உலகப் பொருளாதார நெருக்கடியும், அரைவேக்காடு அலசல்களும்

உலகப் பொருளாதார நெருக்கடியும், அரைவேக்காடு அலசல்களும்

அரைகுரை புரிதலுடன் எழுதுபவர்களுக்கு ஆனந்த விகடன் முதல் புதிய ஜனநாயகம் வரை எழுத இடம் இருக்கிறது. அமெரிக்கா திவால், அதற்கு இந்தியா அடிமையாகிறது என்று எழுதுவதில் அர்த்தமில்லை. ஒழுங்குமுறைப்படுத்தலை அரசுகள் செய்யத் தவறியதன் விளைவு இது. இத்துடன் நிதி நிறுவனங்கள் செய்த ‘சாமர்த்தியமான' வேலைகளும் இந்த சிக்கலில் நிறுத்தியுள்ளன.

பொருளாதார சரிவோ அல்லது நெருக்கடியோ, ஏன் பொருளாதார வீழ்ச்சியோ புதிததல்ல. ஞாநி போன்றவர்கள் இந்தியாவில் இந்தியன் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகள் ஏன் வராக்கடன் பிரச்சினையால் நட்டத்தில் வீழ்ந்தன, அவற்றை அரசுதான் காப்பாற்றியது என்பதை
குறிப்பிடுவதில்லை. ஜப்பானிலும் நிதி நிறுவனங்கள் நெருக்கடியில் திணறி பின்னர் மீண்டன. ஆசிய நாடுகள் சிலவற்றில் 1997-98ல் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டது, அவை மீண்டன. முக்கியமான படிப்பினை ஒழுங்குமுறைப்படுத்தல் தேவை என்பதே. ரிசர்வ் வங்கியின்
ஒழுங்குமுறைபடுத்தலின் கீழ் இருந்தும் இந்திய பொதுத்துறை வங்கிகள் ஏன் நட்டத்தில் வீழ்ந்தன, ஏன் வராக்கடன்களும், அவற்றின் மீதான வட்டித்தொகையும் அதிகரித்து முதலுக்கே மோசம் போன கதை ஏற்பட்டது, சில கூட்டுறவு வங்கிகளும் கூட திவாலாகும் நிலைக்கு வந்தது ஏன் - இப்படி பல கேள்விகள் இருக்கின்றன.

அமெரிக்கா இன்று திணறுவதால் இங்கு தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டும் மருதன்களும், ஞாநிகளும் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அதில் விருப்பமுமில்லை என்று நினைக்கிறேன். இயற்கைப் பேரழிவு, நோய்,போரால் பொருளாதாரம் நாசம் போன்ற
எதுவும் அமெரிக்காவில் நிகழவில்லை. நிதித்துறையில் (பரந்த பொருளில்) ஏற்பட்ட சிக்கல் பல துறைகளிலும் தாக்கம் விளைவித்துள்ளது. இதன் விளைவு உலகெங்கும் எதிரொலிக்கிறது. மற்றப்படி அமெரிக்காவின் அடித்தளம் வலுவாகவே உள்ளது. இன்றும் டாலரின் மதிப்பில் மாற்றம் ஏற்பட்டாலும் அதற்கான மாற்று என்று எதுவும் இல்லை. அமெரிக்காவின் அறிவியல், தொழில்நுட்பம், உயர்கல்வி போன்றவை வலுவாகவே உள்ளன. அதே போல் விவசாயத் தொழிலும் நன்றாகவே உள்ளது. அமெரிக்கா இந்த நெருக்கடியை எதிர்கொள்ளக் கூடிய வலுவை கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பாவும் வீழ்ந்து விடவில்லை. அந்த பாதிப்பினையும் மீறி வளர்ச்சியுற்றது. ஜப்பானும் இரண்டாம் உலகப் போரின் பாதிப்புகளை எதிர்கொண்டு தன் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தது. அமெரிக்கா இந்த சிக்கலை சமாளித்து சில ஆண்டுகளில் மீளும். இதிலிருந்து சில படிப்பினைகளை அது கற்றுக் கொள்ளக்கூடும்.
ஒருவிதத்தில் முதலாளித்துவத்தில் இது இயல்பான ஒன்றாகி விட்டது. அழிவும், ஆக்கமும், ஏற்றமும், வீழ்ச்சியும் இல்லாத முதலாளித்துவ வளர்ச்சி இல்லை. இதற்கான விலைகளை யார் கொடுக்கிறார் என்பதே முக்கியம்.

இதை சமகால முதலாளியத்தின் அடிப்படை சிக்கல் என்று கருதலாம்.முதலாளியப் பொருளாதாரம் உலகளாவிய ஒன்றாக மாறிவிட்ட பின், உலகமயமாதலின் விளைவாக முதலாளியப் பொருளாதாரத்தினை ஒரளவே பின்பற்றும் நாடுகளும் உலகச் சந்தையுடன் வணிகம் செய்துவருவதால், முன் எப்போதையும் விட அமெரிக்காவில் ஏற்ப்பட்ட நெருக்கடியின் தாக்கங்கள் எதிரொலிக்கின்றன. ஐஸ்லாந்து போன்ற சிறிய நாடும் இன்று உலகமயமாதலையும், நிதி துறை தாராளமயமாக்கலையும் பயன்படுத்திக் கொண்டு பலன்களையும், நெருக்கடி ஏற்படும் போது எதிர்பாரா விளைவுளையும் அனுபவிக்கின்றன.
பின்னதை குறிப்பிடுவர்கள் முன்னதால் விளைந்த பயன்களை குறிப்பிடுவதில்லை. அரசுகள் தேவைப்படும் போது ‘சோசலிச' நடவடிக்கைகளை எடுப்பது புதிது அல்ல. அதில் தவறும் இல்லை. இதை வைத்துக் கொண்டு பழைய சோசலிசப் பாணி பொருளாதாரக் கொள்கைகளுக்கு இன்று ஆதரவு தேடுவது நகைப்புக்குரியது. எனென்றால் இன்று முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசப் பொருளாதாரம் என்று காட்டுகிற வகையில் எந்தப் பெரிய நாட்டின் பொருளாதாரமும் சோசலிச பொருளாதாரமாக இல்லை. ரஷ்யாவின் பொருளாதாரம் கணிசமான அளவிற்கு எண்ணெய் வளத்தினை சார்ந்துள்ளது. வியத்நாமும், சீனாவும் உலகச் சந்தையினால் பலன் அடையவே நினைக்கின்றன. அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு அதன் விளைவாக பொருட்களுக்கான தேவை குறைந்தால் அல்லது உலகளாவிய பொருளாதார தேக்கம், வளர்ச்சி குறைவு ஏற்ப்பட்டால் அது சீனாவையும் பாதிக்கும். சீனாவின் அந்நிய செலவாணி இருப்பு கணிசமாக இருப்பாதலும், வேறு சில அம்சங்கள் அதற்கு சாதகமாக இருப்பாதாலும் அதால் பாதிப்பின் விளைவும் மோசமாக இல்லாதபடி ஒரளவேனும் பாதுக்காத்துக் கொள்ள முடியும். இந்த நெருக்கடியில் எண்ணெய் விலை குறைந்துள்ளது. தேவை குறையக்கூடும் என்பதால் விலை குறைவு. இது இன்னமும் குறையலாம். முன்பு எண்ணெய் விலை கூடிய போது அதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டப்ப பட்ட அமெரிக்க நிதி நிறுவனங்களில் சில இன்று இல்லை. எண்ணெய் விலை யூக வணிகத்தால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதற்கு இந்த ஏற்ற, இறக்கம் ஒரு சான்று.

உலகமயமாதல் அரசுகளுக்கு ஒழுங்குமுறைப்படுத்தலில் சவால்களை விடுக்கிறது. அதுவும் நிதித்துறையைப் பொருத்தவரை இந்த சவால்கள் மிக அதிகம். அரசுகள் வெளி நாட்டு மூலதனத்தினை வரவேற்கின்றன, அதே சமயம் தங்கள் நாட்டு நிறுவனங்கள் உலக அளவில் வளர்ச்சியுறவும் உதவ விரும்புகின்றன. இப்படி பல காரணங்களால் இன்று முன்பை விட நிதி சந்தைகள் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. நாடுகளில் உள்ள அமைச்சகங்கள், மைய வங்கிகள் நெறிப்படுத்துகிறோம் என்றும், கறாராக ஒழுங்குமுறைப்படுத்துகிறோம் என்றும் கருதிக் கொண்டு சந்தை தரும் பயன்களை கிடைக்காமல் செய்ய முடியாது. வெளிநாட்டு மூலதனம் பல நாடுகளுக்கு மிகவும் தேவையாக உள்ளது. எனவே பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு, வங்கி, காப்பீடு துறைகளை திறந்துவிடுவது தவிர்க்க முடியாத ஒன்று. இல்லாவிட்டால் 2% , 3% என்றுதான் வளர்ச்சி விகிதம் இருக்கும்.ஆகவே தாராளமயமாக்கல் காலத்தின் கட்டாயம். அதைச் செய்யும் போது முறைப்படுத்தல் என்பதை எப்படி செய்கிறோம் என்பதுதான் கேள்வி. 1991க்கு முந்தைய இந்தியாவிற்கு நாம் திரும்ப முடியாது. பழைய சோசலிச பொருளாதாரக் கோட்பாடுகள் எப்போதும் வெற்றி பெற்றன என்பது இல்லை. வங்கி, காப்பீடு துறையை இன்னும் அதிகமாக 'திறந்து' விட்டிருந்தால் இந்த நெருக்கடியினால் சற்று அதிகமான பாதிப்பு ஏற்ப்பட்டிருக்கலாம். ஆனால் பாதிப்புதான் ஏற்பட்டிருக்கும் என்ற வாதத்தை நான் நிராகரிக்கிறேன்.பொருளாதார,நிதிக் கொள்கை என்பது புதிய வாய்ப்புகளையும்,அதனால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களையும், பலன்களையும் கணக்கில் கொண்டு வகுக்கப்படுமானால் அதனால் நன்மை விளையலாம். எதிர்பாராத விளைவுகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். 100% உத்தரவாதம் இருந்தால்தான் இதை செய்ய வேண்டும் என்று பார்த்தால் பலவற்றை செய்யவே முடியாது. இடதுசாரிகளைப் பொருத்தவரை அவர்களுக்கு இது விமர்சிக்க ஒரு வாய்ப்பு. ஆனால் இந்த நெருக்கடி சோசலிசம் சிறந்தது என்று நிருபிக்கிறது என்று கொள்ள முடியாது, மாறாக உலகமயமாதல், தவறான கொள்கைகள் காரணமாக ஏற்படும் விளைவுகளைக் காட்டுகிறது. இது சந்தைப் பொருளாதாரக் கோட்பாட்டின் தோல்வி என்பதை விட கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரத்தின் தோல்வி என்பதே சரியாக இருக்கும்.

இந்த நெருக்கடியை ஒரு படிப்பினையாக நாடுகள் கொள்ளுமானால் அது நல்லது. இல்லாவிடில் வரலாறு திரும்பும்.

[ஆம், இது 'பொலிட்டிக்கலி இன்கரெக்ட்'டான இன்னொரு இடுகை என்பது எனக்குத் தெரியும். பெரியாரின் எழுத்துக்களை நாட்டுடமையாக்க கூடாது என்ற ‘பொலிட்டிக்கலி இன்கரெக்ட்'டான நிலைப்பாட்டினையும் நான் எடுத்திருக்கிறேன். அதையும் விளக்கி எழுதுவேன்.]

Labels: ,

7 மறுமொழிகள்:

Blogger Sridhar Narayanan மொழிந்தது...

வினவு பதிவில் புதிய ஜனநாயகத்தின் இடுகையை படித்த போது ஏன் இப்படி ஓவர் எக்ஸாகரேட் பண்ணுகிறார்கள் என்று இருந்தது. அதற்கு நிறைய பேர் 'நன்றாக இருப்பதாக' பின்னூட்டம் வேறு போட்டிருந்தார்கள். நீங்கள் தெளிவாகவே விளக்கியிருக்கிறீர்கள். ஆனாலும் அநியாயத்துக்கு 'வலதுசாரி ஆதரவாளன்' பட்டம் வாங்க தயாரா எழுதறீங்களே :-))

12:08 PM  
Anonymous ரங்கதுரை மொழிந்தது...

"அமெரிக்கா இன்று திணறுவதால் இங்கு தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டும் மருதன்களும், ஞாநிகளும் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அதில் விருப்பமுமில்லை என்று நினைக்கிறேன்." - மிகச் சரியாகச் சொன்னீர்கள் ரவி. ஒரு சிறு பத்திரிகையைக்கூட உருப்படியாக நடத்த முடியாதவர்கள், மீதமுள்ள சந்தாத் தொகையைக்கூட திருப்பிக்கொடுக்கும் அறவுணர்வில்லாதவர்களெல்லாம் உலகப் பொருளாதாரம் பற்றி தமிழர்களுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதுதான் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் அவலம்.

11:54 PM  
Anonymous IT MAN மொழிந்தது...

Iam more interested to read your periyar post. since we are stressed out more we need comedy posts such as yours to unwind.

10:23 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

அருமையான பதிவு.
//அரைகுரை புரிதலுடன் எழுதுபவர்களுக்கு ஆனந்த விகடன் முதல் புதிய ஜனநாயகம் வரை எழுத இடம் இருக்கிறது.//
சரியாக கூறினீர்கள்.
//அமெரிக்கா இன்று திணறுவதால் இங்கு தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டும் மருதன்களும், ஞாநிகளும் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அதில் விருப்பமுமில்லை என்று நினைக்கிறேன்.//
அவர்களுக்கு விருப்பமில்லை. இது மாதிரி எழுத்தாளர்கள் எங்கள் நாட்டை(இலங்கை) சேர்ந்தவர்கள் பலர் (ஸ்ரீரங்கன் போன்றோர் )இருக்கிறார்கள் இவர்கள் வாழ்வது கியுபாவிலோ அல்லது வட கொரியாவிலே அல்ல. முதலாளித்துவ நாடுகளில் செட்டில்லாகி முதலாளித்துவ வசதிகளை வளங்களை அனுபவித்து நல்லவாழக்கை வாழ்கிறார்கள். ஆனால் தங்களுக்கு பொழுது போகாத நேரங்களில் திட்டி எழுதுவது மட்டும் முதலாளித்துவநாடுகளை.

2:31 PM  
Blogger சரவணகுமரன் மொழிந்தது...

யாரு எத சொன்னாலும் சரியா சொன்ன மாதிரிதான் இருக்கு...

9:11 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

பொருளாதாரம் ஒரேயடியாக வீழ்ச்சி அடைந்தால், தற்போது கிடைத்து வரும் அதி கூடிய வருமானம் கிடைக்காமல் போயிடுமே என்ற ஏக்கத்தில், நிச்சியமற்ற எதிர்காலத்தை பற்றிய அச்சத்தில், ஆடம்பர வாழ்க்கை பறிபோனால் வாழ்வே மாயமாகி விடுமே என்ற கவலையில், இப்படியான கட்டுரைகள் எழுதி தங்களது மனதை தாங்களே தேற்றிக் கொள்கின்றனர்.

9:17 AM  
Anonymous badrinath மொழிந்தது...

Since socialism can not win this imperialist we cannot brush aside socialism. Mankind has to pass decades and decades to prove which one will be right

7:26 AM  

Post a Comment

<< முகப்பு