தாமோதர் தர்மானந்த கோசாம்பி

தாமோதர் தர்மானந்த கோசாம்பி

தாமோதர் தர்மானந்த கோசாம்பி குறித்து இன்றைய இந்துவில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.இந்த வார EPWவில் அவரது பங்களிப்பு குறித்து கட்டுரைகள் வெளியாகியுள்ளன. பல்துறை வித்தகர், பன்மொழி அறிஞர் டி.டி.கோசாம்பி. அவர் கணித ஆசிரியராக,ஆய்வாளராக இந்தியாவில் தன் பணிகளை துவங்கினார்.அவரது பங்களிப்புகளை பல துறைகளில் முக்கியமான பங்களிப்புகளை செய்திருக்கிறார். வரலாற்று ஆய்வில் மார்க்ஸிய முறையியலை பயன்படுத்தி இந்திய வரலாற்றை ஆய்ந்தார். தரவுகளை புதிய முறையில் கையாள்வதில் துவங்கி, பழைய நாணயங்களை ஆய்வது வரை
பலவற்றில் புதிய ஒளியைப் பாய்ச்சியவர்.அறிவியல், அறிவியலுக்கும் சமூகத்திற்கும் உள்ள உறவு, அறிவியலும், வளர்ச்சியும், இந்தியாவின் ஆற்றல் தேவைகளும் குறித்தெல்லாம் எழுதியிருக்கிறார்.

அவரது கட்டுரைகள் பலவற்றையும்,The Culture and Civilization of Ancient India என்ற நூலையும் கல்லூரியில் படிக்கும் போதும், பின்னரும் படித்திருக்கிறேன். மார்க்ஸிய ஆய்வுமுறை/கண்ணோட்டத்தில் அவர் கருத்துக்கள் புதிய புரிதல்களை தந்தன.ஆனால் அதே திசையில் 'வெகு தூரம்' பயணித்து மேலும் என் அறிவை வளர்க்காதது என் அவப்பேறு. ஒரு கட்டத்துடன் நான் அவற்றிலிருந்து விலகி வேறு திசைகளில் போய் விட்டேன். இருப்பினும் அவரது அறிவியல், சமூகம் குறித்த கட்டுரைகள் எனக்கு பெரிதும் பயனளித்தன.
இணையத்தில் வாழ்க்கை வரலாறு கிடைக்கிறது நூற்களும் கிடைக்கின்றன. ஒரு வலைப்பதிவிலும் பல தகவல்கள் உள்ளன. அவரது தந்தை பெரும் அறிஞர். இந்த இருவர் குறித்து ராமச்சந்த்ர குகா முன்பு ஹிந்துவில் எழுதினார்.

டி.டி.கோசாம்பியின் நூற்றாண்டு விழா நிறைவுறுகையில் அவர் குறித்த இந்த இடுகையை இடுகிறேன்.இது முன்பே இடப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். தமிழில் கோசாம்பியின் வாழ்க்கை, அவரது பங்களிப்பு, செய்த ஆய்வுகளும், முன் வைத்த கருத்துகளும் குறித்து நூல் எதுவும் வெளியாகியிருப்பதாக தெரியவில்லை. குறைந்தபட்சம் ஒரு நீண்ட கட்டுரையாவது வெளியாக வேண்டும்.

டிவிட்டருக்கு என்ன கோபம் -:)

டிவிட்டருக்கு என்ன கோபம் -:)

டிவிட்டருக்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை. சில நாட்களாக டிவிட்ட முடிவதில்லை. மீண்டும் நாளை முயற்சிக்கிறேன்.

Labels:

இத்தாலியாகும் இந்தியா ?

இத்தாலியாகும் இந்தியா ?

நம்பிக்கை வாக்கெடுப்பில் UPA வெற்றி பெற்றிருக்கிறது. அதற்காக தரப்பட்ட , தரப்பட உள்ள விலைகளை யாரறிவார். திமுகவை திருப்திப்படுத்த சேது சமுத்திரம் திட்டம் மீதான தடையை நீக்க அரசு கோரும் என்று தெரிகிறது. இந்தியா இத்தாலி போல் ஆகிவிடுமோ என்று அஞ்சுகிறேன். இத்தாலியில் நிலையற்ற ஆட்சிகள், மாறும் கூட்டணிகள், பதவிகளுக்கான சமரசங்கள் மிகவும் சாதாரணம். இனி மாபியாக்கள் இந்தியாவில் நேரடியாகவே கட்சிகள் ஆரம்பித்துவிடக் கூடும். மற்றப்படி இந்த லஞ்ச ஊழல் புகார்கள் மிகவும் சாதாரணமாகிவிட்டன. எம்பிக்களின் விலை குறைந்துவிட்டதா என்று
மக்கள் கிண்டல் செய்யும் அளவிற்கு நிலைமை இருக்கிறது. இந்தியாவிற்கு வலுவான தொலை நோக்கு கொண்ட தனிப் பெரும்பான்மையுடன்
ஆட்சி செய்யக்கூடிய கட்சி தேவை. காங்கிரஸோ, பாஜகவோ அந்த நிலையில் இல்லை. எனவே எதிர்காலத்தில் நடக்கவிருப்பவை இப்போது
நடந்ததை விட மோசமாக இருக்கலாம்.

Labels: , , ,

நீதிபதி. நவநீதம் பிள்ளை

நீதிபதி. நவநீதம் பிள்ளை

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவழியினரான நீதிபதி நவநீதம் பிள்ளை (Navanethem Pillay) ஐ.நாவின் மனித உரிமைக்களுகான ஹை கமிஷனராக நியமிக்க ஐநா பொதுச் செயலாளர் பரிந்துரைத்துள்ளாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது இன்னும் உறுதியாகவில்லை. உறுதியானால் நவநீதம் பிள்ளை குறித்து எழுதுவோம்.இப்பதவிக்கு அவர் முற்றிலும் தகுதியானாவர் என்பதில் ஐயமில்லை.

Labels:

123 ஒப்பந்தம்- ஒரு முக்கிய ஆவணம்

123 ஒப்பந்தம்- ஒரு முக்கிய ஆவணம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி-இடதுசாரி கமிட்டியில் இரு தரப்பும் பரிமாறிக் கொண்ட குறிப்புகள் நூல் வடிவாக வெளியாகியுள்ளன. அதை PDF கோப்பாக இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

Labels: ,

ஞாநி, சாரு நிவேதிதா- 123 ஒப்பந்தம்

ஞாநி, சாரு நிவேதிதா- 123 ஒப்பந்தம்

சாரு நிவேதிதா 123 ஒப்பந்தம் குறித்து எழுதியதைப் படித்தேன். இவர் எழுதியதை மலையாள இதழ்கள் எப்படி பிரசுரிக்கின்றன என்று எனக்கு கேள்வி எழுகிறது. எந்தவித அடிப்படைப் புரிதலும் இன்றி எழுதப்பட்ட கட்டுரை. ஒரு நாட்டின் பட்ஜெட்டின் அடிப்படை கூட தெரியாமல் எதற்காக எழுதுகிறார் என்றே தெரியவில்லை. இந்த லட்சணத்தில் உலக ராணுவ பட்ஜெட் குறித்து வேறு உளறியிருக்கிறார். சாரு நிவேதிதா தான் முட்டாள் என்பதை இப்படியெல்லாம் எழுதி எத்தனை முறை நிருபிக்கப் போகிறார்.

இந்த மென் பொருளார்களும், அயல் நாட்டில் வாழும் இந்தியர்களும் தான் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்திற்கான உலக சந்தையை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள் என்ற உண்மை கூட சாருவுக்குத் தெரியாதா. இந்தக் கட்டுரைகளையும் பிரசுரிக்கிறார்களே அவர்களுக்கு மண்டையில் அறிவே இல்லையா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.ஞாநி எழுதியிருப்பது மகா அபத்தம். செர்னோபில் விபத்து ஏற்பட்டது தனியார் மின் நிலையத்தில் அல்ல, அரசின் கட்டுப்பாட்டில் இருந்த மின் நிலையத்தில்.அமெரிக்கா உட்பட பல நாடுகளில் தனியார் துறை அணுமின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது, இன்று நேற்றல்ல,பல பத்தாண்டுகளாக.இந்தியாவில் மட்டும் ஏன் சாத்தியமில்லை ?.ஒழுங்குபடுத்தி, கண்காணிக்க வேண்டிய அமைப்புகள் சரியாக செயல்பட்டால் இந்தியாவிலும் தனியார் துறையால் வெற்றிகரமாக அணுமின் உற்பத்தி நிலையங்களை நிறுவி, நிர்வகிக்க முடியும். தனியார் துறையில் இட ஒதுக்கீட்டிற்கும் அல்லது தகவல் அறியும் சட்டத்திற்கும் இதற்கும் எந்த ஒரு தொடர்புமில்லை. தனியார் துறையில் இட ஒதுக்கீடு வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறாரா. ஞாநி இப்படியே எழுதிக் கொண்டிருந்தால் அவர் எழுத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்து விடும். அதை அவர் அறிவது நல்லது.

சில வாரங்களுக்கு முன் இந்திய அரசு புவி தட்பவெப்ப மாறுதல் குறித்த தேசிய திட்டத்தை வெளியிட்டது. அதில் புவி வெப்பமடைதலால் ஏற்படக்கூடிய விளைவுகளை எப்படி சமாளிப்பது, ஆற்றல் உற்பத்தியை பெருக்குவது குறித்த கொள்கை விளக்கப்பட்டுள்ளது. அதில் solar energy mission குறித்தும் விளக்கியுள்ளது. இந்த திட்டம் குறித்து விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்தினை படித்துப் புரிந்து கொண்டு, விமர்சனங்களையும் படித்திருந்தால் அதையும், 123 ஒப்பந்ததையும் தொடர்பு படுத்தி இந்தியாவின் எதிர்கால ஆற்றல் தேவைகளும், அரசின் திட்டங்களும் குறித்த ஒர் அலசலைத் தந்திருக்க முடியும். தமிழில் பத்தி எழுதுபவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பது மிகையான எதிர்ப்பார்போ என்று தோன்றுகிறது.

Labels: , , ,

அருந்ததி ராயின் புதிய சிறு கதை

அருந்ததி ராயின் புதிய சிறு கதை-புவி வெப்பமடைதல்-முதலாளித்துவம்

இடதுசாரி, முற்போக்குகளின் கனவு அறிவுஜிவியான அருந்ததி ராய் 11 ஆண்டுகள் கழித்து ஒரு புனைவு எழுதியிருக்கிறார். கதையைப் பற்றி பேட்டியிலும் கூறியிருக்கிறார். மிகச் சாதாரணமான சிறுகதை என்று கூட சொல்ல மாட்டேன், பாடாவதி என்றுதான் சொல்வேன். பேட்டியில் பொலிடிகலி கரெக்டான விஷயங்களைச் சொல்லிய்ருப்பதால் இடதுசாரி, முற்போக்குகளுக்கு கதை புரியாமல் போகாது. உலக வெப்பமயமாதல், முதலாளித்துவம் என்று சொன்ன பின் அவர்களுக்கு அதைக் கொண்டாடுவதில் தயக்கம் இருக்காது. அப்புறம் என்ன விரைவில் இந்தக் கதையும், பேட்டியும் தமிழில் வெளிவரும். ஏற்கனவே இடதுசாரிகள் புவி வெப்பமடைதலுக்கு காரணம் முதலாளித்துவம் என்று எழுதியும், பேசியும் வருகிறார்கள். இப்போது அருந்ததி அதை வைத்து ஒரு கதையே எழுதிவிட்டார். அருந்ததியே சொன்ன பின் அப்பீல் ஏது என்று இதை வைத்தே முதலாளியத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே திட்டலாம்.

இருந்தும் அருந்ததி ராயே சொன்னாலும் கூட தமிழ்ச் சூழலில் இடதுசாரி,முற்போக்குகள் கண்டு கொள்ளாத/புறக்கணித்த ஒன்று இருக்கிறது. மோடியை, இந்த்துவத்தையெல்லாம் கூட விமர்சித்தாலும் அவரின் ஒரு உரை தமிழ்ச்சூழலில் கண்டுகொள்ளப்படவேயில்லை. அது என்ன உரை, அவர் சொன்னது என்ன, அதை ஏன் இவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

உலக வெப்பமடைதலுக்கு முதலாளித்துவம் பொறுப்பில்லை என்று கூறுகிறீர்களா என்று கேட்டால் என் சுருக்கமான பதில் இதுதான்.

இந்தப் பிரச்சினையை புரிந்து கொள்ள, தீர்வுகாண முதலாளித்துவம் குறித்த விமர்சனங்கள் தேவை, ஆனால் அவை மட்டும் போதுமானவை அல்ல. இது மானுட இனம் முன் உள்ள மாபெரும் பிரச்சினை. முதலாளித்துவம் vs சோசலிசம் என்பதையும் தாண்டி சிந்தித்தால்தான் தீர்வு கிடைக்கும். முதலாளித்துவத்தை மறுதலித்து தீர்வு காணக் கூடிய நிலையில் நடைமுறையில் 'சோசலிசம்' வலுவாக இல்லை. கோட்பாட்டளவில் சிலவற்றை சோசலிச தீர்வுகள் என்று முன் வைக்கலாம். மற்றப்படி முதலாளித்துவம் ஒழிந்து சோசலிசம் மலர்ந்தால்தான் தீர்வு உருவாகும் என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு. பிரச்சினைக்கு ‘சோசலிச' நாடுகளும் பங்களித்துள்ளன என்பதையும், ‘சோசலிச' சித்தாந்தமும் ஒரு காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இன்னும் சில பத்தாண்டுகளுக்குள் பலவற்றை செய்தால்/நடைமுறைப்படுத்தினால்தான் புவி வெப்பமடைதலின் மோசமான விளைவுகளில் சிலவற்றை தவிர்க்க முடியும், சிலவற்றின்
பாதிப்பை குறைக்க முடியும். அதையெல்லாம் முதலாளித்துவத்தை ஒழித்த பின் செய்வோம் என்று வாதிடுவது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே முதலாளித்துவத்தின் இருப்பை, அது எப்படி இதை அணுகுகிறது என்பதை புரிந்து கொண்டு, அது இன்னும் பல காலம் தொடரும் என்ற அடிப்படையில்தான் தீர்வுகளை யோசிக்க முடியும். இது நாடுகள் தொடர்புடைய சிக்கல், வெறும் தத்துவ கோட்ப்பாட்டு சிக்கல் மட்டுமல்ல. சர்வதேச சுற்றுச்சூழல் பிரச்சினைகளுள் முதன்மையான பிரச்சினை இது. அமெரிக்காவை புறக்கணித்து விட்டோ அல்லது இந்தியா,சீனாவை புறக்கணித்துவிட்டோ தீர்வு சாத்தியமேயில்லை. சந்தை சக்திகள் தீர்வில் நேர்மறையான பங்கு வகிக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

Labels: , , ,

கேட்கக் கூடாத கேள்விகள் -:)

கேட்கக் கூடாத கேள்விகள் -:)


ரவி ஸ்ரீநிவாஸிடம்- 1,அவ்வப்போது தமிழில் எழுதுவதை நிறுத்துவேன் என்று உதார் விடுகிறீர்களே, உண்மையாக எப்போது நிறுத்துவீர்கள் (உதார் விடுவதையல்ல, தமிழில் எழுதுவதை)

2,அடிக்கடி ஏன் தலைமறைவாகிவிடுகிறீர்கள் என்று உங்களை கேட்கும் நண்பர்களுக்கு பதில் ஏன் தருவதில்லை

தமிழ்மணம் நிர்வாகத்திடம் - புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பு என்றால் என்ன? புரிதல் இருந்தோ அல்லது இல்லாமலோ தரப்படும் தொந்தரவு என்பதன் நாசூக்கான சொற்றொடரா இது

லக்கிலுக்கிடம் -1, யாருடைய போதைக்கோ நான் ஊறுகாயாகிறேன் என்று உங்கள் வாழ்க்கையில் இதுவரை எத்தனை முறை கூறியிருக்கிறீர்கள், எழுதியிருக்கிறீர்கள்

2, ஒரு அமைப்பின் முரட்டுத் தொண்டனாக இருப்பதற்கும், ஒரு பெண்ணின் முரட்டுத் தொண்டனாக இருப்பதற்கும் உள்ள ஒற்றுமைகள், வேறுபாடுகள் என்ன ?

ஜெயமோகனிடம் - 1, தொப்பி, திலகம் கட்டுரைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகவுள்ள உங்கள் நூற்களில் ஏதேனும் ஒன்றில் இடம் பெறுமா ?

2, தமிழ் படைப்பாளிகள் பேரியக்கத்தின் ஆலோசகராக இருப்பீர்களா?

இட்லிவடையிடம் - விஜயகாந்த் ஆதரவு வலைப்பதிவினை ஆரம்பிக்கப் போகிறீர்களாமே, எந்தப் பெயரில்

பத்ரியிடம் - தசாவதாரத்தை எத்தனை மொழிகளில், எத்தனை முறை பார்த்திருக்கிறீர்கள், பார்க்கப் போகிறீர்கள்

பாஸ்டன் பாலாவிடம் -1, நீங்கள் இடும் இடுகைகளின் எண்ணிக்கையை தாக்குப்பிடிக்க முடியாமல் டிவிட்டரின் சேவை வழங்கிகள் அடிக்கடி திணறுவது உண்மையா

2, இணைய மற்றும் கணினி addictionனுக்கு பாஸ்டனில் நல்ல சிகிச்சை கிடைக்கிறதா ?

சிரில் அலெக்ஸிடம் - அறிபுனை கதைப் போட்டி அறிவிதத்தலிருந்து உங்கள் கணினி அடிக்கடி
படுத்துக் கொள்வது உண்மையா

பெயரிலியிடம் (ரமணீதரன் கந்தையா)-1, உங்கள் நடையில் சடுதியில் எழுதுவதற்கு ஒரு நிரலி வைத்திருக்கிறீர்களா

2, தமிழ் இணைய அக்கப்போர்கள் குறித்த நூல் எப்போது வெளியாகும்

சாரு நிவேதிதாவிடம் - இரண்டு லட்சம் ஹிட்ஸ் வந்தாலும் கூட உங்கள் ஈபுக் ஏன் இருபது கூட உங்கள் தளம் மூலம் விற்கவில்லை

பா.ராகவனிடம் - 1, ஒரு கிலோ இளைக்க எத்தனைப் பக்கங்கள் எழுத வேண்டும் அல்லது எத்தனை கி.மீ நடக்க வேண்டும்

2, புதிதாக திறக்கப்பட உள்ள சைவ உணவங்கள் சிலவறிற்கு நீங்கள்தான் அதிகாரபூர்வமற்ற taste consultant என்கிறார்களே, உண்மையா

ஞாநியிடம் - அப்துல் கலாமை குமுதததிற்காக சந்தித்து உரையாடுவீர்களா

(யார் மனத்தையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. அப்படி புண்பட்டிருப்போர் தொடர்பு கொண்டால் அவர்கள் செலவில் மனப்புண்ணுக்கான சுத்த சைதன்ய களிம்பு ஒரு குப்பி அனுப்பிவைக்கப்படும். அதனை ஒரு மண்டலம், இரவில் படுக்கும் முன் யூகலிப்படஸ் எண்ணையில் குழைத்து தலையில் தடவிக் கொள்ளவும். அதற்குப் பின்னும் மனப்புண் இருந்தால் மனதை அறிவு சிகிச்சை மூலம் எடுத்து விடவும். தேவைப்படும் இடங்களில் சிர்ப்பானை, அதாவது smileyஐ போட்டுக் கொள்ளவும்)

Labels: , ,

400 - என் நானூறு

400 - என் நானூறு

இந்த இடுகையுடன் இந்த வலைப்பதிவில் 400 இடுகைகள் இடப்பட்டுள்ளன என்று பிளாகர் தெரிவிக்கிறது. இந்த வலைப்பதிவில் முதல் இடுகை ஜுன் 25, 2004ல் இடப்பட்டது. அதற்கு முன் rediffblogsல் வலைப்பதிந்து வந்தேன்(நவம்பர் 2003 முதல் ஜூன் 2004 வரை). வாசகர்கள்,திரட்டிகள், மற்றும் பிளாக்கருக்கு என் நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த வலைப்பதிவு குறித்து சில ஆலோசனைகள் முன்பு கூறப்பட்டன. சிலர் wordpress க்கு மாறிவிடுங்கள், தமிழில் பதிய அது நல்ல தெரிவு என்று தெரிவித்துள்ளனர். இப்போதுள்ள நிலையில்

1) இதில் அப்படியே தொடரலாம் 2) பிளாக்கரில் இன்னொரு வலைப்பதிவு துவங்கலாம், அதில் கூடுதல் வசதிகள் இருக்கலாம் 3) Wordpressக்கு மாறலாம்.

மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்று நடக்கலாம், ஒன்றிற்கு மேற்பட்டது நடக்கலாம். எது நடக்கும் என்று இப்போது கூற இயலாது.இந்த வலைப்பதிவில் எத்தனை பேர் இதை படிக்கிறார்கள், எங்கிருந்து ‘வருகிறார்கள்' போன்ற தகவல்களை திரட்டுவதில்லை. மேலும் எதிர்காலத்திலும் திரட்டத் தேவையிராது என்று நினைக்கிறேன்.அதே போல் அனானியாக கருத்து தெரிவிக்கும் வழியையும் நீக்குவதாக இல்லை.சில பின்னூட்டங்களைத் தவிர்த்து இதுவரை எந்தப் பின்னூட்டத்தையும் வெளியிட மறுத்ததில்லை. உள்ளடகத்தைப் பொறுத்தவரை எழுத நினைத்ததில் 50% கூட வலைப்பதிவில் இடம் பெறவில்லை.இட ஒதுக்கீடு குறித்து அதிகமாக எழுதியிருப்பதாக தோன்றினாலும் அதிலும் எழுத நினைத்து எழுதாமல் விட்டதே அதிகம். எழுதவதற்கான விஷயங்கள் பல இருந்தும் தொடர்ச்சியாக எழுதவில்லை என்பதுதான் உண்மை. பல பதிவுகளை எழுதி, பின்னர் இடலாம் என நினைத்து, இடாமல் விட்டிருக்கிறேன்.

அச்சு ஊடகத்தில் எழுதாத, திண்ணையில் அவ்வப்போது எழுதிவரும் நான் வலைப்பதிவினையே தமிழில் என் கருத்துகளை வெளிப்படுத்த அதிகம் பயன்படுத்துகிறேன். இந்த வலைப்பதிவு துவங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இவ்வலைப்பதிவு, வலைப்பதிவில் எழுதுவது குறித்து ஒரு மறுபரீசலனை செய்ய விரும்புகிறேன்.

எனவே இவ்வலைப்பதிவு, என் எழுத்து, வலைப்பதிவின் உள்ளடக்கம், வடிவம் இன்ன பிற தொடர்புடையவை குறித்த உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன.

Labels: ,

ராஜஸ்தானில் 68% இட ஒதுக்கீடு

ராஜஸ்தானில் 68% இட ஒதுக்கீடு

நேற்று ராஜஸ்தான் சட்டப்பேரவை ஒருமனதாக ஒரு சட்டத்தினை நிறைவேற்றியுள்ளது. அதன்படி குஜ்ஜார்களுக்கு 5% இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள வகுப்புகளில் உள்ள ஏழைகளுக்கு சேர்ந்தவர்களுக்கு 14%. இதன்படி இட ஒதுக்கீடு 68% ஆகிறது.

அட்டவணை சாதியினர் (தலித்) 16%
பழங்குடியினர் 12%
பிற பிற்பட்ட வகுப்பினர் 21%
குஜ்ஜார்கள் 5%
பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள வகுப்பாரில் ஏழைகட்கு 14%

இதில் 19% இட ஒதுக்கீடு (5+14) இந்தச் சட்டம் மூலம் சேர்க்கப்படுகிறது.50% உச்சவரம்பினை மீறி இட ஒதுக்கீடு இருப்பதுடன், பொருளாதார ரீதியாக பின் தங்கியோருக்கு என்று 14% ஒதுக்கப்படுகிறது. பிராமணர்கள், மாத்தூர்கள், ராஜ்புத், வைசியா உட்பட சில சாதிகளில் உள்ள ஏழைகள் 14% இடஒதுக்கீட்டினால் பலன் பெறுகிறார்கள். இந்த 14% இட ஒதுக்கீடும், இத்தகைய வகைப்படுத்தலும் செல்லுமா என்ற கேள்வி எழுகிறது. அனைத்து கட்சிகளும் இந்தச் சட்டத்தினை ஆதரித்துள்ளன. இன்னும் சில மாதங்களில் அங்கு சட்டசபைச் தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே எந்தக் கட்சியும் இந்த 68% இட ஒதுக்கீட்டினை எதிர்த்து நீதிமன்றத்தினை அணுகாது என்றே நினைக்கிறேன். அப்படியே அணுகினாலும் குஜ்ஜார்களுக்கான இட ஒதுக்கீட்டினை கேள்வி கேட்க எந்தக் கட்சியும் முன்வராது. மேலும் ராஜஸ்தானில் உள்ள ‘முற்பட்ட' ஜாதிகளின் ஒட்டும் தேவை என்பதால் அந்த 14% இட ஒதுக்கீட்டினையும் எதிர்க்கும் தைரியும் எந்தக் கட்சிக்கும் கிடையாது. ராஜஸ்தானில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள்தான் மிக வலுவாக உள்ளன. இந்த இரண்டிற்கும் வரும் தேர்தலும், 2009ல் அல்லது அதற்கு முன் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலும் மிக முக்கியம் என்பதால்
இட ஒதுக்கீட்டினை கேள்வி கேட்டு நீதிமன்றத்தினை காங்கிரஸ் நாடாது. பாஜக இந்த இட ஒதுக்கீட்டினை சாதனையாக காட்டி ஒட்டுப் பெற முயலும். 14% இட ஒதுக்கீடு என்பதை முன் வைத்து ‘முற்பட்ட' சாதிகளில் உள்ள காங்கிரஸ் ஒட்டு வங்கிக்கு குறி வைக்கும். மத்திய அரசும் இதில் தலையிடாது. ஆகவே நீதிமன்றம் தடை தராத வரை இந்த 68% இட ஒதுக்கீடு தொடரும்.

பிராமணர் எதிர்ப்பினையே உயிர் மூச்சாக கொண்டுள்ள திராவிடர் கழகம் , ம.க.இ.க, பெரியார் தி.க வேண்டுமானால் இந்த 14% இட ஒதுக்கீட்டினை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம். இப்படி பொருளாதார ரீதியாக பின் தங்கியோர் என்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர முடியுமா என்ற கேள்விக்கு, என் பதில், முடியும். எப்படி என்பதையும், இதை ஆராய ஒரு கமிஷன் மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருப்பதையும் இன்னொரு இடுகையில் விளக்குகிறேன். இந்த 14% இட ஒதுக்கீடு ராஜஸ்தானுடன் நின்றுவிடாது. இதே போன்ற இட ஒதுக்கீடு இதே சதவிகிதத்தில் இல்லையென்றாலும் பிற மாநிலங்களில் காலப் போக்கில் தரப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

Labels: , ,

ஞாநிக்கு ஒரு கடிதம் - 123 ஒப்பந்தம்

ஞாநிக்கு ஒரு கடிதம் - 123 ஒப்பந்தம்

ஞாநி ஒபக்கங்களில் கடந்த வாரம் எழுதியிருந்தை படித்து விட்டு 2 நிமிடத்தில் எழுதிய கடிதம் கீழே. 123 ஒப்பந்தத்தினை நான் ஆதரிக்கிறேன், ஏன் என்பதை சுருக்கமாக அதில் கூறியிருக்கிறேன். ஞாநி பல ஆண்டுகளாக அணு மின் உற்பத்தி, அணு ஆயுதம் இரண்டையும் எதிர்த்து எழுதி வருகிறார். எனவே நான் அவருடன் கருத்து வேறுபட்டாலும் அவரின் கருத்து நேர்மையை இதில் மதிக்கிறேன். அதே போல் நாகார்ஜுனனும் இரண்டையும்
தொடர்ந்து எதிர்த்து வருபவர் என்பதால் இதில் அவரின் கருத்து நேர்மையை நான் மதிக்கிறேன். கருத்து வேறுபாடுகளுடன் இருவருடனும் ஒரு உரையாடல் சாத்தியம். இடதுசாரி கட்சிகள் அணுமின் சக்தி வேண்டும் என்று கூறிய காலமும் உண்டு. கூடங்குளம் திட்டத்தினை எதிர்த்தவர்களை அவர்கள் வசைபாடினர் அன்று. 123 ஒப்பந்தத்தினை எதிர்க்கும் அவர்கள் இப்போது அணுமின் உற்பத்தியையும் குறை கூறுகிறார்கள். இந்தியா 1998ல் அணுப் பரிசோதனை செய்த போது எதிர்த்தவர்கள் அவர்கள். அவர்களுக்கு அமெரிக்க எதிர்ப்புதான் முக்கியம், இந்தியாவின் நலன் அல்ல. எனக்கு இந்தியாவின் நலம் தான் முக்கியம், கண்மூடித்தனமான அமெரிக்க எதிர்ப்பு அல்ல.

நான் இடதுசாரி கட்களுடன் கொண்டிருப்பது வெறும் கருத்து முரண்பாடு அல்ல. அவர்களின் உலகக் கண்ணோட்டத்தினையே நான் ஏற்கவில்லை. கட்சி சாராதவர்களுடன் (உ-ம் அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை) நான் முரண்படுவதில் எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை. வேறு பலவற்றில் குறிப்பாக இட ஒதுக்கீட்டில் அவர்களுடன் நான் முரண்படுகிறேன். இந்த முரண்பாடுகள் என்னைப் பொருத்தவரை தவிர்க்க முடியாதவை. அணுமின் உற்பத்தி தேவையற்ற தெரிவு என்று ஒரு காலத்தில் கருதினேன். இன்று பிரச்சினைகள் இருந்தாலும் அது தேவை என்று நினைக்கிறேன். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்:(புவி வெப்பமடைதல், அதிகரித்து வரும் பெட்ரோலிய தேவையும், இறக்குமதியும்) இருக்கின்றன. அன்றைய நிலைப்பாடு இன்றைய சூழலில் மறு பரீசலனைக்கு உட்படுத்தப்படவேண்டும். அதை செய்ய மறுத்து அன்று எதிர்த்தேன், இன்றும் எதிர்ப்பேன் என்று எதிர்த்துக் கொண்டிருப்பது ஒவ்வாது. அதே சமயம் அணுமின் சக்தி தேவையில்லை என்று வாதிடும் இயக்கங்கள், தனி நபர்களின் கருத்துக்களையும் நான் கவனித்தே வந்திருக்கிறேன். குறிப்பாக சொல்வதென்றால் IEER ஐச் சேர்ந்த டாக்டர். அர்ஜுன் மகிஜானி, கீரின் பீஸ் முன் வைக்கும் கருத்துக்களையும் நான் அறிவேன். அவற்றை
ஏற்கவில்லை என்பதால் அவற்றை முற்றிலுமாக மறுக்கிறேன் என்று பொருள் அல்ல. தெரிவுகள், சாத்தியப்பாடுகள் குறித்த சிக்கல் இது. இதில் குறிக்கோள்கள் ஒன்றாக இருந்தாலும், தெரிவுகளைப் பொறுத்தவரை கருத்தொற்றுமை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை.

இடதுசாரி கட்சிகள் அன்று அணுமின் சக்தியை வெகுவாக ஆதரித்தன.இன்று 123 ஒப்பந்தம் என்று வரும் போது அதில் மட்டும் எதிர்க்கின்றன. ஒட்டுமொத்தமாக அணுமின் உற்பத்தி கூடாது, கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையில்லை என்று அவை கூறுவதில்லை. அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் பல அணுமின் நிலையங்களை நிறுவுகின்றன. எண்ணெய் வளமிக்க ஈரான் கூட அணுமின் உற்பத்திக்கான ஆய்வினைத்தான் செய்கிறோம் என்கிறது. எனவே இடதுசாரிகளின் வாதம் ஏற்க இயலாத ஒன்று. அவர்களுக்கு இதில் கருத்து நேர்மையே கிடையாது. வேறு பலவற்றிலும் அவர்களிடம் கருத்து நேர்மை கிடையாது.

1994ல் உலக வர்த்தக அமைப்பு (WTO) குறித்து எழுதும் போது அதில் இந்தியா சேர்வதை ஆதரித்து எழுதினேன். TRIPS போன்ற ஒப்பந்தங்களில் பிரச்சினைகள் இருந்தாலும், அதில் இந்தியா உறுப்பினராக இருப்பதுதான் நமக்கு நல்லது என்றேன். என்ன நடந்தது, சீனா பின்னர் அதில் சேர்ந்தது, வியட்நாமும் சேர்ந்தது, ஆனால் இடதுசாரிகளில் ஒரு சாரார் உ.வ.அமைப்பு குறித்து எதிர்மறையாகவே எழுதிவருக்கிறார்கள். அதுவும் பொய்களை எழுதிவருகிறார்கள்.(உ-ம்: எஸ்.வி.ராஜதுரை, ம.க.இ.க). காலம் என் நிலைப்பாடு சரியானது என்று காட்டிவிட்டது. அது போல்தான் 123 ஒப்பந்தத்திலும் காலம் இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு நல்லது எனக் காட்டும், அப்போது இந்த இடதுசாரிகளின் எதிர்ப்பு எத்தனை அர்த்தமற்றது என்பதை நாம் உணர்வோம்.

-------------------------------------------------------------------------------------

Jnani

In your eagerness to criticise 123 agreement you have overlooked basic facts.you write

"இப்போது சூரியசக்தி, காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் 600 கோடி ரூபாய்தான். அதிலேயே அவை 5 சதவிகித மின்சாரத்தைத் தந்து வருகின்றன."

This is wrong because private sector has invested heavily in these and the allocation in the budget does not cover that.In other words investment in a sector where private sector has a major share cannot be equated to the budgetary allocation for that sector (renewables). if atomic energy sector is opened up for private sector and if the private sector considers that it is viable or is
worth investing, private investment might flow in that sector.

I am for 123 agreement as we cannot afford to spend so much on petrol and to cut emissions of green house gases, atomic energy will help us. We have coal but more coal based plants, more CO2 emission. To harness hydel power we have to sacrifice a good portion of remaining forests and disrupt fragile ecosystems and go for mammoth projects like inter linking rivers.Solar and wind are necessary but there are many technical issues that need to be resolved to make them viable and efficient.Biofuels, there are many issues that need to be taken into account. I am not saying that there are no problems with atomic energy. Yes there are problems but today we need to harness all sources of energy in such a manner that we dont increase emissions of Co2 substantially and we dont end up paying too much for import of oil. So even if atomic energy contributes 6% that will make the difference.

You have a very naive view on China. China treats india as a competitor. There are many unresolved issues with them. Even now they claim that Arunachal Pradesh is theirs. In 1962 they showed their true colors. I think aligning with USA to counter China is a good strategy. In any case 123 agreement will end our isolation and will enable us to approach the other countries also for nuclear technology and materials. Why Iran despite its enormous oil resources is interested in atomic energy. We need to reduce the dependency on pertoleum imports. In the long run India should co-operate closely with USA, Europe, Japan, Australia and Israel. Pakistan is a failed state and China is a neighbour who would want us to remain as a very junior partner in Asia. For all its faults USA is much more reliable than China.For me the interests of India are more important and that cannot be sacrificed just because left hates USA.
cheers
ravi
----------------------------------------------------------------------------------

Labels: , ,

சூடான் - சர்வதேச குற்ற நீதிமன்றம்- இடதுசாரிகளின் கள்ள மெளனம்

சூடான் - சர்வதேச குற்ற நீதிமன்றம்- இடதுசாரிகளின் கள்ள மெளனம்

இனப்படுகொலை (genocide) குற்றத்திற்காக சூடான் அதிபரை கைது செய்ய சர்வதேச குற்ற நீதிமன்றத்தின் குற்றவிசாரணையாளர் (prosecutor) கோரி இருக்கிறார். ஏற்கனவே இனப்படுகொலைக்காக இந்த நீதிமன்றம் இருவரை கைது செய்து ஒப்படைக்க கோரிய போது சூடான் அரசு அதை ஏற்கவில்லை. இந்த நிலையில் அதிபரையே கைது செய்ய கோருவது சிக்கல்களை உருவாக்கியுள்ளது. சர்வதேச குற்ற நீதிமன்றம், ஐநாவின் அமைப்பு, ஐநா அமெரிக்க கைப்பாவை என்று நினைப்பவர்களுக்கு ஒன்று தெரிய வேண்டும், இந்த நீதிமன்றத்தினை அமெரிக்கா ஒப்புக்கொள்ளவில்லை. சூடானுக்கு ஆதரவாக சீனா தலையிட்டு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் மூலம் கைதை தவிர்க்குமா, இல்லை தலையிடாதா என்று விவாதிக்கப்படுகிறது. இந்த சிக்கல் குறித்து நான் எழுத நினைத்த பின் இந்தக் கட்டுரையைப் படித்தேன். ஆகா, இதை பரிந்துரைக்கலாமே என்று தோன்றியது. அதன்படி நான் தமிழில் எழுதாமல் சுட்டியைக் கொடுத்து தப்பித்துக் கொள்கிறேன் :).

இந்தச் செய்தியை நீங்கள் தீக்கதிரில் படிக்க முடியாது. சூடான் இனப்படுகொலை குறித்து இங்குள்ள இடதுசாரிகள், முற்போக்காளர்கள் வாயே திறக்கமாட்டார்கள். புது விசை, விழிப்புணர்வு போன்றவற்றில் இது பற்றி எதுவும் நானறிந்த வரை வந்ததில்லை.

இஸ்ரேலுடன் உறவை விலக்கச் சொல்லும் இடது கம்யுனிஸ்ட்கள் இதைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் இது முஸ்லீம்கள் முஸ்லீம்களை ஆயிரக்கணக்கில் கொல்லும் உள்நாட்டுப் போர்,லட்சக்கணக்கனோர் இடம் பெயர்ந்து அகதிகளாக வாழ்கின்றனர். இந்த்துவம் அல்லது ஏகாதிபத்தியம் கொன்றால் அதை கண்டிக்க வேண்டும், முஸ்லீம்களே முஸ்லீம்களைக் கொன்றால் கண்டு கொள்ளக் கூடாது என்பதுதான் இவர்களின் அறிவிக்கபடாத விதி.

மனித உரிமை அமைப்புகள், சீனா சூடான் மீது பெரிய அளவில் சர்வதேச நடவடிக்கை ஏற்படுவதை விரும்பவில்லை சூடானின் எண்ணெய் தொழில்லில் சீனாவின் முதலீடு பில்லியன் டாலர்களில், சூடானுக்கு ஆயுதங்களையும் சீனா தருகிறது என்று கூறுகின்றன. சில வாரங்கள் முன் சி.பி,ஐ(எம்) மின் அதிகார பூர்வ வார இதழான People's Democracy ல் CITU பொதுச்செயலாளர் பாந்தே ஒரு கட்டுரை எழுதியிருந்தார், சூடானுக்கு சென்று வந்த பின். அதைப் படித்தால் இடதுசாரிகள் உலகமகா பொய்யர்கள் என்பது நன்றாக விளங்கும். ரஷ்யாவும் சூடானுக்கு பாதுகாப்பாக செயல்படுகிறது என்பதையும் மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடுகின்றன. அமெரிக்கா சூடானில் நடப்பதை ஆதரிக்கவில்லை. எத்தனை பேர் கொல்லப்பட்டனர், எத்தனை பெயர் இடம் பெயர் நேர்ந்தது, டாபூரில் பிரச்சினை என்ன என்பதை இங்கு நான் விளக்கப் போவதில்லை. கூகுளில் தேடினால் ஏராளமான தகவல்கள் கிடைக்கும்.

மோடியை உலகமகா குற்றவாளி என்று சித்தரிப்பவர்கள் சூடான் குறித்து ஏன் மெளனம் சாதிக்கிறார்கள், அல்லது பொய் சொல்லி திசை திருப்புகிறார்கள் என்ற கேள்விக்கான விடையை நீங்களே எளிதாக கண்டுபிடிக்கலாம். பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்
என்று தீராநதியில் அரைப் பொய்களையும், கட்டுக்கதைகளையும் கலந்து எழுதும்
அ.மார்க்ஸ் அடுத்து வரும் இதழ்களில் சூடான் குறித்தும் அப்படி ஒரு கலவை
கட்டுரையை எழுதினால் வியப்பில்லை.

Labels: , ,

தமிழ்மண நிர்வாக ஐயன்மீர்

தமிழ்மண நிர்வாக ஐயன்மீர்

தமிழ் வலைப்பதிவுகளைத் தேடிப் படியுங்கள் என்று தமிழ்மண முகப்பினை காண்பித்தால் பல இடுகைகளின் தலைப்புகள், இதையெல்லாமா படிக்கச் சொல்கிறாய் என்று நம்மிடம் கேட்கவைக்கின்றன.எனவேதான் ஒரு இடைக்கால தீர்வாக இந்த உடனடி முடிவினை எடுதத்தாக புரிந்து கொள்கிறேன். உங்கள் நிலைப்பாட்டில் உள்ள நியாயம் எனக்குப் புரிகிறது. பதிவர்களுக்கு தாங்கள் பயனர்கள் என்பது பல சமயங்களில் மறந்து விடுகிறது. திரட்டிக்கும் சில விழுமியங்கள் இருக்கமுடியும் என்பதையும், பொதுவெளியில் சிலவற்றை வெளிப்படுத்தும் போது அதால் பிறருக்கு அதாவது இங்கு திரட்டி நிர்வாகத்திற்கும் சில சங்கடங்கள் நேரலாம் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை என்று நினைக்கிறேன்.திரட்டி என்பது மனிதர்களால் நடத்தப்படுகிறது, வெறும் நிரலிகளால் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இணையத்தில் கருத்து சுதந்திரம் மட்டற்றது என்பது ஒரு மிகையான கருத்து. அதே போல் திரட்டி நிர்வாகம் வலைப்பதிவரின் படைப்புரிமைய அங்கீகரிக்கும் வேளையில் அந்த இடுகை(களை) திரட்ட மறுக்கும் உரிமையும் திரட்டி நிர்வாகத்திற்கு இருக்கிறது என்பதை பதிவர்கள் நினைவில் கொள்ளலாம். இங்கு சிலர் நினைப்பது போல் திரட்டியைப் பயன்படுத்துவது என்பது கட்டற்ற பொதுவெளியில் சுதந்திரமாக உலவுவது போல் அல்ல. இப்போது தமிழ்மணம் சந்தித்த கேள்விகள் எதிர்காலத்திலும் வரும். வேறு வார்த்தைகளில், வேறு சூழல்களில் வரும். அப்போது வேறு தீர்வுகள் தேவைப்படும். நிரலிகள் மூலம் செய்யப்படும் வடிகட்டுதல் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்காது என்பது உங்களுக்கும் தெரியும். இருந்தாலும் ஒரளவிலாவது தீர்வு காணவேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளதால், தமிழ்மணம் இவ்வாறு செய்தது என்று உங்கள் முடிவினை புரிந்து கொள்கிறேன்.

இப்படிக்கு
ரவி ஸ்ரீநிவாஸ்
[ஒரு moron cum மிடில் கிளாஸ் மாதவன் :)]

By ரவி ஸ்ரீநிவாஸ் on Jul 11, 2008

தமிழ்மண நிர்வாகத்தின் அறிவிப்பிற்க்கு இடப்பட்ட பின்னூட்டம்.

Labels: , ,

தமிழ்வழிக் கல்வி - ஒரு இடுகை, ஒரு தலையங்கம்

தமிழ்வழிக் கல்வி - ஒரு இடுகை, ஒரு தலையங்கம்

பத்ரி தன் இடுகையில் தமிழ்வழிக் கல்வியில் கல்லூரிகளில் தமிழில் பாட நூல்கள் இல்லை, ஆங்கிலத்தில் படித்து தமிழில் எழுதுகிறார்கள் என்று குறிப்பிடுகிறார். இந்த தீக்கதிர் தலையங்கம் திருச்சி பாரதிதாசன் பல்கலையில் 6 ஆண்டு ஒருங்கிணைந்த பொறியியல் முதுநிலை (M.Tech) தமிழ் வழியில் தொடங்க உள்ளதாக குறிப்பிடுகிறது. யானறிந்தவரையில் தமிழில் B.E/B.Tech படிக்க இயலாது. இப்பொழுது 6 ஆண்டு முதுநிலை பொறியியல் படிப்பு துவங்கும் முன் AICTE அனுமதி பெற்றுள்ளார்களா இல்லை பல்கலை அவ்வாறு அனுமதி பெற வேண்டாம் என்று விதி இருக்கிறதா?. மேலும் தமிழ் மொழியில் பாட நூல்கள் தயாராக உள்ளனவா? முதுநிலை படிப்பில் அறிவியல்/தொழில்னுட்பத் துறைகளில் கல்வி ஆங்கிலத்தில் இருப்பதே நல்லது. அதற்கு உரிய மொழியாக தமிழ் இன்று இல்லை.இரண்டையும் படித்தபின் எனக்கு பல கேள்விகள் எழுகின்றன. அதையெல்லாம் பின்னர் எழுதுகிறேன்.தீக்கதிர் தளம் சமயங்களில் பார்க்க கிடைப்பதில்லை என்பதால் தலையங்கத்தினை முழுதாக இட்டுள்ளேன்.


பத்ரியின் இடுகையிலிருந்து

”சென்ற வாரம் உயர்கல்விக்கான பாடப்புத்தகங்களைப் பதிப்பிக்கும் நிறுவனம் ஒன்றின் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது பயமூட்டும் ஒரு தகவல் கிடைத்தது. தமிழகத்தில் 70% மேலான (கலை, அறிவியல், நிர்வாகவியல்) கல்லூரிகளில் பாடங்கள் ஒன்று தமிழில் நடைபெறுகின்றன, அல்லது ஆங்கில மீடியமாக இருந்தாலும் பரீட்சையில் எழுதும்போது மாணவர்கள் தமிழிலேயே எழுதுகிறார்கள்.

பயம் அதைப்பற்றியல்ல. இந்த மாணவர்களுக்கு தமிழில் பாடப்புத்தகங்களே கிடையாது என்பதுதான் பயமூட்டும் விஷயம். பல்கலைக்கழகங்கள் பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதில்லை. எப்போதோ தமிழ்நாடு பாடநூல் கழகம் பதிப்பித்த சில புத்தகங்களும் இன்று அச்சில் இல்லை. தனியார் பாடப்புத்தக பதிப்பகங்களோ ஆங்கிலத்தில்மட்டுமே புத்தகங்கள் போடுகின்றனர்.

அப்படியென்றால் தமிழ் மாணவர்கள் எதைப் படிக்கிறார்கள்? எப்படி பரீட்சை எழுதுகிறார்கள்? எதைப் புரிந்துகொள்கிறார்கள்? எப்படி பட்டம் வாங்கியதும் வெளியே வந்து உருப்படுகிறார்கள்?

இந்த விஷயம் உண்மைதானா என்பதை அறிய சமீபத்தில் தமிழகக் கல்லூரிகளுடன் பரிச்சயம்கொண்ட சிலரைக் கேட்டேன். அவர்கள் உண்மைதான் என்கிறார்கள்.

தமிழ், தமிழ் என்று நாளுக்கு முந்நூறுமுறை மூச்சுவிடும் கட்சிகள் பதவியில் இருக்கும் தமிழகத்துக்கு இதுதான் கதியா? பொருளாதாரம், சமூகவியல், சூழலியல், இலக்கியக் கோட்பாடுகள், இயல்பியல், வேதியியல், கணிதம், புள்ளிவிவரவியல், விலங்கியல், தாவரவியல், மரபியல், நிர்வாகவியல் என எதற்கும் இளநிலை, முதுநிலைப் பாடங்களுக்கு தமிழில் உருப்படியான பாடப்புத்தகங்கள் இல்லை என்றால் மாணவர்களின் படிப்பு என்னாவது?

பேசாமல் அனைவரும் ஆங்கிலம் கற்று, அதிலேயே பாடங்களைப் படித்துவிடலாமா?”

தீக்கதிர் தலையங்கம்
http://theekkathir.in

தமிழ்வழிக் கல்விக்கான தடைகள் தகரட்டும்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆறாண்டு ஒருங்கிணைந்த எம்.டெக். படிப் புகள் தமிழ் வழியில் துவங்கப்பட்டுள்ளன. பயோ இன்பர்மேட்டிக்ஸ், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், உயிரி தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகள் இந்த கல்வியாண்டு முதல் துவங்கப்பட்டுள்ளன.

இந்த தமிழ் வழிப்படிப்புகளில் மாணவர் கள் ஆர்வத்துடன் சேர்வதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் உள்ள அனைத்து முதுநிலை பட்டப்படிப்புகளும் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் கற்றுத்தர நடவடிக்கை எடுக் கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. “தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்” என்று பாடிய பாவேந்தர் பாரதி தாசனின் பெயரால் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழி யில் பொறியியல் படிப்பு வழங்குவதற்கான முயற்சி துவங்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பும் இருந்தது. எனினும் இடையில் ஏற்பட்ட இடையூறுகளால் அந்த முயற்சி தடைப்பட்டது. தற்போது தமிழ்வழியில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பை பயிற்றுவிப்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு கூடி ஆலோ சனை நடத்தியுள்ளது.

பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பு களுக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப் பட்டுள்ளதால் கிராமப்புற மாணவர்களும், இந்தப் படிப்புகளில் சேர நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழ் வழியில் பயின்றுவிட்டு உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி என்பது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அண்மையில் பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று பொறியியல் படிப்பில் சேர்ந்த ஒரு மாணவர், ஆங்கில வழிப் பாடங்களை புரிந்துகொள்ள முடியாமல் ஏற்பட்ட மன உளைச்சலால் தற் கொலை செய்து கொண்ட கொடுமை நிகழ்ந் தது. சில மாணவர்கள் உயர் படிப்புகளில் சேர்ந்தும் கூட தொடர முடியாமல் இடை யிலேயே நின்றுவிடுவதும் நிகழ்கிறது.

பொறியியல், மருத்துவம் போன்ற உயர் படிப்புகளை தாய்மொழியில் பயில்வது முற்றிலும் சாத்தியமான ஒன்றே. ஆங்கிலத்தில் மட்டுமே உயர்கல்வி பயில முடியும் என்பது ஒரு மாயை. அதை மாற்ற சிறந்த அறிஞர் களைக் கொண்டு தயாரிக்கப்படும் பாடநூல் கள் மிகவும் இன்றியமையாத ஒன்றாகிறது.

தமிழ்வழியில் பயின்றோருக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டால் மாணவர்கள் தமிழ் வழி படிப்புகளில் ஆர்வத்தோடு சேர்வார்கள். அவர்களுக்கு ஆங்கிலமொழியில் நல்ல பயிற்சியும் அளிக்கப்பட்டால் பிற மாநிலங் கள் அல்லது பிற நாடுகளுக்கு வேலைக்குச் செல்ல முடியாது என்ற பிரச்சாரத்தையும் தகர்க்க முடியும்.

மொழி என்பது அறிவைச் சுமந்து வரும் வாகனமே அன்றி அதுவே அறிவல்ல. தமிழ கத்தில் கல்வி வியாபாரிகளால் ஆங்கிலம் தெரிந்திருப்பதே அறிவு என்ற மாயத்தோற் றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் எப்படியோ அதுபோன்றுதான் கல்விக்குத் தாய்மொழி என்பதும். துவக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழில் படிக்கத் தடையில்லை என்ற நிலை ஏற்படுத்துவதே தாய்மொழி வளர்ச்சிக்கு உரிய வழியாகும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை பிறகு எந்த உணவையும் எளிதாகச் செரித்து விடும். தாய்மொழி வழிக் கல்விக்கும் இது பொருந்தும்.

Labels: , , ,

1 2 3

1 2 3

1)சில பின்னூட்டங்களுக்கு பதில் தர வேண்டும்.அடுத்த வார இறுதிக்கும் தர
முயல்கிறேன்
2)இணையத்தில் கட்டற்ற கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பது மிகைப்படுத்தப்பட்ட
ஒரு கருத்து. தொழில் நுட்பத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் உள்ள உறவு எளியது
அல்ல. இணையம் தரும் சில வசதிகளைக் கொண்டு மட்டும் அதை மதிப்பிடமுடியாது.
இணையமும் சட்டத்திற்குட்பட்டதுதான்.
3)தொழில்னுட்பம் மூலம் நெறிப்படுத்தல் இணையத்தில் சாத்தியம்.அதற்கும் வரையரை
உண்டு.சில சமயங்களில் நெறிப்படுத்துகிறேன் என்று வடிக்கட்ட முயலும் போது எதிர்பாரா
விளைவுகளும் ஏற்படலாம்.நெறிப்படுத்துபவர்(கள்) அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

Labels: , ,

அறிவுசார்சொத்துரிமைகளும் அறிவியலும்

அறிவுசார்சொத்துரிமைகளும் அறிவியலும்

அறிவுசார்சொத்துரிமைகளும் அறிவியலும் குறித்து நோபல் பரிசு பெற்ற இருவர் (ஒருவர் அறிவியலாளர், இன்னொருவர் பொருளாதார நிபுணர்) தம் கருத்துக்களை அண்மையில் தெரிவித்துள்ளனர். இந்தப் பொருள் குறித்து முன்பு (2004?) நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அது உயிர்மையில் வெளியானது.அதை இன்னும் விரிவாக்கி, தகவல்களை இன்றைபடுத்தி (update) எழுத வேண்டிய தேவை இருக்கிறது. அதைக் தேடிக் கண்டுபிடித்துவிட்டால் வலைப்பதிவில் மாற்றம் செய்யாமல் இடுகிறேன். வாசகர் நல்லூழ் எப்படியோ :)

Labels: ,

தொடரும்... எதிர்வினைகள்

தொடரும்... எதிர்வினைகள்


யமுனா ராஜேந்திரனின் கட்டுரை இங்கே.
http://inioru.com/?p=156

நாகர்ஜினனின் எதிர்வினை இது
ரவி ஸ்ரீனிவாஸ்

இம்மாத தீராநதியை நான் இன்னும் பார்க்கவில்லை. உங்கள் கடிதம் இன்னும் வெளியாகவில்லை என்ற விபரம் கேட்டு வருந்துகிறேன். அவர்கள் வெளியிட்டிருக்க வேண்டும்.Foucault and the Iranian Revolution புத்தகம் நான் வாசித்ததுதான். அதுபற்றி எனக்கு விமர்சனம் உண்டு. ஃபூக்கோவின் விரிவுரைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இவற்றிலும் அதுபற்றி இருக்கிறது. இந்தக் கட்டுரையில் அதை விபரமாகக் குறிப்பிடவில்லைதான்.
யமுனா ராஜேந்திரன் உங்கள் உயிர்மை கட்டுரை பற்றி அறிவேன். ஆனால் இதுவரை வாசிக்கக்கிடைக்கவில்லை (போத்ரியார் பற்றிய கட்டுரையும்தான். அதை ஏற்கனவே என் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்). ஃபூக்கோ பற்றிய இந்தக் கட்டுரையை இப்போது நீங்கள் தந்த சுட்டியை வைத்து வாசித்தாயிற்று. நன்றி.என் பதிவில் நிச்சயமாக பதில் எழுதுகிறேன். பயணத்தில் இருப்பதால் தாமதமாகலாம்!

நட்புடன்
நாகார்ஜுனன்

இருவருக்கும் என் நன்றிகள்.

Labels: , ,

முனைவர் நரேந்திர ஜாதவ் - உழைப்பு,அறிவு, கனவு

முனைவர் நரேந்திர ஜாதவ் - உழைப்பு,அறிவு, கனவு

இந்த மாத செமினார் இதழில் நரேந்திர ஜாதவ் புனே பல்கலைகழகத்தில் செய்யப்பட்டு வரும் புதிய முயற்சிகளையும்,நடைமுறைப்படுத்தப்படும் மாற்றங்களையும் விரிவாக எழுதியிருக்கிறார். அதைப் படித்ததும் எனக்கு வியப்பு ஏற்பட்டது. அதற்கு ஒரு காரணம் ஜாதவ் இதற்கு முன் எங்கும் துணை வேந்தராக இருந்ததில்லை. இந்திய ரிசர்வ் வங்கியில் பொருளாதார ஆய்வுத் துறையில் பணிக்குச் சேர்ந்து மிக உயரிய பொறுப்பினை எட்டியவர். அமெரிக்காவில் உள்ள ப்ர்டியு பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் கிடைத்த வேலை வாய்ப்புகளை உதறி இந்தியாவிற்கு திரும்பியவர். மிகவும் சாதாரண தலித் குடும்பத்தில் பிறந்து தன் உழைப்பால் முன்னேறியவர் அவர். அவரைப் பற்றிய ஒரு குறிப்பு இங்கே, அவருடான ஒரு செவ்வி இங்கே. செவ்வியில் கூறப்பட்ட சில கருத்துக்கள் இன்று அன்றை விட பொருத்தமானவை.அதற்காக
நான் அவரது அனைத்து கருத்துக்களையும் ஏற்கிறேன் என்று பொருள் கொள்ள வேண்டாம்.
ஒரு காலத்தில் அரசில் கடை நிலை ஊழியர் (பியுன்) ஆக ஆவது தன் லட்சியமாக இருந்தது என்று கூறும் ஜாதவின் தொலைநோக்குத் திட்டங்கள் வெற்றி பெறுமானால் புனே பல்கலைகழகம் ஒரு முன்மாதிரியாகத் திகழும்.

Labels: , , ,

தீராநதிக்கு ஒரு கடிதம் ( நாகார்ஜுனன்-ராஜன் குறை-அ.மார்க்ஸ்)

தீராநதிக்கு ஒரு கடிதம் ( நாகார்ஜுனன்-ராஜன் குறை-அ.மார்க்ஸ்)

ஜூன் மாத தீராநதியில் வெளியான இரு கட்டுரைகளுக்கு எதிர்வினையாக கீழே தரப்பட்டுள்ள கடிதத்தினை தீராநதிக்கு அனுப்பினேன். அது வெளியாகியிருக்கிறதா என்று தெரியாது. தீராநதியை இணையத்தில் பார்க்கிறேன். இதழை அச்சில் படிப்பவர்கள் ஜூலை இதழில் கடிதம் வெளியாகியிருக்கிறதா, இல்லையா என்பது குறித்து தகவல் தரலாம்.

கடிதத்தினை தகவலுக்காவும், ஆவணப்படுத்தவும் இங்கு இடுகிறேன்.

நாகர்ஜுனன் எழுதியது
http://nagarjunan.blogspot.com/2008/05/blog-post_28.html

ராஜன்குறை, அ.மார்க்ஸ் எழுதியது
http://ravisrinivas.blogspot.com/2008/06/blog-post_11.html

-------------------------------------------------------------------------------
”அதேவேளை, 1979ஆம் ஆண்டில் அமெரிக்க கைப்பாவையான ஷாவின் ஆட்சிக்கு எதிரான ஈரானியப் புரட்சியை ஒரு ஆன்மீக எழுச்சியாக முதலில் கணித்தவர் அவர் " என்று நாகார்ஜுனன் எழுதியிருக்கிறார். பூக்கோ அதை ஏன் ஆன்மிக எழுச்சியாக எந்த அடிப்படையில் கணிதார் என்பதையும், ஈரானிய புரட்சி குறித்த பூக்கோவின் கணிப்புகள் எந்த அளவிற்கு மெய்யாயின என்பதையும் அவர் எழுதியிருக்கலாம். ஈரானிய புரட்சி குறித்த பூக்கோவின் கருத்துக்கள் அப்போதே விமர்சிக்கப்பட்டன. ஷாவின் ஆட்சியின் வீழ்ச்சியையும், ஈரானிய மக்களின் எழுச்சியையும் ஆதரித்த இடதுசாரிகள், பெண்ணியவாதிகள் பழமைவாத கோமேனியை ஆதரிக்கவில்லை. மதவாதிகளின் ஆட்சியில் பெண்களின் உரிமை மதிக்கப்படாது என்று எச்சரித்தனர். அவர்களை பூக்கோ எள்ளி நகையாடினார். இது குறித்து கேள்வி எழுப்பிய ஈரானைச் சேர்ந்த பிரான்சில் வாழ்ந்த பெண்ணியவாதியின் கேள்விகளை அலட்சியப்படுத்தி எழுதினார்.

2005ல் வெளிவந்த Janet Afary and Kevin B. Anderson. Foucault and the Iranian Revolution: Gender and the Seductions of Islamism. Chicago: University Chicago Press என்ற நூலில் முதன்முறையாக ஈரான் புரட்சி குறித்து பூக்கோ எழுதியவை அனைத்தும் ஆங்கில மொழிபெயர்ப்பில் தரப்பட்டன. அதற்கு முன் ஈரான் குறிதது அவர் எழுதியவை, அவருடனான பேட்டிகள் ஒரு சிலவே ஆங்கிலத்தில் கிடைத்தன. இந்த நூல் பூக்கோவின் எழுத்துக்கள், கருத்துக்கள் மீதான ஒரு விரிவான அலசலையும், விமர்சனத்தையும் முன் வைத்தது. பூக்கோவால் ஏன் ஷியா இஸ்லாத்தினை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை, ஈரானிய புரட்சி குறித்த இடதுசாரி, பெண்ணிய விமர்சனங்களையும் மீறி அதை ஏன் அவர் ஆன்மிகப் புரட்சியாக கணித்தார். அதற்கும் அவரது நவீன எதிர்ப்பு சிந்தனைகளுக்கும் உள்ள தொட்ர்பு என்ன போன்ற கேள்விகளுக்கு இந்த நூல் விடையளிக்க முயல்கிறது. பெரும் கவனிப்பை பெற்ற இந்த நூல் ஒரு விவாதத்தையும் கிளப்பியது. தமிழில் யமுனா ராசேந்திரன் இதைப் பற்றி எழுதியதாக நினைவு. பிரண்ட்லைனில் அந்த நூலின் மதிப்புரை வெளியானது. ஈரானில் நடந்த புரட்சியை,மதவாத எதிர்வினைகளை ஆதரித்தது பூக்கோ செய்த மோசமான தவறு, அது ஒரு வெறும் பிழை அல்லது சறுக்கல் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாகர்ஜுனனோ “அதேவேளை, 1979ஆம் ஆண்டில் அமெரிக்க கைப்பாவையான ஷாவின் ஆட்சிக்கு எதிரான ஈரானியப் புரட்சியை ஒரு ஆன்மீக எழுச்சியாக முதலில் கணித்தவர் அவர். இன்று அமெரிக்க வெளியுறவுச் செயல்பாடுகளை எதிர்ப்பதாக முன்வந்த செப்டம்பர் 11 தாக்குதல்களை எப்படிப் பொருள்கொண்டிருப்பார் என்பதும் முக்கியமாக யோசிக்க வேண்டிய ஒன்றே” என்று எழுதுகிறார். இதிலிருந்து பூக்கோவின் கணிப்பு சரி அதாவது ஈரானிய புரட்சி ஒரு ஆன்மிக எழுச்சி என்று கருதுகிறார் என்றுதான் நாம் கொள்ள வேண்டும். பூக்கோ செய்த கணிப்பு தவறு என்று நிரூபிக்கப்பட்டு, பூக்கோவின் கருத்துகள் கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகிவிட்டன. இணையத்தில் தேடினால் பல தரவுகளை வாசகர்கள் பெற முடியும். பூக்கோ அன்று கொண்டாடிய ஆன்மிக எழுச்சியின் அடிப்படை உண்மையில் மனித உரிமைகளையும், பெண் உரிமைகளையும் நிராகரிப்பது. ஆட்சியை கைப்பற்றிய மதவாதிகள் பெண்கள் உடலை மூட வேண்டும் என்று ஆடை கட்டுப்பாடுகளை விதித்தனர், பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை குறைத்தனர். இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்த விமர்சனங்களை புறந்த்தள்ளி ஆன்மிக எழுச்சியாக கண்ட பூக்கோவால் ஈரானிய புரட்சி குறித்த தன் கருத்துக்களுக்கு இறுதி வரை ஒரு சரியான விளக்கத்தினை தர முடியவில்லை. இதில் உள்ள ஒரு முரண்நகை என்னவெனில் நவீனத்துவத்தின் பெரும் விமர்சகரான பூக்கோ அடிப்படை புரிதலின்றி அந்த ‘ஆன்மிக எழுச்சியை' ஆதரித்ததும், அதன் ஆபத்துக்களை உணராமல் அதை கொண்டாடியதுதான். அன்று பூக்கோ கொண்டாடிய ஈரானிய புரட்சி இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், நவீனத்துவத்தை நிராகரித்து இஸ்லாமிய நம்பிக்கைகள் அடிப்படையில் அரசுகள் அமைய வேண்டும், மதச்சார்பின்மை, பொதுவுடமைத் தத்துவம், பெண்ணுரிமைகள் போன்றவை நிராகரிக்கப்பட வேண்டும் என்று கருதுவோருக்கும் ஒரு உந்து சக்தியாக விளங்கியது. சுருக்கமாக சொன்னால் பூக்கோ கொண்டாடிய அந்த எழுச்சியின் தர்க்க ரீதியான முடிவு நடைமுறையில் தலிபான்களின் ஆட்சி போன்ற ஒன்றுதான். ஆனால் நாகார்ஜுனன் இதை முற்றிலுமாக கருத்தில் கொள்ளாமல் சாம்ஸ்கி-பூக்கோ உரையாடலை குறித்து எழுதுகிறார். இதைக் கருத்தில் கொண்டால் பூக்கோ குறித்து நாகார்ஜுனன் கட்டமைக்கும் பிம்பம் உடைந்து விடும். பூக்கோவின் கருத்துகள், சிந்தனைகள் குறித்து பல்வேறு நிலைப்பாடுகள் உள்ளன. அவரின் பங்களிப்பினை ஏற்பவர்கள் பலர் அவர் கருத்துக்களின் பலவீனங்களையும், போதாமைகளையும் சுட்டிக் காட்டியுள்ளனர். பூக்கோ செய்த ஆய்வுகளின் முடிபுகளை எல்லா சமூகங்களுக்கும் அப்படியே பொருந்தும் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இந்தியாவில் பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய சிறைச்சாலைகள், தண்டனை வகைகள், குற்றவியல் சட்டங்கள் போன்றவற்றை பூக்கோவிய கண்ணோட்டத்தினை மட்டும் கொண்டு புரிந்து கொள்ள முடியாது. அதே போல் இன்றும் சித்திரவதை தொடர்வதையும், ஷாவின் ஆட்சியில் அது இருந்ததையும், ‘ஆன்மிக எழுச்சி'க்கும் பின் சித்திரவதைகள் தொடர்வதையும் பூக்கோ எழுதியதை கொண்டு விளக்குவதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. நான் கவனித்த வரையில் நாகார்ஜுனன் இது போன்ற கேள்விகளை எழுப்புவதில்லை.

இன்று புவி வெப்பமடைவதல் பெரிய பிரச்சினை, ஒசோன் படுகை நாசமடைவது அத்துடன் ஒப்பிடுகையில் அவ்வளவு பெரிய பிரச்சினையல்ல.அது குறிப்பிடத்தக்க அளவிற்கு தீர்வு காணப்பட்ட பிரச்சினை. இதை ராஜன் குறையும், அ.மார்க்ஸும் குறிப்பிடுவதில்லை. முதலீட்டியம், புவி வெப்பமடைதல் குறித்து இடதுசாரிகள், மார்க்ஸியர்கள் எழுதியுள்ளனர். மார்க்ஸியம், சுற்றுச்சூழல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக பல புதிய நூல்கள், ஆய்வுகள் வெளியாகியுள்ளன. பசுமை(யாகும்) மார்ஸியம், எகோ சோசலிசம்(Eco-Socialism) என்றெல்லாம் பேசப்படுகிறது, மார்க்ஸின் எழுத்துக்களில் இயற்கை வளங்கள் குறித்த அக்கறை வெளிப்படுகிறது என்று தொடங்கி, இன்றைய உலகச் சூழலில் மார்க்ஸிய கண்ணோட்டத்தில் சூழல் பிரச்சினைகளை எப்படி புரிந்து கொண்டு, தீர்வுகளை முன் வைப்பது என்று பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. அ.மார்க்ஸ் கூறும் விளக்கம் ”முதலீட்டு வடிவத்தில் மட்டுமின்றி கல்விமுறை,மருத்துவம்,குடும்ப அமைப்பு என எல்லாவற்றிலும் முதலாளியத்தை அப்படியே எடுத்துக் கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை” ஒரளவே பொருந்தும். மாறாக சுற்றுச்சூழல், மார்க்ஸியம் குறித்த விவாதங்கள்தான் ஏன் இன்னும் அடிப்படையான கேள்விகளை, அதாவது சுற்றுச்சூழல், இயற்கை குறித்த மார்க்ஸிய புரிதலிலேயே பிழை(கள்) இருந்தனவா எழுப்பும்.
அந்த வகையில் தமிழ்சூழலில் இவற்றை எழுப்பியவர்களில் முதன்மையானவர்கள் கோவை ஞானியும், எஸ்.என்.நாகராஜனும்தான். இவர்கள்தான் இயற்கை வேளாண்மையையும் ஒரு மாற்றாக முன்னிறுத்தி ஆதரித்தவர்கள். இந்த விவாதங்களில் அ.மார்க்ஸின் பங்களிப்பு, நான் அறிந்தவரை, அதிகமில்லை. மாறாக ஒரு காலகட்டத்தில் கெய்ல் ஒம்வேட்டின் கருத்துக்களை இங்கு சொல்லிக் கொண்டிருந்தவர் அவர். முதலீட்டியம் புவி வெப்பமடைதல் ஒரு பிரச்சினை என்பதை இப்போது கிட்டதட்ட ஏற்றுக் கொண்டு, தீர்வுகளை தேடுகிறது. முதலீட்டியம் என்பது ஒரு மாயப் பிசாசல்ல. அது எவற்றின் மூலம் தொழிற்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். சந்தைப் பொருளாதராத்தினை அடிப்படையாக கொண்ட, முதலீட்டியம் வலுவாக உள்ள பல நாடுகள், குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்தேரிலியா, கனடா போன்றவை இன்று உலக வெப்படைமதல் பிரச்சினைக்கு தீர்வு காண விழைகின்றன. புவி வெப்படைமதல் நாடுகள் தீர்வு காண வேண்டிய உலகளாவிய பிரச்சினை. இதில் தலைமுறைகளிக்கிடையேயான சமத்துவம், தலைமுறைக்கிடையேயான சமத்துவம் குறித்த கேள்விகள் உண்டு. யார் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தினை எந்த அடிப்படையில், எவ்வளவு காலத்திற்குள் எந்த அளவு குறைப்பது உட்பட பல சிக்கலான வினாக்கள் உள்ளன. நாடுகள் முன்பு ஒத்துழைத்து மாண்டிரியல் புரோடோக்கால் மூலம் ஒசோனை அழிக்கும் பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு, விநியோகத்தினை கட்டுப்படுத்தி, குறைத்தன.ஆனால் கியோட்டா புரோடடோக்கால் தோல்வியுற்றது. இது ஏன் என்பது சுவராசியமான, முக்கியமான கேள்வி. முதலீட்டியம் என்ற ஒன்றின் அடிப்படையில் இப்பிரச்சினையை புரிந்து கொண்டு தீர்வு காண முடியாது.

காந்தியின் சிந்தனை, செயல்களின் தாக்கத்தினை சுற்றுச்சூழல் அறம் குறித்த கோட்பாடுகளிலும், சுற்றுச்சூழல் இயக்கங்கள்/போராளிகளின் செயல்பாடுகளில் காண முடியும். உதாரணமாக அர்னே நாயிஸ் என்ற நார்வே நாட்டு தத்துவவாதி முன்வைத்த கோட்பாடான ஆழ்சூழலியல் (Deep Ecology) என்பதை சுட்டிக்காட்டலாம். சூமாக்கர் போன்றவர்களிடமும் காந்தியத்தின் தாக்கம் உண்டு, மேலும் ஜெகன்னாதன் - கிருஷ்ணம்மாள், ராஜேந்திர சிங், மேதா பட்கர் உட்பட பல போராளிகளும் காந்தியத்தினை ஏற்றவர்களே. நுகர்வியம் குறித்த விமர்சனங்கள், தொழில் நுட்பத் தீர்வுகளை மதிப்பிடுதல் உட்பட பலவற்றில் காந்தியின் சிந்தனைகள் பயன்படும். இவையெல்லாம் பழைய கருத்துக்களே. எப்படியோ அ.மார்க்ஸ் காந்தியை ‘மீள் கண்டிப்பு' செய்து நமக்கெல்லாம் அறிவிக்கிறார் என்பதே ஒரு வரவேற்கத்தக்க ஒன்றுதான். கியுபா இயற்கை சார் வேளாண்மை மூலம்தான் தீர்வு கண்டது. இயற்கை வேளாண்மை மட்டும் போதுமா என்பது கேட்கப்பட வேண்டிய கேள்விதான். விரிவஞ்சி என் எதிர்வினையை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
----------------------------------------------------------------------------
பி.கு:எப்படியோ அ.மார்க்ஸ் காந்தியை ‘மீள் கண்டிப்பு' செய்து நமக்கெல்லாம் அறிவிக்கிறார் என்பதே ஒரு வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
என்பது
'எப்படியோ அ.மார்க்ஸ் காந்தியை ‘மீள் கண்டுபிடிப்பு' செய்து நமக்கெல்லாம் அறிவிக்கிறார் என்பதே ஒரு வரவேற்கத்தக்க ஒன்றுதான்' என்றிருந்திருக்க வேண்டும்.பிழை எனதே.

Labels: , , , , ,

பெரியார் பரம்பரை-பிரமீள்- என் விமர்சனம்

பெரியார் பரம்பரை-பிரமீள்- என் விமர்சனம்

எதிர்வாதம் செய்ய வேண்டும் என்பதற்காக வலிந்து பெரியாருக்கும், அண்ணாவிற்கும் ஆதரவாக எழுதப்பட்ட கட்டுரை இது என்றே நான் கருதுகிறேன். அதன் இன்றைய பொருத்தப்பாடு கேள்விக்குரியது.

1960களின் துவக்கத்திலிருந்து தமிழில் எழுதிய பிரமீள் இத்தகைய கருத்துக்களை இக்கட்டுரைக்கு முன் எழுதியிருக்கிறாரா என்ற கேள்வியை இங்கு எழுப்புதல் அவசியம். இது போன்ற கருத்தை அவரது முந்தைய கட்டுரைகள், முன்னுரைகள், பேட்டிகளில் காண முடியுமா. அவர் சொல்கின்ற வாதத்தினை எடுத்துக் கொண்டால் முற்போக்கு இலக்கியத்தையும் இதே போல் ஏற்க வேண்டும். அப்படி ஏற்று பிரமீள் எழுதியிருக்கிறாரா.இல்லை எனில் ஏன் ?. திராவிட இலக்கிய ஆதரவாளர்கள் பிரமீள் எழுதியதில் போய் தங்கள் கருத்தியலுக்கும், இலக்கியத்திற்கும் ஆதரவான சான்றுகளை தேடுவது வேடிக்கை. பிரமீள் அப்துல் ரகுமானை, வைரமுத்துவை, வா.மு.சேதுராமன், சுரதா போன்றவர்களை கவிஞர்களாக அங்கீகரித்து எழுதியிருக்கிறாரா.

தமிழவன் பிரமீளின் கவிதை(களை) விமர்சித்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பிரமீள் மாயகோவஸ்கியிடமிருந்து திருடியதாக அவர் எழுதினார் என நினைக்கிறேன். தமிழவன் பாணி விமர்சனம் பிரமீளுக்கு ஏற்புடையதல்ல. அது போல்தான் ஜெயகாந்தனின் இலக்கியமும். அந்த சிற்றிதழ் குழுச் சண்டையின் ஒரு பகுதிதான் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் பிரமீளின் இந்தக் கட்டுரை. அண்ணாவை ஏற்றால் கல்கியையும் ஏற்க வேண்டுமே. அப்படி ஏற்று பிரமீள் எழுதியிருக்கிறாரா. இந்த கட்டுரை ஒரு அபத்தமான கட்டுரை. பாரதியை பெரியாரோ, திராவிட இயக்கமோ ஏற்றதும் இல்லை, பாராட்டியதும் இல்லை. மேலும் பெரியாரின் கலை-இலக்கியக் கண்ணோட்டம் மிகவும் தட்டையானது, அதில் நுண்ணுர்விற்கு இடமில்லை. வரட்சியான பகுத்தறிவு பெரியாருடையது. ஜித்து கிருஷ்ணமூர்த்தி குறித்தும் பெரியாருக்கோ, திராவிட கழகத்திற்கோ நல்ல கருத்து இருந்ததாக தெரியவில்லை. பாரதி எழுதியதை அவன் காலத்து நிலைமைகளைக் கொண்டு மதிப்பிட வேண்டும். பிரமீள் கட்டுரையில் தகவல் பிழைகள் இருப்பதாகத் தோன்றுகிறது. பாரதி
தீவிரமாகச் செயல்பட்ட போது பெரியார் பிராமணரல்லாதோர் இயக்கத்தில் சேரவில்லை.
அது போல் அன்னி பெசண்ட், ஜித்து க்ருஷ்ணமூர்த்தி குறித்த பாரதியின் கருத்துக்களையும்
அந்தக் கால கருத்து மோதல்கள் சார்ந்து பார்க்க வேண்டும்.

பிரமீள் கட்டுரையில் வரலாற்று ரீதியான புரிதலும் இல்லை, கலை இலக்கிய ரீதியான வாதமும் வலுவாக இல்லை. பிரமீள் போன்றவர்கள் கூட அபத்தமாக எழுதியிருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

பிரமீள் எழுதுகிறார்

"உயிர்த்தன்மைதான் அழகு. உயிர்த்தன்மை புதுமலர்ச்சி என்கிற தன்மையாக ஒரு வெளியீட்டில் நிலவும் நிலையே அழகு. இதனை உணராதவர்கள் பயிலும் அழகியல் ஒரு வறண்ட இயல் தானே அன்றி அழகுடன் சம்பந்தம் உள்ள ஒன்றல்ல. இந்த உயிர்த்தன்மை தான் என்ன என்று பார்த்தால் அது நீதியுணர்விலிருந்து பிசகாத ஒரு மனோதர்மம் என்று காணலாம்.

எப்போது இந்த மனோ தர்மத்திலிருந்து கலைஞன் பிசகுகிறானோ, அது அவனது படைப்பிலிருந்து பிறிதான தனிமனிதப் பார்வைப் பிசகாக இருந்தால்கூட அது அவனது கலை இயக்கத்தை வறள வைத்துவிடும். மௌனிக்கு நடந்தது இது என்பது நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிற எனது சித்தாந்தம்."

இது அபத்தக் களஞ்சியம். இது போன்ற ஒரு விவாதம் வாக்னரை முன் வைத்து 70களில் தமிழில் நடந்தது.நீதியுணர்வு இருப்பவர்களெல்லாம் பெரும் கலைஞர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காந்தி ஒர் எடுத்துக்காட்டு. மாறாக நீதியுணர்வு அற்ற, தனி வாழ்விலும், பொது வாழ்விலும் பிறரை ஏமாற்றுகின்ற, சுய நலமே உருக்கொண்டு, பொய்யுரைக்கின்ற ஒருவர் பிரமாதமாக அழகியல் ரீதியாக வெற்றி பெறும் இலக்கியம் படைக்கலாம். இதற்கான உதாரணத்தை பிரமீளின் கட்டுரையை முன் வைத்தே கொடுத்து பிரமீள் எழுதியிருப்பது உளறல் என்று காட்ட முடியும்.

பிரமீளின் இந்தக் கட்டுரையை நான் படித்த போது பிரமீள் உயிருடன் இல்லை என நினைக்கிறேன். நான் பிரமீளை பார்க்க மருத்துவமனைக்குச் சென்ற போது அவர் பேசும் நிலையில் இல்லை.ஒரு காலகட்டத்திற்குப் பின் எனக்கு அவர் எழுத்தில் ஆர்வம் வெகுவாக
குறைந்து விட்டது. அவருடனான தொடர்பும் இல்லை. அப்போது தமிழில் எழுதுவதை, படிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டிருந்தேன். எனவே இந்தக் கட்டுரை எப்போது எழுதப்பட்டது, அதன் பிண்ணனி என்ன என்பதை நானறியேன்.

மருத்துவமனையில் காத்திருக்கையில் அவர் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்ததாகவும், அதில் அவர் செல்லப்பாவை கடுமையாக விமர்சித்திருந்தாகவும் நினைவு. இதுபோன்ற இலக்கியச் சண்டைகளில் அப்போது எனக்கு ஆர்வம் இல்லை, வெறுப்புதான் இருந்தது. பிரமீள் நேர்ப் பேச்சில் கட்டுரையில் உள்ளது போன்ற கருத்துக்களை என்னிடம் தெரிவித்ததில்லை. அவருக்கு தமிழ் நாட்டு அரசியல் குறித்த அறிவு குறைவு என்பதே என் அனுமானம்.பிரமீள் சிறந்த கவிஞர், நல்ல மொழிபெயர்ப்பாளர், சில குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார் என்பதே என் கருத்து. அவரது ஆன்மிகம், விமர்சனம் குறித்த தடாலடிக் கட்டுரைகள், இலக்கியச் சண்டையில் எழுதப்பட்ட கவிதைகள் உட்பட பலவற்றை என்னால் ஏற்க முடிந்ததில்லை.இவற்றை கழித்துக்கட்டினால் அவர் படைப்பில் கிட்டதட்ட 50% தான் தேறும் என்று நினைக்கிறேன். அவரைக் குறித்த
மிகையான மதிப்பீடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிரமீளின் பழகத் துவங்கிய போதிலிருந்தே எனக்கு இதில் அதாவது இலக்கியச் சண்டைகளில் ஆர்வம் இல்லை. விமர்சன ஊழல்கள் என்ற சிறு நூலின் மெய்ப்பு பிரதியை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அப்போதே இது போன்ற நூல்களால் என்ன பயன் என்று அவருக்கு எழுதியதாக நினைவு.

பிரமீளின் பெரியார் பரம்பரை கட்டுரை அபத்தம் என்றால், அதை முன்னிறுத்தி பெரியாரையும், அண்ணாவையும், கலைஞரையும் மதிப்பிடுவதும்,தூக்கிப் பிடிப்பதும் அதை விட அபத்தம்.

Labels: , , , ,

சாதியும், அரசியலும்: பேராசிரியர் தீரன் பேட்டி

சாதியும், அரசியலும்-பேராசிரியர் தீரன் பேட்டி

பேராசிரியர் தீரன் கொடுத்த பேட்டி (குமுதம் ரிப்போர்டர்-29.6.08) இங்கு தகவலுக்கும், ஆவணப்படுத்தவும் இடப்படுகிறது . வன்னிய சாதிக்காக தான் செய்ததை தீரன் பட்டியலிடுகிறார். சாதி அடிப்படையில் உயர் பதவிகள் தீர்மானிக்கப்படுவது முறையானதுதான், துணைவேந்தர்கள் நியமனத்தில் கூட சாதியைக் கொண்டு வருவது சரி, இதுதான் சமூக நீதி என்று சில பதிவர்கள் தீரனுக்கு ஆதரவாக எழுதினால் நான் வியப்படைய மாட்டேன். குழலி இந்தப் பேட்டியைப் படித்தாரா என்று தெரியவில்லை. இப்பேட்டிக்கு மறுப்பு வெளியாகலாம். தீரன் அப்படி எதையும் வன்னியருக்காக செய்யவில்லை என்றும் அவர் கூறியவை மறுக்கப்படலாம்.

இந்தப் பேட்டியும், காடுவெட்டி குருவின் பேச்சும் சாதியின் சக்தி அரசியலில் எந்த அளவு இருக்கிறது என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டு. இன்று சாதி நவீனமயமாக்கப்பட்டு ஒட்டு வங்கி அரசியலின் ஒருபகுதியாகி விட்டது, இட ஒதுக்கீடு அதன் நவீனமயமாக்கலை உறுதி செய்துவிட்டது. வேறு வார்த்தைகளில் சொன்னால் இன்றைய சாதிச் சொல்லாடல் பழைய வர்ணாஸ்ரம சொல்லாடலிலிருந்து பெரிதும் மாறுபடுகிறது. இங்கு அது ஒன்றுதிரட்டல், அடையாளப்படுத்திக் கொள்ளல், அதன் மூலம் குழு(க்கள்)தங்களை வலுப்படுத்திக் கொண்டு, அந்த வலுவை பயன்படுத்தி சலுகைகள் பெறல் என பலவிதங்களில் பயன்படுகிறது. இதன் வெளிப்பாட்டினைத்தான் இப்பேட்டியில் காண்கிறோம்.

---------------------------------------------------------------------------

வன்னியர் சங்கம் இசைப்பதற்கேற்பத்தான் பா.ம.க. தலைவர் ராமதாஸ் இயங்குகிறார் என்ற பேச்சுக்கு நடுவே, தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேற்றப்படுவதற்குக்கூட வன்னியர் சங்க காடுவெட்டி குருவின் தற்போதைய பேச்சுத்தான் காரணம் என்பது வெளிப்படை. பிற்படுத்தப்பட்டோருக்கான கட்சி என்று பா.ம.க. கூறிக்கொண்டாலும், வன்னியருக்காக வன்னியர் நடத்தும் கட்சி என்றே பரவலாக மக்களால் பார்க்கப்படுகிறது. தற்போது கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டு, மீண்டும் வன்னிய அரசியலைப் பா.ம.க.வினர் பேசத் தொடங்கியுள்ள நிலையில், ராமதாஸின் செயல்பாடுகளையே கேள்விக்குள்ளாக்குகிறார் பேராசிரியர் தீரன்.

இன்றைய வன்னிய சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவரும், அதன் அரசியல் அமைப்பாகத் தொடங்கப்பட்ட பா.ம.க.வின் முன்னாள் தலைவருமான தீரன் இன்று எதிர்நிலையிலிருந்து, `வன்னியர்களுக்காக ராமதாஸ் என்னதான் செய்திருக்கிறார்? பட்டியலிட முடியுமா?' என்றும் சவால் விடுகிறார்.

தி.மு.க.தான் வன்முறைக் கட்சி என்று ராமதாஸ் பேசியிருக்கிறாரே?

``தி.மு.க. வன்முறைக் கட்சியா? பா.ம.க. வன்முறைக் கட்சியா? என்ற வாதத்திற்கே நான் வரவில்லை. ஆனால் மற்றொரு கட்சியை வன்முறைக்கட்சி என்று சொல்லுகின்ற தகுதி ராமதாஸுக்கு இல்லை. தமிழக அரசியலில் நேரடித் தாக்குதல் என்ற வன்முறைக் கலாசாரத்திற்கு ஆரம்ப விதையே ராமதாஸ்தான். வன்னியர் சங்கத் தலைவரான வன்னிய அடிகளாரை விழுப்புரத்தில் ஆட்களை வைத்துத் தாக்குதல் நடத்தினார். வாழப்பாடி ராமமூர்த்தியிடம் பலகோடி ரூபாய் பணத்தை வாங்கி அனுபவித்துவிட்டு, கடைசியில் சேலத்தில் அவர் எம்.பி.க்கு நின்றபோது, அவரைத் தோற்கடிக்க எல்லா வேலைகளையும் செய்து அவரையும் அவரது ஆதரவாளர்களையும் ஆட்களை வைத்துத் தாக்கினார். பா.ம.க.விலிருந்து என்னை நீக்கிவிட்டு ஆட்களை ஏவி என்மீது தாக்குதல் நடத்தினார். பண்ருட்டி ராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி என வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களையெல்லாம் தாக்குவதுதான் ராமதாஸின் நோக்கமாகவே இருந்து வந்துள்ளது. அதேபோல், ராமதாஸின் வலதுகரமாக இருக்கும் காடுவெட்டி குருவோ, `வாழப்பாடி தலையை எடுத்துவிடுவேன், தீரன்தலையைஎடுத்துவிடுவேன்' என்று பேசியிருக்கிறார். இப்போது தி.மு.க. தலைவர்களைப் பேசி வருகிறார் குரு. அதையும் ராமதாஸ்அனுமதிக்கிறார்.''

தி.மு.க. கூட்டணியிலிருந்து நீக்கப்பட்ட பா.ம.க., இனி என்ன செய்யும்?

``சில நாட்களுக்கு முன் ஜெயலலிதா அளித்த பேட்டியில் பா.ம.க.வுக்கு தங்கள் கதவு திறந்திருக்கிறது என்று கூறியிருந்தார். இதுபோன்ற பேச்சுகள்தான் ராமதாஸை இன்றும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது. தி.மு.க.விலிருந்து வெளியேறினால், அ.தி.மு.க.! அ.தி.மு.க.விலிருந்து வெளியேறினால் தி.மு.க. என்பதுதான் ராமதாஸின் கொள்கையாக உள்ளது. திராவிடக் கட்சிகளின் தோள்களில் சவாரி செய்தே பா.ம.க.வை உயிரோட்டமுள்ள கட்சியாகக் காட்டி வருகிறார். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் ராமதாஸை தொங்கலில் விட்டுவிட்டால், அவரது கொள்கையற்ற அரசியல் அஸ்தமித்துவிடும். வன்னிய சமுதாயத்தினரும் ராமதாஸுக்கு மாற்றாக இன்னொரு அரசியல் மேடையை எதிர்பார்க்கத்தொடங்கியுள்ளனர். தமிழக முக்கிய கட்சிகள் அதை வளர்த்தெடுத்தால் வன்னியர் சமுதாயத்தின் வாக்குகளை ஏலம் போட்டு விற்கும் ராமதாஸின் சாயம் வெளுத்துப் போகும். அத்துடன் சமுதாய மக்கள் உண்மையான பலனடைய வழி பிறக்கும்.''

ராமதாஸால் வன்னிய சமுதாயத்திற்கு எந்தப் பயனும் இல்லை என்கிறீர்களா?

``நிச்சயமாக இல்லை. வன்னிய சமுதாயத்தினரின் பல கோடி வாக்குகளைக் கணக்குக் காட்டி தனிப்பட்ட முறையில் அவர்தான் வளர்ந்து வருகிறாரே தவிர, அவரால் வன்னிய சமுதாயத்திற்கு எந்தப் பயனும் இல்லை.வன்னிய சமுதாயத்துக்காகவே போராட ஆரம்பிக்கப்பட்டதுதான் வன்னியர் சங்கம். அதேபோல் வன்னிய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும் அவர்களுக்குத் தனிப்பட்ட அரசியல் அந்தஸ்து பெறவும் தொடங்கப்பட்டதுதான் பா.ம.க.! தொடங்கப்பட்டபோது கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் முக்கியமானது, `மத்தியில் இரண்டு சதவிகிதம், மாநிலத்தில் இருபது சதவிகிதம் வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு' என்ற கோரிக்கை.

1998 முதல் மத்தியிலும், மாநிலத்திலும் மாறி மாறி ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருக்கும் ராமதாஸ், இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டுவர ஏதாவது செய்தாரா?வன்னியர்கள் மேம்பட உருவாக்கப்பட்ட பா.ம.க.வைத் தலைமையேற்று நடத்திச் செல்லும் ராமதாஸ், சமுதாயத்தினர் மேம்பட என்னென்ன செய்துள்ளார் என்று வெள்ளை அறிக்கையாக வெளியிடத் தயாரா?''

தமிழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராமதாஸாலேயே வன்னிய சமுதாயத்தினருக்கு எந்தப் பயனும் இல்லை என்று கூறும் நீங்கள், உங்களைப் போன்ற தலைவர்களால் என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்?

``மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள யாராலும் எதையும் சாதிக்கமுடியும் என்பதை உலகப் போராளிகளும், தலைவர்களும் நிரூபித்திருக்கிறார்கள். 1996 முதல் 2001 வரை தி.மு.க. ஆட்சியின்போது பா.ம.க.வின் சாதாரண எம்.எல்.ஏ.வாகத்தான் இருந்தேன். அப்போதும் நான் தனிப்பட்ட முறையில் அன்றைய முதல்வர் கலைஞரிடம் பேசி எத்தனையோ காரியங்களைச் செய்துள்ளேன். உதாரணத்திற்கு, வன்னியர்கள் மீது போராட்ட காலங்களில் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் வாங்க வைத்தேன். தொடர் சாலை மறியல் போராட்டத்தில் பலியான 25 தியாகிகள் குடும்பத்திற்கு தலா மூன்று லட்ச ரூபாய் நிதி உதவியும், மாதம் ஆயிரத்தைந்நூறு ரூபாய் பென்ஷனும் கிடைக்க வழி செய்தேன். வன்னியர்களுக்கு உயர் பதவிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்து ராமதாஸின் சம்பந்தியான ராஜ்மோகனுக்கு டி.ஜி.பி. பதவி கிடைக்க வைத்தேன். சென்னை, சேலம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களிலும் வன்னியர்களை துணைவேந்தர்களாக நியமிக்க வைத்தேன். வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த தமிழறிஞரான பேராசிரியர் மயிலை சீனி. வேங்கடசாமியின் நூல்களையெல்லாம் நாட்டுடைமையாக்க வைத்தேன். வாழப்பாடி ராமமூர்த்தியுடன் சேர்ந்து ராமசாமி படையாச்சிக்கு சிலை திறந்தேன். இடஒதுக்கீட்டை சுழற்சி முறையில் (ரோஸ்டர் சிஸ்டம்) கொண்டு வரச் செய்தேன். இதன்மூலம் வன்னியர் சமுதாயம் இடம்பெற்றுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பட்டியலில் 11-வது இடத்திலிருந்து நிலை மாறி மூன்றாவது இடத்திற்கு வந்தது. இதன்மூலம் எண்ணற்ற வன்னிய சமுதாயத்தினர் இன்றளவும் பயன்பெற்று வருகின்றனர். வன்னிய சமுதாயத்தினரின் பொதுச் சொத்துக்களை எல்லாம் இணைத்து வன்னிய பொதுச் சொத்து நலவாரியம் அமைக்க அரசாணை பிறப்பிக்க வைத்தேன். இவையனைத்தையும் கலைஞர் ஆட்சியில் ஒரு சாதாரண எம்.எல்.ஏ.வாக இருந்தே என்னால் செய்ய முடிந்தது. ஆனால், நீங்கள் சொல்வதைப் போல் தமிழக அரசியலில் முக்கியத் தலைவராக இருக்கும் ராமதாஸ் வன்னியர்களுக்காக என்ன செய்தார் என்று சொல்லட்டும்.''( அழுத்தம் என்னுடையது, அதாவது emphasis added)

வன்னிய சமுதாயத்தினரில் தனிப்பெரும் தலைவராக ராமதாஸ்தான் பேசப்படுகிறாரே?

``யார் பேசுகிறார்கள்? அவர்தான் அப்படி காட்டிக்கொண்டு ஒரு மாயையான தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். மேடையில் தன்னைப் பாராட்டிப் பேசிய 23 பேருக்கு ரயில்வேயில் வேலை போட்டுக் கொடுத்திருக்கிறார் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ். ஆனால்,தொடர் சாலைமறியல் போராட்டத்தில் தங்கள் உயிர்களைத் தந்து பா.ம.க.வை உருவாக்கிய 25 தியாகிகள் குடும்பங்களும் இன்று சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு அல்லல்பட்டுக் கொண்டுள்ளன. சுகாதாரத் துறையையும், ரயில்வே துறையையும் கையில் வைத்திருக்கும் ராமதாஸ், அவர்களின் குடும்பத்திற்கு ஏதாவது வேலை போட்டுத் தந்திருக்கக்கூடாதா? தொடர் சாலை மறியல் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் பலியான முதல் தியாகி பாப்பனப்பட்டு ரெங்கநாத கவுண்டரின் மனைவி தனது மகனை அழைத்துக்கொண்டு டிரைவர் வேலை கேட்டு ராமதாஸிடம் போனார். அந்த மகனிடம் காரை கொடுத்து அதற்கு ஒரு ரெட்டியார் டிரைவரை சூப்பர்வைசராக வைத்து அவர் எப்படி காரை ஓட்டுகிறார் என்று பரிசோதித்த ராமதாஸ், அப்புறம் சொல்லி அனுப்புவதாகச் சொல்லி அனுப்பிவிட்டார். இது நடந்து ஐந்து வருடம் ஆகிவிட்டது. அந்த முதல் தியாகியின் குடும்பம் கூலி வேலை செய்து சாப்பிட்டு வருகிறது.வன்னியரை மற்றவர்கள் ஏமாற்றக்கூடாது என்பதற்காகத்தான் பா.ம.க. தொடங்கப்பட்டது. ஆனால் வன்னியரை வன்னியரே ஏமாற்றலாமா?''

வன்னிய பொதுச் சொத்துகளைப் பராமரிக்க உருவாக்கப்பட்ட நலவாரியம் இப்போது எப்படி இருக்கிறது?

``கேரளாவில் ஈழவர் சமுதாயத்தினரின் பொதுச் சொத்துக்களை சமுதாயத்தின் பேரைச் சொல்லி மற்றவர்கள் சுருட்ட நினைத்தார்கள். அப்போது அரசு தலையிட்டு ஸ்ரீமான் நாராயண குரு தர்ம பரிபாலன யோகம் (எஸ்.என்.டி.பி. யோகம்) என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, 1500 கோடி ரூபாய் சொத்தை காப்பாற்றித் தந்தது. இப்போது அந்த அமைப்பின் மூலம் பல கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதுபோல் இஸ்லாமிய சமுதாயத்தினரின் பொதுச் சொத்துக்களைப் பராமரிக்க வக்ஃப் போர்டு இருப்பதைப் போல் வன்னியர்களின் பொதுச் சொத்துக்களைப் பராமரிக்க உருவாக்கப்பட்டதுதான் `வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்.' பத்து வருடத்திற்கு முன் நான் எடுத்த கணக்கின்படி அதன் மதிப்பு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய். இப்போது அது பதினைந்தாயிரம் கோடி ரூபாயைத் தொட்டிருக்கும். செங்கல்வராயன் நாயக்கர் அறக்கட்டளை, ஆளவந்தார் அறக்கட்டளை, சேலத்திலுள்ள கந்தசாமி கவுண்டர் அறக்கட்டளை... இப்படிப் பல அதில் அடங்கும். தமிழகத்தின் வட மாவட்டங்கள் மட்டுமின்றி திருநெல்வேலி, குற்றாலம், திருச்செந்தூர் இப்படிப் பல இடங்களிலும் வன்னிய பொதுச் சொத்துக்கள் இருக்கிறது. இவை சம்பந்தப்பட்ட இருபத்தொன்பது உயில்களை நானே தனிப்பட்ட முறையில் சேகரித்து அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளேன்.

அதில் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் சொந்தமாகச் சம்பாதித்த சொத்துக்கள் தங்களின் மறைவுக்குப் பிறகு உலக வன்னிய குல க்ஷத்திரிய மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளனர். ஆனால் ராமதாஸோ, தனது குடும்ப உறுப்பினர்களை நிர்வாகிகளாகப் போட்டுத் தொடங்கியுள்ள வன்னிய கல்வி அறக்கட்டளையின் பெயரில் இந்தச் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். உதாரணத்திற்கு சிதம்பரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள வன்னியர் வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான நிலத்தை தனது அறக்கட்டளைக்கு எழுதி வாங்கிக்கொண்டார். அதேபோல் சென்னை புரசைவாக்கம் புவனேஸ்வரி தியேட்டர் அருகிலுள்ள குட்டித் தெருவில் வன்னிய குல க்ஷத்திரிய மகாசங்கத்திற்குச் சொந்தமான கட்டடத்தையும் எழுதி வாங்கிக்கொண்டார். வன்னிய பொதுச் சொத்துக்களை அறக்கட்டளையின் பெயரில் ராமதாஸ் அபகரிப்பதை அரசு தலையிட்டு தடுக்கவேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய கோரிக்கை'' என்றார் தீரன்.

Labels: , , , ,

நீல.பத்மநாபன், பள்ளிகொண்டபுரம், திரைப்படம்

நீல.பத்மநாபன், பள்ளிகொண்டபுரம், திரைப்படம்

பள்ளிகொண்டபுரம் என்ற பெயரில் திரைப்படம் எடுப்பது குறித்த நீல.பத்மநாபன் எழுதிய கடிதம் அண்மையில் திண்ணையில் வெளியானது.(1)அவர் அப்படி கடிதம் எழுதியதே எனக்கு வியப்பாக இருந்தது. ஏனெனில் பள்ளிகொண்டபுரம் என்ற பெயருக்கு அவர் முழு உரிமை கொண்டாட முடியாது. கோடம்பாக்கம் என்று ஒரு படம் வந்தது. அதற்காக அந்த தலைப்பில் யாரும் நாவல்/குறு நாவல்/சிறுகதை/தொலைக்காட்சித் தொடர் எழுதக்/எடுக்கக் கூடாது என்று படத்தயாரிப்பாளர் கூற முடியாது. பள்ளிகொண்டபுரம் என்ற பெயரில் ஊர் இருக்கிறது. அந்த ஊர்க்காரர்கள் எங்கள் ஊரின் பெயரை தலைப்பாக வைக்கக்கூடாது என்று கோர சட்டப்படி உரிமை இல்லை. நாவலின் பதிப்புரிமை நீல.பத்மனாபனிடம் இருக்கலாம். அதற்காக அந்த தலைப்பை வேறு யாரும் வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்று வாதிட முடியாது. திரைப்படம் நாவலை அடிப்படையாகக் கொண்டிருந்தால் மட்டுமே அந் நாவலின் பதிப்புரை யாரிடம் இருக்கிறதோ அவர் தன்னிடம் அனுமதி பெறாமல் திரைப்படம் எடுக்கிறார்கள் என்று வழக்குத் தொடரமுடியும். பள்ளிகொண்டபுரம் என்ற தலைப்பினை அந்த நாவலின் பதிப்புரிமை உடையவர் திரைப்படம் எடுப்பதற்காக பதிவு செய்திருந்தால் அந்தப் பெயரில் இன்னொருவர் திரைப்படம் எடுப்பதை ஆட்சேபிக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் பள்ளிகொண்டபுரம் என்ற நாவலை பகடி செய்து யாராவது புரம்கொண்ட பள்ளி என்று நாவல் எழுதினால் அதை தடுக்க அவருக்கு உரிமை இல்லை.

சந்தோஷ் சுப்ரமண்யன் என்ற பெயரில் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. அதே பெயர் கொண்ட ஒருவர் அந்த தலைப்பில் படம் எடுக்கப்படுவதை/வெளியாவதை ஆட்சேபித்தாலும் அது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல.இப்போது கல்கியின் படைப்புகள் நாட்டுடமை ஆகிவிட்டபடியால் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் அந்த நாவலின் அடிப்படையில் திரைப்படம்/தொடர் எடுக்க கல்கியின் வாரிசுகள்/வானதி பதிப்பகத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை.ஆனால் கல்கி என்ற படைப்பாளியின் தார்மீக உரிமைகள் (moral rights) பாதிக்கப்பட்டால் அவரது வாரிசுகள் சட்ட ரீதியான நிவாரணம் பெற முயலலாம். இந்த தார்மீக உரிமைகள் குறித்து ஏற்கனவே திண்ணையில் எழுதியிருக்கிறேன். தார்மீக உரிமையை நாவலின் தலைப்பிற்கு நீட்டிக்க முடியாது.

எனவே அவரது கோரிக்கையில் அர்த்தமும் இல்லை, நியாயமும் இல்லை. எழுத்தாளர்கள் பதிப்புரிமையின் வரையரைகளை தெரிந்து கொள்வது அவசியம். தங்கள் படைப்புகளின் பெயர்கள் அவ்வளவு முக்கியம் என்று கருதினால் அந்தப் பெயர்களில் பிறர் திரைப்படம் எடுப்பதை தடுக்க அவற்றை திரைப்பட தலைப்புகளாக பதிவு செய்து வைத்துக் கொள்வது நல்லது.


(1)http://www.thinnai.com/?module=displaystory&story_id=20806195&edition_id=20080619&format=html

NEELA PADMANABHAN B.Sc, B.sc(Engg), FIE
Fiction writer, Poet and ; Essayist,
Nilakant, 39/1870,
Kuriathi Bypass Road,
Manacaud P.O,
Thiruvananthapuram 695009
Ph: 0471-2476060
neelapadmanabhan1@rediffmail.com
www.neelapadmanabhan.com

14 ஜூன் 2008

அன்புடையீர்,

வணக்கம்.

தினகரன் பத்திரிகையில் (நாகர்கோவில், வியாழன், ஜூன் 12, 2008, பக்கம் இன்று முதல் படப்பிடிப்பில் என்ற தலைப்பின்கீழ் பள்ளிகொண்டபுரம் என்று வெளிவந்திருக்கும் விளம்பரம் பார்த்து விட்டு இக்கடிதம் எழுதுகிறேன்.

பள்ளிகொண்டபுரம் என்ற தமிழ் நாவலின் மூல ஆசிரியர் நான். இந்நாவல் முதல் பதிப்பாக டிசம்பர் 1970-இல் வாசகர் வட்டம், சென்னை (புக் வென்சர், BOOK VENTURE) என்ற நிறுவனத்தினரால் எண் 14, தணிகாசலம் செட்டி ரோடு, தியாகராய நகர், சென்னை 600017 என்ற முகவரியில் வெளியிடப்பட்டது. பிறகு இரண்டாம் பதிப்பு ஏப்ரல் 1985-இலும், மூன்றாம் பதிப்பு டிசம்பர் 2000-த்திலும் மணிவாசகர் பதிப்பகத்தினரால் (31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600108) வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு Pallikondapuram - The City Where God Sleeps 1982-இல் முதல் பதிப்பாக The Christian Literature Society (Post Box 501, Park Town, Madras-600003) நிறுவனத்தராலும் இரண்டாவது பதிப்பு 2007-இல் Indian Writing (New Horizon(P)Ltd, 33/15, Eldams Road, Chennai-600018) நிறுவனத்தினரால் Where The Lord Sleeps என்ற தலைப்பிலும் வௌளியிடப்பட்டிருக்கிறது.

தவிர, டில்லி, National Book Trust, India (A5, Green Park, New Delhi-110001) இந்நாவலை ஆதான் பிரதான் திட்டத்தில் தேர்ந்தெடுத்து அனைத்திந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. (பார்க்க Agreement for Aadan Pradan dated 2 July, 1973 with National Book Trust). இதன்படி இந்தி, மலையாளம் (1982-லும், 1998-லும் இரண்டு பதிப்புகள்), உருது, பஞ்சாபி, மராட்டி, குஜராத்தி, ஆஸாமீஸ், தெலுங்கு, ஒரியா, கன்னட, வங்க மொழிகளில் ஏற்கெனவே வந்துவிட்டன.

ருஷ்ய மொழியில் டாக்டர் (திருமதி) லூபா பைச்சிகினா Gorod Spyashchego Bogo என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார்.

மேலும் இந்நாவல் பல்வேறான ஆய்வு மாணவர்கள் எம் பில்(M.Phil), பி.எச்.டி (P.hd) பட்டங்களுக்கா தமிழ் நாட்டிலும் வெளி மாநிலங்களிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழங்களில் (தமிழ், ஆங்கில மொழிகளில்) ஆய்வுசெய்து பட்டங்கள் எடுத்திருக்கிறார்கள்.

இவை தவிர, இந்நாவல் வெளிவந்த காலத்திலிருந்து ஏராளம் மதிப்புரைகள், விமர்சனங்கள் தமிழ், ஆங்கில, மலையாள மொழிகளில் வெளியாகி பரவலான கவனிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இவ்வாறு கடந்த 38 ஆண்டு காலத்திற்கும் மேலாக பரவலாக இந்தியா முழுதும் தெரியப்பட்டிருக்கும் இந்நாவலின் தலைப்பை என் அறிவோ சம்மதமோ இன்றி படப்பிடிப்புக்கு எடுத்துக்கொண்டிருப்பது தார்மீகரீதியாகவும் சட்டப்படியாகவும் குற்றகரமான செயல். சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இந்த முயற்சியிலிருந்து பின்வாங்கிவிட்டு அச்செய்தியை பத்திரிகைகள் மூலமாகத் தெரிவிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். இதில் அவர்கள் தவறினால் இதனால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கெல்லாம் அவர்களே பொறுப்பு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவண்

நீல பத்மநாபன்

Labels: , , ,