இயற்கை வேளாண்மை - நம்மாழ்வார்-சங்கீதா ஸ்ரீராம்

இயற்கை வேளாண்மை - நம்மாழ்வார்-சங்கீதா ஸ்ரீராம்

இந்த மாத தீராநதியில் நம்மாழ்வாருடன் ஒரு விரிவான பேட்டி வெளியாகியிருக்கிறது. அதில் தரப்பட்டுள்ள இரண்டு தகவல்கள் சரியல்ல என்பது என் கருத்து. பேட்டி காண்பவர் எழுதியிருக்கிறார் “நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வென்று வந்தவர்.” . வேப்பிலை மீது யாரும் காப்புரிமை பெறவில்லை, பெறவும் முடியாது. இந்த காப்புரிமை குறித்த வழக்கு ஐரோப்பிய காப்புரிமை அமைப்பின் மேல்முறையீட்டு அமைப்பின்(Technical Board of Appeals of EPO) முன் நடந்த வழக்கு, அது சர்வதேச நீதிமன்றம் அல்ல.மேலும் அந்த வழக்கில் நம்மாழ்வார் என்ன வாதாடினார் என்று எனக்குத் தெரியாது. நானறிந்த வரையில் அதில் வாதிட்டவர்களில் முக்கியமானவர் பிரிட்ஸ் டோல்டர், ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர். இதில் நம்மாழ்வார் எந்த அடிப்படையில் வாதிட்டார் என்பதை நானறியேன். இந்தியாவிலிருந்து ஒரு விவசாயி இதில் பங்கேற்றார், தன் அனுபவத்தைச் கூறினார். வேம்பிலிருந்து பெறப்பட்டவற்றை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துவது குறித்த ஒரு கட்டுரை, ஆஸ்தேரலியாவிலிருந்து வெளியான ஒரு ஜர்னலில் வெளியானது சான்றாக காட்டப்பட்டது. இக்கட்டுரை முக்கியமான ஆதாரமாகக் கொள்ளப்பட்டு காப்புரிமை நிராகரிக்கப்பட்டது. (இது ஒரு சுருக்கமான விளக்கம், முழு விபரங்களை இங்கு தரவில்லை). IFOAM (International Federation of Organic Agricultural Movements) என்ற அமைப்பும் இந்த வழக்கில் ஒரு மனுதாரார்.அதன் சார்பில் அல்லது வந்தனா சிவாவுடன் சேர்ந்து நம்மாழ்வார் பங்கு பெற்றிருக்ககூடும். வேம்பு, மஞ்சள், காப்புரிமை குறித்த மிகவும் தவறான புரிதல் நிலவுகிறது. ஏதோ வேம்பு, மஞ்சள் ஆகியவை மீது காப்புரிமைகள் வழங்கப்பட்டுவிட்டன என்கிற ரீதியில் எழுதுகிறார்கள். உண்மை இதிலிருந்து வேறானது. புரிந்துக கொள்ளக் கடினமானது அல்ல. இருப்பினும் இந்த தவறான புரிதல் தொடர்கிறது. நம்மாழ்வாரின் கருத்துக்களை அறிந்தவர்களுக்கு பேட்டியில் புதிதாக ஒன்றுமில்லை. 1990களின் துவக்கத்தில் நம்மாழ்வாரின் நூல்களை வெளியிட்டு கோவை ஞானி அவர் கருத்துக்களை சிறு பத்திரிகை, இடதுசாரி வட்டாரங்களுக்கு அறிமுகம் செய்தார். இன்று நம்மாழ்வாரில் பெயர் விகடன், குமுதம் வாசகர்களுக்கு பரிச்சயமான ஒன்றுதான். அது போலவே இன்று இயற்கை சார் வேளாண்மை குறித்து ஒரு பரவலான விழிப்புணர்வும் இருக்கிறது. இவையெல்லாம் வரவேற்கத்தக்க மாற்றங்கள். இந்த வார தெகல்காவில் வந்துள்ள கட்டுரையையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

காலச்சுவட்டில் சங்கீத ஸ்ரீராம் ஒரு தொடர் கட்டுரை எழுதிவருகிறார். சுற்றுச்சூழல்- வேளாண்மை குறித்த தொடர் அது. தொடர் முடிந்த பின் அதைப் பற்றிய என் கருத்துக்களை எழுதலாமென்றிருக்கிறேன். திண்ணையில் முன்பு ஒரு தொடர் எழுதியிருக்கிறேன். Political Ecology, Environmental History இரண்டையும் தொட்டுச் செல்லும் தொடர் அது. 1990களின் துவக்கத்தில் Finacial Expressல் ரசாயண உரங்களுக்கான மானியத்தை குறைக்க வேண்டும், இயற்கை சார் வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எழுதினேன். க்யுபாவில் இயற்கை சார் வேளாண்மைக்கு அரசு ஊக்கம் கொடுத்து பரப்பிய போது அதையும் தமிழில் எழுதியிருக்கிறேன். இது போல் இயற்கை சார் வேளாண்மை, உயிரியல் தொழில் நுட்பமும் வேளாண்மையும் குறித்து ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியிருக்கிறேன். இதில் என் கருத்துக்களில் காலப்போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நான் வேளாண்மையில் உயிரியல் தொழில் நுட்பத்தின் பங்கினை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. அதற்காக அதை கண்மூடித்தனமாக ஆதரிக்கவுமில்லை. தொழில் நுட்ப நிர்ண்யவாதத்திலிருந்து நான் நகர்ந்து விட்டேன். தொழில் நுட்பம்-சமூகம் குறித்து ஒருவித constructivist புரிதலே எனக்கு சரியாகப் படுகிறது. எதிர்காலத்தில் இதிலும் மாற்றம் வரலாம். அந்த மாற்றம் இன்னும் நுட்பமான புரிதலை நோக்கியதாக
இருக்கும். பாரம்பரிய தொழில்னுட்பம், இயற்கை வேளாண்மை குறித்து எனக்கு மிகவும் நேர்மறையான கருத்துக்கள் இருந்தாலும், அவற்றின் அடிப்படையில் அதீத நிலைப்பாடுகளை எடுக்க முடியவில்லை. பசுமைப் புரட்சி குறித்து எனக்கும் விமர்சனங்கள் இருந்தாலும், அது குறிப்பிட்ட காலத்தில் முன் வைக்கப்பட்ட தொழில்னுட்ப தீர்வு என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு அடுத்த கட்டத்திற்கு நகர்வதுதான் சரியாக இருக்கும் என்பது என் கருத்து. மேலும் அதை ஒரு சதியாக குறுக்குவது சரியல்ல என்றே கருதுகிறேன். இவற்றையெல்லாம் இப்படி எழுதுவதை விட விரிவாக எழுத வேண்டும்தான். எப்போது முடிகிறதோ அப்போது அதைப் பார்க்கலாம்.

Labels: , , ,

4 மறுமொழிகள்:

Blogger அரவிந்தன் நீலகண்டன் மொழிந்தது...

அன்புள்ள ரவி ஸ்ரீ நிவாஸ்:

1. இந்த மஞ்சள்-வேம்பு விஷயங்களைக் குறித்து அதில் நிகழ்ந்த சட்ட தரவுகள் குறித்து அதிக தரவுகள் தர இயலுமா?
2. இயற்கை வேளாண்மையின் முக்கிய பிரச்சனைகளில் ஒரு விஷயம் பேசப்படாமலே போகிறது. இயற்கை வேளாண்மை labour intensive. பெரிய பண்ணைகளில் சரி. சிறிய விவசாயிகள் என்ன செய்வார்கள்? நிலமற்ற விவசாய தொழிலாளிகள் நகரங்களுக்கு செல்லுகிறார்கள் அல்லது அரசு தொழில்களுக்கு சிறு-நில ஏன் பெரு நில விவசாயிகளே நிலங்களை விற்கிறார்கள். பல இயற்கை விவசாய பண்ணைகள் -அமெரிக்காவில் மகன் இருக்கிற- பெரியவர்களால் நடத்தப்படுகின்றன. இத்தகைய சூழலில் இயற்கைவிவசாயம் என்பது வெறும் எதிர்ப்பு குரலால் (நம்மாழ்வார் போன்ற) உயிர் பெற்றுவிட முடியாது. பசுமை-முதலாளித்துவ அமைப்பு ஒன்று உருவாவது அவசியம்... இயற்கை வேளாண்மை உள்ளீடுகளுக்கு இரசாயன வேளாண்மை உள்ளீடுகள் போன்ற கறாரான தொழில்நுட்பம் கிடையாது. அது அந்தந்த ஊர் பயிர் ஏன் அந்தந்த விவசாயியையும் கூட சார்ந்தது. இந்த தொழில்நுட்பத்தினை நிறுவனப்படுத்த வேண்டிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் அதன் அறிவியல் குறித்த தத்துவப்பார்வை முதல் அதன் செயல்படுதன்மை அதன் அமைப்பு உட்பட அனைத்திலும் மாறியிருக்க வேண்டும். எத்தகைய மாற்றம்? எனக்கு சொல்ல தெரியவில்லை. ஆனால் இது ஆழமாக ஆராய்ந்து செய்யப்பட வேண்டிய விஷயம். வெறும் எதிர்ப்பியக்கம் இதனை போட்டுடைத்துவிடும். உங்கள் கட்டுரைக்கு நன்றி.

9:54 AM  
Blogger Sangeetha Sriram மொழிந்தது...

Ravi,

I do not know how to post in Tamil! Good to know you read my article series. I just thought it would be good to start a dialogue with you right away, as I continue to write my series. I am sure I can learn a lot along the way, and that your ideas would help shape my views as well.

Thanks,
Sangeetha

1:49 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

கட்டுரை கண்டேன். இயற்கை வேளாண்மையின் இடர்பாடுகளை மட்டும் விரிவாக எடுத்துரைக்கிறீர்கள். ஆனால் பசுமைப் புரட்சி என்பது குறிப்பிட்ட காலக் கட்டத்தில் நடந்து முடிந்துவிட்ட நிகழ்வாக மட்டுமே சுட்டிக் காட்டப் படுகிறது. ஆனால் அந்த நிகழ்வால், சமுதாயத்துக்கு ஏற்பட்ட சரிசெய்ய முடியாத இழப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கவோ ஏன் அதுபற்றிய சிந்தனையக்கூட மறைக்கும் முயற்சியில் தற்போதைய வேளாண் சிந்தனையாளர்கள் செயல்படுவது, ஒரு மாயமாலம் அல்லது மறைமுகமாக ரசாயனங்களை அள்ளித் தெளிக்கும் எண்ணத்துக்கு வக்காலத்து வாங்குவது போலாகாதா?

10:34 PM  
Blogger Porkodi மொழிந்தது...

http://www.youtube.com/watch?v=9_di6tOBM44

நம்மாழ்வார் இதைக் குறித்து தெளிவாக கூறியுள்ளார்.

இது வெறும் எதிர்ப்பு குரல் மட்டும் அல்ல. செயலிலும் காட்டியுள்ளார்.

4:41 AM  

Post a Comment

<< முகப்பு