அருந்ததியர்- உள் இட ஒதுக்கீடு

அருந்ததியர்- உள் இட ஒதுக்கீடு

தமிழ் நாட்டில் அருந்ததியருக்கு தலித்களுக்கு உள்ள 18% இட ஒதுக்கீட்டில் 3% இட ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தலித் உள் ஒதுக்கீடு சர்ச்சைகுரியது. இது பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன் (எங்கே/எங்கெல்லாம் என்பது நினைவில்லை). ஆந்திராவில் கொண்டுவரப்பட்ட உள் ஒதுக்கீடு சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் சின்னையா வழக்கில் தீர்ப்பு வழங்கியது. பின் அங்கு நீதி உஷா மெஹ்ரா கமிஷன் அமைக்கப்பட்டது.அது ஒரு உள் ஒதுக்கீடு திட்டத்தை பரிந்துரைத்துள்ளது. ஆனால் அதை மலா பிரிவினர் எதிர்க்கின்றனர். அங்கு மலா பிரிவினருக்கும்,மடிகா பிரிவினருக்கும் இந்த உள் இடஒதுக்கீடு குறித்து முரண்பாடு இருக்கிறது. மடிகா பிரிவினர் உள் இடஒதுக்கீடு வேண்டுமென்று வாதிட, மலா பிரிவினர் தேவையில்லை என்று வாதிடுகின்றனர். இந்த உள் ஒதுக்கீடு தலித் ஒற்றுமையை குலைக்கும், உட் பிரிவுகளிடையே பகையை வளர்க்கும் என்ற அச்சமும் உள்ளது. தலித் உள் ஒதுக்கீடு வேறு சில மாநிலங்களிலும் பிரச்சினையாக உள்ளது. தலித்களில் ‘முன்னேறிய' பிரிவினரே இட ஒதுக்கீட்டால் பயன் பெறுகின்றனர் என்பதை முன் வைத்து பயன் குறைவாக பெற்ற உட்பிரிவுகள் சார்பாக போராட்டங்கள் நடைபெற்றன. சில மாநிலங்களில் உள் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் இப்படி தலித்களை பிரித்து இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டதால் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு மாநிலங்கள் அவ்வாறு செய்யலாம் என்ற நிலை ஏற்படும் வரை இந்த சர்ச்சை நீடிக்கும்.மண்டல் கமிஷன் வழக்கு அதாவது இந்த்ரா சஹானி வழக்கில் பிற்பட்டோர் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டில் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்பளித்தது.ஆனால் தலித்களை பொறுத்தவரை அவர்கள் அட்டவணை பிரிவினர் என்ற பிரிவில் வருவதால் மாநில அரசுகள் நினைத்தபடியெல்லாம் அவர்களின் உரிமைகளில் மாற்றம் கொண்டு வரமுடியாது. இது தலித்களை மாநில அரசுகளின் ‘திருவிளையாடல்'களிலிருந்து பாதுக்காக்கிறது. இந்தப் பட்டியலில் நினைத்தபடி மாற்றம் செய்ய, தலித்களை உட் பிரிவு ரீதியாக பாகுபடுத்தி இட ஒதுக்கீடு வழங்க அல்லது சலுகை வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.இப்போது 3% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தால் அல்லது சட்டம் இயற்றினால் அது சின்னையா வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன.உள் இடஒதுக்கீட்டை எதிர்ப்போர் இடைக்காலத் தடை கோர முடியும். எனவே உள் ஒதுக்கீட்டினை தமிழக அரசு அறிவித்தாலும் அது நடைமுறைக்கு வருவது குறித்து சந்தேகங்கள் எழுவது நியாயமானதே.

Labels: , , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு