27% இட ஒதுக்கீடும் உச்சநீதிமன்றமும்- மண்டல் 3 மண்டல் 4

27% இட ஒதுக்கீடும் உச்சநீதிமன்றமும்- மண்டல் 3 மண்டல் 4

கொல்கத்தா உயர்நீதிமன்றம் கொடுத்திருந்த இடைக்காலத் தடையை,எதிர்பார்த்தது போல், உச்சநீதிமன்றம் நீக்கியிருக்கிறது. மேலும் மும்பை,கொல்கத்தா, புது தில்லி உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதி மன்றத்திற்கு ஏன் மாற்றக் கூடாது என்று அந்தந்த நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்த மனுதாரார்களுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்றே தோன்றுகிறது. இங்கு சர்ச்சை எழுந்திருப்பது உச்சநீதி மன்றத் தீர்ப்பினை எப்படி புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவது குறித்தது. இந்த வழக்குகளை உச்சநீதி மன்றம் விசாரிப்பதே முறையாகும்.கடந்த மாதம் 10ம் தேதி அசோகா தாக்கர் வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து இன்னும் யாரும் மேல் முறையீடு செய்யப்படவில்லை. அவ்வாறு செய்யப்பட்டாலும் இடைக்காலத் தடை வழங்கப்பட வாய்ப்பில்லை. அந்த மேல்முறையீட்டினை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வாய்ப்பிருக்கிறது. இப்போது தீர்ப்பினை எப்படி பொருள் கொள்வது, பட்டதாரிகள் கிரிமி லேயரில் வருவார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 5 நீதிபதிகள் 4 தீர்ப்புகளை தந்துள்ளனர். தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஒரு தீர்ப்பு, நீதிபதி ரவீந்தரன் ஒரு தீர்ப்பு, நீதிபதி தல்வீர் பண்டாரி ஒரு தீர்ப்பு, நீதிபதிகள் அர்ஜித் பசாயத், தாக்கர் ஒரு தீர்ப்பு என நான்கு தீர்ப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றை எப்படி பொருள் கொள்வது என்பதுதான் பிரச்சினை. சட்டதிருத்தம் செல்லும், இட ஒதுக்கீடு தர முடியும் என்று ஒருமித்து தீர்ப்பு தந்தாலும் கிரிமி லேயர் குறித்து இந்த தீர்ப்புகள் கூறுவதை எப்படிப் பொருள் கொள்வது, இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மத்திய அரசின் உத்தரவு செல்லுமா என்பதுதான் உயர்நீதி மன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளின் முக்கியமான கேள்விகள். மண்டல் கமிஷன் அறிக்கையை அமுல் செய்ய வகை செய்யும் ஆணை செல்லுமா என்ற வழக்கு மண்டல் 1 (இந்த்ரா சஹானி Vs. Union of India) எனவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில்/ நிதி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு குறித்த வழக்கு மண்டல் 2 என்றும் அழைக்கப்படுகின்றன. இப்போது தொடரபட்டுள்ள வழக்குகளை மண்டல் 3 என்று அழைக்கலாம். இது இத்துடன் நின்றுவிடாது. தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு நிதி உதவி பெறாவிட்டாலும் அவையும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து வழக்குகள் தொடரப்படும். அது மண்டல் 4 என்று அழைக்கப்படலாம்.

இட ஒதுக்கீட்டு சிக்கல் எளிதில் தீர்கிற சிக்கல் இல்லை. சமத்துவத்தை நிராகரிக்கும் சக்திகள் எந்த அளவு முடியுமோ அந்த அளவிற்கு இட ஒதுக்கீட்டினை விரிவாக்கவே விரும்புவர். எனவே இந்த வழக்குகளை சமத்துவம், சம வாய்ப்பு, பாரபட்சமின்மை குறித்த வழக்குகளாக கருதலாம்.

Labels: , , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு