தீராநதிக்கு ஒரு கடிதம் ( நாகார்ஜுனன்-ராஜன் குறை-அ.மார்க்ஸ்)

தீராநதிக்கு ஒரு கடிதம் ( நாகார்ஜுனன்-ராஜன் குறை-அ.மார்க்ஸ்)

ஜூன் மாத தீராநதியில் வெளியான இரு கட்டுரைகளுக்கு எதிர்வினையாக கீழே தரப்பட்டுள்ள கடிதத்தினை தீராநதிக்கு அனுப்பினேன். அது வெளியாகியிருக்கிறதா என்று தெரியாது. தீராநதியை இணையத்தில் பார்க்கிறேன். இதழை அச்சில் படிப்பவர்கள் ஜூலை இதழில் கடிதம் வெளியாகியிருக்கிறதா, இல்லையா என்பது குறித்து தகவல் தரலாம்.

கடிதத்தினை தகவலுக்காவும், ஆவணப்படுத்தவும் இங்கு இடுகிறேன்.

நாகர்ஜுனன் எழுதியது
http://nagarjunan.blogspot.com/2008/05/blog-post_28.html

ராஜன்குறை, அ.மார்க்ஸ் எழுதியது
http://ravisrinivas.blogspot.com/2008/06/blog-post_11.html

-------------------------------------------------------------------------------
”அதேவேளை, 1979ஆம் ஆண்டில் அமெரிக்க கைப்பாவையான ஷாவின் ஆட்சிக்கு எதிரான ஈரானியப் புரட்சியை ஒரு ஆன்மீக எழுச்சியாக முதலில் கணித்தவர் அவர் " என்று நாகார்ஜுனன் எழுதியிருக்கிறார். பூக்கோ அதை ஏன் ஆன்மிக எழுச்சியாக எந்த அடிப்படையில் கணிதார் என்பதையும், ஈரானிய புரட்சி குறித்த பூக்கோவின் கணிப்புகள் எந்த அளவிற்கு மெய்யாயின என்பதையும் அவர் எழுதியிருக்கலாம். ஈரானிய புரட்சி குறித்த பூக்கோவின் கருத்துக்கள் அப்போதே விமர்சிக்கப்பட்டன. ஷாவின் ஆட்சியின் வீழ்ச்சியையும், ஈரானிய மக்களின் எழுச்சியையும் ஆதரித்த இடதுசாரிகள், பெண்ணியவாதிகள் பழமைவாத கோமேனியை ஆதரிக்கவில்லை. மதவாதிகளின் ஆட்சியில் பெண்களின் உரிமை மதிக்கப்படாது என்று எச்சரித்தனர். அவர்களை பூக்கோ எள்ளி நகையாடினார். இது குறித்து கேள்வி எழுப்பிய ஈரானைச் சேர்ந்த பிரான்சில் வாழ்ந்த பெண்ணியவாதியின் கேள்விகளை அலட்சியப்படுத்தி எழுதினார்.

2005ல் வெளிவந்த Janet Afary and Kevin B. Anderson. Foucault and the Iranian Revolution: Gender and the Seductions of Islamism. Chicago: University Chicago Press என்ற நூலில் முதன்முறையாக ஈரான் புரட்சி குறித்து பூக்கோ எழுதியவை அனைத்தும் ஆங்கில மொழிபெயர்ப்பில் தரப்பட்டன. அதற்கு முன் ஈரான் குறிதது அவர் எழுதியவை, அவருடனான பேட்டிகள் ஒரு சிலவே ஆங்கிலத்தில் கிடைத்தன. இந்த நூல் பூக்கோவின் எழுத்துக்கள், கருத்துக்கள் மீதான ஒரு விரிவான அலசலையும், விமர்சனத்தையும் முன் வைத்தது. பூக்கோவால் ஏன் ஷியா இஸ்லாத்தினை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை, ஈரானிய புரட்சி குறித்த இடதுசாரி, பெண்ணிய விமர்சனங்களையும் மீறி அதை ஏன் அவர் ஆன்மிகப் புரட்சியாக கணித்தார். அதற்கும் அவரது நவீன எதிர்ப்பு சிந்தனைகளுக்கும் உள்ள தொட்ர்பு என்ன போன்ற கேள்விகளுக்கு இந்த நூல் விடையளிக்க முயல்கிறது. பெரும் கவனிப்பை பெற்ற இந்த நூல் ஒரு விவாதத்தையும் கிளப்பியது. தமிழில் யமுனா ராசேந்திரன் இதைப் பற்றி எழுதியதாக நினைவு. பிரண்ட்லைனில் அந்த நூலின் மதிப்புரை வெளியானது. ஈரானில் நடந்த புரட்சியை,மதவாத எதிர்வினைகளை ஆதரித்தது பூக்கோ செய்த மோசமான தவறு, அது ஒரு வெறும் பிழை அல்லது சறுக்கல் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாகர்ஜுனனோ “அதேவேளை, 1979ஆம் ஆண்டில் அமெரிக்க கைப்பாவையான ஷாவின் ஆட்சிக்கு எதிரான ஈரானியப் புரட்சியை ஒரு ஆன்மீக எழுச்சியாக முதலில் கணித்தவர் அவர். இன்று அமெரிக்க வெளியுறவுச் செயல்பாடுகளை எதிர்ப்பதாக முன்வந்த செப்டம்பர் 11 தாக்குதல்களை எப்படிப் பொருள்கொண்டிருப்பார் என்பதும் முக்கியமாக யோசிக்க வேண்டிய ஒன்றே” என்று எழுதுகிறார். இதிலிருந்து பூக்கோவின் கணிப்பு சரி அதாவது ஈரானிய புரட்சி ஒரு ஆன்மிக எழுச்சி என்று கருதுகிறார் என்றுதான் நாம் கொள்ள வேண்டும். பூக்கோ செய்த கணிப்பு தவறு என்று நிரூபிக்கப்பட்டு, பூக்கோவின் கருத்துகள் கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகிவிட்டன. இணையத்தில் தேடினால் பல தரவுகளை வாசகர்கள் பெற முடியும். பூக்கோ அன்று கொண்டாடிய ஆன்மிக எழுச்சியின் அடிப்படை உண்மையில் மனித உரிமைகளையும், பெண் உரிமைகளையும் நிராகரிப்பது. ஆட்சியை கைப்பற்றிய மதவாதிகள் பெண்கள் உடலை மூட வேண்டும் என்று ஆடை கட்டுப்பாடுகளை விதித்தனர், பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை குறைத்தனர். இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்த விமர்சனங்களை புறந்த்தள்ளி ஆன்மிக எழுச்சியாக கண்ட பூக்கோவால் ஈரானிய புரட்சி குறித்த தன் கருத்துக்களுக்கு இறுதி வரை ஒரு சரியான விளக்கத்தினை தர முடியவில்லை. இதில் உள்ள ஒரு முரண்நகை என்னவெனில் நவீனத்துவத்தின் பெரும் விமர்சகரான பூக்கோ அடிப்படை புரிதலின்றி அந்த ‘ஆன்மிக எழுச்சியை' ஆதரித்ததும், அதன் ஆபத்துக்களை உணராமல் அதை கொண்டாடியதுதான். அன்று பூக்கோ கொண்டாடிய ஈரானிய புரட்சி இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், நவீனத்துவத்தை நிராகரித்து இஸ்லாமிய நம்பிக்கைகள் அடிப்படையில் அரசுகள் அமைய வேண்டும், மதச்சார்பின்மை, பொதுவுடமைத் தத்துவம், பெண்ணுரிமைகள் போன்றவை நிராகரிக்கப்பட வேண்டும் என்று கருதுவோருக்கும் ஒரு உந்து சக்தியாக விளங்கியது. சுருக்கமாக சொன்னால் பூக்கோ கொண்டாடிய அந்த எழுச்சியின் தர்க்க ரீதியான முடிவு நடைமுறையில் தலிபான்களின் ஆட்சி போன்ற ஒன்றுதான். ஆனால் நாகார்ஜுனன் இதை முற்றிலுமாக கருத்தில் கொள்ளாமல் சாம்ஸ்கி-பூக்கோ உரையாடலை குறித்து எழுதுகிறார். இதைக் கருத்தில் கொண்டால் பூக்கோ குறித்து நாகார்ஜுனன் கட்டமைக்கும் பிம்பம் உடைந்து விடும். பூக்கோவின் கருத்துகள், சிந்தனைகள் குறித்து பல்வேறு நிலைப்பாடுகள் உள்ளன. அவரின் பங்களிப்பினை ஏற்பவர்கள் பலர் அவர் கருத்துக்களின் பலவீனங்களையும், போதாமைகளையும் சுட்டிக் காட்டியுள்ளனர். பூக்கோ செய்த ஆய்வுகளின் முடிபுகளை எல்லா சமூகங்களுக்கும் அப்படியே பொருந்தும் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இந்தியாவில் பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய சிறைச்சாலைகள், தண்டனை வகைகள், குற்றவியல் சட்டங்கள் போன்றவற்றை பூக்கோவிய கண்ணோட்டத்தினை மட்டும் கொண்டு புரிந்து கொள்ள முடியாது. அதே போல் இன்றும் சித்திரவதை தொடர்வதையும், ஷாவின் ஆட்சியில் அது இருந்ததையும், ‘ஆன்மிக எழுச்சி'க்கும் பின் சித்திரவதைகள் தொடர்வதையும் பூக்கோ எழுதியதை கொண்டு விளக்குவதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. நான் கவனித்த வரையில் நாகார்ஜுனன் இது போன்ற கேள்விகளை எழுப்புவதில்லை.

இன்று புவி வெப்பமடைவதல் பெரிய பிரச்சினை, ஒசோன் படுகை நாசமடைவது அத்துடன் ஒப்பிடுகையில் அவ்வளவு பெரிய பிரச்சினையல்ல.அது குறிப்பிடத்தக்க அளவிற்கு தீர்வு காணப்பட்ட பிரச்சினை. இதை ராஜன் குறையும், அ.மார்க்ஸும் குறிப்பிடுவதில்லை. முதலீட்டியம், புவி வெப்பமடைதல் குறித்து இடதுசாரிகள், மார்க்ஸியர்கள் எழுதியுள்ளனர். மார்க்ஸியம், சுற்றுச்சூழல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக பல புதிய நூல்கள், ஆய்வுகள் வெளியாகியுள்ளன. பசுமை(யாகும்) மார்ஸியம், எகோ சோசலிசம்(Eco-Socialism) என்றெல்லாம் பேசப்படுகிறது, மார்க்ஸின் எழுத்துக்களில் இயற்கை வளங்கள் குறித்த அக்கறை வெளிப்படுகிறது என்று தொடங்கி, இன்றைய உலகச் சூழலில் மார்க்ஸிய கண்ணோட்டத்தில் சூழல் பிரச்சினைகளை எப்படி புரிந்து கொண்டு, தீர்வுகளை முன் வைப்பது என்று பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. அ.மார்க்ஸ் கூறும் விளக்கம் ”முதலீட்டு வடிவத்தில் மட்டுமின்றி கல்விமுறை,மருத்துவம்,குடும்ப அமைப்பு என எல்லாவற்றிலும் முதலாளியத்தை அப்படியே எடுத்துக் கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை” ஒரளவே பொருந்தும். மாறாக சுற்றுச்சூழல், மார்க்ஸியம் குறித்த விவாதங்கள்தான் ஏன் இன்னும் அடிப்படையான கேள்விகளை, அதாவது சுற்றுச்சூழல், இயற்கை குறித்த மார்க்ஸிய புரிதலிலேயே பிழை(கள்) இருந்தனவா எழுப்பும்.
அந்த வகையில் தமிழ்சூழலில் இவற்றை எழுப்பியவர்களில் முதன்மையானவர்கள் கோவை ஞானியும், எஸ்.என்.நாகராஜனும்தான். இவர்கள்தான் இயற்கை வேளாண்மையையும் ஒரு மாற்றாக முன்னிறுத்தி ஆதரித்தவர்கள். இந்த விவாதங்களில் அ.மார்க்ஸின் பங்களிப்பு, நான் அறிந்தவரை, அதிகமில்லை. மாறாக ஒரு காலகட்டத்தில் கெய்ல் ஒம்வேட்டின் கருத்துக்களை இங்கு சொல்லிக் கொண்டிருந்தவர் அவர். முதலீட்டியம் புவி வெப்பமடைதல் ஒரு பிரச்சினை என்பதை இப்போது கிட்டதட்ட ஏற்றுக் கொண்டு, தீர்வுகளை தேடுகிறது. முதலீட்டியம் என்பது ஒரு மாயப் பிசாசல்ல. அது எவற்றின் மூலம் தொழிற்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். சந்தைப் பொருளாதராத்தினை அடிப்படையாக கொண்ட, முதலீட்டியம் வலுவாக உள்ள பல நாடுகள், குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்தேரிலியா, கனடா போன்றவை இன்று உலக வெப்படைமதல் பிரச்சினைக்கு தீர்வு காண விழைகின்றன. புவி வெப்படைமதல் நாடுகள் தீர்வு காண வேண்டிய உலகளாவிய பிரச்சினை. இதில் தலைமுறைகளிக்கிடையேயான சமத்துவம், தலைமுறைக்கிடையேயான சமத்துவம் குறித்த கேள்விகள் உண்டு. யார் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தினை எந்த அடிப்படையில், எவ்வளவு காலத்திற்குள் எந்த அளவு குறைப்பது உட்பட பல சிக்கலான வினாக்கள் உள்ளன. நாடுகள் முன்பு ஒத்துழைத்து மாண்டிரியல் புரோடோக்கால் மூலம் ஒசோனை அழிக்கும் பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு, விநியோகத்தினை கட்டுப்படுத்தி, குறைத்தன.ஆனால் கியோட்டா புரோடடோக்கால் தோல்வியுற்றது. இது ஏன் என்பது சுவராசியமான, முக்கியமான கேள்வி. முதலீட்டியம் என்ற ஒன்றின் அடிப்படையில் இப்பிரச்சினையை புரிந்து கொண்டு தீர்வு காண முடியாது.

காந்தியின் சிந்தனை, செயல்களின் தாக்கத்தினை சுற்றுச்சூழல் அறம் குறித்த கோட்பாடுகளிலும், சுற்றுச்சூழல் இயக்கங்கள்/போராளிகளின் செயல்பாடுகளில் காண முடியும். உதாரணமாக அர்னே நாயிஸ் என்ற நார்வே நாட்டு தத்துவவாதி முன்வைத்த கோட்பாடான ஆழ்சூழலியல் (Deep Ecology) என்பதை சுட்டிக்காட்டலாம். சூமாக்கர் போன்றவர்களிடமும் காந்தியத்தின் தாக்கம் உண்டு, மேலும் ஜெகன்னாதன் - கிருஷ்ணம்மாள், ராஜேந்திர சிங், மேதா பட்கர் உட்பட பல போராளிகளும் காந்தியத்தினை ஏற்றவர்களே. நுகர்வியம் குறித்த விமர்சனங்கள், தொழில் நுட்பத் தீர்வுகளை மதிப்பிடுதல் உட்பட பலவற்றில் காந்தியின் சிந்தனைகள் பயன்படும். இவையெல்லாம் பழைய கருத்துக்களே. எப்படியோ அ.மார்க்ஸ் காந்தியை ‘மீள் கண்டிப்பு' செய்து நமக்கெல்லாம் அறிவிக்கிறார் என்பதே ஒரு வரவேற்கத்தக்க ஒன்றுதான். கியுபா இயற்கை சார் வேளாண்மை மூலம்தான் தீர்வு கண்டது. இயற்கை வேளாண்மை மட்டும் போதுமா என்பது கேட்கப்பட வேண்டிய கேள்விதான். விரிவஞ்சி என் எதிர்வினையை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
----------------------------------------------------------------------------
பி.கு:எப்படியோ அ.மார்க்ஸ் காந்தியை ‘மீள் கண்டிப்பு' செய்து நமக்கெல்லாம் அறிவிக்கிறார் என்பதே ஒரு வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
என்பது
'எப்படியோ அ.மார்க்ஸ் காந்தியை ‘மீள் கண்டுபிடிப்பு' செய்து நமக்கெல்லாம் அறிவிக்கிறார் என்பதே ஒரு வரவேற்கத்தக்க ஒன்றுதான்' என்றிருந்திருக்க வேண்டும்.பிழை எனதே.

Labels: , , , , ,

8 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

ravi srinivas-
my article on focault and islamism appeared on line at www.inioru.com.
this is for your kind information. it was first appeared in uyirmmai some times back
yamuna rajendran

10:45 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

என்ன சொல்றேள் ரவி ஸ்ரீனிவாஸ்? அவாள் நாகார்ஜுன் சொல்ல வர்றதும் புர்யல்ல. அவாள் ராஜன் குறை பதில் சொல்றதும் புர்யல்ல. நீங்களாச்சும் தெளிவா சொல்றேளான்னு பாக்கச்சே அதுவும் சுத்தம்.

மிடில் க்ளாஸ் இண்டியன் பூர்ஸ்வா இண்டடெல்க்ஸுவல்ஸ் பார் ரெவ்லூஸன் ஆப் புவர் அண்ட் பார்ப்பர்ன்னே ஒரு க்ளாஸ் இருக்கு. அதுல நீங்களும் சங்க மெம்பரா இருக்கேளா?

11:17 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Thanks Yamuna.I will read that and will give a link to that.

12:42 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

?மிடில் க்ளாஸ் இண்டியன் பூர்ஸ்வா இண்டடெல்க்ஸுவல்ஸ் பார் ரெவ்லூஸன் ஆப் புவர் அண்ட் பார்ப்பர்ன்னே ஒரு க்ளாஸ் இருக்கு. அதுல நீங்களும் சங்க மெம்பரா இருக்கேளா"

No way, I am a below poverty line person who aspires to be born as a middle class person at least in the next birth :)

12:43 PM  
Blogger சுரேஷ் கண்ணன் மொழிந்தது...

ஜீலை 08 தீராநதி இதழில் உங்கள் கடிதம் அச்சில் வெளிவரவில்லை.

7:13 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

தகவலுக்கு நன்றி சுரேஷ் கண்ணன்.

8:00 AM  
Blogger நாகார்ஜுனன் மொழிந்தது...

ரவி ஸ்ரீனிவாஸ்

இம்மாத தீராநதியை நான் இன்னும் பார்க்கவில்லை. உங்கள் கடிதம் இன்னும் வெளியாகவில்லை என்ற விபரம் கேட்டு வருந்துகிறேன். அவர்கள் வெளியிட்டிருக்க வேண்டும்.

Foucault and the Iranian Revolution புத்தகம் நான் வாசித்ததுதான். அதுபற்றி எனக்கு விமர்சனம் உண்டு. ஃபூக்கோவின் விரிவுரைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இவற்றிலும் அதுபற்றி இருக்கிறது. இந்தக் கட்டுரையில் அதை விபரமாகக் குறிப்பிடவில்லைதான்.

யமுனா ராஜேந்திரன்
உங்கள் உயிர்மை கட்டுரை பற்றி அறிவேன். ஆனால் இதுவரை வாசிக்கக்கிடைக்கவில்லை (போத்ரியார் பற்றிய கட்டுரையும்தான். அதை ஏற்கனவே என் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்). ஃபூக்கோ பற்றிய இந்தக் கட்டுரையை இப்போது நீங்கள் தந்த சுட்டியை வைத்து வாசித்தாயிற்று. நன்றி.

என் பதிவில் நிச்சயமாக பதில் எழுதுகிறேன். பயணத்தில் இருப்பதால் தாமதமாகலாம்!

நட்புடன்
நாகார்ஜுனன்

3:36 AM  
Blogger Tamil Paiyan மொழிந்தது...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்

5:40 AM  

Post a Comment

<< முகப்பு