2008ம் ஆண்டின் கடைசி இடுகை ?!

2008ம் ஆண்டின் கடைசி இடுகை ?!

26/11 குறித்து ஞாநி,அருந்ததி ராய் உட்பட வேறு சிலர் எழுதியிருந்ததை விமர்சிக்கும் விதமாக ஒரு கட்டுரையை எழுதத் துவங்கினேன். (*). அது முற்றுப்பெறவில்லை. ஞாநி, அ.ராய் முன்வைக்கும் கருத்துக்களை குறிப்பாக ஞாநியின் கருத்துக்களை நான் ஏற்கவில்லை. கடுமையான விமர்சனம் அவை குறித்து உள்ளது. அதே போல் தமிழவன் உயிரோசையில் எழுதிவருவதைக் குறித்தும் ஒரு விமர்சனக் கட்டுரை எழுத
துவங்கி அத்துடன் நிற்கிறது. தமிழவன் பிராமண வெறுப்பு, ஹிந்து நாளிதழ் மீதான வெறுப்பு, இந்து மதம் மீதான அர்த்தமற்ற விமர்சனத்தை முன்வைக்க இந்தக் கட்டுரைத் தொடரை எழுதுகிறார். அதை நியாயப்படுத்தவே கோட்பாட்டு பூச்சுகள், பெயர் உதிர்ப்புகள் இன்ன பிற இடம் பெறுகின்றன. எம்.எஸ்.பிராபகரா என்ற காமரூபி EPW ஆசிரியராக இருந்ததே இல்லை. அவர் ஹிந்துவில் எழுதி, தமிழவன் சுட்டும் கட்டுரைக்கு ஹிந்துவில் விமர்சனங்கள் வந்தன, ஒரு ஆங்கில வலைப்பதிவில் இடம் பெற்ற விமர்சனங்களையும் இங்கு குறிப்பிட வேண்டும். தமிழவன் முன்னிறுத்துவது தமிழ் ‘பாசிச' மனோபாவம். அடிப்படையில் அவர் முன் வைப்பது சாராம்சவாதம்.இப்படியாக தமிழவன் எழுதியதை விமர்சித்து ஒரு நீண்ட கட்டுரைக்கான முயற்சியை துவங்கினேன். இப்போது இருக்கும் நிலையில் செய்யவேண்டியவை ஏராளமாக இருப்பதால் அந்த இரு கட்டுரைகளையும் எழுதி ஆண்டிறுதிக்குள் வலையில் இட முடியாது.

இன்னும் இரண்டு/மூன்று வாரங்களுக்கு இணையத்தில் அதிக நேரம் செலவிடவோ, தமிழில் எழுதவோ இயலாது. 31 திசம்பருக்குள் செய்ய வேண்டியவை, ஜனவரி 09ல் செய்ய நினைப்பவை கனவிலும் பயமுறுத்துகின்றன :). தலைக்கு மேல் தொங்கும் கத்திகளைக் கண்டு இப்போதெல்லாம் பகலில் பயப்படுவதில்லை என்பதால் அவை கனவில் படையெடுத்து பயமுறுத்துகின்றன :).

ஜனவரி 09 இரண்டாம் வாரத்தில் இது வரை நான் போயிராத ஒரு மாநகருக்கு
போகிறேன், ஒரு கருத்தரங்கிற்காக. அக்கருத்தரங்கின் அமைப்பாளர் ஒருவருக்கு வியப்பு, இதுவரை அங்கே போனதில்லையா என்று. ஆம் நிறைய விஷயங்கள் வாழ்க்கையில் எத்தனை அருகில் ஆயினும் எத்தனை தொலைவில் என்றுதான் இருக்கின்றன என்றேன்.

இதுதான் இந்த ஆண்டில் இந்த வலைப்பதிவில் இடம் பெறும் கடைசி இடுகையாக இருக்கும் என்று கொள்ளலாம்.இந்த ஆண்டு(ம்) என்னை சகித்துக் கொண்டு, நான் எழுதியதை படித்து, பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள்.

* அதன் ஒரு பகுதி கீழே
26/11ம் போலி மதச்சார்பின்மைவாதிகளும்

குமுதத்தில் ஞாநி எழுதியதையும், அவுட்லுக்கில் அருந்ததி ராய் எழுதியதையும் படித்தேன். இந்தியா எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை, பாஜகவை குறிப்பாக அத்வானி,மோடியை தீவிரவாத முத்திரை குத்தி அரசியலிலிருந்து ஒழிக்க வேண்டும் என்ற
‘நல்லெண்ணம்'தான் அவற்றில் தெரிகிறது. ஞாநி இன்னொரு அ.மார்கஸாக மாறிக் கொண்டிருக்கிறார். 1992ல் பாப்ரி மஸ்ஜித்தான் துவக்கம் என்றால் 1980களின்
இறுதியிலிருந்தே ஜிகாதிகள் காஷ்மீரில் செய்ததை என்னவென்று சொல்ல. தலிபான்கள் பாமியானில் புத்தர் சிலைகளை இடித்தனர் என்பதற்காக எங்காவது பெளத்தர்கள் பதிலுக்கு தாக்கினார்களா, இல்லை ஜிகாதிகள் செய்த கொடுமைகளுக்கு பதிலாக 1980களின்
இறுதியில, 1990களின் துவக்கத்தில் இந்துக்கள் இந்தியாவெங்கும் முஸ்லீம்களை தாக்கினார்களா. ஞாநியும், அருந்ததியும் இஸ்லாமியர்களின் வன்முறை எதிர்வினைகளுக்கு எந்த வெட்கமுமின்றி மறைமுக நியாயம் கற்பிக்கிறார்கள்.

இஸ்லாமிய தீவிரவாதம் என்பது பாகிஸ்தானில் உள்ள இந்திய,இந்து விரோத சக்திகள், பாகிஸ்தான் அரசினால் இந்தியாவில் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படாமல் இருந்தாலும், ஊக்குவிக்கப்பட்டு இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களை செய்ய பயன்படுத்தப்பட்டிருக்கும்
என்பதுதான் உண்மை. இஸ்லாமியர்கள் மிகப் பெரும்பான்மையாக உள்ள நாடுகளிலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் வன்முறைத் தாக்குதல்களை செய்யும் போது, இந்தியாவில் அதை செய்திருப்பார்கள், பாஜக இல்லாமலிருந்தாலும்.இந்தியாவில் காஷ்மீர் பிரச்சினையை வைத்து பாகிஸ்தான் வன்முறை செயல்களுக்கு ஊக்கம் தந்தது. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை தொடர்ந்து எடுத்து வருவதும், அதை இந்தியா விமர்சிப்பதும் உலகறிந்த உண்மை. எனவே பாஜகை மட்டும் குறை கூறுவது அவரது பாஜக வெறுப்பையே காட்டுகிறது.

இந்தியாவின் ஒற்றுமை,ஒருமைப்பாட்டிற்கு விடப்பட்ட சவலாக 26/11 தாக்குதல்களை கருதி, அதற்கு காரணமான சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும் என்று ஒருமித்த குரலில் தேசமே பேசினாலும், இந்த போலி மதச்சார்பின்மைவாதிகள் இதையும் பாஜக விரோத அரசியலுக்கு
பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஞாநி எழுதியுள்ளபடி அத்வானி மன்னிப்புக் கேட்டால் நாளைகே ஜிகாதிகள் மனம் மாறி இந்தியாவை நட்பு நாடாக ஏற்று, வன்முறையை விட்டுவிடுகிறோம் என்று சொல்வார்களா. மாறாக ஞாநி போன்றவர்கள் பாஜக பயங்கரவாத
அமைப்பு, தடை செய் என்று குரல் எழுப்புவார்கள். அத்துடன் ஜிகாதிகள் ஏதாவது கோரினால் அதில் உள்ள 'நியாயங்களை' விளக்குவார்கள். பாப்ரி மஸ்ஜித் இடிப்பு, 2002ல் நடந்த குஜராத் கலவரம் போன்றவை இந்தியாவில் காலங்காலமாக நிலவும் மதச்சண்டைகளின்
பகுதி. மோடி பதவி விலக வேண்டும் என்று அன்றும் (2002ல்) கோரப்பட்டது. இந்தியாவின் மிக மோசமான மதக்கலவரங்களில் ஒன்று, வி.பி.சிங் உ.பி. முதல்வராக இருந்த போது 19?? ?????ல் நடந்தது. வி.பி.சிங் பதவி விலகவில்லை. அதைச் செய்தவர்கள் PAC
எனும் காவல் பிரிவினர். ஞாநிக்கள் இதை நினைவில் கொள்ள வேண்டும். னெனில் ,மோடி முதல்வராகும் முன்னும், காங்கிரஸ் குஜராத்தில் ஆட்சி செய்த போதும் மோசமான மதக்கலவரங்கள் அங்கு நடந்துள்ளன. அதற்கான எத்தனை முதல்வர்கள் பதவி விலகினர்.

அதே போல் இந்து மகாசபை உருவாகும் முன்னரே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போதும் மதக்கலவரங்கள் நடந்துள்ளன. எனவே இந்தப் பிரச்சினையில் வேர் எங்கிருந்து துவங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த்துவாவை விமர்சிப்பதும்,
நிராகரிப்பதும் சரிதான். ஆனால் ஞாநி போன்றவர்களின் மதச்சார்பின்மை அதில் துவங்கி, அத்துடன் முடிவடைகிறது. அருந்த்தியை குறித்து சொல்லவே வேண்டாம். அவரைப் பொருத்தவரை திரும்ப திரும்ப பாஜக, இந்த்துவ எதிர்ப்பு பல்லவியைத்தான் பாடிக்
கொண்டிருப்பார். காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும், அதுதான் தீர்வு என்பார். அப்படி காஷ்மீர் தனி நாடானால் ஜிகாதிகளுக்கு இன்னும் உற்சாகம் பிறக்கும். இந்தியாவை இன்னும் துண்டு துண்டாக சிதறச் செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுத்து தாக்குவார்கள். அப்போதும் இந்த ‘மதச்சார்பின்மை'வாதிகள் குஜராத்,பாப்ரி மஸ்ஜித் என்றுதான் பேசிக்கொண்டிருப்பார்கள்.

ராணுவச் செலவு அதிகரித்தால் ஞாநிக்கு ஏன் ஆத்திரம் வருகிறது.100+ கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் பாதுகாப்பிற்காக ராணுவத்திற்கு செலவு செய்வதில் என்ன தவறு. ஊழல் நடக்கிறது என்றால் ரோடு போடுவதில் ஊழல் ஆகவே ரோடே வேண்டாம்
என்பாரா ஞாநி.இன்றைய நிலையில் இந்தியா பொறுமைக் காக்கிறது. இதுவே கூடாது என்றும் சிலர் வாதிடுகிறார்கள். இஸ்ரேல் உதவியைக் கோரி தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்கிறார்கள். இந்தியாவின் மீது தீவிரவாதிகள் தொடுத்த போர்தான்
26/11. இந்த உணர்வின்றி தங்கள் பாஜக எதிர்ப்பு அரசியலை இங்கும் முன்வைத்து எழுதும் ஞாநி, அருந்ததி போன்றோர் ஒன்றை நினைவில் கொள்வது நல்லது. ஜிகாதிகள் அவர்கள் பாஜகவை வெறுத்தார்கள் என்பதற்காக அவர்கள் மீது கருணை காட்டமாட்டார்கள்.

Labels: , , , ,

வி.பி.சிங், அ.மார்க்ஸ், தேசப்பற்று,மானுட நேயம்

வி.பி.சிங், அ.மார்க்ஸ், தேசப்பற்று,மானுட நேயம்

1)வி.பி.சிங் குறித்து கிருஷ்ண அனந்த் எழுதியுள்ள கட்டுரை இங்கே, வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் கட்டுரை இங்கே.

சிங்கை புனிதராக காட்ட தமிழ்ச் சூழலில் முயற்சி செய்யப்படும் போது அவரது அரசியல் பற்றி அனந்த் சிலவற்றை சுட்டிக்காட்டுவது கவனத்திற்குரியது. ஷா பானு சர்ர்சையை தொடர்ந்து சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்ட போது வி.பி.சிங் கட்சி விசுவாசியாக இருந்தார், அதை ஆதரித்தார். அவர் ஆரிப் முகமது கானை தவிர்த்து சையத் ஷாபூதினை தன் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதை அனந்த் குறிப்பிடுகிறார்.தனிப்பட்ட முறையில் சிங் நேர்மையானவர் ஆனால் அவர் ஆதரித்த/முன்னிறுத்திய அரசியல்வாதிகளை குறித்து அப்படி சொல்ல முடியுமா?. சிங் ஏதோ பதவி ஆசையே இல்லாத வித்தியாசமான அரசியல்வாதி என்பது கட்டுக்கதை.மண்டலை அவர் கையில் எடுத்ததும் உட்கட்சி அரசியலில் தன் செல்வாக்கினை பலப்படுத்தவே. நவம்பர் 89ல் பிரதமரான சிங் ஆக்ஸ்ட் 1990ல்தான் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுலாக்குவதை அறிவிக்கிறார். பலரை சரிக்கட்டுவதற்காக அவர் செய்த சமப்படுத்துவம் செய்கைகளும் அவர் எத்தகையவர் என்பதை அறிய உதவுகின்றன. இவற்றையும் அனந்த்தின் கட்டுரை சரியாகவே சொல்கிறது.

ராமகிருஷ்ணனின் கட்டுரையில் இதையும் குறிப்பிடுகிறார்
However, at one level, V.P. Singh was unhappy that almost all the votaries of Mandal politics were running political organisations that were devoid of structured functioning or internal democracy. “The structure of almost all these parties is indeed a travesty of the social justice slogan,” he used to comment wryly.

வி.பி.சிங் சஞ்சய் காந்தியின் விசுவாசி, இந்திரா குடும்பத்து விசுவாசி. போபார்ஸ் பிரச்சினை எழுந்திராவிட்டால் அவர் காங்கிரசில் தொடர்ந்து இருந்திருப்பார். அவர் தனிப்பட்ட முறையில் நேர்மையானவர், பதவியில் இல்லாத போதும் ஏழைகள்,விவசாயிகள் பக்கம் நின்றவர் போன்றவற்றிற்காக அவரை மதிக்கிறேன். அவரை ஒரு புனித திரு உருவாக ஏற்க முடியாது.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல் செய்ததை அப்போது ஆதரித்தேன்.பின் என் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. இட ஒதுக்கீடு தேவை, அது சாதி என்பதன் அடிப்படையில் மட்டும் இருப்பது சரியல்ல என்பது என் கருத்து.சமூக,பொருளாதார,கல்வி நிலை, பாலினம் உட்பட பலவற்றையும் உள்ளடக்கிய ஒரு அளவுமுறை தேவை. அதனடிப்படையில் இட ஒதுக்கீடு தேவை. குறிப்பாக பெண்களுக்கு கல்வி,வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தேவை.

இந்தியா டுடேயில் அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ளது சரியான விமர்சனமாக இல்லை.கூற வந்த கருத்துக்கள் சரியாகச் சொல்லப்படவில்லை. மற்றப்படி இந்தியா டுடேயை கண்டிப்பது அவரவர் கருத்துரிமை சார்ந்த ஒன்று. அதற்காக பார்பன இந்தியா டுடே என்பது அபத்தம். சிங்கை பற்றிய அனந்த்தின் கட்டுரையை வெளியிட்ட EPW பார்பன EPW வா? பிரண்ட்லைனை எப்படி வகைப்படுத்துவது?. ஆதவன் கட்டுரையை நான் இன்னும் படிக்கவில்லை.


2) இந்த மாத தீராநதியில் அ.மார்க்ஸ் வழக்கம் போல். பெயர் உதிர்ப்புகளும், அலட்டல்களும் அதிகம். அ.மார்க்ஸ் எழுதியிருப்பது போல் தேசபற்று குறித்த விவாதம்/கருத்துக்கள் முடிந்து போய்விடவில்லை. ஹெபர்மாஸ் சில கருத்துக்களை தேசப்பற்று குறித்து முன் வைத்திருக்கிறார். மார்த்தா நஸ்பெளம் இன்றைய சூழலில் தேசப்பற்று குறித்து எழுதியிருக்கிறார். அவர் எழுதி இந்தியச் சூழலுக்கு பொருத்தமான கட்டுரை ஒன்றை நான் சுட்ட முடியும். Toward a globally sensitive patriotism என்ற கட்டுரை. இணையத்தில் கிடைக்கிறது. மார்த்தா இதில் காந்தியை முன்வைத்து சிலவற்றை சுட்டிக் காட்டுகிறார். தேசப்பற்று என்பது மானுட நேயத்திற்கு எப்போதுமே விரோதம் என்பதாக கட்டமைப்பது எவ்வளவு அபத்தம் என்பதை இந்தக் கட்டுரையை படித்தால் தெரிய வரும். இன்னும் சிலவற்றையும் சுட்டிக் காட்டமுடியும். habermas, constitutional patriotism என்று தேடுங்கள். மற்றப்படி அ.மா எழுதியிருப்பதில் உள்ள அபத்தங்களை விவாதிக்க எனக்கு நேரமில்லை.

Labels: , , ,

சுய-நிர்ணய உரிமை

சுய-நிர்ணய உரிமை

சமீபத்தில் தமிழவன் எழுதியுள்ள கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

"சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை, ஆதிவாசிகள் போன்ற தனிப்பண்பாட்டு அடையாளம் உள்ள மக்கள் கூட்டத்தினர் எந்த நாட்டிலிருந்தாலும் சுய நிர்ணய உரிமை பெறலாம் என்று கூறியுள்ளது."

அதை தெரிவித்தவர் கேட்டிருந்த கேள்விகள் 1) ஐக்கிய நாடுகள் சபை என்ன கூறியிருக்கிறது 2)இந்த சுய-நிர்ணய உரிமை என்பது இதன் மூலம் உத்தரவாதம் செய்யப்படுகிறதா? அதை ஐக்கிய நாடுகள் சபை பெற்றுததருமா?

ஐக்கிய நாடுகள் சபையின் பொது அசெம்பிளி 2007 ஆண்டு செப்டம்பர் மாதம் UNITED NATIONS DECLARATION ON THE RIGHTS OF INDIGENOUS PEOPLES என்ற பிரகடனத்தினை நிறைவேற்றியது.

இந்தப் பிரகடனம் ஒரு உடன்படிக்கையோ அல்லது ஒப்பந்தமோ அல்ல. ஒரு பிரகடனம் என்ற அளவில் அது சில பொது கோட்பாடுகளை முன் வைக்கிறது. அந்த கோட்பாடுகளை அமுல் செய்ய வேண்டும் என்று ஐ.நா அமைப்பு அல்லது அதன் கீழ் வரும் அமைப்புகளோ
ஆணையிட முடியாது. இது சர்வதேச ஒப்பந்தம் அல்ல, உடன்படிக்கையும் அல்ல. எனவே இது ஆதரவாக ஒட்டளித்த நாடுகள் அங்கீகரித்துள்ள பிரகடனம் என்று எடுத்துக் கொள்ளலாம். இதில் சுய-நிர்ணய உரிமை என்பது அங்கீகரிக்கப்பட்டுகிறது. சுய-நிர்ணய உரிமை என்பது பலவிதங்களில் விளக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒப்புக்கொள்ளும் வரையரை என்று எதுவும் இல்லை. பல கோட்பாடுகளைப் போல் இதன் உள்ளடக்கம் பலவிதமாக பொருள் கொள்ளப்பட்டு, விளக்கப்படுகிறது.

பிரிந்து செல்லும் உரிமையை உள்ளடக்கிய சுய-நிர்ணய உரிமையாக இதை இந்தப் பிரகடனம் குறிப்பிடவில்லை.இந்த சுய-நிர்ணய உரிமை குறித்த ஒரு விளக்கத்தை இதில் காணலாம்.

இந்தப் பிரகடனம் எதையும் உத்தரவாதம் செய்து தரவில்லை. அந்த சுய-நிர்ணய உரிமையை ஐ.நா சபை தலையிட்டு பெற்றுத் தரும் என்றும் எதிர்ப்பார்க்கத் தேவையில்லை. ஐ.நா சபை நாடுகளின் சபை, தேசங்களின் சபை. அது தேசிய இனங்களின் சபை அல்ல.பழங்குடி மக்களைப் பொறுத்தவரை இந்தப் பிரகடனம் அவர்களது உரிமைகளை அங்கீகரிக்கிறது. நாடுகள் அவற்றை அங்கீகரித்து, மதித்து நடக்க ஐ.நா சபை வேண்டுகோள் விடுக்கலாம்.மனித உரிமை கவுன்சில் போன்ற அமைப்புகள் அவற்றை நிறைவேற்றக் கோரலாம். அவை எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராயலாம். தேசிய அளவில் நீதிமன்றங்கள் இந்த உரிமைகளை அங்கீகரிக்கலாம். அதுவும் கூட அந்த நாட்டின் அரசியல் சட்டம், அரசமைப்பைப் பொறுத்ததாகும்.

இதன் பொருள் இது வெறும் வார்த்தை தொகுப்பு என்பதல்ல.மாறாக பழங்குடி மக்களின் உரிமைகள் குறித்து சர்வதேச சமூகம் காட்டும் அக்கறையின் ஒரு வெளிப்பாடு இது. உலக மனித உரிமை பிரகடனம் உட்பட பல சிவில், மனித உரிமை சாசனங்களை, இந்திய உச்சநீதி மன்றம் அங்கீகரித்து தன் தீர்ப்பு வழங்கியுள்ளது. நடைமுறையில் இதன் விளைவு என்ன என்பதற்கு ஒரு உதாரணம் தரலாம். CEDAW என்ற உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டு, ஏற்றுள்ளது. பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு
ஆளாவது குறித்து உச்சநீதி மன்றம் தந்த தீர்ப்பில் (விசாகா வழக்கு) அரசு தனிச் சட்டம் கொண்டுவராத போதும் அது இதை ஏற்றுள்ளதால் பாலியல் தொந்தரவினை தடுக்க, பெண்களுக்கு பாதுகாப்பு தரும் கடப்பாடு இருப்பதாக கூறி தானே சில விதிமுறைகள், வழிகாட்டும் நெறிகளை வகுத்து கொடுத்தது. அது போல் இனி வரும் தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் இந்தப் பிரகடனத்தினை இந்தியா ஏற்றுள்ளதால் சிலவற்றை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தலாம் அல்லது ஆணை பிறபிக்கலாம். பழங்குடி மக்களின் உரிமை, நலனுக்காக போராடும் சிவில் சமூக அமைப்புகள், ஆர்வலர்கள் இந்த பிரகடனத்தில் உள்ள உரிமைகளை முற்றாக நடைமுறைப் படுத்த வலியுறுத்தலாம். உச்சநீதிமன்றமும், மனித உரிமைகளும், சர்வதேச பிரகடனங்கள்,உடன்படிக்கைகள் குறித்து விரிவாக, பேசல்
கன்வென்ஷன் உட்பட பலவற்றையும் கருத்தில் கொண்டு எழுதினால்தான் ஒரு புரிதல் கிடைக்கும். இந்தியா ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது, எனவே உடனே அதை நடைமுறைப்படுத்த் வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறும் என்பதாக புரிந்து கொள்ள வேண்டாம்.சுய-நிர்ணய உரிமை, குறிப்பாக பழங்குடி மக்கள குழுக்களைப் பொறுத்தவரை என்ன என்பது ஒரு விரிவான அலசலுக்கு உரியது. கடந்த 20 ஆண்டுகளில் இது குறித்த விவாதங்களில் பல புதிய கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. மூலவளங்கள் மீதான
உரிமை, பண்பாட்டு உரிமைகள், நிலங்கள் மீதான உரிமைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

எனவே பொத்தாம் பொதுவாக சுய-நிர்ணய உரிமை பெறலாம் என்பதை தாண்டி அடுத்த கட்டப் புரிதல்களுக்கு போகும் போதுதான் தெளிவு பிறக்கும்.

விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.தமிழவன் அண்மையில் எழுதியுள்ள/எழுதிவரும் கட்டுரைகள் குறித்த எதிர்வினையாக இதைக் கொள்ள வேண்டாம்.

Labels: , ,

என்ன எழுத, என்ன சொல்ல ?

என்ன எழுத, என்ன சொல்ல ?

கடந்த வாரம் மும்பையில் நடந்த கோரத் தாக்குதல், வி.பி.சிங்கின் மரணம் உட்பட சிலவற்றை வலைப்பதிவில் பற்றி எழுத நினைத்தாலும் எழுதும் மன நிலையில் இல்லை.சில முக்கியமான, காலத்தே செய்ய வேண்டிய வேலைகள் இருந்தன. ஆண்டின் கடைசி மாதம், முடிக்க வேண்டிய வேலைகள், துவக்க வேண்டிய வேலைகள் கொண்ட பட்டியல் இருக்கிறது. அவற்றைச் செய்து விட்டாலே போதும் என்ற நிலையில் இருக்கிறேன். எனவே ஆண்டு இறுதிவரை வலைப்பதிவில் இடுகைகள் இடுவதை தவிர்க்க விரும்புகிறேன். மேய்ச்சல் என்ற தலைப்பில் சில இடுகைகள் இடப்படலாம். மற்றப்படி விவாதங்களில் ஈடுபட விருப்பமும் இல்லை,நேரமும் இல்லை. அண்மையில் தமிழில் படித்த பல இடுகைகள், ஞாநியின் தமிழ்,
ஆங்கில கட்டுரைகள் எரிச்சல் தந்தன என்பதை மட்டும் இங்கு பதிவு செய்து விடுகிறேன்.
பின்னூட்டங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம்.

மேய்ச்சல்

பண்ணோடு பிறந்தது தாளம்

http://laboratoryplanet.org/

ஸ்டாலினும் சோவியத் அறிவியலும் குறித்த நூல் அண்மையில் வெளியாகியுள்ளது.நான் இதை உடனே படிக்க வாய்ப்பில்லை. இருப்பினும் தமிழ்ச் சூழலில் யாராவது அறிமுகப்படுத்தினால் நல்லது.

சற்றே நீண்ட கட்டுரை, இது போன்றவற்றை தமிழில் தலித் அமைப்புகள், தலித் முரசு போன்றவை அறிமுகம் செய்ய வேண்டும்.ஆனால் தமிழ் நாட்டில் கள ஆய்வு செய்து தலித் அரசியல் குறித்து எழுதப்பட்ட நூலே இங்கு அதிகம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.


மன்திலி ரிவ்யு நவம்பர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகள் முக்கியமானவை. நேரமின்மையால் இந்தக் கட்டுரைகள் குறித்து விரிவாக எழுத முடியவில்லை.

ரிச்சர் லெவொண்டினுடனான ஒரு பேட்டியை இங்கு படிக்கலாம்.

Labels: ,