ஒரு இன்ப அதிர்ச்சியும், கிட்டதட்ட 20 ஆண்டுகளும்

ஒரு இன்ப அதிர்ச்சியும், கிட்டதட்ட 20 ஆண்டுகளும்

இன்று மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. அதை அனுப்பியவர் யார் என்று பார்த்த போது என்னால் ஒரு கணம் நம்ப முடியவில்லை. நட்புத் தொனியில் ஒரு சிறு மின்னஞ்சல். அவர் எழுதிய ஒரு கட்டுரையை அனுப்பியிருந்தார். இப்போது நீ என்ன செய்கிறாய் என்று
ஒரு informal தொனியில் அமெரிக்கர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் எழுதியிருந்தார். அனுப்பியவர் ஒரு அமெரிக்கப் பேராசிரியர். நான் யார் என்று அவருக்குத் தெரியாது. எங்கிருந்தோ என் மின்னஞ்சல் முகவரிகளை கண்டுபிடித்து எழுதியிருக்கிறார், அவர் சுட்டியுள்ள ஒரு கட்டுரையை எழுதியுள்ளது நான் என்று அனுமானித்து.

கிட்டதட்ட இருபதாண்டுகள் முன்பு நான் உயிரியல் தொழில் நுட்பம், விவசாயம் குறித்து படித்துக் கொண்டிருந்தேன். அது தொடர்புடைய வேறு சில சர்ச்சைகள், ஆய்வுகளையும் குறித்து அறிந்திருந்தேன். அதில் ஒரு ஆய்வாளர் எழுதியுள்ளவை முக்கியமானவை என்று
தெரிய வந்தது. ஆனால் எனக்கு அவை எந்த நூலகத்திலும் கிடைக்கவில்லை. இந்தியாவில் அன்று அவை குறித்த அக்கறை மிகக் குறைவாக இருந்தது. அந்த காலகட்டத்தில் நான் வெகு தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தேன். அத்துடன் நிற்காமல் நூலகங்களை நம்பாமல் என் தேவைக்காக நூற்கள், கட்டுரைகள், அறிக்கைகள் என சேகரிக்க துவங்கியிருந்தேன். (1)

இந்நிலையில், 1988/89ல் எனது ஆர்வத்தினை முன்வைத்து அந்த ஆய்வாளருக்கு எழுதினேன். என்ன எழுதினேன் என்று இன்று நினைவில்லை. விரைவில் ஒரு பார்சல் என்னைத் தேடி வந்தது. அவர் எழுதிய நூல் பிரதி, அவர் பதிப்பித்த நூல் பிரதி, ஒரு கடிதம், சில கட்டுரைகள் அதில் இருந்தன. என் ஆர்வத்தினை பாராட்டி, உன் மின்னஞ்சல் முகவரி என்ன, என் மின்னஞ்சல் முகவரி இது, என்னை தொடர்பு கொள்ளத் தயங்காதே என்று ஒரு கடிதம். அப்போது இந்தியாவில் மின்னஞ்சல் என்பது மிக அபூர்வம். சில கல்வி நிலையங்களில், வணிக நிறுவனங்களில் மட்டும் இருந்த அரிய வசதி. நான் அதைப் பற்றிப் படித்திருக்கிறேன். bitnet என்பது பயன்பாட்டில் இருந்தது. எனக்கு கடிதம் எழுதிய அமெரிக்கர்/ஐரோப்பியர் பலர் அப்போதே உன் மின்னஞ்சல் முகவரி என்ன என்று கேட்டிருக்கிறார்கள். மின்னஞ்சல் இல்லை என்று பதில் எழுதியிருக்கிறேன். அந்த காலகட்டத்தில் பாக்ஸ் கூட பெருமளவு பயன்பாட்டில் இல்லை. டெலக்ஸ் கோலோச்சிக் கொண்டிருந்த, அங்கும் இங்கும் கம்யுட்டர் ஒரு வியப்பளிக்கும் பொருளாக, அனுமதி பெறாமல் தொடாதே என்று எச்சரிக்கையுடன் அறிமுகமாயிருந்தது :). எனவே என் போன்றவர்களுக்கு ஏர் மெயில்தான் பிற நாடுகளில் இருப்போருடன் தொடர்பு கொள்ள
ஒரே வழி . நற்பேறாக கணினியை பயன்படுத்தும் வசதி இருந்தது. இந்த இரண்டும் எனக்கு பேருதவியாக இருந்தது.

அவருக்கு மிக்க நன்றி தெரிவித்து கடிதம் எழுதினேன். பல முறை அந்த நூல்களைப் படித்தேன். அந்த இரு நூல்களும் எனக்கு புதிய வெளிச்சத்தைக் காட்டின. என் சந்தேகங்களுக்கு விடைகள் அதில் இருந்தன. இப்படியும் அணுகலாம் என்று பாதை காட்டின. பின் நான் தீவிரமாக சிலவற்றைக் குறித்து படிக்க துவங்கி, பிறகு புதிய திசையில் பயணித்தது, ஒரு விதத்தில் இன்னொரு அவதாரம்/இன்னொரு பிறவி. எடுத்தது தனிக் கதை :). அந்த இரண்டு நூல்களும் பின்னர் கூட எனக்கு படிக்க கிடைத்திருக்கலாம்.

ஆனால் முன்பின் தெரியாத ஒருவன் உலகின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு தன் ஆர்வத்தினை முன்வைத்து கடிதம் எழுதியதை மதித்து அண்மையில் வெளியாகியிருந்த இரு நூல்களை இலவசமாக அனுப்பியதை என்னவென்று சொல்ல. அதுவும் ஏர் மெயிலில், அப்போதெல்லாம் தரை வழித் தபால் அனுப்பினால் கிடைக்க 4 அல்லது 5 மாதம் ஆகும். இவ்வளவிற்கும் நான் அப்போது ஆராய்ச்சி மாணவன் கூட இல்லை.

அந்த இரண்டு நூல்களையும் சுட்டாமல் இன்று சிலவற்றைப் பேச முடியாது. அவரது முனைவர் பட்ட ஆய்வேட்டினை அடிப்படையாகக் கொண்ட நூல் உலகளாவிய கவனத்தையும், ஒரு பரிசையும் பெற்றுத் தந்தது. அதைப் படிக்காமல் சிலவற்றை புரிந்து கொள்ள முடியாது என்று கருதக்கூடிய அளவிற்கு ஒரு புதிய கண்ணோட்டத்தினை முன் வைத்த நூல் அது. இப்போதும் அவை பல பாடத்திட்டங்களில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. கட்டுரைகள், நூல்களில் சுட்டப்படுகின்றன.

பின் சில முறை நான் அவருக்கு எழுதினேன். மின்னஞ்சல் வசதி வந்த பின் எழுதினேன். அவர் சில காலம் உடல்நிலை குன்றி இருந்ததால் கடிதங்களுக்கு பதில் எழுத இயலவில்லை என்று அவருடைய நண்பர் ஒருவர் கூறினார். அவருடைய ஆய்வு அக்கறைகளும்
வேறு சிலவற்றில் இருந்தன. அவை எனது பிரதான ஆய்வு அக்கறைகள் அல்ல.. பதில் போட்டிருந்தும் எனக்கு கிடைக்காமல் போயிருக்கலாம்.

ஒரு ஆறு/ஏழாண்டுகளாக நிலையற்ற வாழ்க்கை. இதில் சில மின்னஞ்சல் முகவரிகள் பயன்பாட்டில் இல்லை. இந்த 20 ஆண்டு காலகட்டத்தில் எனக்கு வர வேண்டிய வானஞ்சல் கடிதங்கள், மின்னஞல்கள் பல வரவேயில்லை. பல நூல்களும் எனக்கு வந்து சேரவில்லை.
நான் அனுப்பிய பலவும் உரிய முகவர்களுக்கு கிடைக்கவில்லை. அதில் நான் அவருக்கு எழுதியதும், அவர் எனக்கு எழுதியதும் அடக்கம் என்று தோன்றுகிறது.

இப்போது அவரிடமிருந்து மின்னஞ்சல். யாருடைய ஆய்வுகள் எனக்கு ஒரு தெளிவான புரிதலைத் தந்ததோ, யாருடைய எழுத்துக்களை நான் பல முறை படித்து, மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறேனோ அவரிடமிருந்து ஒரு நட்புத் தொனியில் அடுத்த மாதம் ஒரு கருத்தரங்கில் அவர் வாசிக்கவிருக்கும் கட்டுரையை இணைத்து மின்னஞ்சல்.

அவருக்கு தெரிந்திருக்காது இருபதாண்டுகளுக்கு முன் தான் அனுப்பிய நூல்களும், கட்டுரைகளும் ஒருவனை ஒரு குறிப்பிட்ட பொருளில் ஆழமாகப் படிக்க வேண்டும், முடிந்தால் ஆராய்ச்சி செய்தேயாக வேண்டும் என்று தூண்டியதை, அதன் விளைவுகளை. என் ஆய்வுக் கேள்விகள் அந்த இரு நூல்களின் கருப்பொருட்களிலிருந்து கிளைத்தவை. அதில் துவங்கி என் ஆய்வு ஒரு திசையில் சென்று சில சாத்தியக்கூறுகளை சொன்னது. இப்போது அவற்றை இந்தப் பேராசிரியர் சுட்டிக்காட்டி, பாராட்டி எழுதுகிறார். ஒரு வகையில் ஒரு வட்டம் முழுமையடைந்திருக்கிறது. ஒரு தொடர்பு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

இது நான் எதிர்பாரா இன்ப அதிர்ச்சி. கிட்டதட்ட இருபதாண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு நாள் சென்னையில் ஒரு நண்பகலில் என் கைக்கு கிடைத்த தபாலில் இருந்த நூற்களைக் கண்டு ஏற்பட்டது போன்ற வியப்புணர்வே இப்போதும் ஏற்படுகிறது. இனி அவருடன் தொடர்பில் தொடர்ந்து இருக்க முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

(1) படித்த நூற்களை, கருத்துக்களை தமிழில் அறிமுகம் செய்ய வேண்டும், அறிவியல் தொழில்னுட்பத்தின் தாக்கம் குறித்தெல்லாம் எழுத வேண்டும் என்று தீர்மானித்து எழுத துவங்கினேன். சில நண்பர்களையும் அவ்வாறு எழுத வைக்க வேண்டும், இலக்கியம், கலை, மார்க்ஸியம் தாண்டி சமகால உலக சிந்தனைகளை தமிழில் அறிமுகம் செய்ய வேண்டும், என்பதற்காக சில முயற்சிகளில் ஈடுபட்டேன். தமிழ் சிறுபத்திரிகைகள் அதிகம் கண்டு கொள்ளாத அரசியல் பொருளாதாரம், சுற்றுச்சூழல், அறிவியல் தொழில் நுட்பம்-சமூகம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு வலைப்பின்னலை தமிழில் உருவாக்க வேண்டும்.அதில் பங்கு பெறுவோர் தாம் படிப்பவற்றை அறிமுகப்படுத்தி எழுத வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டப்பட்டது. அவை வெற்றி பெறவில்லை. அந்த தோல்விகள் என் ஆர்வத்தினை பாதிக்கவில்லை.

1988 ல் வெளியான மக்கள் அறிவியல் என்ற நூலில் எழுதிய என் கட்டுரை உயிரியல் தொழில் நுட்பத்தின் சமூக தாக்கங்கள் குறித்த ஒரு அறிமுகக் கட்டுரை. பின்னர் நிகழில் தொடர்ந்து எழுதினேன்.

Labels: , , ,

3 மறுமொழிகள்:

Blogger Natty மொழிந்தது...

ரவி ஸ்ரீநிவாஸ், அழகான நடை... ஆனால், புத்தகத்தின் பெயரோ. அல்லது உங்களுடைய ஆய்வு கட்டுரைகளின் சாரமோ புரியும் படி கூடியிருந்தால், நலமாய் இருந்திருக்கும்... அது இல்லாத காரணத்தால், ஒரு மர்ம நாவல் படிப்பது போன்ற விறுவிறுப்பு மட்டும் அழகாய் இருந்தது....

தொழில்நுட்பம், மற்றும் அறிவியல் புரிதலுக்கான பதிவுகள் எதுவாய் இருந்தாலும் வரவேற்பு கிடைக்கும்.. (பின்னூட்டம் தான் கிடைக்காது ;) )

வளம் சிறக்க வாழ்த்துக்கள்.

5:19 PM  
Blogger செந்தழல் ரவி மொழிந்தது...

என்ன புக்னு சொல்லவேயில்லையே ?

3:25 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

'ஆனால், புத்தகத்தின் பெயரோ. அல்லது உங்களுடைய ஆய்வு கட்டுரைகளின் சாரமோ புரியும் படி கூடியிருந்தால், நலமாய் இருந்திருக்கும்... '
'என்ன புக்னு சொல்லவேயில்லையே'

இங்கு அந்த இரு நிகழ்ச்சிகளும்தான்
முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதால் அந்த விபரங்களை தவிர்த்து
விட்டேன்.இதில் துறை சார்ந்த நூற்களை, தகவல்களை
தருவது படிப்பதற்கான சுவராஸ்யத்தினை குறைக்கும்.

7:48 AM  

Post a Comment

<< முகப்பு