பெரியார் பரம்பரை-பிரமீள்- என் விமர்சனம்

பெரியார் பரம்பரை-பிரமீள்- என் விமர்சனம்

எதிர்வாதம் செய்ய வேண்டும் என்பதற்காக வலிந்து பெரியாருக்கும், அண்ணாவிற்கும் ஆதரவாக எழுதப்பட்ட கட்டுரை இது என்றே நான் கருதுகிறேன். அதன் இன்றைய பொருத்தப்பாடு கேள்விக்குரியது.

1960களின் துவக்கத்திலிருந்து தமிழில் எழுதிய பிரமீள் இத்தகைய கருத்துக்களை இக்கட்டுரைக்கு முன் எழுதியிருக்கிறாரா என்ற கேள்வியை இங்கு எழுப்புதல் அவசியம். இது போன்ற கருத்தை அவரது முந்தைய கட்டுரைகள், முன்னுரைகள், பேட்டிகளில் காண முடியுமா. அவர் சொல்கின்ற வாதத்தினை எடுத்துக் கொண்டால் முற்போக்கு இலக்கியத்தையும் இதே போல் ஏற்க வேண்டும். அப்படி ஏற்று பிரமீள் எழுதியிருக்கிறாரா.இல்லை எனில் ஏன் ?. திராவிட இலக்கிய ஆதரவாளர்கள் பிரமீள் எழுதியதில் போய் தங்கள் கருத்தியலுக்கும், இலக்கியத்திற்கும் ஆதரவான சான்றுகளை தேடுவது வேடிக்கை. பிரமீள் அப்துல் ரகுமானை, வைரமுத்துவை, வா.மு.சேதுராமன், சுரதா போன்றவர்களை கவிஞர்களாக அங்கீகரித்து எழுதியிருக்கிறாரா.

தமிழவன் பிரமீளின் கவிதை(களை) விமர்சித்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பிரமீள் மாயகோவஸ்கியிடமிருந்து திருடியதாக அவர் எழுதினார் என நினைக்கிறேன். தமிழவன் பாணி விமர்சனம் பிரமீளுக்கு ஏற்புடையதல்ல. அது போல்தான் ஜெயகாந்தனின் இலக்கியமும். அந்த சிற்றிதழ் குழுச் சண்டையின் ஒரு பகுதிதான் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் பிரமீளின் இந்தக் கட்டுரை. அண்ணாவை ஏற்றால் கல்கியையும் ஏற்க வேண்டுமே. அப்படி ஏற்று பிரமீள் எழுதியிருக்கிறாரா. இந்த கட்டுரை ஒரு அபத்தமான கட்டுரை. பாரதியை பெரியாரோ, திராவிட இயக்கமோ ஏற்றதும் இல்லை, பாராட்டியதும் இல்லை. மேலும் பெரியாரின் கலை-இலக்கியக் கண்ணோட்டம் மிகவும் தட்டையானது, அதில் நுண்ணுர்விற்கு இடமில்லை. வரட்சியான பகுத்தறிவு பெரியாருடையது. ஜித்து கிருஷ்ணமூர்த்தி குறித்தும் பெரியாருக்கோ, திராவிட கழகத்திற்கோ நல்ல கருத்து இருந்ததாக தெரியவில்லை. பாரதி எழுதியதை அவன் காலத்து நிலைமைகளைக் கொண்டு மதிப்பிட வேண்டும். பிரமீள் கட்டுரையில் தகவல் பிழைகள் இருப்பதாகத் தோன்றுகிறது. பாரதி
தீவிரமாகச் செயல்பட்ட போது பெரியார் பிராமணரல்லாதோர் இயக்கத்தில் சேரவில்லை.
அது போல் அன்னி பெசண்ட், ஜித்து க்ருஷ்ணமூர்த்தி குறித்த பாரதியின் கருத்துக்களையும்
அந்தக் கால கருத்து மோதல்கள் சார்ந்து பார்க்க வேண்டும்.

பிரமீள் கட்டுரையில் வரலாற்று ரீதியான புரிதலும் இல்லை, கலை இலக்கிய ரீதியான வாதமும் வலுவாக இல்லை. பிரமீள் போன்றவர்கள் கூட அபத்தமாக எழுதியிருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

பிரமீள் எழுதுகிறார்

"உயிர்த்தன்மைதான் அழகு. உயிர்த்தன்மை புதுமலர்ச்சி என்கிற தன்மையாக ஒரு வெளியீட்டில் நிலவும் நிலையே அழகு. இதனை உணராதவர்கள் பயிலும் அழகியல் ஒரு வறண்ட இயல் தானே அன்றி அழகுடன் சம்பந்தம் உள்ள ஒன்றல்ல. இந்த உயிர்த்தன்மை தான் என்ன என்று பார்த்தால் அது நீதியுணர்விலிருந்து பிசகாத ஒரு மனோதர்மம் என்று காணலாம்.

எப்போது இந்த மனோ தர்மத்திலிருந்து கலைஞன் பிசகுகிறானோ, அது அவனது படைப்பிலிருந்து பிறிதான தனிமனிதப் பார்வைப் பிசகாக இருந்தால்கூட அது அவனது கலை இயக்கத்தை வறள வைத்துவிடும். மௌனிக்கு நடந்தது இது என்பது நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிற எனது சித்தாந்தம்."

இது அபத்தக் களஞ்சியம். இது போன்ற ஒரு விவாதம் வாக்னரை முன் வைத்து 70களில் தமிழில் நடந்தது.நீதியுணர்வு இருப்பவர்களெல்லாம் பெரும் கலைஞர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காந்தி ஒர் எடுத்துக்காட்டு. மாறாக நீதியுணர்வு அற்ற, தனி வாழ்விலும், பொது வாழ்விலும் பிறரை ஏமாற்றுகின்ற, சுய நலமே உருக்கொண்டு, பொய்யுரைக்கின்ற ஒருவர் பிரமாதமாக அழகியல் ரீதியாக வெற்றி பெறும் இலக்கியம் படைக்கலாம். இதற்கான உதாரணத்தை பிரமீளின் கட்டுரையை முன் வைத்தே கொடுத்து பிரமீள் எழுதியிருப்பது உளறல் என்று காட்ட முடியும்.

பிரமீளின் இந்தக் கட்டுரையை நான் படித்த போது பிரமீள் உயிருடன் இல்லை என நினைக்கிறேன். நான் பிரமீளை பார்க்க மருத்துவமனைக்குச் சென்ற போது அவர் பேசும் நிலையில் இல்லை.ஒரு காலகட்டத்திற்குப் பின் எனக்கு அவர் எழுத்தில் ஆர்வம் வெகுவாக
குறைந்து விட்டது. அவருடனான தொடர்பும் இல்லை. அப்போது தமிழில் எழுதுவதை, படிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டிருந்தேன். எனவே இந்தக் கட்டுரை எப்போது எழுதப்பட்டது, அதன் பிண்ணனி என்ன என்பதை நானறியேன்.

மருத்துவமனையில் காத்திருக்கையில் அவர் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்ததாகவும், அதில் அவர் செல்லப்பாவை கடுமையாக விமர்சித்திருந்தாகவும் நினைவு. இதுபோன்ற இலக்கியச் சண்டைகளில் அப்போது எனக்கு ஆர்வம் இல்லை, வெறுப்புதான் இருந்தது. பிரமீள் நேர்ப் பேச்சில் கட்டுரையில் உள்ளது போன்ற கருத்துக்களை என்னிடம் தெரிவித்ததில்லை. அவருக்கு தமிழ் நாட்டு அரசியல் குறித்த அறிவு குறைவு என்பதே என் அனுமானம்.பிரமீள் சிறந்த கவிஞர், நல்ல மொழிபெயர்ப்பாளர், சில குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார் என்பதே என் கருத்து. அவரது ஆன்மிகம், விமர்சனம் குறித்த தடாலடிக் கட்டுரைகள், இலக்கியச் சண்டையில் எழுதப்பட்ட கவிதைகள் உட்பட பலவற்றை என்னால் ஏற்க முடிந்ததில்லை.இவற்றை கழித்துக்கட்டினால் அவர் படைப்பில் கிட்டதட்ட 50% தான் தேறும் என்று நினைக்கிறேன். அவரைக் குறித்த
மிகையான மதிப்பீடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிரமீளின் பழகத் துவங்கிய போதிலிருந்தே எனக்கு இதில் அதாவது இலக்கியச் சண்டைகளில் ஆர்வம் இல்லை. விமர்சன ஊழல்கள் என்ற சிறு நூலின் மெய்ப்பு பிரதியை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அப்போதே இது போன்ற நூல்களால் என்ன பயன் என்று அவருக்கு எழுதியதாக நினைவு.

பிரமீளின் பெரியார் பரம்பரை கட்டுரை அபத்தம் என்றால், அதை முன்னிறுத்தி பெரியாரையும், அண்ணாவையும், கலைஞரையும் மதிப்பிடுவதும்,தூக்கிப் பிடிப்பதும் அதை விட அபத்தம்.

Labels: , , , ,

2 மறுமொழிகள்:

Blogger ravi srinivas மொழிந்தது...

சோதனைப் பின்னோட்டம்

8:27 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

your soodhanai works. could you please write on the current politics? give your thoughts on the criminal case against Ashish Nandy from legal and politcal angles.

Tx

10:51 AM  

Post a Comment

<< முகப்பு