ப்ருனோ லத்தூர்- நாகார்ஜுனன்- சுருக்கமான எதிர்வினை

ப்ருனோ லத்தூர்- நாகார்ஜுனன்- ஒரு சுருக்கமான எதிர்வினை


இந்த மாத தீராநதியில் வெளியான கட்டுரை. அவர் லத்தூர் எழுதி முடித்த பின் நான் எதிர்வினையாக சில கருத்துகளை முன் வைக்கலாம் என் நினைக்கிறேன். என்னைப் பொருத்த வரை இந்த constructed truth என்பது பிரச்சினைக்குரிய ஒன்று. ஏனெனில் இது இருபுறமும் வெட்டும் கத்தி போன்றது. இதை நீட்டித்தால் பரிணாமவாதமும் constructed truth என்பதால், பள்ளிகளில் creationism மும் சொல்லித் தரலாம் என்ற வாதத்தில் போய் முடியும். தமிழில் லத்தூரின் கருத்துக்களை social construction of science குறித்த
புரிதல் இல்லாமல் புரிந்து கொள்வது கடினம். அது போல் இந்த Actor-Network-Theoryயும் புரிந்து கொள்ள எளிது போல் தோன்றும், நடைமுறையில் பொருத்திப் பார்ப்பது எளிதல்ல. லத்தூர் ஒரு புறம் என்றால் டோனா ஹாரவே போன்றவர்கள் இன்னொருபுறம் பல
கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அறிவியல் குறித்த பெண்ணிய விமர்சனங்கள், பின்காலனிய விமர்சனங்கள், ஹாராவேயின் situated knowledge போன்று பல கோணங்களில் இன்றைய நவீன அறிவியல் குறித்த விமர்சனங்கள் முன் வைக்கப்படுள்ளன. எனவே லத்தூரின் கருத்துக்களை/விமர்சனங்களை இவற்றுடன் ஒப்பிட்ட்டும், வேறுபடுத்தியும் காண வேண்டும்.

'எடுத்துக்காட்டாக, ஒரு துப்பாக்கியின் செயல்பாட்டை முன்வைக்கிறார் லத்தூர். அதை வைத்து ஒரு கொலை நடந்தால், கொல்வது துப்பாக்கியா அல்லது அதை வைத்திருப்பவரா என்ற கேள்வி வருகிறது. துப்பாக்கி என்பதை வைத்து வேட்டையாடலாம், அதைத் திருப்பிவைத்து கட்டையால் ஆணி அடிக்கலாம், துப்பாக்கிகளை ஒருவர் சும்மா சேகரிக்கலாம், அதைவைத்துக் கொலையும் செய்யலாம், ஆனால் அதைக்கொண்டு பல்குத்த முடியாது என்கிறார் லத்தூர். ஆக, துப்பாக்கிக்கென சில ஆற்றல்கள், சாத்தியங்கள், துணைநிரல்கள் sub-program-கள் உண்டு, பல்குத்துவது போன்ற செயலை அதன் கைவண்ணமாகக் காணவியலாது என்பது சரி. ஆனால் அது மாத்திரம் போதாது. இங்கே, கொலை என்பது நடக்கும் பட்சத்தில் அதைச் சாதிப்பது துப்பாக்கியோ, அதை
வைத்திருப்பவரோ மாத்திரமல்ல, இரண்டும் கலந்த ஒரு தொகுதியில் நடக்கும் மனித-மனிதமற்றவை இடையிலான பரிமாற்ற உறவே என்கிறார் லத்தூர்'

சட்டம் துப்பாக்கிக்கு agency இருப்பதாக கருதவில்லை. மனிதருக்கே அது இருப்பதாக கருதுகிறது. இந்த ‘பரிமாற்ற உறவு' என்பதிலும் கூட சட்டம் வெறும் செயல்பாட்டினை மட்டும் கருத்தில் கொள்வதில்லை. சூழல், செயல்பாட்டிற்க்கான காரணி, காரணகர்த்தாக்கள் என்பதையும் கருத்தில் கொள்கிறது. மனிதமற்றவை என்று வரும் போது ஒரு பாகுபாடு ஏற்படுகிறது. முன்கதவை லத்தூர் மூடினாலும், பின் கதவு வழியாக அது வந்து விடுகிறது. இப்போது கொலை என்பதை செய்பவர் துப்பாக்கி தற்செயலாக வெடித்து குண்டு பாய்ந்து கொலை நடந்து விட்டது என்று வாதிட முயன்றாலும், அதை அப்படியே
நீதிமன்றம் ஏற்காது. ஏனெனில் தற்செயலாக குண்டு வெடித்தாலும், உரிய உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தால் அதுவும் குற்றமே. எனவே சட்டம் குற்றம் என்பதை ஒரு கருவியின் சாத்தியக்கூற்றினை மட்டும் கணக்கில் கொண்டு மதிப்பிடுவதில்லை. மனிதமற்றவைக்கும் agency இருப்பதாக கருதினால் அது நமது அடிப்படை நம்பிக்கைகளை கேள்விக்குட் படுத்துகிறது. இந்த மனித- மனிதமற்ற என்பதை தெகாத்தே மனிதர்களையும்,
விலங்குகளையும் வேறுபடுத்துவது எவை என்று சொன்னதின் தொடர்ச்சியாக காணலாம். ஹாரவே மனிதர் - நாய்கள் குறித்த உறவினை ஆய்ந்து எழுதும் போது மனிதருக்கும், பிற உயிரிகளுக்கும் உள்ள உறவு குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார். மனிதமற்ற என்று பிரிக்கும் போது agency குறித்த கேள்வி தவிர்க்க முடியாது. நாய்க்கு agency உண்டு, துப்பாக்கிக்கு கிடையாது. ஆனால் சட்டம் மனிதர், நாய் இந்த இருவருக்கும் உள்ள agency ஒன்றுதான் என்று கருதுவதில்லை. அப்படி கருதாமல் மாடு வேலி தாண்டி மேய்ந்தாலும் மாட்டு உரிமையாளர்தான் பொறுப்பு என்று சொல்கிறது.

இதில் லத்தூர் முன் வைத்துள்ளவை எத்தகைய புரிதலை மாற்றாக வைக்கின்றன என்பது எனக்கு விளங்கவில்லை. மேலும் மனிதம் என்று சொல்லும் போதே நாம் சிலவற்றை உணர்த்திவிடுகிறோம். மனிதமற்ற என்பது மனித என்பதன் other ஆகவே எப்போதும் கருதப்பட வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தக் கேள்விகள் அறம், தத்துவம், பெண்ணியம் (ஆம், பெண்ணியம்) உட்பட பல துறைகளில் விவாதிக்கப்படுகின்றன.

'உலகளாவிய மட்டத்தில் பார்த்தால் புவிக்கொதிப்பு், ஓஸோன் மண்டலத்தில் ஓட்டை விழுதல், புகைப்பழக்கத்தால் புற்றுநோய் வருவது போன்றவை,விஞ்ஞானம் மூலமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளாகக் கருதப்பெறுவன, இவைகுறித்த விஞ்ஞான விவாதங்கள் செயற்கையாக நிகழ்த்தப்பெறுவன. இந்தப்பிரச்னைகள் நீடிப்பதற்கு எதிரான அரசியல்-செயல்பாட்டை இடைநிறுத்திவைக்க, தவிர்க்க, இந்த விவாதங்கள் உதவுகின்றன. இவற்றால் லாபமடைவோருக்கெல்லாம் இந்த விவாதங்கள் பயனளிக்கின்றன என்கிறார் லத்தூர். அதாவது வாகனத்தயாரிப்பில் உள்ள பெரும் தொழில்-நிறுவனங்கள்,
பெட்ரோல் நிறுவனங்கள், சிகரெட் நிறுவனங்களில் தொடங்கி இந்தப் பட்டியலை விரிக்கலாம் என்று தெரிகிறது...'

இது எனக்கு புரியவில்லை. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது லத்தூர் இது குறித்து கூறுவது வேறு என்று நினைக்கிறேன், கைவசம் நூல் இல்லாததால் சரி பார்க்க
முடியவில்லை.எப்படியிருப்பினும் இந்த கருத்து சர்ச்சைக்குரியதே. ஆங்கில மூலத்தினை நாகார்ஜுனன் இட்டால் மேற்கொண்டு எழுதலாம்.

விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

Labels: , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு