பி.டி(Bt) பருத்தி, புத்திசாலிகள் யார் ?

பிடி(Bt) பருத்தி, புத்திசாலிகள் யார் ?

கார்னல் பல்கலைகழக பேராசிரியர் ரொனால்ட் ஹெரிங் கடந்த வாரம் ஹிந்துவில் எழுதிய கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிடும் அவருடைய இன்னொரு கட்டுரை இங்கே.

விவசாயத்தில் உயிரியல் தொழில் நுட்பம், குறிப்பாக இந்தியாவில் பிடி பருத்தி குறித்து ரொனால்ட் ஹெரிங் எழுதியுள்ள கட்டுரைகள் முக்கியமானவை எனக் கருதுகிறேன்.2002ல் நான் பென்சில்வேனியா பல்கலையில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது ஹெரிங்
ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்றுள்ளேன்.பிடி பருத்தி குறித்து ஹெரிங் நேர்மறையான பார்வையை முன்வைக்கிறார். இந்தச் சர்ச்சை எப்படி முன்வைக்கப்படுகிறது என்பதையும் அவர் எழுதியிருக்கிறார். பிடி பருத்திக்கு எதிரான கட்டுரைகளை தமிழில்
படித்தவர்கள் அவர் எழுதியுள்ளதைப் படிக்க வேண்டும். மேலும் இந்தச் சர்ச்சையில் ஒரு தரப்பு கருத்துக்களை மட்டும் படித்தால் புரிதல் கிடைக்காது. Current Anthropologyல் நடைபெற்ற விவாதம் முக்கியமானது. ஹெரிங்கின் தன் கட்டுரையில் பல கட்டுரைகள்/நூற்களை சுட்டுகிறார். ஹெரிங்கின் கருத்தினை ஏற்காதவர்களும் உள்ளனர். உதாரணமாக குஜராத்தில் பிடி காட்டன் குறித்த ஈஷா ஷாவின் கட்டுரை ஹெரிங் காட்டும் நேர்மறையான முடிபை சர்ச்சிக்கிறது. பிடி பருத்தி இந்தியாவில் விவசாயிகளிடம் பிரபலமடைந்துள்ளது. மூன்றாண்டுகளில் அது பயிரடப்படும் நிலத்தின் அளவு அதிகரித்திருக்கிறது. பிடி பருத்தி காரணமாகவே விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்தது என்பதை நான் ஏற்கவில்லை.

சில காரணங்களால் பிடி பருத்தி எதிர்பார்த்த விளைச்சலை சில இடங்களில் தரவில்லை என்பது உண்மை. பிடி பருத்தி மீதான விவசாயிகளின் மோகத்தினை பயன்படுத்திக் கொண்டு போலி பிடி பருத்தி விதைகள், தரக்குறைவான விதைகள் விற்கப்பட்டுள்ளன. ஆனால் நீண்ட காலப் போக்கில் பிடி பருத்தி நிலைத்து நிற்கக் கூடிய, சீரான விளைச்சலைத் தரும் பயிரா என்பது குறித்து கேள்விகள் எழுப்பட்டுள்ளன. இன்று பிடி பருத்தியைப் பொறுத்த வரை மான்சாண்டோவின் ஏகபோகம் இல்லை. நாக்பூரில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ள விதைகளின் அடிப்படையில் பிடி பருத்தியில் புதிய வகைகள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும். இந்த ஆண்டு 84 புதிய, பிடி பருத்து வீரிய ஒட்டுவகைகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது, ஏற்கனவே 137 பிடி பருத்தி வகைகள்
இந்தியாவில் புழக்கத்தில் உள்ளன. எனவே பிடி பருத்தி நிலை பெற்றுவிட்டது என்று கூறலாம்.

ஹெரிங் சுட்டிக்காட்டும் தகவல்கள் முக்கியமானவை. பிடி பருத்தி தோல்வி, வசாயிகளுக்கு அதனால் நன்மை இல்லை என்றால் அதை விவசாயிகள் ஏன் அதிக அளவில் பயிரிடுகிறார்கள், விதைக்கு அதிக விலை தருகிறார்கள்?. பிடி பருத்தி இந்த அளவிற்கு வேகமாக பரவ அது குறித்த எதிர்பார்ப்பு, மற்றும் அதீத நம்பிக்கை மட்டும் காரணமாக இருக்க முடியாது. ஏனென்றால் தொடர்ந்து ஒரு பயிரால் நன்மை இல்லை என்றால் அதன் விதைகளை அதிக விலை கொடுத்து விவசாயிகள் வாங்க மாட்டார்கள். ஹெரிங் சுட்டிக்காட்டுவது போல் பிடி பருத்தியை எதிர்க்கும் இயக்கங்கள் இது விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்று கூறினாலும், அதை தெரிவு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை கூடியுள்ளதால், அந்தப் பிரச்சாரம் எந்த அளவு உண்மையானது என்ற கேள்வி எழுகிறது. விவசாயிகள் சார்பாக யார் பேசுவது என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் சில நாடுகளில் பிடி பருத்தி அரசுகளால் அங்கீகரிக்கப்படாத போதும் விவசாயிகள் அங்கீகாரம் பெறாத பிடி பருத்தி வகைகளை பயிரிடுகிறார்கள். இதற்கு என்ன காரணம்.

ஹெரிங் பல கட்டுரைகளை இந்தச் சர்ச்சை குறித்து எழுதியிருக்கிறார். சுதர்ஷன் ஐயங்கார்,லலிதா, கிளென் ஸ்டோன் உட்பட பலர் எழுதியுள்ளனர். இந்தியாவில் பிடி பருத்தி குறித்து பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இதில் என் நிலைப்பாட்டில் மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளன. 2002ல் பிடி பருத்தி இந்தியாவில் வெற்றி பெறுமா, இது பொருத்தமான தொழில் நுட்பம்தானா என்ற ஐயம் எனக்கு இருந்தது. இப்போது இது வெற்றி பெற்றுவிட்டது என்பதில் ஐயமில்லை. அதே சமயம் இதன் நீண்ட காலத் தாக்கம், நிலைத்து நிற்கும் தன்மை குறித்து கேள்விகள் இருக்கின்றன. மேலும் விவசாயத்தில் உயிரியல் தொழில் நுட்பத்திற்காக தேவை இருக்கிறது என்பதில் ஐயமில்லை. அதே சமயம் biosafety, அறிவுசார் சொத்துரிமைகள் குறித்து பல கேள்விகள் உள்ளன. தொழில் நுட்பத்தை ஒழுங்குபடுத்துதல் குறித்தும் கேள்விகள் உள்ளன.

எது எப்படியாயினும் இதில் பல தரப்பு வாதங்களையும், சான்றுகளை கருத்தில் கொள்வது தேவை என்பதால் நான் இயன்ற அளவு அனைத்து தரப்பு வாதங்களையும், சான்றுகளையும் படித்துப் புரிந்து கொள்ள முயல்கிறேன். வேறொரு தருணத்தில் இந்தச் சர்ச்சை குறித்த வேறு சில கருத்துக்களை விவாதிக்கிறேன்.

Labels: , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு