சட்டக் கல்லூரி விவகாரம், 'உண்மை' 'அறியும்' குழுக்கள் - என் 2 சென்ட்கள்

சட்டக் கல்லூரி விவகாரம், 'உண்மை' 'அறியும்' குழுக்கள் - என் 2 சென்ட்கள்

இரண்டு குழுக்கள் சட்டக் கல்லூரி விவகாரம் குறித்து ‘உண்மை' யை ‘அறிந்து' நமக்குத் தெரிவித்துள்ளன (1). இரண்டிலும் தலித் சார்பு நிலைப்பாடு இருப்பது வெளிப்படை. இன்னொரு குழு அமைக்கப்பட்டால் அது வேறு சில'உண்மை' களை நமக்கு சொல்லக்கூடும். கட்டமைத்தல்/கட்டுடைத்தல் நிபுணர்கள்தான் இவற்றை கட்டுடைத்து உண்மை இது போன்ற குழுக்களால் எப்படி கட்டமைப்படுகிறது என்பதை விளக்க வேண்டும். மாற்று 'உண்மை'களை எப்படி கட்டமைப்பது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தலாம்.

ஒரு குழு 'அங்கீகரிக்கப்பட்ட வடிவிலேயே கல்லூரிப் பெயர்கள் எதிலும் அச்சிடப் படவேண்டும். ‘டாக்டர் அம்பேத்கர்’ உள்ளிட்ட எந்தச் சொல்லையும் நீக்கி சுருக்குவது குற்றமாக்கப்பட வேண்டும்.' என்று பரிந்துரைத்துள்ளது. இது தீர்வே அல்ல. மேலும் சிக்கல்களை உருவாகவே இது வழிவகுக்கும். இந்திய தேசிய கீதம் பாட மறுத்த, ஜெஹோவாவின் சாட்சியாளர்கள் என்ற பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளியை விட்டு நீக்கப்பட்ட போது, பாட மறுப்பது அவர்களின் அடிப்படை உரிமை, அவர்களின் மத உரிமையுமாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வந்தேமாதரம் பாடலை முஸ்லீம்கள் பாடக்கூடாது/பாடமாட்டார்கள் என்றும் வாதிடப்பட்டது. அவ்வாறு பாட மறுப்பது அவர்களின் உரிமை என்பது சரிதான். அப்படியிருக்கும் போது பெயரை நீக்குவது, சுருக்குவதை குற்றமாக்குவது சரியானதா?. அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைகழகம் இருக்கிறது, சென்னையில் சட்டக் கல்லூரி உள்ளது. இரண்டும் ஒரே பெயரில் இருப்பது குழப்பத்தை உருவாக்குகிறது.எத்தனை பேருக்கு அம்பேதக்ர் பெயர் இரண்டிலும் இருந்தாலும் அவை வெவ்வேறானவை என்று தெளிவாகத் தெரியும்.

பிற ஊர்களில் சட்டக் கல்லூரிகள் அந்தந்த ஊர்ப் பெயர்களில் உள்ளன. எத்தனை பேருக்கு சென்னைச் சட்டக் கல்லூரியின் பெயர் மாற்றப்பட்டது தெரியும். பலர் சென்னைக் சட்டக் கல்லூரி என்று குறிப்பிடும் போது அம்பேத்கர் பெயரை வேண்டுமென்றே விடுகிறார்கள் என்று
கருதி அவர்களை குற்றவாளிகள் என்று முடிவிற்கு வர முடியுமா. இத்தகைய பரிந்துரைகள் வீம்புக்காக பெயரை விடுதலையே ஊக்குவிக்கும். அப்படியே குற்றமாக்கி ஆணை பிறப்பித்தாலும் அது செல்லுமா?. உத்தமர் காந்தி சாலை சென்னையில் எங்கிருக்கிறது
என்பது எத்தனை பேருக்குத் தெரியும். நுங்கம்பாக்கம் ஹைரோடு அரசு ஆணையால் அவ்வாறு பெயர் மாற்றம் பெற்றது. அதை எத்தனை பேர் நடைமுறையில் பின்பற்றுகிறார்கள். அது போல் அம்பேத்கர் பெயரைச் சட்டக் கல்லூரி பெயரில் சேர்த்தது இன்னும் பெரும்பாலோருக்குத் தெரியாது. ஏன் அந்த அறிக்கையே சட்டக் கல்லூரி மோதல் என்றுதான் குறிப்பிடுகிறது, அம்பேத்கர் பெயர் அதன் அறிக்கை தலைப்பில் இல்லை. இந்த முரணை உணராது பரிந்துரை வேறு செய்கிறார்கள் :(.

உயர்நீதிமன்றம் மூத்த வழக்கறிஞரும், சட்டக் கல்லூரி முன்னாள் முதல்வருமான ஜி.மாசிலாமணியை அங்கு சென்று பல தரப்பினரையும் கண்டு பேசி ஒரு அறிக்கை தருமாறு கோரியுள்ளது. அவர் அறிக்கையில் என்ன கூறப்போகிறார் என்பதை கவனிக்க வேண்டும். உரையாடல் என்ற சிறு நூலில் அ.மார்க்ஸ், நல்லக்கண்ணு உரையாடும் போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்த இருவரும் கூறும் கருத்துக்களில் நல்லக்கண்ணு முதுகுளத்தூர் கலவரத்தை குறித்து சொல்வதும், முத்துராமலிங்கத் தேவர் குறித்து சொல்வதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.அதே நூலில் அ,மார்க்ஸ் முத்துராமலிங்கத் தேவர் குறித்து ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்திலேயே பேசுவதும், மாறாக நல்லக்கண்ணு குறுகிய கண்ணோட்டத்தை தாண்டிப் பேசுவதும் தெளிவாகப் புரிகிறது.முத்துராமலிங்கத் தேவரை மதிப்பவர்கள் மதிக்கட்டும், அம்பேத்கரை மதிப்பவர்கள் மதிக்கட்டும்.
இருவரையும் மதிப்பவர்கள் இருவரையும் மதிக்கட்டும். ஒருவரை ஒருவிதமாகவே சித்தரித்து, இன்னொருவரையும் ஒருவிதமாகவே சித்தரிப்பது சரிதானா என்ற கேள்வியை இங்கு வைக்கிறேன்.

ஜனநாயக நாட்டில் ஒரு தலைவர் ஒரு பிரிவினரால் மதிக்கப்படுவதும், இன்னொரு தலைவரை அவர்கள் மதிக்க மறுப்பதும் சாத்தியமே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த மரியாதை பிறரை தொந்தரவு செய்யாதவரை, சட்ட ஒழுங்கிற்கு இடைஞ்சலாக, பிறர்
உரிமைகளுக்கு இடையூறாக இல்லாதவரை அதில் பிரச்சினை என்ன?. இது போன்ற வேறுபாடுகளை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் கேள்வி. இதற்கு ஒரு தலைவரை அனைவரும் மதிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தீர்வாக இருக்க முடியாது.

பரஸ்பர புரிதல்களை எப்படி உருவாக்குவது, கருத்து வேறுபாடுகளை அமைதியாக கையாள்வது எப்படி, அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான களங்களை உருவாக்கி நம்பிக்கையை ஏற்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் - இப்படி பல கேள்விகள் இருக்கின்றன.இந்த இரு பிரிவு மாணவர்கள் குறித்து பிற மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள், மாணவர்களிடையே உள்ள உறவை சாதிதான் தீர்மானிக்கிறதா, மாணவர்கள் விடுதியில் மிகப் பெரும்பான்மையினர் தலித்களாக இருக்க காரணம் என்ன- இது போன்றவற்றையும் ஆராய வேண்டும்.

என் இப்போதைய 2 செண்ட்கள் இவைதான்.

(1) http://www.luckylookonline.com/2008/11/blog-post_24.html
http://www.luckylookonline.com/2008/11/blog-post_19.html

Labels: , , ,

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

Neutral analysis

Hearty welcome to this

Keep it up

10:02 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

''அந்த மரியாதை பிறரை தொந்தரவு செய்யாதவரை....''

நம் நாட்டில் ஒரு பெயர் பெற்ற வழக்கறிஞர் இருக்கிறார்...
கொலை செய்து விட்டுப் போனாலும் அதை தன் சமார்த்தியமான
வாதத் திறமையால் தவிடு பொடியாக்கிவிடுவார்.. ஆனால் அநியாயமாக
நடந்த படுகொலையை என்ன செய்வது..
உங்கள் வாதமும் மிகத் திறமையாக யாரும் எதிர் கேள்வி கேட்கா
வண்ணம் உள்ளதுதான். உங்கள் திறமையை பாராட்டுகிறேன்..
ஆனால் உங்கள் கட்டுரையில் மேல் சொன்ன வரிகளைப் பாருங்கள்..
இந்தப் பிரச்சனையில் அம்பேத்கார் உயர் வகுப்பைச் சேர்ந்தவராக
இருந்தால் இது ஒரு issueவே இல்லையே.. இது அம்பேத்கர் என்ற
பெயர் விசயம் இல்லை.. வன்மம் என்பதுதான் issue.
இரண்டு சாதிகள் அடித்துக் கொண்டாலும், வன்மம் என்று வந்து விட்டால்
அது issue இல்லையா என்பதை உங்கள் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்..
இது உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதும் எனக்குத் தெரியும்..
இருந்தாலும் நாம் இப்படிப் பேச வேண்டியிருக்கிறதே..
இதுவும் ஒரு பாசாங்கோ என்று தோன்றுகிறது..

12:55 AM  

Post a Comment

<< முகப்பு