”காந்திக்கு காப்பி போட்டுக் கொடுத்தேன்

”காந்திக்கு காப்பி போட்டுக் கொடுத்தேன்”

காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஐ முன்னிட்டு சிறப்பு பதிவு.

காந்தி சென்னை வந்த போது அவர் குடிக்க காப்பி கிடைக்குமா என்று கேட்டதால்,
சுடச் சுட பசும்பாலில் திக் டிகாஷ்ன் விட்டு காப்பி போட்டுக் கொடுத்தேன், இந்தப் பெண்ணை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று தன் கணவரிடம் காந்தி கூறியதாக என் பாட்டியின் அம்மா கூறியிருக்கிறார். அவர் அதை பல முறை கூறியும் அவர் குரலில் அதை பதிவு செய்யாதது என் தவறுதான். இது போன்ற வரலாற்றுக் குறிப்புகளை நான் எழுதி வைத்த குறிப்பேட்டில் காதல் கவிதை எழுதி அதை தன் காதலியிடம் காட்ட முயன்ற போது அடி வாங்கிய என் அத்தையின் மகன், காதலி கிழித்துப் போட்ட காகிதங்களை பொறுக்காமல் வந்து விட்டதால் அசட்டு காதல் கவிதைகளுடன் வரலாற்றுக் குறிப்புகளும் தொலைந்து விட்டன. மிஞ்சியது அந்த ஹோ & கோ டைரியின் அட்டைதான். தமிழருக்கு வரலாற்று உணர்வு இல்லை என்பதற்கு வேறு என்ன சான்று தேவை?

பாட்டிக்கு காந்தி மீது மிகவும் பக்தி. தன் கணவர் போன்ற பல முட்டாள் பிரமாணர்களை அவர் திருத்தினார் என்று நம்பினார். பாட்டி காந்தி வந்த போது நகையெல்லாம் தரவில்லை. இந்த மாதிரி சிக்கல் வருமென்று திருவாளர் ராகவனுக்குத் தெரியாமல், நகையை அடகு வைத்து கடன் வாங்கிவிட்டார். காந்தி நல்லவர், ஆனால் காங்கிரஸ்காரங்க மோசம், அவங்களை நம்பி நகையை தர முடியுமா, காங்கிரஸில் ஒரு காந்தி, எல்லாருமா காந்தி என்று கேட்டார். எனக்கு மோகன் தாஸ் என்று பெயர் வைக்க விரும்பினார். அப்போது ராகவனின் பிள்ளை, அதாவது என் தாத்தா, ஒரு வழக்கில் மோகன் தாஸ் என்ற கொலைகாரனுக்காக வாதாடினார். அதனால் அந்தப் பெயர் வைக்கக் கூடாது என்று வீட்டில் எதிர்ப்பு வந்தது, அப்புறம் பிச்சுமணி என்று வைத்த பெயரை நவீன பெயராக என்று ரவி ஸ்ரீநிவாஸ் என்று 19 வயதில் மாற்றிக்கொண்டேன். இன்னொரு காரணமும் உண்டு,அதை தக்க தருணத்தில் எழுதுகிறேன்.

அந்தக் காலத்தில் காந்தி தமிழ் நாட்டிற்கு வந்த போது ஒரு பெண்ணிடம் காபி கேட்டு குடிதத்தாக தமிழ்நாட்டில் காந்தி புத்தகத்தில் இல்லை, காந்தி ஆட்டுப் பால்தான் குடிப்பார் காப்பி குடிப்பதில்லை, காந்தி ஆட்டுப்பால் தேநீர்தான் குடிப்பார், பசும்பால் குடிப்பதை அவர் இங்கிலாந்தில் இருக்கும் போது நிறுத்தி விட்டார் என்று வரலாற்று அறிஞர்கள் பின்னூட்டம் இடுவதை தவிர்க்க பாட்டியிடம் பேசி சரியான தகவல்களை இட முயற்சிக்கிறேன்.

இரண்டே இரண்டு பிரச்சினைகள்தான் தடை. ஒன்று பாட்டியின் அம்மா இறந்து போய் ஒரு பத்தாண்டாகிறது, அவர் இறந்த போது நான் அருகில் இல்லை, இருந்திருந்தால் மூச்சு போவதற்கு முன் அதைச் சொல்லச் சொல்லி சாட்சிகளுடன் பதிவு செய்திருப்பேன். இரண்டாவது ஒஜோ பலகை மூலம் கூப்பிட்டாலும் அவர் இப்போதெல்லாம் வருவதில்லை. சொர்க்கத்தில் பயங்கர பிஸியா இல்லை என் மீது கோபமா, தெரியவில்லை.

இருந்தாலும் முயற்சித்து 98% தகவல்களை திரட்டி, சரி பார்த்தும் விட்டேன். காந்திக்கு அவர் காப்பி போட்டுக் கொடுத்திருப்பார் என்பதை நிருபிக்க பல ஆதாரங்கள் உள்ளன.

பாட்டியின் அப்பாவின் டைரியில் அந்த மாதம் காப்பிக் கொட்டைக்கு செலவழித்த தொகை, பாலுக்கு செலவழித்த தொகைக்கு கணக்கு இருக்கிறது. காந்தி அவர்கள் வீட்டிற்கு வந்த போது கூடுதல் பால் வாங்கிய தொகையும் நாளந்தர கணக்கில் காட்டப்பட்டுள்ளது. அன்று கூடுதலாக அரிசி, காய்கறி செலவு தொகையும் அதில் காட்டப்பட்டுள்ளது. இன்று காந்தி தரிசனம், என் பாப விமோசனம், ஜானகி கதர் சேலை உடுத்தினாள் என்று வேறு எழுதியிருக்கிறார். சில சிறு தகவல்கள்தான் விடுபடுகின்றன.

காந்தி குடித்தார் அதாவது அந்தக் காப்பியைக் குடித்தார் என்பதற்கு சில ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. காந்தியின் சென்னை விஜயம் பற்றி மகாதேவ் தேசாய் குஜராத்தியில் எழுதிய நூல், அவரது நாட் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு, அண்மையில்தான் வெளியாகியிருக்கிறது. அதை குஜராத்தி தெரிந்த நண்பரை படிக்கச் சொல்லியிருக்கிறேன். அதில் ஜானகி ராகவன் போட்ட காப்பியை காந்தி குடித்தார் என்பதற்கு சான்று இருக்கும் என நம்புகிறேன். அந்த ஜானகி ராகவன் தான் என் பாட்டியின் அம்மா என்பதை நிருபிக்க முடியும். தேசாய் துல்லியமாக நாட் குறிப்புகளை எழுதியிருக்கிறார். தேதி வாரியாக,
நேர வாரியாக. காந்தி சாப்பிடும் கடலைகளின் எண்ணிக்கை உட்பட பலவற்றை பதிந்திருக்கிறார். தேசாய்க்கும் காப்பி கொடுத்தேன் என்று பாட்டி சொல்லியிருக்கிறார். ஆகவே தேசாய் தான் குடித்தேன் என்று எழுதியிருந்தாலும், காந்தியும் குடித்திருப்பார் என்று எடுத்துக் கொள்ளலாம். மேலும் தேசாய் தோசை சாப்பிட்ட பின்னர் எப்போதும் காப்பி குடிப்பார் என்று வேறொரு நூலில் எழுதியிருக்கிறார். தேசாய்ன்னு ஒருத்தர், செவப்பா, நெட்டையா, குல்லாப் போட்டிருந்தார், காந்தி கூடவே இருந்தார், அவர் தோசையை ரசிச்சு சாப்பிட்டார்ன்னு பாட்டி சொல்லியிருக்கிறார். தோசையை சாப்பிட்டவர் காப்பியும் குடித்திருப்பார் என்று கொள்ள முடியும்தானே. இப்படி சில தடயங்களை வைத்து உண்மையை காண முடியும்தானே. வரலாற்றியலில் 202 பாடம் படிததது இதற்கு உதவாதா என்ன ?

ஆகவே, காந்திக்கு என் பாட்டி காப்பி போட்டுக் கொடுத்ததை சான்றுகளுடன் அடுத்த அக்டோபர் 2ம் தேதிக்குள் ஒரு பதிவாக இட முடியும் என்று நம்புகிறேன்.

Labels: , , , , , ,

3 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

ஜானகி ராகவன் என்ற பெண் காந்திக்கு காப்பி போட பாலை இரவல் வாங்கியதாக என்னாலும் நிருபிக்க முடியுமென்றே நம்புகிறேன். ஜானகியின் கணவ்ர் பொறுப்பின்றி மனைவியின் நகையைக்கூட அடகுவைத்து குடும்பத்திற்கு கஷ்டம் கொடுத்ததாக என் கொள்ளுப்பாட்டி சொல்ல நான் கேட்டிருக்கிறேன். காந்தி வந்ததாக சொல்லப்பட்ட நாளில் கடனாக இலக்குமிப்பாட்டியிடம் முக்கால் அழாக்கு பால் கடன் வாங்கியதை இலக்குமி பாட்டி தன் நாட்குறிப்பில் கோபத்துடம் எழுதியதை ஸ்கான் செய்து நேரம் கிடைக்கும்போது அடுத்த பத்தாண்டுகளில் போடுகிறேன்.

8:25 AM  
Blogger பிரபு ராஜதுரை மொழிந்தது...

இது என்ன பா.ராகவனின் பக்கோடா கதைக்கு எதிர்வினையா?

1:31 PM  
Blogger SurveySan மொழிந்தது...

:) நல்ல பதிவு.

எங்க வீட்ல வந்து காப்பி குடிச்சிருந்தா, அந்த டம்ப்ளரை அப்படியே வச்சிருந்திருப்போம். பின்னாளில், ஏலம் கீலம் விட்டு கொஞ்சம் டப்பு பாத்திருக்கலாம்.

ஆனா, அப்போ, காந்தி அவ்ளோ ஃபேமஸ் இல்லியோ?

மேலே அனானியின் கருத்தும், அமக்களம் ;)

1:50 PM  

Post a Comment

<< முகப்பு