ஆன்மிகம், விஞ்ஞானம் அதிகாரம்

ஆன்மிகம், விஞ்ஞானம் அதிகாரம்

(சுஜாதாவின் ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து என்ற நூலை பிரமீள் விமர்சித்து எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதப்பட்டது. இதில் காப்ராவிற்கும், கென் வில்பருக்கும் நடந்த உரையாடலை சுட்டிக் காட்டியிருக்கிறேன். இந்தக் கட்டுரை தவிர வேறு எந்தக் கட்டுரையையும் இந்த சர்ச்சை குறித்து எழுதவில்லை. இந்த விவாதத்தில் ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன் பதில் எழுதியதாகவும், அதற்கு பிரமிள் பதில் எழுதியதாகவும் நினைவு. காப்ரா, கென் வில்பரின் சிந்தனைகள் குறித்த என்னுடய பிற கருத்துக்கள், மற்றும் அறிவியல், அதிகாரம் குறித்த என கருத்துக்களை விரிவஞ்சி இங்கு தவிர்க்கிறேன். என்னைப் பொருத்த வரை இது போன்ற கட்டுரைகள் ஒரு பயணத்தின் ஒரு புள்ளி அவ்வளவுதான். அறிவியல்-அதிகாரம், மற்றும் சமூகம், அறிவியல்-தொழில் நுட்பம் போன்றவை குறித்த என் அக்கறையும், வாசிப்பும் இன்றும் தொடர்கிறது. இந்தக் கட்டுரையில் சிலவற்றை விளக்கவில்லை.உதாரணமாக ‘உண்மையில் அணுகுண்டு வீசப்பட்டது ஒரு கூட்டுப் பரிசோதனை' என்று எழுதியிருக்கிறேன். அதனளவில் இது ஒரு நூலுக்கான பொருள். ஒரு கட்டுரையில் இதை விளக்கினாலும், ஒரு விரிவான புரிதலைக் கோரும் விஷயம் இது தமிழில் ஒரு காலத்தில் நான் நிறைய (?) எழுதினேன். அதற்கு கோவை ஞானி தந்த ஊக்கமும், ஆதரவும் ஒரு காரணம். அவரை நன்றியுடன் இங்கு நினைவு கூறுகிறேன். கென் வில்பர், காப்ரா, எரிக் பிராம், ஆர்.டி. லாய்ங், விக்டர் பிராங்க்ல் உட்பட பலரது சிந்தனைகளை எனக்கு அறிமுகம் செய்து, நூல்களை கொடுத்து படிக்க உதவி, விவாதம் மூலம் என் புரிதலுக்கு பெரிதும் உதவிய Dr.A.V. அசோக்கையும் இங்கு நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவரது நட்பு இல்லாவிடில் எனக்கு பல நூல்கள் வெகு பின்னரே படிக்க கிடைத்திருக்கும். கென் வில்பர் - காப்ரா உரையாடல் The HolographicParadigm and Other Paradoxes என்ற நூலில் உள்ளது. காப்ராவின் நூல் தமிழில் கிடைப்பதாக அறிகிறேன். )


ஆன்மிகம், விஞ்ஞானம் அதிகாரம்- நிகழ் 17, 1991பிரேமிள் (நிகழ்-16 கட்டுரையில்) சுஜாதாவின் நூலை இன்னும் விரிவாக விமர்சித்திருந்தால் நமது சூழலில் அது பொருத்தமாக இருந்திருக்கும். எப்படி சித்தர் பாடல்கள், ஆழ்வார்களின் பாசுரங்களை சுஜாதா பயன்படுத்துகிறார் என்பதை விளக்கி சுஜாதாவின கருத்துக்களை பிரேமிள் விமர்சித்திருக்கலாம். காப்ராவின் நூலை (Tao of Physics), அவரது அணுகுமுறையை விமர்சித்து, 'காப்ரா' மத அதிகாரத்திற்கு ஆதாரம் தேடியே நவீன விஞ்ஞானத்திடம் போவதாகத் தென்படுகிறது என்று எழுதுகிறார். இதற்கான சான்று எதையும் காப்ராவின் நூலிலிருந்து பிரேமிள் முன் வைக்கவில்லலை. காப்ரா நவீன எந்த ஒரு மதக் கோட்பாட்டையும், எந்த ஒரு மத அமைப்பையும் பீடத்தையும் முன்னிறுத்தி அவற்றின் அதிகாரத்திற்கு வக்காலத்து வாங்கவில்லை. மேலும், காப்ரா நவீன இயற்பியலில் உள்ள சில கருத்துக்கள் பரிசோதனைகள், கிழக்கத்திய சிந்தனை மரபுகள் இரண்டையும் தொடர்புபடுத்திக் காண விழைகிறார். இது எப்படி மத அதிகாரத்திற்கு ஆதாரம் தேடுவதாக உள்ளது என்பதைப் பிரமிள் விளக்கவில்லை. அமைப்பு ரீதியான மதங்களையும் தத்துவ/ சிந்தனை மரபுகளையும் வேறுபடுத்திக் காணாமல் பிரேமிள் குழப்புகிறார். இதனை இன்னும் தெளிவாகச் சொல்வதானால் உபநிடதங்களை, சித்தர் பாடல்களை சூஃபிக்களின் கருத்துக்களைப் பற்றிப் பேசுபவர்கள் எல்லோரும் மத அதிகாரத்தை, மத மரபுகளில் உள்ள குருட்டு நம்பிக்கைகளை ஆதரிப்பவர்களென்று அனுமானிப்பது தவறு. மரபில் உள்ள கருத்துக்களைப் பயன்படுத்தி உள்ளார்ந்த விமரிசனங்களை வைக்க இயலும் என்பதை காந்தி, விவேகானந்தர் உட்பட பலர் காட்டியுள்ளனர். விடுதலை இறையியல் கூட இத்தகைய ஒரு முயற்சிதான்.

Tao of Physics-ல் சில இடங்களில் காப்ரா முன்வைக்கும் முக்கியமான கருத்துக்களை பிரேமிள் கவனிக்கவில்லை/ புரிந்து கொள்ளவில்லை. பிரேமிள் கூறுவதற்கு மாறாக ஆன்மவியலையும், விஞ்ஞானத்தையும் முடிச்சுப் போட முயன்ற காப்ரா தொடர்ந்து செயல்பட்டுள்ள செயல்பட்டு வருகின்ற தளம் வேறு. Tao of Physicsஐ தொடர்ந்து Tao of Physics II என்று காப்ரா எழுதி, அதிலும் 'முடிச்சு போடும்' வேலையைச் செய்திருந்தால் பிரேமிளின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளமுடியும். ஆனால் அதற்கு இடமில்லாமல் செல்பவை காப்ராவின் பிறநூல்களும், அவரது செயல்பாடுகளும், Tao of Physics எழுதியபின் காப்ரா Turning Point என்ற நூலை எழுதுகிறார். இதற்கு அவர் எழுதியுள்ள முன்னுரை அவர் முன்வைப்பது எத்தகைய பார்வை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. தெகார்தே, நியூட்டனின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட யாந்திரீகமான உலகப் பார்வையிலிருந்து முதன்மையை முதன்மைப்படுத்தும் உலகப் பார்வையை நம்முன் வைக்க இயற்பியல் நிலவும் கருத்துக்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உதாரணம் காட்டுகிறார்.
எப்படி அணுமட்டத்தில் காணப்படுவதை விளக்க புரிந்து கொள்ள இயற்பியலார் பழைய மாதிரிகள், கருத்துக்களின் போதாமையை உணர்ந்தார்களோ, அதுபோன்று நாம் இன்று உள்ளோம் என்கிறார். நமது பிரச்னைக்குத் தீர்வு நமது சிந்தனையில், மதிப்பீடுகளில் அடிப்படை மாற்றமே என்கிறார். இயற்பியலார் சிக்கல்களை எதிர்கொண்டு நமக்குப் புதிய உண்மைகளைக் காட்டினார்கள். இது பொருள் (matter) குறித்த புரிதலையே மாற்றி அமைத்தது. இது போன்ற ஒரு திருப்புமுனை ஒன்றினை முன்னிறுத்தி உடல், மனநலம், பொருளாதாரம், உளவியல், சுற்றுச்சூழல் குறித்த புதிய கருத்தாக்கங்களை அவற்றின் அடிப்படைகளை இந்நூலில் விளக்கி எழுதுறார். ஒரு மாறுபட்ட சமூக, பொருளாதார அமைப்பின் தேவையை வலியுறுத்தி எழுதும் காப்ரா ஒரு கலாச்சாரப் புரட்சி அதன் உண்மையான அர்த்தத்தில் தேவை என்று கருதுகிறார். இதனை Tao of Physicsலும் குறிப்பிட்டுள்ளார். நவீன இயற்பியல் காட்டிய உலகப்பார்வை நமது சமகாலச் சமூகம் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு எழுதும் காப்ரா இயற்கையில் காணும் ஒத்திசைவான தொடர்பு சமூகத்தில் இல்லை என்கிறார்.

தனது இயற்பியல் ஆய்வுகள். நவீன இயற்பியல் காட்டிய உண்மைகள் காப்ராவை இப்படித்தான் பாதித்துள்ளன. ஒரு கலாச்சாரப் புரட்சியின் தேவை குறித்தும், புதிய பார்வைகள் குறித்தும் இதில் விரிவாக எழுதும் காப்ரா Tao of Physics-ல் இத்தகைய கருத்துக்களை விரிவாக விளக்காமல். ஆனால் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து காப்ராவின் முடிச்சுப்போடும் முயற்சி என்ன என்று தெரிகிறது. 1960களில் சமூகத் தளத்திலும் ஆன்மீகத்தளத்திலும் எழுந்த புரட்சிகரப் போக்குகள் தன்னைப் பாதித்தாக எழுதுகிறரர் காப்ரா. பல துறைகளில் நிலவும் பல பிரச்சினைகள் குறித்த மாற்றுக் கருத்துக்களை அறிமுகப்படுத்தும் முக்கிய முயற்சியாக Turning Pointஐக் கொள்ளலாம். இது குறித்து காப்ரா சந்தித்து விவாதித்தவர்கள் பலர். காப்ரா தன்னை பாதித்தவர்களாக குறிப்பிடுகிற பலர். தத்தம் துறைகளில் நிலவும் கருத்துக்களுக்கு மாற்றாகப் புதிய கருத்துக்களை முன் வைத்தார்கள். அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்கியவர்கள்: அரசியலில் சமூக மாற்றத்தில் ஈடுபட்டவர்கள் (உ.ம். ஆர்.டி லாய்ங். டேனியல் கோன்பெனடிக்ட், ஏஞ்சலா டேவிஸ், ஹெர்பர்ட் மார்க்யூஸ் EF மாக்கர் ஜான்லெனன், காரி ஸ்நைடர்)

கலாச்சார புரட்சி குறித்து எழுதிய காப்ரா இதன்பின் சார்லெஸ் ஸ்பெரட்நாக் என்பவருடன் கூட்டாக எழுதிய நூல்: Green Poliltics. The Global promise இந்நூல் பசுமைக் கட்சியின் அடிப்படைக் கருத்துக்களை விளக்குகிறது. ஜெர்மனியில் (அப்போதைய மேற்கு) பசுமைக் கட்சியின் வரலாற்றைக் கூறுகிறது. பசுமைக் கட்சிகள் எப்படி வழக்கமான அரசியல் கட்சிகளிலிருந்து மரபு ரீதியான மார்க்சியக் கட்சியிலிருந்து மாறுபட்ட பார்வைகளைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. அமைதி போர், ஆயுதக்குவிப்பிற்கு எதிர்ப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பெண்ணுரிமை மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றை முன்வைத்து செயல்படும் இக்கட்சிகள் இன்று பல நாடுகளில் உள்ளன. மாற்றுக் கருத்துகள், புதிய சிந்தனை, புதிய மதிப்பீடுகளை குறித்து எழுதிய காப்ரா அதன் அடுத்த கட்டமாக அரசியல் மாற்றத்திற்கு இத்தகைய புதிய பார்வைகள், மதிப்பீடுகளை முன்னிறுத்திச் செயல்படும் பசுமைக் கட்சிகள் குறித்தும் எழுதுபவர் என்பதைக் காட்டுகிறது. வெறும் கருத்துக்களுடன் நில்லாமல் செயல்பாட்டுக் களத்தையும் அணுக காப்ரா முயல்வதையும் நாம் புரிந்து கொள்ள முடியும். காப்ரா எல்ம்வுட் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பை நிறுவியுள்ளார். இந்நிறுவனம் மாற்றுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரும் பெண்நிலைவாதம். தொழில் நுட்பம் சுற்றுச்சூழல். மதிப்பீடுகள் குறித்த கட்டுரைகள், செய்திமடல் கருத்தரங்குகள் ஆகியவற்றை இந்நிறுவனம் நடத்திவருகிறது. காப்ரா பற்றி இவ்வளவு விரிவாக குறிப்பிடுவதன் காரணம் இயற்பியலாளராக துவங்கிய காப்ரா இன்று தன் அக்கறைகளை விரிவுபடுத்தி செயல்பாட்டுத் தளத்தை மாற்றுக் கருத்துக்களுடன் தொடர்புபடுத்தியிருப்பதை சுட்டிக் காட்டத்தான். காப்ராவின் Tao of Physics விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட நூல் அல்ல. காப்ராவின் பார்வை அத்துடன் தேங்கிவிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. காப்ராவின் நூல் குறித்து பிரேமிள் குறிப்பிட்டுள்ளதைத் தவிர வேறுசில விமர்சனங்களும் வெளிவந்துள்ளன. கிழக்கத்திய தத்துவத்துடன் நவீன இயற்பியலை ஒப்பிட்டு எழுதும் காப்ரா சில இணையான கருத்துக்களை சுட்டிக் காட்டுகிறார். அவர் கிழக்கித்திய சிந்தனைமரபு உருவான வளர்ச்சிபெற்ற சூழலையும் அவை உருப்பெற்ற தத்துவ, விஞ்ஞான மரபுகளையும் கணக்கில் கொள்ளாமல் ஒப்பிட முயல்கிறார். சிந்தனைப் போக்குகளைப் பலவிதமாக அர்த்தப்படுத்த முடியும். அதாவது பன்முகவாசிப்பை இவை சாத்தியமாக்குகின்றன. இதன் விளைவாக பகவத்கீதைக்கும், உபநிடதங்களுக்கும் பலவிதமான உரைகள் உள்ளன. பகவத் கீதையைப் பொறுத்தவரை அதன் சமீபகால வாசிப்புகளாக காந்தி, திலகர் சுவாமி சின்மயானந்த் போன்றோரின் உரைகளைக் குறிப்பிடலாம். ஒன்றையொன்று பல அம்சங்களில் மறுக்கின்றன. அடிப்படைக் கருத்துக்களிலேயே வேறுபடுகின்ற அத்வைத, விசிஷ்டாத்வைதசிந்தனைப் போக்குகளுக்குச் சார்பாகவும் கீதைக்கு உரைகள் உள்ளன. இவற்றுடன் இந்த உரைகள் எந்தக் காலகட்டத்தில் யாரால், எந்தப் பின்னணியில் எழுதப்பட்டன என்பதும் கவனிக்கப்பட வேண்டும். இதே போல் பெளத்தத்தையும் பலவிதமாக அர்த்தப்படுத்த முயற்சிகள் நடந்துள்ளன. பெளத்தத்தை தர்க்கரீதியான பாசிடிவ் கண்ணோட்டத்திலும் ஹெகலின் இயங்கியல் கண்ணோட்டத்திலும். எனவே மா¡க்சியத்திற்கு நெருக்கமானதாகவும், பிற்போக்கானது எனவும் பலவகைகளில் வாசிக்க முயன்றுள்ளனர் என்கிறார் சுசந்தா குணதிலகா, எனவே காப்ராவிற்கு முன் இவ்வாறு கருத்துக்கள் உருவான சூழலை கவனிக்காமல் கருத்துக்களை மட்டும் ஒப்பிட்டுக் காணும் தவறான முயற்சிகள் நடைபெற்றுள்ளன மரபுகளைப் பிறவற்றுடன் ஒப்பிடும்போது அவைகளிடையே உள்ள வேறுபாடுகளையும் காணவேண்டும்.

ஒட்டுமொத்தமாகக் கிழக்கத்தியச் சிந்தனை என்ற லேபிளை ஒட்டி அத்வைதம் முதல் தர ஓ வரை எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக அணுக முடியாது. எப்படி இந்தியத் தத்துவ மரபை அத்வைத மரபாகக் குறுக்க முடியாதோ அதேபோல் கிழக்கத்தியச் சிந்தனை மரபை வேறுபாடுகளைப் புறக்கணித்துவிட்டு ஒரே மரபாகக் காணமுடியாது. இதனை நம் சூழலில் வைத்து பார்க்க முடியும். சித்தர் பாடல்களில் பல, சடங்குகளை வேதம் போன்றவற்றை விமர்சிப்பவை. வேறு சில. பேரின்ப நிலை குறித்துப் பேசுபவை. முன்னதையும் சேர்த்தே சித்தர் மரபு அணுகப்பட வேண்டும். பின்னதை மட்டும் கருத்தில் கொண்டு சித்தர் மரபை வெறும் பேரின்பம் குறித்துப் பேசுபவர்களாக, அமைப்பு ரீதியான மதங்களுடன் ஒத்துப் போகக் கூடியதாகக் காண்பதில் உள்ள அரசியலை நம்மால் புரிந்து கொள்ள முடியும். சித்தர் பாடல்களுடன் நவீன இயற்பியல் கருத்துக்களை ஒப்பிடும் சுஜாதாவிற்கும், அதைப் பிரசுரிப்பதன் மூலம் இந்து மதம் விஞ்ஞான ரீதியானது எனக்காட்ட முயலும் ஞானபூமிக்கும் சித்தர் மரபின் ஒரு வளமான பகுதியைக் கவனிக்க மறுப்பது வசதியானது. காப்ராவின் நூலில் இத்தகைய ஒரு பிற்போக்கான நிலைப்பாட்டிற்கு இடம் இருந்தாலும் சமூக மாற்றம் குறித்த அக்கறை காரணமாக இவ்வாறு நிகழவில்லை என்று கருதமுடியும்.

வேதாந்தம் நவீன வாழ்வுக்குத் தேவை என்று கூறும் சுவாமி ராங்கநாதானந்தாவும், இந்தியா அணுகுண்டு தயாரிக்கலாம். அணு உலைகள் தேவை என்று கருதும் ராஜாராமண்ணா போன்றோரும் எந்தவித முரண்பாடுமின்றி ஒரே மேடையில் வேதாந்தம் குறித்து நவீன இயற்பியலும். அத்வைதம் குறித்து பேச இயலும். இதற்கு ஆதாரமாக ராஜாராமண்ணா சில ஆண்டுகளுக்கு முன் இந்துவில் எழுதிய கட்டுரை. சுவாமி ரங்கநாதானந்தாவின் கட்டுரைகள், நூல்களைக் காட்ட இயலும் இதற்கு மேடை அமைக்க பாரதிய வித்யாபவன் போன்ற அமைப்புகள் உள்ளன.

நானி பல்கிவாலா Tao of Physicsஐ உதாரணம் காண்பித்து நம் மரபின் செழுமை. அதன் கருத்துக்கள் இன்று விஞ்ஞானிகளால் வியப்புடன் ஒப்பு நோக்கப்படுவது குறித்து, உரை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் காப்ரா தன் நூலில் சமூக மாற்றம் பற்றிக் கூறி இருப்பதை அவர் சுட்டிக்காட்ட மாட்டார். விஞ்ஞான மனோபாவம் தேவை என்பார் ராஜாராமண்ணா. அவரால் நவீன இயற்பியலும் அத்வைதமும் குறித்து பேச முடியும். உண்மையிலும் இங்கு மத அதிகார அமைப்பும், விஞ்ஞான அதிகார அமைப்பும் ஒன்றையொன்று எதிர்ப்பவை அல்ல. அணுகுண்டு தயாரிக்கும் அத்வைதிகள் இங்கு இல்லை என்று கூற முடியாது. பிரேமிள் இந்த அம்சத்தை உன்னிப்பாகக் கவனித்திருந்தால் மதத்திற்கு எதிரான விஞ்ஞானம் என்ற பழைய, இன்று காலாவதியாகிவிட்ட கருத்தை முன் வைத்திருக்கத் தேவையில்லை. விஞ்ஞான ரீதியிலானவை மதங்கள் என்று மதவாதிகள் விஞ்ஞானத்தைத் துணைக்கு அழைக்கும் காலம் இது. நாங்கள் செய்யும் காரியங்களை விமர்சிக்காதீர்கள் என்ற அடிப்படையில் விஞ்ஞானிகள் சந்நியாசிகளுடன், நவீன மடங்களுடன் நேரடியாகக் கூட்டுச் சேரும் காலம்இது. ஏனெனில் இன்று அதிகாரத்தை நியாயப்படுத்த விஞ்ஞானம் ஒரு நல்ல காரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுதான் விஞ்ஞானம் எனும் அறிவிற்கும், மத அதிகாரத்திற்மிடையே இன்றுள்ள தொடர்பு. இதனை மூடி மறைக்க மானுட நேயமிக்க விஞ்ஞானம், விஞ்ஞான மனோபாவம், மானுட நேயமமான வேதாந்தம் போன்றவற்றை ராஜா ராமண்ணாக்களும், பல சுவாமிகளும் நம்முன் வைக்கிறார்கள். இந்த தொடர்பை நாம் ஆராய்ந்தால் சமகால இந்தியாவில் சந்திரா சுவாமிகள், ராஜா ராமண்ணாக்கள் போன்றோர் முரண்பாடின்றி இயங்குவது எப்படிச் சாத்தியமாகிறது என்பது தெளிவாக புரியும். சில ஆண்டுகளுக்கு முன் மைசூரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இத்தகைய ஒரு நவீன மடத்தைச் சேர்ந்த ஒரு சுவாமி கட்டுரை படித்தார். ஆல்வின் டாப்லர், சுமாக்கர், எரிக் ப்ராம் ஆகியோரின் நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, வேதாந்தம் நவீன மனிதனுக்குத் தேவை என்ற ரீதியில் கட்டுரையில் வாதிட்டிருந்தார். அவரிடம் நீங்கள் குறிப்பிட்டுள்ள மூவரும் தத்தம் கண்ணோட்டத்தில் சமூக விமர்சனம் செய்துள்ளனர். உங்களுக்கு சமூக விமர்சனப்பார்வை எதேனும் உண்டா என்ற போது அவரால் பதில் கூற முடியவில்லை. இதேபோல் சுமாக்கர் பொருளாதார வளர்ச்சி குறித்தும், வளர்ச்சித் திட்டங்கள் தொழில் நுட்பம் குறித்தும் எழுதியுள்ளார். நீங்கள் இவை குறித்து விவாதித்தது உண்டா? எரிக்ஃப்ராமை மேற்கோள் காட்டுகிறீர்கள். அவரது சிந்தனையின் மார்க்சியப் பரிமாணம் உங்களுக்கு உடன்பாடான ஒன்றா என்று கேட்டபோது மழுப்பல் தான் பதிலாக வந்தது. ஆனால் இத்தகைய ஒரு கட்டுரை ஒரு சராசரி வாசகனை ஆங்கிலம் படிக்கத் தெரிந்த மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை எட்டும்போது அவர்கள் கட்டுரையாசிரியரின் வாதங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஆபத்து உள்ளது.

சுஜாதாவின் நூலும் இத்தகைய ஒரு முயற்சிதான். ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து என்ற தலைப்பே நூல் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள உதவுகிறது. "விஞ்ஞான ரீதியான" விளக்கம் என்ற போது வாசகன் அதனை விமர்சனப் பூர்வமாக யோசிக்காமல் விஞ்ஞானப் பூர்வமாகச் சரியாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்குவரத் தூண்டுகிறது. எல்லாவற்றையும் விஞ்ஞானக் கண்ணோட்டம் கொண்டு ஏன் பார்க்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்புவது நியாயமானது. ஆனால் பிரேமிள் போன்றவர்கள் விஞ்ஞானப் பார்வையை உயர்த்திப் பிடிக்கும்போது அந்த லேபிளைப் பயன்படுத்தி கொள்பவர்கள் சுஜாதா போன்றோர். விஞ்ஞானப் பார்வை இன்னும் பரவ வேண்டும் என்று கூறினால், ஆம் விஞ்ஞான ரீதியாக மதத்தில் மரபில் எத்தனை விஷயங்கள் உள்ளன என்று இவர்கள் கண்டுபிடிப்பார்கள்.

விஞ்ஞான நிரூபணம் கேட்கிறீர்களே, விஞ்ஞானமோ மாறிக் கொண்டேயிருப்பது. மதமோ மாறாதது. இவற்றை எப்படி ஒப்பிட்டு நிரூபிப்பது என்கிற ரீதியில் காஞ்சி சங்கராச்சாரியார் ஒருமுறை குறிப்பிட்டு உள்ளார். (பார்க்க, தெய்வத்தின் குரல்) இதே கருத்தை காப்ராவின் நூலை விமர்சிக்க பயன்படுத்தலாம். நேற்றைய இயற்பியல் கருத்துக்கள் இன்று சரியில்லை என்று நிரூபிக்கப்பட்டால் மீண்டும் கிழக்கத்திய சிந்தனையில் இன்று நிரூபிக்கப்பட்ட கருத்துக்களுக்கு ஆதாரம் தேடுவது அபத்தமாகவே முடியும் புத்தர் கூறியவற்றை இன்று மேற்கோள் காட்டி ஒப்பிடும் போது நாளை நாம் எதனுடன் ஒப்பிடுகிறோமோ அது சரியல்ல என்று நிரூபிக்கப்பட்டால் மீண்டும் இதனோடு ஒப்பிட வேறொரு மேற்கோளைத் தேட வேண்டும். புத்தரின் நிர்வான நிலையும், அவர் கூறியவையைம் இயற்பியலின் தளத்தில் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டால் இந்த ஓப்பிட்டு முயற்சியின் எல்லைகள் புரியும். அதாவது புத்தரின் கருத்துக்களுக்கான நிரூபணத்தை நவீன இயற்பியலில் தேடுவது அபத்தம். சில கருத்து ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டுவது கூட ஓரளவிற்கே சரியாக இருக்கமுடியும்.

காப்ரா இயற்பியலும் ஆன்மவியலும் ஒன்று என்று கூறவில்லை. எனினும், இவர் சில கருத்தொற்றுமைகளை மட்டுமே காட்டியிருந்த போதிலும் பலர் அவர் இரண்டையும் ஒன்றாக குறிப்பிட்டு உள்ளதாக நினைப்பதை கென் வில்பர் சுட்டிக் காட்டுகிறார். காப்ராவின் நுட்பமான, ஆழமான கருத்துக்கள் கூட இதனை மாற்ற முடியாது, காப்ரா தன் முதல் நூலில் கூறிய அறிமுகக் கருத்துக்களைக் கடந்து சென்றுவிட்டபோதும் வாசகர்கள் பலர் அங்கேயே நின்றுவிடக் கூடும். ஆன்மிகம், இயற்பியல் குறித்து எழுதிய டேவிட்போம், காப்ரா போன்றோர் தங்கள் கருத்துக்களை முன் வைத்தாலும் கூட ஆரம்பத்தில் ஏற்பட்ட இந்தத் தவறான எண்ணம் நிலைத்து நிற்கும் என்கிறார் என்கிறார் கென்வில்பர்.

பிரபஞ்சம் ஒத்திசைவு கொண்ட ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட முழுமை, அனைத்து பொருட்களும் ஒன்றே அறிமுக வாக்கியங்களாகப் பயன்படலாம். ஆனால் இத்தகைய வாக்கியங்களை/ கருத்துக்களைக் கொண்டு ஒரு உண்மையான தாக்கு பிடிக்கக்கூடிய கருத்து ரீதியான மாதிரியை முன்வைக்கும் போது கவனம் வேண்டும் என்கிறார் கென்வில்பர். ஆன்மவியல் பார்வையை முழுமையான, ஒன்றியைந்த தேக்கமின்றி செயல்படுகின்ற பார்வை என்று பலர் கருதலாம். ஆனால் இவை எல்லாம் பேருண்மை பற்றிய கருத்துக்களே. பேருண்மை இந்த இருநிலைகளும் (முழுமையானது/ பகுதி) அப்பாற்பட்ட ஒன்று. எனவே பேருண்மையை குணரூபமாக விளக்க முடியாது. அதாவது அது நிர்குணம் (குணங்களுக்கு அப்பாற்பட்டது); சூன்யம் (வகைப்படுத்தவியலாது). இதனை உலகின் அனைத்து ஆன்மவியல் மரபுகளுக்குப் பொதுவான ஒன்று என்று கருதுகிறார் வில்பர்.

பேருண்மை/ பிரம்மம்/ சூன்யம் குறித்த குறைப்புவாதத்தை எதிர்க்கிறார் வில்பர். உரைக்கவியலாத இதனை உரைப்பதே ஒருவித முரண்பாடுதான். தாஓ எப்போதும் மாறிக்கொண்டே இருப்பது என்று கூறுவது கயமுரணான ஒன்று. எப்போதும் மாறி கொண்டே இருப்பது என்பது நிர்பந்தமான உண்மை எனில் அது முரண்பாடான முடிவைத் தருகிறது. காரணம் கற்பிப்பதன் உள்முரணைக் காட்டி சூன்யவாத பெளத்தர்கள், பிராமணர்களின் கோட்பாடுகளை எதிர்கொண்டார் நாகர்ஜுனன் என்பதை கென்வில்பர் விளக்குகிறரர். வில்பரின் இந்த விமர்சனம், வார்த்தைகள், கருத்துகளைக் கொண்டு பேருண்மையை ஒப்பிட விளக்க முயல்வதின் வரையறைகளைக் காட்டுகிறது. விவரிக்கப்படுவது, விவரிக்கப்படும் பொருளைப்பற்றிய வர்ணணை; அதுவே பொருள் ஆகாது. எனவே இயற்பியல் கருத்துக்களுடன் ஆன்மவியலை, சிந்தனை மரபுகளை ஒப்பிடும்போது கவன¨மாகச் செயல்படவில்லை என்றால் கேலிக்கூத்தான அபத்தமான அதே சமயத்தில் எளிதில் (தவறாக) புரிந்து கொள்ளக்கூடிய முடிவுகள் மிஞ்சும். இயற்பியல் கருத்துக்களுடன் ஒப்பிட்டு பேசும் காப்ரா போன்றோரின் முயற்சிகளுக்கும், போமின் கருத்துக்களுக்கும் ஹோலோகிராம் என்பதுடன் பிரக்ஞை பேருண்மைகளை ஒப்பிட்டு பேசும் முயற்சிகளுக்குமான விமர்சனமாகவும் வில்பரின் கருத்துக்கள் பொருந்தும்.

தன் விமர்சகர்களுக்கு பதில் கூறும் காப்ரா ஒரு நீண்ட பேட்டியில் தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்துகிறார். தனது விமர்சகர்கள் சிலரின் (ரவி ரவிந்திரா, ஜெர்மி பெர்ன்ஸ்டைன்) விமர்சனம் சரியானது அல்ல. கென்வில்பர் இயற்பியலாளன் அல்ல என்பதால் சிலவற்றைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார் என்கிறார். நியூட்டனிய இயற்பியல், குவாண்டம் இயற்பியல் இரண்டும் குத்துமதிப்பான வர்ணணைகள்தான். இவை பின்னர் படிப்படியாக முன்னைவிடச் செப்பமுடையதாக மாற்றப்படுகின்றன. குவாண்டடம் இயற்பியல் நியூட்டனிய இயற்பியலை நிராகரிக்கவில்லை. அதன் எல்லைகளை சுட்டிக் காட்டியது. இன்றும் நடைமுறை வாழ்வில் பல செயல்களுக்கு நியூட்டனிய இயற்பியல் பயன்படுகிறது என்கிறார். ஹெய்ஸன் பர்க்கின் கண்டுபிடிப்புகளுக்கு மதிப்பீடுகளைக் கொண்ட செயல்பாடு எனில் விஞ்ஞானிகள் அறிவு ரீதியாக மட்டுமின்றி தார்மீக ரீதியாகவும் அவர்களின் ஆய்வுகளுக்கு பொறுப்பாவார்கள் என்றும் கூறுகிறார். மதிப்பீடுகள் அற்றது என்பதே ஒரு மதிப்பீடு என்று டேவிட் போம் கூறுவதை சுட்டி காட்டுகிறார்.

சரிபாதி விஞ்ஞானிகள் ராணுவத் தொடர்புடைய செயல்களில்/ ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும்போது நமது கலாச்சார மதிப்பீடுகளை நாம் நோக்க வேண்டும். நவீன பெளதீகம் நம்மை புத்தரிடம் அல்லது அணுகுண்டிடம் இட்டுச் செல்லுல் என்றும் காப்ர கூறுகிறார். ஐன்ஸ்டின், நீல்ஸ்மோர், போம் ஆகியவர் சமூக ரீதியாக அரசியல் ரீதியாக செயல்பட்டிருப்பது இந்த உண்மையை உணர்த்தத்தான் என்கிறார். இயற்பியலாளர்களிடையே மிகவும் அதிகமான உள்ளுணர்வு மிக்கவர்கள் இவர்கள் எனக் கொள்வது மட்டுமின்றி, முழுமையாக உணர்ந்தால் அவற்றின் சமூகத் தாக்கங்களை அறிவார்கள் என்பது காப்ராவின் கருத்து,. கென்வில் பருமனான இந்த நீண்ட பேட்டியில் காப்ரா எங்கும் தன் கருத்துக்களில் முடிச்சுப்போடும் முயற்சியில் இறங்கவில்லை. எந்த ஒரு அதிகார அமைப்பிற்கு ஆதரவாகவும் வாதிடவில்லை. அடுக்கு வரிசை என்பதை ஆணாதிக்கப் பிரக்ஞையுடன் தொடர்பு காட்டும் காப்ரா ஆணாதிக்கச் சமூகமே இத்தகைய அடுக்கு வரிசைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவை என்கிறார். அடுக்கு வரிசைகள் அற்ற மரபுகளுமுண்டு என்கிறார். உதாரணமாக தான் நம்புகின்ற தாஓ யிஸம் அடுக்கு வரிசைகள் அற்றது. இதன் மூலங்களை தாய்வழி கலாச்சாரத்தில் காணலாம் என்கிறார்.

காப்ராவின் அணுகுமுறையில் சில குறைபாடுகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அவைகளையும் மீறி அவரது நூல் சில புதிய கருத்துக்களை நமக்குக் காட்டுகிறது. காப்ராவின் முதல் நூலை நாம் ஒதுக்கினாலும்கூட, அவரது பிற நூல்களை அவ்வளவாக ஒதுக்க இயலாது.
பிரமிள் தன் கட்டுரையில் நியூட்டனைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். நவீன இயற்பியல் தந்தை எனக் கருதப்படும் நியூட்டனைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம். 1936ல் நியூட்டனின் கையெழுத்து படிகள் ஏலம் விடப்பட்டன. அதனை படித்த கீன்ஸ், நியூட்டனை கடைசியான மந்திரவாதிகளில் ஒருவராகக் காண்கிறார். பிரபஞ்சத்தை ஒரு புதிராக கண்ட நியூட்டன் தன்னை அத்தகைய மரபின் அவர்கால பிரதிநிதியாகக் கண்டாலும் உள ரீதியாக, அரசியல் காரணங்களுக்காக தன் ஆளுமையின் இந்த அம்சத்தை ஒடுக்கினார். அவரது இளமை காலத்தில் தாயின் ஆதரவின்றி, தன் பாட்டியுடன் கழிக்க நேர்ந்தது. இந்த பிரிவின் அச்சம் அவரைப் பிள்ளைப் பருவத்தில் வாட்டி வதைத்தது. நியூட்டன் பிறக்கும்முன் அவர் தந்தை இறந்தார். நியூட்டனுக்கு மூன்றுவயதான போது தாய் மறுமணம் செய்துகொண்டு தன் இரண்டாவது கணவருடன் சென்றுவிட்டார். பின்னர் 8 ஆண்டுகள் கழித்து இரண்டாவது கணவரின் மரணத்திற்குப்பின் தன் ஊருக்கு நிரந்தரமாகத் திரும்பிவந்தார். தாயை இன்னொரு ஆணுக்கு இழந்த இந்த அதிர்ச்சியிலிருந்து நியூட்டன் மீளவில்லை (இதனை அவரது குறிப்புகளில் அவர் மீதான அவரது வெறுப்பைப் பாவமாகக் கருதி எழுதி இருப்பது காட்டுகிறது) தன்னை ஒரு மரபில் வந்தவரதாக கருதிய நியூட்டன் தன் கண்டுபிடிப்புகள் குறித்து சொந்தம் கொண்டாடினார். ஒவ்வொரு தலைமுறையிலும் இறைவன் தன்னை ஒரே ஒரு தீர்க்கதரிசிக்குத்தான் வெளிப்படுத்திக் காட்டுகிறார். எனவே இணையான கண்டுபிடிப்புகள் ஒரே காலத்தில் இருக்கமுடியாது என்று கருதினார். (டிலப்னிப்ஸுக்கு முன்பே தாம் சிலவற்றைக் கண்டுபிடித்து விட்டதாக நியூட்டன் கருதியதுடன் இது குறித்து நீண்ட நாள் சர்ச்சையில் ஈடுபட்டார்) தனிமை, குற்ற உணர்வு போன்றவையே அவரது குறிப்பேடுகளில் வெளிப்படுகின்றன. மகிழ்ச்சி, அன்பு போன்ற உணர்வுகள் குறித்து குறிப்புகள் ஏதும் இல்லை. அறிய வேண்டும் என்ற நியூட்டனின் ஆசையின் முக்கியமான அடிப்படை தெரியாதவன் முன் அவருக்கிருந்த கலையும் அதுகுறித்த அச்சமுமாகும். இத்தகைய ஒரு மனம் கணித ரீதியாக கணித்து கூறக்கூடிய ஒரு அறிவியல் பாதுகாப்பைப் பெற்றிருக்கும். இயற்கை கணிதரீதியாகப் புரிந்து கொள்ளக்கூடிய விதிகளைக் கொண்டிருப்பது பாதுகாப்பான உணர்வைத் தரும்.

நியூட்டனின் மறுபக்கம் ரசவாதத்துடன் தொர்புடையது. மிகப்பெரிய அளவில் ரசவாத நூல்களை அவரது நூலகத்தில் வைத்து இருந்தார். லண்டனும் அவர் 1696-இல் குடியேறச் செல்லும் வரை ரசவாத பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தார். ரசவாத கருத்துகள், ஆய்வுகள் மூலம்தான் ஏற்கனவே கண்டுபிடித்திருந்த புவிஈர்ப்பு விசையுடன் தொடர்புபடுத்திக் காணமுயன்றார். பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறிவது குறித்த அவரது தேடலின் ஒரு பகுதி இது. ஸெர்மெடிக் சிந்தனை மரபையும், அவரது ஆரம்பகாலச் சிந்தனையையும் தொடர்புபடுத்திக் காணமுடியும். ரசவாதத்திலும், பிற சிந்தனை மரபுகளிலும் இவ்வளவு அக்கறை காட்டிய நியூட்டன் பின்னாளில் யாந்திரிக விளக்கங்களை முன் வைக்கும் தத்துவவாதியாக மாறினார்.
இதற்கான விடையை அவரது காலத்தில் ஏற்பட்ட அரசியல், சமூக மாற்றங்களில் காணமுடியும். 1650-60ல் இங்கிலாந்தில் ரசவாதத்திலும் ஆன்மவியலிலும் காட்டப்பட்ட ஈடுபாடு உச்சகட்டத்தை எட்டியது. உள்நாட்டு போர். நிலப்பிரபுத்துவ பொருளாதரத்தை பாதித்தது. புதிதாக உருவாகிய பூர்ஷ்வா வர்க்கம் தங்குதடையற்ற பொருளாதார வணிகக் கோட்பாட்டை ஆதரிக்கும் பாவை கொண்டதுடன் அரசரின் ஏகபோக செயல்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தியது. இந்தப் பொருளாதார போராட்டம் அரசரின் ஆதரவாளர்களுக்கும். பாராளுமன்றவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்தது. மத ரீதியாகப் பழமை வாதம் வென்றது. இதற்கு எதிராகப் பலமத குழுக்கள் தோன்றின. இவை இறைவனை நேரடியாக அடையலாம் என்றன.
மூடபக்தி/ உழைப்பு மூலமே முக்தி என்பதை எதிர்த்தன. இவைகளில் பலவற்றின் மதக்கண்ணோட்டத்தின் ரசவாதம் உட்பட பல பழைய சிந்தனை மரபுகளைச் சேர்ந்த கருத்துக்கள் இடம்பெற்றன. புதிய விஞ்ஞானத்திற்கு எதிரான நம்பிக்கைகள் கொண்டிருந்தன. பொருளுக்கு உயிர் உண்டு. இறைவன் அனைத்திலும் இருக்கிறார். உள்முரண் வழியே மாற்றம் ஏற்படுகிறது. (இயங்கியல் பார்வை) போன்றவற்றுடன் திருச்சபையின் உடுக்குவரிசை அதிகார அமைப்பினை எதிர்த்தன. யாரும் இறைநிலைமை உணரலாம். நேரடியாக இறைவனை அடையாலம் என்றும் கருதின. 1640களில் இத்தகைய குழுக்கள் மிக்க செயல்பாட்டுடன் விளங்கின. இவற்றின் கருத்துக்களை எங்கல்ஸ் காட்டும் கற்பனாவாக சோசலிசத்துடன் ஒப்பிடலாம்.

1650களில் மீண்டும் அரசாட்சி வலுப்பெற்றபின் இப்போக்குகள் பலவீனம் அடைந்தன. முன்பு ரசவாதத்தின் பால் அனுதாபம் கொண்டிருந்த பலர் மெல்ல மெல்ல யாந்திரீக தத்துவத்தை நோக்கி மாறினர். சொத்து உடைமை கொண்டவர்க்கங்களும், திருச்சபையின் முக்கிய உறுப்பினர்களும், ராயல் சொசைட்டியை நிறுவுவதில் ஈடுபட்டனர்.

நியூட்டன் தன் எதிரிகளை முறியடிக்கக் கையாண்ட வழிகள் பல. லெப்னிட்சுடன் சர்ச்சை எழுந்தபோது தன்னை ஆதரிக்கும் கட்டுரைகளை அவரே எழுதி நண்பர்களின் பெயரில் வெளியிட்டார். லெப்னிட்ஸ், ராயல் சொசைட்டியிடம் முறையீடு செய்தார். அதன் தலைவரான நியூட்டன் தன் நண்பர்களைக் கொண்ட பாரபட்சமற்ற குழுவை அமைத்தார். அவரே லெப்னிட்ஸ் நியூட்டனின் கண்டுபிடிப்புகளை திருடினார் என்ற முடிவுக்கு வரும்படி குழுவின் அறிக்கையை தயாரித்தார். அதை ராயல் சொசைட்டி வெளியிட்டது. இதுபோதாது என்று அந்த அறிக்கையின் மதிப்புரையையும், ராயல் சொசைட்டியின் பத்திரிக்கையில் மதிப்புரை செய்தவர் பெயரின்றி வெளியிட்டார். நியூட்டனின் பிரின்சிபியா என்ற நூலுக்கு தேவையான வானியல் தகவல்களை ஆரம்பகாலத்தில் தந்த ஜான்ப்ளம்ஸ்ட்டுடன் மோதினார். நியூட்டனுக்கு அவர் பின்னாளில் தகவல்தர மறுத்தார். ராயல் வானியல் ஆய்வு கூடத்தின் நிர்வாக குழுவிற்கு தன்னைத் தானே நியமித்து கொண்ட நியூட்டன். அவருக்கு தேவையான தகவல்களை கட்டாயப்படுத்தி வெளியிட முயன்றார். ஜானின் எதிரியான எட்மண்ட் ஹாலியின் நூலை வெளியிட ஏற்பாடு செய்தார். இதனை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஜான் தன் கண்டுபிடிப்புகளைத் திருடி எழுதப்பட்டட அந்நூலின் விநியோகத்தைத் தடை செய்யும் நீதிமன்ற உத்தரவை பெற்றார். இதனால் ஆத்திரமடைந்த நியூட்டன் தன் பிரின்சிபியாவின் பிற்காலப் பதிப்புகளில் ஜான் ப்ளம்ஸ்டீ பற்றிய குறிப்புகளை முற்றிலுமாக நீக்கிவிட்டார்.
இதனைக் கூறுவது நியூட்ன் என்ற தனிமனிதரை இகழ அல்ல. மாறாக நியூட்டனின் விஞ்ஞானப் பார்வையின் தன்மைகளைப் புரிந்து கொள்ள, இங்கிலாந்தில் ஏற்பட்ட அரசியல் சமூக மாற்றங்களுடன் அவரது பார்வையும், நிலைபாடும் மாறியதைச் சுட்டி காட்டினோம். இருப்பினும் அவரது சிந்தனையில் இருந்த ரசவாத, மற்றும் பிற சிந்தனைகளின் தாக்கத்தை மறைத்துவிட்டு அவரை தூய விஞ்ஞானப் பார்வை கொண்டவராகக் காட்டுவது அப்பட்டமான பொய். இதேபோல் அவரது பிற செயல் மூலம் தெரியவரும் ஆளுமையைப் பற்றிப் பேசாமல் நியூட்டனை விஞ்ஞானியாக மட்டும் காண்பது விஞ்ஞானப் பார்வையை முன் வைப்பவர்களுக்கு வசதியான ஒன்று.

விஞ்ஞான ரீதியான அணுகுமுறை என்பதில் கருணைக்கும் இடம் உள்ளதா என்று கேட்க வேண்டும். விஞ்ஞான ரீதியாகச் சரியானதாக இருக்கும் ஒன்று அறிவியல் ரீதியாகத் தவறாக இருக்கலாம் என்று கூறும் லாய்ங் இயற்பியலாளரின் தராசுகள் நியாய தராசுகள் அல்ல என்கிறார். உண்மையும் நல்லதும், மதிப்பீடும் அறிவும் பிரிந்துபோய் ரொம்ப காலமாகிவிட்டது என்றுகூறும் லாய்ங் நவீன விஞ்ஞான அணுகுமுறையின் விமர்சகர் மட்டுமல்ல. மனச்சிதைவு குறித்தும் உளவியல் சிகிச்சை முறை குறித்தும் புரட்சிகரமான கருத்துக்களைக் கூறியவர்.

உலகின் விஞ்ஞானிகளில் பெரும்பான்மையோர் ராணுவ தொடர்புடைய ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பதை நாம் மறந்துவிட்டு பரிசோதனை என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான மிருகங்கள் சித்திரவதை செய்யப்படுவது, மெல்லக் கொல்லப்படுவது போன்றவற்றையும் மறந்துவிட்டு விஞ்ஞானத்தின் முன்னணி, மனித விரோதமாக இருக்காது என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக்
கொள்வதாகும்.

இத்தகைய வாதங்களை வைத்தால் வழக்கமாக வரும் பதில் நிர்ணயிப்பது விஞ்ஞானமல்ல. அரசியல்தான் என்பது, அணுகுண்டிற்கு பொறுப்பு விஞ்ஞானிகள் அல்ல. அரசுகள் என்பது பல உண்மைகளை மறைக்கும் ஒரு திரை. உண்மையில் அணுகுண்டு வீசப்பட்டது ஒரு கூட்டுப் பரிசோதனை.


-நிகழ் 17, மா¡ச் 1991

Labels: , , , , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு