ஆன்மிகம், விஞ்ஞானம் அதிகாரம்

ஆன்மிகம், விஞ்ஞானம் அதிகாரம்

(சுஜாதாவின் ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து என்ற நூலை பிரமீள் விமர்சித்து எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதப்பட்டது. இதில் காப்ராவிற்கும், கென் வில்பருக்கும் நடந்த உரையாடலை சுட்டிக் காட்டியிருக்கிறேன். இந்தக் கட்டுரை தவிர வேறு எந்தக் கட்டுரையையும் இந்த சர்ச்சை குறித்து எழுதவில்லை. இந்த விவாதத்தில் ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன் பதில் எழுதியதாகவும், அதற்கு பிரமிள் பதில் எழுதியதாகவும் நினைவு. காப்ரா, கென் வில்பரின் சிந்தனைகள் குறித்த என்னுடய பிற கருத்துக்கள், மற்றும் அறிவியல், அதிகாரம் குறித்த என கருத்துக்களை விரிவஞ்சி இங்கு தவிர்க்கிறேன். என்னைப் பொருத்த வரை இது போன்ற கட்டுரைகள் ஒரு பயணத்தின் ஒரு புள்ளி அவ்வளவுதான். அறிவியல்-அதிகாரம், மற்றும் சமூகம், அறிவியல்-தொழில் நுட்பம் போன்றவை குறித்த என் அக்கறையும், வாசிப்பும் இன்றும் தொடர்கிறது. இந்தக் கட்டுரையில் சிலவற்றை விளக்கவில்லை.உதாரணமாக ‘உண்மையில் அணுகுண்டு வீசப்பட்டது ஒரு கூட்டுப் பரிசோதனை' என்று எழுதியிருக்கிறேன். அதனளவில் இது ஒரு நூலுக்கான பொருள். ஒரு கட்டுரையில் இதை விளக்கினாலும், ஒரு விரிவான புரிதலைக் கோரும் விஷயம் இது தமிழில் ஒரு காலத்தில் நான் நிறைய (?) எழுதினேன். அதற்கு கோவை ஞானி தந்த ஊக்கமும், ஆதரவும் ஒரு காரணம். அவரை நன்றியுடன் இங்கு நினைவு கூறுகிறேன். கென் வில்பர், காப்ரா, எரிக் பிராம், ஆர்.டி. லாய்ங், விக்டர் பிராங்க்ல் உட்பட பலரது சிந்தனைகளை எனக்கு அறிமுகம் செய்து, நூல்களை கொடுத்து படிக்க உதவி, விவாதம் மூலம் என் புரிதலுக்கு பெரிதும் உதவிய Dr.A.V. அசோக்கையும் இங்கு நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவரது நட்பு இல்லாவிடில் எனக்கு பல நூல்கள் வெகு பின்னரே படிக்க கிடைத்திருக்கும். கென் வில்பர் - காப்ரா உரையாடல் The HolographicParadigm and Other Paradoxes என்ற நூலில் உள்ளது. காப்ராவின் நூல் தமிழில் கிடைப்பதாக அறிகிறேன். )


ஆன்மிகம், விஞ்ஞானம் அதிகாரம்- நிகழ் 17, 1991பிரேமிள் (நிகழ்-16 கட்டுரையில்) சுஜாதாவின் நூலை இன்னும் விரிவாக விமர்சித்திருந்தால் நமது சூழலில் அது பொருத்தமாக இருந்திருக்கும். எப்படி சித்தர் பாடல்கள், ஆழ்வார்களின் பாசுரங்களை சுஜாதா பயன்படுத்துகிறார் என்பதை விளக்கி சுஜாதாவின கருத்துக்களை பிரேமிள் விமர்சித்திருக்கலாம். காப்ராவின் நூலை (Tao of Physics), அவரது அணுகுமுறையை விமர்சித்து, 'காப்ரா' மத அதிகாரத்திற்கு ஆதாரம் தேடியே நவீன விஞ்ஞானத்திடம் போவதாகத் தென்படுகிறது என்று எழுதுகிறார். இதற்கான சான்று எதையும் காப்ராவின் நூலிலிருந்து பிரேமிள் முன் வைக்கவில்லலை. காப்ரா நவீன எந்த ஒரு மதக் கோட்பாட்டையும், எந்த ஒரு மத அமைப்பையும் பீடத்தையும் முன்னிறுத்தி அவற்றின் அதிகாரத்திற்கு வக்காலத்து வாங்கவில்லை. மேலும், காப்ரா நவீன இயற்பியலில் உள்ள சில கருத்துக்கள் பரிசோதனைகள், கிழக்கத்திய சிந்தனை மரபுகள் இரண்டையும் தொடர்புபடுத்திக் காண விழைகிறார். இது எப்படி மத அதிகாரத்திற்கு ஆதாரம் தேடுவதாக உள்ளது என்பதைப் பிரமிள் விளக்கவில்லை. அமைப்பு ரீதியான மதங்களையும் தத்துவ/ சிந்தனை மரபுகளையும் வேறுபடுத்திக் காணாமல் பிரேமிள் குழப்புகிறார். இதனை இன்னும் தெளிவாகச் சொல்வதானால் உபநிடதங்களை, சித்தர் பாடல்களை சூஃபிக்களின் கருத்துக்களைப் பற்றிப் பேசுபவர்கள் எல்லோரும் மத அதிகாரத்தை, மத மரபுகளில் உள்ள குருட்டு நம்பிக்கைகளை ஆதரிப்பவர்களென்று அனுமானிப்பது தவறு. மரபில் உள்ள கருத்துக்களைப் பயன்படுத்தி உள்ளார்ந்த விமரிசனங்களை வைக்க இயலும் என்பதை காந்தி, விவேகானந்தர் உட்பட பலர் காட்டியுள்ளனர். விடுதலை இறையியல் கூட இத்தகைய ஒரு முயற்சிதான்.

Tao of Physics-ல் சில இடங்களில் காப்ரா முன்வைக்கும் முக்கியமான கருத்துக்களை பிரேமிள் கவனிக்கவில்லை/ புரிந்து கொள்ளவில்லை. பிரேமிள் கூறுவதற்கு மாறாக ஆன்மவியலையும், விஞ்ஞானத்தையும் முடிச்சுப் போட முயன்ற காப்ரா தொடர்ந்து செயல்பட்டுள்ள செயல்பட்டு வருகின்ற தளம் வேறு. Tao of Physicsஐ தொடர்ந்து Tao of Physics II என்று காப்ரா எழுதி, அதிலும் 'முடிச்சு போடும்' வேலையைச் செய்திருந்தால் பிரேமிளின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளமுடியும். ஆனால் அதற்கு இடமில்லாமல் செல்பவை காப்ராவின் பிறநூல்களும், அவரது செயல்பாடுகளும், Tao of Physics எழுதியபின் காப்ரா Turning Point என்ற நூலை எழுதுகிறார். இதற்கு அவர் எழுதியுள்ள முன்னுரை அவர் முன்வைப்பது எத்தகைய பார்வை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. தெகார்தே, நியூட்டனின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட யாந்திரீகமான உலகப் பார்வையிலிருந்து முதன்மையை முதன்மைப்படுத்தும் உலகப் பார்வையை நம்முன் வைக்க இயற்பியல் நிலவும் கருத்துக்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உதாரணம் காட்டுகிறார்.
எப்படி அணுமட்டத்தில் காணப்படுவதை விளக்க புரிந்து கொள்ள இயற்பியலார் பழைய மாதிரிகள், கருத்துக்களின் போதாமையை உணர்ந்தார்களோ, அதுபோன்று நாம் இன்று உள்ளோம் என்கிறார். நமது பிரச்னைக்குத் தீர்வு நமது சிந்தனையில், மதிப்பீடுகளில் அடிப்படை மாற்றமே என்கிறார். இயற்பியலார் சிக்கல்களை எதிர்கொண்டு நமக்குப் புதிய உண்மைகளைக் காட்டினார்கள். இது பொருள் (matter) குறித்த புரிதலையே மாற்றி அமைத்தது. இது போன்ற ஒரு திருப்புமுனை ஒன்றினை முன்னிறுத்தி உடல், மனநலம், பொருளாதாரம், உளவியல், சுற்றுச்சூழல் குறித்த புதிய கருத்தாக்கங்களை அவற்றின் அடிப்படைகளை இந்நூலில் விளக்கி எழுதுறார். ஒரு மாறுபட்ட சமூக, பொருளாதார அமைப்பின் தேவையை வலியுறுத்தி எழுதும் காப்ரா ஒரு கலாச்சாரப் புரட்சி அதன் உண்மையான அர்த்தத்தில் தேவை என்று கருதுகிறார். இதனை Tao of Physicsலும் குறிப்பிட்டுள்ளார். நவீன இயற்பியல் காட்டிய உலகப்பார்வை நமது சமகாலச் சமூகம் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு எழுதும் காப்ரா இயற்கையில் காணும் ஒத்திசைவான தொடர்பு சமூகத்தில் இல்லை என்கிறார்.

தனது இயற்பியல் ஆய்வுகள். நவீன இயற்பியல் காட்டிய உண்மைகள் காப்ராவை இப்படித்தான் பாதித்துள்ளன. ஒரு கலாச்சாரப் புரட்சியின் தேவை குறித்தும், புதிய பார்வைகள் குறித்தும் இதில் விரிவாக எழுதும் காப்ரா Tao of Physics-ல் இத்தகைய கருத்துக்களை விரிவாக விளக்காமல். ஆனால் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து காப்ராவின் முடிச்சுப்போடும் முயற்சி என்ன என்று தெரிகிறது. 1960களில் சமூகத் தளத்திலும் ஆன்மீகத்தளத்திலும் எழுந்த புரட்சிகரப் போக்குகள் தன்னைப் பாதித்தாக எழுதுகிறரர் காப்ரா. பல துறைகளில் நிலவும் பல பிரச்சினைகள் குறித்த மாற்றுக் கருத்துக்களை அறிமுகப்படுத்தும் முக்கிய முயற்சியாக Turning Pointஐக் கொள்ளலாம். இது குறித்து காப்ரா சந்தித்து விவாதித்தவர்கள் பலர். காப்ரா தன்னை பாதித்தவர்களாக குறிப்பிடுகிற பலர். தத்தம் துறைகளில் நிலவும் கருத்துக்களுக்கு மாற்றாகப் புதிய கருத்துக்களை முன் வைத்தார்கள். அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்கியவர்கள்: அரசியலில் சமூக மாற்றத்தில் ஈடுபட்டவர்கள் (உ.ம். ஆர்.டி லாய்ங். டேனியல் கோன்பெனடிக்ட், ஏஞ்சலா டேவிஸ், ஹெர்பர்ட் மார்க்யூஸ் EF மாக்கர் ஜான்லெனன், காரி ஸ்நைடர்)

கலாச்சார புரட்சி குறித்து எழுதிய காப்ரா இதன்பின் சார்லெஸ் ஸ்பெரட்நாக் என்பவருடன் கூட்டாக எழுதிய நூல்: Green Poliltics. The Global promise இந்நூல் பசுமைக் கட்சியின் அடிப்படைக் கருத்துக்களை விளக்குகிறது. ஜெர்மனியில் (அப்போதைய மேற்கு) பசுமைக் கட்சியின் வரலாற்றைக் கூறுகிறது. பசுமைக் கட்சிகள் எப்படி வழக்கமான அரசியல் கட்சிகளிலிருந்து மரபு ரீதியான மார்க்சியக் கட்சியிலிருந்து மாறுபட்ட பார்வைகளைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. அமைதி போர், ஆயுதக்குவிப்பிற்கு எதிர்ப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பெண்ணுரிமை மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றை முன்வைத்து செயல்படும் இக்கட்சிகள் இன்று பல நாடுகளில் உள்ளன. மாற்றுக் கருத்துகள், புதிய சிந்தனை, புதிய மதிப்பீடுகளை குறித்து எழுதிய காப்ரா அதன் அடுத்த கட்டமாக அரசியல் மாற்றத்திற்கு இத்தகைய புதிய பார்வைகள், மதிப்பீடுகளை முன்னிறுத்திச் செயல்படும் பசுமைக் கட்சிகள் குறித்தும் எழுதுபவர் என்பதைக் காட்டுகிறது. வெறும் கருத்துக்களுடன் நில்லாமல் செயல்பாட்டுக் களத்தையும் அணுக காப்ரா முயல்வதையும் நாம் புரிந்து கொள்ள முடியும். காப்ரா எல்ம்வுட் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பை நிறுவியுள்ளார். இந்நிறுவனம் மாற்றுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரும் பெண்நிலைவாதம். தொழில் நுட்பம் சுற்றுச்சூழல். மதிப்பீடுகள் குறித்த கட்டுரைகள், செய்திமடல் கருத்தரங்குகள் ஆகியவற்றை இந்நிறுவனம் நடத்திவருகிறது. காப்ரா பற்றி இவ்வளவு விரிவாக குறிப்பிடுவதன் காரணம் இயற்பியலாளராக துவங்கிய காப்ரா இன்று தன் அக்கறைகளை விரிவுபடுத்தி செயல்பாட்டுத் தளத்தை மாற்றுக் கருத்துக்களுடன் தொடர்புபடுத்தியிருப்பதை சுட்டிக் காட்டத்தான். காப்ராவின் Tao of Physics விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட நூல் அல்ல. காப்ராவின் பார்வை அத்துடன் தேங்கிவிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. காப்ராவின் நூல் குறித்து பிரேமிள் குறிப்பிட்டுள்ளதைத் தவிர வேறுசில விமர்சனங்களும் வெளிவந்துள்ளன. கிழக்கத்திய தத்துவத்துடன் நவீன இயற்பியலை ஒப்பிட்டு எழுதும் காப்ரா சில இணையான கருத்துக்களை சுட்டிக் காட்டுகிறார். அவர் கிழக்கித்திய சிந்தனைமரபு உருவான வளர்ச்சிபெற்ற சூழலையும் அவை உருப்பெற்ற தத்துவ, விஞ்ஞான மரபுகளையும் கணக்கில் கொள்ளாமல் ஒப்பிட முயல்கிறார். சிந்தனைப் போக்குகளைப் பலவிதமாக அர்த்தப்படுத்த முடியும். அதாவது பன்முகவாசிப்பை இவை சாத்தியமாக்குகின்றன. இதன் விளைவாக பகவத்கீதைக்கும், உபநிடதங்களுக்கும் பலவிதமான உரைகள் உள்ளன. பகவத் கீதையைப் பொறுத்தவரை அதன் சமீபகால வாசிப்புகளாக காந்தி, திலகர் சுவாமி சின்மயானந்த் போன்றோரின் உரைகளைக் குறிப்பிடலாம். ஒன்றையொன்று பல அம்சங்களில் மறுக்கின்றன. அடிப்படைக் கருத்துக்களிலேயே வேறுபடுகின்ற அத்வைத, விசிஷ்டாத்வைதசிந்தனைப் போக்குகளுக்குச் சார்பாகவும் கீதைக்கு உரைகள் உள்ளன. இவற்றுடன் இந்த உரைகள் எந்தக் காலகட்டத்தில் யாரால், எந்தப் பின்னணியில் எழுதப்பட்டன என்பதும் கவனிக்கப்பட வேண்டும். இதே போல் பெளத்தத்தையும் பலவிதமாக அர்த்தப்படுத்த முயற்சிகள் நடந்துள்ளன. பெளத்தத்தை தர்க்கரீதியான பாசிடிவ் கண்ணோட்டத்திலும் ஹெகலின் இயங்கியல் கண்ணோட்டத்திலும். எனவே மா¡க்சியத்திற்கு நெருக்கமானதாகவும், பிற்போக்கானது எனவும் பலவகைகளில் வாசிக்க முயன்றுள்ளனர் என்கிறார் சுசந்தா குணதிலகா, எனவே காப்ராவிற்கு முன் இவ்வாறு கருத்துக்கள் உருவான சூழலை கவனிக்காமல் கருத்துக்களை மட்டும் ஒப்பிட்டுக் காணும் தவறான முயற்சிகள் நடைபெற்றுள்ளன மரபுகளைப் பிறவற்றுடன் ஒப்பிடும்போது அவைகளிடையே உள்ள வேறுபாடுகளையும் காணவேண்டும்.

ஒட்டுமொத்தமாகக் கிழக்கத்தியச் சிந்தனை என்ற லேபிளை ஒட்டி அத்வைதம் முதல் தர ஓ வரை எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக அணுக முடியாது. எப்படி இந்தியத் தத்துவ மரபை அத்வைத மரபாகக் குறுக்க முடியாதோ அதேபோல் கிழக்கத்தியச் சிந்தனை மரபை வேறுபாடுகளைப் புறக்கணித்துவிட்டு ஒரே மரபாகக் காணமுடியாது. இதனை நம் சூழலில் வைத்து பார்க்க முடியும். சித்தர் பாடல்களில் பல, சடங்குகளை வேதம் போன்றவற்றை விமர்சிப்பவை. வேறு சில. பேரின்ப நிலை குறித்துப் பேசுபவை. முன்னதையும் சேர்த்தே சித்தர் மரபு அணுகப்பட வேண்டும். பின்னதை மட்டும் கருத்தில் கொண்டு சித்தர் மரபை வெறும் பேரின்பம் குறித்துப் பேசுபவர்களாக, அமைப்பு ரீதியான மதங்களுடன் ஒத்துப் போகக் கூடியதாகக் காண்பதில் உள்ள அரசியலை நம்மால் புரிந்து கொள்ள முடியும். சித்தர் பாடல்களுடன் நவீன இயற்பியல் கருத்துக்களை ஒப்பிடும் சுஜாதாவிற்கும், அதைப் பிரசுரிப்பதன் மூலம் இந்து மதம் விஞ்ஞான ரீதியானது எனக்காட்ட முயலும் ஞானபூமிக்கும் சித்தர் மரபின் ஒரு வளமான பகுதியைக் கவனிக்க மறுப்பது வசதியானது. காப்ராவின் நூலில் இத்தகைய ஒரு பிற்போக்கான நிலைப்பாட்டிற்கு இடம் இருந்தாலும் சமூக மாற்றம் குறித்த அக்கறை காரணமாக இவ்வாறு நிகழவில்லை என்று கருதமுடியும்.

வேதாந்தம் நவீன வாழ்வுக்குத் தேவை என்று கூறும் சுவாமி ராங்கநாதானந்தாவும், இந்தியா அணுகுண்டு தயாரிக்கலாம். அணு உலைகள் தேவை என்று கருதும் ராஜாராமண்ணா போன்றோரும் எந்தவித முரண்பாடுமின்றி ஒரே மேடையில் வேதாந்தம் குறித்து நவீன இயற்பியலும். அத்வைதம் குறித்து பேச இயலும். இதற்கு ஆதாரமாக ராஜாராமண்ணா சில ஆண்டுகளுக்கு முன் இந்துவில் எழுதிய கட்டுரை. சுவாமி ரங்கநாதானந்தாவின் கட்டுரைகள், நூல்களைக் காட்ட இயலும் இதற்கு மேடை அமைக்க பாரதிய வித்யாபவன் போன்ற அமைப்புகள் உள்ளன.

நானி பல்கிவாலா Tao of Physicsஐ உதாரணம் காண்பித்து நம் மரபின் செழுமை. அதன் கருத்துக்கள் இன்று விஞ்ஞானிகளால் வியப்புடன் ஒப்பு நோக்கப்படுவது குறித்து, உரை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் காப்ரா தன் நூலில் சமூக மாற்றம் பற்றிக் கூறி இருப்பதை அவர் சுட்டிக்காட்ட மாட்டார். விஞ்ஞான மனோபாவம் தேவை என்பார் ராஜாராமண்ணா. அவரால் நவீன இயற்பியலும் அத்வைதமும் குறித்து பேச முடியும். உண்மையிலும் இங்கு மத அதிகார அமைப்பும், விஞ்ஞான அதிகார அமைப்பும் ஒன்றையொன்று எதிர்ப்பவை அல்ல. அணுகுண்டு தயாரிக்கும் அத்வைதிகள் இங்கு இல்லை என்று கூற முடியாது. பிரேமிள் இந்த அம்சத்தை உன்னிப்பாகக் கவனித்திருந்தால் மதத்திற்கு எதிரான விஞ்ஞானம் என்ற பழைய, இன்று காலாவதியாகிவிட்ட கருத்தை முன் வைத்திருக்கத் தேவையில்லை. விஞ்ஞான ரீதியிலானவை மதங்கள் என்று மதவாதிகள் விஞ்ஞானத்தைத் துணைக்கு அழைக்கும் காலம் இது. நாங்கள் செய்யும் காரியங்களை விமர்சிக்காதீர்கள் என்ற அடிப்படையில் விஞ்ஞானிகள் சந்நியாசிகளுடன், நவீன மடங்களுடன் நேரடியாகக் கூட்டுச் சேரும் காலம்இது. ஏனெனில் இன்று அதிகாரத்தை நியாயப்படுத்த விஞ்ஞானம் ஒரு நல்ல காரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுதான் விஞ்ஞானம் எனும் அறிவிற்கும், மத அதிகாரத்திற்மிடையே இன்றுள்ள தொடர்பு. இதனை மூடி மறைக்க மானுட நேயமிக்க விஞ்ஞானம், விஞ்ஞான மனோபாவம், மானுட நேயமமான வேதாந்தம் போன்றவற்றை ராஜா ராமண்ணாக்களும், பல சுவாமிகளும் நம்முன் வைக்கிறார்கள். இந்த தொடர்பை நாம் ஆராய்ந்தால் சமகால இந்தியாவில் சந்திரா சுவாமிகள், ராஜா ராமண்ணாக்கள் போன்றோர் முரண்பாடின்றி இயங்குவது எப்படிச் சாத்தியமாகிறது என்பது தெளிவாக புரியும். சில ஆண்டுகளுக்கு முன் மைசூரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இத்தகைய ஒரு நவீன மடத்தைச் சேர்ந்த ஒரு சுவாமி கட்டுரை படித்தார். ஆல்வின் டாப்லர், சுமாக்கர், எரிக் ப்ராம் ஆகியோரின் நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, வேதாந்தம் நவீன மனிதனுக்குத் தேவை என்ற ரீதியில் கட்டுரையில் வாதிட்டிருந்தார். அவரிடம் நீங்கள் குறிப்பிட்டுள்ள மூவரும் தத்தம் கண்ணோட்டத்தில் சமூக விமர்சனம் செய்துள்ளனர். உங்களுக்கு சமூக விமர்சனப்பார்வை எதேனும் உண்டா என்ற போது அவரால் பதில் கூற முடியவில்லை. இதேபோல் சுமாக்கர் பொருளாதார வளர்ச்சி குறித்தும், வளர்ச்சித் திட்டங்கள் தொழில் நுட்பம் குறித்தும் எழுதியுள்ளார். நீங்கள் இவை குறித்து விவாதித்தது உண்டா? எரிக்ஃப்ராமை மேற்கோள் காட்டுகிறீர்கள். அவரது சிந்தனையின் மார்க்சியப் பரிமாணம் உங்களுக்கு உடன்பாடான ஒன்றா என்று கேட்டபோது மழுப்பல் தான் பதிலாக வந்தது. ஆனால் இத்தகைய ஒரு கட்டுரை ஒரு சராசரி வாசகனை ஆங்கிலம் படிக்கத் தெரிந்த மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை எட்டும்போது அவர்கள் கட்டுரையாசிரியரின் வாதங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஆபத்து உள்ளது.

சுஜாதாவின் நூலும் இத்தகைய ஒரு முயற்சிதான். ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து என்ற தலைப்பே நூல் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள உதவுகிறது. "விஞ்ஞான ரீதியான" விளக்கம் என்ற போது வாசகன் அதனை விமர்சனப் பூர்வமாக யோசிக்காமல் விஞ்ஞானப் பூர்வமாகச் சரியாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்குவரத் தூண்டுகிறது. எல்லாவற்றையும் விஞ்ஞானக் கண்ணோட்டம் கொண்டு ஏன் பார்க்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்புவது நியாயமானது. ஆனால் பிரேமிள் போன்றவர்கள் விஞ்ஞானப் பார்வையை உயர்த்திப் பிடிக்கும்போது அந்த லேபிளைப் பயன்படுத்தி கொள்பவர்கள் சுஜாதா போன்றோர். விஞ்ஞானப் பார்வை இன்னும் பரவ வேண்டும் என்று கூறினால், ஆம் விஞ்ஞான ரீதியாக மதத்தில் மரபில் எத்தனை விஷயங்கள் உள்ளன என்று இவர்கள் கண்டுபிடிப்பார்கள்.

விஞ்ஞான நிரூபணம் கேட்கிறீர்களே, விஞ்ஞானமோ மாறிக் கொண்டேயிருப்பது. மதமோ மாறாதது. இவற்றை எப்படி ஒப்பிட்டு நிரூபிப்பது என்கிற ரீதியில் காஞ்சி சங்கராச்சாரியார் ஒருமுறை குறிப்பிட்டு உள்ளார். (பார்க்க, தெய்வத்தின் குரல்) இதே கருத்தை காப்ராவின் நூலை விமர்சிக்க பயன்படுத்தலாம். நேற்றைய இயற்பியல் கருத்துக்கள் இன்று சரியில்லை என்று நிரூபிக்கப்பட்டால் மீண்டும் கிழக்கத்திய சிந்தனையில் இன்று நிரூபிக்கப்பட்ட கருத்துக்களுக்கு ஆதாரம் தேடுவது அபத்தமாகவே முடியும் புத்தர் கூறியவற்றை இன்று மேற்கோள் காட்டி ஒப்பிடும் போது நாளை நாம் எதனுடன் ஒப்பிடுகிறோமோ அது சரியல்ல என்று நிரூபிக்கப்பட்டால் மீண்டும் இதனோடு ஒப்பிட வேறொரு மேற்கோளைத் தேட வேண்டும். புத்தரின் நிர்வான நிலையும், அவர் கூறியவையைம் இயற்பியலின் தளத்தில் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டால் இந்த ஓப்பிட்டு முயற்சியின் எல்லைகள் புரியும். அதாவது புத்தரின் கருத்துக்களுக்கான நிரூபணத்தை நவீன இயற்பியலில் தேடுவது அபத்தம். சில கருத்து ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டுவது கூட ஓரளவிற்கே சரியாக இருக்கமுடியும்.

காப்ரா இயற்பியலும் ஆன்மவியலும் ஒன்று என்று கூறவில்லை. எனினும், இவர் சில கருத்தொற்றுமைகளை மட்டுமே காட்டியிருந்த போதிலும் பலர் அவர் இரண்டையும் ஒன்றாக குறிப்பிட்டு உள்ளதாக நினைப்பதை கென் வில்பர் சுட்டிக் காட்டுகிறார். காப்ராவின் நுட்பமான, ஆழமான கருத்துக்கள் கூட இதனை மாற்ற முடியாது, காப்ரா தன் முதல் நூலில் கூறிய அறிமுகக் கருத்துக்களைக் கடந்து சென்றுவிட்டபோதும் வாசகர்கள் பலர் அங்கேயே நின்றுவிடக் கூடும். ஆன்மிகம், இயற்பியல் குறித்து எழுதிய டேவிட்போம், காப்ரா போன்றோர் தங்கள் கருத்துக்களை முன் வைத்தாலும் கூட ஆரம்பத்தில் ஏற்பட்ட இந்தத் தவறான எண்ணம் நிலைத்து நிற்கும் என்கிறார் என்கிறார் கென்வில்பர்.

பிரபஞ்சம் ஒத்திசைவு கொண்ட ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட முழுமை, அனைத்து பொருட்களும் ஒன்றே அறிமுக வாக்கியங்களாகப் பயன்படலாம். ஆனால் இத்தகைய வாக்கியங்களை/ கருத்துக்களைக் கொண்டு ஒரு உண்மையான தாக்கு பிடிக்கக்கூடிய கருத்து ரீதியான மாதிரியை முன்வைக்கும் போது கவனம் வேண்டும் என்கிறார் கென்வில்பர். ஆன்மவியல் பார்வையை முழுமையான, ஒன்றியைந்த தேக்கமின்றி செயல்படுகின்ற பார்வை என்று பலர் கருதலாம். ஆனால் இவை எல்லாம் பேருண்மை பற்றிய கருத்துக்களே. பேருண்மை இந்த இருநிலைகளும் (முழுமையானது/ பகுதி) அப்பாற்பட்ட ஒன்று. எனவே பேருண்மையை குணரூபமாக விளக்க முடியாது. அதாவது அது நிர்குணம் (குணங்களுக்கு அப்பாற்பட்டது); சூன்யம் (வகைப்படுத்தவியலாது). இதனை உலகின் அனைத்து ஆன்மவியல் மரபுகளுக்குப் பொதுவான ஒன்று என்று கருதுகிறார் வில்பர்.

பேருண்மை/ பிரம்மம்/ சூன்யம் குறித்த குறைப்புவாதத்தை எதிர்க்கிறார் வில்பர். உரைக்கவியலாத இதனை உரைப்பதே ஒருவித முரண்பாடுதான். தாஓ எப்போதும் மாறிக்கொண்டே இருப்பது என்று கூறுவது கயமுரணான ஒன்று. எப்போதும் மாறி கொண்டே இருப்பது என்பது நிர்பந்தமான உண்மை எனில் அது முரண்பாடான முடிவைத் தருகிறது. காரணம் கற்பிப்பதன் உள்முரணைக் காட்டி சூன்யவாத பெளத்தர்கள், பிராமணர்களின் கோட்பாடுகளை எதிர்கொண்டார் நாகர்ஜுனன் என்பதை கென்வில்பர் விளக்குகிறரர். வில்பரின் இந்த விமர்சனம், வார்த்தைகள், கருத்துகளைக் கொண்டு பேருண்மையை ஒப்பிட விளக்க முயல்வதின் வரையறைகளைக் காட்டுகிறது. விவரிக்கப்படுவது, விவரிக்கப்படும் பொருளைப்பற்றிய வர்ணணை; அதுவே பொருள் ஆகாது. எனவே இயற்பியல் கருத்துக்களுடன் ஆன்மவியலை, சிந்தனை மரபுகளை ஒப்பிடும்போது கவன¨மாகச் செயல்படவில்லை என்றால் கேலிக்கூத்தான அபத்தமான அதே சமயத்தில் எளிதில் (தவறாக) புரிந்து கொள்ளக்கூடிய முடிவுகள் மிஞ்சும். இயற்பியல் கருத்துக்களுடன் ஒப்பிட்டு பேசும் காப்ரா போன்றோரின் முயற்சிகளுக்கும், போமின் கருத்துக்களுக்கும் ஹோலோகிராம் என்பதுடன் பிரக்ஞை பேருண்மைகளை ஒப்பிட்டு பேசும் முயற்சிகளுக்குமான விமர்சனமாகவும் வில்பரின் கருத்துக்கள் பொருந்தும்.

தன் விமர்சகர்களுக்கு பதில் கூறும் காப்ரா ஒரு நீண்ட பேட்டியில் தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்துகிறார். தனது விமர்சகர்கள் சிலரின் (ரவி ரவிந்திரா, ஜெர்மி பெர்ன்ஸ்டைன்) விமர்சனம் சரியானது அல்ல. கென்வில்பர் இயற்பியலாளன் அல்ல என்பதால் சிலவற்றைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார் என்கிறார். நியூட்டனிய இயற்பியல், குவாண்டம் இயற்பியல் இரண்டும் குத்துமதிப்பான வர்ணணைகள்தான். இவை பின்னர் படிப்படியாக முன்னைவிடச் செப்பமுடையதாக மாற்றப்படுகின்றன. குவாண்டடம் இயற்பியல் நியூட்டனிய இயற்பியலை நிராகரிக்கவில்லை. அதன் எல்லைகளை சுட்டிக் காட்டியது. இன்றும் நடைமுறை வாழ்வில் பல செயல்களுக்கு நியூட்டனிய இயற்பியல் பயன்படுகிறது என்கிறார். ஹெய்ஸன் பர்க்கின் கண்டுபிடிப்புகளுக்கு மதிப்பீடுகளைக் கொண்ட செயல்பாடு எனில் விஞ்ஞானிகள் அறிவு ரீதியாக மட்டுமின்றி தார்மீக ரீதியாகவும் அவர்களின் ஆய்வுகளுக்கு பொறுப்பாவார்கள் என்றும் கூறுகிறார். மதிப்பீடுகள் அற்றது என்பதே ஒரு மதிப்பீடு என்று டேவிட் போம் கூறுவதை சுட்டி காட்டுகிறார்.

சரிபாதி விஞ்ஞானிகள் ராணுவத் தொடர்புடைய செயல்களில்/ ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும்போது நமது கலாச்சார மதிப்பீடுகளை நாம் நோக்க வேண்டும். நவீன பெளதீகம் நம்மை புத்தரிடம் அல்லது அணுகுண்டிடம் இட்டுச் செல்லுல் என்றும் காப்ர கூறுகிறார். ஐன்ஸ்டின், நீல்ஸ்மோர், போம் ஆகியவர் சமூக ரீதியாக அரசியல் ரீதியாக செயல்பட்டிருப்பது இந்த உண்மையை உணர்த்தத்தான் என்கிறார். இயற்பியலாளர்களிடையே மிகவும் அதிகமான உள்ளுணர்வு மிக்கவர்கள் இவர்கள் எனக் கொள்வது மட்டுமின்றி, முழுமையாக உணர்ந்தால் அவற்றின் சமூகத் தாக்கங்களை அறிவார்கள் என்பது காப்ராவின் கருத்து,. கென்வில் பருமனான இந்த நீண்ட பேட்டியில் காப்ரா எங்கும் தன் கருத்துக்களில் முடிச்சுப்போடும் முயற்சியில் இறங்கவில்லை. எந்த ஒரு அதிகார அமைப்பிற்கு ஆதரவாகவும் வாதிடவில்லை. அடுக்கு வரிசை என்பதை ஆணாதிக்கப் பிரக்ஞையுடன் தொடர்பு காட்டும் காப்ரா ஆணாதிக்கச் சமூகமே இத்தகைய அடுக்கு வரிசைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவை என்கிறார். அடுக்கு வரிசைகள் அற்ற மரபுகளுமுண்டு என்கிறார். உதாரணமாக தான் நம்புகின்ற தாஓ யிஸம் அடுக்கு வரிசைகள் அற்றது. இதன் மூலங்களை தாய்வழி கலாச்சாரத்தில் காணலாம் என்கிறார்.

காப்ராவின் அணுகுமுறையில் சில குறைபாடுகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அவைகளையும் மீறி அவரது நூல் சில புதிய கருத்துக்களை நமக்குக் காட்டுகிறது. காப்ராவின் முதல் நூலை நாம் ஒதுக்கினாலும்கூட, அவரது பிற நூல்களை அவ்வளவாக ஒதுக்க இயலாது.
பிரமிள் தன் கட்டுரையில் நியூட்டனைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். நவீன இயற்பியல் தந்தை எனக் கருதப்படும் நியூட்டனைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம். 1936ல் நியூட்டனின் கையெழுத்து படிகள் ஏலம் விடப்பட்டன. அதனை படித்த கீன்ஸ், நியூட்டனை கடைசியான மந்திரவாதிகளில் ஒருவராகக் காண்கிறார். பிரபஞ்சத்தை ஒரு புதிராக கண்ட நியூட்டன் தன்னை அத்தகைய மரபின் அவர்கால பிரதிநிதியாகக் கண்டாலும் உள ரீதியாக, அரசியல் காரணங்களுக்காக தன் ஆளுமையின் இந்த அம்சத்தை ஒடுக்கினார். அவரது இளமை காலத்தில் தாயின் ஆதரவின்றி, தன் பாட்டியுடன் கழிக்க நேர்ந்தது. இந்த பிரிவின் அச்சம் அவரைப் பிள்ளைப் பருவத்தில் வாட்டி வதைத்தது. நியூட்டன் பிறக்கும்முன் அவர் தந்தை இறந்தார். நியூட்டனுக்கு மூன்றுவயதான போது தாய் மறுமணம் செய்துகொண்டு தன் இரண்டாவது கணவருடன் சென்றுவிட்டார். பின்னர் 8 ஆண்டுகள் கழித்து இரண்டாவது கணவரின் மரணத்திற்குப்பின் தன் ஊருக்கு நிரந்தரமாகத் திரும்பிவந்தார். தாயை இன்னொரு ஆணுக்கு இழந்த இந்த அதிர்ச்சியிலிருந்து நியூட்டன் மீளவில்லை (இதனை அவரது குறிப்புகளில் அவர் மீதான அவரது வெறுப்பைப் பாவமாகக் கருதி எழுதி இருப்பது காட்டுகிறது) தன்னை ஒரு மரபில் வந்தவரதாக கருதிய நியூட்டன் தன் கண்டுபிடிப்புகள் குறித்து சொந்தம் கொண்டாடினார். ஒவ்வொரு தலைமுறையிலும் இறைவன் தன்னை ஒரே ஒரு தீர்க்கதரிசிக்குத்தான் வெளிப்படுத்திக் காட்டுகிறார். எனவே இணையான கண்டுபிடிப்புகள் ஒரே காலத்தில் இருக்கமுடியாது என்று கருதினார். (டிலப்னிப்ஸுக்கு முன்பே தாம் சிலவற்றைக் கண்டுபிடித்து விட்டதாக நியூட்டன் கருதியதுடன் இது குறித்து நீண்ட நாள் சர்ச்சையில் ஈடுபட்டார்) தனிமை, குற்ற உணர்வு போன்றவையே அவரது குறிப்பேடுகளில் வெளிப்படுகின்றன. மகிழ்ச்சி, அன்பு போன்ற உணர்வுகள் குறித்து குறிப்புகள் ஏதும் இல்லை. அறிய வேண்டும் என்ற நியூட்டனின் ஆசையின் முக்கியமான அடிப்படை தெரியாதவன் முன் அவருக்கிருந்த கலையும் அதுகுறித்த அச்சமுமாகும். இத்தகைய ஒரு மனம் கணித ரீதியாக கணித்து கூறக்கூடிய ஒரு அறிவியல் பாதுகாப்பைப் பெற்றிருக்கும். இயற்கை கணிதரீதியாகப் புரிந்து கொள்ளக்கூடிய விதிகளைக் கொண்டிருப்பது பாதுகாப்பான உணர்வைத் தரும்.

நியூட்டனின் மறுபக்கம் ரசவாதத்துடன் தொர்புடையது. மிகப்பெரிய அளவில் ரசவாத நூல்களை அவரது நூலகத்தில் வைத்து இருந்தார். லண்டனும் அவர் 1696-இல் குடியேறச் செல்லும் வரை ரசவாத பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தார். ரசவாத கருத்துகள், ஆய்வுகள் மூலம்தான் ஏற்கனவே கண்டுபிடித்திருந்த புவிஈர்ப்பு விசையுடன் தொடர்புபடுத்திக் காணமுயன்றார். பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறிவது குறித்த அவரது தேடலின் ஒரு பகுதி இது. ஸெர்மெடிக் சிந்தனை மரபையும், அவரது ஆரம்பகாலச் சிந்தனையையும் தொடர்புபடுத்திக் காணமுடியும். ரசவாதத்திலும், பிற சிந்தனை மரபுகளிலும் இவ்வளவு அக்கறை காட்டிய நியூட்டன் பின்னாளில் யாந்திரிக விளக்கங்களை முன் வைக்கும் தத்துவவாதியாக மாறினார்.
இதற்கான விடையை அவரது காலத்தில் ஏற்பட்ட அரசியல், சமூக மாற்றங்களில் காணமுடியும். 1650-60ல் இங்கிலாந்தில் ரசவாதத்திலும் ஆன்மவியலிலும் காட்டப்பட்ட ஈடுபாடு உச்சகட்டத்தை எட்டியது. உள்நாட்டு போர். நிலப்பிரபுத்துவ பொருளாதரத்தை பாதித்தது. புதிதாக உருவாகிய பூர்ஷ்வா வர்க்கம் தங்குதடையற்ற பொருளாதார வணிகக் கோட்பாட்டை ஆதரிக்கும் பாவை கொண்டதுடன் அரசரின் ஏகபோக செயல்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தியது. இந்தப் பொருளாதார போராட்டம் அரசரின் ஆதரவாளர்களுக்கும். பாராளுமன்றவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்தது. மத ரீதியாகப் பழமை வாதம் வென்றது. இதற்கு எதிராகப் பலமத குழுக்கள் தோன்றின. இவை இறைவனை நேரடியாக அடையலாம் என்றன.
மூடபக்தி/ உழைப்பு மூலமே முக்தி என்பதை எதிர்த்தன. இவைகளில் பலவற்றின் மதக்கண்ணோட்டத்தின் ரசவாதம் உட்பட பல பழைய சிந்தனை மரபுகளைச் சேர்ந்த கருத்துக்கள் இடம்பெற்றன. புதிய விஞ்ஞானத்திற்கு எதிரான நம்பிக்கைகள் கொண்டிருந்தன. பொருளுக்கு உயிர் உண்டு. இறைவன் அனைத்திலும் இருக்கிறார். உள்முரண் வழியே மாற்றம் ஏற்படுகிறது. (இயங்கியல் பார்வை) போன்றவற்றுடன் திருச்சபையின் உடுக்குவரிசை அதிகார அமைப்பினை எதிர்த்தன. யாரும் இறைநிலைமை உணரலாம். நேரடியாக இறைவனை அடையாலம் என்றும் கருதின. 1640களில் இத்தகைய குழுக்கள் மிக்க செயல்பாட்டுடன் விளங்கின. இவற்றின் கருத்துக்களை எங்கல்ஸ் காட்டும் கற்பனாவாக சோசலிசத்துடன் ஒப்பிடலாம்.

1650களில் மீண்டும் அரசாட்சி வலுப்பெற்றபின் இப்போக்குகள் பலவீனம் அடைந்தன. முன்பு ரசவாதத்தின் பால் அனுதாபம் கொண்டிருந்த பலர் மெல்ல மெல்ல யாந்திரீக தத்துவத்தை நோக்கி மாறினர். சொத்து உடைமை கொண்டவர்க்கங்களும், திருச்சபையின் முக்கிய உறுப்பினர்களும், ராயல் சொசைட்டியை நிறுவுவதில் ஈடுபட்டனர்.

நியூட்டன் தன் எதிரிகளை முறியடிக்கக் கையாண்ட வழிகள் பல. லெப்னிட்சுடன் சர்ச்சை எழுந்தபோது தன்னை ஆதரிக்கும் கட்டுரைகளை அவரே எழுதி நண்பர்களின் பெயரில் வெளியிட்டார். லெப்னிட்ஸ், ராயல் சொசைட்டியிடம் முறையீடு செய்தார். அதன் தலைவரான நியூட்டன் தன் நண்பர்களைக் கொண்ட பாரபட்சமற்ற குழுவை அமைத்தார். அவரே லெப்னிட்ஸ் நியூட்டனின் கண்டுபிடிப்புகளை திருடினார் என்ற முடிவுக்கு வரும்படி குழுவின் அறிக்கையை தயாரித்தார். அதை ராயல் சொசைட்டி வெளியிட்டது. இதுபோதாது என்று அந்த அறிக்கையின் மதிப்புரையையும், ராயல் சொசைட்டியின் பத்திரிக்கையில் மதிப்புரை செய்தவர் பெயரின்றி வெளியிட்டார். நியூட்டனின் பிரின்சிபியா என்ற நூலுக்கு தேவையான வானியல் தகவல்களை ஆரம்பகாலத்தில் தந்த ஜான்ப்ளம்ஸ்ட்டுடன் மோதினார். நியூட்டனுக்கு அவர் பின்னாளில் தகவல்தர மறுத்தார். ராயல் வானியல் ஆய்வு கூடத்தின் நிர்வாக குழுவிற்கு தன்னைத் தானே நியமித்து கொண்ட நியூட்டன். அவருக்கு தேவையான தகவல்களை கட்டாயப்படுத்தி வெளியிட முயன்றார். ஜானின் எதிரியான எட்மண்ட் ஹாலியின் நூலை வெளியிட ஏற்பாடு செய்தார். இதனை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஜான் தன் கண்டுபிடிப்புகளைத் திருடி எழுதப்பட்டட அந்நூலின் விநியோகத்தைத் தடை செய்யும் நீதிமன்ற உத்தரவை பெற்றார். இதனால் ஆத்திரமடைந்த நியூட்டன் தன் பிரின்சிபியாவின் பிற்காலப் பதிப்புகளில் ஜான் ப்ளம்ஸ்டீ பற்றிய குறிப்புகளை முற்றிலுமாக நீக்கிவிட்டார்.
இதனைக் கூறுவது நியூட்ன் என்ற தனிமனிதரை இகழ அல்ல. மாறாக நியூட்டனின் விஞ்ஞானப் பார்வையின் தன்மைகளைப் புரிந்து கொள்ள, இங்கிலாந்தில் ஏற்பட்ட அரசியல் சமூக மாற்றங்களுடன் அவரது பார்வையும், நிலைபாடும் மாறியதைச் சுட்டி காட்டினோம். இருப்பினும் அவரது சிந்தனையில் இருந்த ரசவாத, மற்றும் பிற சிந்தனைகளின் தாக்கத்தை மறைத்துவிட்டு அவரை தூய விஞ்ஞானப் பார்வை கொண்டவராகக் காட்டுவது அப்பட்டமான பொய். இதேபோல் அவரது பிற செயல் மூலம் தெரியவரும் ஆளுமையைப் பற்றிப் பேசாமல் நியூட்டனை விஞ்ஞானியாக மட்டும் காண்பது விஞ்ஞானப் பார்வையை முன் வைப்பவர்களுக்கு வசதியான ஒன்று.

விஞ்ஞான ரீதியான அணுகுமுறை என்பதில் கருணைக்கும் இடம் உள்ளதா என்று கேட்க வேண்டும். விஞ்ஞான ரீதியாகச் சரியானதாக இருக்கும் ஒன்று அறிவியல் ரீதியாகத் தவறாக இருக்கலாம் என்று கூறும் லாய்ங் இயற்பியலாளரின் தராசுகள் நியாய தராசுகள் அல்ல என்கிறார். உண்மையும் நல்லதும், மதிப்பீடும் அறிவும் பிரிந்துபோய் ரொம்ப காலமாகிவிட்டது என்றுகூறும் லாய்ங் நவீன விஞ்ஞான அணுகுமுறையின் விமர்சகர் மட்டுமல்ல. மனச்சிதைவு குறித்தும் உளவியல் சிகிச்சை முறை குறித்தும் புரட்சிகரமான கருத்துக்களைக் கூறியவர்.

உலகின் விஞ்ஞானிகளில் பெரும்பான்மையோர் ராணுவ தொடர்புடைய ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பதை நாம் மறந்துவிட்டு பரிசோதனை என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான மிருகங்கள் சித்திரவதை செய்யப்படுவது, மெல்லக் கொல்லப்படுவது போன்றவற்றையும் மறந்துவிட்டு விஞ்ஞானத்தின் முன்னணி, மனித விரோதமாக இருக்காது என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக்
கொள்வதாகும்.

இத்தகைய வாதங்களை வைத்தால் வழக்கமாக வரும் பதில் நிர்ணயிப்பது விஞ்ஞானமல்ல. அரசியல்தான் என்பது, அணுகுண்டிற்கு பொறுப்பு விஞ்ஞானிகள் அல்ல. அரசுகள் என்பது பல உண்மைகளை மறைக்கும் ஒரு திரை. உண்மையில் அணுகுண்டு வீசப்பட்டது ஒரு கூட்டுப் பரிசோதனை.


-நிகழ் 17, மா¡ச் 1991

Labels: , , , , , ,

பீரு அபேதிதாவிற்கு, ஒரு அப்பாவி வாசகன் அனுப்பாத) ஒரு கடிதம்

பீரு அபேதிதாவிற்கு, ஒரு அப்பாவி வாசகன்(அனுப்பாத)ஒரு கடிதம்

திரு. பீரு அபேதிதா அவர்களுக்கு

உங்கள் இணையதளத்தில் விளம்பரம் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் விளம்பரம் கொடுத்தும் நீங்களே எழுதிய நூலின் ஈபுக்கின் விற்பனை உங்கள் தளம் மூலம் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்றும் சொல்கிறீர்கள். மேலும் உங்களுடைய வாசகர்கள் நிதி உதவி செய்வதில்லை, செய்வதாக சொன்னதை செய்வதில்லை என்றும் அவ்வப்போது புலம்புகிறீர்கள். குறிப்பாக பசையுள்ள NRI வாசகர்கள் குறித்து ரொம்பவே புலம்பித் தள்ளி இருக்கிறீர்கள். இதிலிருந்து உங்கள் தளத்தைப் பார்க்கும் வாசகர்கள் மோசமான கஞ்சர்கள், செலவழிக்க யோசிப்பவர்கள் என்று தெரிகிறது. இவர்களை நம்பி எப்படி ஐயா விளம்பரம் செய்ய முடியும். ஒருவேளை வேறெங்காவது விளம்பரம் கொடுத்தால் இவர்கள் அதை நேர்மறையாக அணுகுவார்களோ.

மால்களுக்கு வரும் கூட்டத்தில் பலர் வெறுமனே பொழுதைக் கழிக்கவும், வேடிக்கை பார்க்கவும் வருவதுண்டு.கடைகளுக்குள் புகுந்து சும்மாப் பார்த்து விட்டுப் போகும் கூட்டமும் உண்டு. அது போல் நீங்களும், சில எழுத்தாளர்களும் போடும் சண்டையை வேடிக்கை பார்க்க பலர் எழுத்தாளர்களின் இணையதளங்களை வாசகர்கள் ச்சும்மானாச்சுகும் பார்க்கிறார்களோ என்று சிறு சந்தேகம் உண்டு.

2 ல்ட்சம் ஹிட் இருந்தும் ஒரு 10 டாலர் விலையுள்ள ஈபுக் 10 பிரதிகள் கூட விற்காத போது எப்படி ஐயா விளம்பரதாரர்களுக்கு உங்கள் தளம் மூலம் நல்ல விற்பனை கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும். உள்ளடக்கமே விளம்பரதாரர்களுக்கு இத்தளத்திற்கு யார் வருகையிடுவார்கள், அவர்கள் எத்தகைய பொருட்களை/சேவைகளை விரும்புவார்கள் என்பதை அறிய உதவுகிறது. உங்களுடைய வாசகர்கள் எத்தகையவர்கள், அவர்களது profile என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. நீங்கள் தரும் வாசகர் profile பெரும்பாலும் எதிர்மறையாக இருக்கிறது. இப்படியிருக்க நீங்கள் எந்த அடிப்படையில் விளம்பரதாரர்கள் உங்கள் தளத்திற்கு விளம்பரம் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

எழுத்தாளர்கள் தளங்களுக்கு அழகு விளம்பரங்கள் இன்றி இருப்பதுதான் என்று பூக்கோ சொல்லியிருக்கிறார் என்று அவர் ஆவியுடன் பேசும் சுலோசனா என்ற பெண் நேற்று ஈநாடு டி.வியில் சொன்னார். அதை அடுத்த வாரம் யுடியுப்பில் தமிழ் சப் டைட்டிலுடன் ஏற்றுகிறேன். இதை நீங்கள் மலையாளத்தில் எழுத முடியாது. ஏற்கனவே சுலோச்சனாவே
மாத்ரு பூமியில் எழுதிவிட்டார்.

வாசகன் உரிமையுடன் ஒன்று சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்கள்தானே :
நீங்கள் எழுதுவதை படிக்க காசு கேட்காமல் இருக்கிறார்களே என்று மகிழ்ச்சி அடையுங்கள் :).

இப்படிக்கு
ஒரு அப்பாவி வாசகன்

Labels: ,

முந்தைய இடுகை-'ஆன்மிகம், விஞ்ஞானம் அதிகாரம்'

'ஆன்மிகம், விஞ்ஞானம் அதிகாரம்' என்ற தலைப்பில் இடப்பட்டிருந்த,
இதற்கு முந்தைய இடுகையை நீக்கிவிட்டேன். என்ன காரணத்தினாலோ அது
பெரிய எழுத்து விக்கிரமாத்தியன் கதை போல் எழுத்தின் அளவு மாறி இருந்தது.
நிறமும் மாறி இருந்தது. எழுத்துரு மாற்றி அல்லது பிளாக்கர் அல்லது இரண்டும் செய்த
கோளாறா இது எனத் தெரியவில்லை. இன்று அல்லது நாளை மீண்டும் இடுகிறேன்.

அது நீண்ட கட்டுரை என்பதால் இதே பிரச்சினை எழுமானால் அதை இரண்டு பகுதிகளாக
இட்டு சோதிக்கிறேன்.

Labels: ,

மறக்க முடியுமா?

மறக்க முடியுமா?

மறக்க முடியுமா அந்த ஜுன் 25ஐ. ஜுன் 25, 1975, நள்ளிரவு நடந்த கைதுகள், அதனை தொடர்ந்த அடக்குமுறைகள், நீதியை மறுத்த உச்சநீதி மன்றம், அதிகாரம் கும்பிடச் சொன்னால் காலில் விழுந்த முதுகெலும்பில்லா அதிசயப் பிறவிகள், என்று பலவற்றை நாம் இன்று(ம்) நினைவில் கொள்வது அவசியம். இனி ஒரு முறை அவசர நிலை அறிவிக்க முடியாது என்று அசட்டையாக இருந்து விட முடியாது. கடந்த 33 ஆண்டுகளில் மனித உரிமைகளும், கருத்துச் சுதந்திரமும் குறித்த அக்கறைகள் அதிகரித்திருந்தாலும் அவற்றிற்கு எதிரான சக்திகள் ஒய்ந்து விடவில்லை. கட்சி பேதமற்று அவை எங்கும் நிறைந்துள்ளன. அஷிஸ் நந்தி மீதான வழக்கு இதற்கு ஒரு உதாரணம். அவசரநிலை நிலவிய காலத்தில் நடந்தது போல் இன்று நடப்பதில்லை என்றாலும் சிவில் சமூகத்திலும் மனித உரிமைகளுக்கு எதிரான சக்திகள், குறிப்பாக மதவாத சக்திகள் இன்று வலுப் பெற்றுள்ளன. அவசரநிலை காலத்தில் அதற்கு ஆதரவாக வைக்கப்பட்ட வாதங்களையும், ரயில்கள் நேரத்திற்கு வந்து சென்றது குறித்த பெருமிதங்களையும் நினைவு கொள்ள வேண்டும். மனித உரிமைகள் மதிக்கப்படாத போதிலும் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதால் முன்னதை மறந்து பின்னதற்கு மட்டும் முக்கியம் கொடுப்பது இறுதியில் எசேத்ததிகாரத்திற்கே அடிகோலும். இந்த அடிப்படையில் பார்த்தால் இன்று மனித உரிமைகள் என்பதை மாறி வரும் சமூக-பொருளாதாரச் சூழலில் எப்படி முன்னிறுத்துவது, புதிய சவால்களை எப்படி எதிர்கொள்வது போன்று பல கேள்விகள் மனித உரிமை இயக்கங்கள்/ஆர்வலர்கள் முன் இருக்கின்றன.

அன்று மனித உரிமைகளுக்காக அதிகாரத்தை எதிர்த்து நின்றவர்களையும், அதிகாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களையும் இன்று நினைத்துப் பார்ப்பது அவசியம்.

Labels: , , , ,

மதவாதம், அணு ஒப்பந்தம், போலி மதச்சார்பின்மை

மதவாதம், அணு ஒப்பந்தம், போலி மதச்சார்பின்மை

இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மா) (சிபிஎம்)யின் மதச்சார்பின்மை என்பது போலியானது என்று பலா முறைநான் எழுதியிருக்கிறேன். அதற்கு இன்னொரு சான்று இன்றைய செய்திகளில் இருக்கிறது. அணு ஒப்பந்தத்தை ஆதரித்தால் சமாஜ்வாதி கட்சி முஸ்லீம்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்று இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மா) வின் தலைவர்களில் ஒருவரான பாந்தே கூறியிருக்கிறார். இவர் அக்கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியுவின்
பொதுச் செயலாளர்.

CPI(M) Politburo member M K Pandhe asked Yadav to ‘think twice’ before deciding to support the nuclear deal as overwhelming number of Muslims, his party's perceived votebank, were against the agreement. He said the SP chief, who enjoys a good relationship with the Left parties, will have to give a lot of explanation if he decides to support the deal, one which he has opposed earlier.
"Mulayam will have to think twice before supporting the deal as an overwhelming majority of Muslims are not in favour of the deal. Mulayam's support is much more among Muslim masses," he told reporters in New Delhi


சமாஜ்வாதிக் கட்சிக்கு முஸ்லீம் ஒட்டுக்கள் தேவை. அதைப் பெற வேண்டுமானால் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கக் கூடாது. ஏனென்றால் பெரும்பாலான முஸ்லீம்கள் இந்த ஒப்பந்ததை ஆதரிக்கவில்லை என்ற வாதம் மதத்தினை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவதுதான். இந்த ஒப்பந்தம் நாட்டுக்கு நலனுக்கு எதிரானது என்று பேசி வந்தவர்கள் இப்போது அதை சமாஜ்வாதி கட்சி ஆதரிக்கலாம் என்று செய்திகள் வெளியான பின் மதத்தினை ஒரு காரணமாக முன் வைக்கிறார்கள். ஒரு வாதத்திற்காக
பெரும்பான்மையான முஸ்லீம்கள் அதை எதிர்க்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அதற்காக ஒரு ஒப்பந்ததை ஆதரிக்க கூடாது என்பது மத அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் ஒட்டுக்களை பெறுவதற்காக செய்ய்படும் மதவாத அரசியல்தான்.

சேதுசமுத்திர திட்டத்தில் மதத்தினைக் கொண்டு வந்து அரசியலாக்குவதாக பாஜக மீது இடதுசாரிகள் பலமுறை குற்றம் சாட்டியுள்ளனர். தமிழில் தீக்கதிரில் இக்கருத்து பல முறை எழுதப்பட்டுள்ளது. பாஜக திட்டத்தினை ராமர் பாலத்திற்கு இடையூறு, பாதிப்பின்றி நிறைவேற்றக் கோருகிறது. இங்கு சிபிஎம் பாஜகவை மதவாதக் கட்சி என்று விமர்சிக்காத
நாளே இல்லை. ஆனால் அணு ஒப்பந்தம் நிறைவேறிவிடக் கூடாது என்பதற்காக இப்போது அவர்கள் கையில் எடுத்திருப்பது மதவாத ஆயுதம். உண்மையான மதச்சர்ப்பின்மைக் கட்சியாக இருந்தால் அவர்கள் இந்த ஒப்பந்தம் நாட்டுக்கு நல்லதல்ல
என்றே ஒரே காரணத்தையல்லவா சமாஜ்வாதிக் கட்சியிடம் வலியுறுத்திக்க வேண்டும். மதம், ஒட்டுவங்கி அடிப்படை அரசியலை இங்கு கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லையே. ஆனால் உ.பியில் சமாஜ்வாதி கட்சிக்கு முஸ்லீம்கள் ஆதரவு தேவை என்பதால் அதைக் காரணம் காட்டி பயமுறுத்துகிறது சிபிஎம்.உத்திர பிரதேசத்தில் மட்டும் வலுவாக உள்ள கட்சி சமாஜ்வாதிக் கட்சி. பிற மாநிலங்களில் அதற்கு வலு இல்லை, பல மாநிலங்களில் அது பெயரளவிற்குத்தான் இருக்கிறது. முஸ்லீம் ஒட்டு வங்கி அதற்கு உ.பியில் மிக முக்கியம் என்பது உண்மை. இப்படி ஒரு மாநிலத்தில் உள்ள முஸ்லீம்கள் ஒட்டினை கருத்தில் கொண்டு நிலைப்பாடுகளை எடுக்கச் சொல்லும் கட்சி மதவாதக் கட்சியன்றி வேறென்ன. இதே தர்க்கத்தைக் கொண்டு வாதிட்டால் இந்துக்களின் ஆதரவைப் பெற இந்துக்களின் ஒட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள பாஜக எடுக்கும் முயற்சிகளை எப்படி குறை கூற முடியும். நாட்டு மக்கள் தொகையில் 14% இருக்கும் முஸ்லீம்களின் ஒட்டிற்காக இப்படி பயமுறுத்தும் சிபிஎம், மக்கள் தொகையில் 80%+ இருக்கும் இந்துக்களின் ஒட்டிற்காக பாஜக செய்வதை குறை கூறுவதற்கு எந்த வித தகுதியுமற்ற மதவாதக் கட்சி என்பேன் நான். எப்படியாவது இந்த ஒப்பந்தம் நிறைவேறக் கூடாது என்கிற இடதுசாரிகளின் எதிர்ப்பினையும்
மீறி இதை நிறைவேற்றி விட்டு, பாராளுமன்றத்தை கலைத்து விட்டால் இடதுசாரிகள் என்ன
செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

போகிற போக்கில் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பத்வா வெளியிட வேண்டுமென இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை சிபிஎம் கோரினாலும் கோரலாம்.

பின் குறிப்பு :
June 25, 2008
Press Statement
Prakash Karat, General Secretary of Communist Party of India (Marxist), has issued the following statement:
The remarks made by M. K. Pandhe, member, Polit Bureau of CPI(M), on the nuclear deal issue on June 23, 2008 are not the views of the Party.

www.cpim.org

Labels: , , , , ,

ஒரு திரைப்படமும் இரண்டு ஜால்ராக்களும்

தசாவதாரம்- வீரமணி-ஜெயமோகன்:

ஒரு திரைப்படமும் இரண்டு ஜால்ராக்களும்
1 ) கலைஞானி கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள "தசாவதாரம்" திரைப்பட சிறப்புக் காட்சி நேற்று (22.6.2008) திரையிடப்பட்டது. உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக 10 வேடங்களில் ஒரே நடிகர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தைப் பார்த்த தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், "யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனையை பகுத்தறிவுக் கொள்கை உணர்வோடு செய்திருக்கிறீர்கள். உங்கள் சாதனையை, உங்களால் மட்டுமே முறியடிக்க முடியும்" என்று பாராட்டு தெரிவித்து, நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கும், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார். இருவரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
http://viduthalai.com/20080623/news04.html

2) தசாவதாரம் குறித்து ஜெயமோகன்

படித்துவிட்டு சிரித்து உங்களுக்கு ஏதாவது ஆனால் நான் பொறுப்பல்ல :).
இன்று எம்ஜிஆர், சிவாஜி உயிரோடு இருந்து திரையுலகில் உச்சத்தில் இருந்திருந்தால்,
அவர்கள் நடித்த படங்களுக்கும் இதே போன்ற விமர்சனத்தை ஜெயமோகன் எழுதியிருப்பார்.
உலகம் சுற்றும் வாலிபன் உலகின் மிகச் சிறந்த அறிபுனை கதைப் படங்களில் ஒன்றாகவும்,
உலக நாடுகள் குறித்த தமிழனின் புரிதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற படமாகவும்
அவரால் கண்டறியப்பட்டிருக்கும்.

Labels: , , ,

கேயோஸ் கோட்பாடும், கேரளாவும்: சாரு நிவேதிதாவின் ஜல்லியடி

கேயோஸ் கோட்பாடும், கேரளாவும்: சாரு நிவேதிதாவின் ஜல்லியடி

கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் துவக்கத்தில் ரேய் பிராட்பரியின் A Sound of Thunder லிருந்து ஒரு பகுதியைக் கொடுத்திருக்கும் சாரு நிவேதிதா கடிதத்தின் முடிவில் எழுதுகிறார்

”கேயாஸ் தியரி என்பது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? புகழ் பெற்ற ஜுராஸிக் பார்க் படம் கூட அந்தத் தியரியின் அடிப்படையில் எடுக்கப் பட்டதுதான். அந்தத் தியரியின் படி ஆ · ப்ரிக்கக் காடு ஒன்றில் இருக்கும் வண்ணத்துப் பூச்சி தன் றெக்கையை அளவுக்கு அதிகமாகப் படபடத்தால் கேரளத்துக் கடலின் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும். அப்படி அதிகமாகும் போது அந்தப் பேரலைகளுக்கு அச்சுதானந்தன் யார் , சாரு நிவேதிதா யார் என்று வித்தியாசம் தெரியாது. எனவே நிலத்தையும் , நீரையும் , காற்றையும் , கடலையும் மாசு படுத்தாதீர்கள். விழித்துக் கொள்ளுங்கள் இப்போதாவது... ”

என்ன இழவு இது. ஆப்பிரிக்க காட்டில் இருக்கும் வண்ணத்து பூச்சி இறக்கையை அதிகமாக படபதற்கும், கேரளத்தில் நீர் மாசுபடுவதற்கும் என்ன தொடர்பு. கேயாஸ் கோட்பாட்டினை விளக்குவதற்காக சொல்லப்படும் ஒரு உதாரணத்தை அரையும் குறையுமாகப் புரிந்து கொண்டு இப்படி உளறியிருக்கிறார் சாரு. இவர் மேற்கோள் காட்டும் கதை ஒரு அறிவியல் புனைகதை, அதில் ஒரு உதாரணமாக சொல்லப்படுவது கோட்பாடாகாது. மேலும் இயற்கையில் மனித இனம் தோன்றும் முன் எத்தனையோ உயிரின வகைகள் முற்றிலுமாக அழிந்துள்ளன.மனித இனம் தோன்றிய பின் இயற்கைக் காரணிகளால் மனித செயல்களாலன்றி எத்தனை உயிரினங்கள் அழிந்துள்ளன என்பது நமக்குத் தெரியாது. பரிணாமத்தின் போக்கில் எத்தனையோ காரணங்களால் உயிரினங்கள் அழிவதும், பூமியில் மாறுதல் தோன்றுவதும், அது உயிரினங்களைப் பாதிப்பதும் ‘இயற்கை'. பரிணாம வளர்ச்சி என்பது சீரான ஒன்றல்ல. மேலும் டைனோசர்களின் அழிவும் அந்த நீண்ட பரிணாம நாடகத்தில் ஒரு சிறு காட்சிதான். டைனோசர்களின் அழிவு வேறு சிலவற்றை சாத்தியப்படுத்தியிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். அது போல் மானுடத்தின் அழிவும் சிலவற்றிற்கும் அடிகோலக் கூடும். பரிணாமத்தின் இறுதி இலட்சியம்/குறிக்கோள் என்னவென நமக்குத் தெரியுமா? அப்படி ஒன்று இருக்கத்தான் வேண்டுமா? நாளை மானுட இனமே பூண்டற்று முற்றிலுமாக அழிந்தாலும் அத்துடன் பரிணாமம் முற்றுப் பெற்றது என்று முடிவு கட்ட முடியாது.

கதை (A sound of Thunder)சில சாத்தியப்பாடுகளை குறிப்பிடுகிறது. ஆனால் ஒற்றை எலி - ஒற்றை நரி என்று இருப்பதில்லை. உலகில் ஒரு எலியை அழித்தால் எலிகளின் இனங்களே அழிந்து விடும் என்றில்லை. நரிக்கு வேறு ஏதேனும் ஒன்று இரையாக இருக்கலாம். அது போல் பரிணாம வளர்ச்சியில் எப்படி உயிரினங்கள் தோன்றி மறைகின்றன என்பதை ஒரு உயிரினத்தில் உள்ள ஒரு உயிரியைக் கொண்டு விளக்க/அளவிட முடியாது. ஒரு வலை எலிகள் முற்றிலுமாக அழிந்தாலும் கூட அதனால் பரிணாம வளர்ச்சி நின்றுவிட்டது என்று அர்த்தமில்லை. அதற்காக உயிரினங்களை, வகை வகையாக அழியுங்கள் என்று நான் சொல்லவில்லை. மாறாக உயிரினங்களை பாதுகாக்க, சுற்றுச்சூழல் மாசுபடுதலை தவிர்க்க கேயோஸ் கோட்பாடு சரியான, பொருத்தமான ஒன்றாக இங்கே இல்லை என்றுதான் சொல்கிறோம். ஆனால் இந்த எழுத்தாளருக்கு தனக்கு சில பெயர்கள் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி உளறிக் கொட்டியிருக்கிறார்.

இவர் கூறுவதன் அடிப்படையில் பார்த்தால் பிரச்சினைக்கு மூல காரணம் ஆப்பிரிக்க காட்டில் உள்ள வண்ணத்து பூச்சி இறக்கையை அளவுக்கு அதிகமாக படபடப்பது, அதற்கு அச்சுதானந்தன் என்ன செய்ய முடியும். தன் நண்பர்கள் மூலம் சாரு வேண்டுமானால் ஏதாவது செய்யலாம் :). தன்னை 'மிகவும் reclusive- ஆன இயல்பு கொண்ட நான்' என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் சாரு 'நான் எழுதிக் கொண்டிருக்கும் பட்டறையை விட்டு வெளியே வருவது எனக்கு அத்தனையொன்றும் உவப்பானதல்ல' என்று எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு முதலமைச்சர் அப்படிச் சொல்லிவிட முடியாது. சாருவுக்கு கேரளத்தில் தன் ‘புகழை' பரப்ப மக்களுக்காக குரல் கொடுத்தேன் என்று காட்டிக் கொள்வது உதவும். அதற்காக அவர் செய்த ஸ்டண்ட்தான் இந்தக் கடிதம். நேரில் பார்த்து ஏதோ நாலு பேரிடம் கேட்டு எழுதியிருப்பதால் அவருக்கு கொஞ்ச விபரங்கள் இந்தப் பிரச்சினைகள் பற்றித் தெரிந்திருக்கிறது. அவ்வளவுதான்.

Labels: , , ,

தசாவதாரம் - என்னுடைய 2 செண்ட்கள்

தசாவதாரம் - என்னுடைய 2 செண்ட்கள்

1) தொழில்னுட்ப ரீதியாக தமிழ் திரைப்படங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சி, ஆனால் கதையில் உள்ள கோளாறுகளால், கதையை சொல்லும் முறையில் உள்ள சொதப்பல்களால் இதில் முழுப்பலன் கிட்டவில்லை. இருப்பினும்
தொழில் நுட்பம்தான் திரைக்கதையின் குறைகளை மீறி படத்தைக் காப்பாறுகிறது.
2) கமலஹாசன் படத்திற்க்காக ஒப்பனைக்கு எடுத்து கொண்ட நேரத்தினைக் கூட ஒரு செறிவான திரைக்கதையை உருவாக்க செலவிட்டு முயற்சி செய்யவில்லை என்று தோன்றுகிறது.
3) இறை நம்பிக்கையா, மறுப்பா, பொலிட்டிக்கலி கரெக்கட்டாக எதையெல்லாம் எப்படி சொல்வது என்பதில் படத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள், விளைவு chaos theory ஐ பொருத்தமன்றி சுட்டிக்காட்டுவது போன்றவற்றில் முடிகிறது.,
4) கமல் சில வேடங்களில் அசத்துகிறார், சிலவற்றில் மேக்கப் பொருந்தவில்லை, அந்த கதாபாத்திரங்கள் கதைக்கு தேவையே இல்லாமல் திணிக்கப்பட்டுள்ளன என்றே கருதலாம். உ-ம் கலிபுல்லான கான்,அவதார் சிங்
5) ஒரு அறிவியல் புனைவுகதையை மையமாகக் கொண்டு அதை வளர்த்தெடுத்து வித்தியசமான திரைக்கதை மூலம், தொழில் நுட்ப உதவியுடன் புதிய உயரங்களை எட்டியிருக்கலாம். அதை செய்யத்தவறியிருக்கிறார்கள்.
6) படத்தில் ஏகப்பட்ட ஒட்டைகள், காதில் மாலைகளாக சுற்றுகிறார்கள், கால, இடக்குழப்பங்கள் ஏராளம்.திரைக்கதையில் வலுவில்லாததால் இவை தெளிவாக தெரிகின்றன. கமலும் அசினும் ஒடி கொண்டே இருக்கிறார்கள், வில்லன் துரத்திக் கொண்டேயிருக்கிறார், இந்த துரத்தல்-ஒட்டம் எரிச்சலூட்டும் வகையில் பல இடங்களில் இருக்கிறது.
7) படத்தில் கமல் நடிக்கும் பாத்திரங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதால், பிற பாத்திரங்கள் ஏதோ போனால் போகட்டும் என்று சேர்க்கப்பட்டுள்ளவை போல் இருக்கின்றன. அப்படியிருந்தும் நம்பி என்கிற பாத்திரம் எதிலும் ஒட்டவில்லை, படத்தில் அதன்
பொருத்தப்பாடு என்ன என்றே தெரியவில்லை.
8) வசனம் பல இடங்களில் மைக்கேல், மதன, காமராசனை நினைவுபடுத்துக்கிறது.அசின் கதாபாத்திரமும், வசனமும் பொருந்தவே இல்லை. ஒரு விபத்திற்கு அந்த கதாபாத்திரம் காரணமாகிறது, ஆனால் அது குறித்த வருத்தம் அந்தப் பாத்திரத்தின் நடத்தை, வசனத்தில்
வெளிப்படவே இல்லை.சில இடங்களில் அரை லூஸா என்று சந்தேகப்படும் வகையில் அந்தப் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.சுனாமியையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
9) அதிபுத்திசாலித்தனமாக, பிரம்மாண்டமாக செய்கிறோம் என்று நினைத்து அரைவேக்காடாக முடிந்து விட்ட முயற்சி இது.
10) ஒருமுறை பார்க்கலாம், இரண்டாவது முறை சில காட்சிகளை (கலைஞர் டிவியில்?)

Labels: ,

ராஜன் குறை, அ.மார்க்ஸ் - இரு கட்டுரைகள்

ராஜன் குறை, அ.மார்க்ஸ் - இரு கட்டுரைகள்

ராஜன் குறை சத்திய கடுதாசியில் எழுதியதும், அதற்கு எதிர்வினையாக அ.மார்க்ஸ் தீராநதியில் எழுதியதும் இங்கு தகவலுக்காகவும், ஆவணப்படுத்தப்பவும் இடப்படுகிறது. இந்த இரண்டும் குறித்து எனக்கு கருத்துக்கள் உண்டு , எனினும் அதை இங்கு இப்போது இடப்போவதில்லை.அதற்காக பின்னர் கட்டாயம் இடப்படும் என்றும் அர்த்தமில்லை :)

.


முதலீட்டியத்தின் எரிபொருள் கனவுக் காலம் - ராஜன் குறை

‘மொழிபெயர்ப்பில் தொலைந்தவை’ என்ற சொற்றொடர் ஆங்கிலத்தில் புழங்குகிறது. ‘மொழிபெயர்ப்பில் தடம் மாறியவை’ என பட்டியல் போட்டால்
அதில் காபிடலிஸத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான முதலாளித்துவத்திற்கு முக்கிய இடம் கொடுக்கவேண்டும். இது காபிடலிஸ எதிர்ப்பை முதலாளி – தொழிலாளி முரண்பாடாக சுருக்குவதை சுலபமாக்கியது. வெகுஜன சிந்தனையில் முதலாளியல்ல, முதலீட்டியமே பிரச்சனை என்ற எண்ணம் எழவே வாய்ப்பில்லாமல் போனதால் அரசு முதலீட்டியம் போன்ற கருத்தாக்கங்கள் வெகுஜன பிரக்ஞையில் தமிழில் பரவலாக கவனம் பெறவில்லை, சோவியத்
யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகும் கூட.

மேற்கு வங்காளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி “முதலீடு, முதலீடு” என்று கதறுவதும் நிலங்களை தொழிற்சாலைகளுக்கு தரமறுக்கும் விவசாயிகளை கொன்று தீர்ப்பதும் “என்ன கொடுமை சார் இது” என்று பலரையும் சொல்ல வைத்துள்ளது. ஆனால் முதலீடு இல்லாமல் வளர்ச்சியும் வரலாறும் இல்லை என்று புத்ததேவ் ஏன் கூறுகிறார் என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

நினைவிலிருந்து: ‘அவன்தான் மனிதன்’ (என்று நினைக்கிறேன்) திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். வி.கே.ராமசாமி கையில் சிவப்பான திரவத்துடன் சோபாவில் அமர்ந்திருப்பார். வெளியே தொழிலாளர்கள் “தொழிலாளர்கள் ரத்தத்தை உறிஞ்சாதே!” என கோஷம் போடுவார்கள். அவர்களையும், விகேயாரையும் மாறி மாறிப் பார்க்கும் சுருளி(?) ஓடிச்சென்று விகேயாரின் காலில் விழுந்து “வேண்டாம் முதலாளி, தொழிலாளர்கள் ரத்தத்தை
உறிஞ்சாதீர்கள்” என கெஞ்சுவார். விகேயார் “இது தக்காளி ஜூஸ்டா” என்று அவருக்கேயுரிய விதத்தில் சொல்வார்.இது போன்ற தொழிலாளர் பிரச்சினைகளை கொச்சைப்படுத்தும் காட்சிகளை ரசிப்பதா? இதுதான் பின் நவீனத்துவம் (!) என்று யாரும் கோபிக்கலாம்.

ஆனால் முதலீட்டியத்தையும், தொழிலாளி வர்க்கம் அதை கடந்து செல்வதையும் வரலாற்றின் கதியாக அல்லது விதியாக மார்க்ஸீயம் கூறியது. இது தொழிற்சங்க வாதத்தில் கூலிப்பிரச்சினையாக கொச்சைப்பட்டதை எப்படி எதிர்கொள்வது என்பதே எனது பிரச்சினை.
தொழிற்சங்கங்கள் சாத்தியப்படுத்திய கெளவரமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை மறுப்பதல்ல. வரலாற்றில் தொழிற்சங்கவாத்தின் எல்லைகளை சிந்திப்பது தத்துவத்தின் தேவை. (சிகாகோவின் தெருக்களிலே இன்னுயிரீத்த தியாகிகளே! உங்களுக்கெங்கள் வீர வணக்கம்! வீர வணக்கம்!)இருபதாம் நூற்றாண்டில் முதலீட்டியம் சர்வ வியாபக சக்தியாக மாறியதற்கு நிலத்தடி எரிபொருள் பயன்பாடே முக்கியக் காரணம். நிலக்கரி மற்றும் பெட்ரோலே மனிதர்களும் பொருட்களும் முன்னெக்காலத்திலும் நினைத்துப் பார்க்க முடிந்திராத அளவு பயணப்பட காரணம் என்பது மட்டுமன்றி பண்டங்களின் உற்பத்தியும் நுகர்வும் மனித வாழ்வை முற்றிலும் மாற்றி அமைத்தற்கும் அடிப்படை (உதாரணம் பிளாஸ்டிக்). இதற்கு சிகரமாக அமைந்தது மின்சாரம். அனைத்தும் சேர்த்துப்பார்த்தால் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளை எரிபொருள் கனவுக்காலம் என்று கூறலாம். ஏன் கனவு? அது யதார்த்தம்தானே? யதார்த்தம்தான். ஆனால் சுவடின்றி காணாமல் போகக்கூடிய ஒன்று கனவு போலத் தோன்றுமல்லவா?

நிலத்தடி எரிபொருட்கள் பல்லாயிரமாண்டுகளில் சேகரமானவை. அவற்றை நூறாண்டுகளில் தோண்டியெடுத்து புஸ்வாணம் விட்டால் பிறகு ஆற்றலுக்கு எங்கே போவது? சென்னை ஆசியாவின் டெட்ரய்டாக மாறப்போகிறது. பல்லாயிரக்கணக்கான கார்கள் உற்பத்தியாகி உலகெங்கும் ஓடப்போகின்றன. பெட்ரோல் முப்பது அல்லது அய்ம்பது ஆண்டுகளில் தீர்ந்துவிட்டால் கார்கள் எப்படி ஓடும்? விமானங்கள் எப்படி பறக்கும்? ஆமணக்கு விதை அல்லது “ராமர்பிள்ளை மூலிகை” எதையாவது பல்லாயிரம் ஏக்கர்களில் பயிரிட்டால் அதற்கு நிலவளம் இடம் கொடுக்குமா? உயிர்ப்பொருள் எரிசக்தி என்பதும் நிலத்திலிருந்துதானே வரவேண்டும்? அகழ்வாரைத்தாங்கும் நிலம் எரிசக்தியை அள்ள அள்ளத் தரும் அட்சய பாத்திரமா? அடுத்த சாத்தியம் அணுசக்தி. கார்களும், விமானங்களும், ரயில்களும் அணுசக்தியில் ஓடும் காலத்தை நினைத்தால் அடிவயிற்றில் குளிர்கிறது. முதல்
முறையாக என்னை பத்தாம்பசலியாகவும், பிற்போக்குவாதியாகவும் உணர்கிறேன். அவ்விதமான அணுவாகனங்களில் உருவாகும் கழிவுகளை பிரத்யேகமாக
தயார் செய்யப்படும் இரும்புப்பெட்டிகளிலிட்டு கடலுக்கடியில் போட்டுவிடலாம் என பரிந்துரை செய்யும் கட்டுரை ஒன்றை படித்தேன். மானுடம் வரலாற்றை நிகழ்த்தும் மாண்பினை நினைத்தால் புல்லரிக்கிறது. ஈங்குள பிறவற்றுடன் தன்னையும் சேர்த்து மானுடம் அழித்ததம்மா என்றெழுத புலவர்கள் இருக்கமாட்டர்கள் என்பதால் முதலிலேயே எழுதிவிடலாம்.

அறிவியல்வாதிகள் இயற்கை புதிய ஆற்றல் வடிவங்களை காட்டித்தரும் என நம்பலாம். வரலாற்றுவாதிகள் மானுட ஆற்றல் புதிய சாத்தியங்களை கண்டடையும் என நம்பலாம். இதெல்லாம் ஏதோ இறைநம்பிக்கை போலத் தோன்றுகிறதே தவிர, தர்க்கபலம் கொண்ட வாதமாக எனக்கு படவில்லை. காரணம் முதலீட்டியம் மனிதனின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் செயல்படுவதாகத் தோன்றவில்லை. குதிரைக்கு முன்னால்
புல்லைத்தொங்கவிட்டு அதை ஓடவைப்பதைப்போல, வெற்றுக்குறியான பணத்தை மனிதனுக்கு முன்னால் தொங்கவிட்டு கண்டதையும் உற்பத்தி செய்து நுகரவிடுவதில் என்ன பெரிய விடுதலையோ, வெங்காயமோ இருக்கிறது எனத்தெரியவில்லை. முதலீட்டிய பேய்க்கு வாழ்க்கைப்படாவிட்டால் எந்த சமூக மாற்றமும், சமத்துவமும் சாத்தியமில்லை என்று நினைப்பது உண்மை வரலாற்றுப் பார்வையற்ற வரலாற்றுவாத மூடநம்பிக்கை. முதலீட்டியம் என்பது மனிதன் இயற்கையை வெல்லும் கதையல்ல. இயற்கையென்றால் என்னவென்று தெரிய ஒரு சுனாமி அல்லது காத்ரீனா போதும். இயற்கையின் முன்னால் மனிதன் இன்றும் ஒரு அற்பப் பூச்சிதான். முதலீட்டியத்தின் கதை மனிதனை பண்டங்களுக்கும், நுகர்வுக்கும் அடிமையாக்கிய கதை.

இந்த எரிபொருள் கனவுக்காலத்தின் இன்னொரு பிரச்சினை புவி வெப்பமடைதல், ஓசோனில் ஓட்டை, கடல் நீர் மட்டம் அதிகரிப்பு போன்றவை. இவற்றைக் கூறுவதும் அறிவியலாளர்கள்தாம். இவற்றை அறிவியல் பிரச்சினையாக பார்ப்பது தவறு, அரசியல்-அறிவியல் இணைந்த பிரச்சினையாக பார்க்கவேண்டும் என புரூனோ லதூர் (Bruno Latour) வலியுறுத்தி வருகிறார். இன்று ஹெகலும் மார்க்ஸும் இருந்திருந்தால் எப்படி அவர்கள் தத்துவத்தில் இப்பிரச்சினையை அணுகுவார்கள் என யோசிக்கத் தோன்றுகிறது. மானுட கூட்டு சக்தி தேசிய அரசுகளாகவோ (ஹெகல்), பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகவோ (மார்க்ஸ்) பரிணமித்து, இயற்கையை கட்டுப்படுத்தி வரலாற்றை நிறைவு செய்யும் என கருதினார்கள். இன்றைய நிலையில் முதலீட்டியம் என்ற கபந்த பூதமே வரலாற்றை கையெலெடுத்துக்கொண்டு தலைதெறிக்க ஒடுவதாகப்படுகிறது. அதனிடமிருந்து வரலாற்றை மானுட கூட்டு அரசியல் சக்தி எப்படி கைப்பற்ற முடியும் எனத் தெரியவில்லை. இவ்வாறு
யோசிப்பது மார்க்ஸீயமா, பின் நவீனத்துவமா, அல்லது இரண்டுமா எனபது நிச்சயமாகப் புரியவில்லை. இசங்களென்று பெயரிடுவதே தத்துவத்தை கூண்டிலடைக்கும் முயற்சிதானே.

பின் குறிப்பு: இது ‘சத்தியக் கடுதாசி’ என்பதால் அடிக்குறிப்பு, சான்றாதாரங்கள் எதுவும் போடவில்லை. கூகிள் செய்தால் இக்கருத்துக்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நிறைய தகவல்கள் கிடைக்கும். தமிழில் ஏற்கனவே இக்கட்டுரையின் பொருள் தொடர்பாக எனது நண்பர்களும், வழிகாட்டிகளும் பதிவு செய்துள்ளவற்றை குறிப்பிட வேண்டும். ஆனால் என்னிடம் பிரதிகள் கைவசம் இல்லை என்பதுடன் விரிவஞ்சியும் பெயர்களைத் தவிர்த்துள்ளேன்.

என்னுடன் தினசரி விவாதித்து வரும் ரவீந்திரனுக்கும், மோனிகாவிற்கும் அவர்களது கருத்துக்களுக்காகவும், தகவல்களுக்காகவும் நன்றி தெரிவிப்பது முறை. கட்டுரையின் கூற்றுகள் மற்றும் பிழைகள் என் பொறுப்பு.
---------------------------------------------------------------------------------

பின்னோக்கி செல்லுதல் தகுமா - அ, மார்க்ஸ்
தீராநதி - ஜுன் 2008

நண்பர் ராஜன் குறை தமிழ்ச் சூழலில் முக்கிய சில சிந்தனை உசுப்பல்களுக்குக் காரணமானவர். அவரது தெறிப்பான சிந்தனைகளால் பயனடைந்தவர்களில் நான் முதன்மையானவன். சமீபத்தில் ஷோபா சக்தியின் `சத்தியக் கடதாசி' வலைத்தளத்தில் அவரது கட்டுரை ஒன்றை வாசித்தேன். `முதலீட்டியத்தின் எரிபொருள் கனவுக் காலம்' என்பது தலைப்பு (WWW.satiyakadathasi.com). உலகம் இன்று எதிர்நோக்கியுள்ள ஆகப் பெரிய நெருக்கடியான படிம எரிபொருள் தீரும் நிலை, அதன் விளைவுகளில் ஒன்றாக இன்று நாம் எதிர் கொண்டுள்ள உணவுப் பஞ்சம், விலைவாசி ஏற்றம் குறித்த ஒரு மிகப் பெரிய
எச்சரிக்கை மணியை ஒலித்திருக்கிறார் ராஜன்.

சென்ற முறை சென்னை வந்திருந்தபோது, என்னைச் சந்திக்க வாய்த்த போதெல்லாம் அவர் இதைத்தான் பேசிக் கொண்டிருந்தார். உலகம் வெப்பமடைதல், ஓசோன் படலத்தில் துளை விழுதல் ஆகியவற்றின் விளைவுகள் குறித்து மனிதர்கள் உரிய கவலை கொள்ளாதிருத்தல் குறித்து மிகவும் விசனப்பட்டார். இன்னும் முப்பதாண்டுகளில் மனிதர்க்கு இதைத் தவிர வேறு எந்தச் சமூக முரண்கள் குறித்தும் நினைப்பதற்கே நேரமிருக்காது என்று கூட ஒரு
சந்தர்ப்பத்தில் சொன்னார். இந்தச் சிந்தனைகளின் தொடர்ச்சியாகவே மேலே குறிப்பிட்ட கட்டுரையை எழுதியுள்ளார்.

முதலாளியத்தின் தீய விளைவு முதலாளி தொழிலாளியைச் சுரண்டுதல் என்கிற அம்சத்தில் மட்டுமே இங்கு எதிர்கொள்ளப்பட்டது. மாறாக, அதன் முதலீட்டுத் தன்மை என்பதே (investment Pattern) இயற்கை வளங்களை அபரிமிதமாக உறிஞ்சுவதாக இருந்தது குறித்த கவலையை முதலாளிய எதிர்ப்பாளர்கள் அதற்குரிய முக்கியத்துவத்துடன் கண்டு கொள்ளவில்லை. ராஜன் குறையின் இக்குற்றச்சாட்டு முக்கியமான ஒன்று. இது குறித்து சோசலிசக் கட்டுமானங்களின் வீழ்ச்சியை ஒட்டி இங்கே விரிவாகப் பேசப்பட்டது (பார்க்க: எனது `மார்க்சியத்தின் பெயரால்') உற்பத்தியைச் சமூக உடைமையாக்கினால் போதும்,முதலாளிய வடிவங்களை அப்படியே வைத்துக்கொள்வதால் பெரிய ஆபத்துகள் வந்து விடாது என்பதே லெனின், ஸ்டாலின் மற்றும் அவர்களை அப்படியே பின்பற்றிய உலக கம்யூனிஸ்டுகளின் கருத்தாக இருந்தது.`சோவியத்து முதலாளிய வடிவங்கள் சோசலிஸம்' என்று அவர்கள் நம்பினர். முதலீட்டு வடிவத்தில் மட்டுமின்றி கல்விமுறை,மருத்துவம்,குடும்ப அமைப்பு என எல்லாவற்றிலும் முதலாளியத்தை அப்படியே எடுத்துக் கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை. விளைவுகள் நாம் அறிந்ததே.

இன்று சோசலிசக் கட்டுமான முயற்சிகள் தோல்வியடைந்தது இன்னொரு பக்கம் முதலாளியம் வெற்றியடைந்ததாகக் கருதப்படும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இது முதலாளிய - அல்லது ராஜனின் மொழியில் சொல்வதானால் `முதலீட்டியத்தின்' ஆபத்தை இரட்டிப்பாக்கியுள்ளது. மிகப் பெரிய அளவில் இன்று உலக முதலாளியம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. 1930களில் சந்தித்த நெருக்கடியிலிருந்து அது மீண்டது போல இன்று சாத்தியமா எனத் தெரியவில்லை. பணவீக்கம் இன்று வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது இந்தியாவில்
பணவீக்கம் 7.83 சதம், சமீப காலத்தின் மிக அதிக அளவு எனப் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. கடந்த சில மாதங்களில் உணவுப் பொருட்களின் விலை 25 முதல் 75 சதம் அதிகரித்துள்ளது. உலகமயச் செயற்பாடுகளின் விளைவாக, இந்திய அரசிடம் உள்ள கோதுமைக் கையிருப்பு கடந்த பல ஆண்டுகளிலேயே ஆகக் குறைவாக உள்ளது. சென்ற ஆண்டைப் போல இறக்குமதி செய்யவும் வழியில்லை. ஏனெனில், 90 சதம் விலை அதிகம் கொடுத்து வாங்கியாக வேண்டும். `பாரல்' என்று வெறும் பத்து டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இன்று 325 டாலராக ஏறியுள்ளது.இந்தப் பணவீக்கமும் கூடச் சரியாகக் கணக்கிடப்படவில்லை எனத் தொழிற்சங்கத்தினரும் எதிர்க் கட்சியும் குற்றம் சாட்டுகின்றனர். பணவீக்கத்தைக் கணக்கிடும்போது சில்லறை விலையைக் கணக்கில் கொள்ளாமல் மொத்த விலையை எடுத்துக் கொள்கின்றனர் எனவும், உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைப் பொருட்கள் ஆகியவற்றின் விலைக்கு உரிய பங்களிப்பதில்லை என்றும், இன்று நமது வாழ்க்கை முறையிலிருந்து பிரிக்க இயலாமற்போன சேவைத் (Service) துறை சார்ந்த தேவைகள் (கல்வி, மருத்துவம், `இன்டர்நெட்' தொடர்பு உட்பட) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டால் பணவீக்கம் இரண்டு இலக்கத்தைத் தாண்டும்.

எனது வயதொத்தவர்களுக்கு நினைவிருக்கலாம். 1970களில் இதுபோன்ற நெருக்கடியை, விலைவாசி ஏற்றத்தை உலகம் சந்தித்தது. எண்ணெய் விலை (Crude Oil) ஏறியது. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால், அன்று பிரேசில் முதலான பல பகுதிகளில் புதிதாக எண்ணெய் ஊற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. புதிய விளைநிலங்கள், நீர் வசதி உருவாக்கப்பட்டன. இவற்றின் மூலம் அந்த நெருக்கடியை நாம் எதிர்கொண்டோம். இன்று அது சாத்தியமா? இன்னும் தோண்டி எடுப்பதற்கு இயற்கை வளங்கள் அகப்படுமா? கிணறுகள் தோண்ட இடமிருக்குமா? அணைகள் கட்ட ஆறுகள் உள்ளனவா? கடந்த எட்டு லட்சம் ஆண்டுகளில் காணாத அளவிற்கு அதிகமாக பசுமை இல்லை. வாயுக்கள் இன்று வெளியேற்றப்படுகின்றன. கரியமிலவாயு 28 சதம், மீதேன் 124 சதம் அதிகரித்துள்ளது. ஓசோன் படலத்தில் துளை, உலகப் பந்து வெப்ப மடைதல்,ஆர்டிக் பகுதிகளில் பனிப்படலம் உருகுதல் என்பதான ஆபத்துக்களை நாம் உடனடியாக எதிர்கொண்டுள்ளோம்.2050-ல் இந்தப் பனிப்படலம் முற்றிலுமாய் உருகிவிடும் என்கிறார்கள். இவற்றால் விளையும் பருவநிலை மாற்றம் ஏற்கெனவே பல விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. விவசாய உற்பத்தி வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். இந்தக் கோடையில் பெய்த மழை தமிழகத்தில் உளுந்து முதலான பருப்பு உற்பத்தியைப் பெரிய அளவில் பாதித்துள்ளதை விளக்க வேண்டியதில்லை. ஆனால் முதலாளியமோ, இதுகுறித்து எந்தக் கவலையும் படவில்லை. பனிப்படலம் உருகினால் கீழை நாடுகளுக்கு சூயஸ் கால்வாய் வழியாகச் சுற்றிக்கொண்டு வரவேண்டியதில்லை. சில ஆயிரம் மைல்கள் மிச்சமாகும் என அது கணக்கிட்டுக் கொண்டுள்ளது. பனிப்படலம் உருகிய பின் தோண்டி எடுக்கப்படக்கூடிய கனிவளங்களுக்கு யார் உரிமை கோரலாம் என்கிற போட்டி தொடங்கிவிட்டது.

உடனடி எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு நெருக்கடியின் காரணங்களை மட்டும் தொகுத்துக்கொள்வோம். 2050 வாக்கில் உலக மக்கள் தொகை 9 பில்லியனாகும் (இன்று 6.4 மில்லியன்). எனவே உணவு உற்பத்தி இரண்டு மடங்காக வேண்டும். ஏனெனில், இதுகாறும் குறைந்த அளவே உணவை உண்டு கொண்டிருந்த மக்கட் பிரிவினர் இனி அதிகம் நுகரக்கூடிய நிலை ஏற்படும். இன்றைய உணவு நெருக்கடிக்குக் காரணம் சீன, இந்திய மத்திய தர
வர்க்கத்தினர் அதிகம் தானியங்களைச் சாப்பிடத் தொடங்கியதுதான் என புஷ்ஷும் கான்டலீசா ரைசும் கூறியுள்ளது இங்கே கடுமையான எதிர்ப்பலைகளை உருவாக்கியதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் கூற்றில் உண்மை இல்லாமலில்லை. இவ்விரு நாடுகளிலும் பொருளாதார உற்பத்தி வீதம் அதிகரிப்பது,இங்குள்ள மத்திய தர வர்க்கத்தின் வருவாயை அதிகரித்துள்ளது.அவர்களின் நுகர்வுத்தன்மை இதனால் வேறுபட்டுள்ளது.தானியங்களைக் குறைத்துக்கொண்டு, காய்கறி, பழங்கள், பால் பொருட்கள், கோழி மற்றும் மாமிசம் முதலானவற்றை அதிகம் உண்ணும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. 100 கலோரி சத்துள்ள இறைச்சியை உருவாக்குவதற்கு 700 கலோரி மதிப்புள்ள தாவர உணவை ஆடு, மாடுகட்குச் சாப்பிடக் கொடுக்கவேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.

இன்றளவும் நமது நாட்டின் சராசரி உணவு நுகர்வு அமெரிக்கர்களின் வீட்டு வளர்ப்பு நாய்கள் சாப்பிடுவதைக் காட்டிலும் கூடக் குறைவு என்பது உண்மைதான். புஷ் மற்றும் காண்டியின் கூற்று பிரச்சினையைத் திசை திருப்புவதுதான். ஆனாலும்கூட இங்குள்ள கடுமையான ஏற்றத்தாழ்வுகள், பெருத்துள்ள மத்திய தர வர்க்கம், உலக மக்கள் தொகையில் 40 சதம் இவ்விரு நாடுகளிலும் குவிந்திருத்தல் ஆகியவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக்
கொண்டு பார்த்தால் இதன்மூலம் உருவாகியுள்ள நுகர்வு அதிகரிப்பை நாம் விளங்கிக்கொள்ள இயலும். அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதில் உலக முதலாளியம் எத்தகைய நேர்மையற்ற போக்கைக் கைக்கொள்கிறதோ,அதே போக்கின் வெளிப்பாடுதான் புஷ்ஷின் கூற்றும். அதாவது, நாங்கள் அணு ஆயுதங்களைச் செய்து குவித்தாயிற்று. இனி புதிதாய் யாரும் இதில் நுழையக்கூடாது. உணவு நுகர்வு, பசுமை இல்ல வாயு வெறுயேற்றம் ஆகியவற்றிலும்கூட முதலாளியத்தின் அணுகல் முறை இதுதான்.

உணவு நெருக்கடியின் காரணங்களுக்குத் திரும்புவோம்.மூன்றாவது காரணம், விவசாய உற்பத்தி உணவுக்குப் பதிலாக இயற்கை எரிபொருளை (Bio Fuels) நோக்கித் திருப்பப்படுவது. சோளம், எண்ணெய் விதைகள், கரும்பு எல்லாம் இனி எத்தனால் (Ethanol)தயாரிப்பை நோக்கித் திருப்பப்படுவது தொடங்கியாயிற்று. 2020 வாக்கில் சுமார் 400 மில்லியன் டன் தானியம் (கிட்டத்தட்ட மொத்த அரிசி உற்பத்தி அளவு) இவ்வாறு எரிபொருளாக மாற்றப்படும். சில ஆண்டுகட்கு முன்பு நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களால், படிம எரிபொருளிலிருந்து வெளியேறும் ஆபத்தான வாயுக்களிலிருந்து
பாதுகாக்கும் ஆபத்பாந்தவனாக முன்னிறுத்தப்பட்ட தாவர எரிபொருள் இன்று உணவுப் பஞ்சத்திற்குக் காரணமாக எல்லோராலும் கரித்துக் கொட்டப்படுகிறது.அமேஸான் மழைக் காடுகளெல்லாம் இதனால் அழியப் போகின்றன என்கிறார்கள். உணவுக் கலவரம் முதல் விலைவாசி ஏற்றம் வரை பேசுகிற எல்லோரிடமும் வாங்கிக் கட்டிக்கொள்வது இந்த `பயோ ஃப்யூயல்' உற்பத்திதான். இதிலும் ஒரு அரசியல் இருக்கத்தான் செய்கிறது. எண்ணெய் விலை அதிகரிப்பின் பின்னுள்ள நலன்கள், விலைவாசி ஏற்றத்தில் ஊக வணிகத்தின் பங்கு எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளும் நோக்கமும் இதன்

பின்னே உள்ளது. `எத்தனால்' தயாரிப்பிற்கான பயிர்செய்கையால் அமேஸான் காடுகள் அழிந்துவிடும் என்பதெல்லாம் ரொம்ப `ஓவரான' கற்பனையாகத்தான் தெரிகிறது.உணவு நெருக்கடியின் இன்னொரு காரணம் பருவநிலை மாற்றம். இதுகுறித்து முன்பே பார்த்தோம்.

சரி...இன்றைய இந்த நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி? பின்னோக்கிச் செல்வதா?ராஜன் குறை இதுகுறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது நடந்ததாக ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். ஒரு நண்பர் எழுந்து சென்று அறையிலிருந்த விளக்கை அணைத்தாராம். இரண்டு மணி நேரங்களுக்குப் பின் வாதத்தைத் தொடரலாம் என்றாராம். தொடர்ந்தபோது `பின்னோக்கிச் செல்லுதல் சாத்தியமா?' எனக் கேட்டதாக அறிந்தேன். பிரச்சினையை அவ்வளவு எளிமையாகப் பார்க்கவேண்டாம். எனது சிறிய வயதில் மின்சாரமே இல்லாத ஒரு கிராமத்தில் நான் இரண்டாண்டுகள்இருந்துள்ளேன்.அப்போது அதை நான் உணரவேயில்லை. மின்சார சாதனங்களை நம்பியே ஒரு நகரத்தை,இப்படியான ஒரு அடுக்குமாடிக்கட்டடத்தைக் கட்டிவிட்டு மின்சாரமில்லாமல் வாழ்வதெப்படி என்கிற கேள்வி எப்படிச் சரியாகும் என்கிற ரீதியில் ராஜன் பதில் சொல்லியுள்ளார்.

அப்படித்தானே சொல்லியாக வேண்டும்.பின்னோக்கிச் செல்வதா இல்லையா, பின்னோக்கிச் செல்வதெனில் அது எப்படி அமையவேண்டும்? இன்றைய உற்பத்தி மற்றும் நுகர்வுக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுமானங்களையும் தகர்த்துவிடுவதா? முதலீட்டியமோ, இல்லை முதலாளியமோ அவை வெறுமனே முதலீடு, உற்பத்தி இவை தொடர்பான உறவுகள் ஆகியவை மட்டும்தானா?முதலாளியம் செம்மைப்படுத்திய சமூக உறவுகள்,உருவாக்கிய
ஜனநாயகச் சிந்தனைகள் எல்லாவற்றிலிருந்துமே பின்னோக்கிச் சென்றுவிடுவதா? நிச்சயம் ராஜன் குறை இத்தகைய கருத்துடையவரல்ல என்பதை அறிவேன். பின்னோக்கிச் செல்வது எதுவரை, எந்தெந்த அம்சங்களில் என்பதெல்லாம் ரொம்பவும் ஆழமாகவும் அற அடிப்படையிலும் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்களாக உள்ளன என்பது மட்டும் புரிகிறது.

அறிவியலைப் (science) பொறுத்தமட்டில் அது பின்னோக்கிச் செல்வதை ஏற்காது. இயற்பியலின் மிக நவீனமான கோட்பாடாகிய string Field theoryயை முன்வைத்தவர்களில் ஒருவரும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியருமான மிசியோ காகுவின் பேட்டி ஒன்றைச் சமீபத்தில் படிக்க நேரிட்டது. ``கண்டுபிடிப்புகளின் காலத்திலிருந்து (Age of Discovery) நாம் வெற்றிகொள்ளும் காலத்திற்கு (Age of Mastery) மாறிக்கொண்டிருக்கிறோம்''

என்கிறார் அவர். இயற்கையின் நடனத்தை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும் நிலையிலிருந்து இயக்குபவர் (Choreographer) என்கிற நிலைக்கு நாம் வளர்ந்துள்ளோம். உயிர் தொடர்பான டி.என்.ஏ. அணுகல்முறை, பொருண்மை பற்றிய அணுக்கோட்பாடு, மூளையின் இயக்கத்தை தர்க்க மின் சுற்றுகளாகப் புரிந்துகொள்ள வைக்கும் கணினித் தொழில்நுட்பம் முதலியன இயற்கையில் நாம் இடையீடு செய்து அதைத் தகவலமைக்கச் சாத்தியமானவை என்கிறார் பேராசிரியர் காகு.எரிபொருள் நெருக்கடியைப் பொறுத்தமட்டில் இன்னும் 15 ஆண்டுகளில் எண்ணெய் விலை கடுமையாக அதிகரிக்கும். அதே நேரத்தில் சூரிய ஹைட்ரஜனின் விலை மிகவும் குறைந்து இரு வரைபடங்களும் ஒரு புள்ளயில் சந்திக்கும். இயற்கையை மாசுபடுத்தாத, வற்றாத எரிபொருள் இதன்மூலம் உருவாகும். அணு ஆற்றலை எடுத்துக்கொண்டால், அணுவை உடைத்து ஆற்றலை உருவாக்கும் இன்றைய `பிளவை' (Fission) முறைதான் ஆபத்தானது; கதிர்வீச்சு ஆபத்துடையது; இன்னும் 30 ஆண்டுகளில் உருவாகவுள்ள அணுக்கருக்களை இணைத்து ஆற்றலை உருவாக்கும் ‘Fusionமுறை இந்த ஆபத்தில்லாமலேயே, யுரேனியத்தின் பயன்பாடு இல்லாமலேயே அணுக்கரு ஆற்றல் நம் வசமாகும் என்கிறார்.

ராஜன் குறைக்கு மட்டுமல்ல, இன்றைய நெருக்கடிகளை உற்றுக் கவனிக்கும் யாருக்கும் காகுவின் கூற்றுகள் ஏதோ ``இறைவாக்கு போல தர்க்க பலமற்றவையாகத் தோன்றலாம்.ஆனால் இந்தச் சாத்தியப்பாடுகளையும் நாம் கணக்கில் கொள்ளாதிருக்க இயலாது. இத்தகைய சாத்தியங்கள் கையகப்பட்டாலுங்கூட முதலாளிய முதலீட்டு முறையை நாம் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதென்னவோ உண்மைதான்.

இத்தனை பெரிய மக்கள் தொகையை உருவாக்கிவிட்டு (6.4 மில்லியன்) பூச்சி மருந்தும், உரமுமில்லாத பழைய இயற்கைச் சாகுபடிக்குத் (Organic Farming) திரும்பிவிட இயலுமா? இயற்கை வேளாண்மை எல்லோருக்கும் சோறுபோடுமா? தடுப்பூசிகளால் பிரச்சினைகள் எழுகின்றன என்பதற்காகத் தடுப்பூசியே (Vaccination தேவையில்லை எனச் சொல்லலாமா? நல்ல குடிநீர், தூய காற்று, சத்துணவு எல்லாம் அளிக்கப்படாமல் தடுப்பூசியை மட்டும்
நிறுத்திவிட முடியுமா? தடுப்பூசிகள் வந்த பின்புதானே இங்கு அம்மை, போலியோ முதலான நோய்களெல்லாம் கட்டுக்கு வந்தன.`மார்டனிசத்தின்' தீய விளைவுகளை நவீனத்திற்கு முந்திய (Pre-modern) நிலையிலிருந்து விமர்சித்துவிட இயலுமா? நவீனத்துவத்தின் பயங்கரத்தை நாம் கண்டிக்கும் அதே நேரத்தில், இந்தியச் சமூகம் போன்ற வருண சாதிச் சமூகம் ஒன்று நவீனத்துவத்தால் அடைந்த பயன்களைத் துறந்துவிட முடியுமா?

ஒன்றைச் சொல்லி முடிக்கத் தோன்றுகிறது.இன்றைய இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளுவதில் காந்தி நமக்கு எந்த அளவுக்குப் பயன்படுவார்? நவீனத்துவத்தை முற்றாக மறுத்தவரல்ல அவர். அதே சமயத்தில் அதை அப்படியே ஏற்றுக்கொண்டவரும் இல்லை. தனது தொடக்க நூல்களில் ஒன்றாகிய `ஹிந்த் சுயராஜ்'லிருந்து பின்னாளில் பல அம்சங்களில் வேறுபட்டார். கடும் நோய்வாய்ப்பட்டபோதும் ஊசி போட்டுக்கொள்ள மறுத்த அவர், ரயில் பயணத்தைத் தவிர்த்ததில்லை. இந்தியாவின் பன்மைத் தன்மையைத் தக்க வைப்பதில் காந்திய அனுபவங்கள் இன்றளவுக்கும் நமக்குக் கைகொடுப்பது போலவே இன்றைய இந்த நெருக்கடியை எதிர்கொள்வதிலும்கூட அவரது சிந்தனைகளும்,அனுபவங்களும் நமக்குக் கைகொடுக்கும் என்றே தோன்றுகிறது.

Labels: , , , ,

குழப்பமோ குழப்பம் - காப்புரிமை-பொன்னி-திருப்பதி லட்டு

தமிழ் நாளிதழ்கள் உட்பட ஊடகங்களுக்கு அறிவு சார் சொத்துரிமை குறித்து இருக்கும் குழப்பம் சொல்லி மாளாது. பொன்னி அரிசிக்கு மலேசிய நிறுவனம் ஒன்று வணிக சின்னம் (trade mark) பெற்றிருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அதற்கு விவசாயிகள்,
வர்த்தகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்திகளை வெளியிடும் போது காப்புரிமை(patent) என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன ஊடகங்கள். விவசாயிகள், வியாபாரிகள்தான் வணிக சின்னமும், காப்புரிமையும் ஒன்று என்று நினைத்து குழம்பியுள்ளார்களா இல்லை ஊடகங்கள்தான் அப்படி குழம்பி செய்தி வெளியிடுகின்றனவா என்று தெரியவில்லை. இன்றைய தினமணியில் ஒரு செய்தி ‘திருப்பதி லட்டுக்கு காப்புரிமை?' என்று. என்னவென்று பார்த்தால் திருப்பதி லட்டுக்கு Geographical Indication பெற திருப்பதி-திருமலா தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

செய்தியில் Geographical Indication என்பது ஊருடன் தொடர்புடையது என்பதாக புரிதல் இருக்கிறது. இது சரியல்ல. ஏனெனில் Geographical Indication என்பதை ஒரு குறிப்பிட்ட ஊர் என்பதாக மட்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.பெரும்பாலான சமயங்களில் அது குறிப்பிட்ட ஊர் தொடர்பானதாக இருந்தாலும் ஒரு பரந்த பொருளில்தான் geographical என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திருப்பதி லட்டு என்பதை தேவஸ்தானம் Geographical Indication ஆக பதிவு செய்திருந்தால் வேறு யாரும் திருப்பதி லட்டு என்ற பெயரில் லட்டுக்களை விற்க முடியாது. லட்டு என்பதை விற்கலாம், திருப்பதி என்ற அடைமொழியைப் பயன்படுத்த முடியாது. டார்ஜிலிங் தேயிலை உட்பட Geographical Indication என்பதற்கு பல உதாரணங்கள் இந்தியாவிலேயே இருக்கின்றன.

பொதுவாக அறிவுசார் சொத்துரிமை என்றாலே காப்புரிமை என்று பலர் நினைப்பதாலும் இந்தக் குழப்பம் ஏற்படுகிறது.Geographical Indication என்பதற்கும் புவியியல் குறியீடு என்பது சரியான கலைச்சொல் அல்ல.ஏனெனில் இங்கு geographical என்பது புவியியல் என்ற துறையை குறிக்கவில்லை. மாறாக ஒரு புவிப்பரப்பு தொடர்புடைய என்ற பொருளைத் தருகிறது. அப்புவிப்பரப்பு ஒரு ஊராக, ஒரு நாடாக அல்லது ஒரு குறிப்பிட பிரதேசமாகக் கூட இருக்கலாம்.

Labels: , , ,