறுப்பினர்கள். IRRIலிருந்து விதைக்களை உருவாக்க தேவையான germplasm த்தை வேளாண் பல்கலைகள் பெற்றுள்ளன. அதற்கு தடையில்லை. இன்னும் சொன்னால் CGIAR கீழ் உள்ள ஆய்வு நிறுவனங்களில் உள்ள germplasm எந்த ஒரு அரசு/தனியார் நிறுவனத்திற்கும் சொந்தமானது அல்ல. மாவோவின் சீனாவும் விளைச்சலை அதிகரிக்க செயற்கை உரங்கள், புதிய வகை விதைகள் கொண்ட பசுமைப் புரட்சி தொழில்னுட்பத்தை பயன்படுத்தியது. சோவியத் யுனியனும் நவீன வேளாண்மையைத்தான் பயன்படுத்தியது. 1960களில் பசுமைப் புரட்சி நவீனமயமாக்கல்,முன்னேற்றம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் ஜே.சி.குமரப்பா போன்ற காந்தியர்கள் அதற்கு முன்பே இந்தியாவில் எத்தகைய வேளாண்மை வேண்டும் என்பதை எழுதியிருந்தனர். குமரப்பா என்ன எழுதினார் என்பது இந்தப் பொய்யர்களுக்கு தெரியுமா. புஜ/புக என்றைக்காவது குமரப்பா முன்வைத்த விமர்சனங்களை அலசி எழுதியுதண்டா, அல்லது குறைந்தபட்சம் அதை அறிமுகமாவது செய்தது உண்டா. தகவல்களை இரவல் வாங்கி பொய்களை கலந்து எழுதும் கும்பலுக்கு பசுமைப் புரட்சியின் வரலாறும் தெரியாது, அதன் விமர்சனத்தின் வரலாறும் தெரியாது.
பெரியார் பசுமைப் புரட்சியை எதிர்த்தார் அல்லது அவரது ஆதரவு பெற்ற திமுக ஆட்சிகள் பசுமைப்புரட்சியை எதிர்த்தன என்பதற்கு ஆதாரம் உண்டா.பெரியார் என்றைக்காவது பாரம்பரிய வேளாண்மையை ஆதரித்து எழுதியுள்ளாரா, ஆதாரம் காட்ட முடியுமா.இன்று காலச்சுவட்டில் சங்கீதா ஸ்ரீராம் ஒரு தொடர்கட்டுரை எழுதுகிறார். இது போல் எத்தனை கட்டுரைகளை புதிய ஜனநாயகம்,புதிய கலாச்சாரம் வெளியிட்டுள்ளது.

பசுமைப்புரட்சியை தமிழ்நாட்டில் மார்க்சிய வட்டாரங்களில் முதலில் விமர்சித்தது எஸ்.என்.நாகராஜன். இந்த விவாதங்கள் 1980களில் பரவலாக துவங்கின, அதிகம் வெளியே தெரிய வந்தன.அதில் முக்கிய பங்கு வகித்தது PPST குழு. நாகராஜன் பார்பனர், PPST குழுவிலும் பலர் பார்பனர்கள். அவர்கள் பசுமைப்புரட்சியை கேள்விக்குள்ளாகியவர்கள். 1983ல் கிளாட் ஆல்வரிஸ் இந்த விவாதங்களை அப்போதிருந்த இல்லஸ்டேரட் வீக்லியில் எழுதிய கட்டுரை மூலம் பலர் அறியச் செய்தார். நம்மாழ்வாரை பற்றி எழுதியதுடன், இயற்கை வேளாண்மை குறித்து நூல் வெளியிட்டது நிகழ். கோவை ஞானி அதை செய்ய முக்கிய காரணி நாகராஜன். அப்போது புதிய ஜனநாயகம் எத்தனை கட்டுரைகளை இயற்கை வேளாண்மை குறித்து வெளியிட்டது என்பதை சுடர் எழுதுவாரா?

Labels: , , , ,

மேய்ச்சல்- 1/2009

மேய்ச்சல்- 1/2009

1) கலையரசி - இந்தியாவின் முதல் அறி-புனைத் திரைப்படம் ?

2) அமெரிக்காவில் இந்தியர் -தொழில்முனைவோராக

3)சீனா -மாற்றம் கோரும் கூட்டறிக்கை,எதிர்வினை

4) பினாயக் சென் - தொடரும் கேள்விகள்
அத்துடன் இதையும் படிக்கலாம்

5) இயற்கை யாருக்குச் சொந்தம் (இது போன ஆண்டே இடம் பெற்றிருக்க வேண்டும், வெட்டி ஒட்டுவதில் விட்டுப் போனது)

6) அகல்யா சாரியுடன் ஒரு பேட்டி

7) உடையும்/சிதறும் அரசுகள்

Labels: , , , ,

மீண்டும்

மீண்டும்

கிட்டதட்ட இரு வார விடுமுறைக்குப் பின் வேலையில். விடுமுறையில் இணையத்தில் நேரத்தினை செலவழிப்பதை, படிப்பதை குறைத்தேன். இப்போது முகத்தில் ஒரு தெளிவு வந்துள்ளதாக எனக்கு மிகவும் வேண்டியவர் சொல்கிறார். அது உண்மை என்று
எனக்கே தெரிகிறது, இருப்பினும் வேதாளம் என்றால் முருங்கை மரம் ஏறித்தானே ஆக வேண்டும். 7ம் தேதி ஒரு விவாதக் கூட்டம், 9,10 மாநாடு , அதில் 9ம் தேதி நான் பவர்பாயிண்ட வேண்டும் என்று ஆண்டின் துவக்கமே ‘சரி'யில்லை. பிப்ரவரி, மார்ச்சில்
இன்னும் சில கருத்தரங்கள், மாநாடுகளில் பவர்பயிண்ட வேண்டிவருமென்று தோன்றுகிறது.

தமிழ் வலைப்பதிவுகளை தவிர்ப்பது நலம், சனி பகவானுக்கு சனி தோறும் எண்ணை விளக்கு ஏற்றவேண்டும் என்று என்னுடைய ராசிக்கு அவள் விகடன், மங்கையர் மலர் & தினத்தந்தி இணைப்புகளில் பரிகாரங்களை துல்லியமாக கணித்து சொல்லியிருக்கிறார்களாம்.
பின்னதை செய்வது இயலாது என்பதால் முன்னதையாவது செய்யலாம் என்று நினைக்கிறேன். இன்னொரு பரிகாரமாக புத்தக கண்காட்சியையொட்டி புத்தகம் வாங்குவதை தவிர்ப்பது எப்படி என்று சிறப்பு இடுகை இடுவதாக எண்ணம். சென்னை புத்தக்கண்காட்சியில் இதை இலவசமாக தர உபயதாரார் கிடைத்தால் அச்சிட்டு விநியோகம் செய்ய முடியும். அரசு கடைக்கண் வைத்தால் பொது நூலகங்கள் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் அதை தர முடியும்.

சிலர் போல் புதுவருட தீர்மானம் நிறைவேற்றி அதை பகிரங்கமாக்ச் சொல்லும் ‘தைரியம்' எனக்கு இல்லை. ஆண்டின் இறுதியில் நான் செய்ததையே அந்த ஆண்டுக்கான தீர்மானங்கள் என்று அறிவித்து விடலாம்தான், சின்ன சிக்கல் என்னவெனில் செய்தது என்று பார்த்தால் ஒன்றுமே தேராது, நான் அதை சொல்வது, வராத வட்டியை வரவாக காட்டிய வங்கியின் வரவு-செலவு அறிக்கை போல் ஆகிவிடும் என்பதால் செய்ததைக் கூட பகிரங்கப்படுத்துவதில்லை. அதை தன்னடக்கம் என்றும், தன்னடக்கம் நல்ல குணம்
என்றும் நேற்று வரை சொல்லிவந்தேன். இப்போதிலிருந்து அப்படி சொல்ல முடியுமா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

தன்னடக்கம் தமிழரின் ஜீன்களின் இருந்ததில்லை, இருப்பினும் வைதீகம் அதை புகுத்திவிட்டதால் தமிழர் தன்னடக்கம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்டார்கள் என்று மாற்றுப் பாதை என்ற ஆராய்ச்சி இதழின் சிறப்பாரிசியர் அடுத்த இதழில் எழுதப் போவதாக
பூச்சிகள் சொல்கின்றன. இந்த ஜீன் அடுக்கை சுரண்டிப் பார்த்தால் மூலத் தமிழ் ஜீன்களை கண்டுபிடித்து, வைதிகம் கட்டமைத்ததை நீக்கலாம், புரட்டிப் போடலாம்.அதுவே சமகால உடல் அரசியலின் முதல் பணி என்று வற்றாத நதியில் கட்டுரை விரைவில் வருகிறதாம். ஜீன் அடுக்குகள் பாலிம்பசெட் போன்றவை, ஒன்றின் அடியில் ஒன்று என்று இருந்தாலும், தமிழரின் மனதில் அசல் ஒரிஜனல் சூப்பர் சுப்ரீம் அல்டிமேட் மூலத்தமிழ் உணர்வு அனைத்திற்கும் அடியில் தாங்கி/தங்கி வருவதால் வைதீகம் புகுத்திய ஜீன் மாற்றங்களை முயன்றால் களைந்துவிடலாம் என்று 21ம் நூற்றாண்டின் தமிழ் நீட்சே-கம்-செகுவரா-கம்-டெல்யுஸ் அருள் வாக்கு சொல்லவிருப்பது நம் உயிரில் ஒசையுடன், உண்ணும் தோசை போல் கலந்து 2009ல் உய்வு பெறுவோமாக.

அருள் வாக்கிற்கான உரையைப் புரிந்து கொள்ளும் திறன் எனக்கு இல்லை (அருள் வாக்கு மட்டும் புரிகிறதா என்றெல்லாம் கேடக்க் கூடாது) என்பதால் 2010ன் துவக்கத்தில் வரவிருக்கும் அருள் வாக்கின் உரை விளக்கம் (in 10 volumes) ஐபடித்து யாராவது விளக்கினால் அவர்களுக்கு பிரதியுபகாரமாக என் முனைவர் பட்ட ஆய்வேட்டின் ( தமிழ் உரை மரபும், ஹைடெக்கரும் ) 100 பிரதிகளை இலவசமாக தருகிறேன். மற்றும் ஹைடேக்கருடன் நான் ஒஜோ பலகை மூலம் உரையாடுவதை ஒரு மணி நேரம் காணவும் வாய்ப்பு தருகிறேன். அதை யுடியுபில் ஏற்ற மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்துள்ளேன். எனவே காமிரா செல்போன்களுக்கு அவருடன் உரையாடும் போது அனுமதியில்லை. எனக்கு ஜெர்மன் தெரியாவிட்டாலும், மொழிப்பாலமாக செயல்படுவதை ISO 2001 தரச் சான்றிதழ் பெற்ற ஆவிக்கு அவுட்சோர்ஸ் செய்து விட்டேன், ஆவி அதற்காக காசு கேட்பதில்லை. (டோண்டு கவனிக்க)

பி.கு: ஆரிய உதடுகள், திராவிட உதடுகள் போல் ஆரிய தன்னடக்கம், திராவிட தன்னடக்கம் என்று இருவகை இருக்கக் கூடாதா என்றெல்லாம் பின்னூட்டம் இட வேண்டாம். எனக்கு ரீமா சென் பிடிக்கும் என்றாலும், இப்போதைய பொலிடிகலி கரெக்ட் சாய்ஸ் நமீதா என்பதால் அத்தகைய பின்னூட்டங்களை அனுமதிப்பதிற்கில்லை.

Labels: , , ,