இரண்டு தீர்ப்புகள் - ஒரு வழக்கு- ஒரு கேள்வி

இரண்டு தீர்ப்புகள் - ஒரு வழக்கு- ஒரு கேள்வி

எம்.எப்.ஹீசைன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்து தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டாக்டர் வேணுகோபாலை AIIMS இயக்குனர் பதவியிலிருந்து நீக்க வழி செய்த சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டும் வரவேற்கப்பட வேண்டியவை. முன்னது கருத்துரிமைக்கு ஆதரவானது. பின்னது அநீதி இழைக்கப்பட்ட வேணுகோபாலுக்கு ஆதரவானது. இது அரசின் அதிகாரம் வரம்பற்றது என்ற கருத்திற்கு
எதிரானது. வேணுகோபாலை நீக்குவதற்கு வழி செய்த சட்டத்தினை இடதுசாரிக் கட்சிகளும் ஆதரித்தன. எது எப்படியோ இறுதியில் நீதி வென்றிருக்கிறது. ஹுசைனைப் பொருத்தவரை இந்த தீர்ப்பு முக்கியமானது, பல இடங்களில் வழக்குகளை தொடுத்து தொல்லைக் டுப்பதற்கு இது ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.இத்தீர்ப்பின் மூலம் குறிப்பிட்ட சட்டப் பிரிவினை முறைகேடாக பயன்படுத்தப்படுவது குறைய வாய்ப்பிருக்கிறது. அவர் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. குஷ்பு மீதான வழக்கில் இத்தீர்ப்பு குஷ்புவிற்கு உதவியாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இரு தீர்ப்புகளையும் குறித்த செய்திகளின் அடிப்படையில் இதை எழுதுகிறேன். முழுத் தீர்ப்புகளையும் படித்தால் செய்திகள் தெரிவிக்காத வேறு சில புரியக்கூடும்.

ராமர் சேது வழக்கில் பராசரன், சி.எஸ்.வைத்தியனாதன்,சோலி சொராப்ஜி, சுப்ரமண்யன் சுவாமியின் வாதங்களை தி இந்து மூலம் அறிந்து கொண்டேன். மத நம்பிக்கை குறித்த, அரசியல் சட்டத்தின் 25வது விதியை அவர்கள் வாதிடுவது போல் இப்படி புரிந்து கொள்ள முடியுமா என்பதில் எனக்கு ஐயங்கள் உள்ளன. மத உரிமை, வழிபாட்டு உரிமை என்பவை முழு முற்றான, நிபந்தனைகளற்ற அடிப்படை உரிமைகளல்ல. நீதிமன்றம் அவற்றைக் கேள்விக்குட்படுத்தக் கூடாது என்பது வேறு, அவற்றை அப்படியே ஏற்று அதன் அடிப்படையில்தான் ஒரு பிரச்சினையை அணுக வேண்டும் என்பது வேறு. நர்மதை திட்டத்தில் பல வழிப்பாட்டுத் தலங்கள் மூழ்கின. இருப்பினும் அங்கு முக்கிய பிரச்சினையாக எழுந்தவை,பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்வு, நட்ட ஈடு, நிலத்திற்கு பதிலாக நிலம், அவர்களின் வாழ்வுரிமை. இந்த ராமர் சேது வழக்கில் சுற்றுச்சூழல் தாக்கம், திட்டம் அதில் செலவளிக்கப்படும் தொகைக்கு தக்க பயனைத் தருமா என்பவை முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். ஆசி பெர்னாண்டஸ் சார்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு சுற்றுச்சூழல் பாதிப்பினை முதன்மையாக முன்வைத்து வாதிடுவார் என்று நினைக்கிறேன்.
இந்த வழக்கில் இந்துக்களின் நம்பிக்கைக்கு மதிப்புத் தர வேண்டும் என்பதே என் கருத்து. போலி மதச்சார்பின்மைவாதிகள் இத்திட்டத்தினை தீவிரமாக ஆதரிக்கக் காரணமே இது இந்துக்கள் நம்பிக்கையுடன் தொடர்புடையது என்பதுதான் என்று கருதுகிறேன். கம்யுனிஸ்ட் கட்சிகளைப் பொருத்தவரை இதை பாஜக, இந்த்துவ அமைப்புகள் ராமர் சேதுவிற்கு பாதிப்பில்லா வகையில் நிறைவேற்றக் கோருவதால், இதை தீவிரமாக ஆதரிப்பது, ராமர் சேது பாதிப்புற்றாலும் பரவாயில்லை என்று வாதிடுவது என்ற நிலைப்பாட்டினை
எடுத்திருக்கிறார்கள். இதில் வெளிப்படுவது இந்து வெறுப்பே, அதை மூடிமறைக்க இந்த்துவ எதிர்ப்பு, மதசார்ப்பின்மை போன்ற காரணங்கள். இதில் நான் அவர்களை எதிர்க்கிறேன். சுப்பிரமண்யன் சுவாமி எடுக்கும் நிலைப்பாடுகள் அனைத்தையும் நான் ஆதரிக்கவில்லை. அவர் நர்மதை திட்டத்தினை தீவிரமாக ஆதரித்தவர். இந்த வழக்கினைப் பொருத்தவரை நான் அவரது முயற்சியைப் பாராட்டுகிறேன். போலி மதச்சார்ப்பின்மைவாதிகளும், இந்து-இந்திய விரோதிகளும் எப்படியாவது இந்த திட்டத்தினைக் கொண்டு ராமர் சேதுவின் ஒரு பகுதியையேனும் சிதைத்துவிட துடிக்கையில் அதைக் காக்கும் முயற்சிகளை எடுப்பவர்கள் மிக முக்கியமான பணியைச் செய்கிறார்கள். மத நம்பிக்கைகள் எப்படி இருப்பினும், அது மனித முயற்சியால் உருவானதோ இல்லை இயற்கையாக அமைந்த ஒன்றோ - அது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புராதன சின்னம். அதை அப்படி அறிவித்து பாதுகாக்க வேண்டும். இதற்கு உதவும் என்பதால் நான் அவர்களை, (அதாவது திட்டத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோரை, ஆசி பெர்ண்டாசையும் சேர்த்தே இங்கு குறிப்பிடுகிறேன்) ஆதரிக்கிறேன். அதற்காக அவர்களின் அனைத்து நிலைப்பாடுகளையும் நான் ஏற்கிறேன் என்று அர்த்தமில்லை. அறிவு ஜீவிகள் என்று சொல்லப்படுபவர்கள் பலர் இந்தப் பிரச்சினையில் எடுத்த நிலைப்பாடுகளில் வெளிப்பட்டது அவர்களது இந்து எதிர்ப்பு மனோபாவமே. இதில் ரோமிலாத் தாப்பரின் கட்டுரையை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எனக்கு மிகுந்த எரிச்சலைத் தந்த கட்டுரை அது. மேற்கில் இருப்பது வரலாறு, கிழக்கில் இருப்பது புராணம் என்ற கண்ணோட்டத்தின் இன்னொரு வடிவம்தான் அதன் மையக்கருத்து. தமிழ்நாட்டில் கேட்கவே வேண்டாம். எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்றவர்களுக்கு தங்களது இந்து,பார்பன விரோதத்தினை வெளிக்காட்ட இது இன்னொரு வாய்ப்பாக அமைந்தது. பாதிப்புறுவது இந்து அல்லாதோரின் வழிபாட்டிற்குரியதாக/மரியாதைக்குரியதாக இருந்திருந்தால் அவர்கள் கருத்து வேறுவிதமாக இருந்திருக்கும். அப்போது அதை சிதைப்பது
மதச்சார்ப்பின்மைக்கு விரோதமான ஒன்றாக, சிறுபான்மையினர்க்கு எதிரான ஒன்றாக எதிர்க்கப்பட்டிருக்கும். நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் வாதங்களையும் கருத்தில் கொண்டு வேறொரு தருணத்தில் விரிவாக எழுதுவோம். திண்ணையில் அரசியல் சட்டமும், மத நம்பிக்கை/உரிமை குறித்து நான் எழுதியிருப்பவற்றை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

விடுதலையில் வெளியாகியுள்ள குறிப்பு இது:
”75 விழுக்காடு உள்ளூர் மக்களுக்கே!
3. தமிழ்நாட்டில் தொடங்கப்படும் புதிய தொழிற்சாலைகளில் 75 விழுக்காடு உள்ளூர் - தமிழ்நாட்டு மக்களுக்கே தரவேண்டும் என்ற அரசின் நிபந்தனை தொழில் அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது மிகவும் முக்கியமான ஒன்றாகும்! நமது இளைஞர்கள், இனி வேலை தேடி பல ஊர்களுக்கு அலைய வேண்டிய அவசியமின்றி, தமிழ்நாட்டுக் குள்ளேயே வேலை வாய்ப்பைப் பெற்று நிம்மதியான வாழ்வு வாழ வழிவகை செய்யும். இதுவும் மிகவும் பாராட்டத்தகுந்த ஒன்றாகும்.
வீட்டு மனைகள், புதிய கட்டடங்கள், கட்டுமானங்களில் இந்த 75 சதவீத விதி, தமிழ்நாட்டவர்தான் செய்யவேண்டும் என்றும் வற்புறுத் தினால், மற்றவர் தம் சுரண்டல் ஆதிக்கத்தினை தடுத்திட வாய்ப்பு ஏற்படுமே! “

தமிழக அரசு இப்படி 75% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறதா இல்லை இது பரிந்துரையா. நிபந்தனை என்றால் அது ஆணை வடிவில் விதிக்கப்பட்டிருக்கிறதா அல்லது அரசு உதவி/மான்யத்தினைப் பெற நிபந்தனையாக முன்வைக்கப்பட்டுள்ளதா. விபரம் தெரிந்தவர்கள் மேலதிக தகவல்கள் தரலாம்.
”வீட்டு மனைகள், புதிய கட்டடங்கள், கட்டுமானங்களில் இந்த 75 சதவீத விதி, தமிழ்நாட்டவர்தான் செய்யவேண்டும்” என்பதை வீரமணி விரும்பினாலும் அரசு கட்டாயமாக்க முடியாது. அவ்வாறு கட்டாயமாக்குவது அரசியல் சட்டத்திற்கு முரணானது. இந்த 75% இட ஒதுக்கீட்டினைக் கூட அரசு வேண்டுகோளாக வைக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு செய்வது அரசியல் சட்டம் தரும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இப்படி வேலைகள், வீட்டு மனைகள் போன்றவற்றில் இட ஒதுக்கீட்டினை கொண்டு வருவதை நான் ஆதரிக்கவில்லை என்பதை சொல்லவும் வேண்டுமா.

Labels: , , , ,

1 மறுமொழிகள்:

Blogger ஜடாயு மொழிந்தது...

ராமசேது பாதுகாப்புக்கு எங்கிருந்தெல்லாம் ஆதரவுக் குரல்கள் வருகின்றன! ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

// போலி மதச்சார்ப்பின்மைவாதிகளும், இந்து-இந்திய விரோதிகளும் எப்படியாவது இந்த திட்டத்தினைக் கொண்டு ராமர் சேதுவின் ஒரு பகுதியையேனும் சிதைத்துவிட துடிக்கையில் //

// இதில் வெளிப்படுவது இந்து வெறுப்பே, அதை மூடிமறைக்க இந்த்துவ எதிர்ப்பு, மதசார்ப்பின்மை போன்ற காரணங்கள்.//

இந்த ஒரு விஷயம் மட்டுமல்ல, எல்லா சமூக, மத பிரச்சினைகளிலும் இந்த கட்சிகள் எடுக்கும் நிலைப்பாடு அப்பட்டமான இந்து வெறுப்பில் உதித்தது தான். "இந்து-இந்திய வெறுப்பு" தங்கள் வார்த்தைப் பிரயோகம் மிகவும் சரியானது.

இவ்வளவு தெளிவாகத் தங்கள் கண்ணோட்டத்தை முன்வைத்ததற்கு மிக்க நன்றி.

8:15 AM  

Post a Comment

<< முகப்பு