குழப்பமோ குழப்பம் - காப்புரிமை-பொன்னி-திருப்பதி லட்டு

தமிழ் நாளிதழ்கள் உட்பட ஊடகங்களுக்கு அறிவு சார் சொத்துரிமை குறித்து இருக்கும் குழப்பம் சொல்லி மாளாது. பொன்னி அரிசிக்கு மலேசிய நிறுவனம் ஒன்று வணிக சின்னம் (trade mark) பெற்றிருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அதற்கு விவசாயிகள்,
வர்த்தகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்திகளை வெளியிடும் போது காப்புரிமை(patent) என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன ஊடகங்கள். விவசாயிகள், வியாபாரிகள்தான் வணிக சின்னமும், காப்புரிமையும் ஒன்று என்று நினைத்து குழம்பியுள்ளார்களா இல்லை ஊடகங்கள்தான் அப்படி குழம்பி செய்தி வெளியிடுகின்றனவா என்று தெரியவில்லை. இன்றைய தினமணியில் ஒரு செய்தி ‘திருப்பதி லட்டுக்கு காப்புரிமை?' என்று. என்னவென்று பார்த்தால் திருப்பதி லட்டுக்கு Geographical Indication பெற திருப்பதி-திருமலா தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

செய்தியில் Geographical Indication என்பது ஊருடன் தொடர்புடையது என்பதாக புரிதல் இருக்கிறது. இது சரியல்ல. ஏனெனில் Geographical Indication என்பதை ஒரு குறிப்பிட்ட ஊர் என்பதாக மட்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.பெரும்பாலான சமயங்களில் அது குறிப்பிட்ட ஊர் தொடர்பானதாக இருந்தாலும் ஒரு பரந்த பொருளில்தான் geographical என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திருப்பதி லட்டு என்பதை தேவஸ்தானம் Geographical Indication ஆக பதிவு செய்திருந்தால் வேறு யாரும் திருப்பதி லட்டு என்ற பெயரில் லட்டுக்களை விற்க முடியாது. லட்டு என்பதை விற்கலாம், திருப்பதி என்ற அடைமொழியைப் பயன்படுத்த முடியாது. டார்ஜிலிங் தேயிலை உட்பட Geographical Indication என்பதற்கு பல உதாரணங்கள் இந்தியாவிலேயே இருக்கின்றன.

பொதுவாக அறிவுசார் சொத்துரிமை என்றாலே காப்புரிமை என்று பலர் நினைப்பதாலும் இந்தக் குழப்பம் ஏற்படுகிறது.Geographical Indication என்பதற்கும் புவியியல் குறியீடு என்பது சரியான கலைச்சொல் அல்ல.ஏனெனில் இங்கு geographical என்பது புவியியல் என்ற துறையை குறிக்கவில்லை. மாறாக ஒரு புவிப்பரப்பு தொடர்புடைய என்ற பொருளைத் தருகிறது. அப்புவிப்பரப்பு ஒரு ஊராக, ஒரு நாடாக அல்லது ஒரு குறிப்பிட பிரதேசமாகக் கூட இருக்கலாம்.

Labels: , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு