சுய-நிர்ணய உரிமை

சுய-நிர்ணய உரிமை

சமீபத்தில் தமிழவன் எழுதியுள்ள கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

"சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை, ஆதிவாசிகள் போன்ற தனிப்பண்பாட்டு அடையாளம் உள்ள மக்கள் கூட்டத்தினர் எந்த நாட்டிலிருந்தாலும் சுய நிர்ணய உரிமை பெறலாம் என்று கூறியுள்ளது."

அதை தெரிவித்தவர் கேட்டிருந்த கேள்விகள் 1) ஐக்கிய நாடுகள் சபை என்ன கூறியிருக்கிறது 2)இந்த சுய-நிர்ணய உரிமை என்பது இதன் மூலம் உத்தரவாதம் செய்யப்படுகிறதா? அதை ஐக்கிய நாடுகள் சபை பெற்றுததருமா?

ஐக்கிய நாடுகள் சபையின் பொது அசெம்பிளி 2007 ஆண்டு செப்டம்பர் மாதம் UNITED NATIONS DECLARATION ON THE RIGHTS OF INDIGENOUS PEOPLES என்ற பிரகடனத்தினை நிறைவேற்றியது.

இந்தப் பிரகடனம் ஒரு உடன்படிக்கையோ அல்லது ஒப்பந்தமோ அல்ல. ஒரு பிரகடனம் என்ற அளவில் அது சில பொது கோட்பாடுகளை முன் வைக்கிறது. அந்த கோட்பாடுகளை அமுல் செய்ய வேண்டும் என்று ஐ.நா அமைப்பு அல்லது அதன் கீழ் வரும் அமைப்புகளோ
ஆணையிட முடியாது. இது சர்வதேச ஒப்பந்தம் அல்ல, உடன்படிக்கையும் அல்ல. எனவே இது ஆதரவாக ஒட்டளித்த நாடுகள் அங்கீகரித்துள்ள பிரகடனம் என்று எடுத்துக் கொள்ளலாம். இதில் சுய-நிர்ணய உரிமை என்பது அங்கீகரிக்கப்பட்டுகிறது. சுய-நிர்ணய உரிமை என்பது பலவிதங்களில் விளக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒப்புக்கொள்ளும் வரையரை என்று எதுவும் இல்லை. பல கோட்பாடுகளைப் போல் இதன் உள்ளடக்கம் பலவிதமாக பொருள் கொள்ளப்பட்டு, விளக்கப்படுகிறது.

பிரிந்து செல்லும் உரிமையை உள்ளடக்கிய சுய-நிர்ணய உரிமையாக இதை இந்தப் பிரகடனம் குறிப்பிடவில்லை.இந்த சுய-நிர்ணய உரிமை குறித்த ஒரு விளக்கத்தை இதில் காணலாம்.

இந்தப் பிரகடனம் எதையும் உத்தரவாதம் செய்து தரவில்லை. அந்த சுய-நிர்ணய உரிமையை ஐ.நா சபை தலையிட்டு பெற்றுத் தரும் என்றும் எதிர்ப்பார்க்கத் தேவையில்லை. ஐ.நா சபை நாடுகளின் சபை, தேசங்களின் சபை. அது தேசிய இனங்களின் சபை அல்ல.பழங்குடி மக்களைப் பொறுத்தவரை இந்தப் பிரகடனம் அவர்களது உரிமைகளை அங்கீகரிக்கிறது. நாடுகள் அவற்றை அங்கீகரித்து, மதித்து நடக்க ஐ.நா சபை வேண்டுகோள் விடுக்கலாம்.மனித உரிமை கவுன்சில் போன்ற அமைப்புகள் அவற்றை நிறைவேற்றக் கோரலாம். அவை எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராயலாம். தேசிய அளவில் நீதிமன்றங்கள் இந்த உரிமைகளை அங்கீகரிக்கலாம். அதுவும் கூட அந்த நாட்டின் அரசியல் சட்டம், அரசமைப்பைப் பொறுத்ததாகும்.

இதன் பொருள் இது வெறும் வார்த்தை தொகுப்பு என்பதல்ல.மாறாக பழங்குடி மக்களின் உரிமைகள் குறித்து சர்வதேச சமூகம் காட்டும் அக்கறையின் ஒரு வெளிப்பாடு இது. உலக மனித உரிமை பிரகடனம் உட்பட பல சிவில், மனித உரிமை சாசனங்களை, இந்திய உச்சநீதி மன்றம் அங்கீகரித்து தன் தீர்ப்பு வழங்கியுள்ளது. நடைமுறையில் இதன் விளைவு என்ன என்பதற்கு ஒரு உதாரணம் தரலாம். CEDAW என்ற உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டு, ஏற்றுள்ளது. பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு
ஆளாவது குறித்து உச்சநீதி மன்றம் தந்த தீர்ப்பில் (விசாகா வழக்கு) அரசு தனிச் சட்டம் கொண்டுவராத போதும் அது இதை ஏற்றுள்ளதால் பாலியல் தொந்தரவினை தடுக்க, பெண்களுக்கு பாதுகாப்பு தரும் கடப்பாடு இருப்பதாக கூறி தானே சில விதிமுறைகள், வழிகாட்டும் நெறிகளை வகுத்து கொடுத்தது. அது போல் இனி வரும் தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் இந்தப் பிரகடனத்தினை இந்தியா ஏற்றுள்ளதால் சிலவற்றை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தலாம் அல்லது ஆணை பிறபிக்கலாம். பழங்குடி மக்களின் உரிமை, நலனுக்காக போராடும் சிவில் சமூக அமைப்புகள், ஆர்வலர்கள் இந்த பிரகடனத்தில் உள்ள உரிமைகளை முற்றாக நடைமுறைப் படுத்த வலியுறுத்தலாம். உச்சநீதிமன்றமும், மனித உரிமைகளும், சர்வதேச பிரகடனங்கள்,உடன்படிக்கைகள் குறித்து விரிவாக, பேசல்
கன்வென்ஷன் உட்பட பலவற்றையும் கருத்தில் கொண்டு எழுதினால்தான் ஒரு புரிதல் கிடைக்கும். இந்தியா ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது, எனவே உடனே அதை நடைமுறைப்படுத்த் வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறும் என்பதாக புரிந்து கொள்ள வேண்டாம்.சுய-நிர்ணய உரிமை, குறிப்பாக பழங்குடி மக்கள குழுக்களைப் பொறுத்தவரை என்ன என்பது ஒரு விரிவான அலசலுக்கு உரியது. கடந்த 20 ஆண்டுகளில் இது குறித்த விவாதங்களில் பல புதிய கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. மூலவளங்கள் மீதான
உரிமை, பண்பாட்டு உரிமைகள், நிலங்கள் மீதான உரிமைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

எனவே பொத்தாம் பொதுவாக சுய-நிர்ணய உரிமை பெறலாம் என்பதை தாண்டி அடுத்த கட்டப் புரிதல்களுக்கு போகும் போதுதான் தெளிவு பிறக்கும்.

விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.தமிழவன் அண்மையில் எழுதியுள்ள/எழுதிவரும் கட்டுரைகள் குறித்த எதிர்வினையாக இதைக் கொள்ள வேண்டாம்.

Labels: , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு