அருந்ததி ராயின் புதிய சிறு கதை

அருந்ததி ராயின் புதிய சிறு கதை-புவி வெப்பமடைதல்-முதலாளித்துவம்

இடதுசாரி, முற்போக்குகளின் கனவு அறிவுஜிவியான அருந்ததி ராய் 11 ஆண்டுகள் கழித்து ஒரு புனைவு எழுதியிருக்கிறார். கதையைப் பற்றி பேட்டியிலும் கூறியிருக்கிறார். மிகச் சாதாரணமான சிறுகதை என்று கூட சொல்ல மாட்டேன், பாடாவதி என்றுதான் சொல்வேன். பேட்டியில் பொலிடிகலி கரெக்டான விஷயங்களைச் சொல்லிய்ருப்பதால் இடதுசாரி, முற்போக்குகளுக்கு கதை புரியாமல் போகாது. உலக வெப்பமயமாதல், முதலாளித்துவம் என்று சொன்ன பின் அவர்களுக்கு அதைக் கொண்டாடுவதில் தயக்கம் இருக்காது. அப்புறம் என்ன விரைவில் இந்தக் கதையும், பேட்டியும் தமிழில் வெளிவரும். ஏற்கனவே இடதுசாரிகள் புவி வெப்பமடைதலுக்கு காரணம் முதலாளித்துவம் என்று எழுதியும், பேசியும் வருகிறார்கள். இப்போது அருந்ததி அதை வைத்து ஒரு கதையே எழுதிவிட்டார். அருந்ததியே சொன்ன பின் அப்பீல் ஏது என்று இதை வைத்தே முதலாளியத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே திட்டலாம்.

இருந்தும் அருந்ததி ராயே சொன்னாலும் கூட தமிழ்ச் சூழலில் இடதுசாரி,முற்போக்குகள் கண்டு கொள்ளாத/புறக்கணித்த ஒன்று இருக்கிறது. மோடியை, இந்த்துவத்தையெல்லாம் கூட விமர்சித்தாலும் அவரின் ஒரு உரை தமிழ்ச்சூழலில் கண்டுகொள்ளப்படவேயில்லை. அது என்ன உரை, அவர் சொன்னது என்ன, அதை ஏன் இவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

உலக வெப்பமடைதலுக்கு முதலாளித்துவம் பொறுப்பில்லை என்று கூறுகிறீர்களா என்று கேட்டால் என் சுருக்கமான பதில் இதுதான்.

இந்தப் பிரச்சினையை புரிந்து கொள்ள, தீர்வுகாண முதலாளித்துவம் குறித்த விமர்சனங்கள் தேவை, ஆனால் அவை மட்டும் போதுமானவை அல்ல. இது மானுட இனம் முன் உள்ள மாபெரும் பிரச்சினை. முதலாளித்துவம் vs சோசலிசம் என்பதையும் தாண்டி சிந்தித்தால்தான் தீர்வு கிடைக்கும். முதலாளித்துவத்தை மறுதலித்து தீர்வு காணக் கூடிய நிலையில் நடைமுறையில் 'சோசலிசம்' வலுவாக இல்லை. கோட்பாட்டளவில் சிலவற்றை சோசலிச தீர்வுகள் என்று முன் வைக்கலாம். மற்றப்படி முதலாளித்துவம் ஒழிந்து சோசலிசம் மலர்ந்தால்தான் தீர்வு உருவாகும் என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு. பிரச்சினைக்கு ‘சோசலிச' நாடுகளும் பங்களித்துள்ளன என்பதையும், ‘சோசலிச' சித்தாந்தமும் ஒரு காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இன்னும் சில பத்தாண்டுகளுக்குள் பலவற்றை செய்தால்/நடைமுறைப்படுத்தினால்தான் புவி வெப்பமடைதலின் மோசமான விளைவுகளில் சிலவற்றை தவிர்க்க முடியும், சிலவற்றின்
பாதிப்பை குறைக்க முடியும். அதையெல்லாம் முதலாளித்துவத்தை ஒழித்த பின் செய்வோம் என்று வாதிடுவது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே முதலாளித்துவத்தின் இருப்பை, அது எப்படி இதை அணுகுகிறது என்பதை புரிந்து கொண்டு, அது இன்னும் பல காலம் தொடரும் என்ற அடிப்படையில்தான் தீர்வுகளை யோசிக்க முடியும். இது நாடுகள் தொடர்புடைய சிக்கல், வெறும் தத்துவ கோட்ப்பாட்டு சிக்கல் மட்டுமல்ல. சர்வதேச சுற்றுச்சூழல் பிரச்சினைகளுள் முதன்மையான பிரச்சினை இது. அமெரிக்காவை புறக்கணித்து விட்டோ அல்லது இந்தியா,சீனாவை புறக்கணித்துவிட்டோ தீர்வு சாத்தியமேயில்லை. சந்தை சக்திகள் தீர்வில் நேர்மறையான பங்கு வகிக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

Labels: , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு