பொய்(யே) பேச துணிந்த பிறகு

பொய்(யே) பேச துணிந்த பிறகு

அ.மார்க்ஸ் தீராநதி நவம்பர் 08 இதழில் எழுதியுள்ள கட்டுரையைப் படித்தேன். பாகிஸ்தான் குறித்த அவரது கருத்துக்களை சர்ச்சிக்க முடியும்.ஆனால் பொய்(யே) பேச ஒருவர் துணிந்த பின் அங்கு எதைச் சர்சிக்க :(.. அ,மார்க்ஸ் மிக தந்திரமாக அரைப் பொய்களையும், அரை உண்மைகளையும் கலந்து எழுதும் திறன் கொண்டவர். அதை கட்டுடைப்பது கடினமல்ல. பாகிஸ்தான் தெருக்களில் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியாது என்று எழுதுவார்.
பிபிசி தளத்திலிருந்தோ அல்லது பாகிஸ்தானுக்கு சென்று வந்தவர்கள் எழுதியதிலிருந்தோ இதற்கு மாறாக சான்றுகள் காட்டலாம். அதற்காக அவர் வருத்தம் தெரிவிப்பார் என்றோ அல்லது தீராநதி தவறான தகவல்களை வெளியிட்டதற்காக வாசகர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் என்றோ எதிர்பார்க்க முடியாது. ஒருவேளை இந்தியாவைப் பற்றி உயர்வான கருத்துக்களை வெளியிட்டுவிட்டால், அதற்காக தீராநதி வருத்தம் தெரிவிக்கலாம். அ.மார்க்ஸ் பாகிஸ்தானுக்கு ஆதரவாக எழுதுவார், சாமர்த்தியமாக அத்துடன் டிஸ்கிகளையும் (disclaimers) போட்டு விடுவார். இந்தியாவை விட பாகிஸ்தானில் இதெல்லாம் சிறப்பாக உள்ளது என்று அவர் எழுதுவது இது முதல் முறை அல்ல. உரையாடல் என்ற பெயரில் வெளியான நல்லக்கண்ணுவுடன் அவர் நடத்திய உரையாடல் நூலில் இதே போல் எழுதியிருக்கிறார். நல்லக்கண்ணு அதை மறுத்து பேசாததால், அதற்கு ஒரு அங்கீகாராம் கிடைத்தது போலாகிவிட்டது. அந்த நூலில் உரையாடல் என்ற பெயரில் அ.மார்க்ஸ் அரை உண்மைகளை, பொய்களுடன் கலந்து பேசியிருப்பார். பலவற்றை நல்லக்கண்ணு மறுத்திருக்க மாட்டார். உரையாடல் என்ற பெயரில் ஒரு மலினமான பிரச்சாரமே அதன் மூலம் நடந்திருக்கிறது.

அ.மார்க்ஸ் இப்படி நூறு முறை எழுதினாலும் வெளியிட தமிழில் பல வெளியீடுகள் உள்ளன. சாரு நிவேதிதா அல்லது முத்துகிருஷ்ணன் பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை மோசம்,பாகிஸ்தானில்தான் உண்மையான குடியாட்சி நிலவுகிறது என்று எழுதினால் அது தீராநதியில் அடுத்த மாதமே, பிரசுரமாக அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

காஷ்மீரில் எல்லாத் தவறும் இந்தியாவுடையது என்று மீண்டும் மீண்டும் ஒரு அரை டஜன் எழுத்தாளர்கள் எழுதினால் தமிழ் வாசகர் ஒகோ, அப்படித்தானோ என்று ‘யோசிக்க' துவங்குவார். ஒருதலைப் பட்சமாக எழுதுவதற்கும், இந்த்துவ எதிர்ப்பு என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் எழுதுவதற்கு பலர் உள்ளனர். ஹிஸ்போலா குறித்து சாரு புளுகுவார். அதை நான் சுட்டிக் காட்டவேண்டும், அதுவும் அம்மெனிஸ்டி வெளியிட்ட அறிக்கையை சான்று காட்டி. ஆனால் அமென்ஸ்டியில் ஆய்வாளராக இருப்பவர் சாரு எழுதுவதை வாசகருக்கு பரிந்துரைப்பார், அதில் உள்ள தகவல் பொய் என்று சொல்ல மாட்டார். அதே போல்தான் அ.மார்க்ஸ் அரசியல் கைதிகள் குறித்து எழுதியதை நான் கேள்விக்குட்படுத்தி அரசியல் கைதிகள் என்ற வரையரையை எழுத வேண்டியுள்ளது. அதை எழுத வேண்டியவர் அரசியல் கைதிகள் என்பதை மனித உரிமை அமைப்புகள் எப்படி வரையரை செய்கின்றன என்பதை எழுதாமல் அ.மார்க்ஸ் எழுதியதை வாசகருக்கு பரிந்துரைப்பார். இப்படித்தான் இங்கு பொய்களுக்கும், அரை உண்மைகளுக்கு மறைமுக அங்கீகாரம் தரப்படுகிறது. இது தமிழ் சூழலில் அறிவின் அரசியலின் ஒருபகுதி என்று கொள்ள வேண்டும். இங்கு வாசகர் எழுதுவோர், பரிந்துரைப்போர் பெயர்களை கண்டு ஏமாந்து விடக்கூடாது.

கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் அம்ர்நாத் யாத்ரீகர் நலனுக்காக வசதிகள் செய்ய நிலம் ஒதுக்குதல் குறித்து தமிழில் எழுதியுள்ளவர்களில் எத்தனை பேர் உண்மையான தகவல்களை முன் வைத்துள்ளார்கள் என்று வாசகர்கள் சோதித்துப் பார்க்கலாம். எழுதியவர்களில் எத்தனை பேர் அந்த நிலம் உண்மையில் குத்தகைக்கு தரப்படுகிறது, தற்காலிக குடியிருப்புகளையே அதில் எழுப்ப முடியும், நிரந்தர கட்டிடங்கள் எழுப்ப அனுமதி இல்லை, நிலத்தின் உரிமை மாற்றப்படவில்லை என்பதை தெளிவாக எழுதியுள்ளார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். வாசகர்கள் உயிர்மை, உயிரோசை,காலச்சுவடு, தமுமுக,கீற்று இணையதளங்களில் உள்ள கட்டுரைகளைப் படித்து எத்தனை பேர் உண்மைகளை எழுதியுள்ளார்கள் என்பதை அறியலாம். பெயர்களைக் கண்டு ஏமாற வேண்டாம், என்ன எழுதியுள்ளார்கள், உண்மை என்ன என்பதை மட்டும் பார்க்க வேண்டும். இப்படி சமகால நிகழ்வுகள் குறித்தே பொய்களை எழுதுவோர் யார், எப்படி செய்திகள் திரிக்கப்பட்டு எழுதப்படுகின்றன என்பதை அடையாளம் காணும் ஒரு முயற்சியாக இதைச் செய்து பாருங்கள்.

அ.மார்க்ஸ் எழுதுகிறார்
“...சதித்திட்டம் தீட்டியது ஆகியவற்றின் உச்ச கட்டமாகவே 100 ஏக்கர் நிலம் ஆலய நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டதும், ஆலய நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் சுங்கம் வசூலிக்கத் தொடங்கியதும் கிளேசியர் பகுதி ஒன்றில் யாத்ரீகர்கள் வசதிக்கென நிரந்தரமாக கட்டிடங்கள் உருவாக்குவதும்.”

சுற்றுச்சூழல் பிரச்சினை இருப்பது உண்மைதான்.ஆனால் அதை சரியாக கையாள முடியும். ஏனெனில் யாத்திரை வருடத்தின் குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் நடைபெறுவது .அங்கு நிரந்தரக் கட்டிடங்கள் எழுப்பபடமாட்டா, தற்காலிகமாக தங்கவே வசதி தரப்படும் என்பதை அ.மார்க்ஸ் மறைத்துவிடுகிறார். சேதுசமுத்திரம் திட்டம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்ததை ஏற்று அ.மார்க்ஸ், அந்த திட்டம் சூழலுக்கு எதிரானது, எனவே அதை
நிறைவேற்ற வேண்டாம் என்று எழுதியிருக்கிறாரா. இல்லை, நானறிந்த வரை.

அப்சல்குரு விவகாரத்தில் காலின் கன்சால்வேஸ் என்ற வழக்கறிஞர் தன் தரப்பு வாதத்தினை
அறிக்கையாக வெளியிட்டார்.அது அ.மார்க்ஸ் தமிழில் எழுதிய நூலில் (எனக்குத் தெரிந்து)
இடம் பெறவில்லை.ஏனெனில் அது அப்சல் கூறும் சிலவற்றை சர்ச்சித்து காலின் தரப்பு
நியாயத்தைப் சொல்கிறது. காலின் மனித உரிமையாளர், வழக்கறிஞர். அவர் தரப்புவாதமே
அப்சல் குரு சர்ச்சையில் அப்சல் குருவின் ஆதரவாளர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.
இதைச் செய்பவர்கள்தான் அதிகாரத்தை நோக்கி உண்மையை பேசுவது என்றெல்லாம்
பீற்றிக் கொண்டு அலைவார்கள்.

ஜெயமோகன் கட்டுரை மிக மோசமாக எழுதப்பட்டுள்ளது. அவர் கருத்துக்களுடன் பல இடங்களில் முரண்படுகிறேன்.அதற்காக அவர் கூறுவது அத்தனையும் பொய் என்று நிராகரிக்க முடியாது. அருந்ததி ராயின் கருத்துக்களை ஹரிஷ் கரே, பர்வீன் சுவாமி உட்பட பலர் விமர்சித்துள்ளனர். அருந்ததி ராயின் கட்டுரை சிறுபிள்ளைத்தனமானது என்று எழுதி சிறு பிள்ளைகளை நான் கேலி செய்யவிரும்பவில்லை. இன்று இந்தியாவில் முற்போக்கு, இடதுசாரி, மனித உரிமை என்ற பெயர்களில் இந்திய எதிர்ப்பு/விரோதக் கருத்துக்களை பரப்புவது நடக்கிறது. இதற்கு அதிக ஊடக கவனம் கிடைக்கிறது. வெளிநாடுகளில் உள்ள அமைப்புகள், தனி நபர்களின் ஆதரவும் உண்டு. இதன் இன்னொரு பரிமாணம் இந்த்துவ எதிர்ப்பு என்ற பெயரில் ‘முற்போக்குகள்', மதவாத அமைப்புகளுடன் சேர்வது.

இதன் மிகச் சிறந்த உதாரணம் அ.மார்க்ஸ். (இன்னொரு உதாரணம் சிபிஎம்).இந்தியாவில் தமுமுக என்ற அமைப்புடன் செயல்படுவார். அவர்கள் தஸ்லீமா இந்தியாவில் இருக்கக் கூடாது, ருஷ்டி இந்தியாவிற்கு வரக்கூடாது என்பார்கள், அவுரங்கசீப் குறித்த கண்காட்சியை தடுப்பார்கள், தங்கள் இணையதளத்தில் 9/11 தாக்குதலை மோசாத் நடத்தியது என்று எழுதுவார்கள். அ.மார்க்ஸ் இவர்களுடன் செயல்படுவார். எனக்குத் தெரிந்து அவர் எழுத்தில்
தமுமுகவின் இந்த நிலைப்பாடுகளை எதிர்த்ததில்லை. பாரிஸில் விடும் அறிக்கையில் தஸ்லீமாவின் கருத்துரிமையை ஆதரிக்கிறேன் என்பார். இங்கு ஒரு முகம், அங்கு ஒரு முகம். இதைச் சுட்டிக்காட்டாமல் அவருக்கு அறிவு ஜீவி அங்கீகாரம் வழங்க ஒரு கூட்டமே இருக்கிறது. இப்படி ஊருக்கு ஒரு முகம் காட்டுவதும், மதவாத அமைப்புகளுடன் கை கோர்ப்பதும், பொய்களை தொடர்ந்து எழுதுவதும்தான் தமிழ் சிந்தனையில்
உடைப்புகளை ஏற்படுத்துவது என்பதோ, என்னமோ?.

தெகல்கா, கவுண்டர்கரெண்ட்ஸ் போன்றவற்றை தொடர்ந்து வாசிப்பவர்கள் இந்த்துவ எதிர்ப்பு
என்ற பெயரில் எத்தகைய பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன என்பதை அறிவார்கள். ஜமயா மிஸ்லியா இஸ்லாமியாவில் யு.ஆர்.அனந்தமூர்த்தி அண்மையில் ஆற்றிய பட்டமளிப்பு உரை ஒன்று போதும், இந்த்துவ எதிர்ப்பு என்ற பெயரில் எத்தகைய மலினமான பிரச்சாரங்களும்,
கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன என்பதற்கு. அனந்தமூர்த்தியின் வீழ்ச்சியின் அடையாளமாக நான் இதைக் காண்கிறேன்.

மதவாத எதிர்ப்பு,மதச்சார்பின்மை - இவையெல்லாம் இன்று வெறும் பிரச்சாரத்திற்கு உரியவையாக மாற்றப்பட்டுவிட்டன. மதச்சார்பின்மை என்பது இந்த்துவ எதிர்ப்பாக சுருக்கப்பட்டுவிட்டது. இஸ்லாமிய தீவிரவாதம் என்ற ஒன்று இல்லாதது போலவும், இந்தியாவில் மதவாதம் என்றாலே அது சங்க பரிவாரஙகள் தொடர்புடையது என்றும் பிரச்சாரம் நடக்கிறது. இது சமயங்களில் இந்திய தேசிய விரோத பிரச்சாரத்துடன் சேர்ந்து செய்யப்படுகிறது. காஷ்மீரத்தை நசுக்கும் இந்த்துவம் என்று ஒரு கட்டுரை வெளியானால் அது சத்தியமார்க்கம் உட்பட பலவற்றில் மறுபிரசுரம் ஆகும். இந்தியா தேசிய
இனங்களின் சிறைக்கூடம் என்று எழுதி பார்பனிய,பனியா தேசியமே இந்திய தேசியம் என்று எழுதினால் அது பரவலாக இணையத்தில் மறுபிரசுரம் ஆகும். அதை சத்தியமார்க்கம் முதல் பெரியாரிய ஆதரவு இயக்கங்களின் தளங்கள் வரை பல மீள்பிரசுரம் செய்யும்.

உலகெங்கும் இஸ்லாமிய ஆட்சி கொண்டுவரப் பட வேண்டும் என்ற வாதம், ஹிந்துராஷ்டிரமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதை விட ஆபத்தானது. இரண்டும் எதிர்க்கப்பட வேண்டும். இந்தியாவிற்கு இஸ்லாமே தீர்வு என்று சிமி வலியுறுத்தினால் சிமிக்கு ஆதரவாக தெகல்கா குரல் கொடுக்கும், ஹிந்த்துவாவை எதிர்த்துக் கொண்டே !.

தேசவெறி என்பது வேறு, தேசப்பற்று என்பது வேறு. பின்னதும் தேசத்தின் மீதான மூட,மூர்க்க வழிபாடல்ல.ஆனால் அ.மார்க்ஸ் தேசியவாதத்தினை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை ஆதரிப்பார், அவர்களுடன் செயல்படுவார். அதையெல்லாம் சரி என்று வாதிடுவார், இந்த்துவ எதிர்ப்பு என்ற காரணம் காட்டி. சிறுவர் திருமணத்தடை சட்டத்திலிருந்து முஸ்லீம்களுக்கு விலக்கு வேண்டும். திருமணங்களை கட்டாயம் பதியவேண்டும் என்பதை முஸ்லீம்களுக்கு கட்டாயமாக்கக் கூடாது என்றெல்லாம் வாதிடும் அகில இந்திய முஸ்லீம தனிநபர் சட்ட வாரியம் அவருக்கு மரியாதைக்குரிய அமைப்பு. மத அடிப்படையிலான அரசினை முன்னிறுத்தும் இஸ்லாமிய அமைப்புகள் உள்ளன. அது அவருக்கு பிரச்சினையில்லை. அவற்றை விமர்சித்து அதை எத்தனை முறை எழுதியிருக்கிறார். (இஸ்லாமிய) உம்மா என்பதை ஏற்பார், ஆனால் அடையாள அரசியலை முன்னிறுத்தி ஈழத்தமிழர் என்பதே இல்லை என்று வாதிடுவார்.

சுருக்கமாகச் சொன்னால் அ.மார்க்ஸ் பொய் பேசத் துணிந்த, பிற்போக்கு சக்திகளுக்கும், இந்திய விரோத சக்திகளுக்கும், மத அடிப்படைவாத சக்திகளுக்கும் துணை போகும் ‘அறிவு ஜீவி'.

எனவே அ.மார்க்ஸின் எழுத்துக்களை நம்பாதீர்கள், நீங்களாக படித்து, ஆய்ந்து, ஒப்பிட்டு உண்மையை அறிந்து கொள்ளுங்கள், என்று வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் அரை உண்மைகளை அரைப் பொய்களுடனும், சிறு உண்மைகளுடனும் கலந்து எழுதுவது அவருக்கு கைவந்த கலை.

பி.கு: ஜமாலன், நாகார்ஜுனன்,ராஜன்குரை போன்றவர்கள் அ.மார்க்ஸ் எழுதியதை பரிந்துரைக்கிறார்கள், அவர் எழுதும் பொய்களை சுட்டிக்காட்டாமல். அதை நான் செய்ய மாட்டேன். அ.மார்ஸ் போன்ற மோசடி 'அறிவுஜீவி' எழுதுவதை விமர்சிக்காமல் பரிந்துரைத்துக் கொண்டு, இன்னொரு புறம் பூக்கோ, லத்தூர் என்று எழுதுவதில் உள்ள அரசியல் என்ன?. இதை வாசகர்கள் சிந்திக்க வேண்டும்.

Labels: , , , , ,

11 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

இடுகை தலைப்பு தெரியவில்லை.சரி செய்யவும்.

8:34 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

நல்ல கட்டுரை

8:42 AM  
Blogger ஹரன்பிரசன்னா மொழிந்தது...

ஹிந்துத்துவ முத்திரை, முற்போக்கு முகமூடியிழத்தல் என்கிற எண்ணங்களெல்லாம் இல்லாமல், அதாவது பொலிட்டிகல் கரெக்ட்னஸ் எல்லாம் பார்க்காமல் எழுதினால் அது இப்படித்தான் வரும். கூடவே என்ன வரும் என்று எல்லாருக்கும் தெரியும். :)

அ. மார்க்ஸ் சுலபமாக, எல்லோருக்கும் புரியும்படியாக, ‘ஹிந்த்துக்களும் இந்தியாவும் ஒழிக, சிறுபான்மை முஸ்லிம்களும் கிறித்துவர்களும் பாகிஸ்தானும் வாழ்க’ என்று சொல்லிவிடலாம். ஏனென்றால் விதவிதமான கட்டுரைகளில் அவர் சொல்லிவருவது என்னவோ இந்த ஒன்றையே.

ஒரு பாட்டு ஒரு ஃபைட்டு படம் போல, கொஞ்சம் ஹிந்துக்குட்டு, பின் ஒரு சிறுபான்மை பாராட்டுப் பாட்டு, பின்பு ஒரு இந்தியக்குட்டு என இவர்கள் எடுக்கும் படமும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கோ.

10:03 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Great post! Its time people like A.Marx are exposed.

10:10 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

1:13 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

இதுவரை இந்த இடுகைக்கு வந்த மூன்று பின்னூட்டங்களை வெளியிடவில்லை.இரண்டு தனிநபர்
குறித்த தரக்குறைவான விமர்சனம்
காரணமாய்.இன்னொன்றிற்கு அதை
இட்டவர் வலைப்பதிவில் அல்லது
வேறுவகையில் மறுமொழி தரப்படும்.
அந்தப் பின்னூட்டம் இங்கு இடப்படுவதும்,அதற்கான பதில் இங்கு
இடப்படுவதும் சில காரணங்களால்
தவிர்க்கப்படுகிறது.

5:04 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

பின்னூட்டங்களில் உள்ள கருத்துக்களை அவற்றை இட்டோரின் கருத்துக்கள் என்று கொள்க.

5:05 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

This comment has been removed by the author.

5:08 AM  
Blogger நாகார்ஜுனன் மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

9:11 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

This comment has been removed by the author.

10:53 AM  
Anonymous பாஸ்கர் மொழிந்தது...

நடுநிலை வாதம் என்பது தமிழ் சூழலில் மிகவும் குறைவு. ஏன் இல்லை என்றே சொல்லலாம். பார்பனர், ஹிந்துக்களின் ஆதரவாளர், இடதுசாரி (இன்னும் பல) என்று ஏதாவது முத்திரை குத்தப்படாத எழுத்தாளர் தமிழில் இல்லை. சரி. ஜெயமோகன் எழுதியதில் உள்ள தவறை சுட்டிக் காட்டுங்கள். ஒரு நல்ல விவாதத்திற்கு உதவும். மார்க்சின் எழுத்து எப்பொழுதுமே linear ஆக உள்ளது. நாகர்ஜுனன் பின்னூட்டத்தை ஏன் நீக்கி விட்டீர்கள்?
பாஸ்கர்.

12:04 PM  

Post a Comment

<< முகப்பு