திரைப்பட்ம்- சமூகம்- வெகுமக்கள் சினிமா

திரைப்பட்ம்- சமூகம்- வெகுமக்கள் சினிமா

வெகுமக்கள் சினிமா குறித்த கருத்தரங்கம் பற்றிய அறிவிப்பினை சில வாரங்களுக்கு முன் திண்ணையில் படித்தேன். நான் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் கட்டாயம் கலந்து கொண்டிருப்பேன். வெகுமக்கள் சினிமா குறித்த விவாதங்கள் நடைபெறுவது நல்ல அறிகுறி என்று கருதுகிறேன். வெகுமக்கள் சினிமா குறித்த முந்தைய இடுகை, அதற்கான பின்னூட்டங்களை இங்கே பார்க்கலாம்.

அதைப் படிக்கும் முன் கீழே உள்ளதையும் படித்து விடுங்கள்:
தமிழில் வெகுமக்கள் சினிமா குறித்த கட்டுரைகள், நூற்களின் விபரங்களுடன், தமிழ் வெகுமக்கள் சினிமா பற்றிய நூற்கள், ஆய்வுகள் (பிற மொழிகளில்) கொண்ட ஆய்வடங்கள் தேவை. இதை யாராவது செய்கிறார்களா என்று தெரியவில்லை.முன்பு நிழல் இதழில் ஒரு
பட்டியல் வந்தது என்று நினைக்கிறேன்.

நானும், சுந்தர் காளியும் முன்பு எழுதிய கட்டுரை ('Of Castes and Comedians: The Language of Power in recent Tamil Cinema' in 'The Secret Politics of Our Desires' (Ed) Ashis Nandy, Oxford University Press,New Delhi 1999) கிடைத்தால் படித்துப்
பாருங்கள். என்னிடம் கைவசம் பிரதி இல்லை. இதுதவிர சுந்தர் காளி 'Making Meaning of Indian Cinema' என்ற நூலில் (ரவி வாசுதேவன் பதிப்பாசிரியர்) ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். Neo-nativity genre பற்றிய கட்டுரை. இவை தவிர வேறு சிலவற்றையும் எழுதியிருக்கிறார். அவர் என்ன எழுதியிருக்கிறார் என்ற பட்டியல் என்னிடம் இல்லை.

நந்தி பதிப்பித்து கொண்டுவருவதாக இருந்த நூலுக்காக தமிழ் சினிமாவில் காதல் என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன். சில காரணங்களால் அது அச்சில் வரவில்லை. நந்தி கொண்டுவருவதாக இருந்த நூல் வெளியாகவில்லை, திட்ட அளவிலேயே நின்று பின் கைவிடப்பட்டது. இப்போது என்னிடம் அந்த கட்டுரையின் பிரதி இல்லை. கிட்டதட்ட தொலைந்துவிட்டது என்றே கொள்ளலாம். மீண்டும் அதே தலைப்பில் எழுத முடியும்,
அங்கும், இங்கும் என்று என் நூற்கள், சேகரித்தவை சிதறி இருப்பதால் சினிமா குறித்து ஒரு ஆய்வினை செய்யவோ அல்லது கள ஆய்வினை செய்யவோ இயலாத நிலை. தமிழ்நாட்டை விட்டு ‘வெளியேறி' கிட்டதட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் விளைவாக எழுத நினைத்த சில கட்டுரைகள் மனதில் தேங்கி, மங்கி விட்டன. ஒருவேளை அடுத்த பிறவியில் சில சாத்தியமாகலாம் :). அதுவரைக்குமாவது உலகும், தமிழ் சினிமாவும் இருக்க வேண்டும் :). அதை விட முக்கியம் நான் மனித இனத்தில் பிறக்க வேண்டும், ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே தோன்றுகிறது :).

கடந்த 15 ஆண்டுகளில் நான் அந்த இடுகையில் குறிப்பிட்டுள்ளது போல் வெகுமக்கள் சினிமா குறித்து ஆய்வுகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது. பல நூல்களும், ஆய்வறிக்கைகளும் வெளியாகியுள்ளன. குறிப்பாக சொல்லப் போனால் பாலிவுட் படங்கள் குறித்த ஆய்வுகள், நூல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில வாரங்களுக்கு முந்தைய அவுட்லுக் இதழின் அட்டைக் கட்டுரை வெகுமக்கள் வாழ்க்கையில் பாலிவுட்டின் தாக்கத்தினை பேசுகிறது. மக்கள் சினிமாவிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். அதே சமயம் அவர்களை வெறும் நுகர்வோராக, திரைக்கும்,நிஜத்திற்கும் வேறுபாடு தெரியாத அறிவிலிகளாகப் பார்க்க முடியாது. தொலைக்காட்சி பார்வையாளர்களும், தொலைக்காட்சியும் குறித்த ஆய்வுகள், ரசிக மன்றங்கள், fandom குறித்த ஆய்வுகளை இங்கு குறிப்பிட வேண்டும். குறிப்பாக Michel de Certeau முன்வைத்த textual poaching, ஹென்றி ஜென்கிஸ் எழுதிய Textual Poachers என்ற நூல். ஜெட் லியின் படங்கள் ஆந்திராவில் எப்படி
ரசிக்கப்படுகின்றன என்று எஸ்.வி. ஸ்ரீநிவாஸ் ஆராய்ந்திருக்கிறார்.

இப்போது, வெகுமக்கள் சினிமா என் பிரதான ஆய்வு அக்கறையில்லை. இப்போது இதில் யார் என்ன எழுதுகிறார்கள், எத்தகைய ஆய்வுகள் செய்யப்படுகின்றன என்பதை நான் கூர்மையாக அவதானிப்பதில்லை. ஆனால் எப்போது தேவைப்பட்டாலும் என்னால் அந்தத்
தகவல்களை பெற முடியும். cultural studies போன்ற ஆய்வுத்துறைகளில் வெளியாகும் கட்டுரைகள், நூற்களைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.

sarai போன்ற அமைப்புகள் வெகுமக்கள் சினிமா என்பதை நேரடியாகப் பேசாவிட்டாலும், அவற்றின் செயல்பாடுகள், அவை செய்யும்/ஆதரிக்கும்
ஆய்வுகள் முக்கியமானவை. வெகுமக்களை வெறும் திரைப்பட நுகர்வோர்களாக பார்ப்பதை விட அவர்கள் பண்பாட்டு ரீதியாக திரைப்படங்களை எப்படி appropriate செய்கிறார்கள், எப்படி பயன்படுத்தி புதியனவற்றைக் கொண்டு வருகிறார்கள் என்பது கவனம் பெற வேண்டிய ஒன்று. சராய் செய்யும் ஆய்வுகள் சில இந்த விதத்தில் ஊடகங்கள், மென்பொருள், கணினி, திரைப்படம் போன்றவற்றை உள்ளடக்கிய media ecosystem குறித்தனவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து திசை பிரியும் கிளைகள் பல. உதாரணமாக ரீமிக்ஸ் என்ற ஒன்றை எடுத்துக் கொண்டால் கூட அதில் ஆய்வதற்கும், எழுதுவதற்கும் நிறைய இருக்கின்றன. நான் சிலவற்றை யோசித்து வைத்திருக்கிறேன்.

வேறொரு கோணத்தில் பார்த்தால் இன்று ஹாலிவுட்டிற்கு நிகராக உலக அளவில் பெரிய அளவில் திரைப்படத் துறை இந்தியாவில்தான் இருக்கிறது. இந்திய சினிமா உலகமயமாக்கலை பயன்படுத்திக் கொண்டுள்ளது. இந்திய சினிமா தொழில் நுட்பரீதியாக பின் தங்கிவிடவில்லை. இந்திய அரசு சினிமாவிற்காக சிறப்பு சலுகைகளை தராமலே இந்திய சினிமா வலுவாக இருக்கிறது. ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்ஸில் அப்படியில்லை. ஹாலிவுட்டை சமாளிக்க முடியாமல் கொரிய சினிமா திணறுகிறது. ஒரு கோணத்தில் பார்க்கும் போது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இந்திய சினிமா (பாலிவுட், கோலிவுட் இத்தியாதி) வலுவாக இருப்பது அவசியம். இல்லையென்றால் ஹாலிவுட் இந்திய சினிமாவின் இடத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளும், கலச்சார மேலாண்மைவை முன்னிறுத்த முயற்சிக்கும். பன்முகத்தன்மை என்று வரும் போது சினிமாவில் அது அவசியம். அதே சமயம் இந்திய சினிமா இந்தியாவில் உள்ள பாரம்பரிய நிகழ்கலைகள், நாட்டார்கலைகள் மீதும் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஒருபுறம் பல காரணங்களால் பராம்பரிய நிகழ்கலைகள், நாட்டார்கலைகள் பல சவால்களை
எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உலகமயமாக்கல் இவற்றுக்கான சந்தையை ஏற்படுத்தியுள்ளது
என்றாலும், அதன் நேர்மறை,எதிர்மறை விளைவுகளை எளிதில் பிரித்து ஆராய்வதில்
சிக்கல்கள் உள்ளன. மேலும் பண்பாட்டு பன்வகைத்தன்மை என்று நோக்கும் போது
பண்பாடுகளிடையேயுள்ள உறவுகளில் உள்ள சமச்சீரற்ற தன்மையும் முக்கியத்துவம்
பெற வேண்டும். தொழில்நுட்ப சாத்தியபாடுகள் காரணமாக இன்று ஆவணப்படுத்தவும்,
புதுமைகளைக் கொண்டுவருவதும் எளிது.இவற்றை எப்படிக் கையாள்வது என்பதுதான்
கேள்வி. இன்னமும் டியுக் யுனிவற்சிசடி பிரஸ், ஆக்ஸ்போர்டு யுனிவர்ஸிடி பிரஸ்
மூலம்தான் நாம் நம்முடைய வெகுமக்கள் கலாச்சாரத்தினை புரிந்து கொள்ளப் போகிறோமா?

வேறு சிலவற்றை இன்னொரு தருணத்தில் எழுதுகிறேன்.

Labels: , , , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு