பெரியார் படைப்புகள் - பெரியார் தி.கவிற்கு நீதிமன்றம் தடை

பெரியார் படைப்புகள் - பெரியார் தி.கவிற்கு நீதிமன்றம் தடை

பெரியார் தி.க குடியரசு தொகுப்புகளை திட்டமிட்டபடி வெளியிட இயலாது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.

பெரியார் படைப்புகள்: வெளியிட பெரியார் தி.க.வுக்கு தடை

சென்னை: பெரியாரின் கட்டுரைகள், எழுத்துக்கள் உள்ளிட்டவற்றை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.பெரியார் திராவிடர் கழகம் இந்த நூல்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.அதில், குடியரசு பத்திரிகையில் வந்த பெரியாரின் சொற்பொழிவுகள், கட்டுரைகள், எழுத்துக்களை புத்தகமாகவும், சிடியாகவும் வெளியிடப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தந்தை பெரியார் கடந்த 1952ம் ஆண்டு பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனம் என்ற
அமைப்பை துவங்கினார். அதில் 1925ல் தொடங்கப்பட்ட குடியரசு பத்திரிகையில் வெளியான தன்னுடைய கட்டுரைகள், பேச்சுக்கள், எழுத்துக்கள் ஆகியவற்றை நூல்களாக அச்சிட்டு இந்த அறக்கட்டளை மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று பெரியார் கூறியுள்ளார்.
மேலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அனாதை, வயதான, ஆதரவற்ற இல்லம் அமைத்து அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இந்நிலையில் 1982ல் குடியரசு பத்திரிக்கையின் நகல்கள் எடுக்கப்பட்டன. அந்த சமயத்தில் இந்த நூல்கள் திருடப்பட்டுள்ளன. தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்திடமிருந்து இதன் நகல்களை தாங்கள் பெற்றதாக பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் வார பத்திரிகையில் பேட்டியளித்துள்ளார். இது முற்றிலும் பொய்யானது.ஆகவே குடியரசு பத்திரிகையில் வெளியான பெரியாரின் கட்டுரைகள், பேச்சுக்கள், எழுத்துக்கள் ஆகியவற்றை பெரியார்
திராவிடர் கழகம் புத்தகமாகவும், சிடியாகவும் வெளியிட தடைவிதிக்க வேண்டும். நஷ்ட ஈடாக ரூ.15 லட்சம் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், புத்தகம், சிடி வெளியிட தடைவிதித்ததோடு, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்பதால் நான்
‘பதிப்புரிமை யாரிடம் இருக்கிறது என்று தெரிந்தும் உரிய அனுமதி பெறாமல் பெரியார் தி.க ஏன் இப்படி ஒரு திட்டத்தை முன்வைக்கிறது?. தெரிந்தே சட்டத்தை மீறுவது சரிதானா? வீரமணி நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றால் முன்பதிவு அடிப்படையில் பணம் கட்டியவர்களுக்கு பணம் திரும்பக் கிடைக்குமா?'என்று எழுதியிருந்தேன். நான் எதிர்பார்த்தது நடந்துவிட்டது.

இந்த தடையை எதிர்த்து பெரியார் தி.க நீதிமன்றத்தை நாடி, இடைக்காலத் தடையை விலக்கக் கோருமா?.அப்படியே கோரினாலும் அவர்கள் செய்வது பதிப்புரிமையை மீறுவது என்பதால் இடைக்காலத் தடை தொடரும் என்றுதான் கருதுகிறேன். மேலும் இந்த வழக்கில் பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனம்தான் பதிப்புரிமையின் உரிமையாளர் என்பதால் அவர்களுக்கு உள்ள உரிமைகளை காப்பாற்ற அவர்கள் சட்டப்படி நீதிமன்றத்தினை
நாடியுள்ளனர். அவர்களை குறை கூற முடியாது. இந்த விவகாரத்தில் பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனம் தரப்பிற்கு சார்பாகவே பதிப்புரிமை சட்டம் இருக்கிறது.

பெரியார் தன் படைப்புகளை இப்படித்தான் கொண்டுவர வேண்டும், குடியரசு இதழ்கள் தொகுப்பாக இந்த ஆண்டிற்குள் வெளியாக வேண்டும். தன் அனைத்து பதிப்புகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிடப் பட வேண்டும் என்று நிபந்தனை விதித்து, அதன் அடிப்படையில் உரிமைகள் பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனத்திற்கு சேரும் என்று எழுதி வைத்திருந்து, அதை பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனம் நிறைவேற்றாவிட்டால், பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரலாம். அவ்வாறு இல்லாத போது பதிப்புரிமையின் உடமையாளர்களான பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனம், பெரியாரின் படைப்புகளை ஏன் முழுமையாக இதுவரை வெளியிடவில்லை என்ற கேள்வியை எழுப்பினாலும், சட்டம் பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனத்திற்கே சாதகமாக இருக்கும். ஆகவே குறை கூற விரும்புபவர்கள் பெரியார் தன் படைப்புகளை வெளியிடுவது குறித்து எந்த ஒரு காலக்கெடுவையும் விதிக்காமல் பதிப்புரிமையை பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனத்திற்கு கொடுத்து விட்டு சென்று விட்டாரே என்று பெரியாரை வேண்டுமானால் குறை கூறலாம்.பெரியார் தி.க குடியரசு தொகுப்பினை இலவசமாக தருகிறோம் என்று அறிவித்து அவ்வாறு கொடுத்தாலும் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கும். இந்தச் சூழலில் அதாவது வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அரசு பெரியார் படைப்புகளை நாட்டுடமையாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு.

Labels: , ,

பெரியாரின் படைப்புகள், பதிப்புரிமை - நாட்டுடமையாக்காமல் ஒரு தீர்வு

பெரியாரின் படைப்புகள், பதிப்புரிமை - நாட்டுடமையாக்காமல் ஒரு தீர்வு


குடியரசு இதழ் தொகுப்புகளை தொகுதிகளாக வெளியிட பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்து முன் வெளியிட்டுத் திட்டத்தின் கீழ் பணம் அனுப்புவோருக்கு சலுகை விலையில் இவை கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. திராவிட கழகத்தின் அதிகாரப் பூர்வ நாளேடான விடுதலையில் பெரியாரின் எழுத்துக்கள் மீதான அறிவுசார் சொத்துரிமை தங்களிடமே இருப்பதாக பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளர் கி.வீரமணி ஒரு அறிவிப்பினை விடுத்துள்ளார். இதையொட்டி குமுதம் ரிப்போட்டரில் ஒரு கட்டுரை, பெரியார் தி.க ஆதரவு வலைப்பதிவுகளில் பதிவுகள், தி.க ஆதரவு வலைப்பதிவொன்றில் இடுகைகள், விடுதலையில் கலி.பூங்குன்றன் அறிவிப்பு, மின்சாரம் கட்டுரை என இருதரப்பாரும் தம் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். இதில் எனக்கு சில கேள்விகள்/ஐயங்கள் உள்ளன.

பெரியார் எழுத்துக்களுக்கு அவர் உயிலின்படி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பதிப்புரிமை தங்களுக்கு என்று உரிமை கொண்டாட முடியும். ஆனால் குடியரசில், பெரியார் நடத்திய பிற இதழ்களில் எழுதியுள்ள பிறரின் படைப்புகளுக்கு அந்நிறுவனம் எப்படி பதிப்புரிமை தங்களுக்கு என்று கூற முடியும். அப்படிப்பட்ட படைப்புகளுக்கு உரியவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் இதுவரை குடியரசு தொகுப்புகள் நூற் தொகுப்பாகவும், குறுநதகடுகளாக வெளிவந்துள்ளனவா?

பதிப்புரிமை யாரிடம் இருக்கிறது என்று தெரிந்தும் உரிய அனுமதி பெறாமல் பெரியார் தி.க ஏன் இப்படி ஒரு திட்டத்தை முன்வைக்கிறது?. தெரிந்தே சட்டத்தை மீறுவது சரிதானா? வீரமணி நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றால் முன்பதிவு அடிப்படையில் பணம் கட்டியவர்களுக்கு பணம் திரும்பக் கிடைக்குமா?

பெரியார் எழுத்துக்களை காலவாரியாக,பொருள்வாரியாக வெளியிடும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ஏன் இதனை இத்தனை ஆண்டுகளாக வெளியிட்டு வந்தாலும், அது முழுமையுறாமல் இருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குள் எத்தனை தொகுப்புகளாக எத்தனை தலைப்புகளில் அவர்கள் வெளியிடப் போகிறார்கள்.

பெரியார் எழுத்துக்களை நாட்டுடமையாக்கினால் அதனால் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு என்ன நட்டம்? இழப்பீடாக ஒரு தொகை பெற்றுக் கொண்டு காந்தியின் எழுத்துக்கள், அம்பேத்கரின் எழுத்துக்கள் அரசு ஆதரவில் தொகுக்கப்பபட்டு வெளியானது போல் பெரியாரின் எழுத்துக்கள் வெளியானால் அது நல்லதுதானே. தி.க இதில் ஏன் ஆர்வம் காட்டவில்லை. திமுக அரசும் ஏன் இதைச் செய்யவில்லை.

அறிஞர் அண்ணா, பாரதிதாசன், பாரதியார்,புதுமைப்பித்தன் உட்பட பலரின் எழுத்துக்கள் அரசால் நாட்டுடமையாக்கப்பட்டு பொதுக்களனில் இருக்கும் போது பெரியாரின் எழுத்துக்கள் ஏன் அவ்வாறு நாட்டுடமையாக்கப்படவில்லை.

பெரியாரின் உரைகள்,கட்டுரைகள் தவிர எழுதிய சிறு நூல்கள்/வெளியீடுகளின் முழுமையான பட்டியல் இருக்கிறதா. அவை அதாவது சிறு நூல்கள்/வெளியீடுகள் அனைத்தும் கிடைக்கின்றனவா?

பெரியார் தி.க வெளியிடயுள்ள தொகுப்புகள் குறுந்தகடுகளாக கிடைக்கின்றனவா? அப்படியாயின் அதை இப்போது நூற் தொகுதிகளாக கொண்டுவர வேண்டிய அவசரத் தேவை என்ன?

பெரியார் அனுமதியுடன் கொண்டுவரப்பட்ட ஆனைமுத்து தொகுத்த பெரியார் சிந்தனைகள் அது ஏன் கிடைப்பதில்லை. அதை மேம்படுத்தி, புதிதாக சேர்க்க வேண்டியவை எவை எனக் கண்டறிந்து சேர்த்து மீண்டும் கொண்டுவர யாரும் முயற்சிக்கவில்லையா. அதை ஏன் மக்கள்
பதிப்பாக, குறுந்தகடுகளாக கொண்டுவரக் கூடாது.

பெரியாரின் எழுத்துக்களை நாட்டுடமையாக்க வேண்டும் என்று பெரியார் தி.க கோரியுள்ளது. இதை அரசு ஏற்குமா என்று தெரியவில்லை. ஏற்றாலும் பதிப்புரிமையின் உரிமையாளருக்கு ஒரு தொகை கொடுத்தால் தான் நாட்டுடமையாக்க முடியும்.ஒரு வேளை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் அரசு பணம் தரத்தேவையில்லை என முடிவு செய்தால் அரசு பணம் தராமலே அதைச் செய்யலாம். அதை அரசுதான் செய்ய வேண்டும் என்பதில்லை. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனமே செய்யலாம்.

ஆனால் அவ்வாறு செய்யாமல் அதே சமயம் பெரியாரின் படைப்புகள் பரவலாகக் கிடைக்க
வகை செய்ய முடியும். நாட்டுடமையாக்கமல் இது சாத்தியம். அதாவது பதிப்புரிமையை முழுதும் விட்டுத்தராமல் அதே சமயம் பரவலாக பெரியாரின் எழுத்துக்கள் கிடைக்க செய்ய வகை செய்ய முடியும்.

கிரியேடிவ் காமன்ஸ் லைசென்ஸ்கள் மூலம் இதைச் செய்யலாம். வணிக ரீதியாக பயன்படுத்தாமல் பெரியார் எழுத்துக்களை இணையத்தில் இடவும், தரவிறக்கிக் கொள்ளவும் கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸ்கள் மூலம் அனுமதிக்க முடியும். கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸ்களில் பல வகை உள்ளன. நோக்கத்தைப் பொறுத்து தேவையான லைசென்ஸை தேர்வு செய்து பிறர் பயன்படுத்த அனுமதி அளிக்க முடியும்.

உதாரணமாக மொழி பெயர்த்து பிற மொழிகளில் வெளியிட உரிமை அளிக்க வகை செய்ய ஒரு லைசென்ஸை பயன்படுத்த முடியும்.

வணிக நோக்கங்களற்ற பயன்பாடுகளுக்கு கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸ்கள் உகந்தவை. வணிக ரீதியாக பயன்படுத்தாமல் இலவசமாக பிரதிகள் எடுத்து விநியோகிப்பதை நான் தடுக்கவில்லை, ஆனால் வணிக ரீதியாக பயன்படுத்த அல்லது இதன் அடிப்படையில் இன்னொன்றை உருவாக்க (derivative works) உரிய அனுமதி பெற வேண்டும் என ஒரு படைப்பாளி அறிவிக்க விரும்பினால் அவர் செய்ய வேண்டியது இதற்கு வகை
செய்யும் கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸின் கீழ் இதன் பயன்பாடு அனுமதிக்கப்படுகிறது என்று அறிவித்தால் போதும். வேறு தனியான ஒப்பந்தங்கள் தேவையில்லை.

இப்போதுள்ள நிலையில் கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸ்கள் ஒரு பொருத்தமான தீர்வாக இருக்கும். இதனால் பதிப்புரிமை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திடமே இருக்கும், அவர்கள் சில வழிகளில் பெரியார் எழுத்துக்களை பயன்படுத்த, குறிப்பாக வணிக நோக்கமற்ற பயன்பாட்டிற்கு அனுமதி அளிப்பதன் மூலம் பெரியாரின் கொள்கைகள் இன்னும் பரவலாக அறிமுகமாகும். உதாரணமாக இணையத்தில் பெரியாரின் எழுத்துக்களை மின் நூற்களாக்க அனுமதி உண்டு, ஆனால் அதை தரவிறக்க கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவர்கள் அனுமதிக்க முடியும். அதே போல் பெரியார் எழுத்துக்களை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்து இணையத்தில் இடலாம், ஆனால் அவற்றை தமிழில் நூற்களாக்கி விற்க அனுமதி இல்லை என்று அனுமதி தரலாம். அவ்வாறு உரிமை பெற்றவர் தமிழில் நூலாக்கி இடும் உரிமையை இன்னொருவருக்கு தர முடியாது. பெரியாரின் கருத்துக்களை விளக்கும் அனிமேஷன் படத்தை உருவாக்கும் போது பெரியாரின் குரல் பதிவுகளை, பெரியார் திரைப்படத்திலிருந்து சிலவற்றை, புகைப்படங்களை, எழுத்துக்களை பயன்படுத்த அனுமதி அளிப்பது கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸ்களின் அடிப்படையில் சாத்தியம்.

இவ்வாறு அனுமதி தரும் போது பதிப்புரிமை யார் வசம் இருக்கிறதோ அவர் சில உரிமைகளைத் தருகிறார். பயன்படுத்துபவர் படைப்புகளை மாற்ற/சிதைக்கக் கூடாது, சுருக்கக் கூடாது, எதையும் அதில் சேர்க்கக் கூடாது, பதிப்புரிமை யாரிடம் இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதிக்க முடியும்.

இப்படி கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்களை பயன்படுத்தும் தீர்வு இப்போதுள்ள சூழலில் ஒரு நல்ல தீர்வு. ஏனெனில் இதில் பதிப்புரிமையாளர்தான் சில நிபந்தனைகளுடன் பெரியார் எழுத்துக்களை பயன்படுத்த அனுமதி தருகிறார்,பதிப்புரிமை முற்றாக விட்டுத்தரப்படுவதில்லை. மேலும் நிபந்தனைகளை பின்பற்றாத போது அனுமதியை விலக்கிக் கொள்ளவும் முடியும். பதிப்புரிமையாளர் படைப்பாளியின் சார்பாக தார்மீக உரிமைகளையும் (moral rights) நிலை நாட்ட முடியும். வணிக பயன்பாடற்ற நோக்கங்களுக்கு என்று அனுமதியை லைசென்ஸ்கள் மூலம் தரும் போது அதை யாரும் பயன்படுத்த முடியும், அந்த லைசென்ஸின் கீழ் தரப்படும் விதிகள்/நிபந்தனைகளுட்டப்பட்டு, கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸ்கள் இன்று பரவலாக பயன்பாட்டில் உள்ள. இசை அமைப்பாளர்கள், எழுத்தாளர்கள். புகைப்பட நிபுணர்கள், ஒவியர்கள், பேராசிரியர்கள் என்று பல்வேறு தரப்பாரும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். பாடங்களை, பாட நூற்களை, ஆய்வுக் கட்டுரைகளை இதன் கீழ் பரவலாக கிடைக்கச் செய்ய முடிகிறது.

எனவே பெரியாரின் எழுத்துக்களையும், குரல் பதிவுகளையும் கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸ்கள் மூலம் பயன்படுத்த குறிப்பாக வணிக நோக்கமற்ற பயன்பாடுகளுக்கு அனுமதிப்பது ஒரு தீர்வாக இருக்கும். இதை முதலில் ஒரிரு உரிமைகளை தரக்கூடிய லைசென்ஸ்கள் மூலம் பரிசோதித்துப் பார்க்கலாம். இந்தியாவிலும் கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸ்கள் பயன்படுத்தப்படுவதால் இவை செல்லுமா என்ற கேள்விக்கு வாய்ப்பில்லை.

இந்த சிறு கட்டுரையில் சில சாத்தியப்பாடுகளை உதாரணமாகக் காட்டியுள்ளேன். இந்த லைசென்ஸ்களை பல வகைகளில் பிற படைப்பாளிகள் தம் படைப்புகளில் பயன்படுத்த உதவ பயன்படுத்த முடியும். பகிர்ந்து கொள்ள, பரவலாக்க, பயன்படுத்த என பலவகை பயன்களுக்கு இதன் மூலம் அனுமதி தர முடியும். தாங்கள் இதை எதற்காக பயன்படுத்த விரும்புகிறோம் என்பது குறித்த தெளிவு வேண்டும். மேலும் துவக்கத்தில் ஒரு சில
பயன்பாடுகளை மட்டும் அனுமதித்து அதில் கிடைத்த பலன்கள்/அனுபவங்களின் அடிப்படையில் இந்த லைசென்ஸ்களின் கீழ் தரப்படும் உரிமைகள் (நிபந்தனைகளுடன்) விரிவாக்கப்படலாம் அல்லது புதிய உரிமைகள் தரப்படலாம்.

கிரியேட்டிவ் காமன்ஸ் குறித்து மேலும் அறிய

http://creativecommons.org/

http://cc-india.org/

http://en.wikipedia.org/wiki/Creative_Commons

Labels: , ,

பொய்யை உள்ளடக்கிய எழுத்து - சாரு நிவேதிதா, ஹிஸ்புல்லா,இஸ்ரேல்

பொய்யை உள்ளடக்கிய எழுத்து - சாரு நிவேதிதா, ஹிஸ்புல்லா,இஸ்ரேல்

சாருவிற்கு இஸ்ரேல் மீது வெறுப்பும், ஹிஸ்புல்லா மீது அளவு கடந்த பாசமும், நம்பிக்கையும் இருக்கலாம். அதற்காக பொய்களை அள்ளி வீசக் கூடாது. இன்று இணையத்தில் சாருவின் எழுத்தைப் படிப்பவர்கள் தகவல்களை சரி பார்க்கவும், அவர் எழுதுவது உண்மைதானா என்பதை அறியவும் அதே இணையத்தினை பயன்படுத்த முடியும் என்பதை அவர் உணர்ந்து கொள்வது நல்லது.

சாரு எழுதுகிறார்“பாலஸ்தீனிய கிராமங்களில் Haganah ராணுவத்தினர் பாலஸ்தீனிய மக்களைக் கொன்று குவித்தனர் ( 1920 முதல் 1948 வரை இயங்கி வந்த

யூதர்களின் தலைமறைவு ராணுவம் இது கிட்டத்தட்ட ஹிட்லரின் நாஜி ராணுவத்தைப் போன்ற ஹகானாவின் இலக்கு : முஸ்லீம்கள்) இந்தக் கதையை பற்றிக் கேள்விப்பட்ட அடுத்தடுத்த தலைமுறையினர் இப்போது அதே கதை தங்கள் வாழ்க்கையிலும் நடப்பதைப் பார்த்தனர்”

இதைப் படித்துவிட்டு Haganah என்பதை கூகுளில் தேடினால் சாருவின் பொய்கள் வெட்ட வெளிச்சமாகின்றன. Haganah முதலில் ஒரு தற்காப்பு பிரிவாகத்தான் செயல்பட்டது. அதன் நோக்கம் யூதர்களை, அவர்கள் சொத்துக்களை தொந்தரவு தரும் பாலஸ்தீனிய அராபியர்களிடமிருந்து காப்பாற்றுவது. அதை நாஜி ராணுவத்துடன் ஒப்பிட முடியாது. முஸ்லீம்களை வேட்டையாடுவது அதன் குறிக்கோள் அல்ல. ஏதோ பாலஸ்தீனியர்கள் ஒன்றுமறியா அப்பாவிகள் போல் சித்தரிப்பது 'பொலிடிகலி கரெக்கட்'டாக இருந்தாலும்,
அது உண்மையாகிவிடாது.

சுருக்கமாகச் சொன்னால் சாரு பொய்களை உண்மையாக காட்ட முயன்றிருக்கிறார்.

சரி சில ஆண்டுகள் முன்பு நடந்தையாவது பற்றி எழுதும் போதாவது உண்மையை எழுதுகிறாரா என்றால் அதுவும் இல்லை. சாரு எழுதுகிறார்
'லெபனானில் இஸ்ரேலின் ஆக்ரமிப்பை எதிர்த்த ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடைசிவரை இஸ்ரேலிய குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கவில்லை.'

இது எத்தகைய பொய் என்பதை கீழ்க்கண்ட சுட்டிகளிலிருந்து அறியலாம். அமென்ஸ்டி அமைப்பும் (கவனிக்க அமெனிஸ்டி அமைப்பு), ஹுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பும் ஹிஸ்புல்லாவின் போர்க் குற்றங்களை கண்டித்துள்ளன.

Amnesty International has accused Lebanon's Hizbollah movement of committing war crimes by deliberately targeting Israeli civilians with its rockets. The 4,000 rockets it fired into northern Israel during the war in Lebanon killed 43 civilians, seriously wounded 33 and forced hundreds of thousands of others to live in shelters. ....Irene Khan, Amnesty International's secretary general, said: "The scale of Hizbollah's attacks on Israeli cities, towns and villages, the indiscriminate nature of the weapons used, and statements from the leadership
confirming their intent to target civilians, make it all too clear that Hizbollah violated the laws of war."
http://www.independent.co.uk/news/world/middle-east/hizbollah-rocket-attacks-on-israelis-war-crimes-415903.html

இன்னொரு செய்தி“The experts also concluded that Hizbollah violated humanitarian law in many instances by targeting civilian populations and by disregarding the principle of distinction… The UN Human Rights Council should ensure a thorough investigation of whether Hizbollah’s attacks on heavily populated civilian areas in northern Israel amounted to war crimes.”

http://www.un.org/apps/news/story.asp?NewsID=20134&Cr=middle&Cr1=east

ஹுமன் ரைட்ஸ் வாட்ச் ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல்கள் பற்றி ஒரு விரிவான ஆய்வறிக்கையை (Civilians under Assault Hezbollah’s Rocket Attacks on Israel in the 2006 War) கடந்த ஆண்டு வெளியிட்டது. 2006ல் அது ஒரு அறிக்கையையும் வெளியிட்டது.

இங்கு இஸ்ரேல் செய்ததது, ஆகவே நாங்கள் செய்தோம் என்ற வாதத்தினை ஹுமன் ரைட்ஸ் வாட்ச் ஏற்கவில்லை. மாறாக இந்த ஆய்வறிக்கையில்
“At all times, we seek to measure each party’s compliance with its obligations under the laws of war, rather than measure it against the conduct of the other party. To criticize one party for violating international humanitarian law does not excuse or mitigate the violations committed by the other party.” என்று குறிப்பிடுகிறது.

இந்த அணுகுமுறையை சாருவின் கட்டுரையில் காண முடியாது, மாறாக அது ஒரு தலைப்பட்சமாக, பொய்களைக் கொண்டுள்ளது. இஸ்ரேல் விமர்சிக்கப்பட வேண்டும், அதன் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டும். அதே சமயம் இரு தரப்பிலும் போர் விதிகள் மீறப்பட்டுள்ளன, சிவிலியன்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஆனால் சாருவோ உண்மையை மூடி மறைத்து விட்டு
'லெபனானில் இஸ்ரேலின் ஆக்ரமிப்பை எதிர்த்த ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடைசிவரை இஸ்ரேலிய குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கவில்லை.'

என்று ஹிஸ்புல்லா அமைப்பே சொல்லாத ஒன்றை இட்டுக் கட்டி எழுதுகிறார்.

பொதுவாக இஸ்ரேலை வெறுப்பவர்கள், பாலஸ்தீனர்களை ஆதரிப்பவர்கள் தம் வெறுப்புடன் சாரு எழுதியதைப் படித்தால் அவர் எழுதியிருப்பது உண்மை என்றே தோன்றும். ஆனால் இஸ்ரேலை நான் வெறுத்தாலும் அல்லது ஆதரித்தாலும் எழுதப்பட்டுள்ளது பொய் என்றால் அதை ஏற்க மாட்டேன் என்று முடிவு செய்தால் சாரு எழுதியிருப்பது ஹிஸ்புல்லா ஆதரவு பிரச்சாரம் என்று தெளிவாகப் புரியும். அதே சமயம் தமிழில் எழுதப்பட்டுள்ள ஹிஸ்புல்லா ஆதரவு கட்டுரைகளை மட்டுமே படித்திருந்தால் சாரு எழுதியிருப்பது உண்மை என்றே கருதத் தோன்றும்.

எதிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட தரப்பின் கருத்தை அறிய முயலும், ஒரே தளத்தையோ அல்லது செய்தி ஏட்டையோ நம்பால் பல்வேறு தளங்களில் என்னதான் சொல்லியிருக்கிறார்கள் என்பதை அறிய விழையும் என் போன்றவர்களுக்கு சாரு போன்றவர்கள் எழுதுவதை படிக்கும் போது இது கட்டுக்கதையோ என்ற ஐயம் எழும் அல்லது இது ஹிஸ்புல்லா ஆதரவிற்காக பொய்களை கலந்து எழுதப்பட்ட கட்டுரை என்பது தெரிந்துவிடும். செலக்டிவ் அம்னிஷியா உள்ளவர்களுக்கு இந்த சந்தேகங்கள் எழாமல் இருக்கலாம் அல்லது இப்படி எழுதினாலும் 'அம்னெஸ்டி' தந்துவிடலாம் அவர்கள் நினைத்திருக்கலாம்:).ஆகவே வாசகர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

தமிழில் சாரு, அ.முத்துகிருஷ்ணன், அ. மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை உட்பட பலரின் எழுத்துக்களில் இப்படி பொய்கள், அரை உண்மைகள், கலந்து எழுதப்பட்டிருப்பதை நான கவனித்திருக்கிறேன். எனவே இவர்கள் எழுதியதைப் படிக்கும் போது அவர்கள் எழுதியிருப்பது
அனைத்தும் உண்மை என்றோ அல்லது சரியான தகவல்களை தந்திருக்கிறார்கள் என்றோ கருதிப் படிக்க மாட்டேன். எனக்கு தெரிந்த அல்லது பரிச்சயமானவை குறித்து இவர்கள் எழுதும் போதே அதில் உள்ள பொய்களை என்னால் அடையாளம் காண முடியும் போது நான் அறியாதவை அல்லது எனக்கு புதிதாக உள்ளவை குறித்த இவர்கள் எழுத்தின் மீது எனக்கு எப்படி நம்பிக்கை வரும்.

ஹிஸ்புல்லாவின் நோக்கங்கள் குறித்து சாரு எதுவும் அதில் குறிப்பிடவில்லை. அது லெபனானில் இஸ்லாமிய அரசினை நிறுவதைக் குறிக்கோளாக கொண்டிருந்தது. பின்னர்தான் அதை மாற்றிக் கொண்டது. இதையெல்லாம் குறிப்பிடாமல் இருப்பது வசதியானது. இந்தியாவில் ஹிந்த்துவக் கட்சி என்று பாஜகை எதிர்த்து எழுதி விட்டு, இஸ்லாமிய அரசை பாலஸ்தீனத்தில் நிறுவுவதை லட்சியமாகக் கொண்ட ஹமாஸை ஆதரித்தும், இஸ்லாமிய அரசை நிறுவுவதை குறிக்கோளாக கொண்டிருந்த ஹிஸ்புல்லாவை ஆதரித்தும் எழுதுவது ‘பொலிடிகலி கரெக்ட்' தானே ?

தமிழில் யார் யார் இப்படி ‘பொலிடிகலி கரெக்ட்' ஆக எழுதியிருக்கிறார்கள், எழுதுகிறார்கள் என்ற பட்டியல் என்னிடம் இல்லை. தமிழில் ஹிஸ்புல்லா குறித்து எழுதப்பட்டுவள்ளவற்றை தொகுத்துப் படித்தால் சில முடிபுகளை முன் வைக்க முடியும் என்று தோன்றுகிறது. நிச்சயம் நான் அதைச் செய்யப் போவதில்லை.

அடுத்த இடுகை : ஜமாலனின் Procrustean Bed

Labels: , , ,

தெகல்கா, சிமி, மறைக்கப்பட்ட உண்மைகள்

தெகல்கா, சிமி, மறைக்கப்பட்ட உண்மைகள்

இந்த வார தெகல்கா சிமி(SIMI) ஆதரவு சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. தடை செய்யப்பட்ட சிமிக்கு ஆதரவாக தெஹல்கா எழுதுவதுடன், சிமி குறித்த உண்மையான தகவல்களையும் மறைக்கிறது. சிமி ஒரு மதத்தீவிரவாத அமைப்பு. அதன் குறிக்கோள் இஸ்லாமியர் அல்லாத இந்தியர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவது. தெகல்காவிற்கு கொடுத்துள்ள பேட்டியில் அதன் முன்னாள் தலைவர் கூறுகிறார்.

It is said that SIMI’s ideology does not believe in the Indian Constitution, that it is pan-Islamic, that it rejects India’s nationalism?

These are only allegations. We have given our detailed written explanations to the courts. Please read them if you can. I believe that in a land where everybody is allowed to follow his religion and principles and popularise those ideals, we also want that all those who live on this planet should live like Allah’s people, and live their lives as per the teachings of Allah and Prophet Mohammad. This is our desire. But we do not use any force for this, because Allah Himself has rejected force. But is it wrong to make one’s ideologies public and propagate it in a decent manner? No.

There are 80 crore Hindus in India. What does SIMI think of them?

This is a very good question. Allah has set some rules for his kingdom. They say that you should call the people on the earth towards the religion of god with service, advice, in a decent way, with politeness, with logic. All of us are sons and daughters of Adam and Eve. We love all human beings and want to save them all from the fires of hell. We want them to live in a just world and, after death, live peacefully in heaven.

அதாவது இஸ்லாமியர் அல்லாதோரை இஸ்லாத்தின் பாதைக்கு திருப்புவது தங்கள் குறிக்கோள் என்கிறார்.இந்திய அரசியல் சட்டத்தை வேறு குறிப்பிடுகிறார். அரசியல்
சட்டம் மத உரிமை என்ற பெயரில் மத மாற்றம் செய்வதை அடிப்படை உரிமையாக
கருதவில்லை என்று உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்புகளில் கூறியிருக்கிறது. மேலும் மத
உரிமை என்பது கட்டற்ற உரிமை அல்ல.மகாத்மா காந்தியும் மத மாற்ற நடவடிக்கைகளை
ஆதரிக்கவில்லை. எம்மதமும் சம்மதம் என்ற நம்பிக்கை இல்லாத சிமிக்கு ஆதரவாக
இருப்பவர்கள் பிற மதங்களின் விரோதிகள்தான். அவர்கள் மதச்சார்பின்மை என்பதை
நம்பவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதே இதழில் தருண் தெஜ்பால் எழுதுகிறார்

While extreme viewpoints have a right to exist in a free society, it goes without saying that no one ought to have any sympathy for the positions of bigoted groups and individuals. The kind who base their existence on perilous ideas of divine rights, exclusion of unbelievers, intolerance, violence, and a preferred way of life to which everyone else must conform. If SIMI is one such organisation, it deserves our criticism and scorn.

அவர் மேற்கூறிய பேட்டியைப் படித்தாரா, படித்த பின்னும் இப்படித்தான் எழுதுகிறாரா. தெகல்கா இதழில் சிமி மீது அதன் அடிப்படை கோட்பாடு குறித்து எந்த விமர்சனம் இல்லை, அனுதாபமும், ஆதரவும்தான் தெரிவிக்கப்படுகிறது. தெகல்காவின் மதச்சார்பின்மை என்பது
இந்த்துவ எதிர்ப்பு என்பதுடன் நின்றுவிடுகிறது போலும்.

அது மட்டுமின்றி தெகல்கா சிமி குறித்த முக்கியமான உண்மைகளை மறைத்து விட்டு எழுதுகிறது. உச்ச நீதி மன்ற நீதிபதிகள் சிமி ஒருபிரிவினைவாத அமைப்பு என்று கூறியிருக்கிறார்கள்.சிமி ஒரு மாணவர் அமைப்பாக அல்லது முஸ்லீம்களின் கல்விக்காக பாடுபடும் அமைப்பாக இருந்தால் பிரச்சினை இல்லை. மாறாக அது மாணவர் அமைப்பு என்ற பெயரில் தேச விரோத,சமூக விரோத அமைப்பாக இருந்ததுதான் அதன் மீது அரசு நடவடிக்கை எடுக்கக் காரணம். தெகல்காவின் முழு நோக்கம் என்ன, அது எந்தெந்த காலகட்டங்களில் எதையெல்லாம் முன்வைத்து இயங்கியது என்பதை தெகல்கா எழுதவில்லை.

இது குறித்து அடுத்த இதழ் தெகல்கா வெளியான பின் விரிவாக எழுதுவோம்.தெகல்காவின் இந்தப் போக்கு கண்டிக்கதக்கது. தெகல்கா தெரிந்தோ, தெரியாமலோ இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் அனுதாபம் காட்டுகிறது. அது தெகல்காவிற்கும் நல்லதல்ல, சமூகத்திற்கும் நல்லதல்ல.

Labels: , ,

ஏ பார் அமேசான் பி பார் பார்னஸ் நோபிள்ஸ் இல்லை :)

ஏ பார் அமேசான் பி பார் பார்னஸ் நோபிள்ஸ் இல்லை :)

இந்த இடுகைக்கு பிள்ளையார் சுழி இங்கே

சிலர் பசியை தீர்க்க சாப்பிடுவதுண்டு, சிலர் ருசி பார்க்க,வகை தேடி சாப்பிடுவதுண்டு, சிலர் வேறுவகையாக,கலோரி பார்த்து,டிரான்ஸ்-பேட் இருக்கிறதா என்று பார்த்து, ஆர்கானிகா இல்லையா என்று பார்த்து சாப்பிடுவதுண்டு. சர்க்கரை சபலத்தை மீற முடியுமால் ஐஸ் கிரீம் சாப்பிட்டுவிட்டு கூடுதலாக ஒரு மாத்திரை, அரை மணி நேர நடையை ஒரு முறை ஒரு மணிக்கு நீட்டி ரத்தததில் கூடிவிட்ட சர்க்கரையை சரிக்கட்ட முயலும் சர்க்கரை
வியாதிக்காரர்களும் உண்டு. ஒரு காலத்தில் நான் ருசிக்காக வகை தேடி சாப்பிடுவது போல் இணையத்தில் சஞ்சாரித்துக் கொண்டிருந்தேன். பின்னர் இணையத்தில் சஞ்சாரிப்பதைக் குறைத்துக் கொண்டு இணையுடன் அதிக நேரம் செலவழிக்க தொடங்கினேன் பின்னர் சில காரணங்களால் ருசி பார்க்க வகை தேடும் பிரிவிலிருந்து பசி தீர்க்க, கலோரி பார்த்து சாப்பிடும் பிரிவிற்கு மாறிவிட்டேன். இந்தக் கட்சி மாறலுக்கு நானே பொறுப்பு என்பதையும்
இங்கே தெரிவித்துவிடுகிறேன்.

நேற்று எந்த இணையதளங்களுக்கு சென்றாய் என்று இன்று கேட்டால் முழிக்கிற ஆசாமி நான். ஏனெனில் மினனஞ்சல் படிக்க, ஏடுகள்/செய்தித்தாள்கள் போன்றவை படிக்க வழக்கமாக செல்வது தவிர அடிக்கடி செல்லும் இணையதளங்கள் என்று பட்டியல் தரமுடியாதவன் நான். ஏனென்றால் மின்னஞ்சல் மற்றும் வேறு வழிகளில் கிடைக்கிறதை வைத்துத்தான் அன்று எந்த இணையதளங்களை பார்ப்பது என்பதை முடிவு செய்வேன். உதாரணமாக அன்றைய
மின்னஞ்சலில் ஒரு இணையதளத்தில் உள்ள அறிக்கை பற்றி தகவல் இருந்து, அது எனக்குத் தேவையானால் அதை தரவிறக்கம் செய்வேன்.பல இணையதளங்களில், வலைப்பதிவுகள் உட்பட இன்ன பிறவற்றில் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்திருப்பதால் மின்னஞ்சல்கள் மூலமே பெரும்பாலும் என் அன்றாட இணைய தேடல் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக மின்னஞ்சலில் ஒரு கட்டுரை கிடைக்கிறது. அதை தரவிற்க்கி படிக்கும் போது அதில் critical ecologies என்ற நூல் சுட்டப்படுகிறது என்றால், கட்டுரையைப் படித்தவுடன் அதை கூகுளிட்டு தகவல் பெறுவேன். எனக்கு தேவையான நூல்/கட்டுரை/அறிக்கை என்றால் நூல் குறித்த விபரங்களை குறித்து அல்லது அச்சிட்டு வைத்துக் கொள்வேன். பின்னர் அதைப் பெற
முயல்வேன்.

பல சமயங்களில் நூற்கள்/கட்டுரைகள்/அறிக்கைகள் சுட்டும் இணையமுகவரிக்களுக்குச் செல்வேன். இப்படியாக எதிலிருந்தோ துவங்கி எங்கெங்கோ சஞ்சரிப்பதும், ஒன்றிலிருந்து இன்னொன்றை தேடுவதும், தரவிறக்குவதும் நடக்கும். இந்த மோசமான பழக்கத்திலிருந்து விடுபட்டு வருகிறேன். நிர்தாட்சண்யமாக தரவிறக்குவதை குறைத்துக் கொண்டிருக்கிறேன். அதாவது கலோரி பார்த்து சாப்பிடும் நிலைக்கு வந்திருக்கிறேன். அதற்காக நான்
அறிய வேண்டியதை அறிவதைத் தவிர்க்க மாட்டேன். எத்தனையோ விஷயங்கள் அதுவாகவே மனதில் பதிந்து விடும். உதாரணமாக உலக வங்கி,IMF குறித்த ஆய்வு அக்கறை எனக்கு இல்லை. ஆனால் உலக வங்கி நான் ஆய்வு செய்பவற்றில் என்ன செய்கிறது என்பது தெரிய வந்துவிடும்,எதோ வகையில். பொதுவாக உலக வங்கி,IMF குறித்து என்ன விமர்சனங்கள் வருகின்றன, எந்த அமைப்புகள் எந்த போராட்டங்களை நடத்துகின்றன என்பதை சில இணையதளங்கள் மூலம் அறியமுடியும் என்பதை மூளையில் பதிந்து வைத்திருப்பதால் அவற்றை அடிக்கடி பார்வையிடத் தேவையில்லை. இப்படி
சிலவற்றிற்கு சென்று தேவையானதைப் பெற முடியும் என்பதால் பல இணையதளங்களில் என் மின்னஞ்சல் முகவரிகளை பதிந்து வைக்கவில்லை.

பல சமயங்களில் எனக்குத் தேவையில்லை , நண்பர்களுக்கு தேவைப்படும் என்பதால் என் பார்வைக்கு வரும் தகவல்கள், இணையதள முகவரிகளைப் பகிர்ந்து கொள்வேன். உதாரணமாக என் நண்பர் ஒருவர் Environmental Justice and Human Rights குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு Environmental Justice குறித்து பரிச்சயம் இல்லை. என்னை அணுகினார், சொன்னவுடன் இதில் இதை இதைப் படியுங்கள், பிரிட்டனில் இன்னார்
இன்னார் எழுதியது, அமெரிக்காவில் இன்னார் இன்னார் எழுதியது, இந்தியாவில் இன்னார் இன்னார் எழுதியது, இதில் முக்கியமான கட்டுரைகள் இந்தெந்த ஜர்னல்களில் உள்ளன, உங்கள் தேவைகளுக்கு இந்தெந்த இணையதளங்களை பாருங்கள் என்று ஒரு பட்டியலை நினைவிலிருந்தே உடனே கொடுத்து Cambridge University Press வெளியிட்டுள்ள அண்மையில் வந்த இந்த நூல் உங்களுக்கு உதவும் என்றேன். என்னுடைய 'கிடங்குகளை'
தேடாமல் சொன்னவை இவை. அந்த இணையதளங்களை அதிகம் பார்வையிடுவதில்லை என்றாலும் அவருக்குத் உதவும் என்பதால் உடனே கூறினேன்.

பல இணையதளங்களை/அமைப்புகளை அவை தொடர்புடைய நபர்கள், விஷயங்களுடன் தொடர்புபடுத்தியே நினைவில் வைத்திருக்கிறேன். எனவே முகவரிகளை தேடும் போது அதிக சிக்கல் இல்லை. Favorities என்று பலவற்றை குறித்து வைத்திருந்தாலும் அதை
பார்வையிடாமலே பெரும்பாலும் முகவரிகளை சுட்ட முடியும். அல்லது எங்கிருந்து எங்கே செல்ல முடியும் என்பதை தெரிந்து வைத்திருப்பேன்.

உதாரணமாக ஆஸ்தேரலியாவில் உள்ள பல்கலைகழகங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடுகளை இணையத்தில் தேட ஒரு முகவரி இருக்கிறது. ஆனால் அதை நினைவில் கொள்வதைவிடவும், favoritiesகளில் சேர்ப்பதையும் விட இந்த முகவரி http://epress.anu.edu.au/ எனக்கு நினைவில் கொளவது எளிது, ஏனென்றால் anu.edu.au மிகவும் பரிச்சயமான இணைய முகவரி. இதற்கு செல்வதில் எனக்கு உள்ள ‘ஒரே'
பிரச்சினை, நான் நூல்களையும், ஆய்வேடுகளையும் தேடி தரவிறக்க ஆரம்பித்துவிடுவேன். இது போல் முகவரி தெரிந்தும் நான் தவிர்க்கும் இணையதளங்கள் பல :).

ஜர்னல்களில் தேட ingentaconnect, sciencedirect போன்றவற்றிற்கு செல்வேன். முன்பு blackwell-synergy என்பது இப்போது wiely யில் ஐக்கியமாகிவிட்டது, இருப்பினும் பழைய முகவரிக்கு போனாலும் புதிதிற்கு இட்டுச் செல்லும். இது போல் நான் அடிக்கடி செல்லும்
இணையமுகவரிகள் கூட பெரும்பாலும் பணி/ஆய்வு/அக்கறை தொடர்பான்வை.தெரிந்தெடுத்துத்தான் படிக்கிறேன், அதுவும் பெரும்பாலும் மின்னஞ்சல் மூலம். உச்சநீதிமன்ற தீர்ப்புகளைத் தேட ஒரு இணையதளம் இருக்கிறது. தேவையைப் பொருத்து அங்கு செல்வதுண்டு, தீர்ப்புகளை PDF ஆக அதில் பெறமுடியும். மானுடவியல் ஜர்னல்களில் தேட anthrosource.net என்ற தளம், Science Studies, STS குறித்து தகவல் அறிய 4s.org போன்று சில இணையமுகவரிகள் மனப்பாடம். அது போல் online.sagepub.com என்ற தளம் மூலம் sage publications வெளியிடும் ஜர்னல்களில் என்ன வெளியாகியிருக்கிறது என்பதைத் தேட முடியும். இப்படிப்பட்ட தளங்களுக்கு மாதம் ஒரு
முறையாவது செல்வதுண்டு. வாரம் ஒருமுறையாவது ssrn.com என்ற தளத்திற்கு செல்வேன், கட்டுரைகளை தரவிறக்க, புதிதாக இடப்பட்டுள்ள அறிவிப்புகளைப் படிக்க. எனக்கு இந்த தளம் மிகவும் பயனுள்ள தளம். இணையத்தில் borderlands, janushead போன்ற ஜர்னல்களும், Open Access முறையில் ஏராளமான வெளியீடுகளும் கிடைக்கின்றன. இதில் தேவையானவற்றை அவ்வப்போது பார்த்துவிடுவேன். நான் பார்க்காவிட்டாலும் ஏதேனும் மின்மடலாடற் குழு மூலம் அல்லது வேறு வகையில் எனக்குத் தேவையானவை குறித்த தகவல் கிட்டிவிடும். EPW, economist,Foreign Affairs உட்பட பலவற்றை இணையத்தில்தான் பார்க்கிறேன். நூல்கள் வாங்குவதை கிட்டதட்ட நிறுத்திவிட்ட நிலையில் நான் அமேசான் தளத்திற்குப் போகாவிட்டாலும் மின்னஞசல் மூலம அமேசானில் கிடைப்பவை என் கவனித்திற்கு வந்துவிடும். பெருமூச்சு விட்டபடி அதைப் படிக்க
வேண்டியிருக்கும் :).

என் இணையத் தேடல் தேவையானதைப் பெறுவதையும், தேவையற்றதை தவிர்ப்பதையும் பிரதான நோக்கமாகக் கொண்டது. தேவையானதை பெறுகிறேன் என்ற பெயரில் தேவையற்றைதையும் ஏராளமாக பெறுவதை தவிர்க்க வேண்டும் என்பதால் கவனமாக இணையத்தில் தேடுகிறேன்.பிறகு படித்துக்கொள்ளலாம் என்று தரவிறக்குவதை முற்றிலுமாக நிறுத்த முடியவில்லை. Multitude ஐ படித்தால், அது தொடர்புடைய முனைவர்
பட்ட ஆய்வேடு(கள்) தரவிறக்க கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படியும் இப்படியுமாக ஜிபிக்கள் அளவில் சேரும் போது தலைச்சுற்றுகிறது. இப்படியாகத்தான் இணையத் தேடல் பிள்ளையார் பிடிக்க போய் ஒரு பிள்ளையாரும், நாற்பது குரங்குகளும் என்று முடிகிறது.

ஒருவகையில் இது ஒரு நோயின் தொடர்ச்சிதான். புத்தகங்கள் வாங்குவது, ஜர்னல் கட்டுரைகளை தேடிப் பெறுவது, நூல்களை xerox செய்வது என்றிருந்த நோய்க்கு இணையம் மருந்தல்ல :). இதை அறியும் போது நோய் முற்றி சிகிச்சை இல்லை என்பது தெரிகிறது :).

பாஸ்டன் பாலாஜி சரணம் கச்சாமி :)

Labels: , ,

சிறு அறிவிப்பு

சிறு அறிவிப்பு

இந்த வலைப்பதிவு வாசகர்களில் சிலரும்,, திண்ணையில் நான் எழுதியதைப் படித்து என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் சிலரும், மற்றும் எனக்கு 'அறிமுகம்' இல்லாத சிலரும் என்னை சில நட்பு மற்றும் social networking தளங்களில்/குழுக்களில், மடலாடற் குழுக்களில் சேரும் படி நட்பு அழைப்புகள் விடுக்கிறார்கள். அதற்கு என் நன்றிகள். என்னால் அவற்றை ஏற்று அவ்வாறு சேர இயலாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இணையத்தில் நான் செலவழிக்கும் நேரத்தினை குறைத்துக் கொண்டிருக்கிறேன்.வேலைப்பளு அதிகரித்துள்ளது, செய்ய வேண்டியவையும் ஏராளமாக உள்ளன.எனக்கு ஆர்வமுள்ள பலவற்றில் ஈடுபட்டிருக்கிறேன்.அவற்றை செவ்வன செய்வதற்கே நேரம் பிரச்சினையாக இருக்கிறது. இந்நிலையில் மேற்கூறிய social networking மற்றும் அதையொத்த குழுக்கள், மடலாடற்குழுக்களில் சேர்ந்து பங்காற்ற என்னால் இயலாது. வெறும் பெயரளவிற்கு சேர்வதில் அர்த்தமில்லை. ஏனெனில் என்னை அழைப்பவர்கள் நான் விவாதங்களில் பங்கு பெற வேண்டும் என்பதையும், கருத்துப் பரிமற்றம் இருக்க வேண்டும் என்பதையும் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை நானறிவேன்.ஆகையால் அந்த அழைப்புகளை ஏற்று நேர்மறையாக என்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். புரிந்துணர்விற்கு நன்றி.

Labels: , ,