நளினிக்கு விடுதலை கிடைக்குமா ?

நளினிக்கு விடுதலை கிடைக்குமா ?

நளினி, ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் சிறை ஆலோசனை போர்ட் அவர்களுடைய விடுதலை கோரிக்கையைபரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போர்ட் கூடி அவர்களைது கோரிக்கையை
பரீசிலிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் போர்ட் விடுதலை செய்யலாம் என்று பரிந்துரைத்தாலும் இறுதி முடிவு தமிழக அரசின் கையில் உள்ளது. இவ்வாறு விடுதலை கோரினால் அப்படி விடுவிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. தண்டனைக்
காலத்தில் ஒரு பகுதியை கழித்தவர்களுக்கு இன்னொரு பகுதியை தள்ளுபடி செய்து அரசு விடுவிக்கலாம். ஆனால் தமிழக அரசு இந்த ஆண்டு ஆயுள்தண்டனை பெற்ற கைதிகளை முன்பே விடுவிக்க ஒரு ஆணையை அடிப்படையாகக் கொண்டது. அந்த ஆணை
ஆயுத மற்றும் வெடி மருந்துச் சட்டப்படி தண்டனை அடைந்தவர்கள், மதக் கலவரத்தில் தண்டனை அடைந்தவர்கள், கீழ்நீதிமன்றத்தில் மரண தண்டனைப் பெற்று உயர்நீதிமன்றத்தாலோ, உச்சநீதிமன்றத்தாலோ ஆயுள் தணடனையாக குறைக்கப்பட்டவர்கள் என இந்த மூன்று வகையினருக்கு அண்ணா நூற்றாண்டில் தண்டனை குறைத்து விடுதலை செய்வது பொருந்தாது என்றது. இப்போது போர்ட் விடுதலையை பரிந்துரைத்து அரசு அதை பரிசீலித்தாலும், இந்த ஆணையின்படி அவர்களை விடுதலை செய்ய முடியாது.அப்படி விடுதலை செய்ய வேண்டுமென்றால் அரசு அதற்காக தனியாக ஆணையிடலாம் அல்லது விடுவிக்க முடிவு செய்யலாம். அப்படி விடுவிக்க முடிவு செய்தால் மேற்கூறிய அரசின் ஆணை காரணமாக விடுதலை ஆகாதவர்கள் அரசின் முடிவு பாரபட்சமானது என்று கருதி அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து தங்களையும் விடுவிக்கக் கோரலாம். தூக்குதண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டவர்களையே விடுவிக்கும் போது எங்களை
மட்டும் குறிப்பிட்ட காலம் கழிந்தும் ஏன் விடுவிக்கவில்லை என்று அவர்கள் கேட்கலாம். எனவே அரசு இவர்களையும் விடுவிக்க முடிவு செய்யுமா இல்லை இந்த மூவருக்கு மட்டும் விடுதலை தருமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த ஆண்டு ஜீலை மாதம் உச்சநீதி மன்றம் ஒரு வழக்கில் ( CRIMINAL APPEAL NO.454 OF 2006 Swamy Shraddananda @ Murali Manohar Mishra Vs. State of Karnataka ) தந்த தீர்ப்பு முக்கியமானது. அதில் அரசுகள் கைதிகளை தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுவிப்பதை குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் தூக்குத் தண்டனை தரப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்படும் போது, அவ்வாறு தண்டிக்கப்பட்டோருக்கு தண்டனை காலத்தில் எந்த தள்ளுபடியும் தரக்கூடாது என்று கூறியுள்ளனர். அவர்கள் பாரா 38ல் கூறுவதாவது
"This Court, therefore, must lay down a good and sound legal basis for putting the punishment of imprisonment for life, awarded as substitute for death penalty, beyond any remission and to be carried out as directed by the Court so that it may be followed, in appropriate cases as a uniform policy not only by this Court but also by the High Courts, being the superior Courts in their respective States."

தூக்குதண்டனை வழங்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்கள் ஆயுள் முழுவதும் சிறையில் இருந்தாக வேண்டும், தண்டனை காலக் குறைப்பு என்பது அவர்களுக்கு பொருந்தாது. இதன்படிப் பார்த்தால் அரசு விரும்பினாலும் இந்த மூவரையும் விடுதலை செய்வது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. இதை இன்னொரு பெஞ்ச் அல்லது வேறொரு வழக்கில் உச்சநீதிமன்றம் மாற்றும் வரை இது பொருந்தும்.

ஆனால் குமுதத்தில் எழுதிய ஞாநி இந்த தீர்ப்பினைப் பற்றி குறிப்பிடவேயில்லை. மாறாக ஏதோ கருணாநிதிக்கு கருணை இல்லை, 500 எழுத்தாளர்கள்,கலைஞர்கள் கையெழுத்திட்டு மனுக் கொடுத்தோம், கனிமொழியும் அதில் கையெழுத்திட்டுள்ளார் என்று எழுதியுள்ளார். கலைஞர் விரும்பினாலும் இந்த தீர்ப்பு ஒரு தடையாக இருக்கும் என்பதுதான் உண்மை. இந்த தீர்ப்பு குறித்து நளினியின் விடுதலையைக் கோரியவர்கள் எழுதியிருக்க வேண்டும். இது எப்படி அரசு தண்டனைக் காலத்தினை தள்ளுபடி செய்ய தடையாக உள்ளது என்பதை விளக்கியிருக்க வேண்டும். ஆனால் தியாகுவோ, ஞாநியோ இதைப் பற்றி எழுதாமல் நளினியின் விடுதலைக்கு ஆதரவாக எழுதியுள்ளனர். 500 பேர் கையெழுத்திட்டாலும், நீதிமன்றத்தில் விடுதலைச் செய்யக் கூடாது என்று சு.சாமி வழக்காடிய போது 500 பேரில் ஒருவர் கூட தங்களையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும், நளினி விடுதலைச் செய்யப்பட வேண்டும் என்று வாதிடவில்லையே. அவ்வாறு செய்யாத போது கலைஞரை குறை கூறுவதில் அர்த்தமில்லை. கையெழுத்திட்ட 500 பேரும் நளினியின் விடுதலையை கோரியுள்ளனர். அதே வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவிக்கும் பிறரின் விடுதலை குறித்த அவர்கள் கருத்து என்ன?

உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பினைக் குறித்து பின்னர் எழுதுகிறேன். அது அம்னஸ்டி சார்பாக வெளியிடப்பட்ட, மரணதண்டனை குறித்த அறிக்கையையும் சுட்டிக்காட்டுகிறது என்பதை இங்கு பதிவு செய்கிறேன். இந்த தீர்ப்பு இப்படி ஆயுள்காலம் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளதில் எனக்கு உடன்பாடில்லை.

நளினி உட்பட மூவரை தமிழக அரசு விடுதலை செய்தாலும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படலாம். சு.சாமி அவ்வாறு செய்யக் கூடும். அந்த வழக்கு உயர்நீதி மன்றத்தால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இதில் இறுதியான முடிவு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில்தான் இருக்கிறது என்ற நிலை உருவாகும் சாத்தியக்கூறு உள்ளது.

மேலும் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கு பிற வழக்குகளைப் போன்றது அல்ல. இதில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிப்பது என்பதை சில கட்சிகள் அரசியலாக்கக் கூடும். தமிழக அரசு புலிகளை திருப்திபடுத்த இவ்வாறு செய்கிறது என்ற குற்றச்சாட்டினை அவர்கள் முன்வைக்கக் கூடும். சு.சாமி, சோ போன்ற பலர் அரசை கடுமையாக விமர்சிப்பார்கள். இன்று இந்தியாவில் தீவிரவாதம் ஒரு பெரும்பிரச்சினையாக, சவாலாக உருவெடுத்துள்ள
நிலையில் தமிழக அரசோ அல்லது கலைஞரோ இதில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு எடுத்துவிட முடியாது. இது கலைஞரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக உள்ளது என்பதுதான் உண்மை. எனவே நளினியின் விடுதலையை கோருவோர், அதை ஆதரிப்போர் தங்கள் தரப்பிற்கான ஆதரவை வலுப்படுத்த வேண்டும், பல கட்சித்தலைவர்களையும் குறிப்பாக தமிழகத்தில் வெளியே உள்ள கட்சிகளின் தலைவர்கள்
சந்த்திது அவர்கள் ஆதரவைக் கோர வேண்டும். ஊடகத்துறையினரையும் சந்த்தித்து அவர்கள் ஆதரவைக் கோர வேண்டும். இது போல் பல்வேறு தரப்பினர் ஆதரவு கிடைத்தால் அது தமிழக அரசு ஒரு சாதகமான முடிவு எடுக்க உதவக்கூடும். நளினியின் விடுதலையை மட்டும் கோருவது சரிதானா என்பதையும் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். எப்படியாயினும் இறுதியான முடிவு உச்சநீதிமன்றம் தரக்கூடிய தீர்ப்பில்தான் இருக்கிறது என்றே கருதுகிறேன். எனவே அடுத்த ஆண்டு அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்படும் போதும் இந்த மூவரும் சிறையில் இருந்தால் அதில் வியப்படைய ஏதுமில்லை.

இப்போதுள்ள சூழலில் நளினி உட்பட மூவர் விடுதலையாகும் சாத்தியக்கூறு அதிகமில்லை. அப்படி விடுதலையானால் அதை அதிசயம் என்றே கூறலாம்.

Labels: , , ,

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

http://sivasinnapodi1955.blogspot.com

8:55 AM  

Post a Comment

<< முகப்பு