அண்ணா போற்றிய ஹிட்லர்

அண்ணா போற்றிய ஹிட்லர்

(இந்த்துவ அமைப்புகள் பாசிசத்தை புகழ்ந்தன, ஹிட்லரை ஆதரித்தன என குற்றச்சாட்டு பல முறை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் திராவிட இயக்கம்/சுயமரியாதை இயக்கம் ஹிட்லரை ஆதரித்ததை அல்லது பாசிசத்தை புகழ்ந்ததாக நான் படித்த அளவில் தெரியவில்லை. கீழே உள்ள கட்டுரை ஹிட்லர், யூதர் குறித்து அண்ணா 1937ல் எழுதியது. இதிலிருந்து ஹிட்லருக்கு ஆதரவாக சுயமரியாதை/திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் எழுதியுள்ளார்
என்று தெரிகிறது.

நான் அறிந்த அளவில் ராஜதுரை, கீதா, பாண்டியன்,அ.மார்க்ஸ் போன்றோர் சுயமரியாதை இயக்கம்/பெரியார் ஹிட்லரை ஆதரித்ததாக எழுதவில்லை. குடியரசில் இந்தக் கட்டுரை வெளியான ஆண்டு 1937. இது பெரியார் ஒப்புதல் இல்லாமல் அல்லது அவருக்குத் தெரியாமல் குடியரசில் வந்திருக்க முடியாது. இன்னும் தேடினால் சுயமரியாதை இயக்கத்தினர் வேறெங்காவது ஹிட்லரை ஆதரித்து எழுதியுள்ளனரா என்பது தெரிய வரலாம். ஆனால் ஹிட்லரை அவர்கள் ஆதரித்து எழுதியிருந்தாலும் அதை ஏற்று ஒரு விமர்சனைத்தை மேற்கூறியவர்கள் வைப்பார்களா என்பது சந்தேகமே. அவர்கள் இதற்கு ஏதாவது சப்பைக்கட்டு கட்டலாம். அண்ணா எழுதியதைப் படித்தால் அவர் பார்பனரையும், யூதரையும் ஒப்பிடுவதையும், ஹிட்லர் மீது விமர்சனமின்றி ஆதரித்து எழுதியிருப்பதையும் அறியலாம்.)


பார்ப்பனர்களும் - யூதர்களும்விஞ்ஞான வளர்ச்சி தேவையென நாம் கூறினால் மின்சாரத்தில் ஆண்டவன் ஜோதி தரிசனம் காணலாம் என்றார் ஆச்சாரியார். புதுக்கருத்துக்களைக் கற்றுணர் என நாம் போதித்தோம். துளசிதாசரின் இராமாயணத்தைப் படித்து ரசிக்கச் சொல்கிறார்கள். பகுத்தறிவிற்காக நாம் பாடுபடுகிறோம். கட்டளைகளை மீறாதே, அலசாதே, வாய் பொத்தி, கை கட்டி, நின்று பணியாற்று என்கிறார் - காங்கிரஸ் சூத்திரதாரி. ஜாதி வித்தியாசத்தைத் தவிடு பொடியாக்க வேண்டுமென நாம் கூறுகிறோம். சேரிக்கு ஒரு நாள் சென்று எண்ணெய் ஸ்நானம் செய்துவிட்டு புதிய அடிமைப்பட்டம் சூட்டினால் போதுமே என்கிறார்கள்.

பண்டைப் பெருமைகளை எடுத்துக்காட்டி எளிய வாழ்க்கையே மேலென உபதேசம் செய்து மக்களை வறுமையிலேயே விட்டு விடுகிறார்கள். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் நாம் முன்னேற்றம் வேண்டுகின்றோம். அவர் ஆதி காலத்துக்கு நம்மை அழைக்கிறார். சாதாரணமாக அழைக்கவில்லை, ஒரு மகாத்மாவின் பெயரைக் கூறுகிறார்கள். ஒரு தேசிய இயக்கத்தின் பெயரால் அழைக்கிறார்கள்.

எவ்வெவ்வைகளை நாம் மூடத்தனமென விளக்கிக் காட்டிக் குப்பையில் வீசி எறிந்தோமோ அவைகள் எல்லாம் புதிய மெருகிடப்பட்டு விலையாகின்றன. இதனை நாம் தடுக்காவிடில் பலனைத் தமிழர் இழந்துவிடுவர்.

ஆகவே நாம் அரசியலின் பேரால் ஏற்பட்ட பார்ப்பன ஆதிக்கத்தையும், மூட நம்பிக்கையையும் எதிர்த்து முன்னிலும் அதிக பலமாகக் கட்டுப்பாடாக முறையுடன் வீரத்துடன் உண்மைத் தமிழன் என்ற உணர்ச்சியுடன் போரிட வேண்டியது மிக அவசியம்.
இனி நமது எதிர்காலப் போராட்டத்தின் அவசியத்திலே யாருக்கும் அய்யம் ஏற்படாதென்றே நான் நம்புகிறேன். நமது போராட்டத்தின் காரணத்தையும் விளக்கியுள்ளேன். அதனை உணரும் தோழர்களுக்கு நாம் எங்கிருந்து போர் புரிய வேண்டும் என்பதை எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதுகிறேன்.

மனுவைக் கொண்டு நம்மை அடக்கிய பார்ப்பனர் மகாத்மாவின் காங்கிரசைக் கொண்டு இன்று அடக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆகவே அந்தக் காங்கிரசிடமோ, அதனுடைய நிழலில் பதுங்கி ஒதுங்கி நின்று கட்டியங் கூறி வாழும் வேறு கோஷ்டியிடமோ நாம் சேர எத்தகைய நியாயமும் கிடையாது என்றே எண்ணுகிறேன்.
தேர்தல் தோல்வி கண்டு தலைவர்கள் திடுக்கிட்டுப் போய்விடக்கூடும். போலிகள் மருண்டு விடக்கூடும். சமய சஞ்சீவிகள் கூடுவிட்டுக் கூடு பாயக்கூடும். புகழ் மாலை வேண்டுவோர் புதிய தேவதைகளைப் பூசிக்கத் தொடங்குவர். ஆதாயம் கிடைக்கப் பெறாதவர் வேறு நாயகனை அண்டிப் பிழைக்க எண்ணுவர்.

ஆனால் இயக்கத்தில் இரண்டறக் கலந்தவர் வேறு இடம் நாடார். வேறு இடங்களிலிருந்து கொடுமைகளைக் கண்டு சகியாது குமுறிக் கொண்டிருக்கும் பலரை இங்கு இழுக்கவே முற்படுவர். நாம் ஒழிக்க விரும்பும் ஆதிக்கம் சாமான்யமானது அல்ல. அந்த வகுப்பார் தமது நிலைமையைப் பாது காத்துக் கொள்ள சமூகத்தின் ஜீவநாடிகள் அவ்வளவையும் பிடித்துக் கொண்டே நம்மை ஆட்டி வைக்கின்றனர்.

ஜெர்மன் அதிகாரியான ஹெர் இட்லர் ஜெர்மனி தேசத்தில் யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்ததை தம் சுயசரிதையில் விளக்கி இருப்பதைப் படிப்போர் தென்னாட்டிலே பார்ப்பனர் ஆதிக்கம் இருந்து வருவதனால் விளையும் சமூகக் கேட்டையும் நன்கு உணர்வர்.
பெரிய தொழிற்சாலைகளெல்லாம் யூதர்களிடமே இருந்தன. சர்வகலாசாலைகளில் யூதர்களே கலா மண்டபங்கள். அவர்கள் கரங்களிலே புலவர்கள் யூதர்களே. பத்திரிகைத் தொழில் அவர்களுடையதே. மந்திரி சபை அவர்கள் கைப்பாவை. விஞ்ஞானம் அவர்கள் சொத்து. சமதர்மம் அவர்களுடையது.

செல்வம் அவர்களிடம், வறுமை ஜெர்மனியரிடம், ஆதிக்கம் அவர்களிடம், அடிமைத்தனம் ஜெர்மனியரிடம். ஆனந்தம் அவர்களிடம், சோர்வு ஜெர்மனியரிடம்.

ஆகவே நான் யூதர்களை வெறுத்தேன். எனக்கு அரசியல் அதிகாரம் வந்தால் என் முதல் வேலை யூதர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதேயாகும் என இட்லர் தமது சுயசரிதையில் எழுதினார்; எழுதியபடி செய்தும் முடித்தார். எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் ஏதாவதொரு வகுப்பு சமூகத்தின் ஜீவநாடிகளைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்டு மற்றைய வகுப்பினரை அடிமைப்படுத்தி சமூகத்திலே பிரிவுகளை வளர்த்து வருகிறதோ, அந்த வகுப்பின் ஆதிக்கத்தை ஒழிக்க மற்றைய வகுப்பினர் ஒன்று கூடிப் புரட்சி செய்வது சரித்திரம் சாற்றும் உண்மை.


அறிஞர்அண்ணா - "குடி அரசு" - 29-8-1937
http://thamizhoviya.blogspot.com/2008/11/blog-post_7610.html

Labels: , , , ,

சட்டக் கல்லூரி விவகாரம், 'உண்மை' 'அறியும்' குழுக்கள் - என் 2 சென்ட்கள்

சட்டக் கல்லூரி விவகாரம், 'உண்மை' 'அறியும்' குழுக்கள் - என் 2 சென்ட்கள்

இரண்டு குழுக்கள் சட்டக் கல்லூரி விவகாரம் குறித்து ‘உண்மை' யை ‘அறிந்து' நமக்குத் தெரிவித்துள்ளன (1). இரண்டிலும் தலித் சார்பு நிலைப்பாடு இருப்பது வெளிப்படை. இன்னொரு குழு அமைக்கப்பட்டால் அது வேறு சில'உண்மை' களை நமக்கு சொல்லக்கூடும். கட்டமைத்தல்/கட்டுடைத்தல் நிபுணர்கள்தான் இவற்றை கட்டுடைத்து உண்மை இது போன்ற குழுக்களால் எப்படி கட்டமைப்படுகிறது என்பதை விளக்க வேண்டும். மாற்று 'உண்மை'களை எப்படி கட்டமைப்பது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தலாம்.

ஒரு குழு 'அங்கீகரிக்கப்பட்ட வடிவிலேயே கல்லூரிப் பெயர்கள் எதிலும் அச்சிடப் படவேண்டும். ‘டாக்டர் அம்பேத்கர்’ உள்ளிட்ட எந்தச் சொல்லையும் நீக்கி சுருக்குவது குற்றமாக்கப்பட வேண்டும்.' என்று பரிந்துரைத்துள்ளது. இது தீர்வே அல்ல. மேலும் சிக்கல்களை உருவாகவே இது வழிவகுக்கும். இந்திய தேசிய கீதம் பாட மறுத்த, ஜெஹோவாவின் சாட்சியாளர்கள் என்ற பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளியை விட்டு நீக்கப்பட்ட போது, பாட மறுப்பது அவர்களின் அடிப்படை உரிமை, அவர்களின் மத உரிமையுமாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வந்தேமாதரம் பாடலை முஸ்லீம்கள் பாடக்கூடாது/பாடமாட்டார்கள் என்றும் வாதிடப்பட்டது. அவ்வாறு பாட மறுப்பது அவர்களின் உரிமை என்பது சரிதான். அப்படியிருக்கும் போது பெயரை நீக்குவது, சுருக்குவதை குற்றமாக்குவது சரியானதா?. அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைகழகம் இருக்கிறது, சென்னையில் சட்டக் கல்லூரி உள்ளது. இரண்டும் ஒரே பெயரில் இருப்பது குழப்பத்தை உருவாக்குகிறது.எத்தனை பேருக்கு அம்பேதக்ர் பெயர் இரண்டிலும் இருந்தாலும் அவை வெவ்வேறானவை என்று தெளிவாகத் தெரியும்.

பிற ஊர்களில் சட்டக் கல்லூரிகள் அந்தந்த ஊர்ப் பெயர்களில் உள்ளன. எத்தனை பேருக்கு சென்னைச் சட்டக் கல்லூரியின் பெயர் மாற்றப்பட்டது தெரியும். பலர் சென்னைக் சட்டக் கல்லூரி என்று குறிப்பிடும் போது அம்பேத்கர் பெயரை வேண்டுமென்றே விடுகிறார்கள் என்று
கருதி அவர்களை குற்றவாளிகள் என்று முடிவிற்கு வர முடியுமா. இத்தகைய பரிந்துரைகள் வீம்புக்காக பெயரை விடுதலையே ஊக்குவிக்கும். அப்படியே குற்றமாக்கி ஆணை பிறப்பித்தாலும் அது செல்லுமா?. உத்தமர் காந்தி சாலை சென்னையில் எங்கிருக்கிறது
என்பது எத்தனை பேருக்குத் தெரியும். நுங்கம்பாக்கம் ஹைரோடு அரசு ஆணையால் அவ்வாறு பெயர் மாற்றம் பெற்றது. அதை எத்தனை பேர் நடைமுறையில் பின்பற்றுகிறார்கள். அது போல் அம்பேத்கர் பெயரைச் சட்டக் கல்லூரி பெயரில் சேர்த்தது இன்னும் பெரும்பாலோருக்குத் தெரியாது. ஏன் அந்த அறிக்கையே சட்டக் கல்லூரி மோதல் என்றுதான் குறிப்பிடுகிறது, அம்பேத்கர் பெயர் அதன் அறிக்கை தலைப்பில் இல்லை. இந்த முரணை உணராது பரிந்துரை வேறு செய்கிறார்கள் :(.

உயர்நீதிமன்றம் மூத்த வழக்கறிஞரும், சட்டக் கல்லூரி முன்னாள் முதல்வருமான ஜி.மாசிலாமணியை அங்கு சென்று பல தரப்பினரையும் கண்டு பேசி ஒரு அறிக்கை தருமாறு கோரியுள்ளது. அவர் அறிக்கையில் என்ன கூறப்போகிறார் என்பதை கவனிக்க வேண்டும். உரையாடல் என்ற சிறு நூலில் அ.மார்க்ஸ், நல்லக்கண்ணு உரையாடும் போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்த இருவரும் கூறும் கருத்துக்களில் நல்லக்கண்ணு முதுகுளத்தூர் கலவரத்தை குறித்து சொல்வதும், முத்துராமலிங்கத் தேவர் குறித்து சொல்வதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.அதே நூலில் அ,மார்க்ஸ் முத்துராமலிங்கத் தேவர் குறித்து ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்திலேயே பேசுவதும், மாறாக நல்லக்கண்ணு குறுகிய கண்ணோட்டத்தை தாண்டிப் பேசுவதும் தெளிவாகப் புரிகிறது.முத்துராமலிங்கத் தேவரை மதிப்பவர்கள் மதிக்கட்டும், அம்பேத்கரை மதிப்பவர்கள் மதிக்கட்டும்.
இருவரையும் மதிப்பவர்கள் இருவரையும் மதிக்கட்டும். ஒருவரை ஒருவிதமாகவே சித்தரித்து, இன்னொருவரையும் ஒருவிதமாகவே சித்தரிப்பது சரிதானா என்ற கேள்வியை இங்கு வைக்கிறேன்.

ஜனநாயக நாட்டில் ஒரு தலைவர் ஒரு பிரிவினரால் மதிக்கப்படுவதும், இன்னொரு தலைவரை அவர்கள் மதிக்க மறுப்பதும் சாத்தியமே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த மரியாதை பிறரை தொந்தரவு செய்யாதவரை, சட்ட ஒழுங்கிற்கு இடைஞ்சலாக, பிறர்
உரிமைகளுக்கு இடையூறாக இல்லாதவரை அதில் பிரச்சினை என்ன?. இது போன்ற வேறுபாடுகளை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் கேள்வி. இதற்கு ஒரு தலைவரை அனைவரும் மதிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தீர்வாக இருக்க முடியாது.

பரஸ்பர புரிதல்களை எப்படி உருவாக்குவது, கருத்து வேறுபாடுகளை அமைதியாக கையாள்வது எப்படி, அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான களங்களை உருவாக்கி நம்பிக்கையை ஏற்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் - இப்படி பல கேள்விகள் இருக்கின்றன.இந்த இரு பிரிவு மாணவர்கள் குறித்து பிற மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள், மாணவர்களிடையே உள்ள உறவை சாதிதான் தீர்மானிக்கிறதா, மாணவர்கள் விடுதியில் மிகப் பெரும்பான்மையினர் தலித்களாக இருக்க காரணம் என்ன- இது போன்றவற்றையும் ஆராய வேண்டும்.

என் இப்போதைய 2 செண்ட்கள் இவைதான்.

(1) http://www.luckylookonline.com/2008/11/blog-post_24.html
http://www.luckylookonline.com/2008/11/blog-post_19.html

Labels: , , ,

அருந்ததியர்- உள் இட ஒதுக்கீடு

அருந்ததியர்- உள் இட ஒதுக்கீடு

தமிழ் நாட்டில் அருந்ததியருக்கு தலித்களுக்கு உள்ள 18% இட ஒதுக்கீட்டில் 3% இட ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தலித் உள் ஒதுக்கீடு சர்ச்சைகுரியது. இது பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன் (எங்கே/எங்கெல்லாம் என்பது நினைவில்லை). ஆந்திராவில் கொண்டுவரப்பட்ட உள் ஒதுக்கீடு சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் சின்னையா வழக்கில் தீர்ப்பு வழங்கியது. பின் அங்கு நீதி உஷா மெஹ்ரா கமிஷன் அமைக்கப்பட்டது.அது ஒரு உள் ஒதுக்கீடு திட்டத்தை பரிந்துரைத்துள்ளது. ஆனால் அதை மலா பிரிவினர் எதிர்க்கின்றனர். அங்கு மலா பிரிவினருக்கும்,மடிகா பிரிவினருக்கும் இந்த உள் இடஒதுக்கீடு குறித்து முரண்பாடு இருக்கிறது. மடிகா பிரிவினர் உள் இடஒதுக்கீடு வேண்டுமென்று வாதிட, மலா பிரிவினர் தேவையில்லை என்று வாதிடுகின்றனர். இந்த உள் ஒதுக்கீடு தலித் ஒற்றுமையை குலைக்கும், உட் பிரிவுகளிடையே பகையை வளர்க்கும் என்ற அச்சமும் உள்ளது. தலித் உள் ஒதுக்கீடு வேறு சில மாநிலங்களிலும் பிரச்சினையாக உள்ளது. தலித்களில் ‘முன்னேறிய' பிரிவினரே இட ஒதுக்கீட்டால் பயன் பெறுகின்றனர் என்பதை முன் வைத்து பயன் குறைவாக பெற்ற உட்பிரிவுகள் சார்பாக போராட்டங்கள் நடைபெற்றன. சில மாநிலங்களில் உள் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் இப்படி தலித்களை பிரித்து இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டதால் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு மாநிலங்கள் அவ்வாறு செய்யலாம் என்ற நிலை ஏற்படும் வரை இந்த சர்ச்சை நீடிக்கும்.மண்டல் கமிஷன் வழக்கு அதாவது இந்த்ரா சஹானி வழக்கில் பிற்பட்டோர் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டில் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்பளித்தது.ஆனால் தலித்களை பொறுத்தவரை அவர்கள் அட்டவணை பிரிவினர் என்ற பிரிவில் வருவதால் மாநில அரசுகள் நினைத்தபடியெல்லாம் அவர்களின் உரிமைகளில் மாற்றம் கொண்டு வரமுடியாது. இது தலித்களை மாநில அரசுகளின் ‘திருவிளையாடல்'களிலிருந்து பாதுக்காக்கிறது. இந்தப் பட்டியலில் நினைத்தபடி மாற்றம் செய்ய, தலித்களை உட் பிரிவு ரீதியாக பாகுபடுத்தி இட ஒதுக்கீடு வழங்க அல்லது சலுகை வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.இப்போது 3% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தால் அல்லது சட்டம் இயற்றினால் அது சின்னையா வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன.உள் இடஒதுக்கீட்டை எதிர்ப்போர் இடைக்காலத் தடை கோர முடியும். எனவே உள் ஒதுக்கீட்டினை தமிழக அரசு அறிவித்தாலும் அது நடைமுறைக்கு வருவது குறித்து சந்தேகங்கள் எழுவது நியாயமானதே.

Labels: , , , ,

மேய்ச்சல்: வாரக்கடைசியில் புரட்ட :)

மேய்ச்சல்: வாரக்கடைசியில் புரட்ட :)

கீழ்க்கண்டவற்றை படிப்பதால்,பார்ப்பதால்,புரட்டிப்பார்ப்பதால் ஏற்படும் விளைவுகளுக்கு
நான் பொறுப்பல்ல :)

சிங்கூர் வழக்கு - தண்டனை பற்றி சி.பி.எம்

சட்டிஸ்கர் தேர்தல் பற்றி ADR அறிக்கை

தற்ப்பால் நாட்டமும்,சட்டமும் - கட்டுரை

தீவிரவாதம் - நிர்வாக சீர்த்திருத்தம் குறித்த கமிஷன் அறிக்கை

மான்சன்டோ- தொழில்நுட்பம்,ஏழை விவசாயிகள்

ஸ்ரீலங்கா-இன அரசியலும் மோதலும்-கட்டுரை

Labels: , , ,

சு.சி அல்லது 'பாஸ்ட் புட்' இடுகை :)

சு.சி அல்லது 'பாஸ்ட் புட்' இடுகை :)

1) சட்டக்கல்லூரி வன்முறை குறித்து உண்மை அறியும் குழுவின் அறிக்கை,மற்றும் தொடர்புடைய ஒரு கட்டுரை இங்கே

வன்முறை நடந்த தினத்தன்று உண்மையில் என்னதான் நடந்தது, அதற்கு முந்தைய மூன்று வாரங்களில் என்னென்ன நிகழ்ந்தன என்பதை யாராவது எங்காவது காலவரிசைப்படுத்தி எழுதியிருக்கிறார்களா?

2) இந்தியாவிற்கு ஒரு முஸ்லீம் பிரதம மந்திரி, தமிழ்நாட்டிற்கு ஒரு தலித் முதலமைச்சர் என்பது போன்ற அடையாள அரசியல் விருப்பங்களை நான் ஆதரிக்கவில்லை.அப்படிக் குறிக்கோள்கள் வைத்துக் கொண்டு அரசியல் செய்வதையும் ஆதரிக்கவில்லை.
அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்-வெள்ளையர் என்ற பாகுபாடு போல் இந்தியாவில் இல்லை. மன்மோகன் சிங் இங்கு பிரதமாகிறார், சோனியா காந்தி பிரதமராகவும் வாய்ப்பிருந்தது, யாரும் எதிர்பாரதவகையில் தேவ கெளடா பிரதமரானர். வி.பி.சிங் பிரதமராவார் என்று யாராவது 1985ல் எதிர்பார்த்தார்களா. 1996ல் ஜோதிபாசு பிரதமர் ஆகவும் வாய்ப்பிருந்தது. 1991ல் நரசிம்மராவ் பிரதமரானது முற்றிலும் எதிர்பாராத ஒன்று.அந்துலே மகாராஷ்டிர முதல்வராக இருந்தார். மாயாவதி ஒரு முறைக்கு மேலும் உ.பியில் முதல்வராக முடிகிறது. இந்திய அரசியலின் இயங்கு முறை வேறு, அமெரிக்க அரசியலின்
இயங்கு முறை வேறு. தேவையான ஆதரவு கிடைத்து, சாதகமான சூழலும் ஏற்படுமானால் ஒரு தலித் எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராகலாம். ஆனால் தலித்தைத்தான் பிரதமராக்குவோம் என்று பிரச்சாரம் செய்து, ஆதரவு திரட்டுவது கடினம். அது மக்களிடம் எடுபடாது.

3)கெயில் ஒம்வேத் எழுதிய Seeking Begumpura: The Social Vision of Anticaste Intellectuals என்ற நூல் அண்மையில் வெளியாகியுள்ளது/யாகயுள்ளது என்று அறிகிறேன். நான் படித்து எழுத வாய்ப்பில்லை. வலைப்பதிவர்களில் யார் இதைப் படித்து
விமர்சனம் எழுதப் போகிறார்கள்?.

4) கிட்டதட்ட 10 அல்லது 9 ஆண்டுகளுக்கு முன் தமிழில் தேசியம்,தேசியவாதம் குறித்த தொகுப்பு நூல் ஒன்று கொண்டுவர வேண்டும் என ஒருவரும், நானும் பேசினோம், எங்களுக்குள் விவாதித்தோம்.அந்த யோசனையை முதலில் சொன்னவர் அவர்தான்.
நான் கட்டுரைகள் சிலவற்றை தேர்ந்தெடுப்பது, அவர் சிலவற்றை தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்தோம். அப்போது நான் பெண்ணியம், தேசியம், குடியுரிமை குறித்து படித்துக் கொண்டிருந்தேன், அது தொடர்பான சில கட்டுரைகளும் கைவசமிருந்தன. அதில் ஆய்வு
செய்த ஒருவருடன் தொடர்பிருந்தது. தேசியம்,தேசியவாதம் குறித்த ஒரு விமர்சன அணுகுமுறையை தமிழில் அறிமுகப்படுத்த வேண்டிய தேவையையும், தேசியம் குறித்த புதிய பார்வைகளை முன்வைக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் அப்போது
உணர்ந்திருந்தேன். ஆனால் அவப்பேறாக அந்த முயற்சி முழுமையடையவில்லை. அப்போது அந்த தொகுப்பு நூல் குறித்து நான் யாரிடம் விவாதித்தேன் என்பதை யூகிக்க முடிகிறதா?. பின்னூட்டத்தில் இடலாம். சரியான விடைக்கு பரிசெல்லாம் கிடையாது.

சு.சி என்றால் சுந்தர்.சி அல்ல, சுருக்கமாக சில என்று பொருள் :).

அம்புட்டுத்தான், இந்த இடுகை முடிஞ்சது, எருமை மாடு கனைச்சுது :). 450வது இடுகை இது.

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/0089d1f6fbf9b7e8/545646f08622c874?#545646f08622c874

Labels: , ,

வன்முறையை நான் ஆதரிக்கவில்லை

வன்முறையை நான் ஆதரிக்கவில்லை

சட்டக்கல்லூரி மோதலில், தலித் மாணவர்கள் பதிலுக்கு வன்முறையில் ஈடுப்பட்டதை ஆதரித்து/நியாயப்படுத்தி சில வலைப்பதிவுகளில் எழுதப்பட்டுள்ளது. அதை நான் ஆதரிக்கவில்லை. மாறாக வன்முறை பொருத்தமான தீர்வே அல்ல. அது நீண்டகாலப் போக்கில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதுகிறேன். சென்னை நகரில்,தமிழ்நாட்டில் உள்ள தலித் ஆதரவு சக்திகளை, சிவில் சமூக அமைப்புகளை பயன்படுத்தி தலித் மாணவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை, கோரிக்கைகளை அரசின், பொதுமக்களின், ஊடகங்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கலாம். அதன் மூலம் அழுத்தம் கொடுத்திருக்கலாம். அதனால் தீர்வுகள் உருவாக வாய்ப்பிருந்திருக்கும்.

இப்போது இது அரசியலாக்கப்பட்டுவிட்டது. தலித் மாணவர்களின் பால் பொதுமக்களின் ஆதரவு,அனுதாபம் கிடைப்பதற்கு இந்த வன்முறை தடையாகிவிட்டது. மேல்விபரங்கள் தெரியவந்த பின் விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.

Labels: , , ,

கொசுறு 1 2 3 4

கொசுறு 1 2 3 4

1) திரைக்கதை அ(ச)மைப்பது எப்படி?

"உட்காருங்கப்பா” மா.ரா ஆரம்பிக்கலாம்! நேத்து திருமாறன் சொன்ன காமெடி, மகேந்திரனோட கிளைமாக்ஸ், கலைஞானத்தோட லவ் டிராக் மூணுமே நல்லாவே இருக்குப்பா. ஆர்.கே.சண்முகம் சொன்ன ‘அல்வா' சீனையும் மிக்ஸ் பண்ணி, பாலமுருகனோட பூஜா சிக்யுன்சையும் சேத்துக்கோ.'அக்கா-தங்கை' க்காக பூவை கிருஷ்ணன் சொன்ன மர்டர் சீன் - அதை மறந்துடாதே. ‘வாழவைத்த தெய்வம்' படத்துல அந்த
காலத்துல அய்யாப்பிள்ளை ஒரு சீன் சொன்னாரு, அதை பாலுராவ் சொல்வான் - அதையும் கேட்டுங்கோப்பா. எல்லாத்தையும் சேர்த்து நாலே நாளுல ‘டிரீட்மெண்ட்'ஐ முடிச்சுடனும். வசனம் எழுத ஆருர்தாஸ் காத்துக்கிட்டு இருக்கான். 7ம் தேதி பூஜையப்பா, அடுத்த மாசம் 27ல ரிலீஸ்”

இப்படிச் சொன்னவர் அந்தக் காலத்தில் பல வெற்றிப்படங்களை தந்த தயாரிப்பாளர். கிட்டதட்ட 20 ஆண்டுகளாக திரைப்பட தயாரிப்பாளராக இருந்தவர், நடிகராக திரை வாழ்க்கையை துவக்கியவர் . இன்னும் யார் என்று புரியவில்லையா, விளக்கம் இங்கே


7ம் தேதி பூஜை, அதற்கடுத்த மாத இறுதியில் வெளியீடு. இப்படி எடுத்ததால்தான் அப்போதெல்லாம் ஒரே நிறுவனம் ஒரு வருடத்திற்கு 3 அல்லது 4 படம் தயாரிப்பது சாத்தியமானதோ?. இப்படி செய்வதால் தொழிலில் பணம் முடங்காது, வட்டி சுமை ஏறாது, செலவுகளையும் கட்டுப்படுத்த முடியும். பெரும் வெற்றி பெறாவிட்டாலும், சுமாரான லாபமாவது அல்லது போட்ட பணமாவது கிடைக்க வாய்ப்புக்கள் அதிகம். பணத்தினை முடக்காமல், வட்டியையும், வெட்டிச் செலவுகளையும் குறைத்தால் தயாரிப்பாளர் பலன் பெறுவார், குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியாகும் போது முன்பணம் கொடுத்த வினியோகஸ்தர்களுக்கும் பணம் முடங்கியிருக்கிறது என்ற உணர்வு எழாது.

2) கேள்வி-பதில்

தமிழ் நாட்டிற்கு ஒரு ஒபாமா தேவையா?

ஒபாமா எதிர்ப்பார்ப்புகளை அதிகமாக ஆக்கியிருக்கிறார். அவற்றை எந்த அளவு நிறைவேற்ற முடியும் என்பது கேள்விக்குறி. தமிழ் நாட்டிற்கு ஒரு ஒபாமா தேவையா என்பதை விட அமெரிக்காவில் ஒபாமா என்ன செய்யப் போகிறார் என்பதே கேள்வி. பெரும் ஆதரவு,அனுதாப அலையில் 1984ல் ஜெயித்த ராஜீவ் காந்தியால் 1989ல் மீண்டும் காங்கிரசை அறுதிப் பெரும்பான்மை பெற வைக்கமுடியவில்லை. கார்ட்டர் நல்ல மனிதர்,
ஆனால் பிரச்சினைகளை சரியாக கையாளததால் ரீகன் ஜெயித்தார். அரசியலில் வெற்றி என்பது பலவற்றைப் பொருத்தது. எனவே ஒபாமா முதலில் தன்னை நிரூபித்த பின் தமிழ்நாட்டிற்க்கு ஒரு ஒபாமா தேவையா என்ற கேள்வியை எழுப்பலாம்.

ரஜினிகாந்த ரசிகர்களை சந்திக்கப்ப் போகிறாராமே?

குசேலன் கொடுத்த அடியின் விளைவு இது. ரஜினி காந்த் ரசிகர்களை சந்திக்கும் முன் அரசியலுக்கு வருவது குறித்து ஒரு தெளிவான முடிவினை அறிவிப்பார் என்று நான் எதிர்பார்க்க மாட்டேன். ஆனால் வந்தாலும் வருவேன் போன்ற வாசகங்களை அவர் தவிர்க்க வேண்டும். முதலில் அவர் ரசிகர்களை சந்தித்து பேசட்டும்.மனம்விட்டு அவரும், ரசிகர்களும் பேசிக் கொண்டால் பல குழப்பங்களை தவிர்க்கலாம்.தேர்தல்/கட்சி அரசியலுக்கு வராமலே சிலவற்றை செய்ய முடியும். அவருக்கு உள்ள புகழ்,செல்வாக்கு மற்றும் செல்வம் கொண்டு நேர்மறையான செயல்களை செய்யலாம், செய்யத் தூண்டலாம். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து சிவில் சமூகத்தில் ஒரு ஆக்கபூர்வமான சக்தியாக செயல்பட வைக்கலாம். ஒரு குறிப்பிட்ட துறையில் (உ-ம். மருத்துவம், கல்வி) கவனம் செலுத்தி தீர்வுகளைக் காண, தீர்வுகளை அமுல் செய்ய உதவலாம். அவர் இதன் மூலம் தன் செல்வாக்கையும், நம்பத்தன்மையையும் அதிகரித்துக் கொள்ள முடியும்.

3) பேராசிரியர் கிரிஸ்டோபர் ஸ்டோனின் கட்டுரை -
http://lawweb.usc.edu/faculty/documents/CStone.pdf

1970களின் துவக்கத்தில் பேராசிரியர் கிரிஸ்டோபர் ஸ்டோன் எழுதிய ' Should Trees Have Standing' என்ற கட்டுரை சுற்றுச்சூழல் சட்டவியலில் புகழ்பெற்ற கட்டுரை. இவரது வேறு பல கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவை. நூற் தொகுப்பாக இவர் கட்டுரைகள் கிடைக்கின்றன.
அண்மையில் ஸ்டோன் எழுதியுள்ள கட்டுரை Does the Climate Have Standing? அதை இங்கே தரவிறக்கலாம்.

Climate Change Law என்பது இப்போது முக்கியமான கவனத்தினைப் பெற்று வருகிறது. அமெரிக்காவில் பல மாநிலங்களில் மாநில அளவில் புவிசூடேற்றத்திற்கு காரணமான வாயுக்களை வெளியேற்றுவதை கட்டுப்படுத்த பல முயற்சிகள் செய்யப்படுகின்றன. அதில் சட்டங்கள் மூலம் இதை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளும் அடங்கும். சூழலியல் சட்டம் குறித்து பரிச்சயம் இல்லாதவர்களுக்கு இது படிப்பதற்கு சிரமமாக இருந்தாலும்,
படித்தால், இக்கட்டுரையை ஒரளவேனும் புரிந்து கொள்ள முடியும்.

4)உங்கள் பார்வைக்கு

1) காஞ்சா ஐயிலையா லண்டனில் ஆற்றிய உரை

2) அனந்தமூர்த்தி ஜமியாவில் ஆற்றிய பட்டமளிப்பு உரை
PDF

3) அலைவரிசை ஒதுக்கீடு குறித்து பொலிட்பீரோ அறிக்கை

4)நிதி நெருக்கடியும், சர்வதேச உறவும்

5) நிதிச் சந்தைகள் பற்றிய ஒர், சற்றே பழைய கட்டுரை.இருந்தாலும் இன்றைய சூழலில் இதை அறிமுகம் செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதால் இங்கு உங்கள் பார்வைக்கு என்று குறிப்பிடுகிறேன். புரியவில்லை தயவு செய்து விளக்கவும் (புதசெவி) என்று பின்னூட்டம் இட வேண்டாம் :). அப்புறம், நான் அது போல் எங்கு போய் பின்னூட்டம் இடுவது :). முடிந்தால், அப்படியே இதையும் பார்க்கவும்.


மீண்டும் அடுத்த ஆண்டு சந்திக்கலாமா? :).

Labels: , , , ,

பொய்(யே) பேச துணிந்த பிறகு

பொய்(யே) பேச துணிந்த பிறகு

அ.மார்க்ஸ் தீராநதி நவம்பர் 08 இதழில் எழுதியுள்ள கட்டுரையைப் படித்தேன். பாகிஸ்தான் குறித்த அவரது கருத்துக்களை சர்ச்சிக்க முடியும்.ஆனால் பொய்(யே) பேச ஒருவர் துணிந்த பின் அங்கு எதைச் சர்சிக்க :(.. அ,மார்க்ஸ் மிக தந்திரமாக அரைப் பொய்களையும், அரை உண்மைகளையும் கலந்து எழுதும் திறன் கொண்டவர். அதை கட்டுடைப்பது கடினமல்ல. பாகிஸ்தான் தெருக்களில் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியாது என்று எழுதுவார்.
பிபிசி தளத்திலிருந்தோ அல்லது பாகிஸ்தானுக்கு சென்று வந்தவர்கள் எழுதியதிலிருந்தோ இதற்கு மாறாக சான்றுகள் காட்டலாம். அதற்காக அவர் வருத்தம் தெரிவிப்பார் என்றோ அல்லது தீராநதி தவறான தகவல்களை வெளியிட்டதற்காக வாசகர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் என்றோ எதிர்பார்க்க முடியாது. ஒருவேளை இந்தியாவைப் பற்றி உயர்வான கருத்துக்களை வெளியிட்டுவிட்டால், அதற்காக தீராநதி வருத்தம் தெரிவிக்கலாம். அ.மார்க்ஸ் பாகிஸ்தானுக்கு ஆதரவாக எழுதுவார், சாமர்த்தியமாக அத்துடன் டிஸ்கிகளையும் (disclaimers) போட்டு விடுவார். இந்தியாவை விட பாகிஸ்தானில் இதெல்லாம் சிறப்பாக உள்ளது என்று அவர் எழுதுவது இது முதல் முறை அல்ல. உரையாடல் என்ற பெயரில் வெளியான நல்லக்கண்ணுவுடன் அவர் நடத்திய உரையாடல் நூலில் இதே போல் எழுதியிருக்கிறார். நல்லக்கண்ணு அதை மறுத்து பேசாததால், அதற்கு ஒரு அங்கீகாராம் கிடைத்தது போலாகிவிட்டது. அந்த நூலில் உரையாடல் என்ற பெயரில் அ.மார்க்ஸ் அரை உண்மைகளை, பொய்களுடன் கலந்து பேசியிருப்பார். பலவற்றை நல்லக்கண்ணு மறுத்திருக்க மாட்டார். உரையாடல் என்ற பெயரில் ஒரு மலினமான பிரச்சாரமே அதன் மூலம் நடந்திருக்கிறது.

அ.மார்க்ஸ் இப்படி நூறு முறை எழுதினாலும் வெளியிட தமிழில் பல வெளியீடுகள் உள்ளன. சாரு நிவேதிதா அல்லது முத்துகிருஷ்ணன் பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை மோசம்,பாகிஸ்தானில்தான் உண்மையான குடியாட்சி நிலவுகிறது என்று எழுதினால் அது தீராநதியில் அடுத்த மாதமே, பிரசுரமாக அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

காஷ்மீரில் எல்லாத் தவறும் இந்தியாவுடையது என்று மீண்டும் மீண்டும் ஒரு அரை டஜன் எழுத்தாளர்கள் எழுதினால் தமிழ் வாசகர் ஒகோ, அப்படித்தானோ என்று ‘யோசிக்க' துவங்குவார். ஒருதலைப் பட்சமாக எழுதுவதற்கும், இந்த்துவ எதிர்ப்பு என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் எழுதுவதற்கு பலர் உள்ளனர். ஹிஸ்போலா குறித்து சாரு புளுகுவார். அதை நான் சுட்டிக் காட்டவேண்டும், அதுவும் அம்மெனிஸ்டி வெளியிட்ட அறிக்கையை சான்று காட்டி. ஆனால் அமென்ஸ்டியில் ஆய்வாளராக இருப்பவர் சாரு எழுதுவதை வாசகருக்கு பரிந்துரைப்பார், அதில் உள்ள தகவல் பொய் என்று சொல்ல மாட்டார். அதே போல்தான் அ.மார்க்ஸ் அரசியல் கைதிகள் குறித்து எழுதியதை நான் கேள்விக்குட்படுத்தி அரசியல் கைதிகள் என்ற வரையரையை எழுத வேண்டியுள்ளது. அதை எழுத வேண்டியவர் அரசியல் கைதிகள் என்பதை மனித உரிமை அமைப்புகள் எப்படி வரையரை செய்கின்றன என்பதை எழுதாமல் அ.மார்க்ஸ் எழுதியதை வாசகருக்கு பரிந்துரைப்பார். இப்படித்தான் இங்கு பொய்களுக்கும், அரை உண்மைகளுக்கு மறைமுக அங்கீகாரம் தரப்படுகிறது. இது தமிழ் சூழலில் அறிவின் அரசியலின் ஒருபகுதி என்று கொள்ள வேண்டும். இங்கு வாசகர் எழுதுவோர், பரிந்துரைப்போர் பெயர்களை கண்டு ஏமாந்து விடக்கூடாது.

கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் அம்ர்நாத் யாத்ரீகர் நலனுக்காக வசதிகள் செய்ய நிலம் ஒதுக்குதல் குறித்து தமிழில் எழுதியுள்ளவர்களில் எத்தனை பேர் உண்மையான தகவல்களை முன் வைத்துள்ளார்கள் என்று வாசகர்கள் சோதித்துப் பார்க்கலாம். எழுதியவர்களில் எத்தனை பேர் அந்த நிலம் உண்மையில் குத்தகைக்கு தரப்படுகிறது, தற்காலிக குடியிருப்புகளையே அதில் எழுப்ப முடியும், நிரந்தர கட்டிடங்கள் எழுப்ப அனுமதி இல்லை, நிலத்தின் உரிமை மாற்றப்படவில்லை என்பதை தெளிவாக எழுதியுள்ளார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். வாசகர்கள் உயிர்மை, உயிரோசை,காலச்சுவடு, தமுமுக,கீற்று இணையதளங்களில் உள்ள கட்டுரைகளைப் படித்து எத்தனை பேர் உண்மைகளை எழுதியுள்ளார்கள் என்பதை அறியலாம். பெயர்களைக் கண்டு ஏமாற வேண்டாம், என்ன எழுதியுள்ளார்கள், உண்மை என்ன என்பதை மட்டும் பார்க்க வேண்டும். இப்படி சமகால நிகழ்வுகள் குறித்தே பொய்களை எழுதுவோர் யார், எப்படி செய்திகள் திரிக்கப்பட்டு எழுதப்படுகின்றன என்பதை அடையாளம் காணும் ஒரு முயற்சியாக இதைச் செய்து பாருங்கள்.

அ.மார்க்ஸ் எழுதுகிறார்
“...சதித்திட்டம் தீட்டியது ஆகியவற்றின் உச்ச கட்டமாகவே 100 ஏக்கர் நிலம் ஆலய நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டதும், ஆலய நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் சுங்கம் வசூலிக்கத் தொடங்கியதும் கிளேசியர் பகுதி ஒன்றில் யாத்ரீகர்கள் வசதிக்கென நிரந்தரமாக கட்டிடங்கள் உருவாக்குவதும்.”

சுற்றுச்சூழல் பிரச்சினை இருப்பது உண்மைதான்.ஆனால் அதை சரியாக கையாள முடியும். ஏனெனில் யாத்திரை வருடத்தின் குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் நடைபெறுவது .அங்கு நிரந்தரக் கட்டிடங்கள் எழுப்பபடமாட்டா, தற்காலிகமாக தங்கவே வசதி தரப்படும் என்பதை அ.மார்க்ஸ் மறைத்துவிடுகிறார். சேதுசமுத்திரம் திட்டம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்ததை ஏற்று அ.மார்க்ஸ், அந்த திட்டம் சூழலுக்கு எதிரானது, எனவே அதை
நிறைவேற்ற வேண்டாம் என்று எழுதியிருக்கிறாரா. இல்லை, நானறிந்த வரை.

அப்சல்குரு விவகாரத்தில் காலின் கன்சால்வேஸ் என்ற வழக்கறிஞர் தன் தரப்பு வாதத்தினை
அறிக்கையாக வெளியிட்டார்.அது அ.மார்க்ஸ் தமிழில் எழுதிய நூலில் (எனக்குத் தெரிந்து)
இடம் பெறவில்லை.ஏனெனில் அது அப்சல் கூறும் சிலவற்றை சர்ச்சித்து காலின் தரப்பு
நியாயத்தைப் சொல்கிறது. காலின் மனித உரிமையாளர், வழக்கறிஞர். அவர் தரப்புவாதமே
அப்சல் குரு சர்ச்சையில் அப்சல் குருவின் ஆதரவாளர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.
இதைச் செய்பவர்கள்தான் அதிகாரத்தை நோக்கி உண்மையை பேசுவது என்றெல்லாம்
பீற்றிக் கொண்டு அலைவார்கள்.

ஜெயமோகன் கட்டுரை மிக மோசமாக எழுதப்பட்டுள்ளது. அவர் கருத்துக்களுடன் பல இடங்களில் முரண்படுகிறேன்.அதற்காக அவர் கூறுவது அத்தனையும் பொய் என்று நிராகரிக்க முடியாது. அருந்ததி ராயின் கருத்துக்களை ஹரிஷ் கரே, பர்வீன் சுவாமி உட்பட பலர் விமர்சித்துள்ளனர். அருந்ததி ராயின் கட்டுரை சிறுபிள்ளைத்தனமானது என்று எழுதி சிறு பிள்ளைகளை நான் கேலி செய்யவிரும்பவில்லை. இன்று இந்தியாவில் முற்போக்கு, இடதுசாரி, மனித உரிமை என்ற பெயர்களில் இந்திய எதிர்ப்பு/விரோதக் கருத்துக்களை பரப்புவது நடக்கிறது. இதற்கு அதிக ஊடக கவனம் கிடைக்கிறது. வெளிநாடுகளில் உள்ள அமைப்புகள், தனி நபர்களின் ஆதரவும் உண்டு. இதன் இன்னொரு பரிமாணம் இந்த்துவ எதிர்ப்பு என்ற பெயரில் ‘முற்போக்குகள்', மதவாத அமைப்புகளுடன் சேர்வது.

இதன் மிகச் சிறந்த உதாரணம் அ.மார்க்ஸ். (இன்னொரு உதாரணம் சிபிஎம்).இந்தியாவில் தமுமுக என்ற அமைப்புடன் செயல்படுவார். அவர்கள் தஸ்லீமா இந்தியாவில் இருக்கக் கூடாது, ருஷ்டி இந்தியாவிற்கு வரக்கூடாது என்பார்கள், அவுரங்கசீப் குறித்த கண்காட்சியை தடுப்பார்கள், தங்கள் இணையதளத்தில் 9/11 தாக்குதலை மோசாத் நடத்தியது என்று எழுதுவார்கள். அ.மார்க்ஸ் இவர்களுடன் செயல்படுவார். எனக்குத் தெரிந்து அவர் எழுத்தில்
தமுமுகவின் இந்த நிலைப்பாடுகளை எதிர்த்ததில்லை. பாரிஸில் விடும் அறிக்கையில் தஸ்லீமாவின் கருத்துரிமையை ஆதரிக்கிறேன் என்பார். இங்கு ஒரு முகம், அங்கு ஒரு முகம். இதைச் சுட்டிக்காட்டாமல் அவருக்கு அறிவு ஜீவி அங்கீகாரம் வழங்க ஒரு கூட்டமே இருக்கிறது. இப்படி ஊருக்கு ஒரு முகம் காட்டுவதும், மதவாத அமைப்புகளுடன் கை கோர்ப்பதும், பொய்களை தொடர்ந்து எழுதுவதும்தான் தமிழ் சிந்தனையில்
உடைப்புகளை ஏற்படுத்துவது என்பதோ, என்னமோ?.

தெகல்கா, கவுண்டர்கரெண்ட்ஸ் போன்றவற்றை தொடர்ந்து வாசிப்பவர்கள் இந்த்துவ எதிர்ப்பு
என்ற பெயரில் எத்தகைய பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன என்பதை அறிவார்கள். ஜமயா மிஸ்லியா இஸ்லாமியாவில் யு.ஆர்.அனந்தமூர்த்தி அண்மையில் ஆற்றிய பட்டமளிப்பு உரை ஒன்று போதும், இந்த்துவ எதிர்ப்பு என்ற பெயரில் எத்தகைய மலினமான பிரச்சாரங்களும்,
கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன என்பதற்கு. அனந்தமூர்த்தியின் வீழ்ச்சியின் அடையாளமாக நான் இதைக் காண்கிறேன்.

மதவாத எதிர்ப்பு,மதச்சார்பின்மை - இவையெல்லாம் இன்று வெறும் பிரச்சாரத்திற்கு உரியவையாக மாற்றப்பட்டுவிட்டன. மதச்சார்பின்மை என்பது இந்த்துவ எதிர்ப்பாக சுருக்கப்பட்டுவிட்டது. இஸ்லாமிய தீவிரவாதம் என்ற ஒன்று இல்லாதது போலவும், இந்தியாவில் மதவாதம் என்றாலே அது சங்க பரிவாரஙகள் தொடர்புடையது என்றும் பிரச்சாரம் நடக்கிறது. இது சமயங்களில் இந்திய தேசிய விரோத பிரச்சாரத்துடன் சேர்ந்து செய்யப்படுகிறது. காஷ்மீரத்தை நசுக்கும் இந்த்துவம் என்று ஒரு கட்டுரை வெளியானால் அது சத்தியமார்க்கம் உட்பட பலவற்றில் மறுபிரசுரம் ஆகும். இந்தியா தேசிய
இனங்களின் சிறைக்கூடம் என்று எழுதி பார்பனிய,பனியா தேசியமே இந்திய தேசியம் என்று எழுதினால் அது பரவலாக இணையத்தில் மறுபிரசுரம் ஆகும். அதை சத்தியமார்க்கம் முதல் பெரியாரிய ஆதரவு இயக்கங்களின் தளங்கள் வரை பல மீள்பிரசுரம் செய்யும்.

உலகெங்கும் இஸ்லாமிய ஆட்சி கொண்டுவரப் பட வேண்டும் என்ற வாதம், ஹிந்துராஷ்டிரமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதை விட ஆபத்தானது. இரண்டும் எதிர்க்கப்பட வேண்டும். இந்தியாவிற்கு இஸ்லாமே தீர்வு என்று சிமி வலியுறுத்தினால் சிமிக்கு ஆதரவாக தெகல்கா குரல் கொடுக்கும், ஹிந்த்துவாவை எதிர்த்துக் கொண்டே !.

தேசவெறி என்பது வேறு, தேசப்பற்று என்பது வேறு. பின்னதும் தேசத்தின் மீதான மூட,மூர்க்க வழிபாடல்ல.ஆனால் அ.மார்க்ஸ் தேசியவாதத்தினை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை ஆதரிப்பார், அவர்களுடன் செயல்படுவார். அதையெல்லாம் சரி என்று வாதிடுவார், இந்த்துவ எதிர்ப்பு என்ற காரணம் காட்டி. சிறுவர் திருமணத்தடை சட்டத்திலிருந்து முஸ்லீம்களுக்கு விலக்கு வேண்டும். திருமணங்களை கட்டாயம் பதியவேண்டும் என்பதை முஸ்லீம்களுக்கு கட்டாயமாக்கக் கூடாது என்றெல்லாம் வாதிடும் அகில இந்திய முஸ்லீம தனிநபர் சட்ட வாரியம் அவருக்கு மரியாதைக்குரிய அமைப்பு. மத அடிப்படையிலான அரசினை முன்னிறுத்தும் இஸ்லாமிய அமைப்புகள் உள்ளன. அது அவருக்கு பிரச்சினையில்லை. அவற்றை விமர்சித்து அதை எத்தனை முறை எழுதியிருக்கிறார். (இஸ்லாமிய) உம்மா என்பதை ஏற்பார், ஆனால் அடையாள அரசியலை முன்னிறுத்தி ஈழத்தமிழர் என்பதே இல்லை என்று வாதிடுவார்.

சுருக்கமாகச் சொன்னால் அ.மார்க்ஸ் பொய் பேசத் துணிந்த, பிற்போக்கு சக்திகளுக்கும், இந்திய விரோத சக்திகளுக்கும், மத அடிப்படைவாத சக்திகளுக்கும் துணை போகும் ‘அறிவு ஜீவி'.

எனவே அ.மார்க்ஸின் எழுத்துக்களை நம்பாதீர்கள், நீங்களாக படித்து, ஆய்ந்து, ஒப்பிட்டு உண்மையை அறிந்து கொள்ளுங்கள், என்று வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் அரை உண்மைகளை அரைப் பொய்களுடனும், சிறு உண்மைகளுடனும் கலந்து எழுதுவது அவருக்கு கைவந்த கலை.

பி.கு: ஜமாலன், நாகார்ஜுனன்,ராஜன்குரை போன்றவர்கள் அ.மார்க்ஸ் எழுதியதை பரிந்துரைக்கிறார்கள், அவர் எழுதும் பொய்களை சுட்டிக்காட்டாமல். அதை நான் செய்ய மாட்டேன். அ.மார்ஸ் போன்ற மோசடி 'அறிவுஜீவி' எழுதுவதை விமர்சிக்காமல் பரிந்துரைத்துக் கொண்டு, இன்னொரு புறம் பூக்கோ, லத்தூர் என்று எழுதுவதில் உள்ள அரசியல் என்ன?. இதை வாசகர்கள் சிந்திக்க வேண்டும்.

Labels: , , , , ,

தமிழ்நாட்டு 'செக்யுலர்' பாசிஸ்ட்கள்

தமிழ்நாட்டு 'செக்யுலர்' பாசிஸ்ட்கள்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு பள்ளியில் இரு நாள் கூட்டம் நடத்துவதை இ.கம்யுனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மற்றும் தமுமுகவினர் ஆட்சேபித்து அது வன்முறைக்கு இட்டுச் சென்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனியார் இடத்தில் கூட்டம்
நடத்துவதை தடுக்க இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கூட்டங்கள் பொது இடத்தில் நடப்பதை காவல் துறை அனுமதிக்கும் போது இவர்கள் தடுக்க உரிமை கிடையாது. ஒரு தனியார் பள்ளியில் நடப்பதில் தலையிட இவர்களுக்கு
உரிமை இல்லை. ஆர்.எஸ்.எஸ் வன்முறையைத் தூண்டினால் காவல்துறையிடம் புகார் செய்ய வேண்டும் அல்லது நீதிமன்றத்திற்கு சென்று வழக்குத் தொடர வேண்டும். அதை விடுத்து இவர்கள் கூட்டம் நடத்தக்கூடாது என்று கூற உரிமை இல்லை. தமுமுகவிற்கு இருக்கும் உரிமைகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும், பிற இந்த்துவ அமைப்புகளுக்கும் உண்டு. சேலத்தில் பாஜக பொதுக்குழுக் கூட்டம் நடந்த போதும் அதை தடுப்போம் என்று பெரியார் தி.கவும், சில அமைப்புகளும் அதை நடத்த விடமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவிக்க முயன்றுள்ளனர். பாஜகவை குறை கூறும் பெரியார் தி.க தஸ்லீமாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை, ஆதரவு தெரித்து எதுவும் செய்யவில்லை. மாறாக பெரியார் முழக்கம் இந்து-இந்திய விரோத இதழாக இருக்கிறது. இந்த தேச விரோதிகளுக்கு இருக்கும் உரிமை பிறருக்கு கிடையாதா. முன்பு சமண மதத்துறவிகள் ஆடையின்றி செல்லும் போது பிரச்சினை ஏற்படுத்தியது பெரியார் தி.க. பின்னர் ஜைனர்கள் குறித்து விடுதலை ராஜேந்திரன் விமர்சனம் செய்தார். ஜைனர்கள் இந்த்துவாவிற்கு
ஆதரவாக இருப்பதாக பெரியார் தி.க நம்பலாம், அதற்காக அவர்களுக்கு இடையூறு செய்ய பெரியார் தி.க விற்கு எந்த உரிமையும் இல்லை.

தஸ்லீமாவை இந்தியாவிற்குள் விடாதே, ருஷ்டி இந்தியாவிற்குள் வரக்கூடாது என்று குரல் கொடுக்கும் பாசிச அமைப்பு தமுமுக. ஒளரங்கசீப் குறித்த ஒவியக்ககண்காட்சியை நடக்க விடாமல் தடுத்ததிலும் தமுமுகவிற்கு பங்குண்டு. இதன் தலைவர் இந்தியாவே காஷ்மீரில் நடக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று பேசும் ‘தேச பக்தர்'. சதாம் ஹூசைனின் படுகொலைகளை நியாயப்படுத்திய அமைப்பு தமுமுக. இன்றும் 9/11 தாக்குதலை நடத்தியது இஸ்ரேலின் மோசாத்தும், யூதர்களும் என்று பொய்களை
பரப்பும் அமைப்பு தமுமுக. இவர்கள் சுதந்திரமாக கூட்டம் போடுவார்கள், இந்தியாவை விமர்சிப்பார்கள், ஆனால் ஆர்.எஸ்.எஸ், பாஜக தமிழ்நாட்டில் அறைக்கூட்டம் கூட நடத்தக் கூடாதா?.

இந்திய தேசவிரோதமே உருவான தமிழ் தேசியர்கள், அவர்களுக்கு துணை போகும் அமைப்புகள், பாகிஸ்தானிய விசுவாசியான அ. மார்க்ஸ் உட்பட இந்திய-இந்து விரோதிகளை உள்ளடக்கிய ஒரு கும்பல் தமிழ் நாட்டில் உலவுகிறது. பெரியார் பிறந்த மண்,
அமைதிப் பூங்கா என்று சொல்லிக் கொண்டு மனித உரிமை விரோதமாக செயல்படுகிறது.

இந்த்துவ அமைப்புகளின் கொள்கைகளை நான் ஏற்கவில்லை. அவற்றிற்கும் அடிப்படை உரிமைகள் உண்டு. அதற்கு தடையாக இருக்கும் 'செக்யுலர்' பாசிஸ்ட்களை நான் எதிர்க்கிறேன். மோடி குறித்து எழுதியதுதான் இதற்கும்- மோடிக்கு நான் பூச்செண்டும்
கொடுக்க மாட்டேன், கருப்புக் கொடியும் காட்ட மாட்டேன். ஒரு மாநில முதல்வர், இந்திய குடிமகன் என்ற முறையில் தமிழ் நாட்டிற்கு வந்து செல்லும் அவர் உரிமையை ஆதரிப்பேன். அதே போல்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு இருக்கும் சட்டபூர்வமான உரிமைகளை
அங்கீகரித்து அவர்கள் அதை பயன்படுத்திக் கொள்வதை எதிர்க்க மாட்டேன்.

ஹிந்த்துவ அமைப்புகள் இந்த எதிர்ப்புகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்.
அறைக்கூட்டங்களுக்கு பாதுகாப்புக் கோர வேண்டும். அதையெல்லாம் விட முக்கியமான வேலையாக இந்த தேச விரோத, இந்து விரோத கும்பல்களை, அவற்றின் ஆதரவாளர்களை
அம்பலப்படுத்த வேண்டும்.

பாசிசம் என்ற சொல்லை சகட்டு மேனிக்கு பயன்படுத்துதை நான் விரும்பவில்லை.ஆனால் இந்த கும்பல் இதை சகட்டு மேனிக்கு பயன்படுத்தும் போது இந்த கும்பலை எதிர்க்க அதை பயன்படுத்துவது தேவையாகிறது.

Labels: , , ,

சு.சி

சு.சி

சில வாரங்களாக தமிழ் வலைப்பதிவுகள் உட்பட தமிழில் இணையத்தில் படிக்க கிடைப்பவற்றை அதிகம் படிக்கவில்லை. கடந்த 2 நாட்களாக சிறிது நேரம் ஒதுக்கி படிக்க முடிந்தது. எனவே தாமதமாகவேனும் நான் ஏதாவது எதிர்வினை எழுதினால் அதன் காரணம் இப்போது நீங்கள் அறிந்ததே.

ஒபாமா குறித்த ஒசை (ஆதரவு,எதிர்ப்பு,எதிர்பார்ப்பு) அதிகமாக இருப்பது இப்போது ஒபாமா குறித்து எழுதுவதை தவிர்க்க ஒரு காரணம்.ஒரு ஆறு மாதம் கழித்து எழுதுவதே பொருத்தமாயிருக்கும் என்று தோன்றுகிறது. அளவுக்கதிமான எதிர்ப்பார்ப்புகளை அவர் எப்படி கையாளப் போகிறார் என்பதை நானும் கூர்ந்து கவனிப்பேன்.

சொற்ச்சிக்கனம் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்.இன்றைய ஊடகச் சொல்லாடால் பெருக்கத்தில் கிட்டதட்ட இது காணமலே போய்விட்டது போலும். 20/15 வாக்கியங்களுக்கு மிகாமல் தெளிவாக சொல்ல வந்ததை எழுதிவிட்டுப் போகும் வகையில் சிறு இடுகைகளாக இனி இடலாம் என்றிருக்கிறேன்.

சு.சி = சுருக்கமாக சில

Labels: ,

ஒபாமா - நம்பிக்கையும், கேள்விகளும்

ஒபாமா - நம்பிக்கையும், கேள்விகளும்

ஒபாமா எழுதிய நூல் மற்றும் அவரது உரைகளின் அடிப்படையில் ஒபாமா, அவரது அமெரிக்கா குறித்த அலசல். எழுதியிருப்பவர் பேராசிரியர் வினய் லால் (கலிபோர்னியா பல்கலை,லாஸ் ஏஞ்சல்ஸ்) .

இதைப் படித்துவிட்டு ஒட்டுபோடவும் என்று பாஸ்டன் பாலாவைக் கேட்டுக் கொள்ளமாட்டேன் :).

Labels: , ,

கிழிந்ததும், கிழியாததும், புரிந்ததும், புரியாததும்

கிழிந்ததும், கிழியாததும், புரிந்ததும், புரியாததும்

1, ஆதவன் தீட்சண்யா மனு விரோதி என்பதை தன் பெயருக்கு முன், சிலர் சன் டிவி புகழ், சினிமா புகழ் என்று போட்டுக் கொள்வது போல் போட்டுக் கொள்ளலாம். முடிந்தால் அதை வணிக முத்திரை (trade mark) ஆக பதிந்து கொள்ளலாம். பிறருக்கு ஆதவன் தீட்சண்யாவால் அங்கீகரிக்கப்பட்ட மனு விரோதி என்று சான்றிதழ் வழங்கலாம். அல்லது ISO தரச்சான்றிதழ் போல் எதையாவது வழங்கலாம். இதற்கெல்லாம் ஆதரவு தர ஒரு கூட்டம் தமிழ் நாட்டில் நிச்சயம் இருக்கும்.

2,தலித் முரசில் ராம் புன்னியானி எழுதியதை தமிழாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். அதில் பல பிழைகள் (கருத்து, தகவல் இத்தியாதி). படிப்பதற்கு கோர்வையாக இல்லை. பிரச்சினை மூலத்திலா அல்லது மொழிபெயர்ப்பிலா அல்லது இரண்டிலுமா என்று தெரியவில்லை. மூலம் ஆங்கிலத்தில் இணையத்தில் கிடைப்பதாகத் தெரியவில்லை.புன்னியானியின் எழுத்துக்கள் மீது எனக்கு மரியாதை இல்லை. ஏனெனில் இந்த்துவ விரோதம் என்ற பெயரில் அவர் தவறான கருத்துக்களைப் பரப்புகிறார். அப்சல் குரு விவகாரத்தில் அவர் எழுதியதைப் படித்தபின் அவர் இன்னொரு போலி மதச்சார்பின்மைவாதி என்பது தெளிவாகப் புரிந்தது.புன்னியானி, புரபுல் பித்வாய் போன்றோர் என்னைப் பொறுத்தவரை போலி மதச்சார்பின்மைவாதிகள்தான். ஹிந்த்துவ எதிர்ப்பு என்பதற்காக இவர்களை ஆதரிக்க முடியாது. .

3, அமெரிக்காவின் டவுசர் கிழிந்ததோ இல்லையோ நிதிச் சிக்கல் பற்றி தமிழில் எழுதுபவர்கள் நம் மூளையை குழப்பிவிடுவார்கள் போலிருக்கிறது.போகிற போக்கில் எதையாவது உளறுவதற்கு இந்த நெருக்கடி பலருக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கிறது. சர்வதேச பொருளாதாரம், குறிப்பாக நிதிப் பொருளாதாரமும், சந்தைகளும் புரிந்து கொள்ள எளியவையல்ல. அதற்காக படிப்பவர்கள் எதை எழுதினாலும் நம்பிவிடுவார்களா?. இந்திரா பார்த்தசாரதி மார்க்ஸ் அன்றைக்கே சொன்னார் என்று எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. பொதுவாக இன்றைக்கு பரபரப்பான அலசல்கள், மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட புரிதல்கள், ஹிரோ-வில்லன் கதையாடல்கள் போதும் என்று நினைப்பவர்களுக்கு நிறையவே தமிழில் இருக்கிறது. மன்மோகன் சிங், கலாம், மோடி, புஷ் என்று சிலரை எப்போதும் எதற்கு வேண்டுமானாலும் திட்டலாம். உணவு மிகுதியால் ஏற்படுவது சர்க்கரை நோய் போன்று எதை வேண்டுமானாலும் உளறலாம்.அது வெளியான அடுத்த வாரம் இந்தத் தகவல் தவறு என்று பிழை திருத்தம் வரும் என்றெல்லாம் தமிழ் வாசகர் எதிர்பார்க்கக் கூடாது.


அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, அதன் சர்வதேச தாக்கங்கள் பற்றி ஜல்லியடிக்கும் போது எதை எழுதினாலும் பிரசுரமாகும் என்றே தோன்றுகிறது. பார்பனியமும், முதலீட்டியமும் சேர்ந்து அமெரிக்கவை திவாலாக்கின, அதற்கு அத்வானியும், மன்மோகன் சிங்கும் ஆலோசனை சொன்னார்கள் என புதிய ஜனநாயக/புதிய கலாச்சார ‘மாமேதைகள்' எழுதக்கூடும், ஜமாலன் சதிவாதம்+கட்டமைப்பு வாதம்+சாராம்சவாதம் என்று மூன்றையும் கலந்து கட்டி இதே பொருளில் கட்டுரை(கள்) எழுத வாய்ப்புள்ளது.

என்னைப் போன்ற எதுவும் தெரியாத ஏகாம்பரங்கள், மற்றும் ‘பொலிடிகலி இன்கரெக்ட்' பொன்னம்மாக்கள் இருக்கிற சிற்றவினைக் கொண்டு எதையாவது படித்து, தட்டுதடவி தடுமாறி புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டியதுதான், வேறு வழியில்லை. உளறினாலும்,பொலிடிக்கலி கரெக்டாக உளறவேண்டும் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் :). போன ஆண்டே படிக்காமல் கிடப்பில் போட்டிருந்த ஒரு நூலையும்,
வேறு சில கட்டுரைகளையும் இப்போது படிப்பதற்கான வரிசையில் வைத்திருக்கிறேன்.


எழுதப்பட்டது 24/10/2008 வலையேற்றம் 3/11/2008

Labels: ,

மேய்ச்சல்

மேய்ச்சல்

மார்க்ஸியமும், பொருளாதார நெருக்கடியும்- ரோகிணி ஹென்ஸ்மென்

நவதாராளவாதமும், ஹிந்த்துவாவும்- சங்கர் கோபாலகிருஷ்ணன்

சமூகங்களும், தேசியங்களும்- மது கிஷ்வர்

Labels: , , , ,