பெரியார், மக்கள் சட்டம், பதிப்புரிமை

பெரியார், பதிப்புரிமை, மக்கள் சட்டம்

மக்கள் சட்டத்தில் பெரியார்,பதிப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமை குறித்த மூன்று இடுகைகளுக்கு பின்னூட்டங்கள் இட்டேன். இதுவரை அவை வெளியானதாக தெரியவில்லை. மக்கள் சட்டத்தில் எழுதிய வெற்றிச் செல்வன் பார்பனியம், அறிவுசார் சொத்துரிமை என்று மனம் போன போக்கில் எழுதியிருக்கிறார். அதில் அரைப் பொய்கள், பொய்கள், அரை உண்மைகள் அதிகம். அவர் பெரியாரைத்தான் திட்ட வேண்டும்.

அவர்தான் தன் எழுத்துக்களை வெளியிடும் உரிமையை அந்த அமைப்பிடம் அளித்தார். நாட்டுடமையாக்குக அல்லது அனைவரும் பயன்படுத்தலாம், பதிப்புரிமை கோரவில்லை என்று
அவர் அறிவிக்கவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.குடியரசு நூற் தொகுப்புகளை வெளியிட இடைக்காலத் தடை உள்ளது. நீதிமன்றம் என்ன தீர்ப்பு தருகிறது என்பதை அறிந்த பின் எழுதுவதே பொருத்தம் என்பதால் தற்சமயம் எழுதத் தேவையில்லை என கருதுகிறேன். மக்கள் சட்டத்தில் வெளியாகும் பெரும்பான்மையான கருத்துக்களை நான் விமர்சித்திருக்கிறேன். அவர்கள் உண்மைகளை எழுதாமல், அர்த்தமற்ற அச்சத்தினை உருவாக்கும் வகையில் எழுதுகிறார்கள். அடிப்படைகளைக் கூட புரிந்து கொள்ளாமல் எழுதுகிறார்கள்.

ஒருதலைபட்சமாக எழுதும் போது பொய்களை,அரை உண்மைகளை எழுதுகிறார்கள். எனவே அந்தப் பதிவில் எழுதப்படுபவற்றின் நம்பகத்தன்மை என்னைப் பொருத்தவரை சந்தேகத்திற்குரியது.சட்டம் குறித்து எழுதும் போது சட்டத்தில் இல்லாததை இட்டுக்கட்டி எழுதக் கூடாது. அவர்கள் அப்படி இட்டுக்கட்டி எழுதுகிறார்கள். அதற்காக அவர்களுடன் விரிவான விவாதத்தில் ஈடுபட எனக்கு நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை.சிலவற்றை
சுட்டிக்காட்டுவதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

Labels: , ,

லூஸ் டாக்

லூஸ் டாக்

லூஸ் டாக் - Ravi Srinivas on couch

நதியா கால்ஷீட் கிடைக்கல, சாரா பாலின்ட்ட கால்ஷீட் கேட்கலாமா, ஒரு பாட்டு,, இரண்டு பைட்டை அலாஸ்கால்ல எடுத்துறலாம்.

அசினுடன் ஒபாமா கால்கேட் விளம்பரத்துல நடிக்கிறாராமே

நானாவதி கமிஷன் ரிப்போர்ட் நெட்டில கிடைக்குதாமே, அதையும், தெஹல்கா, பிரண்ட்லைனை வைச்சு ஒரு புஸ்தகம் ஒரு வாரத்தில எழுதி வெளிய தள்ளிறலாமா

வாஷிங்டன் மியுச்சல்ல பொண்ணு கல்யாணத்துக்கு பணம் போட்டிருந்தேன், பொண்ணு இன்னொரு பொண்ணை இழுத்துட்டு ஒடிப் போய்ட்டா, இப்ப பணமும் கிடைக்குமான்னு தெரியல

அனில் அம்பானி அமெரிக்கால பாங்க்கை டேக் ஒவர் பண்ணறாராமே, அப்ப உங்க சன் இன் லாவுக்கு திரும்ப வேலை கிடைக்குமா

நேத்துதானய்யா ஒரு அறிக்கையில கையெழுத்துப் போட்டேன், இன்னிக்கு காலையில இதுலயா, வரவர எங்கலெல்லாம் கையெழுத்துப் போட்டேன்கிறது மறந்திருது

டெல்லி என்கவுண்டரை வைச்சு அர்ஜூன் படம் எடுக்கிறாராம், அதுல பிரசாந்த் பூஷன், அ.மார்ஸ் கெளரவ வேடத்தில நடிக்கிறாராங்களாம், நானும் ரெண்டு சீன்ல தலை காட்டரேன்.

குளோபல் வார்மிங் பத்தி ஒர்க்‌ஷாப்பா, ஆளை விடுங்கப்பா, நான் இப்போ நானோடெக் ரெகுலேஷன்னல்ல பிசி, அடுத்த ஆறு மாசத்தில் 8 கான்பிரன்ஸ், 10 ஒர்க்‌ஷாப்பிற்கு கமிட் பண்ணியிருக்கேன், பழைய பேப்பரை ரிசைக்கிள் பண்ணி, கொஞ்சம் புதுசா எழுதித்தரேன், ப்ரொஸிடிங்க்ஸில் போட்டிருங்க, உங்க வி.சி சந்தோஷப்படுவார்

பட்நாகர் பிரைஸா, ஐ டோன்ட் கேர், என்னோட டார்கெட் நோபல்தான், நத்திங் லெஸ்தான் நோபல்

த்ரிஷா தமிழ் பேசப்போறாங்களா, நான் பிரெஞ்ச் பேசற மாதிரி இருக்கப் போவுது

தீஸின்னா சும்மாவா, முத டிராப்ட் 600 பக்கம், 20 வைரைஸ், 30 டிரோஜனோட லாப்டாப்பில் இருந்து கைடுக்கு ஈமெயில்ல அனுப்பியாச்சு

வேட்கையின் தாகமா, ஏதோ 11 மணி மலையாள ஆர்ட் பட டைட்டில் மாதிரி இருக்கே

எந்திரன்ல்ல பாப்லா நெருடா பொயட்ரியை ரஜினி படிச்சு ஐஸ்வர்யா ராய்ட்ட விளக்குறாராம், நம்ம சுகுமாரன் ட்ரான்ஸ்லெட் பண்ணது, அடுத்து ஷாட்டல மச்சு பிச்சுல டூயட் சீன் வருதாம், பின்னாடி நெருடா முகமூடி போட்டுட்டு ஆயிரம் பேர் ஆடறாங்களாம்,
சுஜாதா ஐடியாவாம், சுஜாதான்னா சும்மாவா, கிளாஸ், மாஸ் ரெண்டையும் லிங்க் பண்ணறதில்ல அந்த ஆளை அடிச்சுக்க ஆளே கிடையாதய்யா

ஏழைக்கும் டிப்ரஷன் வரும் தாஸ் காப்பிடல் மூணாவது வால்யும்ல் மார்க்ஸ் பால்ஸாக் நாவலை கோட் பண்ணி இதை அனலிஸ் பண்ணியிருக்கார், அதை இன்னிக்கு படிச்சாலும் பிரெஷ்ஷா இருக்கு டாக்டர், நானும் அத மாதிரி எஜுகேடட் ஏழைதான்னு சொன்ன நம்ப மாட்டங்கராங்க சார்.

என்னது இராம.கியும், ரவிசங்கரரும் லூஸ் டாக்க்கு தமிழ்ல புதுசா வார்த்தை கண்டுபிடிக்கிறாங்களா, டாக்டர் என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க

Labels: , ,

கேள்விகள்

கேள்விகள்

1 தேன்கூடு திரட்டிக்கு என்ன ஆனது?

2 கில்லி இருக்கிறதா இல்லையா? இல்லை சிறு இடைவேளைக்குப் பின் வேறு வடிவத்தில் வருமா?

3 தமிழ் ஒசை நாளிதழ் இணையத்தில் கிடைக்கிறதா?

4 தினமலர் மீதான வழக்கில் ஆசிரியர், வெளியீட்டாளரை கைது செய்ய உத்தரவிடப்பட்டதா?

5 நான் டிவிட்டடரில் சில வாரங்களாக எதுவும் இடுவதில்லை, இருந்தும் என்னை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை கூடுகிறதே, எப்படி?. இவன் இனி டிவிட்டரில் எதுவும் இடமாட்டான் என்ற நல்ல நம்பிக்கையில் பின் தொடர்கிறார்களா? :)

6 டிவிடி வடிவில் கிடைக்கும் தமிழ் சிறுபத்திரிகை எது? அது இணையத்தில் உள்ளதா?

7 தினமலருக்கு எதிராக மனித நீதிப் பாசறை சார்பாக வாதிடும் வழக்கறிஞர் சங்கர சுப்பு நக்சலைட்களுக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞரா? மனித உரிமை அமைப்புகளின் உண்மை அறியும் குழுக்களில் இடம் பெற்ற வழக்கறிஞரா?

Labels: , , , ,

நளினிக்கு விடுதலை கிடைக்குமா ?

நளினிக்கு விடுதலை கிடைக்குமா ?

நளினி, ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் சிறை ஆலோசனை போர்ட் அவர்களுடைய விடுதலை கோரிக்கையைபரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போர்ட் கூடி அவர்களைது கோரிக்கையை
பரீசிலிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் போர்ட் விடுதலை செய்யலாம் என்று பரிந்துரைத்தாலும் இறுதி முடிவு தமிழக அரசின் கையில் உள்ளது. இவ்வாறு விடுதலை கோரினால் அப்படி விடுவிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. தண்டனைக்
காலத்தில் ஒரு பகுதியை கழித்தவர்களுக்கு இன்னொரு பகுதியை தள்ளுபடி செய்து அரசு விடுவிக்கலாம். ஆனால் தமிழக அரசு இந்த ஆண்டு ஆயுள்தண்டனை பெற்ற கைதிகளை முன்பே விடுவிக்க ஒரு ஆணையை அடிப்படையாகக் கொண்டது. அந்த ஆணை
ஆயுத மற்றும் வெடி மருந்துச் சட்டப்படி தண்டனை அடைந்தவர்கள், மதக் கலவரத்தில் தண்டனை அடைந்தவர்கள், கீழ்நீதிமன்றத்தில் மரண தண்டனைப் பெற்று உயர்நீதிமன்றத்தாலோ, உச்சநீதிமன்றத்தாலோ ஆயுள் தணடனையாக குறைக்கப்பட்டவர்கள் என இந்த மூன்று வகையினருக்கு அண்ணா நூற்றாண்டில் தண்டனை குறைத்து விடுதலை செய்வது பொருந்தாது என்றது. இப்போது போர்ட் விடுதலையை பரிந்துரைத்து அரசு அதை பரிசீலித்தாலும், இந்த ஆணையின்படி அவர்களை விடுதலை செய்ய முடியாது.அப்படி விடுதலை செய்ய வேண்டுமென்றால் அரசு அதற்காக தனியாக ஆணையிடலாம் அல்லது விடுவிக்க முடிவு செய்யலாம். அப்படி விடுவிக்க முடிவு செய்தால் மேற்கூறிய அரசின் ஆணை காரணமாக விடுதலை ஆகாதவர்கள் அரசின் முடிவு பாரபட்சமானது என்று கருதி அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து தங்களையும் விடுவிக்கக் கோரலாம். தூக்குதண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டவர்களையே விடுவிக்கும் போது எங்களை
மட்டும் குறிப்பிட்ட காலம் கழிந்தும் ஏன் விடுவிக்கவில்லை என்று அவர்கள் கேட்கலாம். எனவே அரசு இவர்களையும் விடுவிக்க முடிவு செய்யுமா இல்லை இந்த மூவருக்கு மட்டும் விடுதலை தருமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த ஆண்டு ஜீலை மாதம் உச்சநீதி மன்றம் ஒரு வழக்கில் ( CRIMINAL APPEAL NO.454 OF 2006 Swamy Shraddananda @ Murali Manohar Mishra Vs. State of Karnataka ) தந்த தீர்ப்பு முக்கியமானது. அதில் அரசுகள் கைதிகளை தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுவிப்பதை குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் தூக்குத் தண்டனை தரப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்படும் போது, அவ்வாறு தண்டிக்கப்பட்டோருக்கு தண்டனை காலத்தில் எந்த தள்ளுபடியும் தரக்கூடாது என்று கூறியுள்ளனர். அவர்கள் பாரா 38ல் கூறுவதாவது
"This Court, therefore, must lay down a good and sound legal basis for putting the punishment of imprisonment for life, awarded as substitute for death penalty, beyond any remission and to be carried out as directed by the Court so that it may be followed, in appropriate cases as a uniform policy not only by this Court but also by the High Courts, being the superior Courts in their respective States."

தூக்குதண்டனை வழங்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்கள் ஆயுள் முழுவதும் சிறையில் இருந்தாக வேண்டும், தண்டனை காலக் குறைப்பு என்பது அவர்களுக்கு பொருந்தாது. இதன்படிப் பார்த்தால் அரசு விரும்பினாலும் இந்த மூவரையும் விடுதலை செய்வது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. இதை இன்னொரு பெஞ்ச் அல்லது வேறொரு வழக்கில் உச்சநீதிமன்றம் மாற்றும் வரை இது பொருந்தும்.

ஆனால் குமுதத்தில் எழுதிய ஞாநி இந்த தீர்ப்பினைப் பற்றி குறிப்பிடவேயில்லை. மாறாக ஏதோ கருணாநிதிக்கு கருணை இல்லை, 500 எழுத்தாளர்கள்,கலைஞர்கள் கையெழுத்திட்டு மனுக் கொடுத்தோம், கனிமொழியும் அதில் கையெழுத்திட்டுள்ளார் என்று எழுதியுள்ளார். கலைஞர் விரும்பினாலும் இந்த தீர்ப்பு ஒரு தடையாக இருக்கும் என்பதுதான் உண்மை. இந்த தீர்ப்பு குறித்து நளினியின் விடுதலையைக் கோரியவர்கள் எழுதியிருக்க வேண்டும். இது எப்படி அரசு தண்டனைக் காலத்தினை தள்ளுபடி செய்ய தடையாக உள்ளது என்பதை விளக்கியிருக்க வேண்டும். ஆனால் தியாகுவோ, ஞாநியோ இதைப் பற்றி எழுதாமல் நளினியின் விடுதலைக்கு ஆதரவாக எழுதியுள்ளனர். 500 பேர் கையெழுத்திட்டாலும், நீதிமன்றத்தில் விடுதலைச் செய்யக் கூடாது என்று சு.சாமி வழக்காடிய போது 500 பேரில் ஒருவர் கூட தங்களையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும், நளினி விடுதலைச் செய்யப்பட வேண்டும் என்று வாதிடவில்லையே. அவ்வாறு செய்யாத போது கலைஞரை குறை கூறுவதில் அர்த்தமில்லை. கையெழுத்திட்ட 500 பேரும் நளினியின் விடுதலையை கோரியுள்ளனர். அதே வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவிக்கும் பிறரின் விடுதலை குறித்த அவர்கள் கருத்து என்ன?

உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பினைக் குறித்து பின்னர் எழுதுகிறேன். அது அம்னஸ்டி சார்பாக வெளியிடப்பட்ட, மரணதண்டனை குறித்த அறிக்கையையும் சுட்டிக்காட்டுகிறது என்பதை இங்கு பதிவு செய்கிறேன். இந்த தீர்ப்பு இப்படி ஆயுள்காலம் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளதில் எனக்கு உடன்பாடில்லை.

நளினி உட்பட மூவரை தமிழக அரசு விடுதலை செய்தாலும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படலாம். சு.சாமி அவ்வாறு செய்யக் கூடும். அந்த வழக்கு உயர்நீதி மன்றத்தால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இதில் இறுதியான முடிவு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில்தான் இருக்கிறது என்ற நிலை உருவாகும் சாத்தியக்கூறு உள்ளது.

மேலும் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கு பிற வழக்குகளைப் போன்றது அல்ல. இதில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிப்பது என்பதை சில கட்சிகள் அரசியலாக்கக் கூடும். தமிழக அரசு புலிகளை திருப்திபடுத்த இவ்வாறு செய்கிறது என்ற குற்றச்சாட்டினை அவர்கள் முன்வைக்கக் கூடும். சு.சாமி, சோ போன்ற பலர் அரசை கடுமையாக விமர்சிப்பார்கள். இன்று இந்தியாவில் தீவிரவாதம் ஒரு பெரும்பிரச்சினையாக, சவாலாக உருவெடுத்துள்ள
நிலையில் தமிழக அரசோ அல்லது கலைஞரோ இதில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு எடுத்துவிட முடியாது. இது கலைஞரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக உள்ளது என்பதுதான் உண்மை. எனவே நளினியின் விடுதலையை கோருவோர், அதை ஆதரிப்போர் தங்கள் தரப்பிற்கான ஆதரவை வலுப்படுத்த வேண்டும், பல கட்சித்தலைவர்களையும் குறிப்பாக தமிழகத்தில் வெளியே உள்ள கட்சிகளின் தலைவர்கள்
சந்த்திது அவர்கள் ஆதரவைக் கோர வேண்டும். ஊடகத்துறையினரையும் சந்த்தித்து அவர்கள் ஆதரவைக் கோர வேண்டும். இது போல் பல்வேறு தரப்பினர் ஆதரவு கிடைத்தால் அது தமிழக அரசு ஒரு சாதகமான முடிவு எடுக்க உதவக்கூடும். நளினியின் விடுதலையை மட்டும் கோருவது சரிதானா என்பதையும் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். எப்படியாயினும் இறுதியான முடிவு உச்சநீதிமன்றம் தரக்கூடிய தீர்ப்பில்தான் இருக்கிறது என்றே கருதுகிறேன். எனவே அடுத்த ஆண்டு அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்படும் போதும் இந்த மூவரும் சிறையில் இருந்தால் அதில் வியப்படைய ஏதுமில்லை.

இப்போதுள்ள சூழலில் நளினி உட்பட மூவர் விடுதலையாகும் சாத்தியக்கூறு அதிகமில்லை. அப்படி விடுதலையானால் அதை அதிசயம் என்றே கூறலாம்.

Labels: , , ,

பொலிடிகலி கரெக்ட் போட்டோ :)


பீஜிங்கில் மாவோ படத்திற்கு முன் - மாவோ அருங்காட்சியகம் முன்.

பார்பவர் நலன் கருதில் புகைப்படத்தில் ஒரு சிறு மாறுதல் செய்யப்பட்டுள்ளது,
மற்றப்படி எனக்கு போட்டோஷாப் தெரியாது என்பதால் வேறு எதுவும் செய்யவில்லை :).தெரிந்திருந்தால் பார்க்க கூடிய மாதிரியான,வேறொரு முகத்தை அங்கே வைத்திருக்கலாம் :).

Labels: , ,

ஒரு விவாதம் ஒரு பின்னூட்டம் ஒரு விளக்கம்

ஒரு விவாதம் ஒரு பின்னூட்டம் ஒரு விளக்கம்

எச்சரிக்கை : இந்த இடுகையைப் படித்தால் தலைவலி, தலை சுற்றல்,தமிழ் மறந்து போதல்,குழப்பம், இனம் புரியாத உணர்வுகள்,கடவுளாகும் ஆசை உட்பட வேறு பல உபாதைகள்/பிரதான விளைவுகள் ஏற்படலாம் :). அவற்றிற்கு நானோ, பிளாக்கரோ பொறுப்பல்ல :).

நாகார்ஜுனனின் வலைப்பதிவில் இட்ட பின்னூட்டம் கீழே சாய்வெழுத்தில். இப்பதிவில் தகவலுக்காகவும்,ஆவணப்படுத்தவும் அப்பின்னூட்டம் இடப்படுகிறது.

அதனடியில் ஒரு 'விளக்கவுரை' உள்ளது. இவை அத்தனையையும் படித்தும் உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையெனில், கடவுளுக்கு [அசல் கடவுளுக்கு, கடவுளாக விழையும் அறிவியலாளருக்கல்ல, :)] நன்றி கூறுங்கள் :).

தொடர்புடைய சுட்டிகள்

http://nagarjunan.blogspot.com/2008/09/blog-post_10.html

http://www.satiyakadatasi.com/2008/09/07/எரியும்-பிரபஞ்சம்-தலையில/

http://andaiayal.blogspot.com/2008/08/blog-post.html

பின்னூட்டம்

இங்கு hybrid என்பதை எந்த அர்த்ததிலும் எதற்கும் சுட்டக்கூடிய ஒரு சொல்லாக இருக்கிறது.எல்லாமும் எல்லாவற்றுடன் தொடர்புடையது என்பதை வேறு வார்த்தைகளில் jargon ஆக பயன்படுத்துவதில் புதுமை இல்லை.எப்போது மானுட/மானுட அற்ற என்று பிரிக்க முடியாது என்கிறீர்களோ அப்போதே வேறு பல கேள்விகள் எழுகின்றன. ராஜன் குறையோ அல்லது நாகார்ஜுனனோ புருனோ லத்தூரின் கருத்துக்களை/Actor-Network Theory ஐ பயன்படுத்தி இதை அணுகி விரிவாக எழுதவில்லை.மாறாக அழிவு,அறம், உயிர்,பொருள் என்ற வார்த்தைகளைக் கொண்டு விளையாடுகிறார்கள். Social Construction of Science என்பது இருபுறமும் வெட்டும் கத்தி.அறம்,சுற்றுச்சூழல் போன்றவற்றில் அதை வைத்து பேசும் போது அதன்போதாமைகளையும் குறிப்பிட்டாக வேண்டும். அறிவிற்கு, அறத்திற்கும் உள்ள தொடர்பு/தொடர்பின்மையை பலவிதமாக அணுகலாம். அறிதல் என்பதற்குள் உள்ளார்ந்த அறத்தைக் கொண்டுவருவதில் பிரச்சினைகள் உள்ளன.மேலும் அறம் (ethics) என்று வரும் போது எத்தனையோ கோணங்கள், எத்தனையோ தத்துவ அடிப்படைகளில் அணுக முடியும்.இதில் எதை ஏற்பது, எப்படி ஏற்பது என்பதும் விவாதிக்க வேண்டிய ஒன்று. மனிதர்/மானுடம் எதற்காக இதையெல்லாம் அறிய வேண்டும் என்று கூட கேட்கலாம். அறிவியல் பரிசோதனைகளினால் ஆபத்து என்றால் அதற்கான சாத்தியக் கூற்றை எப்படி தீர்மானிக்கிறார்கள் என்பதையும் பேசியாக வேண்டும். வெறும் சாத்திய கூறு ஒன்றினை வைத்தே பரிசோதனை தேவையில்லை
என்றா முடிவு செய்ய முடியும். மனிதர் அற்றவை சார்பாக யார் முடிவு செய்வது, யார் பேசுவது,வாதாடுவது என்பதெல்லாம் அரத பழைய கேள்விகள்.1970 களில் துவக்கத்தில் Do Trees Have Standing என்ற கட்டுரையில் பேசப்பட்டு விவாதிக்கப்பட விஷயம் இது.Environmetal Law வில் பரிச்சயம் உள்ள யாருக்கும் நீங்கள் எழுப்பும் சில கேள்விகளை எளிதில் அணுக முடியும்.precautionary principle உட்பட பல கோட்பாடுகள் உள்ளன.
Whiteside சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன் வைத்து லத்தூரின் கருத்துக்களின் போதாமையை விரிவாக அலசியுள்ளார். அவர் precautionary principleஐ முன்வைத்து வாதிடுகிறார். உயிரியல் தொழில் நுட்பத்தில் துவக்கத்தில் asimolar conference ல் எடுக்கப்பட்ட முடிவுகள் முக்கியமானவை. அறிவியலாளர் மத்தியில், அறிவியல் தொழில் நுட்பம் குறித்த கொள்கைகளை வகுப்போர் மத்தியில் அறிவியலை நெறிப்படுத்துவது குறித்த விவாதம் பல தளங்களில் நடக்கிறது.EU இதற்கென பெரிதாக மெனக்கிடுகிறது. மேலும் அறிவியலாளர் கேட்டவுடன் யாரும் இந்தா இத்தனை மில்லியன்/ பில்லியன் டாலர் என்று கொடுப்பதில்லை. எனவே அறிவியல் என்பது அறிவியலாளர்களால் மட்டும் முடிவு செய்யக் கூடிய ஒன்றல்ல.

அப்படிவரும் போது அறிவியல் குறித்து முடிவெடுப்போர் எப்படி, எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார்கள்.அங்கு எத்தகைய விழுமியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதையும் ஆராய வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால் science policy குறித்தும் பேசியாக வேண்டும்.அதைப் பேசும் போது குடியாட்சி,அறிவியலுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விவாதிக்க வேண்டும். இதில் லத்தூரின் hybrid என்பது எந்த அளவு பொருத்தமானது ?

ராஜன் குறையின் கட்டுரை எழுப்பும் கேள்விகளை வேறொருவர் environmental ethics, science policy, environmental law போன்ற துறைகளின் சொல்லாடல்கள் கொண்டு எதிர் கொள்ள முடியும். அதே போல் anthropology of S&T என்பதன் அடிப்படையிலும் அணுக முடியும்.உதாரணமாகச் சொல்வதென்றால் இந்தப் பரிசோதனையை environmental law சார்ந்த ஒரு பிரச்சினையாக என்னால் அணுக முடியும்.அதில் environmetal
எதிக்ஸ் என்பதையும் பேச முடியும். ஆனால் தமிழில் அதற்கான முதற்கட்ட சொல்களமே இல்லாத போது நான் எழுதுவது தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு அதிகம்.ஜல்லியடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. ஒரு சிறுகுறிப்பில் திண்ணையில் சிலவற்றை தொட்டுச் சென்றிருக்கிறேன்.
(http://www.thinnai.com/?module=displaystory&story_id=20305105&format=html) இதில் ANT குறித்து 2003ல் குறிப்பிட்டுள்ளேன்.ஜான் லாவை தமிழில் தருவது மிகவும் கடினம்.இறுதியாக இந்த விவாதத்தில் பங்கேற்பதில் எனக்கு அதிக ஆர்வமில்லை.காரணம் ராஜன் குறையும்,னாகர்சுனனும் ‘சரியான' கேள்விகளை எழுப்பவில்லை. இன்னொரு ஒரு காரணம் லத்தூரின் எழுத்துக்களுடன் (அனைத்துடனும் அல்ல), ஒரளவிற்கேனும் science studies குறித்த அறிவும் உண்டென்றாலும் லத்தூரின் கருத்துக்கள் என்னை கவரவில்லை. மேலும் social construction of science என்பதன் பலவீனங்கள், போதாமைகளை நான் புரிந்து கொண்ட பிறகு லத்தூரை உயர்த்தி பிடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஒருவிதத்தில் social construction of technology எனக்கு ஏற்கக்கூடியதாக இருக்கிறது. அறிவியலாளரும், இன்ன பிறரும் லத்தூரின் எழுத்துக்களை எதிர் கொண்டுள்ளனர்.லத்தூர் முன்வைத்த கருத்துக்கள் குறித்து பல விவாதங்கள் நடந்துள்ளன. ஒரு சுயவிளக்கமாக லத்தூர் 2004ல் critical inquiryல் எழுதியதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.


இந்த விவாதத்தில் நாகார்சுனன் பதிவில் ஈடுபடுவதில் எனக்கு அதிக ஆர்வமில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு நேரமின்னை ஒரு காரணம். இன்னொன்று விவாதிக்க தேவையான நூல்களை,கட்டுரைகளை படித்து/மீண்டும் படித்து எழுத முடியாத நிலை. வேறொரு காரணம் இப்பரிசோதனை குறித்த/இது எழுப்பும் கேள்விகளை நான் வேறு துறைகள் மூலமும் அணுக முயல்வேன்.நாகர்சுனன் லத்தூரை முன்வைத்தே
அதை விவாதிக்கும் போது இன்னொரு துறை சார்ந்த விவாதத்தினை அவர் பதிவில் நான் முன்வைக்க விரும்பவில்லை.வாசகர்கள் புருனோ லத்தூர் தளத்தில் உள்ள கட்டுரைகளை படிக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன், குறிப்பாக Actor-Network-Theory பற்றி அவர் எழுதியுள்ள ஒரு கற்பனை உரையாடல். அதே போல் critical inquiryல் 2004 புருனோ லத்தூர் எழுதிய கட்டுரை இணையத்தில் PDF வடிவில் கிடைக்கிறது.

https://campus.fsu.edu/bbcswebdav/users/jastallins/public_htm/courses/research/To%20post/critique.pdf

ஜான் லா (John Law)வின் கட்டுரைகளும் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றின் மூலமும் Actor-Network-Theory குறித்து அறியலாம்.

இந்தப் பரிசோதனை குறித்த பல விவாதங்களை இணையம் மூலம் அறிய
முடிகிறது.பரிசோதனை நடக்கும் CERNல் மானுடவியலாளர்கள் சிலர் ஆய்வு செய்து கொண்டிருக்கலாம். அவர்கள் Actor-Network-Theory ஐ பயன்படுத்தி ஏதாவது எழுதியிருக்கலாம். இது போன்றவற்றில் கள ஆய்வு செய்வோருக்கு Actor-Network-Theory மிகவும் பயன்படும்.எங்கோ உட்கார்ந்து கொண்டு Actor-Network-Theory மூலம் இதை
விளக்க/புரிய முற்படும் போது சில பிரச்சினைகள் எழுகின்றன. அதுவும் தமிழில் எழுதும் போது கூடுதலாக சில பிரச்சினைகள் உருவாகின்றன.

நான் நாகார்ஜுனனுடம் வேறுபடும் புள்ளிகள் பல. உதாரணமாக அவர் எழுதுகிறார்

‘First, it is necessary for science of our era to become humble, dissociate itself from arrogance so that it can get out of its ethical amnesia'

அப்படி ஒரு ethical amnesia இல்லை என்றுதான் நான் கருதுகிறேன்.மாறாக இன்று அறிவியல்,தொழில்நுட்பம்-அறம் குறித்த அக்கறை நிச்சயமாக இருக்கிறது. அது ஒரு அகடெமிக் சிறு தொழிலாக மாறியுள்ளது :). இதை விளக்க ஒரு கட்டுரைதான் எழுத வேண்டும் :). இந்த humility என்பது சமூக அனைத்து ஆராய்ச்சித் துறைகளுக்கும் தேவை. அறிவியல் குறித்து ஆராயும் சமூகவியலாளர்களுக்கும், மானுடவியலாளர்களுக்கும் தேவை என்பது என் கருத்து. பொருளாதாரம் போன்ற துறைகளில் நிலவும் சிந்தனைகள் அறிவியலை விட அதிக தாக்கத்தினை உருவாக்குபவை. உலக வங்கி, IMF போன்றவை நாடுகளை பின்பற்றக் கோரும் கொள்கைகள், எடுக்க வலியுறுத்தும் சமூக-பொருளாதார நிலைப்பாடுகள் பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைபவை. அதில் அறத்திற்கான தேவை இல்லையா, இல்லை மானுடவியல் ஆய்வுகளில் அறத்திற்கான தேவை இல்லையா.

நாகார்ஜுனன் எழுதுகிறார்
‘அறிவுக்கும் (knowledge) ஞானத்துக்கும் (wisdom) இடையிலான வித்தியாசம் இது. இங்கே ஞானம் என்பதைப் புதிய ஒன்றாகக் குறிப்பிடுகிறேன். அறிவு அகந்தையை வரவழைத்திருக்கிறது என்பதற்குத் தெளிவான எடுத்துக்காட்டு அணுபௌதிகம், அதன் வழிவந்த துகள்பௌதிகம். தன்னூடாக வந்திருக்கும் ஐயங்களை மீறி அந்த அகந்தை நிலைத்திருக்கிறது. தான் அடைய வேண்டிய ஞானத்தை இனித்தான் அது தேடவேண்டும், பழைய ஞானிகள் கூறுவதையெல்லாம் தாண்டி.'

என்னைப் பொருத்தவரை இது ஒரு ஜல்லியடி. இதில் holism, reductionism என்பதையும் சேர்த்தால் நன்றாக ஜல்லியடிக்கலாம். அகந்தை அழிந்த அறிவு ஞானமா, ஞானத்தில் அகந்தை இல்லை என்பதை எப்படி அறிவது என்றெல்லாம் கேட்கும் முன் அகந்தை என்றால் என்ன, அதனை எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறீர்கள், அறிவு அகந்தையை வரவழைத்திருக்கிறது என்றால் அகந்தையை வரவழைக்காத அறிவு ஒன்று உண்டா, உதாரணம் தர முடியுமா என்றெல்லாம் கேட்க வேண்டும். உயிரியல் பரிணாமக் கோட்பாடு அகந்தையை வரவழைத்திருக்கிறது என்றும் வாதிட முடியும். இன்று, நேற்றல்ல, பல ஆண்டுகளாக அணுபெளதிகம், அறப்பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடந்துள்ளன. சைபர்னடிக்ஸ் என்ற துறையினை உருவாக்கிய முன்னோடி அறிவியலாளாரான நார்பர்ட் வைனர் அப்போதே அதில் உள்ள அறக் கேள்விகளைப் பற்றி எழுதியிருக்கிறார். செயற்கை அறிவாற்றல், கணினியை பயன்படுத்துவதில் எழும் அறகேள்விகளை பலர் எழுப்பியுள்ளனர். Computer Power and Human Reason என்ற நூலை எழுதிய ஜோஸப் வைசன்பாம் கணினி அறிவியலாளர் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஏன் இந்தப் பரிசோதனை குறித்த விவாதங்களிலும் அறப்பிரச்சினைகள் பேசப்படுகின்றன. இன்று பல பரிசோதனைகள்/ஆய்வுகளை செய்வதற்கு அனுமதி பெற வேண்டுமானால் அதை ஒரு ethics குழு ஆராய்ந்து, ஒப்புதல் தர வேண்டும் என்ற விதிகள் உள்ளன. வெங்கட் இதை சரியாகவே சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜெயமோகன் எழுதிய ஒன்றையும் இங்கு சுட்டுவது அவசியமாகிறது.

'எனக்கு மாசானபு ·புகோகா அளித்த தரிசனங்களில் முக்கியமானது இயற்கைவேளாண்மை சார்ந்தது அல்ல. அவர் தன் நூலில் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை ஒரு வகை அரைகுறை ஐரோப்பியநோக்கு என்று சொல்லி சாதாரணமாக நிராகரித்துச் செல்கிறார். முழுமையின் ஒருமையை மையத்தரிசனமாகக் கொண்ட ஜென் மரபு அப்படித்தான் அதைக் காண முடியும். ஆனால் அந்த வயதில் அந்த நோக்கு என்னை அதிர்ச்சியடையச் செய்தது. மீள மீள சிந்திக்கச் செய்தது.

மேலைஅறிவியல் என்பது புறவயமான, நிரூபிக்கப்பட்ட , கடைசி உண்மைகளை முன்வைப்பது என்று நாம் பள்ளிக்கல்விமூலம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். உண்மையில் அவர்களின் நிரூபணவாத அறிவியல்கூட அவற்றுக்குப் பின்னால் உள்ள ஊகங்களின் நிரூபணத்தையே நிகழ்த்துகிறது. அந்த ஊகங்களோ அவர்களின் பிரபஞ்ச நோக்கின் கூறுகள் மட்டுமே. அறிவியலுக்குப் பின்னால் அந்தப் பண்பாடு பிரபஞ்சத்தை எப்படி நோக்குகிறது என்ற அடிபப்டைக் கேள்விக்கு இடமுண்டு என்று நான் உணர்ந்தேன்.

ஆகவே மேலைஅறிவியல் முன்வைக்கும் உண்மைகளை முற்றிறுதியான உண்மைகளாகக் கொள்ள வேண்டியதில்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அவை ஒருவகை பிரபஞ்ச நோக்கின் விளைவுகள். வேறுவகையான பிரபஞ்ச நோக்குகளுக்கு இந்த புவியில் இடமுண்டு. அவை மேலைநாட்டு பிரபஞ்சநோக்குக்களை முழுமையாக மறுத்தே இயங்கமுடியும். தங்களுக்குரிய அறிவியலை உருவாக்கவும் முடியும்.'

jeyamohan.in/?p=619


ஜெயமோகன் 'உண்மையில் அவர்களின் நிரூபணவாத அறிவியல்கூட அவற்றுக்குப் பின்னால் உள்ள ஊகங்களின் நிரூபணத்தையே நிகழ்த்துகிறது. அந்த ஊகங்களோ அவர்களின் பிரபஞ்ச நோக்கின் கூறுகள் மட்டுமே. ' என்று எழுதுகிறார்.

இதற்கான விளக்கவுரையை அவர் எழுதினால் அவர் என்னதான் சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். ஜெயமோகன் அறிவியலின் தத்துவம் குறித்த பெயர் உதிப்பின் அபத்தத்தினை நான் திண்ணையில் கிட்டதட்ட ஐந்தாண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறேன்.

இந்த சர்ச்சையை குறித்து ஆங்கிலத்தில் படிக்கும் போது என் நினைவிற்கு ஜெர்மானிய சமூகவியலாளர் ஒருவர் பெயர் நினைவிற்கு வந்தது, Environmental Sociologyல் அவரது கருத்துக்கள் பெரியளவில் விவாதிக்கப்படுகின்றன. தமிழில் அவரின் கருத்துக்கள் அறிமுகம்
ஆனதாகத் தெரியவில்லை. உருப்படியாக எழுத வேண்டுமானால் அவரின் நூற்களை வாசித்து, விவாதங்களில் கூறப்பட்ட கருத்துக்களை முன் வைத்து இந்தப் பரிசோதனைகளை அவர் முன் வைத்த ஒரு கருத்துடன் பொருத்திப் பார்த்து எழுத வேண்டும். அது தேவையானதாக, சுவாரசியமாக இருக்கும். இப்போது என்னால் அதை செய்ய முடியாது. நான் எழுதவிட்டால் என்ன, நிச்சயம் யாராவது எழுதியிருப்பார்கள் அல்லது எழுதுவார்கள். அது/அவை என் பார்வைக்கு வந்தால் அதை சுட்டுகிறேன்.

Labels: , , , ,

அவசரமாக - சிறு குறிப்புகள்

அவசரமாக - சிறு குறிப்புகள்

1) பதிப்புரிமை குறித்து தீராநதியில் அ.மார்க்ஸ் எழுதியிருக்கிறார்.பெரியார் நூல்கள், நாட்டுடமை பற்றி பா.செயப்பிரகாசம் காலச்சுவட்டில் எழுதியிருப்பதை இன்னும் படிக்கவில்லை (காலச்சுவடு முழு இதழும் இணையத்தில் ஏற்றப்பட்டபின்
படித்துவிடூவேன்). இவை குறித்து விரைவில் எழுதுகிறேன்.

2)நீண்ட காலம் கழித்து பொலிடிகலி கரெக்ட் செயல் ஒன்று செய்தேன் :). வேறொன்றும் இல்லை, பீஜிங்கிற்கு அண்மையில் சென்றிருந்த போது தியனன்மன் சதுக்கத்தில் மாஒ படத்தின் பிண்ணனியில் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பார்ப்பவர் நலன் கருதி முகத்தை மறைத்துவிட்டு படத்தை இடலாமா என்று யோசிக்கிறேன். பிஜிங்கிற்கு நான் சென்றதற்கும்,
அங்கு ஒலிம்பிக்ஸ்/பாரா-ஒலிம்பிக்ஸ் நடந்தது/நடப்பது, பிஜிங் சர்வதேச புத்தக கண்காட்சி முதன்முறையாக வேறொரு ஊரில் நடந்தது - இதெற்கல்லாம் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

3) தமிழரின் அறிவுத்திறனை வளர்க்கும் ஒரு முயற்சியாக, இந்த வலைப்பதிவினை படித்தால் பணம்/பரிசுகள் தரும் திட்டத்தைப் பற்றி யோசித்து வருகிறேன், இதற்காக புரவலர்களைத் தேடி வருகிறேன், பில் கேட்ஸுடன் முதற்கட்ட பேச்சு வார்த்தை தொடர்கிறது,
விபரங்கள் விரைவில் :). இது குறித்த ஆலோசனைகள் வரவேற்க்கப்படவில்லை :).

Labels: , , ,

தொழில் நுட்பம், சமூகம்- எலுலின் கருத்துக்கள்

தொழில் நுட்பம், சமூகம்- எலூலின் கருத்துக்கள்

(தற்போது நான் படித்துக் கொண்டிருக்கும் சில கட்டுரைகளில் எலுலின் கருத்துக்கள் சுட்டப்படுகின்றன. எலூலின் கருத்துக்கள் குறித்த வேறு சில கட்டுரைகளை/புத்தக அத்தியாயங்களை தரவிறக்கி வைத்திருந்தாலும் இன்னும் படிக்கவில்லை. ஜாக்வஸ் என்பதை இப்போது ழாக் என்று எழுதுவது வழக்கமாக உள்ளது. முன்பு அவ்வாறில்லை என கருதுகிறேன். நிகழ் இதழில், ஜனவரி 1989 ல் இந்தக் கட்டுரை 'அடிமைப்படுத்தும் தொழில்நுட்ப பார்வை- ஜாக்வஸ் எலுலின் கருத்துக்கள்' என்ற தலைப்பில் வெளியானது. இதை ஒரு அறிமுக கட்டுரையாகக் கொள்ள வேண்டும். 1912 பிறந்த எலுல் 1994ல் மறைந்தார். இன்று எலுலின் கருத்துக்கள் குறித்து விரிவாக எழுத விரும்பினாலும் அது சாத்தியமில்லை என்பதால் அன்று எழுதியதையே மீண்டும் இங்கு இடுகிறேன்.வேறொரு சந்தர்ப்பத்தில் மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரைகளை பட்டியலிடுகிறேன். )

'அடிமைப்படுத்தும் தொழில்நுட்ப பார்வை- ஜாக்வஸ் எலுலின் கருத்துக்கள்'

தொழில்நுட்பம், தொழில்நுட்பப் பார்வை குறித்து இருபதாம் நூற்றாண்டில் பல சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துக்களை பல கோணங்களிலிருந்து வெளிப்படுத்தியுள்ளனர். இவர்க ளில் ஜாக்வஸ் எலுல் (Jacques Ellul) முக்கியமான ஒரு சிந்தனையாளராகக் கருதப்படுகிறார். தொழில் நுட்பப் பார்வை, மனிதன் சமூகம் குறித்த அவரது கருத்துக்கள், எப்படி தொழில்நுட்பப் பார்வை மனிதனை அடிமைப்படுத்துகிறது. அதன் உள்ளார்ந்த குணங்கள் என்ன, அதன் போக்கு எத்தகையது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண முயல்கிறது.

தொழில் நுட்பத்தைக் குறித்து பல சிந்தனைப் போக்குகள்உள்ளன. எச். ஜி. வெல்ஸ், ஜூல்ஸ்வெர்ன் போன்ற புனைகதாசிரியர்கள். காட்டும் கற்பனை உலகங்கள், சொர்க்கங்கள். ஜார்ஜ் ஆ ர்வெல், ஆல்டஸ் ஹக்ஸ்லி போன்றோர் காட்டும் கற்பனாரீதியான பயங்கரமான உலகங்கள். இரு வேறான மாறுபட்ட சிந்தனைப் போக்குகளைக் காட்டின. நவீன தொழில்நுட்ப சமூகம் மீது லூயிஸ் மம்ப்ஃபோர்ட், (Lewis mumford) காந்தியடிகள் உட்படப் பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். தொழில்நுட்பப்போக்கு, விஞ்ஞானம் ஆகியவற்றை வரவேற்று அவற்றைப் புகழ்ந்து பலர் எழுதினர். (உ.ம்) ஹெர்மன்கான் ஆல்வின் டாஃப்லர், பக்மினிஸ்டர் புல்லர். உளவியலாளர்கள், சமூகவியலாளர்கள் (உ.ம் எரி க்பிராம், ஹெர்பர்ட் மார்க்யுஸ்) தொழில்நுட்ப போக்கின் அசுரப்போக்கையும் அதன் தாக்கத்தையும் குறித்து கவலை கொண்டனர். இதைத்தவிர தொழில்நுட்பத்தைக் கண்மூடித்தனமாக எதிர்க்கின்ற சிந்தனைப் போக்கும் உள்ளது.எலுவின் கருத்துக்களை மேற்கூறிய எந்த சிந்தனைப் போக்கிலும் சேர்க்க இயலாது. அவரது முக்கிய நூலான தொழில்நுட்ப சமூகள் (The technologival society) பலதுறைக ளைத் தழுவிய, ஒருங்கிணைக்கின்ற முயற்சியாகும். இதை ஹெகலின் தோற்றவியல் பற்றிய நூலுக்கு ஒப்பானது எனக் கருதுகின்றனர்.

தொழில்நுட்ப பார்வை குறித்த எலுலின் புரிதலும், அதனை அவர் வரையறை செய்து விளக்கும் விதமும் அவர் எத்தகைய ஓர் தனித்துவம் மிக்க சிந்தனையாளர் என்பதைக் காட்டுகிறது. அதன்படி எது தொழில்நுட்பப் பார்வை? என்பது வெறும் தொழில்நுட்பம் புழக்கத்தில் இருப்பதை மட்டுமே பற்றிய கேள்வியல்ல. தொழில்நுட்பப் பார்வை என்பது இயந்திரங்கள் கருவிகள் ஆகியவற்றை உருவாக்குவது பயன்படுத்துவது என்பதுடன் நிற்பதில்லை. அது சமூகம் செயல்திறனுடையதாக இயங்குவதற்காக ஓர் அமைப்பாக வடிவம் கொடுக்க ப்பட்டு, நிர்ணயிக்கப்பட்டு, நியாயப்படுத்தப்படுவது என்ற குணாம்சத்தை கொண்ட ஒரு பார்வையாகும். எல்லா சமூகங்களுக்கும் அமைப்புகள், நிறுவனங்கள் அனைத்திற்கும் ஓர் குறிப்பிட்ட க ட்டத்திற்குப் பின் இந்த குணாம்சங்கள் இருப்பதைத் தொழில் நுட்ப பார்வையின் தாக்கம் என்றே கொள்ளவேண்டும். அதாவது தொழில்நுட்பப் பார்வை என்பது திட்டமிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் பலமுறைகளின் முழுமையாகும். அதே சமயத்தில் தொழில்நுட்பப் பார்வை என்பது முறையியல் பார்வையாகவும் இருக்கலாம். இந்த முறையியல் பார்வை பழங்குடி மக்களின் சமூகத்திலும் காணப்படலாம் என்பதால் தொழில்நுட்பப் பார்வை என்பது மனிதனின், மனித சமூகத்தின் அடிப்படையான இயல்புகளில் ஒன்று எனவும் கரு தலாம். மனித இனத்தின் பொதுவாக அமைப்புகள் நிறுவனங்களில் ஒன்றாக இதைக் காணலாம். அதாவது, தொழில் நுட்பப்பார்வை என்பது மனிதனுக்கு கலை, அறிவியல், மதம் போன்ற ஓர் அடிப்படையான, முக்கியமான தேவையாகும்.

எலுலின் இந்த முக்கியக் கருத்தானது தொழில்நுட்பப் பார்வையை மானுட இனத்தின் பொதுவான ஓர் மனநிலை/மனோபாவம் என்ற வகையில் விளக்கப்படுகிறது. தொழில்நுட்பப் பார்வை ஒர் இருத்தல் நிலை (Ontogical) ஆக உள்ளது. இந்த சிந்தனைப்போக்கு அறிவியல், சமூகவியல், தத்துவம் ஆகியவற்றை இணைத்து ஒரே துறையாக மாற்றும் அதே வளையில், இது மீ மெய்யியல் (Metaphysics) இறையியல் குறித்த விசாரணையாகவும் உள்ளது.

சுருங்கக் கூறின் தொழில்நுட்பப் பார்வை குறித்த பிரச்னை மனிதனைக் குறித்த பிரச்னைதான். எலுலின் தொழில்நுட்பப்பார்வை குறித்த இக்கண்ணோட்டம், கிறித்தவ சமயம் கூறும் 'முதல் பாவம்' என்ற கண்ணோட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது. ஆனால் எலுலின் கண்ணோட்டம் தொழில்நுட்பப் பார்வையிலிருந்து மனிதனுக்கு விடுதலை இல்லை என்று முடிவு கூறுகிறது. நற்செயல்கள், நம்பிக்கை ஆகியவை மீட்சிக்கு இட்டுச் செல்லும் என்பது மதம். தொழில் நுட்பப்பார்வை எனும் சாபம் மீட்சிக்கு இடம் அளிப்பதில்லை; மனிதன் ப டைத்த தொழில்நுட்பம் எனும் கடவுளின் உருவச்சிலையின் கீழ் மனிதன் அடிமைப்பட்டுள்ளான். இது எலுலின் கண்ணோட்டம். எலுலின் இந்தப்பார்வை தீமை, பாவம் என்ற க ருத்தாக்கங்களுடன் தொடர்புடைய ஒன்று. மானுட தொழில்நுட்பப் பார்வை என்பது இதுவரை மானுட சமூகம் கண்டுள்ள, அனுபவித்துள்ள எதையும்விடப் புதிரானது, வலிமைமிக்கது, வெறுக்கத்தக்கது.

இதனால்தான் எலுல், தொழில் நுட்ப சமூகத்தின் முக்கியமான மீ மெய்யியல்வாதியாகக் காணப்படுகிறார். அவர் இறையியலாளரும் வட. எலுல் 1912 ஜனவரி 6ம் தேதி பிரா ன்சில் பிறந்தார். சமூகவியல், சட்டம், சட்டம் குறித்த வரலாறு ஆகியவற்றில் பட்டங்களைப் பெற்றார். 1938 முதல் போர்டியோக்ஸ் (Bordeaux) பல்கலைக் கழகத்துடன் சம்பந்த ப்பட்டுள்ளார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியப் படையெடுப்புக்கு எதிர்ப்பு இயக்கத்தில் ஓர் தலைவராகப் பணியாற்றினார். பிரான்சில் உள்ள ஒரு முக்கியமான தி ருச்சபையுடனும் உலகெங்கும் உள்ள திருச்சபைகளின் கூட்டமைப்பிற்கான இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். இந்தப் பின்னணியுடன் எலுலின் முக்கியமான படைப்பையும் அதில் கூறப்படும் கருத்துகளையும் காணலாம்.

எலுல் தனது தொழில் நுட்ப சமூகம் என்ற நூலில் கீழ்க்கண்ட அய்ந்து முக்கியமான அம்சங்களை ஆராய்கிறார்.

1. வரலாற்றில் தொழில் நுட்பப்பார்வை
2. தொழில்நுட்பப் பார்வையின் இயல்பு, தன்மைகள்
3. தொழில்நுட்பப் பார்வையும், பொருளாதாரமும்
4. தொழில்நுட்பப் பார்வையும் அரசும்
5. மானுட தொழில்நுட்பப் பார்வைகள்

எலுல் தொழில்நுட்பப் பார்வையையும், இயந்திரங்களையும் தனித்தனியே காண்கிறார். இன்று தொழில் நுட்பப் பார்வைதான் இயந்திரங்களை இணைப்பதிலும் உருவாக்குவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. இயந்திரங்களை சமூகத்துடன் சேர்க்கிறது. நெறிப்படுத்துகிறது. ஒரு காலகட்டம் வரை தொழில்நுட்பத்திற்குப் பின் அறிவியல் வளர்ந்தது. தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அறிவியலுக்காக காத்திருந்தது. ஆனால் இன்று தொழில் நுட்பப்பார்வை/ தொழில் நுட்பத்தின் கையில் ஓர் கருவியாக அறிவியல் உள்ளது. நம் காலத்தில் தொழில்நுட்பப் பார்வையின் தாக்கம் மிக முக்கியமானது. இன்றைய மானுட நிலைக்கு தொழில்நுட்பத்தாக்கம் குறித்த கேள்வியே முதன்மை பெறவேண்டுமேயன்றி தொழில்நுட்பத் திற்கும் அறிவியலுக்கும் உள்ள உறவைப் பற்றி உள்ள தத்துவப் பிரச்னைகள் அல்ல. எனவே தொழில்நுட்பம் என்பது அறிவியலின் ஓர் பயன்பாடு என்பது தவறு என்கிற ¡ர்.

தொழில்நுட்ப பார்வை எனும் தரம் வகுத்து, நெறிப்படுத்தி நியாயப்படுத்தும் போக்கை எலுல் நிறுவனங்களுக்கும் பொருத்திக் காண்கிறார். பொருளாதார சமூக, நிர்வாக அமைப்புக ளில் இதன் தாக்கத்தைக் காட்டுகிறார். வரலாற்றின் தொழில்நுட்பப் பார்வை என்பதை எலுலின் நூலின் சிறப்பான அம்சம் என்று கூற இயலாது. எனினும் இதிலும் அவரது ஆய்வு த்திறன், பார்வை தெளிவாகவே வெளிப்பட்டுள்ளது. மத்திய காலகட்டத்திலிருந்து அறிவியல் தொழில் நுட்ப காலத்திற்கான மாற்றம், கிறித்துவ சமயம் இயற்கையின் புனிதத் தை அழித்தது என்ற கருத்து, போன்றவை குறித்து பல புதிய கேள்விகளை எழுப்புகிறார். இன்று உள்ள தொழில் நுட்பப்பார்வை/தொழில் நுட்பத்துடன் ஒப்பிட்டு பேசும் எலுல் கீழ்க்கண்ட வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

1. முற்கால சமூகங்கள் கருவிகளின் பயன், கருவிகளை அபிவிருத்திச் செய்தல் குறித்து கவனம் கொண்டன. இது கருவிகள் அதனளவில் கருவிகள் என்பதற்காக அல்ல.
2. கருவிகள் சிலவாகவும், கருவிகளைக் கையாள்பவன் திறன் அக்கருவிகளின் குறைகளை ஈடுசெய்யும் வகையிலும் இருந்தன. தொழில்நுட்பம் / வாழ்க்கை / கலாச்சாரம் அமைப்பு முறைக்குள் பொதிந்துள்ள ஒன்றாக இருந்தது. இன்றைய நிலை இதற்கு மாறாக உள்ளது. இன்று கருவிகள் கையாள்பவனை விட திறன் மிக்கதாய், அவனைக் கட்டுப்படுத்தக் கூடியதாக உள்ளன.
3. மனிதனுக்கான தொழில்நுட்பம் கருவிகள், மாறுதலடைந்த நிலைமாறி தொழில்நுட்பக் கருவிகள் ஆகியவற்றுக்காக மனிதனும், அமைப்புகளும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
4. மதிப்பீடுகள், அறநெறிகள் ஆகிய எந்த கட்டுப்பாடுமின்றி தொழில்நுட்பப் பார்வை, தொழில்நுட்பம் அதன் செயல்திறன் குறித்த கணக்கீட்டையே கட்டுப்பாடாகக் கொண்டு வேகமாக முன்னேறுகிறது.

ஆகவே, தொழில் நுட்ப சமூகத்தில் தொழில் நுட்பமனிதனைக் கட்டுப்படுத்தி தன்னிச்சை உடைய சக்தியாக மாறுகிறது. இந்தத் தொழில்நுட்பப் பார்வை எனும் புதிய நம்பிக்கை / கோட்பாட்டில் அறநெறி, அழகியல் ஆகியவற்றுக்கு இடமில்லை. மானுட சுதந்திரம், தார்மீக மதிப்பீடுகள் ஆகியவை அர்த்ததமில்லாத பிரமைகளாக மாறுகின்றன.

இந்த எதேச்சாதிகார தொழில் நுட்பப் பார்வையின் தாக்கம், அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றிலும் வெளிப்படுகிறது. இதனையும் எலுல் விரிவாக விளக்குகின்றனர். தொ ழில்நுட்பப் போக்கின் இரு முக்கியமான குணாம்சங்களாக செயற்கைத் தன்மை (Artificiality) பகுத்தறிவு வாதத்தன்மை (rationality) பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை எனக் குறிப்பிடுகிற ¡ர். தனிமானுட படைப்புத்திறன். சுயஉணர்வு கொண்ட செயல்பாடு இரண்டையும் இதன் பகுத்தறிவு மறுக்கிறது. பின்னர் முறையியலை அதன் தர்க்கரீதியான எல்லைக்குள்ளே குறுக்கி பிற பரிமாணங்கள், அனுபவங்கள் ஆகியவற்றை மறுக்கிறது. செயற்கைத் தன்மை மூலம் தொழில்நுட்பப் பார்வை இயற்கையை அடிமைப்படுத்தி அழிக்கிறது. இயற்கைத் தன்னை புதுப்பித்துக் கொள்வதற்கும், மனிதன் இயற்கையுடன் பயன்பாடுமிக்க ஒருமையுணர்வுடன் உறவு கொள்வதற்கும் எதிராக உள்ளது. தொழில்நுட்பப் பார்வை பற்றிய இத்தகைய கண்ணோ ட்டம் அச்சம் தரக்கூடிய, சர்ரியலிசக் கண்ணோட்டம் எனலாம். ஏனெனில், பகுத்தறிவு வாதத்தை முன்வைக்கும் தொழில்நுட்பப் பார்வையினது பகுத்தறிவின் பயங்கரமான மறுபக்கத்தை காட்டுகிறது.

நவீன தொழில்நுட்பப் பார்வையின் அய்ந்து முக்கியத்தன்மைகளாகக் கீழ்க்கண்டவற்றை எலுல் குறிப்பிடுகிறார்.
1. குறுக்கும் தன்னியக்கம் (automatism)
2. சுயப்பெருக்கம் (self estrangementation)
3. ஒருமைப்படுத்தும் தன்மை (monism)
4. உலகெங்கும் செயல்படும் தன்மை (universalism)
5. தன்னாட்சி (autonomy)

தன்னியக்கம் என்பது மனிதனின் தெரிவுகளை குறுக்கும் இயக்கம். எதைத் தேர்ந்தெடுப்பது என்பதைத் தொழில்நுட்பப் பார்வையே முடிவு செய்கிறது. மனிதனின் தெரிவு செய்யும் சுதந்திரம், திறன் ஆகியவை இப்பார்வையின்முன் இல்லாமல் போகிறது. தனது தர்க்க ரீதியான காரணங்கள், மதிப்பீடுகளைக் கொண்டு இப்பார்வை முடிவு செய்யும் தெரிவை மனிதன் ஏற்று ஒத்துப் போக வேண்டி உள்ளது.

சுயப்பெருக்கம் / சுயவளர்ச்சி என்பது தொழில்நுட்பப் பார்வையின் பரிணாம வளர்ச்சி மனிதனைச் சார்ந்து இராமல் இருப்பதைக் குறிக்கிறது. எல்லை ஏதுமின்றி அசுர வேக த்தில் வளர்கிறது. தொழில்நுட்பம். இதனால் தொழில்நுட்ப / பரிணாம வளர்ச்சிப் போக்கு திசைமாற்ற இயலாதபோக்கு என உள்ளது. அதன் வளர்ச்சி 1,2,3,4 என்று இல்ல ¡மல் 1,2,4,8,16 என்ற விதமாக உள்ளது.

தொழில்நுட்பம் வேறு. அதன் பயன் வேறு எனப் பார்க்க இயலாது. தொழில்நுட்பமே பயன்பாடு. தொழில்நுட்பங்கள் தொழில் நுட்பப் பார்வைகள் அனைத்திற்கும் பொதுவான ஒருமைமப்படுத்தும் போக்கு என்னவெனில் அவை ஓர் முழுமையாக / ஒருமையாக அமைகின்றன என்பதே. இத்தகைய தொழில்நுட்பம் உலகெங்கும் செயல்படும் தன்மையது என்பது அது மரபு ரீதியாக தொழில்நுட்பங்களை வென்று தன்னை நிலைநாட்டிக் கொள்வதிலிருந்து தெரிகிறது. இந்தப் போக்கை தொழில்நுட்ப காலனியாதிக்கம் எனலாம்.

எலுல் தொழில்நுட்பப் பார்வையின் தன்னாட்சியை விரிவாக எடுத்துரைக்கிறார். இந்தத் தன்னாட்சி என்பது தார்மீக ரீதியான தன்னாட்சியும்கூட. இதனால் எது சரி, எது நல்லது என்பதை கூட தொழில்நுட்பப் பார்வையே நிர்ணயிக்கிறது. இந்த இயக்கத்தில் புதிய தொழில்நுட்பப் பார்வை கொண்ட தார்மீக நெறிகள், நியாயங்களைப் படைக்கும் ஒரு படைப்பாளியையும் அது உள்ளது. இந்த தொழில்நுட்பப் பார்வையின் தன்னாட்சி நிலவும்போது, மனிதனின் தன்னாட்சி சாத்தியமில்லை. இதன் விளைவுதான் மனிதன் தொழி ல்நுட்பம் கொண்ட ஓர் விலங்காக குறைக்கப்படுவது.

இந்த விசித்திரப் போக்கின் இன்னொரு பரிமாணம், புனிதமானவை, புனிதமற்றவை என்பது பற்றியது. தொழில் நுட்ப பார்வை எதையும் வழிபாடு செய்வதில்லை, எதற்கும் மரியாதை அளிப்பதில்லை. புதிர் என்று ஏதும் இல்லை என்ற பார்வை மூலம் அது புனிதத்¨தை அழிக்கிறது. தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்ளும் வேலையில் இது மனிதனிடம் உள்ள பயபக்தி, புதிர் குறித்த வியப்பு ஆகியவற்றைத் தகர்க்கிறது. தன்னைச் சுற்றி ஓர் புனித ஒளி வட்டத்தை உருவாக்குகிறது. தன்னை வழிபடக்கூடிய, நம்புகின்ற கும்பல்களைக் கொண்டுள்ளது. தொழில்நுட்பப் பார்வை சிலருக்குப் புதிய கடவுளாக உள்ளது. எலுலின் இத்தகைய கருத்துக்கள் அவநம்பிக்கை அளிப்பவை. இவை தொழி ல்நுட்பத்தின் பங்கை, குணங்களை பூதாகாரமாகக் காட்டுபவை என்றால் பல விமர்சனங்கள் உள்ளன.

மனிதன், இயற்கை, தொழில்நுட்பம் குறித்த இந்த முடிவில்லா சர்ச்சையில் எலுலின் கருத்துக்களை மறுப்பவர்கள் கூட அவரது சிந்தளை ஆற்றல். மானுடநேய சிந்தனை ஆகியவற் றை கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும். சமகாலப் பிரச்னையாக தொழில்நுட்பம் குறித்த பிரச்னையை அதன் பன்முகத் தன்மைகளை விளக்கி அது இறுதியில் மனிதனின் நிலை குறித்த பிரச்னை எனக்கூறும் எலுலின் கருத்துகளை நாம் எதிர்கொள்வது தான் முறையே அன்றி, அவற்றை முற்றிலுமாக நிராகரிப்பது முறையல்ல.

நிகழ், ஜனவரி 1989.

Labels: , , ,

பி.டி(Bt) பருத்தி, புத்திசாலிகள் யார் ?

பிடி(Bt) பருத்தி, புத்திசாலிகள் யார் ?

கார்னல் பல்கலைகழக பேராசிரியர் ரொனால்ட் ஹெரிங் கடந்த வாரம் ஹிந்துவில் எழுதிய கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிடும் அவருடைய இன்னொரு கட்டுரை இங்கே.

விவசாயத்தில் உயிரியல் தொழில் நுட்பம், குறிப்பாக இந்தியாவில் பிடி பருத்தி குறித்து ரொனால்ட் ஹெரிங் எழுதியுள்ள கட்டுரைகள் முக்கியமானவை எனக் கருதுகிறேன்.2002ல் நான் பென்சில்வேனியா பல்கலையில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது ஹெரிங்
ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்றுள்ளேன்.பிடி பருத்தி குறித்து ஹெரிங் நேர்மறையான பார்வையை முன்வைக்கிறார். இந்தச் சர்ச்சை எப்படி முன்வைக்கப்படுகிறது என்பதையும் அவர் எழுதியிருக்கிறார். பிடி பருத்திக்கு எதிரான கட்டுரைகளை தமிழில்
படித்தவர்கள் அவர் எழுதியுள்ளதைப் படிக்க வேண்டும். மேலும் இந்தச் சர்ச்சையில் ஒரு தரப்பு கருத்துக்களை மட்டும் படித்தால் புரிதல் கிடைக்காது. Current Anthropologyல் நடைபெற்ற விவாதம் முக்கியமானது. ஹெரிங்கின் தன் கட்டுரையில் பல கட்டுரைகள்/நூற்களை சுட்டுகிறார். ஹெரிங்கின் கருத்தினை ஏற்காதவர்களும் உள்ளனர். உதாரணமாக குஜராத்தில் பிடி காட்டன் குறித்த ஈஷா ஷாவின் கட்டுரை ஹெரிங் காட்டும் நேர்மறையான முடிபை சர்ச்சிக்கிறது. பிடி பருத்தி இந்தியாவில் விவசாயிகளிடம் பிரபலமடைந்துள்ளது. மூன்றாண்டுகளில் அது பயிரடப்படும் நிலத்தின் அளவு அதிகரித்திருக்கிறது. பிடி பருத்தி காரணமாகவே விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்தது என்பதை நான் ஏற்கவில்லை.

சில காரணங்களால் பிடி பருத்தி எதிர்பார்த்த விளைச்சலை சில இடங்களில் தரவில்லை என்பது உண்மை. பிடி பருத்தி மீதான விவசாயிகளின் மோகத்தினை பயன்படுத்திக் கொண்டு போலி பிடி பருத்தி விதைகள், தரக்குறைவான விதைகள் விற்கப்பட்டுள்ளன. ஆனால் நீண்ட காலப் போக்கில் பிடி பருத்தி நிலைத்து நிற்கக் கூடிய, சீரான விளைச்சலைத் தரும் பயிரா என்பது குறித்து கேள்விகள் எழுப்பட்டுள்ளன. இன்று பிடி பருத்தியைப் பொறுத்த வரை மான்சாண்டோவின் ஏகபோகம் இல்லை. நாக்பூரில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ள விதைகளின் அடிப்படையில் பிடி பருத்தியில் புதிய வகைகள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும். இந்த ஆண்டு 84 புதிய, பிடி பருத்து வீரிய ஒட்டுவகைகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது, ஏற்கனவே 137 பிடி பருத்தி வகைகள்
இந்தியாவில் புழக்கத்தில் உள்ளன. எனவே பிடி பருத்தி நிலை பெற்றுவிட்டது என்று கூறலாம்.

ஹெரிங் சுட்டிக்காட்டும் தகவல்கள் முக்கியமானவை. பிடி பருத்தி தோல்வி, வசாயிகளுக்கு அதனால் நன்மை இல்லை என்றால் அதை விவசாயிகள் ஏன் அதிக அளவில் பயிரிடுகிறார்கள், விதைக்கு அதிக விலை தருகிறார்கள்?. பிடி பருத்தி இந்த அளவிற்கு வேகமாக பரவ அது குறித்த எதிர்பார்ப்பு, மற்றும் அதீத நம்பிக்கை மட்டும் காரணமாக இருக்க முடியாது. ஏனென்றால் தொடர்ந்து ஒரு பயிரால் நன்மை இல்லை என்றால் அதன் விதைகளை அதிக விலை கொடுத்து விவசாயிகள் வாங்க மாட்டார்கள். ஹெரிங் சுட்டிக்காட்டுவது போல் பிடி பருத்தியை எதிர்க்கும் இயக்கங்கள் இது விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்று கூறினாலும், அதை தெரிவு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை கூடியுள்ளதால், அந்தப் பிரச்சாரம் எந்த அளவு உண்மையானது என்ற கேள்வி எழுகிறது. விவசாயிகள் சார்பாக யார் பேசுவது என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் சில நாடுகளில் பிடி பருத்தி அரசுகளால் அங்கீகரிக்கப்படாத போதும் விவசாயிகள் அங்கீகாரம் பெறாத பிடி பருத்தி வகைகளை பயிரிடுகிறார்கள். இதற்கு என்ன காரணம்.

ஹெரிங் பல கட்டுரைகளை இந்தச் சர்ச்சை குறித்து எழுதியிருக்கிறார். சுதர்ஷன் ஐயங்கார்,லலிதா, கிளென் ஸ்டோன் உட்பட பலர் எழுதியுள்ளனர். இந்தியாவில் பிடி பருத்தி குறித்து பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இதில் என் நிலைப்பாட்டில் மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளன. 2002ல் பிடி பருத்தி இந்தியாவில் வெற்றி பெறுமா, இது பொருத்தமான தொழில் நுட்பம்தானா என்ற ஐயம் எனக்கு இருந்தது. இப்போது இது வெற்றி பெற்றுவிட்டது என்பதில் ஐயமில்லை. அதே சமயம் இதன் நீண்ட காலத் தாக்கம், நிலைத்து நிற்கும் தன்மை குறித்து கேள்விகள் இருக்கின்றன. மேலும் விவசாயத்தில் உயிரியல் தொழில் நுட்பத்திற்காக தேவை இருக்கிறது என்பதில் ஐயமில்லை. அதே சமயம் biosafety, அறிவுசார் சொத்துரிமைகள் குறித்து பல கேள்விகள் உள்ளன. தொழில் நுட்பத்தை ஒழுங்குபடுத்துதல் குறித்தும் கேள்விகள் உள்ளன.

எது எப்படியாயினும் இதில் பல தரப்பு வாதங்களையும், சான்றுகளை கருத்தில் கொள்வது தேவை என்பதால் நான் இயன்ற அளவு அனைத்து தரப்பு வாதங்களையும், சான்றுகளையும் படித்துப் புரிந்து கொள்ள முயல்கிறேன். வேறொரு தருணத்தில் இந்தச் சர்ச்சை குறித்த வேறு சில கருத்துக்களை விவாதிக்கிறேன்.

Labels: , , ,

காஞ்சா அயிலையா - மிஷநரிகளை ஆதரிக்கும் ‘செக்யுலர்' நரி

காஞ்சா அயிலையா - மிஷநரிகளை ஆதரிக்கும் ‘செக்யுலர்' நரி

தலித்-பகுஜன் ஒற்றுமை குறித்து பேசியும், எழுதியும் வரும் காஞ்சா அயிலையா மத மாற்றத்தை தீவிரமாக ஆதரிப்பவர். இந்து மதத்திலிருந்து தலித்கள் விலகி கிறித்துவம்/பெளத்தம்/இஸ்லாம் ஆகிய ஏதேனும் ஒன்றில் சேர வேண்டும் என வலியுறுத்துபவர். விஷால் மங்கல்வாதி என்ற கிறித்துவ மதமாற்றவாதியின் நூலை வெளியிட்டவர். இவர் அண்மையில் கொடுத்துள்ள பேட்டியின் சுட்டி இது. இதில் அவர் உலகளாவிய மதமாற்ற சக்திகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதையும், தலித்-பகுஜன் மரபுகளை விடுத்து இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை தெரிந்தெடுக்க சொல்வதையும், இந்து மதத்திற்கு முற்றிலும் எதிரான நிலையை எடுத்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.

இந்த ‘செக்யுலர்' நரி குறித்து விரிவாக எழுதவேண்டும், குறிப்பாக அமெரிக்காவிலும், அமெரிக்காவிலும் போய் இந்தியாவில் தலித்களுக்கு மதம் மாறும் உரிமை இல்லை என்று ஊளையிட்டதையும் சுட்டிக்காட்டி எழுத வேண்டும் என நினைத்திருக்கிறேன்.

இந்த ‘செக்யுலர்' நரி போல் பல ‘செக்யுலர்' 'இடதுசாரி' , ‘முற்போக்கு' நரிகள் பல் வேறு போர்வைகளில், கவர்ச்சியான கோஷங்களுடன் திரிவதையும், இவை அந்நிய நாட்டு அரசுகளுக்கு, ஐ.நாவிற்கு இந்திய அரசுக்கு எதிராக மனுப் போடுவதையும், இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பதையும் இந்தியர்கள், குறிப்பாக அயல் நாடுகளில் வாழும் இந்தியர்கள் அறிய வேண்டும்.

Labels: , ,